என்ன கேள்விகளை கடவுளிடம் கேட்க விரும்புகிறீர்கள்?
வாழ்க்கையைப் பற்றிய கேள்விகள் பூமியெங்கும் உள்ள ஜனங்களின் மனதைக் குடைந்தெடுக்கின்றன. உங்களுக்கும் அப்படிப்பட்ட கேள்விகள் உள்ளனவா? அநேகர் மத போதகர்களிடம் அப்படிப்பட்ட கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்; ஆனால் திருப்திகரமான பதில்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இன்னும் சிலர் அப்படிப்பட்ட கேள்விகளுக்கு தாங்களே பதில் காண முனைந்திருக்கிறார்கள். சிலர் உதவிக்காக ஜெபம் செய்திருக்கிறார்கள். உங்கள் மனதைக் குடையும் கேள்விகளுக்கான பதில்களை கடவுளிடமிருந்தே பெற முடியுமா? கடவுளிடம் கேட்க விரும்புவதாக அநேகர் கூறியிருக்கும் கேள்விகளில் சில இதோ:
கடவுளே, நீர் உண்மையில் யார்?
பண்பாடு, பெற்றோரின் மதம், ஒருவேளை சொந்த விருப்பம் போன்றவை கடவுளைப் பற்றிய மனிதர்களின் கருத்தை பாதிக்கின்றன. சிலர் தங்கள் தெய்வத்தை பெயர் சொல்லி அழைக்கிறார்கள், மற்றவர்களோ வெறுமனே கடவுள் என்று கூப்பிடுகிறார்கள். எவ்வாறு அழைக்கிறோம் என்பது உண்மையில் முக்கியமா? ஒரேவொரு உண்மைக் கடவுள் மட்டுமே இருக்கிறாரா? தம்மையும் தமது பெயரையும் அவர் நமக்கு தெரிவித்திருக்கிறாரா?
ஏன் இவ்வளவு துன்பம் நிலவுகிறது?
ஒருவர் பொறுப்பற்ற அல்லது ஒழுக்கங்கெட்ட விதமாக வாழ்ந்ததன் விளைவாக அவருக்கு உடல்நலக் கேடு ஏற்பட்டால் அல்லது அவர் வறுமையில் வாடினால், தனது நிலைமை குறித்து அவர் குறைபட்டுக் கொள்ளலாம். ஆனால், தான் துன்பப்படுவதற்கான காரணத்தை அவர் நன்றாகவே அறிந்திருப்பார்.
என்றாலும், தாங்கள் செய்யாத தவறுக்காக அநேகர் கொடிய துன்பத்தை சந்திக்கிறார்கள். சிலர் நாள்பட்ட வியாதியால் அவதிப்படுகிறார்கள். மற்றவர்களோ, தங்கள் குடும்பங்களுக்கு இருக்க இடமும் உண்ண உணவும் கொடுக்கவே மலைபோன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராட நேரிடுகிறது. குற்றச்செயல், யுத்தம், கண்மூடித்தனமான வன்முறை, இயற்கை பேரழிவுகள் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களால் வரும் அநீதி போன்றவற்றிற்கு இன்னும் கோடிக்கணக்கானோர் பலியாகிறார்கள்.
ஆகவே, ‘இந்நிலைமைகள் இவ்வளவு பரவலாக காணப்பட காரணம் என்ன? கடவுள் ஏன் இவ்வளவு துன்பத்தை அனுமதிக்கிறார்?’ போன்ற கேள்விகளை அநேகர் கேட்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
நான் ஏன் பிறந்தேன்? வாழ்க்கையின் நோக்கம் என்ன?
ஒருவரின் அன்றாட வாழ்க்கை அவருக்கு உண்மையான திருப்தி அளிக்காதபோது எழும் விரக்தியின் விளைவாகவே இந்தக் கேள்விகள் பிறக்கின்றன; இவ்வாறு விரக்தியடையும் மக்களும் அநேகர் இருக்கிறார்கள். ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் கடவுள் ஏதோவொரு விதத்தில் முன்னரே தீர்மானிக்கிறார் என்று லட்சக்கணக்கானோர் நம்புகிறார்கள். அது உண்மையா? உங்களுக்கென்று கடவுள் விசேஷித்த நோக்கம் வைத்திருந்தால் அதை அறிந்துகொள்ள நிச்சயமாகவே விரும்புவீர்கள்.
உலகிலுள்ள கோடிக்கணக்கான புத்தகங்களுள் விசேஷித்த ஒன்றுள்ளது; அது கடவுளால் ஏவப்பட்டது என்று அதுவே தெளிவாக கூறுகிறது. வேறெந்த புத்தகத்தையும்விட அது ஏராளமான மொழிகளில் கிடைக்கிறது; முழு மனித குலத்திற்காகவும் கடவுள் தந்த ஒரு புத்தகம் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இல்லையா? அதுவே பரிசுத்த பைபிள். வானத்தையும் பூமியையும் படைத்த கடவுளே, தாம் யார், தமது பெயர் என்ன போன்றவற்றை அதில் கூறுகிறார். அந்தப் பெயர் உங்களுக்கு தெரியுமா? கடவுள் எப்படிப்பட்டவர் என்று பைபிள் கூறுவதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? கடவுள் உங்களிடம் எதிர்பார்ப்பதைப் பற்றி அது என்ன கூறுகிறதென்று உங்களுக்கு தெரியுமா?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டை: Chad Ehlers/Index Stock Photography
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
மலை: Chad Ehlers/Index Stock Photography