பிள்ளையின் இதயம் பண்படுவது உங்கள் கையில்!
யாருமே கொஞ்சங்கூட ஏறெடுத்துப் பார்க்காத களிமண்கூட குயவனின் கைவண்ணத்தில் கண்கவர் கலைப்பொருளாக உருப்பெறும். கைவினைஞர்கள் சிலர், பயனற்ற பொருளிலிருந்து பயனுள்ள அழகிய பொருட்களை தயாரித்து குவிப்பதில் “மன்னர்கள்.” கிண்ணங்கள், தட்டுகள், சமையல் பானைகள், ஜாடிகள், வேலைப்பாடுமிக்க பூச்சட்டிகள் ஆகியவற்றிற்காக காலங்காலமாக சமுதாயம் குயவரையே நம்பியிருக்கிறது.
பிள்ளைகளுடைய இயல்பையும் குணத்தையும் பாங்காக வடிவமைப்பதன் மூலம் பெற்றோரும் சமுதாயத்திற்கு அரும்பணியாற்றுகிறார்கள். பைபிள் நம் ஒவ்வொருவரையும் களிமண்ணிற்கு ஒப்பிடுகிறது. பிள்ளைகள் எனும் ‘களிமண்ணை’ வனைக்கும் முக்கிய பணியை பெற்றோரிடம் கடவுள் ஒப்படைத்திருக்கிறார். (யோபு 33:6, பொது மொழிபெயர்ப்பு; ஆதியாகமம் 18:19) அழகிய மண்பாண்டத்தை உருவாக்குவது போலவே, சமநிலையும் பொறுப்பும் மிக்க நபராக ஒரு பிள்ளையை வளர்த்தெடுப்பது எளிதான காரியம் அல்ல. அப்படிப்பட்ட மாற்றம் தானாகவே ஏற்பட்டுவிடாது.
நம் பிள்ளைகளின் இருதயத்தை வடிவமைப்பதில் சக்தி வாய்ந்த பல்வேறு செல்வாக்குகளும் சேர்ந்துகொள்கின்றன. இந்த செல்வாக்குகளில் சில ஆபத்தானவை என்பது வருத்தத்திற்குரியது. எனவே, பிள்ளையின் இருதயம் தானாக பண்படும் என இருந்துவிடாமல், ஞானமுள்ள பெற்றோர், “அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்ற நம்பிக்கையோடு “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே” அவனை பயிற்றுவிப்பார்கள்.—நீதிமொழிகள் 22:6.
பிள்ளை வளர்ப்பு என்பது நீண்ட காலமெடுக்கும் பணி, ஆனால் சந்தோஷமிக்க பணி. அந்த சமயத்தில் பிள்ளையின் இருதயத்தை பாதிக்கும் மோசமான செல்வாக்குகளை விரட்டியடிக்க ஞானமுள்ள கிறிஸ்தவ பெற்றோர் நேரத்தை செலவிடுவது அவசியம். பிள்ளையை பொறுமையுடன் ‘ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வருகையில்’ அவர்களுடைய அன்பு பெரிதும் சோதிக்கப்படும். (எபேசியர் 6:4, பொ.மொ.) ஆனால் வெகு சீக்கிரத்திலேயே குழந்தையை பயிற்றுவிக்கத் துவங்கினால் பெற்றோரின் வேலை மிக எளிதாகும்.
வெகு சீக்கிரத்தில் துவங்குதல்
களிமண் லாவகமாக வனைக்கத்தக்கதாக, போதுமானளவு இளகிய தன்மையுடன் இருக்கையிலேயே குயவர்கள் பாண்டம் செய்ய விரும்புவார்கள்; அதேசமயம், வனைக்கப்படும் வடிவில் நிலைத்திருக்க அது ஓரளவு உறுதியாகவும் இருக்க வேண்டும். களிமண்ணை சுத்தப்படுத்தி ஆறு மாதங்களுக்குள்ளாகவே அதில் பாண்டம் செய்ய அவர்கள் விரும்புவார்கள். அதைப் போலவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் இருதயத்தை வடிவமைக்க சிறந்த பருவம், கேட்பதை சட்டென்று பிடித்துக்கொள்ளும், எளிதில் வளைந்துகொடுக்கும் பச்சிளம் பருவமே.
