ஏன்? ‘கடவுளே, ஏன் எனக்கு இந்தக் கஷ்டம்?’
டாக்டருடைய ‘வெயிட்டிங்’ ரூமில் தன் மனைவி மரியாவுடன் உட்கார்ந்திருந்தது இன்றும் ரிக்கார்டூவிற்கு நினைவிருக்கிறது.a மரியாவுடைய மருத்துவ அறிக்கையை வாசிக்க அவர்கள் இருவருக்குமே தைரியமில்லை. பிறகு எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ரிக்கார்டூ கவரை பிரித்தார், அந்த அறிக்கையிலிருந்த மருத்துவ பாஷையை அவர்கள் இருவரும் வேகமாக நோட்டமிட்டனர். “கேன்ஸர்” என்ற வார்த்தை அவர்களுடைய கண்களில் தட்டுப்பட்டது, அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தை உணர்ந்தபோது அவர்கள் இருவரும் கதறி அழ ஆரம்பித்துவிட்டனர்.
“அந்த டாக்டர் ரொம்ப அன்பா கவனிச்சாரு, அதேசமயத்தில நிலைமை ரொம்ப மோசமா இருந்தது அவருக்கு நல்லா தெரிஞ்சதால, கடவுள் மேல நம்பிக்கை வையுங்கன்னு எப்பொழுதும் சொல்லிக்கிட்டே இருந்தாரு” என ரிக்கார்டூ சொல்கிறார்.
கதிர்வீச்சு சிகிச்சை ஆரம்பமாவதற்கு முன்பு, மரியாவின் வலது கால் தானாகவே அசைவதை அவளுடைய டாக்டர் கவனித்தார். கேன்ஸர் அவளுடைய மூளைக்கு பரவிவிட்டதை அடுத்தடுத்த பரிசோதனைகள் வெளிப்படுத்தின. ஒரேவொரு வார சிகிச்சைக்குப்பின் கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டது. மரியா கோமா நிலைக்கு சென்று, இரண்டு மாதங்கள் கழித்து இறந்துவிட்டாள். “அவ பட்ட வேதனைக்கு முடிவு வந்துட்டதா நெனச்சு மனச தேத்திக்கிட்டேன். ஆனா அவ இல்லாம எனக்கு எல்லாமே வெறுமையா தெரிஞ்சுது, நானும் செத்துப் போனா தேவலைங்கற மாதிரிகூட எனக்குத் தோண ஆரம்பிச்சுடுச்சு. அடிக்கடி கடவுள்கிட்ட, ‘ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தை கொடுத்தீர்?’ன்னு கதறி அழுதேன்” என ரிக்கார்டூ கூறுகிறார்.
பெருந்துயரங்கள் தாக்கும்போது கேள்விகளுக்குப் பஞ்சமே இல்லை
ரிக்கார்டூவைப் போல, உலகம் பூராவும் எண்ணற்றோர் துன்பத்தின் எதார்த்தத்தை நேருக்கு நேர் சந்திக்கும் கட்டாயத்தில் உள்ளனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அப்பாவி ஜனங்களே அவதியுறுகின்றனர். மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் ஈவிரக்கமற்ற போர்களால் வரும் துயரத்தை—இதயத்தை சுக்குநூறாக்கும் துயரத்தை—சற்று கற்பனை செய்து பாருங்கள். கற்பழிப்பு, குழந்தைகள் துஷ்பிரயோகம், வீட்டிலே வன்முறை என மனிதனால் இழைக்கப்படும் பல கொடுமைகளுக்கு பலியாகும் எண்ணிறந்தோருடைய வேதனையை சிந்தித்துப் பாருங்கள். காலங்காலமாக ஆண்களும் பெண்களும் மனங்கூசாமல் ஒருவருக்கொருவர் இழைக்கும் அநீதிக்கும் வேதனைக்கும் ஒரு முடிவே இல்லாதது போல தோன்றுகிறது. (பிரசங்கி 4:1-3) இதைத் தவிர, இயற்கை சீற்றங்களுக்கு ஆளாகிறவர்களுடைய வேதனை, உணர்ச்சி ரீதியிலும் மனோ ரீதியிலும் உடல் ரீதியிலும் ஏற்படும் வேதனை ஆகியவற்றையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். இவற்றையெல்லாம் கண்டு, “ஏன் கடவுள் இப்படிப்பட்ட துன்பத்தை அனுமதிக்கிறார்?” என அநேகர் கேட்பதில் ஆச்சரியமே இல்லை.
தீவிர மதப் பற்றுள்ளவர்களுக்கும்கூட துன்பத்தை எதிர்கொள்ள துணிவு இருப்பதில்லை. அன்பும் சர்வ வல்லமையும் பொருந்திய ஒரு கடவுள் மனிதரை துன்பப்படும்படி விட்டுவிடுமளவுக்கு அப்படி என்னதான் காரணம் இருக்க முடியும் என நீங்கள் யோசிக்கலாம். புதிரான இந்தக் கேள்விக்கு திருப்திகரமான, உண்மையான பதிலை கண்டுபிடிப்பது நம்முடைய நிம்மதிக்கும் கடவுளுடன் உள்ள நம்முடைய உறவுக்கும் இன்றியமையாதது. பைபிள் அந்தப் பதிலை தருகிறது. பின்வரும் கட்டுரையில் பைபிள் என்ன சொல்கிறது என்பதற்கு தயவுசெய்து கவனம் செலுத்துங்கள்.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 3-ன் படங்கள்]
கடவுள் மேல நம்பிக்கை வையுங்கன்னு எங்களிடம் டாக்டர் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருந்தார்