வாழ்க்கை சரிதை
உலகளாவிய பைபிள் கல்வியை விரிவாக்குவதில் என் பங்கு
ராபர்ட் நிஸ்பட் சொன்னது
ஸ்வாஸிலாந்தின் அரசர் இரண்டாம் ஸோபூஸா என்னையும் என் தம்பி ஜார்ஜையும் அவரது அரண்மனைக்கு வரவேற்றார். அது நடந்தது 1936-ம் வருடத்தில். ஆனால் நாங்கள் பேசிய விஷயங்கள் இன்னும் என் மனதில் அப்படியே பசுமையாக இருக்கின்றன. அந்த அரசரோடு நீண்ட நேரம் உரையாடினோம். நீண்ட காலமாக செய்து வந்த பிரமாண்டமான பைபிள் கல்வி திட்டத்தின் பாகமாகத்தான் அந்த உரையாடல் இருந்தது. அந்த வேலைக்காக நான் ஐந்து கண்டங்களுக்கு பயணிக்க வேண்டியிருந்தது; அந்த அனுபவத்தை இப்போது என் 95-ம் வயதில் ஆசையோடு நினைத்துப் பார்க்கிறேன்.
தேயிலை விற்று வந்த டாப்ஸன் என்பவர் 1925-ல் எங்கள் வீட்டிற்கு வந்ததுதான் இவையெல்லாவற்றிற்கும் துவக்கம். எங்களுடைய வீடு ஸ்காட்லாந்திலுள்ள எடின்பர்கில் இருந்தது. அப்போது எனக்கு பதினேழு, பதினெட்டு வயதிருக்கும். ஃபார்மசிஸ்ட் வேலையை பழகிக்கொண்டிருந்தேன். நான் இளைஞனாக இருந்தாலும்கூட 1914-18-ல் நடந்த உலக யுத்தம் குடும்பங்களிலும் மத நடவடிக்கைகளிலும் ஏற்படுத்திய பெரும் மாற்றங்களை நினைத்து ரொம்ப கவலைப்பட்டேன். டாப்ஸன் அவர்கள் ஒரு சமயம் வீட்டிற்கு வந்தபோது, காலங்களின் தெய்வீக திட்டம் என்ற ஆங்கில புத்தகத்தை எங்களுக்கு கொடுத்தார். புத்திக்கூர்மையுள்ள படைப்பாளராக கடவுள் நிலையான ஒரு ‘திட்டத்தை’ வைத்திருப்பதைப் பற்றிய விவரத்தை அப்புத்தகம் அளித்தது. அது ரொம்பவே நியாயமானதும், நான் வழிபட விரும்பிய கடவுளுக்கு பொருத்தமானதாகவும் தோன்றியது.
சீக்கிரத்தில் அம்மாவும் நானும், பைபிள் மாணாக்கர்கள் என்று அப்போது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தோம். செப்டம்பர் 1926-ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டின்போது நானும் அம்மாவும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றோம். முழுக்காட்டுதல் பெறப்போகும் ஒவ்வொருவருக்கும் ஒரு நீள கவுன் கொடுக்கப்பட்டது. அதை குளியல் ஆடைக்கு மேலே போட்டுக்கொள்ள வேண்டியிருந்தது; கவுனுக்கு கீழேயிருந்த வாரினால் கணுக்காலை கட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த முக்கியமான தருணத்திற்கு ஏற்ற ஆடையாக அது அப்போது கருதப்பட்டது.
அந்த ஆரம்ப நாட்களில், அநேக விஷயங்களை நாங்கள் புரிந்துகொண்ட விதத்தில் மாற்றங்களை செய்வது அவசியமாக இருந்தது. எல்லாருமே அல்ல, ஆனால் சபையிலிருந்த பெரும்பாலோர் கிறிஸ்மஸ் கொண்டாடினார்கள். கொஞ்ச பேரே வெளி ஊழியத்தில் ஈடுபட்டார்கள். ஞாயிற்றுக்கிழமையில் பிரசுரங்களை விநியோகிப்பதை சில மூப்பர்களும்கூட ஆட்சேபித்தார்கள்; ஓய்வுநாள் ஆசரிப்பை மீறும் செயலாக அதை அவர்கள் கருதினார்கள். என்றாலும், 1925-ம் ஆண்டு காவற்கோபுர கட்டுரைகள் மாற்கு 13:10 போன்ற வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தன. “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும்” என அந்த வசனம் சொல்கிறது.