குழந்தை நிபுணர்களின் கருத்துப்படி, எட்டு மாதத்திற்குள் குழந்தை தன் தாய் மொழியின் தொனியை கண்டுபிடிக்க கற்றுக்கொள்கிறது, தன் பெற்றோருடன் நெருங்கிய பந்தபாசத்தை உருவாக்கிக் கொள்கிறது, புலன்களின் மூலம் கண்டுணரும் திறமைகளை வளர்த்துக்கொள்கிறது, தன்னை சுற்றியிருக்கும் உலகை ஆராயத் துவங்குகிறது. அதன் இருதயத்தை வடிவமைக்க பொன்னான பருவம் அந்த சிட்டுப் பருவமே. தீமோத்தேயுவைப் போல், ‘பரிசுத்த வேத எழுத்துக்களை, சிறுவயது முதல் அறிந்தவனாக’ ஆவது உங்கள் பிள்ளைக்கு எப்பேர்ப்பட்ட பலனளிக்கும்!—2 தீமோத்தேயு 3:15.a
பிள்ளைகள் இயல்பாகவே பெற்றோரின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். சத்தங்களை, பேச்சுகளை, செய்கைகளை காப்பியடிப்பதோடு, அன்பு, கருணை, பரிவிரக்கம் ஆகிய குணங்களையும் அப்பா அம்மாவை பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். யெகோவாவின் சட்டதிட்டங்களுக்கு இசைய பிள்ளையை வளர்க்க நாம் ஆசைப்பட்டால் அவருடைய கட்டளைகள் முதலில் நம் இருதயத்தில் இருக்க வேண்டும். அவற்றிற்குப் போற்றுதல் காட்டினால்தான், எப்போதும் யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் பற்றி பிள்ளைகளிடம் பேசத் தூண்டப்படுவோம். “நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு” என பைபிள் புத்திமதி கொடுக்கிறது. (உபாகமம் 6:6, 7) தங்களுடைய இளம் பிள்ளைகள் இருவரையும் வளர்ப்பதில் இந்தப் புத்திமதியை பின்பற்றியதைப் பற்றி ஃபிரான்தீஸ்கோ, ரோசா தம்பதியினர் விளக்குகிறார்கள்.b
“தினசரி சம்பாஷணையைத் தவிர இருவரிடமும் தனித்தனியாக குறைந்தது 15 நிமிடத்தையாவது செலவழிக்க ஒவ்வொரு நாளும் முயலுகிறோம். ஏதேனும் பிரச்சினை இருப்பது தெரிய வந்தால்—ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்ப்பட்டோம்—நாங்கள் அதிக நேரம் செலவிடுகிறோம். உதாரணமாக, கொஞ்ச நாள் முன்பு எங்கள் ஐந்து வயது மகன் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் யெகோவாவின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என எங்களிடம் தெரிவித்தான். அவனோடு படிப்பவர்களில் ஒருவன் அவனை ஏதோ கேலி பண்ணி, கடவுள் இல்லையென சொல்லியிருக்கிறான்.”
பிள்ளைகள் கடவுளிடம் விசுவாசத்தை வளர்த்துக்கொள்வது அவசியம் என இந்தப் பெற்றோர் உணர்ந்தார்கள். கடவுளுடைய படைப்புகளைப் பார்த்து அவர்கள் இயல்பாகவே வியப்பதை அடிப்படையாக வைத்து அத்தகைய விசுவாசத்தைக் கட்டி எழுப்பலாம். மிருகத்தைத் தொட்டுப் பார்க்கவும், காட்டுப்பூக்களைப் பறித்து வைத்துக்கொள்ளவும் கடற்கரை மணலில் ஓடி விளையாடவும் பிள்ளைகளுக்கு கொள்ளை ஆசை அல்லவா? அந்த சமயத்தில் படைப்புக்கும் படைப்பாளருக்கும் இடையே உள்ள தொடர்பை பிள்ளைகள் புரிந்துகொள்ள பெற்றோர் உதவலாம். (சங்கீதம் 100:3; 104:24, 25) யெகோவாவின் படைப்பின் மீது அவர்கள் வளர்த்துக்கொள்ளும் பயபக்தியும், மதிப்பும் பசுமரத்தாணிபோல் அவர்கள் மனதில் என்றும் பதிந்துவிடும். (சங்கீதம் 111:2, 10) அவ்வாறு புரிந்துகொள்வதோடு மட்டுமே நிறுத்திவிடாமல், கடவுளைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆவலையும் அவருக்குப் பிரியமில்லாததை செய்துவிடுவோமோ என்ற பயத்தையும் பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளலாம். இது, ‘தீமையை விட்டு விலகுவதற்கு’ அவர்களை உந்துவிக்கும்.—நீதிமொழிகள் 16:6.
