நன்மையைச் சூழத் தீமை
இன்றைய உலகில், வாரி வழங்கும் மனமுள்ளோரைப் பார்ப்பது அரிதாகத் தோன்றலாம். என்றாலும், தங்களை ‘வித்தியாசப்படுத்திக் காட்ட’ விரும்புகிறவர்களும் சிலர் இருக்கிறார்கள்—ஏதாவது ஒரு வழியில் பிறருக்கு நன்மை செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் ஒவ்வொரு வருடமும், தர்ம ஸ்தாபனங்களுக்கு எண்ணற்றோர் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி இறைக்கிறார்கள். உதாரணமாக, பிரிட்டனில் 2002-ம் ஆண்டின்போது தர்ம ஸ்தாபனங்களுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை 58,500 கோடி ரூபாயை எட்டியது. 1999 முதற்கொண்டு, தாராள குணமுள்ள பத்து பேர், ஏழை எளியோருக்காக 1,71,000 கோடிக்கும் மேல் பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள் அல்லது கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
குறைந்த வருவாயுள்ள குடும்பங்களின் மருத்துவ செலவுகளைக் கவனிப்பது, ஒற்றைப் பெற்றோரின் பிள்ளைகளைப் படிக்க வைப்பது, வளரும் நாடுகளில் நோய்த் தடுப்பு திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது, பிள்ளைகளுக்கு அவர்களுடைய முதல் பாடப் புத்தகத்தை அளிப்பது, ஏழை நாடுகளிலுள்ள விவசாயிகளுக்கு பண்ணை வளர்ப்பு பிராணிகளை அளிப்பது, இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பது போன்ற சில நன்மையான காரியங்களை தர்ம ஸ்தாபனங்களில் பணிபுரிவோர் செய்து கொடுக்கிறார்கள்.
பிறருக்கு நன்மை செய்வதற்கான திறன் மனிதர்களுக்கு இருப்பதை மேற்கூறப்பட்ட விஷயங்கள் காட்டுகின்றன. என்றாலும், வருத்தகரமாக, வாய்விட்டுச் சொல்லமுடியாத தீய காரியங்களை விளைவிக்கிற மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தீமை அதிகரிக்கிறது
இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு இனப் படுகொலைகளும் அரசியல் படுகொலைகளும் ஏறக்குறைய 50 முறை சம்பவித்திருக்கின்றன. “இச்சம்பவங்களால் குறைந்தது 1.2 கோடி வீரர்களும் சுமார் 2.2 கோடி பொதுமக்களும் உயிரிழந்திருக்கிறார்கள்; 1945-க்குப் பின் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடந்த போர்களில் பலியானோரின் எண்ணிக்கையைவிட இந்த எண்ணிக்கை அதிகம்” என அமெரிக்கன் பொலிட்டிக்கல் சயன்ஸ் ரிவ்யூ பத்திரிகை குறிப்பிடுகிறது.
கம்போடியாவில், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசியல் காரணங்களுக்காக 22 லட்சம் பேர்வரை கொலை செய்யப்பட்டார்கள். ருவாண்டாவில் வெடித்த இனப் பகைமை 8,00,000-க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், மற்றும் பிள்ளைகளின் சாவுக்கு அடிகோலியது. போஸ்னியாவில் மதவாதிகளாலும் அரசியல்வாதிகளாலும் தூண்டிவிடப்பட்ட கொலைகளால் 2,00,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தார்கள்.
மிகச் சமீபத்தில் நடந்த தீய காரியங்களைக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் 2004-ல் இவ்வாறு கூறினார்: “ஈராக்கில் மக்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டார்கள்; அதோடு நிவாரணப் பணியாளர்களும், பத்திரிகை நிருபர்களும், சாதாரண ஜனங்களும் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அதேசமயத்தில் ஈராக் கைதிகள் மிக இழிவாக நடத்தப்பட்டார்கள். டார்ஃபர் நகரவாசிகள் அனைவருமே ஓடிப்போக வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்; அவர்களுடைய வீடுகள் நாசமாக்கப்பட்டன, பெண்கள் திட்டமிட்டு கற்பழிக்கப்பட்டார்கள். வடக்கு உகாண்டாவில் பிள்ளைகள் உருச்சிதைக்கப்பட்டார்கள், சகிக்க முடியாத கொடூரக் காரியங்களைச் செய்யும்படி பலவந்தப்படுத்தப்பட்டார்கள். அதுமட்டுமா, பெஸ்லான் என்ற இடத்தில், பிள்ளைகள் பிணைக்கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்டு மூர்க்கத்தனமாகக் கொல்லப்பட்டார்கள், இதையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம்.”
வளர்ந்த நாடுகள் எனச் சொல்லப்படும் நாடுகளில்கூட பகைமையினால் ஏற்படுகிற குற்றச்செயல்கள் அதிகரித்துவருவது போல் தெரிகிறது. உதாரணமாக, பிரிட்டனில் “கடந்த பத்து ஆண்டுகளில் இனப் பாகுபாட்டின் காரணமாகத் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பதினோறு மடங்கு அதிகரித்திருக்கிறது” என இன்டிபென்டன்ட் நியூஸ் 2004-ல் அறிவித்தது.
ஏராளமான நன்மைகளைச் செய்வதற்குத் திறன்படைத்த மனிதர்கள் ஏன் இப்படிப்பட்ட தீய காரியங்களைச் செய்கிறார்கள்? தீமையே இல்லாத காலம் வருமா? மனதைக் குழப்பும் இக்கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்களை பைபிள் தருகிறது. அடுத்த கட்டுரையில் அவற்றைப் பார்க்கலாம்.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
அட்டை: Mark Edwards/Still Pictures/Peter Arnold, Inc.