“பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்”
“பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் . . . யெகோவா உங்களோடு இருப்பார்.” —2 நாளாகமம் 20:17, NW.
1. பயங்கரவாதம் மக்களை எப்படி பாதித்திருக்கிறது, அவர்களுடைய பயம் ஏன் நியாயமானது?
பயங்கரவாதம்! இந்த வார்த்தையே நம்மை குலை நடுங்க வைக்கிறது; பாதுகாப்பற்ற உணர்ச்சியை உண்டாக்குகிறது; நம் இயலாமையை உணர்த்துகிறது. திகிலும், துக்கமும், ஆத்திரமும் கலந்த உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதோடு, இன்னும் பல்லாண்டுகளுக்கு மனிதகுலத்தையே ஆட்டிப்படைக்கும் என அநேகர் பயப்படும் ஒன்றை அவ்வார்த்தை விவரிக்கிறது. பயங்கரவாத ‘அரக்கனின்’ பல்வேறு கோர முகங்களை அழித்துப்போட சில நாடுகள் வருடக்கணக்காக போராடி வந்திருந்தும் முழு வெற்றி கிடைக்காததால் இந்தப் பீதிக்கான காரணம் இன்னும் ஊர்ஜிதமாகிறது.
2. பயங்கரவாதத்தைக் குறித்து யெகோவாவின் சாட்சிகள் எப்படி உணருகிறார்கள், இதனால் என்ன கேள்விகள் எழும்புகின்றன?
2 என்றாலும், நம்பிக்கையோடு இருப்பதற்கு நியாயமான காரணம் உள்ளது. 234 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் சுறுசுறுப்பாக பிரசங்கித்து வரும் யெகோவாவின் சாட்சிகள் குறிப்பிடத்தக்க விதத்தில் நம்பிக்கையான மனநிலையோடு இருக்கிறார்கள். பயங்கரவாதத்தை ஒழிக்கவே முடியாதென நினைத்து பயப்படாமல், வெகு சீக்கிரத்தில் அது இருந்த இடம் தெரியாமல் ஒழிக்கப்படும் என்ற உறுதியுடன் இருக்கிறார்கள். எல்லாரும் இதே போன்ற மனநிலையை வெளிக்காட்டுவது நடைமுறையானதா? இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்ட யாரால்தான் முடியும்? அது எப்படி சாத்தியமாகும்? நாம் எல்லாருமே ஏதாவதொரு விதத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்; ஆகவே, இப்படிப்பட்ட நம்பிக்கையான மனநிலையோடு இருப்பதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
3. பயப்படுவதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன, நம் காலத்தைப் பற்றி என்ன முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது?
3 எத்தனையோ காரணங்களுக்காக மக்கள் இன்று பயப்படுகிறார்கள், கலங்குகிறார்கள். முதுமையின் பிடியில் சிக்கி தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள அநேகரையும், தீரா வியாதிகளால் எலும்பும் தோலுமாக உருக்குலைந்து கிடப்பவர்களையும், வயிற்றுப்பாட்டுக்காக பணங்காசு சம்பாதிக்க போராடும் குடும்பங்களையும் உங்கள் கண்முன் சற்று நிறுத்திப் பாருங்கள். ஏன், வாழ்க்கையே எந்தளவுக்கு நிலையற்றதென யோசித்துப் பாருங்கள்! எந்த நிமிஷமும் விபத்தோ பேரழிவோ அகால மரணத்தை ஏற்படுத்தலாம், உயிருக்குயிரான பொருட்களையெல்லாம் அழித்துவிடலாம். அப்படிப்பட்ட கலக்கமும் கவலையும் கணக்கு வழக்கில்லா சண்டை சச்சரவுகளும் ஏமாற்றங்களும் நிறைந்த நம் காலப் பகுதி அப்போஸ்தலன் பவுல் விளக்கிய காலப் பகுதியோடு மிகத் துல்லியமாக ஒத்துப்போகிறது. அவர் விளக்கினார்: “கடைசி நாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், . . . சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்” இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:1-3.