பொடிசுகள் பெரும்பாலும் துருதுருவென இருப்பார்கள், எதையும் சட்டென கற்றுக்கொள்வார்கள், ஆனால் கீழ்ப்படிவது மட்டும் அவர்களுக்கு எட்டிக்காய் போல் கசக்கும். (சங்கீதம் 51:5) சில சமயங்களில் தங்கள் இஷ்டத்திற்கு விட வேண்டும் என்று விரும்புவார்கள் அல்லது கேட்பதெல்லாம் உடனடியாக வேண்டும் என அடம்பிடிப்பார்கள். இப்படிப்பட்ட கெட்ட குணங்கள் வேரூன்றி வளராதிருக்க பெற்றோர் கண்டிப்புடனும், பொறுமையுடனும் சிட்சை கொடுப்பது அவசியம். (எபேசியர் 6:4) இதைத்தான், தங்கள் ஐந்து பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்திருக்கும் ஃபில்லஸ், பால் தம்பதியினர் அனுபவ ரீதியில் கண்டனர்.
ஃபில்லஸ் சொல்கிறார்: “ஒவ்வொரு பிள்ளையும் குணத்தில் ரொம்பவே வித்தியாசமாக இருந்தார்கள்; ஒவ்வொருவரும் தங்கள் மனம்போன போக்கில் நடந்துகொள்ள விரும்பினார்கள். அதனால் அவர்களை வளர்ப்பது எங்களுக்குப் பெரும்பாடாக இருந்தது, என்றாலும், ‘கிடையாது’ என்ற வார்த்தையின் சரியான அர்த்தத்தை கடைசியாக நன்கு புரிந்துகொண்டார்கள்.” தகப்பனார் பால் இவ்வாறு சொல்கிறார்: “புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வந்தபோது நாங்கள் ஏன் அந்த முடிவெடுத்தோம் என்பதற்குரிய காரணங்களை பலமுறை விளக்கினோம். நாங்கள் எப்போதும் கனிவோடு இருப்பதற்கு முயன்றாலும், பெற்றோருக்கு கடவுள் கொடுத்திருக்கும் அதிகாரத்தை அவர்கள் மதித்து நடக்க வேண்டுமென கற்றுக் கொடுத்தோம்.”
பிள்ளைப் பருவத்தில் ஒரு பிள்ளைக்கு பல பிரச்சினைகள் வரலாம்; ஆனால் இருதயம் பக்குவப்படாத, புதிய புதிய சோதனைகளை சந்திக்கும் பருவ வயதுதான் ஒரு பெரும் சவால் என்று அநேக பெற்றோர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
வாலிபனின் இருதயத்தை எட்டுதல்
களிமண் உலர்ந்து கெட்டியாவதற்கு முன்பு குயவன் தன் பணியில் மும்முரமாக இறங்கிவிட வேண்டும். அப்படியே நேரமெடுத்து செய்ய நினைத்தால், களிமண் ஈரப்பசையோடு, இளகிய நிலையில் இருக்கும்படி அவன் அவ்வப்போது தண்ணீரைத் தெளித்து வைப்பான். அதைப் போலவே, தங்கள் பருவ வயது பிள்ளைகளின் இருதயம் கடினப்பட்டு போகாதபடிக்கு, பெற்றோரும் பெரும் பிரயாசப்பட வேண்டும். அதற்காக அவர்கள் பயன்படுத்தும் முக்கிய கருவி பைபிளே; பிள்ளைகளை ‘எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாக ஆக்குவதற்கும் கடிந்துகொள்வதற்கும், சீர்திருத்துவதற்கும்’ பைபிளின் உதவி கொண்டுதான் செய்ய முடியும்.—2 தீமோத்தேயு 3:15-17.