உலகளாவிய அந்த வேலை எப்படி செய்து முடிக்கப்படும்? முதன்முதலில் வீடு வீடாக ஊழியம் செய்ய நான் எடுத்த எளிய முயற்சி இதுவே: அருமையான மத புத்தகங்களை விற்றுவருவதாக வீட்டுக்காரரிடம் சொல்லி கடவுளின் சுரமண்டலம் என்ற ஆங்கில புத்தகத்தை அளித்தேன். அப்புத்தகத்தில் விளக்கப்பட்ட முக்கியமான பத்து பைபிள் போதனைகள் சுரமண்டலத்தின் பத்து கம்பிகளைப் போன்று இருந்தன. பிற்பாடு, எங்களுக்கு டெஸ்டிமனி கார்டு கொடுக்கப்பட்டது; வீட்டுக்காரர் வாசித்து தெரிந்துகொள்வதற்கு சுருக்கமான செய்தி அதில் இருந்தது. பதிவு செய்யப்பட்ட நாலரை நிமிட பேச்சுகளை நாங்கள் கையடக்கமான ஃபோனொகிராஃபில் போட்டு காட்டினோம். ஆரம்பத்தில் இருந்த ஃபோனொகிராஃப் மாடல்கள் அதிக கனமானவை. ஆனால், பிற்பாடு வந்த மாடல்கள் ரொம்பவே கனமற்றவையாய் இருந்தன; அதிலும் சிலவற்றை நெட்டுக்குத்தலாக வைத்துக்கூட இயக்க முடிந்தது.
1925 முதல் 1930-கள் வரை எங்களுக்கு தெரிந்தபடி சிறந்த முறையில் ஊழியம் செய்து வந்தோம். பிற்பாடு, 1940-களின் ஆரம்பத்தில் எல்லா சபைகளுக்கும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி அறிமுகப்படுத்தப்பட்டது. காதுகொடுத்து கேட்கும் வீட்டுக்காரர்களிடத்தில் நேரடியாகவே ராஜ்ய செய்தியை பேசுவதற்கு அப்பள்ளியில் எங்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. அக்கறை காட்டுவோருக்கு பைபிள் படிப்பு நடத்துவதன் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொண்டோம். தற்போதைய உலகளாவிய பைபிள் கல்வி புகட்டும் வேலையின் ஆரம்பமே அது என்று ஒரு கருத்தில் சொல்லலாம்.
சகோதரர் ரதர்ஃபர்ட் தந்த உற்சாகம்
பைபிள் கல்வி திட்டத்தில் அதிகமாக ஈடுபட ஆசைப்பட்டேன். அதன் விளைவாக 1931-ல் முழுநேர பயனியர் ஊழியத்தில் சேர்ந்து கொண்டேன். லண்டனில் நடந்த மாநாட்டுக்கு பின்பு உடனேயே அதை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. ஆனால், ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின் போது சகோதரர் ஜோசஃப் ரதர்ஃபர்ட் என்னோடு பேச வேண்டும் என்று சொன்னார். இந்த வேலையை அப்போது கண்காணித்து வந்தவர் அவர்தான். ஒரு பயனியரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப அவர் உத்தேசித்திருந்தார். “அங்கு போக உங்களுக்கு விருப்பமா?” என்று என்னிடம் கேட்டார். முதலில் என்ன சொல்வதென கொஞ்சம் விழித்தாலும், “சரி, போகிறேன்” என்று தைரியமாக சொல்லிவிட்டேன்.
