அது சாத்தானின் நூற்றாண்டா?
“நடந்த பயங்கரமான காரியங்களைப் பார்க்கும்போது, அது சாத்தானின் நூற்றாண்டாகத்தான் இருக்க வேண்டும். இனத்திற்காகவோ மதத்திற்காகவோ அல்லது அந்தஸ்திற்காகவோ லட்சோப லட்சம் பேரை கொன்று குவிக்க வேண்டுமென்ற எண்ணமும் வெறியும் வேறெந்த சகாப்தத்திலும் மக்களிடம் இருந்ததில்லை.”
ஜனவரி 26, 1995-ல் வெளிவந்த த நியூ யார்க் டைம்ஸ் இதழின் தலையங்கத்தில் இந்த வரிகள் காணப்பட்டன. இது, நாசி மரண முகாம்களில் சிறைப்படுத்தப்பட்ட அப்பாவி ஜனங்களுடைய விடுதலையின் 50-ம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு குறிப்பிடப்பட்டது. இந்தப் படுகொலையில் சுமார் 60 லட்சம் யூதர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டனர், இது சரித்திரத்திலேயே மிகவும் பரவலாக அறியப்பட்ட இனப் படுகொலைகளில் ஒன்று. யூதரல்லாத போலந்து நாட்டவர் சுமார் 30 லட்சம் பேர் இறந்தனர், இது “மறக்கப்பட்ட படுகொலை” என அழைக்கப்படுகிறது.
“ஒரு கணக்கின்படி, 1900-க்கும் 1989-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 8.6 கோடி மக்கள் போரில் மடிந்தனர்” என மனிதகுலம்—இருபதாம் நூற்றாண்டின் ஒரு தார்மீக சரித்திரம் (ஆங்கிலம்) நூலில் ஜானத்தன் க்ளோவர் கூறுகிறார். அவர் மேலும் கூறுகிறார்: “இருபதாம் நூற்றாண்டில் போரில் பலியானவர்களுடைய எண்ணிக்கை கற்பனைக்கு எட்டாதது. அந்த சராசரி எண்ணிக்கை எந்தளவுக்கு உண்மை என்று சொல்ல முடியாது, ஏனென்றால் இந்த இரண்டு உலகப் போர்களிலும் சுமார் மூன்றில் இரண்டு பாகத்தினர் (5.8 கோடி) கொல்லப்பட்டனர். ஆனால் இந்த மரணங்கள் அந்த நூற்றாண்டு பூராவும் சீரான இடைவெளிகளில் ஏற்பட்டிருந்தால், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 2,500 பேரை, அதாவது இடைவெளியின்றி மணிக்கு 100 பேருக்கும் அதிகமானோரை தொண்ணூறு ஆண்டுகளுக்கு போர் காவு கொண்டிருக்கும்.”
அதனால் 20-ம் நூற்றாண்டு, மனித சரித்திரத்திலேயே அதிக இரத்தக்கறை படிந்த நூற்றாண்டுகளில் ஒன்று என அழைக்கப்பட்டிருக்கிறது. நம்பிக்கைக்கு எதிராக நம்பிக்கை (ஆங்கிலம்) என்ற நூலில் நடிஷெடா மன்டில்ஷ்டாம் இவ்வாறு எழுதுகிறார்: “மனிதாபிமானத்தை சிதைத்து, மனித உரிமைகளை மீறி தீமை வெற்றி பெற்றிருப்பதை நாம் கண்ணார கண்டிருக்கிறோம்.” நன்மையா தீமையா என்ற இந்தப் போராட்டத்தில், தீமை உண்மையிலேயே வென்றுவிட்டதா?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
COVER: Mother and daughter: J.R. Ripper/SocialPhotos
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
U.S. Department of Energy photograph