பைபிள் படிப்புக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறீர்களா?
குடும்பமாகச் சேர்ந்து பைபிளைப் படிப்பதற்கும் ஆன்மீக விஷயங்களைக் கலந்துபேசுவதற்கும் இப்போதெல்லாம் நிறைய நேரம் கிடைக்கிறது, அல்லவா? ஆளும் குழு கடந்த வருடம் சபைக் கூட்டங்களில் ஏற்படுத்திய மாற்றமே இதற்குக் காரணம். நீங்கள் ஒரு குடும்பத் தலைவரா? அப்படியென்றால், உங்கள் மனைவி மக்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் தவறாமல் பைபிள் படிப்பை நடத்த மறவாதீர்கள். நீங்கள் பிள்ளைகளில்லாத தம்பதியரா? அப்படியென்றால், கணவன் மனைவியாகச் சேர்ந்து பைபிளைப் படிக்க இது பொன்னான நேரம்! நீங்கள் திருமணமாகாதவரா? அப்படியென்றால், குடும்பப் பொறுப்பு அதிகமில்லாத உங்களுக்கு, தனிப்பட்ட விதத்தில் பைபிளை ஆழ்ந்து படிக்க இது அருமையான நேரம்!
குடும்ப வழிபாட்டுக்கென்று கிடைத்திருக்கிற இந்த மாலை நேரத்திற்காக அநேகர் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, மூப்பராக இருக்கும் கெவின் இவ்வாறு எழுதினார்: “‘நன்றி’ என்று சொன்னால் அது போதவே போதாது. நான் மட்டும் அப்படி உணரவில்லை, எங்கள் சபையிலுள்ள அத்தனை பேருமே அப்படித்தான் உணருகிறார்கள். ஆளும் குழுவின் அறிவுரைப்படியே குடும்பமாக இந்த நேரத்தை எப்படியெல்லாம் செலவிட்டுவருகிறோம் என்பதை மூப்பர்களாகிய நாங்கள் அவ்வப்போது பேசிக்கொள்வோம்.”
ஒரு மூப்பரின் மனைவியான ஜோதி இவ்வாறு எழுதினார்: “எங்களுக்கு மூன்று மகள்கள்; மூத்தவளுக்கு 15 வயது, அடுத்தவளுக்கு 11 வயது, கடைக்குட்டிக்கு 2 வயது. நாங்கள் சமீபத்தில்தான் சைகை மொழிச் சபைக்கு மாறினோம். அதனால், எல்லாக் கூட்டங்களுக்கும் தயாரிக்க நிறைய நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது. சபைக் கூட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் இப்போதெல்லாம் குடும்ப வழிபாட்டுக்கென்று எங்களுக்குக் கூடுதலாக நேரம் கிடைக்கிறது.”
ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்கிற ஜான், ஜோன் தம்பதியர் இவ்வாறு எழுதினார்கள்: “முன்பெல்லாம் சபை, ஊழியம் போன்றவற்றுக்கு நேரம் செலவிட்டதுபோக, கிடைத்த நேரத்தில்தான் எங்களால் குடும்பப் படிப்பைப் படிக்க முடிந்தது, ஆனால் அதைத் தவறாமல் படிக்க முடியவில்லை. இந்தப் புதிய மாற்றத்தை யெகோவாவின் பரிசு என்றே சொல்வேன். எந்தக் காரணத்திற்காக இந்தக் கூடுதல் நேரம் கிடைத்திருக்கிறதோ அந்தக் காரணத்திற்காக அதைப் பயன்படுத்தினால் மட்டுமே ஆன்மீக ரீதியில் நிச்சயம் புத்துணர்ச்சி அடைவோம்.”
டோனி என்ற திருமணமாகாத சகோதரருக்குச் சுமார் 25 வயது. அவர் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தைத் தனிப்பட்ட படிப்புக்காக ஒதுக்கியிருக்கிறார். வாரத்தின் மற்ற நாட்களில் கிடைக்கும் நேரத்தைச் சபைக் கூட்டங்களுக்குத் தயாரிக்கப் பயன்படுத்துகிறார். டோனி சொல்கிறார்: “செவ்வாய்க்கிழமை எப்போது வருமென்று ஆவலாகக் காத்திருப்பேன்.” ஏன்? “அது யெகோவாவோடு நான் செலவிடுகிற ‘ஸ்பெஷல்’ நேரம்!” டோனி மேலும் சொல்கிறார்: “யெகோவாவோடு எனக்கிருக்கும் பந்தத்தைப் பலப்படுத்துகிற விஷயங்களைப் படிப்பதற்காகக் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அன்று செலவிடுகிறேன். அதிக நேரம் கிடைப்பதால் வாசிக்கிற வசனங்களைக் குறித்து என்னால் ஆழமாகச் சிந்திக்க முடிகிறது.” பலன்? “யெகோவா கொடுக்கிற ஆலோசனைகள் முன்பைவிட இப்போது என் மனதில் ஆழமாகப் பதிகின்றன.” உதாரணம்? “உட்பார்வை புத்தகத்தில், தாவீது-யோனத்தான் நட்பைப் பற்றிப் படித்தேன். யோனத்தானுடைய சுயநலமற்ற சுபாவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். உண்மையான நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன். செவ்வாய்க் கிழமைகளில், இதுபோன்ற முத்தான விஷயங்கள் பலவற்றைக் கண்டுபிடிக்கக் காத்திருக்கிறேன்!”
யெகோவாவின் ஊழியர்களான நாம் அனைவருமே அவருடைய வார்த்தையைத் தனிப்பட்ட விதமாகவும் குடும்பமாகவும் ஆழ்ந்து படிப்பதற்குத் தற்போது கிடைத்திருக்கும் இந்த நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டால், கோடி நன்மைகள் பெறுவோம்!