அந்தக் காலங்களில் எல்லாம் எவ்வளவு பைபிள் பிரசுரங்களை கொடுக்கலாம் என்பதே எங்களுடைய முக்கிய குறியாக இருந்தது; அதற்காக ஒவ்வொரு இடமாக சென்று கொண்டே இருந்தோம். திருமணம் செய்யாமல் இருக்க எனக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது; அன்றைக்கு பொறுப்பான ஸ்தானத்திலிருந்த பெரும்பாலான சகோதரர்கள் அப்படித்தான் இருந்தார்கள். என்னுடைய பிராந்தியம் ஆப்பிரிக்காவின் தென் கோடியிலுள்ள கேப் டவுனில் ஆரம்பித்து இந்தியப் பெருங்கடலில் உள்ள கரையோர தீவுகள் உட்பட அந்தக் கண்டத்தின் கிழக்குப் பகுதி வரை சென்றது. அதன் மேற்கு எல்லைப் பகுதிக்கு பிரயாணம் செய்வதற்கு அனல் பறக்கும் கலஹாரி பாலைவனத்தை கடந்து நைல் நதியின் பிறப்பிடமான விக்டோரியா ஏரி மட்டும் செல்ல வேண்டியிருந்தது. இந்தப் பரந்த பிராந்தியத்திலுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இடங்களில் நானும் என்னுடைய பார்ட்னரும் வருடத்தில் ஆறு மாதங்கள் செலவிட வேண்டியிருந்தது.
இருநூறு பெட்டிகளில் ஆவிக்குரிய பொக்கிஷங்கள்
நான் கேப் டவுனுக்கு வந்து சேர்ந்ததும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு போய் சேர வேண்டிய 200 பெட்டி பிரசுரங்களை என்னிடம் காட்டினார்கள். அவை நான்கு ஐரோப்பிய மொழிகளிலும் நான்கு ஆசிய மொழிகளிலும் அச்சிடப்பட்ட பிரசுரங்கள்; அவற்றில் ஒன்றுகூட ஆப்பிரிக்க மொழிகளில் இல்லை. நான் இங்கு வந்து சேருவதற்கு முன்பே இந்த பிரசுரங்களெல்லாம் எப்படி இங்கு வந்தன என விசாரித்ததற்கு, அவை பிரசங்க வேலை செய்வதற்காக சமீபத்தில் கென்யாவுக்கு சென்ற ஃப்ரான்ங் ஸ்மித், க்ரே ஸ்மித் என்ற இரு சகோதரர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டவை என சொல்லப்பட்டது. அங்கு போய் சேர்ந்து கொஞ்ச நாட்களிலேயே இருவருக்கும் மலேரியா தொற்றி விட்டது; வருத்தகரமாக, ஃப்ரான்ங் இறந்துவிட்டார்.
அந்த செய்தி என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தாலும் நான் பயந்துபோய் பின்வாங்கி விடவில்லை. நானும் என் பார்ட்னர் டேவிட் நார்மனும் கேப் டவுனை விட்டு புறப்பட்டு சுமார் 5,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டான்ஜானியாவுக்கு கப்பலில் சென்றோம்; அதுதான் எங்களுக்கு முதலில் நியமிக்கப்பட்ட இடம். கென்யாவில் மோம்பாசாவை சேர்ந்த டிராவல் ஏஜன்ட் ஒருவர் எங்களுடைய பிரசுர பெட்டிகளை பொறுப்பாக கவனித்துக்கொண்டார்; எந்தெந்த இடங்களுக்கு அனுப்பும்படி கேட்டோமோ அந்தந்த இடங்களுக்கு அவர் அந்த பெட்டிகளை அனுப்பி வைத்தார். ஆரம்பத்தில், ஒவ்வொரு டவுனிலும் கடைகளும் அலுவலகங்களும் நிறைந்த வர்த்தக பகுதிகளில் பிரசங்கித்தோம். பிரசுரங்களை அளிக்கும்போது 9 புத்தகங்களையும் 11 சிறு புத்தகங்களையும் சேர்த்து ஒரு செட்டாக அளித்தோம். அந்த பிரசுரங்கள் பற்பல வண்ணங்களில் இருந்ததால் அவற்றை ‘ரெயின்போ’ செட்டுகள் என அழைத்தோம்.
