நியமம் அல்லது பிரபலமானபோக்கு—எது உங்களுடைய வழிகாட்டி?
ஆறாம் வகுப்பைச் சேர்ந்த நோரீஹீடோ ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டிருந்தான். திடீரென்று, அவன் ஒரு தீர்மானத்தை எதிர்ப்பட்டான். எல்லா மாணவர்களும் ஒரு நாட்டுப்பற்றிற்குரிய சடங்கில் பங்கெடுக்க வேண்டியவர்களாய் இருந்தனர். இந்த வழக்கமான காரியத்தில் தன்னுடைய சக மாணவர்களோடு அவன் சேர்ந்துகொள்ளவேண்டுமா?
யெகோவா அல்லாமல் வேறொரு கடவுளுக்குச் செய்யப்படும் எந்த வகையான வணக்கச் செயலில் பங்குகொள்வதும் தவறு என்று நோரீஹீடோ பைபிளிலிருந்து கற்றிருந்தான். (யாத்திராகமம் 20:4, 5; மத்தேயு 4:10) கிறிஸ்தவர்கள் எல்லா உலக அரசியல் காரியங்களிலும் நடுநிலைமை வகிக்கவேண்டும் என்றும் அவன் அறிந்திருந்தான். (தானியேல் 3:1-30; யோவான் 17:16) ஆகவே, அவனுடைய சக மாணவர்கள் சேர்ந்துகொள்ளும்படி தூண்டியபோதும், அவன் தைரியமாக ஆனால் மரியாதையுடன் தன்னுடைய நிலைநிற்கையைக் காத்துக்கொண்டான். அதைப்போன்ற ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?
பாகமாக இருப்பதற்கான விருப்பம்
மனிதர்கள் கூடிப்பழகும் இயல்புடையவர்களாக, ஒருவரோடொருவர் ஒத்துப்போகிறவர்களாக, காரியங்களைச் சேர்ந்து செய்வதை அனுபவித்துக்களிப்பவர்களாக இருக்கும்படி கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டனர் என்று வேதவார்த்தைகள் குறிப்பிடுகின்றன. ஒருவருடைய சகாக்களுடன் இருக்கும்படி, ஏற்றுக்கொள்ளப்படும்படி, பாகமாயிருக்கும்படி விரும்புவது இயல்பானதே. அப்படிப்பட்ட உணர்ச்சிகள் வாழ்க்கையை அதிக இன்பமானதாக்கி, மற்றவர்களுடன் நாம் கொள்ளும் செயல்தொடர்புகளில் சமாதானத்திற்கும் ஒத்திசைவிற்கும் உதவி அளிக்கின்றன.—ஆதியாகமம் 2:18; சங்கீதம் 133:1; 1 பேதுரு 3:8.
ஒரு தொகுதியின் பாகமாக இருக்கவேண்டுமென்ற உள்ளியல்பான விருப்பம், இன்றுங்கூட சில கலாச்சாரங்களில் காணப்படும் ஒத்துப்போவதன்பேரில் உள்ள அழுத்தத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. உதாரணமாக, பெரும்பான்மையானவர்களின் தூண்டுதல்களை அறிந்திருந்து, ஒத்துப்போகவேண்டுமென்று ஜப்பானிய பிள்ளைகள் தங்களுடைய மிக ஆரம்ப வருடங்களிலிருந்தே பயிற்றுவிக்கப்படுகின்றனர். அவர்களுடைய மிகப் பெரிய கடமைகளில் ஒன்று, சமூகத்துடன் இசைந்து செல்வது என்று பாரம்பரியம் அவர்களுக்குக் கற்பிக்கிறது. “மேற்கத்தியர்களைவிட ஜப்பானியர்கள் தொகுதிகளாகச் செயல்படுவதற்குக் கூடுதலான சாத்தியம் இருக்கிறது,” என்று ஜப்பானின் முன்னாள் ஐ.மா. தூதுவரும் ஜப்பானிய பழக்கங்களைக் கூர்ந்து நோக்குபவருமான எட்வின் ரைஷாவுயர் கூறினார். அவர் தொடர்ந்து சொன்னார்: “மேற்கத்தியவர்கள் தன்னிச்சையான போக்கையும் தனித்தன்மையையும் உடையவர்களாக வெளிப்படையாகவாவது காட்சியளிக்கிறபோதிலும், பெரும்பாலான ஜப்பானியர்கள், உடை, நடத்தை, வாழ்க்கை பாணி, சிந்திக்கும்விதத்தில்கூட தங்களுடைய தொகுதியின் சட்டத்திட்டங்களுக்கு ஒத்துப்போவதில் திருப்தி உள்ளவர்களாகவே இருப்பர்.” எனினும், ஒத்துப்போவதற்கான விருப்பம், எவ்விதத்திலும் ஜப்பானியர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாக இல்லை. அது உலகளாவியதாக இருக்கிறது.
