வழிபாட்டு தலங்கள்—நமக்கு தேவையா?
‘நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த ஆயிரமாயிரம் யாத்திரீகர்கள் வண்ண நிற ஆடையில் காட்சியளிக்கிறார்கள்; இந்திய தொகுதியினர் முரசுகளின் தாளத்திற்கேற்ப ஹிஸ்பானிய காலத்திற்கு முந்தையதாக கூறப்படும் நடனங்களை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்; விசுவாசிகள் பலர் சர்ச் மண்டபத்தையும் பேஸிலிக்காவைச் சுற்றியுள்ள தெருக்களையும் சூழ்ந்திருக்கும் கூட்டத்தார் நடுவில் கஷ்டப்பட்டு முழங்காலில் தவழ்ந்து புனித தலத்திற்கு செல்கிறார்கள்.’
டிசம்பர் 2001-ல் மாபெரும் கூட்டம் சென்றதைப் பற்றி இப்படித்தான் எல் எகோனோமிஸ்டா என்ற செய்தித்தாள் வர்ணித்தது. குவாடலூப் கன்னிமாதாவின் மீது தங்களுக்கு இருக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்த அந்தச் சமயத்தில் மெக்ஸிகோ நகரத்திலுள்ள பேஸிலிக்காவிற்கு சுமார் 30 லட்சம் மக்கள் விஜயம் செய்தார்கள். ரோமிலுள்ள செ. பீட்டர் பேஸிலிக்கா போன்ற பிரமாண்டமான கட்டடங்களும் பார்வையாளர்கள் திரளானோரை கவருகின்றன.
இறைவனை வழிபட ஆசை கொள்ளும் பலருடைய இதயத்தில் சமய கட்டடங்கள் விசேஷ இடத்தைப் பிடித்திருக்கின்றன. “என்னைப் பொருத்தவரை, சர்ச்தான் கடவுளிடம் அண்டிவர ஏற்ற இடமாக இருந்தது” என கூறுகிறார் பிரேஸிலைச் சேர்ந்த மரியா. “சர்ச்சை ஒரு புனித தலமாக கருதினேன். அங்கு போவது ஆன்மாவை சுத்திகரித்ததாக நினைத்தேன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனையில் கலந்துகொண்டு பாவ அறிக்கை செய்யவில்லையென்றால் பாவம் என நம்பினேன்.” மெக்ஸிகோவை சேர்ந்த கன்ஸ்விலோ இவ்வாறு விவரிக்கிறார்: “சர்ச் எனக்குள் ஆழ்ந்த உணர்ச்சியை பொங்கிவரச் செய்தது; அதை நான் உயர்வாக மதித்தேன். அங்கிருந்தபோது, நான் பரலோகத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.”
சர்ச்சுகளுக்கு சிலர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறபோதிலும், வழிபாட்டு தலங்களாக அவை அவசியமா என்ற கேள்வி வேறு சிலருக்குள் எழும்புகிறது. சர்ச்சுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பற்றி பேசும்போது, பீட்டர் ஸைபர்ட் என்ற இங்கிலாந்து கத்தோலிக்க பாதிரியார் இவ்வாறு கூறுகிறார்: “மதத்தில் தங்களுக்கு பிடித்த சில அம்சங்களை மட்டும் [மக்கள்] தேர்ந்தெடுக்கிறார்கள். வயதானவர்களில் ஏகப்பட்டோர் கத்தோலிக்கராக இருக்கிறார்கள், அவர்கள் தங்களுடைய விசுவாசத்திற்கேற்ப வாழ்கிறார்கள்—ஆனால் இளைஞர் மத்தியில் அப்படிப்பட்ட பொறுப்புணர்ச்சி இல்லை.” நவம்பர் 20, 1998 தேதியிட்ட லண்டன் டெய்லி டெலிகிராஃப் இவ்வாறு கூறியது: “1979 முதற்கொண்டு இங்கிலாந்தில் 495 புதிய சர்ச்சுகள் திறக்கப்பட்டிருக்கின்றன, 150 சர்ச்சுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன; ஆனால் இவற்றோடு ஒப்பிட மூடப்பட்டுவிட்ட சர்ச்சுகளின் எண்ணிக்கையோ சுமார் 1,500.”
1997-ல், ஜெர்மனியில் ம்யூனிச் நகரில் வெளியிடப்படும் சூட்டோய்ச் ட்ஸைடுங் என்ற செய்தித்தாள் இவ்வாறு அறிவித்தது: “சர்ச்சுகள் சினிமா கொட்டகைகளாகவும் அப்பார்ட்மெண்டுகளாகவும் மாற்றப்படுகின்றன: விசுவாசிகள் சர்ச் ஆராதனைகளில் கலந்துகொள்வதில்லை, வழிபாட்டிற்குரிய இடங்கள் வேறுபல காரியங்களுக்காக மாற்றப்பட்டு வருகின்றன. . . . நெதர்லாந்தில் அல்லது இங்கிலாந்தில் ஏற்கெனவே பாரம்பரியமாக செய்யப்பட்டுவந்த பழக்கங்கள் இப்பொழுது ஜெர்மனியில் செய்யப்பட்டு வருகின்றன.” அது மேலும் கூறியது: “ஜெர்மனியில் கடந்த சில வருடங்களுக்குள் சுமார் 30 அல்லது 40 சர்ச்சுகள் விற்கப்பட்டதை ஒருவர் காண முடியும்.”
கடவுளை வழிபட உண்மையிலேயே ஆலயங்கள் தேவையா? பேஸிலிக்காவிற்கும் டாம்பீகமான சர்ச்சுகளுக்கும் ஒப்பான கட்டடங்கள் முன்பு இருந்ததாக வேதாகமம் காட்டுகிறதா? எப்படிப்பட்ட கட்டடங்கள் உண்மையான, உயிருள்ள கடவுளை வழிபடுவதோடு சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன? வழிபாட்டு தலங்களுக்குரிய தேவையைப் பற்றியும் அங்கே என்ன நடைபெற வேண்டும் என்பதைப் பற்றியும் இவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?