நவீன கிரேக்கில் பைபிளைப் பெற போராட்டம்
கருத்து சுதந்திரத்தின் பிறப்பிடம் என்று சில சமயங்களில் அழைக்கப்படும் நாடாகிய கிரீஸில் பொதுமக்கள் அறிந்த மொழியில் பைபிளை மொழிபெயர்ப்பது நீண்ட, கடுமையான போராட்டமாக இருந்ததை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், எளிதாக, புரிந்துகொள்ள முடிந்த கிரேக்க மொழியில் பைபிளை தயாரிப்பதை யார்தான் எதிர்ப்பார்கள்? ஏன் அதை தடுக்க நினைப்பார்கள்?
பரிசுத்த வேதாகமத்தின் பெரும்பாலான பகுதி முதன்முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டதால் அம்மொழி பேசுவோர் பாக்கியம் பெற்றவர்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், எபிரெய வேதாகமத்தின் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமும் உபயோகிக்கும் கிரேக்கைவிட நவீன கிரேக்கு பெருமளவு வித்தியாசப்படுகிறது. உண்மை என்னவென்றால், கடந்த ஆறு நூற்றாண்டுகளாக கிரேக்க மொழி பேசும் பெரும்பாலானோர் பைபிளிலுள்ள கிரேக்க மொழியை புரிந்துகொள்ள சிரமப்பட்டிருக்கின்றனர்; அதை வேற்று மொழியைப் போலவே உணருகின்றனர். பழைய வார்த்தைகளுக்கு பதிலாக புதியவை நுழைந்திருக்கின்றன; சொற்றொகுதி, இலக்கணம், வாக்கிய அமைப்பு ஆகியவை மாறியிருக்கின்றன.
3-வது முதல் 16-வது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட கிரேக்க கையெழுத்து பிரதிகளின் தொகுப்பை ஆராய்ந்தால், செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை நவீன கிரேக்கில் மொழிபெயர்க்க முயற்சிகள் நடந்துள்ளது தெளிவாகும். நீயோசீஸரியாவின் பிஷப்பான கிரெகரி (சுமார் பொ.ச. 213 முதல் சுமார் பொ.ச. 270 வரை) மூன்றாம் நூற்றாண்டில் பிரசங்கி புத்தகத்தை செப்டுவஜின்டிலிருந்து எளிய கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தார். மாசிடோனியாவில் வசித்த டபையஸ் பென் ஏலீயேஸர் என்ற யூதர் 11-வது நூற்றாண்டில் செப்டுவஜின்டின் ஐந்தாகம புத்தகத்தில் சிலவற்றை புழக்கத்திலிருந்த கிரேக்கில் மொழிபெயர்த்தார். கிரேக்கு மட்டுமே பேசிய, ஆனால் எபிரெய எழுத்துக்களை வாசிக்க அறிந்த மாசிடோனிய யூதர்களின் வசதிக்காக அவர் எபிரெய எழுத்துக்களைக்கூட உபயோகித்தார். இப்படிப்பட்ட முழு ஐந்தாகம புத்தகம் ஒன்று 1547-ல் கான்ஸ்டான்டிநோப்பிளில் பிரசுரிக்கப்பட்டது.