4. இரண்டு தீமோத்தேயு 3:1-3-ல் வர்ணிக்கப்பட்டுள்ள சோகமான சூழ்நிலையிலும் என்ன நம்பிக்கை தெரிகிறது?
4 இந்த வசனம் ஒரு சோகமான சூழ்நிலையை வர்ணித்தாலும் அது நம்பிக்கையையும் அளிக்கிறது. சாத்தானின் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்”தான் கொடிய காலங்கள் இருக்கும் என்பதை கவனியுங்கள். அப்படியென்றால், கவலைகளே இல்லாத காலம் சமீபம் என்றும் இந்தப் பொல்லாத உலகிற்கு பதிலாக சீக்கிரத்தில் கடவுளுடைய பரிபூரண ராஜ்ய ஆட்சி நடக்கும் என்றுமே அர்த்தம். அந்த ராஜ்யத்திற்காக ஜெபிக்கும்படிதான் இயேசு தம்மை பின்பற்றினவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) அந்த ராஜ்யம் தேவனுடைய பரலோக அரசாங்கமாகும்; தானியேல் தீர்க்கதரிசி சொன்ன விதமாக அது ‘என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யம்.’ ஆனால், “அது அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
கிறிஸ்தவ நடுநிலைமைக்கு எதிராக பயங்கரவாதம்
5. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு தேசங்கள் சமீபத்தில் எவ்வாறு பிரதிபலித்திருக்கின்றன?
5 பல பத்தாண்டுகளாக, பயங்கரவாதம் ஆயிரக்கணக்கான உயிர்களை சூறையாடியிருக்கிறது. செப்டம்பர் 11, 2001-ல், நியு யார்க் நகரத்திலும் வாஷிங்டன் டி.சி.-யிலும் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு அதன் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு உலகெங்கும் கணிசமான அளவிற்கு அதிகரித்திருக்கிறது. பயங்கரவாதம் விசுவரூபமெடுத்து வருவதையும், பூமியெங்கும் கோர முகத்தை காட்டி வருவதையும் கவனித்த எல்லா தேசங்களும் அதை எதிர்த்துப் போராடுவதற்கு உடனடியாக அணிசேர்ந்து கொண்டன. உதாரணத்திற்கு, டிசம்பர் 4, 2001-ல், “ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய ஆசியா ஆகியவற்றிலுள்ள 55 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள்” தங்களுடைய முயற்சிகளை ஒன்றிணைக்கும் “ஒரு திட்டத்தை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்” என மீடியா அறிக்கைகள் சொல்கின்றன. இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை முறியடிக்கும் முயற்சிகளுக்கு “ஒரு புதிய உத்வேகத்தை” அளிக்கிறதென்று ஐ.மா. உயர் அதிகாரி ஒருவர் பாராட்டினார். “வரலாறு காணாத போராட்டத்தின் ஆரம்பம்” என த நியு யார்க் டைம்ஸ் மேகசின் அழைத்த இந்தப் போராட்டத்தில் திடீரென கோடிக்கணக்கானோர் களமிறங்கிவிட்டனர். இப்படிப்பட்ட முயற்சிகள் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்றாலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இத்தகைய போரின் பின்விளைவுகள், அநேகருடைய மனதிலே பயத்தையும் பதற்றத்தையும்தான் உண்டாக்கியிருக்கின்றன; ஆனால், யெகோவாவிடம் தஞ்சம் புகுந்திருப்போரின் மனதிலோ இப்படியொரு நடுக்கம் ஏற்படுவதில்லை.
6. (அ) சிலசமயங்களில் யெகோவாவின் சாட்சிகளது கிறிஸ்தவ நடுநிலைமை வகிப்பை ஏற்றுக்கொள்வது சிலருக்கு ஏன் கடினமாக இருக்கிறது? (ஆ) தம்மை பின்பற்றுபவர்களுக்கு அரசியல் சம்பந்தமாக என்ன மாதிரியை இயேசு வைத்தார்?