அடுத்து, கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜான்ஜிபார் என்ற தீவுக்கு செல்ல நாங்கள் தீர்மானித்தோம். பல நூற்றாண்டுகளாகவே அந்தத் தீவு அடிமை வணிகத்துக்கு மையமாக திகழ்ந்தது; அது கிராம்புக்கும் பெயர் பெற்ற இடம், அந்த டவுனில் எங்கு போனாலும் அதன் வாசனை மூக்கைத் துளைக்கும். அந்த டவுன் சரிவர திட்டமிடாமல் உருவாகியிருந்ததால் வழியைக் கண்டுபிடிப்பது பெரும்பாடாய் இருந்தது. வளைந்து நெளிந்து செல்லும் தெருக்களில் அடிக்கடி எங்களுக்கு திக்குத் தெரியாமல் போய்விடும். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் எங்களுக்கு போதுமான வசதி இருந்தது. ஆனால், ஆணிகள் அடித்த அதன் கதவுகளையும் தடித்த சுவர்களையும் பார்த்தால் ஹோட்டல் மாதிரி அல்ல ஒரு சிறை மாதிரியே தோன்றியது. இருந்தாலும் ஜான்ஜிபாரில் எங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. அரேபியரும் இந்தியரும் இன்னும் பலரும் பிரசுரங்களை ஆர்வமாக பெற்றுக்கொண்டதில் எங்களுக்கு சந்தோஷமே.
ரயில்கள், படகுகள், கார்கள்
அந்தக் காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பயணம் செய்வது அத்தனை சுலபம் அல்ல. உதாரணமாக, மோம்பாசாவிலிருந்து கென்யாவின் மேட்டுநிலப்பகுதிகளுக்கு செல்லும் வழியில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததால் ரயில் செல்லமுடியாமல் நின்றுவிட்டது. தரையிலும் தண்டவாளத்திலும் குவிந்து கிடந்த கோடானுகோடி வெட்டுக்கிளிகள், சக்கரம் முன்னோக்கி இயங்க முடியாதபடி அவற்றை வழுவழுப்பாக்கி விட்டன. எஞ்சினிலுள்ள கொதிநீரால் தண்டவாளத்தை கழுவிக்கொண்டே ரயில் முன்னோக்கி செல்வதுதான் அதற்கு ஒரே பரிகாரமாக இருந்தது. இவ்வாறு பாதை தெளிவாகும் வரையில் ரயில் மெதுவாக சென்றது. ரயில் மேட்டுப்பகுதிக்கு ஏற ஆரம்பித்ததும் எவ்வளவு நிம்மதியாக இருந்தது! அங்கு நிலவிய குளுமையான சூழ்நிலையை அனுபவித்து மகிழ முடிந்தது.
கடலோர டவுன்களில் நல்ல ரயில் வசதியும் படகு வசதியும் இருந்தன; ஆனால் கிராமப்புறங்களில் காரில் செல்வதுதான் எளிது. என் தம்பி ஜார்ஜும் என்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய வந்தபோது எனக்கு ஒரே சந்தோஷம்; அதற்குப் பின், படுக்கை வசதியும், ஒரு சமையலறையும், சாமான் வைக்கும் இடமும், கொசு வலைபோடப்பட்ட ஜன்னலும் உடைய, ஓரளவுக்கு பெரிய மோட்டார் டிரக்கை நாங்கள் வாங்கினோம். வண்டிக்கு மேலே ஒலிபெருக்கிகளையும் பொருத்தியிருந்தோம். இந்த டிரக்கின் உதவியால் பகல் பொழுதில் வீடு வீடாக ஊழியம் செய்ய முடிந்தது; எங்களுடைய பேச்சுகளை கேட்பதற்காக மாலையில் மார்க்கெட் சதுக்கங்களுக்கு ஆட்களை அழைக்கவும் முடிந்தது. “நரகம் வெப்பமுள்ளதா?” என்ற பிரபலமான பேச்சைத்தான் நாங்கள் வழக்கமாக போட்டுக் காட்டினோம். எங்களுடைய ‘நடமாடும் வீட்டில்’ தென் ஆப்பிரிக்காவிலிருந்து கென்யாவுக்கு 3,000 கிலோமீட்டர் தூரம் நாங்கள் பயணித்தோம். இந்த முறை அநேக ஆப்பிரிக்க மொழிகளில் வெளியிடப்பட்ட பல வித்தியாசமான சிறுபுத்தகங்களை எடுத்துச் சென்றது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. அங்குள்ள ஜனங்கள் அவற்றை எங்களிடமிருந்து ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டார்கள்.