இருளிலும் ஒளிக்கீற்று
பைஸான்டைன் பேரரசின் கிரேக்க மொழி பேசும் பகுதிகள் 15-ம் நூற்றாண்டில் ஆட்டோமன்களின் கட்டுப்பாட்டில் வந்தபோது அங்கிருந்தோரில் பெரும்பாலானோர் கல்வி அறிவின்றி இருந்தனர். ஆட்டோமன் பேரரசில் ஆர்த்தடாக்ஸ் சர்ச் விசேஷ சலுகைகளை அனுபவித்தபோதிலும் அது தனது சர்ச் அங்கத்தினர்களை அசட்டை செய்தது; அவர்கள் வறுமையிலும் கல்லாமையிலும் ஊறிய பாமரர்களாகும்படி விட்டுவிட்டது. “தனது சர்ச் அங்கத்தினர்களை இஸ்லாமிய, ரோமன் கத்தோலிக்க பிரச்சாரத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதே ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிற்கும் அதன் கல்வி அமைப்பிற்கும் மிக முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதன் விளைவாக கிரேக்க கல்வி ஓரளவு தேங்கிவிட்டது” என்று கிரேக்க எழுத்தாளரான தாமஸ் ஸ்பீல்யாஸ் குறிப்பிட்டார். இத்தகைய நம்பிக்கையற்ற சூழ்நிலையில்தான், துயரப்படும் மக்களுக்கு பைபிளிலுள்ள சங்கீத புத்தகத்திலிருந்து ஆறுதலை அளிக்க வேண்டிய தேவையை பைபிளை நேசித்தோர் உணர்ந்தனர். 1543-லிருந்து 1835 வரை சங்கீத புத்தகம் பேச்சு வழக்கிலிருந்த கிரேக்க மொழியில் 18 மொழிபெயர்ப்புகளில் கிடைத்தது.
கலிபலிஸைச் சேர்ந்த கிரேக்க துறவியான மக்ஸிமஸ் காலீபோலீடீஸ் 1630-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுவதையும் முதன்முதலாக கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தார். இது, கான்ஸ்டான்டிநோப்பிளின் மதகுருவும் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை சீர்திருத்த இருந்தவருமான சிரல் லூக்காரிஸின் தலைமையிலும் அவருடைய ஆதரவுடனும் நடைபெற்றது. என்றாலும், சர்ச்சுக்குள்ளேயே லூக்காரிஸிற்கு எதிரிகள் இருந்தனர்; அவர்கள் சீர்திருத்த முயற்சிகளையோ பேச்சு மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்படுவதையோ துளியும் விரும்பவில்லை.a அவருக்கு துரோகி என்ற பட்டம் சூட்டி கழுத்தை நெரித்து கொன்று போட்டனர். இருந்தாலும், 1638-ல் மக்ஸிமஸ் மொழிபெயர்ப்பு சுமார் 1,500 பிரதிகள் அச்சிடப்பட்டன. இந்த மொழிபெயர்ப்பு வெளிவந்து 34 வருடங்கள் கழித்து ஜெருசலேமிலிருந்த ஆர்த்தடாக்ஸ் பேரவை இவ்வாறு அறிவித்தது: பைபிளை “பொதுமக்கள் அல்ல, ஆழமான ஆவிக்குரிய காரியங்களை உற்று நோக்குவோர் மட்டுமே, அதுவும் ஏராளமாக ஆராய்ச்சி செய்த பிறகே வாசிக்க வேண்டும்.” அதாவது, கல்வி பயின்ற பாதிரியார்கள் மட்டுமே பைபிளை வாசிக்கலாம் என்பதை இது அர்த்தப்படுத்தியது.
லெஸ்வாஸ் தீவைச் சேர்ந்த கிரேக்க துறவியான செராஃபிம் 1703-ல், மக்ஸிமஸ் மொழிபெயர்ப்பின் மறுபதிப்பை லண்டனில் பிரசுரிக்க முயன்றார். பண உதவி அளிப்பதாக ஆங்கிலேய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் பொய்த்துப் போனதால் தன் சொந்த செலவில் மறுபதிப்பை அச்சிட்டார். அதன் காரசாரமான முன்னுரையில், ‘பக்தியுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும்’ பைபிளை வாசிக்க வேண்டிய தேவையை செராஃபிம் வலியுறுத்தினார். அதோடு, சர்ச்சில் உயர் பதவியிலிருந்த பாதிரிமார்கள், “மக்களை அறியாமையில் வைப்பதன் மூலம் தங்கள் தவறுகளை மூடி மறைக்க” முயலுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். எதிர்பார்த்தபடியே, அவருடைய ஆர்த்தடாக்ஸ் எதிரிகள் ரஷ்யாவில் அவர் கைதாகும்படி செய்து சைபீரியாவிற்கு நாடுகடத்தப்படும்படி செய்தனர். அங்கே அவர் 1735-ல் காலமானார்.
