தானதர்மத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறதா?
செப்டம்பர் 11, 2001-ல் நியூ யார்க் நகரத்திலும் வாஷிங்டன் டி.சி.-யிலும் நடந்த பயங்கர தாக்குதல்களுக்குப் பிறகு, துன்பப் புயலில் சிக்கித் தவித்தோருக்கு மக்கள் நீட்டிய உதவிக்கரம் மலைக்க வைத்தது. பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பங்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு வந்த 2.7 பில்லியன் டாலர் நன்கொடையைக் கண்டு தர்ம ஸ்தாபனங்களே மூக்கில் விரலை வைத்தன. அழிவின் விஸ்தாரத்தைக் கண்டு அதிர்ச்சியுற்ற எங்குமுள்ள மக்கள் அன்புக்கரம் நீட்டி ஆதரிக்கத் துடித்தனர்.
ஆனால் பொது மக்கள் சிலருடைய மனோபாவம் சீக்கிரத்தில் மாறியது, ஏனென்றால் பிரபல அறக்கொடை நிறுவனங்கள் நிதியை துஷ்பிரயோகம் செய்ததைப் பற்றிய குற்றச்சாட்டுகள் செய்திகளில் அடிபட ஆரம்பித்தன. ஒரு பெரிய நிறுவனத்திற்கு கிடைத்த 546 மில்லியன் டாலரில் கிட்டத்தட்ட பாதியை அப்படியே சுருட்டிக்கொண்டு வேறு காரியங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டதாக செய்தி வந்தபோது கோபம் கடலென பொங்கி வந்தது. பிற்பாடு அந்த நிறுவனம் அதன் திட்டத்தை மாற்றிக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்டபோதிலும், பத்திரிகை எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்த மனமாற்றம் [அந்த நிறுவனத்தின்மீது முன்பு மக்களுக்கு இருந்த] நம்பிக்கையை மறுபடியும் தூக்கி நிறுத்த முடியாதென்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.” உங்களைப் பற்றியென்ன? தர்ம ஸ்தாபனங்கள் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும் சமீப காலத்தில் ஆட்டங்கண்டுவிட்டதா?
பயனுள்ளதா பயனற்றதா?
தர்ம ஸ்தாபனங்களுக்கு வாரி வழங்குவது பாராட்டத்தக்க விஷயம் என பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் எல்லாரும் அப்படி கருதுவதில்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கில கட்டுரையாளர் சாம்யல் ஜான்சன் இவ்வாறு எழுதினார்: “பணத்தை வெறுமனே அன்பளிப்பாக கொடுப்பதைவிட, உழைப்புக்கு ஊதியம் கொடுக்கும்போதுதான் நீங்கள் உண்மையிலேயே நல்ல காரியம் செய்கிறீர்கள் என்ற நம்பிக்கை உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது.” அவரைப் போலவே இன்றைக்கு சிலர் தர்ம ஸ்தாபனங்களுக்கு கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். தர்ம ஸ்தாபனங்கள் நன்கொடைகளை மோசடி செய்வதை அல்லது துஷ்பிரயோகம் செய்வதைப் பற்றிய அறிக்கைகள் பொது மக்களுடைய நம்பிக்கையை குலைத்து விடுகின்றன. சமீபத்தில் வந்த இரு உதாரணங்களைக் கவனியுங்கள்.
சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள அறக்கட்டளை நிறுவன இயக்குநர் ஒருவர் தனக்கு ‘காஸ்மட்டிக் சர்ஜரி’ செய்துகொண்டதற்குரிய பில்லையும், வாரத்திற்கு 500 டாலர் வீதம் இரண்டு ஆண்டுகளுக்குரிய ரெஸ்டாரன்ட் பில்லையும் தன்னுடைய நிர்வாகத்திற்கு அனுப்பியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். பிரிட்டனில் பெரிய டெலிவிஷன் நன்கொடை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தவர்கள் தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார்கள். ஏனென்றால் ருமேனியாவில் புதிய அநாதை இல்லங்கள் கட்டுவதற்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையாக அனுப்பப்பட்டது; அந்தப் பணத்தில் இதுவரை 12 இல்லங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன, அதுவும் தரக்குறைவான கட்டடங்கள். ஆயிரக்கணக்கான டாலர் கணக்கிலேயே வரவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிக்கைகள், எவ்வளவு கொடுக்கிறோம், யாருக்கு கொடுக்கிறோம் என்பதைக் குறித்து அதிக உஷாராக இருக்கும்படி சில நன்கொடைதாரர்களைத் தூண்டியிருப்பது நியாயம்தான்.
கொடுப்பதா வேண்டாமா?
இருந்தாலும், சில நபர்களுடைய அல்லது நிறுவனங்களுடைய செயல்களால் பிறர் மீது நமக்கு இருக்கும் அக்கறையையும் இரக்கத்தையும் குழிதோண்டி புதைப்பது வருந்தத்தக்கது. ‘திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிப்பது . . . மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது’ என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:27) ஆம், ஏழை எளியோருக்காகவும் நலிவடைந்தோருக்காகவும் ஏதாவது செய்வதே கிறிஸ்தவத்தின் இன்றியமையாத அம்சம்.
ஆனால், ‘நான் தொடர்ந்து அறக்கொடை நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுக்க வேண்டுமா, அல்லது யாருக்காவது தனிப்பட்ட விதத்தில் பரிசுகள் கொடுத்து உதவி செய்தாலே போதுமா?’ என நீங்கள் யோசிக்கலாம். எத்தகைய கொடுத்தலை கடவுள் எதிர்ப்பார்க்கிறார்? இந்தக் கேள்விகளை அடுத்துவரும் கட்டுரை அலசி ஆராயும்.