மனநிறைவோடு இருப்பதன் இரகசியத்தை தெரிந்துகொள்ளுதல்
பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தி எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் [“மனநிறைவோடிருக்க,” NW] கற்றுக்கொண்டேன். . . . எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.”—பிலிப்பியர் 4:11, 12.
பவுலுடைய மனநிறைவின் இரகசியம் என்ன? நம்முடைய நாளில் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே போகிற விலைவாசியையும் நிலையற்ற பொருளாதாரத்தையும் பார்க்கும்போது, மெய் கிறிஸ்தவர்கள் மனநிறைவுடன் இருக்க கற்றுக்கொள்வது நிச்சயமாகவே பயனுள்ளது; அப்போதுதான், கடவுளுக்கு செய்யும் சேவையின் மீது அவர்களால் மனதை ஒருமுகப்படுத்த முடியும்.
இதே கடிதத்தில் சற்று முன்பு, கிறிஸ்தவராக மாறிய சமயம்வரை தான் சீரும் சிறப்போடும் வாழ்ந்து வந்ததைப் பற்றி பவுல் விவரித்தார். “மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம். நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ் சாட்டப்படாதவன்” என்று கூறினார். (பிலிப்பியர் 3:4-6) அதோடு, பவுல் வைராக்கியமுள்ள ஒரு யூதரானபடியால், எருசலேமிலிருந்த பிரதான ஆசாரியர்களிடமிருந்து ஒரு பொறுப்பைப் பெற்றிருந்தார், அதற்கு அவர்களுடைய ஆதரவையும் பெற்றிருந்தார். இவையனைத்தும், யூத சமுதாயத்தில்—அரசியலிலும் மதத்திலும் சந்தேகமின்றி பொருளாதாரத்திலும்—அவருக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் பெற்றுத் தந்தன.—அப்போஸ்தலர் 26:10, 12.
ஆனால் பவுல் வைராக்கியமுள்ள கிறிஸ்தவ ஊழியரானபோதோ நிலைமைகள் மாறிவிட்டன. நற்செய்தியின் நிமித்தம் தன்னுடைய சிறப்பான வாழ்க்கைப் பாணியையும் முன்பு முக்கியமானதாக கருதப்பட்ட அனைத்தையும் மனப்பூர்வமாய் விட்டுவிட்டார். (பிலிப்பியர் 3:7, 8, 11) ஆனால் அதன் பிறகு அவர் எப்படி தன்னை கவனித்துக் கொண்டார்? ஊழியராக சேவை செய்ததற்கு ஏதாவது சம்பளம் கிடைத்ததா? தனிப்பட்ட தேவைகளை எப்படி பூர்த்தி செய்துகொண்டார்?
பவுல் தன்னுடைய ஊழியத்தை எந்தவித சம்பளமுமின்றி செய்தார். ஊழியம் செய்கையில் மற்றவர்களுக்கு பாரமாயிராதபடிக்கு, கொரிந்துவில் இருந்தபோது ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாளுடன் சேர்ந்து கூடாரத் தொழிலில் ஈடுபட்டார். அதோடு தன்னுடைய செலவுகளுக்காக பிற காரியங்களையும் அவர் செய்தார். (அப்போஸ்தலர் 18:1-3; 1 தெசலோனிக்கேயர் 2:9; 2 தெசலோனிக்கேயர் 3:8-10) மூன்று பெரும் மிஷனரி பிரயாணங்களை பவுல் மேற்கொண்டார், தேவை ஏற்பட்டபோது சபைகளையும் சந்தித்தார். கடவுளுடைய சேவையில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வந்ததால் அவரிடம் பொருளுடைமைகள் அற்பசொற்பமே இருந்தன. பொதுவாக, சகோதரர்களே அவருடைய தேவைகளை கவனித்துக் கொண்டார்கள். ஆனால் சில சமயங்களில், சூழ்நிலைமைகள் மோசமாக இருந்ததால், பசியிலும் பட்டினியிலும் வாடினார். (2 கொரிந்தியர் 11:27; பிலிப்பியர் 4:15-18) அப்படியிருந்தபோதிலும், தன்னுடைய நிலைமையைப் பற்றி அவர் ஒருபோதும் முணுமுணுக்கவுமில்லை, பிறருடைய வசதிவாய்ப்புகளைப் பார்த்து ஆசைப்படவுமில்லை. சக கிறிஸ்தவர்களுடைய நன்மைக்காக மனப்பூர்வமாயும் மகிழ்ச்சியாயும் கடினமாய் வேலை செய்தார். சொல்லப்போனால், “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்ற இயேசுவின் பிரபலமான வார்த்தைகளை மேற்கோள் காட்டியதே பவுல்தான். நம் அனைவருக்கும் எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி!—அப்போஸ்தலர் 20:33-35.
