யெகோவா உங்கள் செயல்களைக் கவனிக்கிறாரா?
இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? ‘மோசே, கிதியோன், தாவீது போன்றவர்கள் செய்ததையெல்லாம் கடவுள் கவனித்தார் என்று தெரியும், ஆனால் நான் செய்வதை அவர் கவனிக்கிறாரா என தெரியாது. நான் செய்வதை அவர் கவனிக்கிறதற்கு நான் ஒன்றும் மோசேயோ, கிதியோனோ, தாவீதோ இல்லையே’ என அநேகர் சொல்லலாம்.
பைபிள் காலங்களில், விசுவாசமுள்ள நபர்கள் சிலர் விசுவாசத்தை வெளிக்காட்டும் அசாத்தியமான அருஞ்செயல்களை செய்தார்கள் என்பது உண்மைதான். அவர்கள் ‘ராஜ்யங்களை ஜெயித்தார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள்.’ (எபிரெயர் 11:33, 34) ஆனால் மற்றவர்கள் இந்தளவுக்கு விசுவாசத்தை வெளிக்காட்டாவிட்டாலும் அவர்களுடைய விசுவாச செயல்களைக் கடவுள் கவனித்தார் என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. உதாரணமாக, ஒரு மேய்ப்பன், ஒரு தீர்க்கதரிசி, ஒரு விதவை ஆகியோரின் முன்மாதிரிகளை பைபிளிலிருந்து பார்க்கலாம்.
ஒரு மேய்ப்பன் செலுத்தும் பலி
ஆதாம் ஏவாளின் இரண்டாவது மகனாகிய ஆபேலைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்? அவர் உயிர்த்தியாகியாக மரித்தது உங்கள் நினைவுக்கு வரலாம், ஒருவேளை நம்மில் சிலருக்கே அப்படிப்பட்ட மரணம் நேரிடலாம். ஆனால் முதலில் கடவுள் வேறொரு காரணத்திற்காக ஆபேலை கவனித்தார்.
ஒருநாள் தன் மந்தையில் கொழுகொழுவென இருந்த சில ஆடுகளைத் தேர்ந்தெடுத்து கடவுளுக்கு பலி செலுத்தினார் ஆபேல். அவர் செலுத்திய பலி இன்றைக்கு நமது கண்ணோட்டத்தில் சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் யெகோவா அதைக் கவனித்தார், அதை அங்கீகரித்தார். என்றாலும், கவனித்ததோடு விட்டுவிடவில்லை. சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, எபிரெயர் என்ற புத்தகத்தில் அதை எழுதும்படி அப்போஸ்தலன் பவுலை யெகோவா வழிநடத்தினார். அத்தனை வருடங்கள் உருண்டோடியும் அந்த சாதாரண பலியை கடவுள் மறக்கவே இல்லை!—எபிரெயர் 6:10; 11:4.
எப்படிப்பட்ட பலியை செலுத்த வேண்டுமென ஆபேல் எப்படித் தீர்மானித்தார்? அதைப் பற்றி பைபிள் ஏதும் சொல்லாவிட்டாலும், அவர் தீர்க்கமாக யோசித்தே தீர்மானித்திருப்பார். அவர் ஒரு மேய்ப்பர், எனவே தன் மந்தையிலிருந்து சிலவற்றை பலி செலுத்தியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் ‘கொழுமையானவற்றை,’ அதாவது மிகச் சிறந்தவற்றை பலி செலுத்தினார் என்பதைக் கவனியுங்கள். (ஆதியாகமம் 4:4) “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்திடம் யெகோவா சொன்ன வார்த்தையைக் குறித்து அவர் தியானித்திருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. (ஆதியாகமம் 3:15; வெளிப்படுத்துதல் 12:9) அந்த “ஸ்திரீ” யார், அவள் “வித்து” யார் என்பது புரியாதிருந்தாலும் அந்த ஸ்திரீயினுடைய வித்துவின் ‘குதிங்கால் நசுக்கப்படுவதற்கு’ இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்பதை ஆபேல் புரிந்துகொண்டிருக்கலாம். சுவாசிக்கிற, உயிருள்ள ஒன்றை பலி செலுத்துவதைவிட வேறெதுவும் சிறந்ததாக இருக்க முடியாது என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருந்தார். எப்படியிருந்தாலும், அவர் செலுத்திய பலி உண்மையில் வெகு பொருத்தமானதே.