இவ்வாறு பயணம் செய்தபோதெல்லாம் நிறைய ஆப்பிரிக்க வன விலங்குகளை பார்க்க முடிந்தது எங்களுக்கு கிடைத்த அருமையான அனுபவம். இருட்டிய பின்பு, பாதுகாப்புக்காக வண்டிக்குள்ளேயே இருந்தோம் என்பது உண்மைதான்; ஆனால், யெகோவா படைத்த விதவிதமான விலங்குகளை அவற்றின் இயற்கை வாழிடங்களில் பார்ப்பது உண்மையில் விசுவாசத்தை பலப்படுத்தியது.
எதிர்ப்பு ஆரம்பமாகிறது
காட்டு மிருகங்களைக் குறித்ததில் நாங்கள் ஜாக்கிரதையாக இருந்தது உண்மைதான், ஆனால் பல அரசியல் அதிகாரிகளையும் கொதித்துப் போயிருந்த சில மதத் தலைவர்களையும் எதிர்ப்பட வேண்டியிருந்ததோடு ஒப்பிட அது ஒன்றுமேயில்லை. எங்களுடைய ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை அவர்கள் வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். ம்வானா லிஸா என்ற மதவெறியனை சமாளிப்பதுதான் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. அவனுடைய பெயரின் அர்த்தம் “கடவுளின் குமாரன்,” அவனைச் சேர்ந்த குழு கிடாவாலா என அழைக்கப்பட்டது; அதன் அர்த்தம் “காவற்கோபுரம்” என்றிருப்பதே வருந்தத்தக்க விஷயம். நாங்கள் அங்கு செல்வதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு, அவன் ஏகப்பட்ட ஆப்பிரிக்கர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுப்பதாக சொல்லி அவர்களை தண்ணீருக்குள் மூழ்கடித்து கொன்றிருக்கிறான். ஒருவழியாக அவன் கைதாகி தூக்கிலிடப்பட்டான். பிற்பாடு, அவனை தூக்கிலிட்ட நபரிடம் பேசுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோது, எங்களுடைய சொஸைட்டிக்கும் அந்த ஆளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கிச் சொன்னேன்.
அநேக ஐரோப்பியர்களிடமிருந்தும் எங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக பண சம்பந்தமான காரணங்களினால் நாங்கள் செய்துவந்த கல்வி புகட்டும் வேலை அவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. “தங்களை எப்படி சுரண்டி பிழைக்கிறார்கள் என்பது ஆப்பிரிக்கர்களுக்கு தெரியாத வரையில் வெள்ளையர் இந்த நாட்டில் இருக்க முடியும்” என பண்டகசாலையின் மானேஜர் ஒருவர் முறையிட்டார். இதே காரணத்துக்காகவே தங்க சுரங்க கம்பெனி ஒன்றின் தலைவர் என்னை அவருடைய அலுவலகத்தைவிட்டு வேகமாக வெளியே சென்றுவிடும்படி சொன்னார். பின்பு அவர் கோபத்தோடு தெரு முனை மட்டும் என்னை கொண்டு போய்விட்டார்.