ஒத்துப்போவதற்கான அழுத்தங்கள்
மற்றவர்களுடன் ஒத்துப்போவதற்கு ஒருவர் தன்னுடைய மிகச் சிறந்ததைச் செய்வது விரும்பத்தக்கதென்றாலும், பிரபலமாக இருப்பதற்குக் கண்மூடித்தனமாக இணங்கிப்போவதில் அபாயம் இருக்கிறது. ஏன்? ஏனென்றால், கும்பலில் பிரபலமாக இருப்பது அடிக்கடி கடவுளால் ஏற்கத்தக்கதற்கு எதிரிடையானதாக இருக்கிறது. “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது,” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. (1 யோவான் 5:19) சாத்தான் தன் வசமிருக்கிற எல்லா வழிகளையும்—பொருளாசை, கீழ்த்தரமான ஒழுக்கம், இன பாகுபாடு, மதவெறி, தேசாபிமானம், போன்றவை—இவற்றை மக்கள் கடவுளைவிட்டு விலகிச்செல்லும்படி செல்வாக்குச் செலுத்தும்படி தந்திரமாகப் பயன்படுத்துகிறான். அப்படிப்பட்ட பழக்கங்களுக்கு ஒத்துப்போவது, உண்மையில் ஒருவரை யெகோவா தேவனுக்கும் அவருடைய நோக்கங்களுக்கும் எதிரானவர்களாக வைக்கும். அதன் காரணமாகவே, கிறிஸ்தவர்கள் பின்வருமாறு ஆலோசனை கொடுக்கப்படுகிறார்கள்: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”—ரோமர் 12:2.
இந்தக் காரிய ஒழுங்குமுறையில் வாழ்க்கையில், பிரபலமாக இருப்பதற்கு ஒத்துப்போகும்படியான நிலையான அழுத்தத்தின்கீழ் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இளைஞர் எளிதாக இதற்கு இரையாகின்றனர். தங்களுடைய பள்ளி சகாக்களைப்போல் காட்சியளிப்பதற்கும் நடந்துகொள்வதற்குமான விருப்பம் பலமாக இருக்கிறது. ஒருசில காரியங்களில் தாங்கள் ஏன் பங்கெடுப்பதில்லை என்று தங்களுடைய சகாக்களுக்கு விவரிப்பதற்கு உண்மையான தைரியம் தேவைப்படுகிறது. எனினும், தங்களுடைய நிலைநிற்கைக்காகத் தைரியமாகப் பேசாமலிருப்பது, அவர்களுக்கு ஆவிக்குரிய சேதத்தை அர்த்தப்படுத்தக்கூடும்.—நீதிமொழிகள் 24:1, 19, 20.
