பதில்கள் சிலருக்கு கிடைத்த விதம்
கோடிக்கணக்கானோர் ஜெபம் செய்கிறார்கள். தங்கள் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கிறது என சிலர் உறுதியாக நம்புகிறார்கள். மற்றவர்களோ தங்கள் ஜெபங்கள் கேட்கப்படுகின்றனவா என்று சந்தேகிக்கிறார்கள். இன்னும் சிலர் பதில்களை தேடி எங்கெல்லாமோ அலைகிறார்கள், ஆனால் அவற்றை கடவுளிடம் கேட்டு ஜெபிக்க வேண்டும் என்று சிறிதும் யோசிப்பது கிடையாது.
உண்மை கடவுளை, ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்று பைபிள் அடையாளம் காட்டுகிறது. (சங்கீதம் 65:2) நீங்கள் ஜெபித்தால், உங்கள் ஜெபங்கள் உண்மைக் கடவுளிடம்தான் செல்கின்றன என்பதில் நிச்சயமாக இருக்கிறீர்களா? அவர் பதிலளிக்கும் விதத்தில் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?
பூமியின் அனைத்து பாகங்களிலும் உள்ள அநேகர் இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்றே பதிலளிக்கிறார்கள்! அவர்களுக்கு பதில்கள் எவ்வாறு கிடைத்தன? அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்?
கடவுள்—அவர் யார்?
போர்ச்சுகலைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் கன்னியாஸ்திரீகளிடமும் பாதிரியார்களிடமும் கல்வி கற்றார். அவர் தனது மத நெறிகளை இம்மியும் பிசகாமல் கடைப்பிடித்தார். ஆனால் முக்கியமானவை என கற்பிக்கப்பட்டிருந்த பழக்கங்களை சர்ச் மாற்றியபோதும், முற்றிலும் கைவிட்டபோதும் அவர் குழப்பமடைந்தார். அயல் நாட்டிற்கு ஒருமுறை பயணித்தபோது கிழக்கத்திய வழிபாட்டு முறைகளை அறிந்துகொண்டார்; ஒரே உண்மைக் கடவுள் இருக்கிறாரா என சந்தேகிக்க ஆரம்பித்தார். கடவுளை எவ்வாறு வணங்க வேண்டும் என்று யோசித்தார். பைபிளில் உள்ளவற்றைப் பற்றி பாதிரியாரிடம் கேட்டபோது அவர் அசட்டையாக பதிலளித்தார்; அதனால் ஆசிரியை ஏமாற்றமடைந்தார்.
இந்தப் பள்ளி ஆசிரியை வசிக்கும் நகரில் கத்தோலிக்க சர்ச் ஒரு துண்டுப்பிரதியை அனைவருக்கும் கொடுத்திருந்தது; யெகோவாவின் சாட்சிகளோடு பேச வேண்டாம் என அது சர்ச் அங்கத்தினர்களை எச்சரித்தது. என்றாலும், அந்த ஆசிரியையின் கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்தபாடில்லை. ஒருநாள், சாட்சிகள் அவருடைய வீட்டிற்கு சென்று பேசியபோது அவர் கவனமாக கேட்டு அக்கறை காட்டினார். அப்போதுதான் முதன்முதல் அவர்களோடு பேசினார்.
பைபிளைப் பற்றி அவருக்கிருந்த அநேக கேள்விகளுக்கு பதிலைப் பெற இந்தப் பெண்மணி சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு வாரமும் அவர்களிடம் கேட்க அநேக கேள்விகளை தயாராக வைத்திருந்தார். கடவுளுடைய பெயர் என்ன, ஒரே ஒரு உண்மை கடவுள்தான் இருக்கிறாரா, வணக்கத்தில் சிலைகளை உபயோகிப்பதை அவர் ஏற்கிறாரா போன்ற ஏராளமான காரியங்களை தெரிந்துகொள்ள விரும்பினார். தனது எல்லா கேள்விகளுக்கும் பைபிளிலிருந்தே பதில் கிடைத்ததை கவனித்தார்; அவை தனிநபர்களின் கருத்துக்களாய் இராததால் கற்றுக்கொண்டவை அவருக்கு ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்தன. கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கிருந்த பல கேள்விகளுக்கும் பதில்கள் கிடைத்தன. இன்று அவர் யெகோவாவை ஆவியோடும் உண்மையோடும் வணங்குகிறார்; “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள்” இவ்வாறே வணங்குவார்கள் என இயேசு கிறிஸ்து கூறினார் அல்லவா?—யோவான் 4:23.