6 யெகோவாவின் சாட்சிகள் அரசியலில் நடுநிலைமை வகிப்பவர்கள் என்பது உலகறிந்த விஷயம். இந்த நிலைநிற்கையை பெரும்பாலோர் அமைதி நிலவும் காலங்களிலே ஏற்றுக்கொண்டாலும் வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகள் வரும்போதோ அவர்கள் எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். போரினால் உண்டாகும் அச்சமும் அநிச்சயமும் தீவிரமான தேசப்பற்று உணர்ச்சிகளை பெரும்பாலும் தூண்டிவிடுகின்றன. அப்படியிருக்கும்போது, பிரபல தேசிய இயக்கங்களை ஆதரிக்க ஏன் சிலர் தயங்குகிறார்கள் என புரிந்துகொள்வது சிலருக்கு கஷ்டமாக இருக்கிறது. என்றாலும், ‘உலகத்தாராக இருக்கக்கூடாது’ என்ற இயேசுவின் கட்டளைக்கு தாங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதை உண்மை கிறிஸ்தவர்கள் அறிவார்கள். (யோவான் 15:19; 17:14-16; 18:36; யாக்கோபு 4:4) ஆகவே, அரசியலிலும் சமூக காரியங்களிலும் அவர்கள் நடுநிலைமையைக் காத்துக்கொள்வது அவசியமாகிறது. இதற்கு இயேசு தாமே நல்ல முன்மாதிரியாக திகழ்ந்தார். அவர் நினைத்திருந்தால், தம் பரிபூரண ஞானத்தையும் நிகரற்ற திறமைகளையும் வைத்து தாம் வாழ்ந்த காலத்தின் மனித விவகாரங்களை நன்றாக சீரமைத்திருக்க முடியும். ஆனால் அவர் அரசியல் களத்திற்குள் இறங்க மறுத்தார். அவருடைய ஊழியத்தின் தொடக்க காலத்திலே, உலகிலுள்ள எல்லா ராஜ்யங்களையும் ஆளும் அதிகாரத்தை சாத்தான் அவருக்கு கொடுக்க முன்வந்தபோது அதை ஒரேயடியாக நிராகரித்தார். பிற்பாடு, மற்றவர்கள் அவரை அரசியலில் ஈடுபடுத்த முயன்றபோது அதை அறவே தவிர்த்தார்.—மத்தேயு 4:8-10; யோவான் 6:14, 15.
7, 8. (அ) யெகோவாவின் சாட்சிகளது அரசியல் நடுநிலை வகிப்பு எதை அர்த்தப்படுத்துவதில்லை, ஏன்? (ஆ) அரசாங்கங்களுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபடுவதை ரோமர் 13:1, 2 எவ்வாறு தடை செய்கிறது?
7 யெகோவாவின் சாட்சிகள் நடுநிலைமை வகிப்பதால் அவர்கள் வன்முறைச் செயல்களை ஆதரிக்கிறார்கள் என்றோ அவற்றை கண்டுங்காணாமலும் விட்டுவிடுகிறார்கள் என்றோ தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. அப்படி செய்தால் “அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவ”னுடைய ஊழியக்காரர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்வது பொய்யென்று ஆகிவிடும். (2 கொரிந்தியர் 13:11) வன்முறையைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார் என்பதை அவர்கள் கற்றிருக்கிறார்கள். யெகோவா “நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது” என சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 11:5) அதோடு, “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என அப்போஸ்தலனாகிய பேதுருவிடம் இயேசு சொன்னதும் அவர்களுக்கு நன்றாக தெரியும்.—மத்தேயு 26:52.