அந்தக் காலத்தைச் சேர்ந்த கிரேக்கு பேசுவோரின் தீவிரமான ஆவிக்குரிய பசியை குறிப்பிடுகையில், மக்ஸிமஸ் மொழிபெயர்ப்பின் மற்றொரு பதிப்பைக் குறித்து கிரேக்க பாதிரியார் ஒருவர் இவ்வாறு கூறினார்: “கிரேக்கர்கள் இந்தப் பரிசுத்த வேதாகமத்தையும் மற்றவைகளையும் அன்போடும் ஆர்வத்தோடும் வரவேற்றனர். அதை தவறாமல் வாசித்தனர். அவர்கள் இருதயத்தின் வலி குணமானதையும், கடவுளில் வைத்த விசுவாசம் . . . கொழுந்துவிட்டு எரிந்ததையும் உணர்ந்தனர்.” ஆனால், பொதுமக்கள் பைபிளை புரிந்துகொள்ள ஆரம்பித்தால் பாதிரிமார்களின் வேதப்பூர்வமற்ற நம்பிக்கைகளும் நடவடிக்கைகளும் வெட்டவெளிச்சமாகுமோ என மதத்தலைவர்கள் பயந்தனர். ஆகவே, அப்படிப்பட்ட அனைத்து பைபிள் மொழிபெயர்ப்புகளையும் எரித்துவிடும்படி 1823-லும் பின்னர் 1836-லும் கான்ஸ்டான்டிநோப்பிளின் மதகுரு அலுவலகம் ஓர் ஆணை பிறப்பித்தது.
தைரியமான மொழிபெயர்ப்பாளர்
பயங்கரமான எதிர்ப்பும் பைபிள் அறிவிற்கான உள்ளப்பூர்வ தாகமும் நிலவிய இந்தச் சூழ்நிலையில்தான் பைபிளை நவீன கிரேக்க மொழியில் மொழிபெயர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கவிருந்த ஒரு பிரமுகர் தோன்றினார். புகழ்பெற்ற மொழியியலாளரும் பிரபல பைபிள் அறிஞருமான நேயாஃபீடாஸ் வாம்வாஸ் என்பவரே அந்த தைரியசாலி. இவர் பொதுவாக, ‘தேச போதகர்களுள்’ ஒருவராக கருதப்பட்டார்.
மக்களின் ஆன்மீக அறியாமைக்கு ஆர்த்தடாக்ஸ் சர்ச்சே காரணம் என்பதை வாம்வாஸ் தெளிவாக உணர்ந்தார். மக்களை ஆவிக்குரிய விதத்தில் தூண்டியெழுப்ப வேண்டுமென்றால் பைபிளை அந்நாளைய பேச்சு வழக்கு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என உறுதியாக நம்பினார். 1831-ல், மற்ற அறிஞர்களின் உதவியோடு கல்விமான்களின் கிரேக்கில் பைபிளை மொழிபெயர்த்தார். அவருடைய முழுமையான மொழிபெயர்ப்பு 1850-ல் பிரசுரிக்கப்பட்டது. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் அவரை ஆதரிக்க மறுத்ததால், அவர் பிரிட்டிஷ் அண்டு ஃபாரின் பைபிள் சொஸைட்டியோடு (BFBS) இணைந்து தன் மொழிபெயர்ப்பை பிரசுரித்து விநியோகித்தார். சர்ச் அவரை ஒரு “புராட்டஸ்டண்ட்” என்று அறிவிக்க, சீக்கிரத்திலேயே ஒதுக்கி வைக்கப்பட்டவராக கருதப்பட்டார்.