இலங்கையில், ஒரு குடும்பத்தார் தினந்தோறும் ஒன்றாக சேர்ந்து பைபிளை வாசித்தார்கள்; ஆனால், அவர்களைத் துளைத்தெடுத்த பல கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவே இல்லை. அவர்களுக்கு உதவி தேவைப்பட்ட போதிலும் பாதிரியாரால் உதவ முடியவில்லை. யெகோவாவின் சாட்சிகள் அவர்களை சந்தித்து பைபிளை விளக்கும் அருமையான பிரசுரங்களை கொடுத்தார்கள். பிறகு, சாட்சிகள் அந்தக் குடும்பத்தை சந்தித்து பைபிள் பற்றிய அவர்களுடைய கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களைக் கொடுத்தபோது அவர்கள் பைபிளைப் படிக்க ஒப்புக்கொண்டார்கள். பைபிள் படிப்பில் கற்ற விஷயங்கள் அவர்கள் ஆர்வத்தை தூண்டின.
இருந்தாலும், சிறு வயதிலிருந்தே சர்ச்சில் கற்றுக்கொண்ட விஷயங்கள் அந்த மனைவியின் மனதை அலைக்கழித்தன; பிதாவே ‘ஒன்றான மெய்த் தேவன்’ என்பதை குமாரனாகிய இயேசு கிறிஸ்து தாமே கூறியிருந்தும் அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (யோவான் 17:1, 3) இயேசுவும் பிதாவும் சமம் என்றும், இந்த ‘இரகசியத்தைப்’ பற்றி எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்றும் அவருக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. நம்பிக்கையிழந்த நிலையில் அவர் யெகோவாவிடம் உள்ளப்பூர்வமாக ஜெபித்தார்; அவ்வாறு ஜெபிக்கையில் அவருடைய பெயரை சொல்லி, இயேசு யார் என்பதை தனக்கு காட்டும்படி கேட்டார். பிறகு, சம்பந்தப்பட்ட வசனங்களை மறுபடியும் கவனமாக ஆராய்ந்து பார்த்தார். (யோவான் 14:28; 17:21; 1 கொரிந்தியர் 8:5, 6) என்ன ஆச்சரியம்! அவர் கண்களிலிருந்து செதிள்கள் விழுந்ததைப்போல இருந்தது; வானத்தையும் பூமியையும் படைத்த, இயேசு கிறிஸ்துவின் பிதாவான யெகோவாவே உண்மை கடவுள் என்பதை அவரால் தெளிவாக காண முடிந்தது.—ஏசாயா 42:8; எரேமியா 10:10-12.
துன்பம்—ஏன்?
யோபு என்பவர் சொல்லொண்ணா துன்பத்தை சந்தித்தார். அவருடைய பிள்ளைகள் அனைவரும் சூறைக்காற்றில் சிக்கி இறந்துபோனார்கள்; அவர் சகலத்தையும் இழந்து பரம ஏழையானார். அதோடு, வேதனைமிக்க வியாதி அவரை ஆட்டிப்படைத்தது; போலி நண்பர்களின் தொல்லையையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் யோபு அவசரப்பட்டு சிலவற்றை பேசிவிட்டார். (யோபு 6:3, NW) ஆனால், கடவுள் அந்தச் சூழ்நிலையை கருத்தில் எடுத்துக்கொண்டார். (யோபு 35:15, NW) யோபுவின் இருதயத்தில் இருந்ததை கடவுள் அறிந்திருந்ததால் அவருக்கு தேவைப்பட்ட ஆலோசனையை கொடுத்தார். இன்றும்கூட அவர் மக்களிடம் அவ்வாறே நடந்துகொள்கிறார்.
மொசாம்பிக்கில் வசிக்கும் காஸ்ட்ரூ, பத்தே வயதாக இருந்தபோது தன் தாயை மரணத்தில் பறிகொடுத்தார். அவருடைய உலகமே சுக்குநூறானது. “அம்மா ஏன் நம்மைவிட்டுட்டு செத்துப்போனாங்க?” என்று கேட்டார். அவர், தேவபக்தியுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்ட போதிலும் தாயை இழந்தபோது எல்லாமே வெறுமையாக தெரிந்தது. அவருடைய மனதிற்கும் இருதயத்திற்கும் எது ஆறுதல் அளித்தது? சிச்சிவா மொழியில் ஒரு சிறிய பைபிளை வாசித்ததும், அதைப் பற்றி தன் அண்ணன்மார்களோடு பேசியதும் அவருக்கு ஆறுதல் அளித்தன.