மனநிறைவு என்றால் என்ன?
பவுலுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்த முக்கியமான அம்சம் மனநிறைவே. ஆனால் மனநிறைவு என்றால் என்ன? சுருங்கக் கூறினால், அடிப்படை தேவைகளுடன் திருப்தியாக இருப்பதாகும். இதன் சம்பந்தமாக பவுல் தன்னுடைய ஊழியத் தோழனாகிய தீமோத்தேயுவிடம் இவ்வாறு கூறினார்: “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”—1 தீமோத்தேயு 6:6-8.
மனநிறைவை தேவபக்தியுடன் பவுல் இணைத்துப் பேசியதை கவனியுங்கள். உண்மையான மகிழ்ச்சி தேவபக்தியால்தான் வருகிறது, அதாவது கடவுளுக்கு செய்யும் சேவைக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதில்தான் வருகிறது, பொருளுடைமைகளினாலோ செல்வத்தினாலோ அல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார். தேவபக்தியை நாடித் தொடர அவருக்கு உதவிய பொருட்களே ‘உணவும் உடையும்.’ ஆகவே பவுல் மனநிறைவுடன் இருந்ததன் இரகசியம், எப்படிப்பட்ட சூழ்நிலைமையிலும் யெகோவாவை சார்ந்திருந்ததே.
இன்று பெரும்பாலோர் அதிகக் கவலையிலும் சோகத்திலும் இருக்கிறார்கள். ஏனென்றால் அந்த இரகசியம் அவர்களுக்குத் தெரியாது, அல்லது அதை அசட்டை செய்துவிடுகிறார்கள். மனநிறைவை வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக, பணத்தின் மீதும் அதைக் கொண்டு வாங்கக்கூடிய பொருட்களின் மீதுமே தங்களுடைய நம்பிக்கையை வைக்கிறார்கள். லேட்டஸ்ட்டான, பேன்ஸியான தயாரிப்புகளையும் சாதனங்களையும் வைத்திருந்தால் தவிர மகிழ்ச்சியாக இருக்க முடியாது, ஆகவே உடனடியாக வாங்க வேண்டும் என விளம்பர உலகமும் மீடியாவும் மக்களை நம்ப வைக்கிறது. அதனால், பணம் பொருளிலுள்ள நாட்டம் அநேகரை அதலபாதாளத்திற்குள் கொண்டுபோய் விடுகிறது. மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெறுவதற்குப் பதிலாக, “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.
