“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”
அன்றும் இன்றும்—பைபிளின் வல்லமை
நீங்கள் டோனியை ஒரு டீனேஜராக சந்தித்திருந்தால், சரியான முரட்டுக் காளை என்றுதான் சொல்லியிருப்பீர்கள். ஆம், ஆஸ்திரேலியாவில் ஸிட்னியிலுள்ள சில மோசமான இடங்களை சுற்றிக்கொண்டிருப்பதே அவர் பழக்கமாக இருந்தது. ரவுடிகள்தான் அவர் நண்பர்கள். அவர்களோடு சேர்ந்து திருடினார், கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டார், துப்பாக்கியும் கையுமாக தெருச் சண்டைகளில் இறங்கினார்.
டோனி, ஒன்பது வயதில் புகைப்பிடிக்கத் தொடங்கி, பதினாலு வயதில் மரிஜுவானா புகைக்கும் பழக்கத்துக்கு ஆளானார். அதோடு, ஒழுக்கக்கேடு எனும் சகதியிலும் புரண்டு கொண்டிருந்தார். பதினாறு வயதை எட்டுவதற்கு முன்பே ஹெராயினுக்கும் அடிமையாகிவிட்டார். பிறகு கொக்கேயின், எல்எஸ்டி போன்ற போதை மருந்துகளையும் உபயோகிக்க ஆரம்பித்தார். “உண்மையைச் சொன்னால், போதையின் உச்சிக்கு என்னை இழுத்துப்போன எதையுமே நான் விட்டுவச்சதில்ல” என்று டோனி விளக்குகிறார். பின்னர், இரண்டு பயங்கரவாத கும்பல்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு, போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டார். பிறகென்ன, ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியிலேயே நம்பர் ஒன் போதைப்பொருள் வியாபாரியானார்.
ஹெராயின் மற்றும் மரிஜுவானா பழக்கத்தினால் டோனிக்கு ஒரு நாளில் 8,000 ரூபாயிலிருந்து 16,000 ரூபாய் வரை செலவானது. அவரது குடும்பத்திற்கோ இதனால் பண நஷ்டம் மட்டுமல்ல, பல கஷ்டங்களும் நேர்ந்தன. “எங்க வீட்டில் பதுக்கி வச்சிருந்த போதை மருந்துகளையும் பணத்தையும் பறிக்கிறதுக்காக, நிறைய தடவை ரவுடிங்க என்னையும் என் மனைவியையும் துப்பாக்கி, கத்தியெல்லாம் காட்டி பயமுறுத்தினாங்க” என அவர் சொல்கிறார். மூன்று முறை அவர் சிறை தண்டனை அனுபவித்தார், அந்தச் சிறைவாசம் அவரை சிந்திக்க வைத்தது. இப்படிப்பட்ட வாழ்க்கை தன்னை எங்கே கொண்டு போய் விடுமோ என்று அவர் யோசிக்கத் தொடங்கினார்.
டோனி சர்ச்சுக்குப் போய்க்கொண்டிருந்த போதிலும் கடவுள்மீது எவ்வித பற்றும் இல்லாதவராக இருந்தார்; ஏனென்றால் கடவுள் பாவிகளை நரகத்திலே நித்தியத்துக்கும் வதைத்து தண்டிக்கிறவர் என்று அவருக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. யெகோவாவின் சாட்சிகளான ஒரு தம்பதி அவரை சந்தித்த பின்னர்தான் கடவுள் அப்படிப்பட்டவர் இல்லை என்று அறிந்து ஆச்சரியப்பட்டார். மேலும், தன் வாழ்க்கையை சீர்திருத்த முடியும், கடவுளின் ஆசீர்வாதத்தை தான் பெற முடியும் என்றெல்லாம் அறிந்து சந்தோஷப்பட்டார். “தேவனாலே எல்லாம் கூடும்” என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் அவரை நெகிழ வைத்தன. (மாற்கு 10:27) குறிப்பாக, “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்ற உற்சாகமளிக்கும் வார்த்தைகள் அவர் மனதை தொட்டன.—யாக்கோபு 4:8, NW.
பைபிள் தராதரங்களுக்கு இசைவாக தன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சவாலை டோனி இப்போது எதிர்ப்பட்டார். “முதல்ல நான் புகைப்பிடிப்பதை விட்டொழிச்சேன். இதுக்கு முன்னால நான் பல தடவை இந்தப் பழக்கத்தை நிறுத்த முயற்சி செஞ்சும் எந்தப் பலனுமில்ல. ஆனா, யெகோவா எனக்கு சக்தி கொடுத்ததனாலத்தான் கடந்த 15 வருஷங்களா என்னை ஆட்டிப்படைச்ச ஹெராயினையும் மரிஜுவானாவையும் விட்டு மீள முடிஞ்சுது. இந்தப் பழக்கங்கள விட்டுவிடுவேன்னு நான் கொஞ்சங்கூட நினைச்சுப் பார்க்கல” என்று டோனி சொல்கிறார்.