கடவுள் அநியாயமாக நடந்துகொண்டதால் தன் அம்மா இறக்கவில்லை, ஆனால் சுதந்தரிக்கப்பட்ட அபூரணத்தினால்தான் இறந்தார் என்பதை காஸ்ட்ரூ காலப்போக்கில் புரிந்துகொண்டார். (ரோமர் 5:12; 6:23) உயிர்த்தெழுதலைப் பற்றிய பைபிளின் வாக்குறுதி அவருக்கு பெரும் ஆறுதலை அளித்தது; ஏனென்றால், தன் அம்மாவை மறுபடியும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை அது அளித்தது. (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) வருத்தகரமாக, நான்கே வருடங்கள் கழித்து அவருடைய அப்பாவும் இறந்துவிட்டார். ஆனால், இம்முறை காஸ்ட்ரூவால் இந்த இழப்பை ஓரளவு தாங்கிக்கொள்ள முடிந்தது. இன்று அவர் யெகோவாவை நேசித்து, அவருக்கு உண்மையோடு சேவை செய்து வருகிறார். அவர் பெற்றிருக்கும் சந்தோஷத்திற்கு அவரை அறிந்த அனைவருமே கண்கண்ட சாட்சிகள்.
காஸ்ட்ரூவுக்கு ஆறுதலளித்த அதே பைபிள் சத்தியங்களே அன்பானவர்களை பறிகொடுத்த மற்ற அநேகருக்கும் ஆறுதல் அளித்திருக்கின்றன. துன்மார்க்கரின் செயல்களால் பெரும் கஷ்டங்களை சந்தித்த சிலர், ‘தீயோர் வாழ்வதேன்?’ என்று யோபு கேட்டது போலவே கேட்கிறார்கள். (யோபு 21:7, பொது மொழிபெயர்ப்பு) இந்தக் கேள்விக்கு கடவுள் தமது வார்த்தை மூலம் பதிலளிப்பதை மக்கள் உண்மையிலேயே கேட்கையில் காரியங்களை கடவுள் கையாளும் விதம் தங்களுக்கு நன்மை அளிப்பதாகவே இருக்கும் என்பதை கற்றுக்கொள்கிறார்கள்.—2 பேதுரு 3:9.
ஐக்கிய மாகாணங்களில் வளர்ந்த பார்பரா, போர்க் கொடுமைகளை நேரடியாக சந்தித்ததில்லை. ஆனால், அவர் வளர்ந்த சமயத்தில் இவ்வுலகின் பல நாடுகள் போரில் ஈடுபட்டிருந்தன. தினந்தோறும் போர் சம்பந்தப்பட்ட அட்டூழியங்கள் பற்றி செய்திகள் வெளிவந்தன. சரித்திர நிகழ்ச்சிகள் சற்றும் எதிர்பாராத விதங்களில் சம்பவித்ததைப் பற்றி பள்ளியில் படித்தபோது பார்பரா ஆச்சரியம் அடைந்தார். அவை ஏன் அவ்வாறு நிகழ்ந்தன?, அதில் கடவுளுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்ததா? என்றெல்லாம் யோசித்தார். கடவுள் இருப்பதை அவர் நம்பினார் என்றாலும், அவரைப் பற்றி மனதில் ஒரு தெளிவு இல்லாமல் குழம்பினார்.
என்றாலும், யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்த பிறகு வாழ்க்கை பற்றிய பார்பராவின் நோக்குநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. அவர்கள் சொன்னதை கவனமாக கேட்டு அவர்களோடு சேர்ந்து பைபிளை படித்தார். ராஜ்ய மன்றத்தில் நடந்த கூட்டங்களுக்கு சென்றார். பெரிய மாநாடு ஒன்றிலும் கலந்துகொண்டார். அதுமட்டுமல்ல, அவர் கேள்விகள் கேட்டபோது ஒவ்வொரு சாட்சியும் ஒவ்வொரு விதமாக பதிலளிக்காததை கவனித்தார். சாட்சிகள் பைபிள் அடிப்படையிலேயே சிந்தித்ததால் அவர்கள் பேச்சில் ஒற்றுமை இருந்ததைக் கண்டார்.
