கடவுளுடைய இரக்கம்—இதைப்பற்றி ஒரு சரியான நோக்கைக் கொண்டிருங்கள்
அந்த மருத்துவர் தயவானவராகவும் மிகவும் அக்கறை உடையவராகவும் இருந்தார். அவருடைய மிகச் சிறந்த மதிப்பீட்டின்படி, அவருடைய நோயாளி தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்வதற்கு ஓர் அறுவை சிகிச்சை தேவைப்படக்கூடிய மிக மோசமான நிலையில் இருந்தாள். அவள் தயங்கிக்கொண்டு, இரத்தமேற்றுதல் பிரச்னையை எழுப்பியபோது, அவர் ஆச்சரியப்பட்டார். அவள் மதசார்பான காரணங்களுக்காக, இரத்தமேற்றுதலை உட்படுத்தும் ஓர் அறுவை சிகிச்சைக்கு உடன்பட முடியாது என்று விளக்கியபோது, அவர் திகைப்படைந்தார். அவளுக்கு உதவ ஒரு வழியைக் கண்டுபிடிக்கும்படி அவர் மிகவும் சிந்தித்தார். முடிவாக, அவர் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்தார். அவர் சொன்னார்: “நீங்கள் இரத்தமேற்றுதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீங்கள் இறந்துவிடுவீர்கள். நீங்கள் அதை விரும்பவில்லை, அல்லவா?”
“நிச்சயமாக விரும்பவில்லை,” என்று அவருடைய நோயாளி சொன்னாள்.
“ஆனால், நீங்கள் இரத்தமேற்றுதலை ஏற்றுக்கொண்டால் உங்களுடைய மதசார்பான நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்வதாகத் தோன்றுகிறது; அவையும் உங்களுக்கு முக்கியமானவை. இப்போதும், என்னுடைய ஆலோசனை இதுவே. ஏன் இரத்தமேற்றிக்கொண்டு உங்களுடைய உயிரைப் பாதுகாக்கக்கூடாது. பின்னர் நீங்கள் பாவம் செய்ததாகக் கடவுளிடம் ஒப்புக்கொண்டு, மனந்திரும்புங்கள். அந்த வழியில், உங்களுடைய மதத்திலும் நீங்கள் திரும்ப நிலைநாட்டப்படுவீர்கள்.”
நலன் கருதிய மருத்துவர், தான் ஒரு பூரணமான பதிலைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்தார். அவருடைய நோயாளி ஓர் இரக்கமுள்ள கடவுளில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். நிச்சயமாக, கடவுளுடைய இரக்கத்திலிருந்து பயனைப் பெறுவதற்கு இது ஒரு சரியான நேரமாக இருந்தது! ஆனால் அவருடைய ஆலோசனை அது தோன்றியதைப்போல் அவ்வளவு நியாயமானதாக இருந்ததா?
நாம் எப்போதாவது அவ்விதமாக நியாயவாதம் செய்கிறோமா?
சிலநேரங்களில், நாம் அந்த மருத்துவர் செய்ததைப்போலவே நியாயவாதம் செய்பவர்களாகக் காணப்படக்கூடும். ஒருவேளை, பள்ளியில் அல்லது வேலையில் திடீரென்று ஓர் எதிர்பாராத எதிர்ப்பு வெளிப்பட்டதைக்குறித்து நாம் பயப்பட்டிருக்கலாம். அல்லது நம்முடைய மனச்சாட்சியை வருத்தப்படுத்தக்கூடிய ஏதோ ஒரு காரியத்தைச் செய்யும்படியான ஓர் இக்கட்டான சூழ்நிலையின் அழுத்தத்தின்கீழ் நாம் இருப்பதை உணரலாம். எதிர்பாராமல் நிகழ்ந்ததால், எளிதான வழியைத் தெரிந்துகொண்டு, பின்னர் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, தவறு என்று நமக்குத் தெரிந்த காரியத்தைச் செய்துவிடக்கூடும்.