ஆபேலைப் போலவே கிறிஸ்தவர்களும் இன்று கடவுளுக்குப் பலி செலுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மந்தையிலுள்ள தலையீற்றுகளை செலுத்துவதில்லை; ஆனால், “[கடவுளுடைய] நாமத்தைத் துதிக்கும் [“வெளிப்படையாக அறிவிக்கும்,” NW] உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை” செலுத்துகிறார்கள். (எபிரெயர் 13:15) நம் விசுவாசத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுகையில் நம் உதடுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றன.
உங்கள் துதியின் பலி இன்னும் தரமானதாக இருக்க வேண்டுமென நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால், உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பற்றி கவனமாக யோசித்துப் பாருங்கள். அவர்கள் எதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிறார்கள்? அவர்களுக்கு எதிலெல்லாம் ஈடுபாடு இருக்கிறது? பைபிள் செய்தியின் எந்தெந்த அம்சங்கள் அவர்கள் மனதைக் கவரும்? ஊழியம் செய்யும்போது ஒவ்வொரு வீட்டிலும் நீங்கள் பேசிய விதத்தை பகுத்தாராய்ந்து இன்னும் எப்படி சிறப்பாக முன்னேற்றம் செய்யலாம் என யோசித்துப் பாருங்கள். யெகோவாவைப் பற்றி பேசுகையில் அதிக நம்பிக்கையுடனும் இருதயத்திலிருந்தும் பேசுங்கள். உங்கள் பலி உண்மையிலேயே ‘ஸ்தோத்திர பலியாக’ இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
செவிகொடுக்காதவர்களிடம் பிரசங்கிக்கும் ஒரு தீர்க்கதரிசி
இப்போது தீர்க்கதரிசியாகிய ஏனோக்கை குறித்து சிந்திப்போம். அந்த சமயத்தில் அவர் மட்டுமே யெகோவா தேவனுக்கு சாட்சியாக இருந்திருக்கலாம். ஏனோக்கைப் போல, உங்கள் குடும்பத்தில் நீங்கள் மட்டுமே தன்னந்தனியாக யெகோவாவை உண்மையுடன் சேவித்து வருகிறீர்களா? பள்ளியில் அல்லது வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மட்டுமே பைபிள் நியமங்களைப் பின்பற்றுகிறவரா? அப்படியானால், நீங்கள் தொல்லைகளை எதிர்ப்படலாம். கடவுளுடைய சட்டங்களை மீறி நடக்கும்படி நண்பர்கள், சொந்தபந்தங்கள், சக மாணவர்கள் அல்லது சக ஊழியர்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். “நீ என்ன செய்கிறாய் என யாருக்கும் தெரியவே தெரியாது. நாங்களும் யார் கிட்டேயும் மூச்சுவிட மாட்டோம்” என அவர்கள் சொல்லலாம். நீங்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி கடவுளுக்குக் கவலை கிடையாது என்றும், எனவே பைபிளின் ஒழுக்க தராதரங்களைக் குறித்து நீங்கள் கவலைப்படுவது முட்டாள்தனம் என்றும் அவர்கள் அழுத்தம் திருத்தமாக வாதாடலாம். அவர்களைப் போல் நீங்கள் சிந்திப்பதில்லை, அவர்களைப் போல் நீங்கள் நடந்துகொள்வதில்லை என்பதைப் பார்க்கையில் அவர்களுக்கு கோபம் கோபமாக வரலாம்; உங்கள் உறுதியைக் குலைக்க தங்களால் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வதென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கலாம்.