பிசாசாகிய சாத்தானே உலகின் அதிபதியாக அதன்மீது செல்வாக்கு செலுத்துகிறான் என்பதற்கும் அவனுடைய மனப்பான்மையைத்தான் இந்த உலகம் காண்பிக்கிறது என்பதற்குமான அத்தாட்சியை சாட்சிகள் பைபிளிலிருந்து சுட்டிக்காண்பித்தனர். (யோவான் 14:30; 2 கொரிந்தியர் 4:4; எபேசியர் 2:1-3; 1 யோவான் 5:19) பார்பராவிற்கு ஆச்சரியமூட்டிய சரித்திர நிகழ்ச்சிகள் பைபிளில் முன்னறிவிக்கப்பட்டிருந்ததை அவர்கள் விளக்கினர். (தானியேல், அதிகாரங்கள் 2, 7, 8) விரும்பும் போதெல்லாம் எதிர்காலத்தை முன்னறிவதற்கான திறமை கடவுளுக்கு இருப்பதால் அவற்றை முன்னறிவித்தார். அந்நிகழ்ச்சிகளில் சிலவற்றை நிகழும்படி செய்தது கடவுளே. மற்றவற்றை அவர் வெறுமனே அனுமதித்தார். நம் நாட்களில் நிகழும் நல்லது, கெட்டதுகளையும் பைபிள் முன்னறிவித்தது, அவற்றின் அர்த்தத்தையும் அது விளக்கியது என்பதை சாட்சிகள் பார்பராவிற்கு காண்பித்தனர். (மத்தேயு 24:3-14) நீதி வாசமாயிருக்கும் துன்பமில்லா புதிய உலகம் பற்றிய பைபிளின் வாக்குறுதிகளை அவருக்கு காண்பித்தனர்.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4.
மனிதர்கள் துன்பப்படுவதற்கு யெகோவா தேவன் காரணமல்ல என்றாலும், தமது கட்டளைகளுக்கு கீழ்ப்படியும்படி வற்புறுத்துவதன் மூலம் அந்தத் துன்பத்தை அவர் தடுப்பதில்லை என்பதை பார்பரா கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பித்தார். (உபாகமம் 30:19, 20) நாம் என்றென்றும் சந்தோஷமாக வாழ கடவுள் ஏற்பாடுகள் செய்துவிட்டார்; ஆனால், அவருடைய நீதியுள்ள வழிகளுக்கு இசைவாக வாழ்வோமா இல்லையா என்பதை நிரூபிக்க இப்போது நமக்கு வாய்ப்பளிக்கிறார். (வெளிப்படுத்துதல் 14:6, 7) கடவுளுடைய சட்டங்களை அறிந்து அவற்றிற்கு இசைய வாழ பார்பரா தீர்மானித்தார். தம்மை உண்மையாய் பின்பற்றுவோரை அடையாளம் காட்டும் என இயேசு குறிப்பிட்ட அன்பையும் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் அவர் கண்டார்.—யோவான் 13:34, 35.
அவருக்கு உதவிய ஏற்பாடுகளே உங்களுக்கும் உதவலாம்.
அர்த்தமுள்ள வாழ்க்கை
வாழ்க்கை சுமுகமாய் ஓடிக்கொண்டிருப்பதாக நினைப்போரும்கூட தங்களை குழப்பும் கேள்விகளுக்கு விடை காண முயலலாம். உதாரணமாக, பிரிட்டனைச் சேர்ந்த மாத்யூ என்ற இளைஞர் உண்மை கடவுளையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் பற்றி அறிய சதா ஆர்வமுள்ளவராக இருந்தார். அவர் 17 வயதாக இருக்கையில் அவருடைய அப்பா இறந்துவிட்டார். பின்னர், மாத்யூ இசையில் பல்கலைக்கழக பட்டம் பெற்றார். பொருள் செல்வத்தையே மையமாக வைத்து சுழன்ற தனது வாழ்க்கை சுத்த சூனியமே என்பதை அதிகமதிகமாய் உணர ஆரம்பித்தார். தன் வீட்டைவிட்டு சென்று லண்டனில் குடியேறினார். அங்கிருக்கையில் திருப்தியான வாழ்க்கையை தேடி பல்வேறு காரியங்களில் ஈடுபட்டார்; போதைப் பொருட்கள், நைட் கிளப்புகள், சோதிடம், ஆவிக்கொள்கை, சென் புத்த மதம், இன்ன பிற தத்துவங்கள் என எதையும் விட்டுவைக்கவில்லை. முற்றிலும் நம்பிக்கை இழந்தவராக, சத்தியத்தைக் கண்டுபிடிக்க உதவும்படி கடவுளிடம் கெஞ்சினார்.