வாம்வாஸ் மொழிபெயர்ப்பு கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை அதிகமாக தழுவி இருந்ததால் அதன் குறைபாடுகள் இதிலும் தொற்றிக்கொண்டன; ஏனெனில், அக்காலத்தில் பைபிள் அறிவும் மொழியறிவும் குறைவாக இருந்தன. இருந்தாலும், அநேக வருடங்களாக இதுவே பொதுமக்களுக்கு கிடைத்த அதிநவீன கிரேக்க பைபிளாக திகழ்ந்தது. கடவுளுடைய பெயர் “ஈயோவா” என்ற வடிவில் நான்கு முறை அதில் காணப்படுவது ஆர்வத்துக்குரிய விஷயம்.—ஆதியாகமம் 22:14; யாத்திராகமம் 6:3; 17:15; நியாயாதிபதிகள் 6:24.
எளிதில் புரிந்துகொள்ள முடிந்த இதற்கும் இதைப்போன்ற மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளுக்கும் மக்களின் வரவேற்பு பொதுவாக எவ்வாறு இருந்தது? மிகவும் பிரமாதமாக இருந்தது! கிரேக்க தீவுகள் ஒன்றின் அருகில் BFBS-ஐச் சேர்ந்த பைபிள் விற்பனையாளர் ஒருவர் ஒரு படகிலிருந்து பைபிள்களை விற்றுக்கொண்டிருந்தார். “[பைபிளை] பெறுவதற்காக அநேக படகுகளில் பிள்ளைகள் வந்து அவரை மொய்த்ததால், . . . துறைமுகத்தைவிட்டு புறப்படும்படி படகோட்டிக்கு கட்டளையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.” இல்லையெனில், அவரிடமிருந்த பைபிள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காலியாகிவிட்டிருக்குமே! இதைக் கண்ட எதிரிகள் சும்மாயிருக்கவில்லை.
இப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகளை வாங்கக்கூடாது என்று ஆர்த்தடாக்ஸ் பாதிரிகள் மக்களை எச்சரித்தனர். உதாரணமாக, ஏதன்ஸ் மாநகரில் பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1833-ல் கிரீட்டின் ஆர்த்தடாக்ஸ் பிஷப் ஒரு துறவி மடத்தில் கண்டுபிடித்த “புதிய ஏற்பாடுகள்” அனைத்தையும் எரித்துப்போட்டார். ஆனால், ஒரு பிரதியை பாதிரியார் ஒருவர் மறைத்து வைத்திருந்தார்; அந்த பிஷப் தீவிலிருந்து செல்லும் வரை அருகிலுள்ள கிராமவாசிகளும் தங்கள் பைபிள்களை மறைத்து வைத்தனர்.
சில வருடங்கள் கழித்து, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பரிசுத்த பேரவை பைபிளின் வாம்வாஸ் மொழிபெயர்ப்பை கார்ஃபூ தீவில் தடை செய்தது. அதன் விற்பனை தடை செய்யப்பட்டது, அப்போதிருந்த பிரதிகளும் அழிக்கப்பட்டன. கையாஸ், சீராஸ், மிக்கனாஸ் தீவுகளில் உள்ளூர் பாதிரிகளின் பகைமை காரணமாக பைபிள்கள் எரிக்கப்பட்டன. ஆனால், பைபிள் மொழிபெயர்ப்பை மேலும் ஒடுக்குவது எதிர்காலத்தில் வரவிருந்தது.
ஓர் அரசி பைபிளில் அக்கறை காண்பிக்கிறாள்
கிரேக்க மக்கள் பொதுவாகவே பைபிள் அறிவில் குறைவுபட்டதை 1870-களில் கிரீஸைச் சேர்ந்த அரசி ஆல்கா உணர்ந்தாள். பைபிளைப் பற்றிய அறிவு தேசத்தாருக்கு ஆறுதலையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும் என்று நம்பியவளாக வாம்வாஸ் மொழிபெயர்ப்பைவிட எளிய மொழிநடையில் பைபிளை மொழிபெயர்க்க முயன்றாள்.
