சுவாரஸ்யமான ஒரு கப்பற்பதிவு
ரிச்சர்டு ஈ. பர்டு என்ற ஆய்வுப் பயணி 1928 முதல் 1956 வரை ஐந்து முறை அண்டார்க்டிக் பயணங்களை மேற்கொண்டார். டைரி எழுதுவதன் மூலமும் பயணப் பதிவேடுகளில் (logbooks) துல்லியமான விவரங்களை பதிவு செய்வதன் மூலமும், அவரும் அவருடைய குழுவினரும் காற்றடிக்கும் திசைகளைத் தீர்மானித்தனர், வரைபடங்களைத் தயாரித்தனர், அன்டார்க்டிக் கண்டத்தைப் பற்றி கணிசமான தகவல்களைத் திரட்டினர்.
பயணப் பதிவேட்டை வைத்திருப்பதன் அவசியத்தை பர்டின் ஆய்வுப் பயணங்கள் காட்டுகின்றன. ஒரு பயணப் பதிவேட்டில் கப்பல் பயணத்தை அல்லது விமான பயணத்தைப் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டிருக்கும். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி என்ன நடந்தது என்பதை பிற்பாடு அலசிப் பார்க்கலாம், அல்லது எதிர்கால பயணங்களுக்குப் பயன்படும் தகவல்களை ஆராய்ந்து அறியலாம்.
நோவா காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விவரப் பதிவை பைபிள் தருகிறது. உலகளாவிய அந்த ஜலப்பிரளயம் ஓர் ஆண்டுக்கும் மேல் நீடித்தது. அந்த ஜலப்பிரளயத்திற்கு தயாராவதற்காக, நோவாவும் அவருடைய மனைவியும் அவர்களுடைய மூன்று மகன்களும் அவர்களுடைய மனைவிமார்களும் 50 அல்லது 60 வருடங்கள் செலவழித்து ஒரு பேழையைக் கட்டினார்கள். அந்தப் பேழை சுமார் 14,00,000 கன அடி கொள்ளளவு கொண்ட பிரமாண்டமான ஒரு கப்பல். அது என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டது? ஜலப்பிரளயத்திலிருந்து சில மனிதர்களையும் விலங்கினங்களையும் காப்பாற்றுவதற்காக கட்டப்பட்டது.—ஆதியாகமம் 7:1-3.
ஆதியாகமம் என்ற பைபிள் புத்தகத்தில், ஜலப்பிரளயத்தின் ஆரம்பம் முதல் நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் அந்தப் பேழையிலிருந்து இறங்கி மண்ணில் கால் பதித்தது வரை நடந்த சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் உள்ளன; இந்தப் பதிவை நோவாவின் கப்பற்பதிவு என அழைக்கலாம். இன்று நமக்கு முக்கியத்துவமுடைய விவரங்கள் ஏதாவது அதில் இருக்கின்றனவா?