ரோடீஷியா அரசு (இப்போது ஜிம்பாப்வே) பெரும்பாலும் இத்தகைய மத மற்றும் வர்த்தக விரோதிகளின் பேச்சையே நம்பியது என்பதில் சந்தேகமே இல்லை; அதனால்தான் அந்த அரசு நாட்டை விட்டே வெளியேறும்படி எங்களுக்கு ஆணையிட்டது. அத்தீர்மானத்தைக் குறித்து நாங்கள் மேல் முறையீடு செய்ததால் அங்கே இருப்பதற்கு அனுமதி கிடைத்தது. ஆனால் ஆப்பிரிக்கர்களிடம் பிரசங்கிக்கக் கூடாது என்ற நிபந்தனை போடப்பட்டது. எங்களுடைய பிரசுரங்கள் “ஆப்பிரிக்கர்களுக்கு பொருத்தமானவையல்ல” என அதற்கு ஓர் அதிகாரி காரணம் காட்டினார். என்றாலும், மற்ற நாடுகளிலுள்ள ஆப்பிரிக்கர் மத்தியிலோ இந்தக் கல்வி புகட்டும் வேலை தடையின்றி நடைபெற்றது, நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதில் ஒரு நாடுதான் ஸ்வாஸிலாந்து.
ஸ்வாஸிலாந்தில் ராஜ உபசாரம்
ஸ்வாஸிலாந்து ஒரு சிறிய சுதந்திர நாடாகும். இதன் பரப்பளவு 17,364 சதுர கிலோமீட்டர். இது தென் ஆப்பிரிக்காவுக்கு உள்ளேயே அமைந்துள்ளது. இந்த வாழ்க்கை சரிதையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சொல்வன்மை மிக்க அரசர் இரண்டாம் ஸோபூஸாவை இங்குதான் நாங்கள் சந்தித்தோம். பிரிட்டிஷ் யுனிவர்சிட்டியில் படித்ததால் ஆங்கிலம் அவருக்கு அத்துப்படி. சாதாரண உடையிலிருந்த அவர் எங்களை மனமார வரவேற்றார்.
நல்மனம் படைத்தவர்களுக்காக கடவுள் ஏற்பாடு செய்துள்ள பூமிக்குரிய பரதீஸின் அடிப்படையிலேயே அவருடன் நாங்கள் சம்பாஷித்தோம். அந்த விஷயத்தில் அவர் அதிக அக்கறை காட்டாவிட்டாலும், அதோடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவருக்கு அக்கறை இருந்ததை தெரிவித்தார். ஏழை எளிய, கல்வியறிவற்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அந்த அரசர் தன்னையே அர்ப்பணித்தார். மக்களுக்கு கல்வி புகட்டுவதற்கு பதிலாக அதிகமதிகமானோரை சர்ச்சில் சேர்ப்பதிலேயே குறியாக இருந்த பல கிறிஸ்தவமண்டல மிஷனரிகளின் நடவடிக்கைகளை அவர் வெறுத்தார். ஆனால், பயனியர் சேவை செய்பவர்கள் பலர் அந்த வேலையை எப்படி செய்கிறார்கள் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். எங்களுடைய பைபிள் கல்வி புகட்டும் வேலைக்கு அவர் தன் பாராட்டையும் தெரிவித்தார்; முக்கியமாக, பணம் ஏதும் வசூலிக்காமல் எதையும் வற்புறுத்தாமல் இந்த ஊழியத்தை செய்ய நாங்கள் தயாராக இருந்ததை அவர் பாராட்டினார்.
பைபிள் கல்வி சூடுபிடிக்கிறது
மிஷனரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி 1943-ல் ஆரம்பிக்கப்பட்டது. பிரசுர அளிப்புக்கு அதிக கவனம் செலுத்துவதற்கு பதிலாக அக்கறை காட்டுவோருக்கு மேலுமாக உதவி செய்வதைப் பற்றி அப்பள்ளி வலியுறுத்தியது. 1950-ல் கிலியட் பள்ளியின் 16-ம் வகுப்பில் கலந்து கொள்வதற்கு எனக்கும் ஜார்ஜுக்கும் அழைப்பு கிடைத்தது. இங்குதான் நான் முதன் முதலாக ஜீன் ஹைடை சந்தித்தேன். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர், விசுவாசமுள்ள ஒரு சகோதரி; பட்டம் பெற்ற பின், மிஷனரி வேலைக்காக ஜப்பானுக்கு ஜீன் அனுப்பப்பட்டார். மணம் செய்யாமல் இருப்பதே அப்போதும் நடப்பிலிருந்த வழக்கமாக இருந்ததால் எங்களுடைய நட்பு மேலுமாக தொடரவில்லை.