அப்படிப்பட்ட தொல்லைகளை சமாளிப்பது லேசுப்பட்ட விஷயமல்ல என்பது உண்மைதான்; ஆனாலும் அது முடியாத காரியமல்ல. ஆதாமிலிருந்து ஏழாவது தலைமுறையில் வந்த ஏனோக்கை எடுத்துக்கொள்ளுங்கள். (யூதா 14) ஏனோக்கு பிறந்த காலத்தில் பெரும்பாலான மக்களிடம் ஒழுக்கநெறியின் உணர்வுகள் எல்லாம் மரத்துப்போயிருந்தன. அவர்கள் பேச்சை காதுகொடுத்து கேட்க முடியவில்லை. அவர்கள் நடத்தை ‘அதிர்ச்சி அளித்தது.’ (யூதா 15, NW) இன்றுள்ள பெரும்பாலோரைப் போலவே அவர்கள் நடந்துகொண்டார்கள்.
ஆனால் இந்நிலையை ஏனோக்கு எப்படி சமாளித்தார்? அதற்கான பதில் இன்று நமக்கும் ஆர்வத்துக்குரியதாக உள்ளது. அன்று வாழ்ந்தவர்களில் ஏனோக்கு மட்டுமே யெகோவாவை வணங்குபவராக இருந்தார், ஆனாலும் அவர் தன்னந்தனியாக இல்லை. ஏனோக்கு கடவுளுடன் நடந்தார்.—ஆதியாகமம் 5:22, NW.
கடவுளுக்குப் பிரியமானதை செய்ய வேண்டும் என்பதிலேயே ஏனோக்கு குறியாக இருந்தார். கடவுளுடன் நடப்பதற்கு, சுத்தமாக, நெறி பிறழாமல் வாழ்ந்தால் மட்டும் போதாது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் பிரசங்கிக்கும்படி யெகோவா எதிர்பார்த்தார். (யூதா 14, 15) ஜனங்களுடைய தேவ பக்தியற்ற செயல்களைக் கடவுள் கண்டும் காணாதவர்போல் இல்லை என்பதைக் குறித்து அவர்களிடம் எச்சரிக்க வேண்டிருந்தது. 300-க்கும் அதிக ஆண்டுகள் ஏனோக்கு கடவுளுடன் நடந்தார்; நம்மில் எவரும் சகித்திருக்கும் காலத்துடன் ஒப்பிட அது வெகு அதிக காலம். அவர் இறக்கும் வரை தொடர்ந்து கடவுளுடன் நடந்தார்.—ஆதியாகமம் 5:23, 24, NW.
ஏனோக்கைப் போலவே பிரசங்கிக்கும்படி நம்மிடமும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 24:14) வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதோடு, உற்றார் உறவினர்கள், தொழில் ரீதியாக அறிமுகமானவர்கள், சக மாணவர்கள் என எல்லாரிடமும் நற்செய்தியை அறிவிக்க முயலுகிறோம். ஆனால் சில சமயங்களில் தைரியமாக சாட்சி கொடுக்க தயங்கலாம். நீங்களும் அப்படித்தானா? கவலைப்படாதீர்கள். ஆரம்ப கால கிறிஸ்தவர்களைப் பின்பற்றுங்கள், தைரியத்தைத் தரும்படி கடவுளிடம் ஜெபியுங்கள். (அப்போஸ்தலர் 4:29, 30) நீங்கள் கடவுளுடன் நடக்கும்வரை உண்மையில் நீங்கள் தன்னந்தனியாகவே இல்லை என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்.
உணவளிக்கும் ஒரு விதவை
பைபிளில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு விதவை எளிய உணவைத் தயாரித்து கொடுத்ததற்காக இரண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! அவள் ஓர் இஸ்ரவேல பெண் அல்ல, ஆனால் அவள் பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில் சாறிபாத் என்ற நகரத்தில் வாழ்ந்த புறதேசத்தாள். நீண்ட காலம் வாட்டி வதைத்த வறட்சியும் பஞ்சமும் முடிவடையவிருந்த அந்த சமயத்தில் இந்த விதவையிடமிருந்த உணவுப் பொருட்கள் கிட்டத்தட்ட தீர்ந்தே போய்விட்டன. அவளுக்கும் அவளுடைய மகனுக்கும் கடைசியாக ஒருவேளை சாப்பாட்டுக்கு ஒருபிடி மாவும், துளி எண்ணெய்யுமே மிச்சம் இருந்தன.