8 பொய்க் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் “பட்டயத்தை” எடுத்திருப்பதற்கு சரித்திரம் தெளிவான சான்றளிக்கிறது. ஆனால் யெகோவாவின் சாட்சிகள் விஷயத்தில் அது உண்மை அல்ல. இப்படிப்பட்ட எந்த விவகாரங்களிலும் ஈடுபடுவதை அவர்கள் அறவே தவிர்க்கிறார்கள். ரோமர் 13:1, 2-லுள்ள பின்வரும் கட்டளைக்கு சாட்சிகள் மனதார கீழ்ப்படிகிறார்கள்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் [அரசாங்க அதிகாரிகளுக்கு] கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால் தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக் கொள்ளுகிறார்கள்.”
9. யெகோவாவின் சாட்சிகள் எந்த இரண்டு வழிகளில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுகிறார்கள்?
9 என்றாலும், பயங்கரவாதம் மிகக் கொடியது என்பதால், இதை எதிர்த்துப் போராட யெகோவாவின் சாட்சிகள் ஏதாவது செய்ய வேண்டாமா? ஆம், செய்ய வேண்டும், அதைத்தான் செய்தும் வருகிறார்கள். முதலாவதாக, அவர்கள் தாமே அப்படிப்பட்ட எந்தச் செயல்களிலும் ஈடுபடுவதில்லை. இரண்டாவதாக, எல்லா விதமான வன்முறையையும் விட்டொழிக்க உதவும் கிறிஸ்தவ நியமங்களை மக்களுக்கு கற்றுத் தருகிறார்கள்.a இத்தகைய கிறிஸ்தவ வாழ்க்கை முறையை ஜனங்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் கடந்த வருடம் 120,23,81,302 மணிநேரத்தை செலவிட்டிருக்கிறார்கள். இப்படி செலவிடப்பட்ட நேரம் வீண்போகவில்லை, ஏனென்றால் அவர்களுடைய முயற்சியின் பலனாக 2,65,469 பேர் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டப்பட்டார்கள்; இப்படியாக தாங்கள் வன்முறையை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவதை பகிரங்கமாக வெளிக்காட்டினார்கள்.
10. இன்றைய உலகிலிருந்து வன்முறை எப்படி துடைத்தழிக்கப்படும்?
10 அதுமட்டுமல்ல, இவ்வுலகத்திலிருந்து தீமையை ஒழிக்க தங்களால் மட்டுமே முடியாது என்பதை யெகோவாவின் சாட்சிகள் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே வன்முறையை முற்றிலும் நீக்க வல்லவரான யெகோவா தேவன் மீது தங்கள் முழு நம்பிக்கையை வைக்கிறார்கள். (சங்கீதம் 83:17) நல்லெண்ணத்துடன் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், மனிதர்களால் வன்முறைக்கு முடிவுகட்டவே முடியாது. தேவ ஆவியால் ஏவப்பட்ட ஒரு பைபிள் எழுத்தாளர், நாம் வாழும் ‘கடைசி நாட்களைக்’ குறித்து முன்கூட்டியே நம்மை எச்சரித்து, “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம் போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” என்றார். (2 தீமோத்தேயு 3:1, 13) இதை வைத்துப் பார்க்கும்போது, தீமைக்கு எதிரான போராட்டத்தில் மனிதர்கள் வெற்றி பெறுவது கூடாத காரியமாக தெரிகிறது. ஆகவே வன்முறையை நிரந்தரமாக, சுவடு தெரியாமல் துடைத்தழிப்பதற்கு யெகோவா மீதே நாம் சார்ந்திருக்கலாம்.—சங்கீதம் 37:1, 2, 9-11; நீதிமொழிகள் 24:19, 20; ஏசாயா 60:18.
தாக்குதல் நெருங்கும்போது தைரியம்
11. வன்முறையை ஒழித்துக்கட்ட யெகோவா ஏற்கெனவே என்ன படிகளை எடுத்திருக்கிறார்?