பெரியவர்களும் தங்களுடைய வேலையிடத்தில் அப்படிப்பட்ட அழுத்தங்களை எதிர்ப்படுகின்றனர். வேலை நேரங்களுக்குப் பிறகு அல்லது ஒருசில விடுமுறைகளில், ஒருசில சமூக நடவடிக்கைகளில் பங்கெடுங்கும்படி அவர்கள் எதிர்பார்க்கப்படலாம். ஒத்துப்போவதற்கு மறுப்பது, தங்களைத் தனித்திருப்பவர்களாகவும் ஒத்துழைக்காதவர்களாகவும் தோன்றும்படிச்செய்து, வேலையிடத்தில் ஒரு கஷ்டமான சூழலை உருவாக்கக்கூடும். வேலைநேரத்திற்குமேல் நீண்ட மணிநேரங்கள் மிகைநேரம் செய்வதற்குச் சிலர் கட்டாயப்படுத்தப்பட்டதாக உணரக்கூடும்; வெறுமனே மற்றவர்கள் செய்வதாலும், அதுவே தங்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதாலும் இவ்வாறு உணருகின்றனர். அப்படிப்பட்ட காரியங்களில் விட்டுக்கொடுப்பது, ஆவிக்குரியவிதத்தில் சேதப்படுத்துவதாகவும், அவர்கள் தங்களுடைய மற்றக் கடமைகளைச் செய்வதிலிருந்து தடுப்பதாகவும் இருக்கும்.—1 கொரிந்தியர் 15:33; 1 தீமோத்தேயு 6:6-8.
பள்ளியில் அல்லது வேலையிடத்தில் மட்டுமல்லாமல், மற்றப்படியும் ஒத்துப்போவதற்கான அழுத்தங்கள் உள்ளன. ஒரு முறை, தன்னுடைய பிள்ளைக்குக் கண்டிப்பாகச் சிட்சை தேவைப்பட்ட சமயத்தில், வெறுமனே அங்கிருந்த மற்ற இல்லத்தரசிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்திற்காக அந்தச் சிட்சையைக் கொடுக்க மறுத்ததாக ஒரு கிறிஸ்தவ தாய் சொன்னாள்.—நீதிமொழிகள் 29:15, 17.
கும்பல் தவறாக இருக்கலாம்
கும்பலைப் பின்பற்றுவதைக்குறித்ததில், பைபிள் மிகவும் நேரடியான ஆலோசனையைக் கொடுக்கிறது. உதாரணமாக, இஸ்ரவேல் தேசத்தாருக்கு இவ்வாறு சொல்லப்பட்டது: “தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 23:2; ஒப்பிடவும் ரோமர் 6:16.) இந்த ஆலோசனை எப்போதும் பின்பற்றப்படவில்லை. ஒருமுறை, எகிப்தை விட்டுச்சென்றதற்குச் சற்றுப்பின்னர், மோசே இல்லாதபோது, ஒருசில தனிநபர்கள், ஒரு பொற்கன்றுகுட்டியை உண்டாக்கவும், ‘யெகோவாவுக்கான ஒரு பண்டிகையில்’ அதை வணங்கும்படியும் ஆரோனையும் மக்களையும் செல்வாக்குச் செலுத்தினர். பொற்கன்றுகுட்டிக்குப் பலிசெலுத்திக்கொண்டு, மக்கள் புசித்தும் குடித்தும், பாட்டுடனும் நடனத்துடனும் அனுபவித்துக்களித்தார்கள். இந்தக் கட்டுப்பாடற்ற, விக்கிரகாராதனைக்குரிய நடத்தைக்காக, சுமார் 3,000 கலகத்தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் மற்றவர்களில் அநேகரும் யோசனையின்றிக் கும்பலைப் பின்பற்றியதற்காக யெகோவாவால் உபாதிக்கப்பட்டனர்.—யாத்திராகமம் 32:1-35.