இந்த இரகசியத்தை அறிந்துகொண்ட மக்கள்
இந்தக் காலத்தில் தேவபக்தியுடனும் மனநிறைவுடனும் வாழ்ந்து மகிழ்ச்சியையும் திருப்தியையும் காண்பது உண்மையிலேயே சாத்தியமா? ஆம், சாத்தியமே. சொல்லப்போனால், இன்று லட்சக்கணக்கானோர் அதைத்தான் காண்கிறார்கள். போதும் என்ற மனதுடன் மகிழ்ச்சியாக இருப்பதன் இரகசியத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்களே யெகோவாவின் சாட்சிகள், அவர்கள் கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து அவருடைய சித்தத்தைச் செய்கிறார்கள், எங்குமுள்ள மக்களுக்கு அவருடைய நோக்கத்தை சொல்லிக் கொடுக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்காக பயிற்றுவிக்கப்பட்டு, பழக்கமில்லாத நாடுகளுக்கு மிஷனரிகளாக அனுப்பப்படுவதற்கு முன்வந்திருப்பவர்களை பற்றி யோசித்துப் பாருங்கள். (மத்தேயு 24:14) அவர்கள் அனுப்பப்படும் நாடுகள் பெரும்பாலும் அவர்களுக்குப் பழக்கப்பட்ட வாழ்க்கை சூழல் இல்லாத, பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையாத நாடுகளே. உதாரணமாக, 1947-ன் ஆரம்பத்தில் ஓர் ஆசிய நாட்டிற்கு மிஷனரிகள் வந்துசேர்ந்தபோது போரின் பாதிப்புகள் இன்னும் இருந்தன, அநேக வீடுகளில் மின்சார வசதியே இருக்கவில்லை. பல நாடுகளில் வாஷிங் மெஷின்களும் இல்லை; கல்லில் அல்லது நதியிலுள்ள பாறைகளில் வைத்துத்தான் துணிமணிகள் ஒவ்வொன்றாக துவைத்து வெளுக்கப்பட்டன. ஆனால் மிஷனரிகள் மக்களுக்கு பைபிள் சத்தியத்தை கற்றுக் கொடுப்பதற்காக சென்றிருந்ததால் அந்த சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்கள்.
மிஷனரிகளாக இல்லாத மற்றவர்களோ முழுநேர ஊழியம் செய்கிறார்கள் அல்லது நற்செய்தி இன்னும் சென்றெட்டாத இடங்களுக்குக் குடிமாறி சென்றிருக்கிறார்கள். ஆடியூல்போ என்பவர் மெக்சிகோவின் பல பாகங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர ஊழியராக சேவை செய்திருக்கிறார். அவர் சொல்கிறார்: “அப்போஸ்தலன் பவுலைப் போல, நானும் என்னுடைய மனைவியும் எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ப எங்களை மாற்றிக்கொள்வதற்கு கற்றுக்கொண்டோம். உதாரணமாக, நாங்கள் சந்தித்த சபைகளில் ஒன்றுக்கு அருகே எந்தவொரு பட்டணமோ மார்க்கெட்டோ இருக்கவில்லை. அங்கிருந்த சகோதரர்கள் ஒவ்வொரு வேளையும், கொஞ்சம் பன்றி கொழுப்பில் உப்பு போட்டு ஒரேவொரு டார்ட்டிலா ரொட்டியோடு சேர்த்து சாப்பிடுவார்கள், பிறகு ஒரு கப் காபி குடித்து திருப்தியாகிவிடுவார்கள். ஒரு நாளைக்கு மூன்றே ரொட்டிகள்தான் அவர்கள் சாப்பாடு. ஆகவே நாங்களும் அந்த சகோதரர்களைப் போல வாழ கற்றுக்கொண்டோம். முழுநேரமாக யெகோவாவை சேவித்து வந்த 54 வருடங்களில் அநேக அனுபவங்களை நான் மகிழ்ந்து அனுபவித்திருக்கிறேன்.”
தானும் தன்னுடைய குடும்பமும் எப்படி கஷ்டமான சூழ்நிலைமைகளோடு ஒத்துப்போக வேண்டியிருந்தது என்பதை ஃப்ளோரன்டினோ என்பவர் நினைவுகூருகிறார். தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை திரும்பிப் பார்த்து அவர் இவ்வாறு கூறுகிறார்: “என்னுடைய தகப்பனார் செல்வச் செழிப்போடு வாழ்ந்த ஒரு வியாபாரி. அவருக்கு நிலபுலன்கள் நிறைய இருந்தன. நாங்கள் வைத்திருந்த மளிகைக் கடையில் இருந்த கல்லாப்பெட்டி இன்னும் என் நினைவில் இருக்கிறது. சுமார் 50 சென்டிமீட்டர் அகலமும் 20 சென்டிமீட்டர் குழிவும் கொண்ட ஒரு டிராயர் இருந்தது, அதில் நான்கு அறைகள் இருந்தன. அந்த நாளைக்கு வரும் வருமானத்தை எல்லாம் நாங்கள் அதில் போட்டு வைப்போம். நாளின் முடிவில் அதில் எப்பொழுதும் பணமும் காசும் நிறைஞ்சு வழியும்.