எனினும், சின்ன வயதில் பெற்றோர் சொல்லைத் தட்டாதவன், பருவ வயதானவுடன் கீழ்ப்படியாமல் போகலாம். பருவ வயதினர் தங்கள் வயதை ஒத்தவர்களின் சொல்லுக்குத்தான் அதிக மதிப்பு கொடுப்பார்கள். எனவே பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசவும் முன்பு போல் உடனுக்குடன் விஷயத்தை அவர்களிடம் சொல்லவும் தயங்கலாம். இந்த சமயத்தில் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் வகிக்கும் பொறுப்புகள் புதிய பரிமாணம் எடுப்பதால் அதிக பொறுமையும் திறமையும் தேவைப்படுகிறது. பருவ வயதினன் தன்னுடைய உடலிலும் உணர்ச்சிகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்க வேண்டும். தன் வாழ்க்கையில் முக்கிய தீர்மானங்களை எடுக்கவும், இலக்குகளை வைக்கவும் அவன் ஆரம்பிக்க வேண்டும். (2 தீமோத்தேயு 2:22) இந்த சவால்மிக்க காலப்பகுதியில் அவனுடைய இருதயத்தை படுமோசமாகச் செய்யும் ஒரு பயங்கரமான செல்வாக்கை சமாளிக்க வேண்டும்; அதுதான் தோழர்களின் தொல்லை.
தோழர்களின் தொல்லை அத்திப்பூத்தாற்போல் ஏதோவொரு காலக்கட்டத்தில் ஒரு தடவை மட்டுமே தலைகாட்டுவதில்லை. மாறாக, முழுமையாக நம்பின விஷயங்களைக்கூட மெல்ல மெல்ல அரித்துப்போடும் அளவுக்கு ஒன்றன்பின் ஒன்றாக எழும் அவர்களுடைய பேச்சுகள் மூலமாகவும் சூழ்நிலைகள் மூலமாகவும் தோழர்களின் தொல்லை வெளிப்படும். இத்தகைய பேச்சுகளும் சூழ்நிலைகளும் அவர்கள் எதில் பலவீனமாக இருக்கிறார்களோ, அதையே சரியாகக் குறி பார்த்து தாக்குகின்றன, அதாவது மற்ற இளவட்டங்கள் எங்கே தங்களை ஓரங்கட்டி விடுவார்களோ என்ற உள்ளூர இருக்கும் பயம்தான் அந்த பலவீனம். எப்போதும் தன்னைப் பற்றிய யோசனையில் இருப்பதாலும் மற்றவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலாலும், மற்ற இளைஞர்கள் ஆதரிக்கிற ‘உலகத்திலுள்ளவைகளை’ இந்த இளைஞனும் ஆதரிக்கத் தொடங்கிவிடலாம்.—1 யோவான் 2:15-17; ரோமர் 12:2.
காரியங்களை இன்னும் மோசமாக்கும் விதமாக, அவனுடைய அபூரண இருதயத்தின் இயல்பான ஆசைகள், தன் தோழர்களின் வார்த்தைகளை வேதவாக்காக ஏற்று நடக்கும்படி “அதிகாரம் செய்யலாம்.” “ஜாலியாக இரு,” “உன் மனதுக்குப் பிடித்ததை செய்” போன்ற புத்திமதிகள் காதுகளுக்கு தேன்போல் இனிக்கும். மாரீயா தன் அனுபவத்தை சொல்கிறாள்: “என்ன ஆனாலும் ஆகட்டும், ஒரு சுதந்திரப் பறவையாக ஜாலியாக சுற்றித்திரியலாம் என்று என் நண்பர்கள் சொன்னதைக் கேட்டேன். என் பள்ளி நண்பர்கள் என்னவெல்லாம் செய்தார்களோ அதையே நானும் செய்ய ஆசைப்பட்டேன். ஆனால், பிறகு எப்படியோ படுகுழிக்குள் விழாமல் தப்பித்தேன்.” ஒரு பெற்றோராக உங்கள் பருவ வயது பிள்ளை அத்தகைய தொல்லையை சமாளிக்கும்படி உதவ நீங்கள் ஆசைப்படலாம், ஆனால் எப்படி உதவுவீர்கள்?