11 சமாதானத்தின் தேவன் வன்முறையை வெறுக்கிறார்; ஆகவேதான் வன்முறைக்கு மூலகாரணனாகிய பிசாசாகிய சாத்தானை அழிப்பதற்கு முதற்படிகளை எடுத்திருக்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. சொல்லப்போனால், ஏற்கெனவே பிரதான தூதனாகிய மிகாவேலின்—கடவுளால் நியமிக்கப்பட்ட புதிய ராஜாவாகிய கிறிஸ்து இயேசுவின்—கைகளினாலே சாத்தான் படுதோல்வி அடையும்படி அவர் செய்திருக்கிறார். இதை பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 12:7-9.
12, 13. (அ) 1914-ம் வருடத்தின் முக்கியத்துவம் என்ன? (ஆ) கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரிப்போருக்கு என்ன நடக்கும் என எசேக்கியேல் தீர்க்கதரிசனம் முன்னறிவிக்கிறது?
12 இந்தப் பரலோக யுத்தம் 1914-ம் வருடத்திலே நடந்ததாக பைபிளின் காலக்கணிப்பும் உலக நிகழ்ச்சிகளும் ஒன்றுபோல சுட்டிக்காட்டுகின்றன. அச்சமயத்திலிருந்து உலக நிலைமைகள் மேலும் மேலும் மோசமாகி வருகின்றன. இதற்கான காரணத்தை வெளிப்படுத்துதல் 12:12 விளக்குகிறது: “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.”
13 அதன் காரணமாகவே, கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட வணக்கத்தார் மீதும் அவர்களுடைய தோழர்களான ‘வேறே ஆடுகள்’ மீதும்தான் முக்கியமாக பிசாசு கோபத்தை காட்டி வருகிறான். (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 12:17) இந்தப் பகையின் உச்சக்கட்டமாக, கடவுளால் ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தை ஆதரித்து அதன் மீது நம்பிக்கை வைப்போர் மீது பிசாசு கடும் தாக்குதலை சீக்கிரத்தில் நடத்துவான். எசேக்கியேல் 38-ம் அதிகாரத்தில் இந்த உச்சக்கட்ட தாக்குதல் “மாகோகு தேசத்தானான கோகு”வின் தாக்குதல் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
14. கடந்த காலத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ன பாதுகாப்பை அனுபவித்தார்கள், எப்போதுமே இப்படிப்பட்ட பாதுகாப்பு கிடைக்குமா?
14 பரலோகத்திலிருந்து சாத்தான் தள்ளப்பட்டது முதற்கொண்டு, சில அரசியல் அமைப்புகள் கடவுளுடைய ஜனங்களை சாத்தானின் தாக்குதலிலிருந்து அவ்வப்போது பாதுகாத்திருக்கின்றன; இதை அடையாள பாஷையில் வெளிப்படுத்துதல் 12:15, 16 விளக்குகிறது. இதற்கு நேர்மாறாக, சாத்தானுடைய கடைசி தாக்குதலின்போது, யெகோவா மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு எந்த மனித அமைப்புகளும் பாதுகாப்பளிக்காது என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது. அப்படியானால், கிறிஸ்தவர்கள் பயப்படவோ கலங்கவோ வேண்டுமா? வேண்டவே வேண்டாம்!
15, 16. (அ) யோசபாத்தின் நாட்களில் யெகோவா தம் மக்களுக்கு சொன்ன நம்பிக்கையூட்டும் வார்த்தைகள், இன்று கிறிஸ்தவர்கள் நம்பிக்கையோடு இருப்பதற்கு என்ன காரணத்தை அளிக்கின்றன? (ஆ) யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் இன்றைய கடவுளுடைய ஊழியர்களுக்கு என்ன முன்மாதிரியை வைத்தார்கள்?