தீமையான காரணங்களுக்காகக் கும்பலைப் பின்பற்றுவதைக்குறித்த மற்றொரு சம்பவம் முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்துவுடைய மரணத்தின் தொடர்பாக நிகழ்ந்தது. பொறாமையுள்ள மதத் தலைவர்களால் இணங்கவைக்கப்பட்டு, மக்களில் அநேகர் இயேசுவைக் கொல்லும்படியாகச் சத்தமிடுவதில் சேர்ந்துகொண்டனர். (மாற்கு 15:11) இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் அவர் பரலோகத்திற்கு ஏறிப்போனதற்கும் பின்னர், பெந்தெகொஸ்தே அன்று அவர்களுடைய பெரிய தவறைப் பேதுரு சுட்டிக்காண்பித்தபோது, அநேகர் “இருதயத்தில் குத்தப்பட்டவர்களாகி,” கும்பலைப் பின்பற்றியதால் தாங்கள் என்ன செய்திருக்கின்றனர் என்பதை உணர்ந்தார்கள்.—அப்போஸ்தலர் 2:36, 37.
பைபிள் நியமங்கள் மேம்பட்டவை
இந்தச் சம்பவங்கள் தெளிவாகச் சித்தரிக்கிறபடி, பிரபலமாக இருப்பதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது கடுமையான விளைவுகளுக்கு வழிநடத்தக்கூடும். பைபிளைப் பின்பற்றி அதன் நியமங்கள் நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்படி அனுமதிப்பது எவ்வளவு மேம்பட்டதாக இருக்கிறது! “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது,” என்று யெகோவா சொல்லுகிறார். (ஏசாயா 55:9) ஒழுக்கங்கள் மற்றும் மனித உறவுகளைப்பற்றிய காரியங்களில்—உண்மையில், வாழ்க்கையின் எல்லா தீர்மானங்களிலும்—பிரபலமாக இருப்பதைவிட யெகோவாவின் வழிகளைப் பின்பற்றுவது அதிக மேம்பட்டதாக இருக்கிறது என்பது திரும்பவும் திரும்பவும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சிகரமான ஆரோக்கிய வாழ்க்கைக்கு அதுவே திறவுகோலாக இருக்கிறது.
உதாரணமாக, காஸூயாவின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் சில காலத்திற்குப் பைபிளைப் படித்திருந்தபோதிலும், ஒரு பிரபல போக்கைப் பின்பற்றுவதைத் தொடர்ந்தார்—பணக்காரராகி வெற்றி அடைவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். தன்னுடைய மேலதிகாரிகளைப் பிரியப்படுத்துவதற்கும், அவருடைய சக வேலையாட்களால் நன்கு மதிப்பிடப்பட வேண்டும் என்பதற்குமான அவருடைய முயற்சிகள், நள்ளிரவிற்கும் மேலான மணிநேரங்களை மதுபான விருந்துகளுக்குச் சென்று செலவிடும்படி அடிக்கடி வழிநடத்தின. அவர் அதிகத்தைக் கேட்பவராக, சகிப்புத்தன்மையற்றவராக, சிடுசிடுப்பானவராக மாறிவிட்டார். அவருடைய மட்டுமீறிய வாழ்க்கை பாணி, விரைவில் நோயின் வன்மையான தாக்குதலுக்கு வழிநடத்தி, அவரைப் பகுதி பக்கவாதத்தில் விட்டது. மருத்துவமனை படுக்கையில் அவர் குணமடைந்து கொண்டிருக்கையில், தான் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டிருந்ததையும் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் முறையையும் நினைத்துப்பார்க்க சமயம் இருந்தது. தான் கற்றுக்கொண்டிருந்ததைப் பொருத்திப் பிரயோகிக்கத் துவங்குவதற்கு நேரம் ஆயிற்று என்று அவர் தீர்மானித்தார். அவர் தன்னுடைய நிர்வாகப் பதவியிலிருந்து விலகி தன்னுடைய கூட்டுறவுகளையும் மாற்றினார். கிறிஸ்தவ ஆளுமையைத் தரித்துக்கொள்வதற்கும் பொருளாதார ஆஸ்திகளைக்குறித்த தன்னுடைய நோக்குநிலையை மாற்றியமைத்துக்கொள்வதற்கும் மனமார்ந்த முயற்சிகளையும் எடுத்தார். அதன் விளைவாக, அவருடைய மதிப்புகள் மாறின, அவருடைய உடல்நலம் முன்னேற்றமடைந்தது. முடிவில், அவர் தன்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டார்.