அவன் மீது அக்கறை காட்டுவதை உங்கள் சொல்லிலும் செயலிலும் எப்போதும் உறுதியளியுங்கள். அவன் மனதிலுள்ளதைக் கண்டுபிடித்து, அவனுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயலுங்கள்; நீங்கள் படிக்கும் காலத்தில் எதிர்ப்பட்ட பிரச்சினைகளைவிட இவை பெரும் சிக்கலானவையாக இருக்கலாம். ஆகவே, முக்கியமான இந்த சமயத்தில்தான், மனம்விட்டு பேசக்கூடிய நம்பகமான ஒரு நபராக அவன் உங்களை கருத வேண்டும். (நீதிமொழிகள் 20:5) அவனுடைய சைகைகளை அல்லது மனோபாவத்தை வைத்து அவனுடைய துயரத்தையோ குழப்பத்தையோ நீங்கள் எளிதில் கண்டு பிடித்துவிடலாம். அவன் மௌனியாகி உள்ளுக்குள் குமுறுவதை உணர்ந்து அவன் ‘இருதயத்தைத் தேற்றுங்கள்.’—கொலோசெயர் 2:2.
சரியானதை செய்வதில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது உண்மைதான். இதனால் அவ்வப்போது பெற்றோரும் பிள்ளைகளும் எலியும் பூனையுமாக ஆகிவிடுவார்கள். இது அநேக பெற்றோர்களுக்கே தெரியும். ஆனாலும், பெற்றோர் மிகச் சரியான தீர்மானம் எடுத்திருக்கையில் அவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை விட்டுக்கொடுத்து அடிபணிந்து விடக்கூடாது. மாறாக, அந்தச் சந்தர்ப்பத்தில் அன்பான சிட்சை தேவையா என்றும், அப்படித் தேவைப்பட்டால் எப்படி கொடுப்பது என்பதையும் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பு அந்தச் சூழ்நிலையை நீங்கள் தெளிவாக புரிந்திருக்கிறீர்களா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 18:13.
சபையிலிருந்தும் சோதனைகள்
ஒரு மண்பாண்டம் முழுமையாக உருப்பெற்று விட்டதைப் போல் தோன்றலாம், ஆனால் அதை சூளையிலிட்டு சுடாவிட்டால் அதில் ஊற்றி வைக்கும் திரவங்களே அதை கெடுத்துவிடும். சோதனைகளையும் கஷ்டங்களையும் அத்தகைய சூளைக்கு பைபிள் ஒப்பிடுகிறது; அவை நாம் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை பிட்டுபிட்டு வைத்துவிடும். குறிப்பாக, நம் விசுவாசத்திற்கு வரும் சோதனைகளைப் பற்றி பைபிள் குறிப்பிட்டாலும், பொதுவாக மற்ற சோதனைகளுக்கும் இந்தக் குறிப்பு பொருந்தும். (யாக்கோபு 1:2-4) அப்படிப்பட்ட சில கஷ்டமான சோதனைகள் இளைஞர்களுக்கு சபையிலிருந்தே வரலாம் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
உங்கள் பருவ வயது பிள்ளை ஆவிக்குரிய விதத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தோன்றினாலும் அவன் எதிர்மாறான எண்ணங்களுடன் இருதயத்தில் போராடிக் கொண்டிருக்கலாம். (1 இராஜாக்கள் 18:21) உதாரணமாக, சபையிலிருந்த மற்ற இளைஞர்களிடம் உலகப்பிரகாரமான கருத்துக்கள் “துளிர்ப்பதை” மேகன் என்ற பெண் கண்டாள்:
“கிறிஸ்தவ மதம் சுத்த ‘போர்’ என்றும், வாழ்க்கையை அனுபவிப்பதற்கு அது ஒரு முட்டுக்கட்டை என்றும் அந்த இளைஞர்கள் கருதினார்கள். அவர்களின் வலையில் நானும் விழுந்தேன். ‘எனக்கு 18 வயசு ஆன மறுநிமிஷம் சத்தியத்துக்கு “குட்பை” சொல்லிடுவேன்’ என்றும், ‘எப்படா இதைவிட்டுட்டு ஓடிறலான்னு வழி பார்த்திட்டு இருக்கேன்’ என்றெல்லாம் அவர்கள் சொன்னார்கள். அவுங்க பேச்சைக் கேட்காத இளைஞர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அவர்களுக்கு ‘பரிசுத்தவான்கள்’ என பட்டப்பெயர் சூட்டி கிண்டலடித்தார்கள்.”