“ஆனால் திடீரென பண நெருக்கடி வந்து தொட்டுக்கொள்ள துடைத்துக்கொள்ள என்ற நிலைக்கு வந்துவிட்டோம். எங்களுடைய வீட்டைத் தவிர எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். அதோடு, என்னுடைய அண்ணனுக்கு விபத்து ஏற்பட்டு இரண்டு கால்களும் விளங்காமல் போய்விட்டது. எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. கொஞ்ச காலம் பழங்களையும் இறைச்சியையும் விற்றுவந்தேன். பருத்தி, திராட்சைப்பழம், குதிரை மசால் போன்றவற்றை அறுவடை செய்து வந்தேன், வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையும் செய்து வந்தேன். என்னை சகலகலா வல்லவன் என்றுகூட சிலர் அழைத்தார்கள். நம்மிடம் சத்தியம் இருக்கிறது, ஒருசிலரே வைத்திருக்கும் ஆவிக்குரிய ஆஸ்தி நம்மிடம் இருக்கிறது என்று சொல்லி அம்மா எங்களை அடிக்கடி ஆறுதல்படுத்துவார்கள். ஆகவே அதிகமிருந்தாலும் கொஞ்சமிருந்தாலும் ஒன்றுமே இல்லாவிட்டாலும் அந்நிலையில் வாழ கற்றுக்கொண்டேன். இப்பொழுது சுமார் 25 ஆண்டுகளாக யெகோவாவை சேவித்து வருகிறேன்; வாழ்க்கையில் மிகச் சிறந்த பாதையை—யெகோவாவை முழுநேரம் சேவிப்பதை—தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்றறிவதால் கிடைக்கும் மகிழ்ச்சியை தினம்தினம் அனுபவிக்கிறேன் என உறுதியாகச் சொல்ல முடியும்.”
‘இந்த உலகத்தின் காட்சி மாறிக் கொண்டிருக்கிறது’ (NW) என பைபிள் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. அதன் காரணமாகவே, அது மேலுமாக இவ்வாறு உந்துவிக்கிறது: “சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள் போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள் போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் [“முழுமையாக,” NW] அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும்.”—1 கொரிந்தியர் 7:29-31.
ஆகவே, உங்களுடைய வாழ்க்கை முறைக்கு கூர்ந்து கவனம் செலுத்த இதுவே காலம். அதிக வசதிவாய்ப்பு இல்லாத சூழலில் நீங்கள் வாழ்ந்து வந்தால், வெறுப்படைவதையும், மனக்கசப்படைவதையும் பொறாமைப்படுவதையும் குறித்து கவனமாயிருங்கள். மறுபட்சத்தில், உங்களிடம் எவ்வளவு சொத்துசுகங்கள் இருந்தாலும், அது உங்களை ஆட்டிப்படைப்பதற்கு அனுமதிக்காமல் அவற்றிற்குரிய இடத்தில் அவற்றை வைத்துவிடுங்கள். அப்போஸ்தலன் பவுல் புத்திமதி கூறியபடி, ‘நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமல், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள்.’ அப்படி செய்தால், மனநிறைவோடு இருப்பதன் இரகசியத்தை கற்றிருக்கிறீர்கள் என நீங்களும் சொல்ல முடியும்.—1 தீமோத்தேயு 6:17-19.
[பக்கம் 9-ன் படம்]
மற்றவர்களுக்கு பாரமாக இல்லாமல் பவுல் தன் சொந்த கைகளால் உழைத்தார்
[பக்கம் 10-ன் படங்கள்]
‘மனநிறைவோடுகூடிய தேவபக்தியுள்ள’ வாழ்க்கையில் ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சி காண்கின்றனர்