அல்லது தனி நபர்கள் தங்களுடைய சொந்த தவறான மனச்சாய்வுகளால் சோதிக்கப்படலாம். உதாரணமாக, ஒழுக்கங்கெட்ட காரியத்தைச் செய்வதற்கு கடுமையாகச் சோதிக்கப்படும் ஒரு சூழ்நிலையில் ஓர் இளைஞன் தன்னைக் காணலாம். தன்னுடைய தவறான ஆசைக்கு எதிராகப் போராடுவதற்கு மாறாக, பின்னர் கடவுளுடன் காரியங்களைச் சரிசெய்துகொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அவன் அதற்கு விட்டுக்கொடுத்துவிடக்கூடும். சிலர் தாங்கள் கிறிஸ்தவ சபையிலிருந்து ஒருவேளை சபைநீக்கம் செய்யவும்படுவார்கள் என்பதை அறிந்திருந்தபோதிலும் ஒரு வினைமையான தவறைச் செய்யுமளவிற்குச் சென்றிருக்கின்றனர். அவர்கள் இவ்விதமாக நியாயவாதம் செய்திருக்கக்கூடும், ‘நான் சிறிது காலம் செல்வதற்கு அனுமதித்துவிடுகிறேன். பின்னர் நான் மனந்திரும்பி திரும்ப நிலைநாட்டப்படுவேன்.’
இந்த எல்லா சூழ்நிலைகளும் இரண்டு காரியங்களைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. முதலாவதாக, தனி நபர்கள் சரியானதைச் செய்வதற்காகப் போராடுவதற்கு மாறாக, விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள். இரண்டாவதாக, தவறைச் செய்துவிட்டப்பிறகு, அவர்கள் வெறுமனே கேட்டால், கடவுள் தானாகவே மன்னித்துவிடுவார் என்று நினைக்கின்றனர்.
சரியான நோக்கு என்ன?
கடவுளுடைய இரக்கத்திற்கு இது சரியான போற்றுதலைக் காண்பிக்கிறதா? அந்த இரக்கத்தைப்பற்றி ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். இயேசு சொன்னார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) அந்த இரக்கம் எவ்வாறு கிரியை செய்கிறது என்று பின்வருமாறு சொல்லுகையில் அப்போஸ்தலன் யோவான் விளக்குகிறார்: “நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.” (1 யோவான் 2:1) ஆகவே, அபூரணத்தின் காரணமாகப் பாவத்தில் விழுந்துபோனால், ஜெபத்தில் நாம் கடவுளை அணுகி, இயேசுவின் பலியின் அடிப்படையில் மன்னிப்புக்காக மன்றாடலாம்.
பின்னர் மன்னிப்புக் கேட்கிறவரையில், நாம் பாவம் செய்கிறோமா இல்லையா என்பது ஒரு பெரிய காரியம் அல்ல என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. அந்த மேற்கோளிலுள்ள முதல் வார்த்தைகளை நினைவுபடுத்திப் பாருங்கள்: “நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்.” அந்த வசனத்திலுள்ள யோவானின் மேலுமான வார்த்தைகள், நம்முடைய அபூரணத்துடன் கையாளுவதற்கான யெகோவாவின் அன்பான ஏற்பாட்டைக் காண்பிக்கின்றன. இருந்தாலும், பாவம் செய்வதைத் தவிர்ப்பதற்கு, நம்மால் முடிந்த அளவு கடுமையாக நாம் முயற்சி செய்யவேண்டும். அல்லாவிட்டால், யூதாவால் குறிப்பிடப்பட்ட, கடவுளுடைய தகுதியற்ற தயவை ஒழுக்கக்கேடிற்கேதுவாகப் புரட்டிப் பயன்படுத்தியவர்களைப்போல, நாம் கடவுளுடைய அன்பிற்கு வருந்தத்தக்க அவமரியாதை காண்பிப்பவர்களாக இருப்போம்.—யூதா 4.