ஏதன்ஸின் தலைமை பிஷப்பும் பரிசுத்த பேரவை தலைவருமான ப்ரோகோபீயோஸ் இதை செய்யும்படி ராணிக்கு மறைமுகமாக ஊக்கமளித்தார். ஆனால், பரிசுத்த பேரவையின் அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற ராணி விண்ணப்பித்தபோதோ அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் அவள் விடவில்லை; இரண்டாவது முறையாக விண்ணப்பித்தபோதும் 1899-ல் அது மீண்டும் மறுக்கப்பட்டது. ஒப்புதல் மறுக்கப்பட்டதை பொருட்படுத்தாமல் தனது சொந்த செலவில் கொஞ்சத்தை பிரசுரிக்க முடிவு செய்தாள். 1900-ல் தான் நினைத்ததை சாதித்தாள்.
எதிரிகளும் விடுவதாயில்லை
1901-ல், ஏதன்ஸைச் சேர்ந்த பிரபலமான செய்தித்தாளான தி அக்ரோபோலிஸ் மத்தேயு சுவிசேஷத்தை பிரசுரித்தது. இதை இங்கிலாந்து, லிவர்பூலில் வேலை செய்த மொழிபெயர்ப்பாளரான அலெக்ஸாண்டர் பாலீஸ் பேச்சு வழக்கு கிரேக்கில் மொழிபெயர்த்திருந்தார். ‘கிரேக்கர்களுக்கு கல்வி புகட்டுவதும்’ நலிவிலிருந்த ‘தேசம் மீள உதவுவதுமே’ பாலீஸ் மற்றும் அவருடைய நண்பர்களின் நோக்கமாயிருந்தது.
இந்த மொழிபெயர்ப்பு, “தேசத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த நினைவுச் சின்னத்தை அவமதிக்கிறது,” பைபிளின் புனிதத்தன்மையை கெடுக்கிறது என்று ஆர்த்தடாக்ஸ் இறையியல் மாணவர்களும் பேராசிரியர்களும் அறைகூவல் விடுத்தனர். கான்ஸ்டான்டிநோப்பிளின் மதகுருவான மூன்றாம் யோயாகீம், இந்த மொழிபெயர்ப்பை கண்டனம் செய்து ஓர் ஆவணத்தை வெளியிட்டார். இந்தச் சர்ச்சைக்கு அரசியல் முலாம் பூசப்பட்டு, எதிரும் புதிருமான அரசியல் கட்சிகள் அதை தவறான விதத்தில் உபயோகித்தன.
ஏதன்ஸிலுள்ள பத்திரிகை துறையில் செல்வாக்கு மிக்கவை பாலீஸின் மொழிபெயர்ப்பை தாக்க ஆரம்பித்தன; அதை ஆதரித்தோருக்கு, “நாத்திகவாதிகள்,” “துரோகிகள்,” கிரேக்க சமுதாயத்தை சீர்குலைப்பதில் குறியாயிருந்த “வெளிநாட்டு சக்திகளின் கையாட்கள்” என்றெல்லாம் முத்திரை குத்தின. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் மிதமிஞ்சிய பழமைவாத தொகுதிகளின் தூண்டுதலால் 1901, நவம்பர் 5 முதல் 8 தேதி வரை ஏதன்ஸிலிருந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தி அக்ரோபோலிஸின் அலுவலகங்களை நொறுக்கித் தள்ளினர்; அரண்மனைக்கு விரோதமாக பேரணி நடத்தி, ஏதன்ஸ் பல்கலைக்கழகத்தைக் கைப்பற்றி, அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டங்களின் உச்சக்கட்டத்தில் இராணுவத்தோடு கைகலப்பு ஏற்பட்டதால் எட்டு பேர் கொல்லப்பட்டனர். அடுத்த நாள், தலைமை பிஷப்பான ப்ரோகோபீயோஸ் ராஜினாமா செய்யும்படி அரசர் கேட்டுக்கொண்டார். இரண்டு நாட்கள் கழித்து அமைச்சரவை முழுவதுமே ராஜினாமா செய்தது.
ஒரு மாதம் கழித்து மாணவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர்; பாலீஸ் மொழிபெயர்ப்பின் ஒரு பிரதியை பொதுவிடத்தில் எரித்தனர். இந்த மொழிபெயர்ப்பின் விநியோகிப்பை தடை செய்யும் தீர்மானத்தை அவர்கள் வெளியிட்டனர். எதிர்காலத்தில் இப்படியொரு முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு பயங்கர தண்டனை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டனர். இது, பைபிளின் நவீன கிரேக்க மொழிபெயர்ப்புகள் அனைத்தையும் தடைசெய்ய வழிகோலியது. உண்மையில், காரிருள் சூழ்ந்த காலமே!