மோசமான குணத்தோடு ஒருத்தர், இரண்டு பேர் இருந்தாலே போதும் மற்றவர்களைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிடுவார்கள். ஒரு கும்பலோடு இருக்கும்போது, அதிலுள்ள பெரும்பான்மையோர் என்ன செய்கிறார்களோ அதைத்தான் ஒரு இளைஞன் செய்ய விரும்புவான். முட்டாள்தனத்துக்கும் துடுக்குத்தனத்துக்கும் இடம் கொடுத்து, ஞானத்தையும் ஒழுக்கத்தையும் அசட்டை செய்கிறார்கள். வருத்தகரமாக, அநேக நாடுகளிலுள்ள கிறிஸ்தவ இளைஞர்கள் கூட்டத்தோடு கூட்டமாக கெட்ட பாதையில் போனதால், மோசமான விளைவுகளை சந்தித்திருக்கிறார்கள்.
ஓரளவு சந்தோஷமான கூட்டுறவு இளைஞர்களுக்குத் தேவை என்பது உண்மைதான். பெற்றோராக நீங்கள் எப்படி அந்தத் தேவையை பூர்த்தி செய்யலாம்? அவர்களுடைய பொழுதுபோக்குகளுக்கு அதிக கவனம் செலுத்துங்கள், ஆர்வத்தைத் தூண்டும் காரியங்களை குடும்பமாக அல்லது இளைஞர்களும் பெரியவர்களுமாக சேர்ந்து செய்யத் திட்டமிடுங்கள். உங்கள் பிள்ளையின் நண்பர்கள் யாரென அறிந்துகொள்ளுங்கள். அவர்களை உணவருந்த அழைக்கலாம் அல்லது அவர்களுடன் ஒரு மாலைப் பொழுதைக் கழிக்கலாம். (ரோமர் 12:13) ஓர் இசைக் கருவியை கற்றுக்கொள்வதற்கோ வேறொரு மொழியை பேசுவதற்கோ அல்லது ஏதோவொரு கைத்தொழிலில் கெட்டிக்காரனாவதற்கோ உற்சாகப்படுத்துங்கள். இது போன்ற பயனளிக்கும் காரியங்களில் ஈடுபடும்படி உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். பாதுகாப்புமிக்க குடும்ப சூழலில் அவன் இதையெல்லாம் அனுபவித்துக் களிக்கலாம்.
படிப்பும் பாதுகாப்பளிக்கலாம்
பருவ வயதினனின் படிப்பையும் பொழுதுபோக்கையும் அதற்குரிய இடங்களில் வைக்க அவனுக்கு உதவுங்கள். பெரிய பள்ளி ஒன்றில் 20 ஆண்டு காலமாக நிர்வாகியாக பணியாற்றி வரும் லோலீ என்பவர், “அநேக இளம் யெகோவாவின் சாட்சிகள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுப் போவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலோரின் நடத்தை பாராட்டுக்குரியது. ஆனால் சிலர் பிற மாணவர்களிலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாத அளவுக்கு இருந்தார்கள். தங்கள் படிப்புக்குக் கவனம் செலுத்தியவர்கள்தான் நல்ல முன்மாதிரிகளாக திகழ்ந்தார்கள். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாவதற்கு நீங்கள் அதிக கவனம் செலுத்தும்படியும், அவர்களுடைய ஆசிரியர்கள் யாரென தெரிந்துகொள்ளும்படியும், நல்ல மார்க் எடுப்பதன் அவசியத்தை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும்படியும் தயவாக கேட்டுக்கொள்கிறேன். ஒரு சில பிள்ளைகள் நாளைய நட்சத்திரமாக ஜொலித்தாலும், எல்லா பிள்ளைகளும் திருப்தியான நிலையை அடைய முடியும், தங்கள் ஆசிரியர்களின் மதிப்புக்குரியவர்களாகவும் ஆக முடியும்” என்று சொல்கிறார்.