நாம் எதைச் செய்தாலும், நாம் விழும்போதெல்லாம் பிடித்துக்கொள்கிற ஒரு வகையான பாதுகாப்பு வலையாக நாம் கடவுளுடைய இரக்கத்தை நோக்குவது, கடவுளுடைய இரக்கத்தை அற்பமானதாகவும், பாவம் என்பது அவ்வளவு தவறான ஒன்றல்ல என்றும் தோன்ற செய்கிறது. இது உண்மைக்கு மிகவும் அப்பாற்பட்டது. அப்போஸ்தலன் பவுல் தீத்துவிடம் சொன்னார்: “எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது [கடவுளுடைய தகுதியற்ற தயவு, NW] பிரசன்னமாகி, நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்தில் ஜீவனம் பண்[ணும்படி] . . . நமக்குப் போதிக்கிறது.”—தீத்து 2:11-13.
பவுல் தன்னுடைய சொந்த அபூரணத்தன்மைக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்ததன்மூலம் கடவுளுடைய இரக்கத்திற்கு தன்னுடைய போற்றுதலைக் காண்பித்தார். அவர் சொன்னார்: “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” (1 கொரிந்தியர் 9:27) தான் அவ்வப்போது பாவத்திற்குக் கட்டுப்பட்டவராக இருந்ததைப்பற்றி பவுல் அசட்டையாக இருக்கவில்லை. நாம் அவ்வாறு இருக்கவேண்டுமா?
இயேசுவின் நோக்குநிலை
சரியானதைச் செய்வதை விட்டுக்கொடுத்து, துன்பத்தைத் தவிர்ப்பதற்கு ஓர் எளிமையான போக்கைத் தேர்ந்தெடுக்கும் எண்ணத்தை இயேசு எவ்வாறு நோக்கினார் என்பதை அவர் ஒருமுறை காண்பித்தார். வரவிருந்த அவருடைய பலிக்குரிய மரணத்தைப்பற்றி தம்முடைய சீஷர்களிடம் சொல்ல ஆரம்பித்தபோது, பின்வருமாறு சொல்வதன்மூலம் பேதுரு அவரை மனமாற்றஞ்செய்ய முயன்றார்: “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை.” இயேசுவின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்.”—மத்தேயு 16:22, 23.
கடவுளுடைய சித்தத்திற்கு எதிராகச் செல்வதை உட்படுத்திய ஓர் எளிதான போக்கை இயேசு மேற்கொள்ள மறுத்தார் என்பதை இயேசு பேதுருவுக்குக் கொடுத்த பலமான கடிந்துகொள்ளுதல் மனதில் பதியத்தக்கவிதத்தில் காண்பிக்கிறது. சாத்தானின் கைகளில் சதா தொந்தரவை அனுபவித்துக்கொண்டும், அவர் தடுமாறாமல் சரியான பாதையைத் தொடர்ந்தார் என்று பதிவு காண்பிக்கிறது. முடிவில் அவர் பரிகசிக்கப்பட்டு, கடுமையாக அடிக்கப்பட்டு, ஒரு வாதனைக்குரிய மரணத்தை அனுபவித்தார். இருப்பினும், அவர் விட்டுக்கொடுக்கவில்லை; இதன் காரணமாக, அவர் தம்முடைய உயிரை நமக்கு ஒரு மீட்கும்பொருளாகக் கொடுக்க முடிந்தது. நிச்சயமாக, கஷ்டங்களோ சோதனைகளோ எழும்பும்போது நாம் ‘நம்மிடமாக தயவாக’ நடந்துகொள்ள அவர் இவையனைத்தையும் சகித்துக்கொண்டிருக்கவில்லை!