இந்த சூழ்நிலையில் அந்த உணவையும் பங்கு போட்டுக்கொள்ள ஒரு விருந்தாளி வந்து சேர்ந்தார். அவர்தான் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எலியா. அவள் கைவசம் இருந்த உணவு கைப்பிடி மட்டுமே; அது அவளுக்கும் அவளுடைய மகனுக்குமே போதாது, அப்படியிருக்க விருந்தாளிக்குக் கொடுக்க அவள் எங்கு போவாள்! ஆனால் அவள் அந்த உணவை தன்னுடன் பகிர்ந்துகொண்டால் இனி அவளும் அவளுடைய மகனும் பட்டினியில் வாட வேண்டியிருக்காது என்று கடவுளுடைய வார்த்தையின் பேரில் எலியா உறுதியளித்தார். புறதேசத்தாளாக இருந்த தன்னை இஸ்ரவேலின் தேவன் கவனிப்பார் என்பதை நம்புவதற்கு அந்த விதவைக்கு விசுவாசம் தேவைப்பட்டது. ஆனால் அவள் எலியாவின் வார்த்தைகளை நம்பினாள், யெகோவா அவளை ஆசீர்வதித்தார். “கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை.” பஞ்ச காலம் முடியும் வரை அந்தப் பெண்ணும் அவளுடைய மகனும் சாப்பிட உணவிருந்தது.—1 இராஜாக்கள் 17:8-16.
மேலும் இன்னொரு ஆசீர்வாதத்தையும் அந்த விதவை பெறவிருந்தாள். அந்த அற்புதம் நிகழ்ந்து கொஞ்ச காலத்திற்குப் பின் அவளுடைய உயிருக்குயிரான மகன் வியாதிப்பட்டு, இறந்துபோனான். அவள்மீது எலியா இரக்கப்பட்டார், அவளுடைய மகனை உயிரோடு எழுப்பும்படி யெகோவாவிடம் கெஞ்சி மன்றாடினார். (1 இராஜாக்கள் 17:17-24) அவர் வேண்டிக்கொண்டது நிறைவேற நிகரற்ற ஓர் அற்புதச் செயல் நிகழ வேண்டியிருந்தது. அதற்கு முன்பு யாரும் உயிர்த்தெழுப்பப்பட்டதாக சரித்திரமில்லை! அந்த புறதேசத்தாளான விதவைக்கு யெகோவா மீண்டும் இரக்கம் காட்டினாரா? காட்டினார். எலியா அந்தப் பையனை உயிரோடு எழுப்ப யெகோவா அவருக்கு சக்தி அளித்தார். ஆசீர்வாதத்தைப் பெற்ற இந்தப் பெண்ணைப் பற்றி இயேசு பின்னொரு முறை குறிப்பிட்டார்: “இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டா[ர்].”—லூக்கா 4:25, 26.
தொழில் ரீதியாக முன்னேற்றம் கண்ட நாடுகளிலும் இன்று பொருளாதார நிலை ஸ்திரமானதாக இல்லாமல் ஆட்டம் காண்கிறது. சில பெரிய நிறுவனங்கள் காலம்காலமாக உண்மையுடன் வேலை செய்த ஊழியர்களை வேலையிலிருந்து விலக்கியிருக்கின்றன. வேலையில்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில் ஒரு கிறிஸ்தவர் அதிக நேரம் வேலை செய்ய தூண்டப்படலாம்; அப்படி செய்தால் அந்த நிறுவனம் தொடர்ந்து தன்னை வேலையில் வைத்துக்கொள்ளும் என நினைக்கலாம். இப்படி பாடுபடுகையில் கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போவதற்கு, வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு, அல்லது உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் தன் குடும்பத்தாருக்குத் தேவையானதைக் கவனிப்பதற்கு நேரம் கிடைப்பது கஷ்டமாக இருக்கலாம். எனினும், எக்காரணத்தைக் கொண்டும் அந்த வேலையை இழந்துவிடக் கூடாது என்பதில் அவர் விடாப்பிடியாக இருக்கலாம்.
