வேலையில் நிரந்தரமும் திருப்தியும் ஆபத்தில்
“வேலை செய்வதற்கு உரிமை”—இது எல்லா மனிதருடைய அடிப்படை உரிமை என ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக அறிக்கை கூறுகிறது. ஆனால் அந்த உரிமைக்கு எப்போதுமே உத்தரவாதமில்லை. வேலையில் நிரந்தரம் என்பது உள்ளூர் பொருளாதாரம் முதல் உலக சந்தை நிலவரம் வரை பல விஷயங்களைப் பொறுத்திருக்கிறது. வேலை போய்விட்டாலோ அதற்கு ஆபத்து வந்துவிட்டாலோ உடனே போராட்டங்களும் கலவரங்களும் வேலை நிறுத்தமும்தான். சில நாடுகளே இதற்கு விதிவிலக்கு. எழுத்தாளர் ஒருவர் சொன்ன விதமாக “வேலை” என்ற வார்த்தை “உணர்ச்சி கொந்தளிக்கும் ஒரு வார்த்தையாகவே எப்போதும் இருந்திருக்கிறது.”
வேலை நமக்கு முக்கியமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வேலையால் வருமானம் வருவது ஒருபுறமிருக்க, அது மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நமக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. சமுதாயத்திற்குப் பிரயோஜனமான ஓர் ஆளாக இருக்க வேண்டும், வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்ற ஆசையையும் நிறைவேற்றுகிறது. அத்துடன், ஓரளவு சுய மரியாதையையும் நமக்குள் ஏற்படுத்துகிறது. ஆகவேதான் எக்கச்சக்கமாக பணம் வைத்திருப்பவர்கள் சிலரும், ஓய்வு பெறப்போகும் சிலரும் தொடர்ந்து வேலை செய்யவே விரும்புகிறார்கள். ஆம், வேலை மிகவும் இன்றியமையாதது, அது இல்லாவிட்டால், பயங்கர சமுதாயப் பிரச்சினைகள் வெடிக்கலாம்.
மறுபட்சத்தில், சிலருக்கு வேலை இருந்தாலும், வேலையில் அத்தனை அழுத்தங்கள் இருப்பதால் அதில் திருப்தி காண முடியாமல் தவிக்கிறார்கள். உதாரணமாக, இன்று வேலை சந்தையில் அதிக போட்டி நிலவுவதால், பல கம்பெனிகள் செலவுகளைக் குறைக்க வேலையாட்களை வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றன. மீந்திருப்பவர்களோ வேலைப் பளுவால் படாத பாடுபடுகின்றனர்.
நவீன தொழில் நுட்பம் வாழ்க்கையை சுலபமும் ஆக்கவில்லை, வேலையை அதிக திறமையோடு செய்ய கைகொடுப்பதுமில்லை, அதற்குப் பதிலாக வேலையில் அழுத்தத்திற்கு மேல் அழுத்தத்தைத்தான் கொண்டு வந்திருக்கிறது. உதாரணமாக, கம்ப்யூட்டர்கள், ஃபேக்ஸ் மிஷின்கள், இன்டர்நெட் ஆகியவை பாக்கி வேலையை வீட்டுக்கும்கூட இழுத்துக் கொண்டு போக வைக்கிறது. இதனால் வீட்டுக்கும் ஆபீஸுக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடுகிறது. கம்பெனி பேஜரும் செல்ஃபோனும் கண்ணுக்கு தெரியாத நாய் சங்கிலி மாதிரிதான், அதை இழுத்துப் பிடிக்கும் முனை முதலாளியின் கைக்குள் இருக்கிறது என்று ஒருவர் புலம்புகிறார்.
நம்முடைய பொருளாதாரமும் வேலை சூழலும் வேகமாக மாறி வருகிறது, அதனால் வேலைக்கே லாயக்கற்றவர்களாய் தங்களை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம் அநேக முதியோரிடம் அதிகரித்து வருகிறது. இதன் சம்பந்தமாக முன்னாள் மனித உரிமைகள் கமிஷனர் கிறிஸ் சிட்டோட்டி இவ்வாறு கூறினார்: “நீங்கள் 40 வயதுக்குட்பட்டவராக இல்லையென்றால், கம்ப்யூட்டர்களையும் நவீன தொழில்நுட்பங்களையும் உங்களால் சமாளிக்கவே முடியாது.” ஆகவே ஒரு காலத்தில் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பதாக கருதப்பட்டவர்கள் இன்று அதிக வயதானவர்கள் என்றும், ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றும் ஓரங்கட்டப்படுகின்றனர். என்னே ஓர் அவல நிலை!
கடினமாக உழைப்பதும் கம்பெனிக்கு விசுவாசமாக இருப்பதும் சமீப காலங்களில் அர்த்தமில்லாமல் ஆகியிருக்கிறது. “ஸ்டாக் மார்க்கெட் சற்றே சரிந்தாலும், நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்ப்பவர்களைத் தூக்கியெறியும் போது, அந்த நிறுவனத்துக்கு விசுவாசமாக இருந்ததெல்லாம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. ஆனாலும், நீங்கள் வேலை செய்யத்தான் வேண்டும், கம்பெனிக்காக அல்ல, உங்கள் சொந்த நலனுக்காக” என்று லிபேராஸியான் என்ற பிரெஞ்சு பத்திரிகை கூறுகிறது.
இந்தப் பிரச்சினைகள் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், வேலை செய்ய வேண்டுமென்ற அடிப்படைத் தேவை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே வேகமாக மாறிவரும் நம்முடைய காலங்களில், வேலையைப் பற்றி சமநிலையான நோக்குநிலையை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? அதே சமயத்தில், வேலை பறிபோய்விடுமோ என்ற பயமின்றி திருப்தியாக எப்படி இருக்கலாம்?
[பக்கம் 3-ன் படம்]
நவீன தொழில்நுட்பம் வேலை செய்யுமிடத்தில் அழுத்தங்களை அதிகரித்திருக்கலாம்