15 யோசபாத் ராஜாவின் நாட்களிலே தம் ஜனங்களுக்கு கடவுள் எப்படி உதவினாரோ அப்படியே இன்றும் அவர் நிச்சயமாக உதவுவார். பின்வருமாறு நாம் வாசிக்கிறோம்: ‘சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்! நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லுகிறார்; ஏனென்றால் இந்த யுத்தம் உங்களுடையதல்ல, ஆனால் தேவனுடையது, . . . இந்த முறை நீங்கள் போரிட வேண்டிய அவசியமில்லை; உங்கள் நிலையில் இருந்து, அசையாமல் நின்று, யெகோவா உங்களுக்குத் தரும் இரட்சிப்பைப் பாருங்கள். யூதாவே, எருசலேமே, பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு போங்கள், யெகோவா உங்களோடே இருப்பார்.’—2 நாளாகமம் 20:15-17, NW.
16 யூதா தேசத்தார் யுத்தம் செய்ய அவசியமிருக்காது என்று உறுதியளிக்கப்பட்டது. அதே விதமாக, மாகோகின் கோகு கடவுளுடைய ஜனங்களை தாக்கும்போது தற்காப்பிற்கு அவர்கள் ஆயுதங்களை எடுக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் ‘அசையாது நின்று’ யெகோவா ‘தரும் இரட்சிப்பை பார்ப்பார்கள்.’ ஆனால் ‘அசையாது நிற்பது’ என்பது முற்றிலும் செயலற்று வெறுமனே நிற்பதைக் குறிப்பதில்லை; ஏனெனில் யோசபாத்தின் நாட்களில் கடவுளுடைய ஜனங்கள் எதுவுமே செய்யாமல் வெறுமனே நிற்கவில்லை. இப்படியாக நாம் வாசிக்கிறோம்: ‘அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் யெகோவாவை பணிந்து கொள்ள அவருக்கு முன்பாகத் தாழ விழுந்தார்கள். . . . பின்பு அவன் [யோசபாத்] ஜனத்தோடே ஆலோசனை பண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், யெகோவாவை துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று அவரைப் பற்றி பாடவும், பாடகரை நிறுத்தினான்.’ (2 நாளாகமம் 20:18-21) ஆம், எதிரிகளுடைய தாக்குதலின் மத்தியிலும் ஜனங்கள் தொடர்ந்து யெகோவாவை மும்முரமாக துதித்து வந்தார்கள். கோகு தாக்குதலை நடத்துகையில் யெகோவாவின் சாட்சிகள் என்ன செய்ய வேண்டுமென்பதற்கு இது ஒரு முன்மாதிரி.
17, 18. (அ) கோகின் தாக்குதலைக் குறித்து யெகோவாவின் சாட்சிகள் இன்று என்ன நம்பிக்கையோடு இருக்கிறார்கள்? (ஆ) கிறிஸ்தவ இளைஞர்களுக்கு சமீபத்தில் என்ன நினைப்பூட்டுதல் கொடுக்கப்பட்டது?
17 கோகுவின் தாக்குதல் தொடங்கும் வரை—அது ஆரம்பித்த பிறகும்கூட—யெகோவாவின் சாட்சிகள் தேவனுடைய ராஜ்யத்தை தொடர்ந்து ஆதரிப்பார்கள். உலகம் முழுவதுமுள்ள 94,600-க்கும் அதிகமான சபைகளோடு கூட்டுறவு வைத்திருப்பதால் பாதுகாப்பையும் பலத்தையும் தொடர்ந்து பெறுவார்கள். (ஏசாயா 26:20) தைரியமாக யெகோவாவை துதிப்பதற்கு இது எப்பேர்ப்பட்ட ஏற்ற வேளை! நெருங்கி வரும் கோகுவின் தாக்குதலை எதிர்பார்த்து பயத்தினால் அவர்கள் நிச்சயம் பின்வாங்கிப் போக மாட்டார்கள். மாறாக, தங்களால் முடிந்தளவுக்கு அதிகமதிகமாக துதியின் பலியை செலுத்தவே தூண்டப்படுவார்கள்.—சங்கீதம் 146:2.