அப்படிப்பட்ட படிப்பு ஆவிக்குரிய விதமாக முன்னேறுவதற்கும் பருவ வயதினருக்கு உதவும். அது பயனுள்ள படிப்பு பழக்கங்களை, மனக்கட்டுப்பாட்டை, பொறுப்புணர்வை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும். நன்கு வாசிப்பதிலும் விஷயங்களைப் புரிந்துகொள்வதிலும் திறமையை வளர்த்துக்கொள்வது, அவர்களை கடவுளுடைய வார்த்தையைக் கற்கும் சிறந்த மாணாக்கர்களாகவும், கற்றுக்கொடுக்கும் சிறந்த போதகர்களாகவும் ஆகும்படி உற்சாகப்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. (நெகேமியா 8:8) பள்ளிப் படிப்பிலும் ஆவிக்குரிய படிப்பிலும் செய்ய வேண்டியதை செய்யும்போது, பொழுதுபோக்கை அதற்கே உரிய இடத்தில் வைக்க முடியும்.
உங்களுக்கும் யெகோவாவுக்கும் பெருமை சேர்ப்போர்
பூர்வ கிரீஸிலிருந்த அநேக பூச்சட்டிகளில் குயவனின் கையெழுத்தும் அவற்றை அலங்கரித்தவரின் கையெழுத்தும் காணப்பட்டன. அதைப் போலவே, குடும்பத்தில் பொதுவாக இரண்டு பேர் பிள்ளைகளை வடிவமைப்பதில் ஈடுபடுகிறார்கள். பிள்ளையின் இருதயத்தை பண்படுத்துவதில் தகப்பனும் தாயும் பங்கெடுக்கிறார்கள்; எனவே, அடையாள அர்த்தத்தில் பிள்ளையின் மீது உங்கள் இருவரின் “கையெழுத்துக்களும்” உள்ளன. திறம்பட்ட குயவனையோ அலங்கரிப்பவரையோ அல்லது இருவரையும் போலவோ பெருமைப்படும் விதத்திலும் அழகாகவும் இளம் பிள்ளையை வளர்த்தெடுக்கையில் நீங்களும் உங்கள் கைவண்ணத்தைக் கண்டு பெருமிதம் கொள்ளலாம்.—நீதிமொழிகள் 23:24, 25.
எந்தளவுக்கு நீங்கள் பிள்ளையின் இருதயத்தை பண்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இந்த மாபெரும் பணியின் வெற்றி இருக்கும். “அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை” என உங்களாலும் சொல்ல முடியுமென நம்புகிறோம். (சங்கீதம் 37:31) பிள்ளையின் இதயம் தானாகவே பண்பட்டுவிடும் என நினைத்து அவன் மனம்போகும் போக்கில் விட்டுவிடாதிருப்பது மிக மிக முக்கியம்.
[அடிக்குறிப்புகள்]
a பெற்றோர்கள் சிலர் தங்கள் பச்சிளம் குழந்தைக்கு பைபிளை வாசித்துக் காட்டுகிறார்கள். கனிவான குரலும் இந்த மகிழ்ச்சிகரமான அனுபவமும் காலா காலத்திற்கும் வாசிக்கும் ஆவலை பிள்ளைக்கு உண்டுபண்ணலாம்.
b பெயர்கள் சில மாற்றப்பட்டுள்ளன.