டோனியும் அவர் மனைவியும் பைபிளில் இல்லாத ஒரு கோட்பாட்டை, அதாவது கடவுள் ஜனங்களை நரகத்திலே என்றுமாக வதைக்கிறார் என்ற கோட்பாட்டை இனியும் நம்பி பயத்தில் வாழ்வதில்லை. மாறாக, பரதீஸிய பூமியில் நித்திய காலமாக வாழும் நம்பிக்கையை மனதார ஏற்றிருக்கிறார்கள். (சங்கீதம் 37:10, 11; நீதிமொழிகள் 2:21) “கடவுளோட தராதரங்களுக்கு ஏத்த மாதிரி என் வாழ்க்கைய மாத்திக்க எனக்கு ரொம்ப காலம் எடுத்துச்சு, அதுக்காக ரொம்பவும் சிரமப்பட்டேன். ஆனா, யெகோவாவோட ஆதரவாலத்தான் என்னால வெற்றிபெற முடிஞ்சுது” என்று டோனி ஒத்துக்கொள்கிறார்.
ஆம், அன்று போதைக்கு அடிமையாய் இருந்தவர் இன்று ஒரு கிறிஸ்தவராயிருக்கிறார். பைபிளைக் கற்றுக்கொடுக்கும் பணியில் டோனியும் அவர் மனைவியும் ஆயிரக்கணக்கான மணிநேரங்களை மனப்பூர்வமாக செலவிட்டிருக்கிறார்கள், தங்கள் வளங்களையும் மனமுவந்து அளித்திருக்கிறார்கள். தங்கள் மகனுக்கும் மகளுக்கும் தேவபக்தியை ஊட்டி வளர்த்து வருகிறார்கள். கடவுளின் வார்த்தையான பைபிளின் அபார சக்தியால்தான் இந்தப் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. நிச்சயமாகவே, அப்போஸ்தலன் பவுல் சொன்னவிதமாக, ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது.’—எபிரெயர் 4:12.
இப்படிப்பட்ட உற்சாகமூட்டும் உதாரணங்கள் இருந்த போதிலும், யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் சம்பந்தப்பட்ட கல்வி புகட்டும் வேலை குடும்பங்களைக் குலைப்பதாகவும் இளைஞர்களுடைய நற்பண்புகளை பாழாக்குவதாகவும் சிலர் நியாயமில்லாமல் வாதிடுகிறார்கள். ஆனால் டோனியின் அனுபவம் இந்தக் குற்றச்சாட்டை தகர்த்தெறிந்திருக்கிறது.
டோனியைப் போலவே, தாங்களும் கொடிய பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அநேகர் கற்றிருக்கிறார்கள். எவ்வாறு? கடவுளை விசுவாசிப்பதன் மூலமும் அவர் மீதும் அவர் வார்த்தையின் மீதும் சார்ந்திருப்பதன் மூலமும். அதோடு, கரிசனையும் அன்பும் மிக்க கிறிஸ்தவ நண்பர்களின் ஆதரவின் மூலமும் இக்கொடிய பழக்கங்களை விட்டு மீள முடியும் என அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். “பைபிளோட நியமங்கள் எப்படி என் குழந்தைகளைப் பாதுகாத்திருக்குன்னு நான் கண்ணாரக் கண்டிருக்கேன். பைபிள் போதனைகள் என்னோட குடும்ப வாழ்க்கையையும் பாதுகாத்திருக்கு. அதுமட்டுமில்ல, இப்பதான் அக்கம்பக்கத்தில் இருப்பவங்களும் என்னை நினைச்சு பயப்படாம நிம்மதியா தூங்கறாங்க” என்று சந்தோஷமாகக் கூறி முடிக்கிறார் டோனி.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
‘யெகோவா எனக்கு சக்தி கொடுத்ததனாலத்தான் கடந்த 15 வருஷங்களா என்னை ஆட்டிப்படைச்ச போதைப் பழக்கத்தை விட்டு மீள முடிஞ்சுது’
[பக்கம் 9-ன் பெட்டி]
நடைமுறையான பைபிள் நியமங்கள்
போதை மருந்துக்கு அடிமையாகும் பழக்கத்திலிருந்து விடுபட பல பைபிள் நியமங்கள் அநேகருக்கு உதவியிருக்கின்றன. அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
“மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) போதை மருந்துகளை உட்கொள்வது கடவுளின் சட்டத்திற்கு விரோதமானது.
“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.” (நீதிமொழிகள் 9:10) யெகோவாவையும் அவரது வழிகளையும் பற்றி திருத்தமாக அறிந்துகொள்ளும்போது ஏற்படும் பயபக்தி, போதையின் செல்வாக்கிலிருந்து பலரை விடுவித்திருக்கிறது.
“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:5, 6) கடவுளை மனதார நம்பி, அவர் மீது முழுமையாக சார்ந்திருந்தால் கொடிய பழக்கங்களிலிருந்து விடுபட முடியும்.