மாத்யூ, இரண்டு நாட்கள் கழித்து தனது பழைய நண்பரை சந்தித்தபோது தான் படும் அவஸ்தையை அவரிடம் கூறினார். இந்த நண்பர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தவர். அவர் 2 தீமோத்தேயு 3:1-5-ஐ மாத்யூவிற்கு காண்பித்தபோது, நம்மை சூழ்ந்திருக்கும் உலகை பைபிள் அவ்வளவு துல்லியமாக விவரிப்பதைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். மலைப் பிரசங்கத்தை வாசித்தபோது அது அவர் நெஞ்சத்தைத் தொட்டது. (மத்தேயு, அதிகாரங்கள் 5-7) யெகோவாவின் சாட்சிகளை குறைகூறும் சில பிரசுரங்களை அவர் வாசித்திருந்ததால் ஆரம்பத்தில் தயங்கினார்; ஆனால் ஒருவழியாக, அருகிலுள்ள ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு செல்ல முடிவு செய்தார்.
மாத்யூவுக்கு தான் கேட்டது பிடித்திருந்ததால் அந்த சபையிலுள்ள ஒரு மூப்பரோடு பைபிளை படிக்க ஆரம்பித்தார். முன்பு கடவுளிடம் செய்த ஜெபத்தின் பதில்தான் இது என்றும், தான் எதை தேடினாரோ அதைப் பற்றியே இப்போது படிக்கிறார் என்றும் சீக்கிரத்தில் உணர்ந்துகொண்டார். யெகோவாவிற்கு விருப்பமில்லாத பழக்கங்களை அவர் விட்டொழித்தபோது அதிக நன்மைகளை அடைந்தார். அவர் கடவுள்மீது ஆரோக்கியமான பயத்தை வளர்த்தபோது, கடவுளுடைய கட்டளைகளுக்கு இசைவாக தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள தூண்டப்பட்டார். அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தம் இருப்பதை மாத்யூ உணர்ந்தார்.—பிரசங்கி 12:13.
மாத்யூவோ இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட மற்றவர்களோ திருப்தியான வாழ்க்கையை கண்டடைவார்கள் என்று முன்னரே தீர்மானிக்கப்படவில்லை. என்றாலும், தமது கட்டளைகளுக்கு சந்தோஷத்தோடு கீழ்ப்படிய விரும்பும் அனைவருக்காகவும் யெகோவா தேவன் ஓர் அன்பான நோக்கம் வைத்திருப்பதை அவர்கள் கற்றுக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 10:34, 35) போர், வியாதி, பசி, ஏன் மரணம்கூட இல்லாத ஓர் உலகில் முடிவில்லாத வாழ்க்கையை அளிப்பது அந்த நோக்கத்தின் ஒரு பாகமாகும். (ஏசாயா 2:4; 25:6-8; 33:24; யோவான் 3:16) நீங்களும் அப்படிப்பட்ட வாழ்க்கையைப் பெற விரும்புகிறீர்களா? விரும்புகிறீர்கள் என்றால், யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் நடக்கும் பைபிள் சார்ந்த கூட்டங்களுக்கு வாருங்கள். திருப்தியான வாழ்க்கையை கண்டுபிடிப்பதற்கான வழியைப் பற்றி அங்கே நீங்கள் அதிகத்தை கற்றுக்கொள்ளலாம். அவற்றிற்கு வரும்படி உங்களை கனிவோடு வரவேற்கிறோம்.
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய தனிப்பட்ட பெயரை உபயோகித்து ஊக்கமாக அவரிடம் ஜெபியுங்கள்
[பக்கம் 7-ன் படம்]
பைபிளில் உள்ளதை உள்ளவாறே கற்பிப்பவர்களோடு சேர்ந்து அதைப் படியுங்கள்
[பக்கம் 7-ன் படங்கள்]
ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு செல்லுங்கள்
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
நெடுவழி நடைப்பயணி: Chad Ehlers/Index Stock Photography