இயேசுவைக்குறித்து இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்.” (எபிரெயர் 1:9) எளிதான போக்கை மேற்கொள்வது பெரும்பாலும் அக்கிரமத்தை உட்படுத்துகிறது. எனவே, நாம் உண்மையிலேயே இதை வெறுத்தால்—இயேசு செய்ததைப்போல்—நாம் எப்போதுமே விட்டுக்கொடுப்பதற்கு மறுப்போம். நீதிமொழிகள் புத்தகத்தில் யெகோவா சொல்கிறார்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) இயேசுவின் சமநிலையான, ஆனால் விட்டுக்கொடுக்காத நீதி, யெகோவாவின் இருதயத்திற்கு அதிக சந்தோஷத்தைக் கொண்டுவந்தது. நாம் இயேசுவின் உத்தம போக்கைப் பின்பற்றினால், யெகோவாவுக்கு அதேவிதமான இன்பத்தைக் கொடுக்கலாம்.—1 பேதுரு 2:23.
சகிப்புத்தன்மையின்மூலம் பயிற்றுவிக்கப்படுதல்
அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்: “இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” (1 பேதுரு 1:6, 7) அபூரணராகவும் சாத்தானுடைய உலகின் மத்தியிலும் இருப்பதால், நாம் தொடர்ந்து பரீட்சைகளையும் சோதனைகளையும் எதிர்ப்படுவோம். பேதுரு காண்பிப்பதுபோல், இவை ஒரு நல்ல நோக்கத்தைச் சேவிக்கலாம். அவை நம்முடைய விசுவாசத்தைப் பரீட்சித்து, அது பலவீனமாக இருக்கிறதா அல்லது பலமாக இருக்கிறதா என்பதைக் காண்பிக்கின்றன.
அவை நம்மைப் பயிற்றுவிக்கவும் உதவுகின்றன. இயேசு ‘பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.’ (எபிரெயர் 5:8) பரீட்சையின்கீழ் சகித்தோமானால் நாமும் கீழ்ப்படிதலையும் யெகோவாவின்மீது சார்ந்திருத்தலையும் கற்றுக்கொள்ளலாம். பேதுரு சொன்னதுபோல், இந்தக் கற்கும் முறை, முடிவுபெறும்வரை தொடரும்: “கடவுள் . . . தாமே உங்களுடைய பயிற்றுவிப்பை முடிவுபெறச்செய்து, அவர் உங்களை உறுதிப்படுத்தி, அவர் உங்களைப் பலப்படுத்துவார்.”—1 பேதுரு 5:10, NW.
பரீட்சையின்கீழ் நாம் விட்டுக்கொடுத்துவிட்டால், யெகோவாவிடமாகப் பலமான அன்பிலும், நீதியிலும் குறைவுபட்டவர்களாக அல்லது சுய கட்டுப்பாட்டில் குறைவுபட்டவர்களாக, நம்மைநாமே கோழைகளாக அல்லது பலவீனமுள்ளவர்களாகக் காண்பிக்கிறோம். அப்படிப்பட்ட எந்தப் பலவீனமும், கடவுளோடுள்ள நம்முடைய உறவை ஆழமாகப் பாதிக்கிறது. உண்மையில், பவுலின் எச்சரிப்பு நம்முடைய காரியத்தில் உண்மையாகக்கூடும்: ‘சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இல்லை.’ (எபிரெயர் 10:26) பலவீனத்திற்கு இணங்கி பின்னர் வாழ்க்கைக்கான எல்லா எதிர்நோக்கையும் இழக்கும் அபாயத்தையும் வருவித்துக்கொள்வதற்கு மாறாக, முதலிடத்தில் பாவம் செய்யாமல் இருப்பது எவ்வளவு மேலானதாக இருக்கும்!
நிபந்தனையற்ற உத்தமம்
தானியேல் தீர்க்கதரிசியின் காலத்தில், ஒரு விக்கிரகத்தை வணங்காவிட்டால் தீயினாலான மரணத்திற்கு உட்படுத்தப்படுவதாக மூன்று எபிரெயர்கள் அச்சுறுத்தப்பட்டனர். அவர்களுடைய பதில்? “நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது.”—தானியேல் 3:17, 18.