இந்தளவுக்குப் பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் கிறிஸ்தவர் கவலைப்படுவது நியாயம்தான். ஏனெனில் இப்போதெல்லாம் வேலை கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாக உள்ளது. நம்மில் பெரும்பாலோர் கோடீஸ்வரராக ஆசைப்படுவதில்லை, ஆனால் சாறிபாத்திலிருந்த விதவையைப் போல வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பெற்றிருக்க ஆசைப்படுகிறோம். எனினும், “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என கடவுள் சொன்னதை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். ‘[யெகோவா] எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்’ என நாம் நம்பிக்கையுடன் சொல்லலாம். (எபிரெயர் 13:5, 6) அந்த வாக்குறுதியில் பவுல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார், யெகோவா எப்போதும் அவரைக் காத்து வந்தார். நாமும் அவரைவிட்டு விலகாதிருந்தால் அவர் நம்மையும் அதே போல் காத்தருள்வார்.
மோசே, கிதியோன், தாவீது போன்ற ஆவிக்குரிய நபர்களைப் போல நம்மால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என ஆதங்கப்படலாம். ஆனால் அவர்களைப் போல நம்மால் விசுவாசமுள்ளவர்களாக இருக்க முடியும். ஆபேல், ஏனோக்கு, சாறிபாத் ஊர் விதவை ஆகியோர் தங்கள் விசுவாசத்தை எளிய செயல்களில் வெளிக்காட்டியதை நினைவில் வைக்கலாம். சின்னஞ்சிறிய செயலாக இருந்தாலும் விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு செயலையும் யெகோவா கவனிக்கிறார். தோழர்கள் தரும் போதைப் பொருட்களை கடவுள் பயமுள்ள மாணவன் வாங்க மறுக்கிறான், வேலை செய்யும் இடத்தில் ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ள கிடைக்கும் “அழைப்பை” ஒரு கிறிஸ்தவர் புறக்கணிக்கிறார், சோர்வும் உடல்நல குறைவும் வாட்டி வதைக்கையில் வயதான கிறிஸ்தவர் உண்மையுடன் சபைக் கூட்டங்களுக்கு வருகிறார்; இதையெல்லாம் யெகோவா பார்க்கிறார். பார்த்து சந்தோஷப்படுகிறார்!—நீதிமொழிகள் 27:11.
மற்றவர்களுடைய செயல்களைக் கவனிக்கிறீர்களா?
நாம் என்ன செய்கிறோம் என்பதை யெகோவா கவனிக்கிறார். ஆகவே கடவுளைப் போலவே மற்றவர்களின் முயற்சிகளை கவனிப்பதற்கு நாமும் கவனமாக இருக்க வேண்டும். (எபேசியர் 5:1) சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள, வெளி ஊழியத்தில் ஈடுபட, தங்கள் அன்றாட காரியங்களைச் செய்வதற்கும்கூட எப்படியெல்லாம் சக கிறிஸ்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை ஏன் நன்கு தெரிந்துகொள்ளக்கூடாது?
பிறகு, அவர்கள் படும் பிரயாசங்களையெல்லாம் நீங்கள் மனதார போற்றுகிறீர்கள் என்பதை யெகோவாவை வணங்கும் உங்கள் சக வணக்கத்தாருக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அவற்றைக் கவனித்திருப்பது தெரிய வருகையில் அவர்கள் உள்ளூர குதூகலிப்பார்கள், யெகோவாவும் தங்களை கவனிக்கிறார் என்பதை நீங்கள் காட்டும் கரிசனை அவர்களுக்கு மேலும் உறுதிப்படுத்தும்.