கிலியட் பயிற்சிக்கு பின்பு, நானும் ஜார்ஜும் மிஷனரிகளாக மொரிஷியஸ் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டோம்; அது இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு. அங்குள்ள மக்களோடு நண்பர்களாக பழகி, அவர்களுடைய பாஷையை கற்றுக்கொண்டோம்; அவர்களுக்கு பைபிள் படிப்புகளை நடத்தினோம். பிற்பாடு, என் தம்பி வில்லியமும் அவனுடைய மனைவி ம்யுரியலும் கிலியட் பட்டதாரிகளானார்கள். பிரசங்க வேலையில் என்னுடைய பழைய பிராந்தியமாக இருந்த கென்யாவுக்கு அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
எட்டு வருடங்கள் வேகமாய் ஓடிவிட்டன; 1958-ல் நியுயார்க்கில் சர்வதேச மாநாடு நடந்தபோது நான் மீண்டும் ஜீன் ஹைடை சந்தித்தேன். எங்களுடைய நட்பு மீண்டும் மலர்ந்தது, எங்களது திருமணம் நிச்சயமானது. என்னுடைய மிஷனரி நியமிப்பு மொரிஷியஸிலிருந்து ஜப்பானுக்கு மாற்றப்பட்டது. அங்கு 1959-ல் எங்களுடைய திருமணம் நடந்தது. அதற்குப்பின், நாங்கள் ஹிரோஷிமாவில் படு சந்தோஷமாக மிஷனரி வேலையை ஆரம்பித்தோம். அந்த சமயத்தில் அங்கு ஒரேவொரு சிறிய சபையே இருந்தது. இப்போது அந்த நகரத்தில் 36 சபைகள் இருக்கின்றன.
ஜப்பானுக்கு ‘ஸாயனாரா’
வருடங்கள் போகப் போக எங்கள் இருவருக்கும் உடல்நல பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்தன. அதனால் மிஷனரி சேவை செய்வது ரொம்பவே கஷ்டமானது. கடைசியில் ஜப்பானை விட்டு ஜீனுடைய சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு வந்து செட்டிலாக வேண்டியதாயிற்று. நாங்கள் ஹிரோஷிமாவை விட்டு வந்த அந்த நாள் சோகத்திலும் சோகமான ஒரு நாள். ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்த எங்களுடைய அன்பர்கள் அனைவருக்கும் நாங்கள் ஸாயனாரா அதாவது ‘குட்பை’ சொன்னோம்.
இப்போது நாங்கள் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி விட்டோம். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள ஆர்மிடேல் சபையோடு சேர்ந்து எங்களால் முடிந்தளவு யெகோவாவுக்கு சேவை செய்து வருகிறோம். கிட்டத்தட்ட 80 வருடங்கள் அநேகரோடு பைபிள் சத்தியம் எனும் பொக்கிஷத்தை பகிர்ந்தது எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கிறது! பைபிள் கல்வி திட்டத்தின் மலைக்க வைக்கும் வளர்ச்சியை பார்த்து விட்டேன், குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய சம்பவங்களையும் நான் கண்ணாரக் கண்டு விட்டேன். இதற்கான புகழை எந்த மனிதனோ, எந்த தொகுதியோ தட்டிச் செல்ல முடியாது. உண்மையில், சங்கீதக்காரனின் வார்த்தைகளின்படி சொன்னால், “அது கர்த்தராலே [“யெகோவாவாலே,” NW] ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.”—சங்கீதம் 118:23.
[பக்கம் 28-ன் படம்]
என் தம்பி ஜார்ஜும் எங்களுடைய நடமாடும் வீடும்
[பக்கம் 28-ன் படம்]
விக்டோரியா ஏரியில் நான்
[பக்கம் 29-ன் படம்]
1938-ல் ஸ்வாஸிலாந்தில் ஒரு பொதுப் பேச்சுக்கு வந்திருந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்
[பக்கம் 30-ன் படங்கள்]
1959-ல் ஜீனை கரம்பிடித்த அன்றும் இன்றும்