‘யெகோவாவுடைய வசனம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்’
நவீன கிரேக்க மொழியில் பைபிளை உபயோகிப்பதற்கு எதிரான தடை 1924-ல் நீக்கப்பட்டது. அதுமுதல், பைபிள் ஜனங்களின் கைகளில் கிடைக்காமலிருக்க செய்த முயற்சிகளில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் படுதோல்வி அடைந்திருக்கிறது. இதற்கிடையில், மற்ற நாடுகளில் உள்ளதைப் போலவே கிரீஸிலும் பைபிள் அறிவை அதிகரிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் 1905 முதல் வாம்வாஸ் மொழிபெயர்ப்பை உபயோகித்து, பைபிள் சத்தியத்தைப் பற்றிய அறிவை அடைய கிரேக்க மொழி பேசும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவியிருக்கிறார்கள்.
பல வருடங்களாக, நவீன கிரேக்கில் பைபிளை தயாரிக்க அநேக அறிஞர்களும் பேராசிரியர்களும் போற்றத்தக்க முயற்சிகளை செய்திருக்கிறார்கள். இன்றோ, கிரீஸின் சாமானிய குடிமகன் படித்து, புரிந்துகொள்ள முடிந்த சுமார் 30 பைபிள் மொழிபெயர்ப்புகள், முழுமையாகவோ பகுதியாகவோ கிடைக்கின்றன. அவற்றுள், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் கிரேக்க மொழிபெயர்ப்பு ஒப்பற்ற மாணிக்கமாகும். அது, உலகம் முழுவதிலும் கிரேக்க மொழி பேசும் 1.6 கோடி மக்களின் நன்மைக்காக 1997-ல் வெளியிடப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு கடவுளுடைய வார்த்தையை எளிதில் படித்து, புரிந்துகொள்ளும் விதத்திலும் உண்மையோடு மூல வாக்கியத்தை தழுவியும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
நவீன கிரேக்கில் பைபிளைப் பெறுவதற்கான போராட்டம் ஒரு முக்கிய உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. மனிதரின் எதிர்ப்புகள் மத்தியிலும் ‘யெகோவாவுடைய வசனம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்’ என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது.—1 பேதுரு 1:25, NW.
[அடிக்குறிப்பு]
a சிரல் லூக்காரிஸ் பற்றிய கூடுதலான தகவலுக்கு காவற்கோபுரம், 2000, பிப்ரவரி 15, பக்கங்கள் 26-9-ஐக் காண்க.
[பக்கம் 27-ன் படம்]
1630-ல் முழு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தையும் கிரேக்கில் முதன்முதலாக மொழிபெயர்ப்பதற்கு சிரல் லூக்காரிஸ் தலைமை ஏற்றார்
[படத்திற்கான நன்றி]
Bib. Publ. Univ. de Genève
[பக்கம் 28-ன் படங்கள்]
பேச்சு வழக்கு கிரேக்கில் சில மொழிபெயர்ப்புகள்: சங்கீதம் அச்சிடப்பட்ட சமயம்: (1) 1828-ல் இலேரியன், (2) 1832-ல் வாம்வாஸ், (3) 1643-ல் ஜூலியனஸ். “பழைய ஏற்பாடு” அச்சிடப்பட்ட சமயம்: (4) 1840-ல் வாம்வாஸ்
அரசி ஆல்கா
[படங்களுக்கான நன்றி]
பைபிள்கள்: National Library of Greece; அரசி ஆல்கா: Culver Pictures
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
பப்பைரஸ்: Reproduced by kind permission of The Trustees of the Chester Beatty Library, Dublin
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
பப்பைரஸ்: Reproduced by kind permission of The Trustees of the Chester Beatty Library, Dublin