18 உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இப்படிப்பட்ட தைரியமான மனநிலையை சிறந்த விதத்தில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்; அவர்கள் முழுநேர ஊழியத்தை தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய வாழ்க்கைப் பாணியே மிகச் சிறந்தது என்பதைக் காட்டுவதற்காக, 2002-ம் ஆண்டின் மாவட்ட மாநாடுகளில் இளைஞர்களே—வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன? என்ற துண்டுப்பிரதி வெளியிடப்பட்டது. சிறியவர்கள், பெரியவர்கள் என கிறிஸ்தவர்கள் அனைவரும் காலத்திற்கேற்ற இப்படிப்பட்ட நினைப்பூட்டுதல்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.—சங்கீதம் 119:14, 24, 99, 119, 129, 146, NW.
19, 20. (அ) கிறிஸ்தவர்கள் ஏன் பயப்படவோ கலங்கவோ தேவையில்லை? (ஆ) அடுத்த கட்டுரை என்ன செய்யும்?
19 உலக நிலவரம் படுமோசமாகி வருவதைப் பார்த்து கிறிஸ்தவர்கள் பயப்படவும் தேவையில்லை கலங்கவும் தேவையில்லை. யெகோவாவின் ராஜ்யம் சீக்கிரத்தில் எல்லா விதமான வன்முறைகளுக்கும் நிரந்தரமான முடிவுகட்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். அது மட்டுமல்ல, வன்முறைக்கு பலியான பலர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை அறிந்திருப்பதாலும் ஆறுதலடைகிறார்கள். உயிர்த்தெழுந்து வரும் சிலருக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள கிடைத்த முதல் வாய்ப்பாக அது இருக்கும்; மற்றவர்களுக்கோ, தொடர்ந்து யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சேவை செய்வதற்கான வாய்ப்பாக அது இருக்கும்.—அப்போஸ்தலர் 24:15.
20 உண்மை கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்தவ நடுநிலைமையை காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை புரிந்திருக்கிறோம், அப்படி செய்ய தீர்மானமாகவும் இருக்கிறோம். ‘அசையாது நின்று யெகோவாவின் இரட்சிப்பை பார்க்கும்’ அற்புதமான எதிர்பார்ப்பை நழுவ விடாமல் இறுகப் பற்றிக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தை படிப்படியாக வெட்டவெளிச்சமாக்கும் இக்காலத்து நிகழ்வுகளைப் பற்றி விளக்குவதன் மூலம் அடுத்த கட்டுரை நம் விசுவாசத்தை பலப்படுத்தும்.
[அடிக்குறிப்பு]
a சாட்சிகளாக ஆவதற்கு தங்கள் வன்முறைமிக்க வாழ்க்கையை விட்டொழித்தவர்களின் உதாரணங்களை விழித்தெழு!, 1991, ஜூன் 8, பக்கம் 27; 1991, ஆகஸ்ட் 8, பக்கம் 18 (ஆங்கிலம்); காவற்கோபுரம், 1996, ஜனவரி 1, பக்கம் 5; 1998, ஆகஸ்ட் 1, பக்கம் 5 ஆகியவற்றில் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
• இன்று அநேகர் ஏன் இந்தளவுக்கு நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்கள்?
• யெகோவாவின் சாட்சிகள் எதிர்காலத்தைக் குறித்து ஏன் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்?
• எல்லாவித வன்முறைக்கும் காரணமானவனை யெகோவா ஏற்கெனவே என்ன செய்திருக்கிறார்?
• கோகுவின் தாக்குதலைக் குறித்து நாம் ஏன் பயப்படத் தேவையில்லை?
[பக்கம் 13-ன் படம்]
கிறிஸ்தவ நடுநிலைமைக்கு இயேசு நல்ல முன்மாதிரியாக திகழ்ந்தார்
[பக்கம் 16-ன் படங்கள்]
ஆயிரக்கணக்கான இளம் சாட்சிகள் சந்தோஷத்துடன் முழுநேர ஊழியம் செய்கிறார்கள்
[பக்கம் 12-ன் படத்திற்கான நன்றி]
UN PHOTO 186226/M. Grafman