அவர்கள் சரியானதைச் செய்ய விரும்பியதால் அந்த நிலைநிற்கையை எடுத்தனர். அது அவர்களுடைய மரணத்திற்கு வழிநடத்தியதென்றால், அது அவ்வாறே இருக்கட்டும். அவர்களுடைய நம்பிக்கை உயிர்த்தெழுதலில் இருந்தது. இருப்பினும், கடவுள் அவர்களை விடுவித்தால், அது இன்னுமதிக நன்றாகவே இருக்கும். ஆனால் அவர்களுடைய உறுதியான நிலைநிற்கை நிபந்தனையற்றது. கடவுளுடைய ஊழியர்களைக் குறித்ததிலும் எப்போதும் அப்படியே இருக்கவேண்டும்.
நம்முடைய நாளில், விட்டுக்கொடுக்க மறுத்திருக்கும் சிலர் சிறையிலடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டுமிருக்கின்றனர். மற்றவர்கள், சரியான நியமங்களைத் தியாகம் செய்து செல்வந்தராவதைவிட ஏழைகளாக இருப்பதைத் தேர்ந்தெடுத்திருப்பதன்மூலம் பொருளாதார தியாகங்களைச் செய்திருக்கின்றனர். இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு என்ன நடந்தது? அந்த மருத்துவரின் தவறாக வழிநடத்தப்பட்டதாக இருந்தாலும் தயவாக இருந்த நோக்கத்திற்கு அவள் போற்றுதல் காண்பித்தாள்; ஆனால் தன்னுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை. பதிலாக, யெகோவாவின் சட்டத்திற்கான அவளுடைய மரியாதை, அவள் அந்த அறுவை சிகிச்சையை மறுக்கும்படி செய்தது. மகிழ்ச்சிக்குரியவிதத்தில், அவள் எப்படியோ குணப்பட்டு, யெகோவாவைச் சேவிப்பதில் சுறுசுறுப்பாகத் தொடர்ந்தாள். இருப்பினும், அவள் தன்னுடைய நிலைநிற்கையை எடுத்தபோது, விளைவு என்னவாக இருக்கும் என்பதை அறியாமல் இருந்தாள், ஆனால் அவள் முழுக் காரியத்தையும் யெகோவாவின் கைகளில் விட்டுவிட தயாராக இருந்தாள்.
அழுத்தத்தின்கீழ் அவ்வளவு உறுதியாக இருப்பதற்கு அவளுக்கு உதவியது எது? அவள் தன்னுடைய பலத்தில் சார்ந்திருக்க முயற்சி செய்யவில்லை; கடவுளுடைய எந்த ஊழியனும் அவ்வாறிருக்க முயற்சி செய்யக்கூடாது. “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்,” என்பதை நினைவில் கொள்ளுங்கள். (சங்கீதம் 46:1) பாவம் செய்துவிட்டு, பின்னர் கடவுளுடைய இரக்கத்திற்காக அவரிடம் திரும்புவதைவிட, சோதனையின்கீழ் கடவுளுடைய உதவிக்காக நாடுவது எவ்வளவு அதிக மேம்பட்டதாக இருக்கும்!
ஆம், நாம் ஒருபோதும் கடவுளுடைய பெரிய இரக்கத்தை அலட்சியமாகக் கருதிவிடக்கூடாது. மாறாக, கஷ்டங்களுக்கு எதிரிலும் சரியானதைச் செய்வதற்கு ஓர் உண்மையான ஆசையை வளர்த்துக்கொள்வோமாக. இது யெகோவாவோடுள்ள நம்முடைய உறவை ஆழமாகச் செய்யும்; நித்திய ஜீவனுக்குத் தேவையான பயிற்றுவிப்பை நமக்குத் தரும்; மேலும் கடவுளுடைய இரக்கத்திற்குச் சரியான மரியாதையை வெளிக்காட்டும். அப்படிப்பட்ட ஞானமான நடத்தை நம்முடைய பரலோக தகப்பனின் இருதயத்திற்குச் சந்தோஷத்தைக் கொண்டுவரும்.
[பக்கம் 24-ன் படம்]
உயிர்த்தெழுதலில் முழுமையான நம்பிக்கை, அந்த மூன்று எபிரெயர்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ள உதவியது