பிரபலமற்ற ஒரு போக்கைப் பின்பற்றுவதில் வெற்றி பெறுவதற்கு, ஒருவர் அதில் உட்பட்டிருக்கும் நியமங்களை அறிந்தும், அவை சரியானவை என்று முழுமையான உறுதியையும் கொண்டிருக்கவேண்டும். மாசாரூவின் அனுபவம், இதை உண்மையெனக் காட்டுகிறது. அவன் ஆறாம் வகுப்பில் இருந்தபோது, மாணவர் மன்றத் தலைவன் தேர்தலுக்கு நிற்கும்படி அவனுடைய வகுப்புச்சகாக்களால் பரிந்துரைக்கப்பட்டான். அதில் உட்பட்டிருந்த பைபிள் நியமங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத காரணத்தால், தான் ஏன் ஆட்சிக்குரிய பதவியை நாடமுடியாது என்று விளக்கமுடியாதவனாக இருந்தான் என்பதைக் கொஞ்சம் கூச்சத்துடன் நினைவுகூருகிறான். மனிதருக்கான பயம், தான் ஒரு கிறிஸ்தவன் என்பதை வெளிப்படுத்துவதிலிருந்து அவனைத் தடைசெய்தது. தன் தலையைச் சாய்த்துக்கொண்டு, கண்ணீருடன் “என்னால் அதைச் செய்ய முடியாது,” என்று சொல்வதை மட்டுமே அவனால் செய்ய முடிந்தது.
ஒரு கிறிஸ்தவன் ஏன் ஆட்சிக்குரிய நடவடிக்கைகளில் உட்படுவதில்லை என்று ஆராய்வதற்கு இந்த வேதனையான அனுபவம் அவனைத் தூண்டியது. (ஒப்பிடவும் யோவான் 6:15.) பின்னர், அவன் உயர்நிலை பள்ளியிலிருந்தபோது, அதைப்போன்ற ஒரு நிலைமை எழும்பியது. எப்படியும், அவன் இந்த முறை தன்னுடைய நிலைநிற்கையை உறுதியுடன் தன் ஆசிரியரிடம் விளக்க தயாராக இருந்தான். அவனுடைய பைபிள் அடிப்படையான நம்பிக்கைகளைக்குறித்து விசாரித்த அவனுடைய பல வகுப்புச்சகாக்களைப்போல் அந்த ஆசிரியரும் அவனுடைய விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்.
எல்லாரும் சரியானதைச் செய்யும்போது
கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் வரப்போகும் புதிய உலகில், செய்யவேண்டிய பிரபலமான காரியமே செய்யவேண்டிய சரியான காரியமாக இருக்கும். அது வரைக்கும், பிரபலமானதைச் செய்வதற்கான தூண்டுதலுக்கு ஒத்துப்போவதற்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். பவுலின் அறிவுரையிலிருந்து நாம் உற்சாகத்தைப் பெறலாம்: “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.”—எபிரெயர் 12:1.
விவாதங்களும் சவால்களும் உங்களுக்கு முன் வரும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? மனிதருக்கான பயத்திற்கு அடிபணிந்து, பிரபலமாக இருப்பதைச் செய்யும்படி விட்டுக்கொடுப்பீர்களா? அல்லது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்குத் திரும்பி, அதன் நியமங்களைப் பின்பற்றுவீர்களா? பின்னால் சொல்லப்பட்ட போக்கைத் தெரிந்துகொள்வது உங்களுக்கு இப்போது நன்மை அளிப்பது மட்டுமல்லாமல் “வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்கள்” மத்தியில் இருக்கும் எதிர்நோக்கையும் உங்களுக்கு அளிக்கும்.—எபிரெயர் 6:11.