வாழ்க்கை சரிதை
ஈடிணையற்ற ஆனந்தம்!
ரெஜனல்ட் உவால்வர்க் சொன்னபடி
“மிஷனரிகளாக யெகோவாவுக்கு முழுநேர ஊழியம் செய்தபோது நாங்கள் அனுபவித்த ஆனந்தத்திற்கு இந்த உலகில் ஈடிணை ஏதுமில்லை!” இப்படி எழுதப்பட்டிருந்த ஒரு சீட்டை, மே 1994-ல் என் மனைவி இறந்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவளுடைய பேப்பர்களுக்கு இடையே பார்த்தேன்.
ஐரின் எழுதிய இவ்வார்த்தைகளை மனதில் அசைபோடுகையில் மிஷனரிகளாக நாங்கள் பெருவில் அனுபவித்துக் களித்த சந்தோஷமும் திருப்தியும் நிறைந்த 37 வருடங்கள் என் நினைவை வருடுகின்றன. டிசம்பர் 1942-ல் எங்கள் திருமணம் நடந்தது முதற்கொண்டு, அருமையான கிறிஸ்தவ ஊழியத்தில் ஒன்றுசேர்ந்து ஈடுபடும் சந்தோஷத்தை பெற்றோம். இப்போது என் கதையைத் தொடங்குவதுதான் பொருத்தமானது.
இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் என்னுமிடத்தில் யெகோவாவின் சாட்சியாக ஐரின் வளர்க்கப்பட்டாள். அவளுக்கு இரண்டு சகோதரிகள்; முதல் உலகப் போர் நடந்த காலத்தில் அவளுடைய அப்பா இறந்துவிட்டார். அதன் பின்பு அவளுடைய அம்மா வின்டன் ஃபிரேஸர் என்பவரை மணந்தார், அவர்களுக்கு சிட்னி என்றொரு மகன் பிறந்தான். இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு குடும்பமாக அவர்கள் நார்த் வேல்ஸிலுள்ள பாங்கர் என்ற இடத்திற்கு குடிமாறினார்கள், அங்குதான் 1939-ல் ஐரின் முழுக்காட்டுதல் பெற்றாள். அதற்கு முந்தின வருடம் சிட்னி முழுக்காட்டுதல் பெற்றிருந்தான்; எனவே அவனும் ஐரினும் பயனியர்களாக—முழுநேர ஊழியர்களாக—சேவை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் ஏங்கில்சி தீவு உட்பட வேல்ஸின் வடக்குக் கரையோரமாக பாங்கர் முதல் கார்நார்வன் வரை ஊழியம் செய்தார்கள்.
அந்த சமயத்தில் நான் ரங்கர்ன் சபையில் இன்று அழைக்கப்படுவதுபோல் நடத்தும் கண்காணியாக சேவித்து வந்தேன்; இந்த சபை லிவர்பூலுக்கு தென்கிழக்கில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. ரங்கர்னில் வசித்து வந்த திருமணமான அக்கா விராவுடன் கொஞ்ச நாட்கள் தங்குவதற்கு ஐரின் திட்டமிட்டிருந்தாள்; அப்போது ஊழியம் செய்வதற்கு பிராந்தியம் கிடைக்குமாவென தெரிந்துகொள்ள ஒரு வட்டார மாநாட்டில் என்னை அணுகினாள். அவள் அங்கு தங்கிய இரண்டு வார காலத்தில் எங்களுக்கிடையே இனிதான பழக்கம் ஏற்பட்டது. அதற்குப் பின்பு பாங்கரில் அவளை பல தடவை சந்தித்தேன். ஒரு வாரயிறுதியில் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதம் தெரிவித்த போது சந்தோஷ கடலில் நீந்தினேன்!
ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியதும் உடனடியாக கல்யாண காரியங்களில் இறங்கினேன்; ஆனால் செவ்வாய்க்கிழமை எனக்கு தந்தி ஒன்று காத்திருந்தது. அதில், “இந்த தந்தி உங்களை ரொம்பவே புண்படுத்தும், ஆனாலும் என்னை மன்னித்துவிடுங்கள். நாம் திருமணம் செய்துகொள்ள முடியாது. மற்றவை கடிதத்தில்” என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோனேன். என்ன பிரச்சினை?
மறுநாள் ஐரினின் கடிதம் வந்தது. அதில், ஹில்ட பஜெட்a என்பவருடன் சேர்ந்து பயனியர் ஊழியம் செய்ய யார்க்ஷயரிலுள்ள ஹாஸ்ஃபோர்த் என்ற இடத்திற்கு செல்லவிருப்பதாக எழுதியிருந்தாள். தேவை அதிகமுள்ள இடத்திற்குச் சென்று ஊழியம் செய்யும்படி சொல்லப்பட்டால் தான் செல்ல தயாராக இருப்பதாக அவள் 12 மாதங்களுக்கு முன்பு தீர்மானித்திருந்ததைப் பற்றி விளக்கியிருந்தாள். அவள் இவ்வாறு எழுதியிருந்தாள்: “என்னைப் பொறுத்தவரை இது யெகோவாவுக்கு நான் செலுத்த வேண்டிய நேர்த்திக்கடன். உங்களைப் பார்த்து பழகுவதற்கு முன்பே நான் அவரிடம் நேர்ந்துகொண்டதால் அதை நிறைவேற்ற வேண்டியது என் கடமையென நினைக்கிறேன்.” எனக்கு துக்கம் ஒரு பக்கம் தொண்டையை அடைத்தாலும் அவளுடைய உத்தமத்தன்மையைக் கண்டு ஸ்தம்பித்துவிட்டேன். “உன் பயணத்தைத் தொடரு, உனக்காக காத்திருப்பேன்” என பதில் தந்தி கொடுத்தேன்.
யார்க்ஷயரில் இருக்கையில், மனசாட்சியின் நிமித்தம் போர் நடவடிக்கையை ஆதரிக்க ஐரின் மறுத்ததால் மூன்று மாத சிறை தண்டனையை அனுபவித்தாள். 18 மாதங்களுக்குப் பின்பு டிசம்பர் 1942-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
என் இளம் பருவம்
1919-ல் என் அம்மா வேதாகமத்தின் படிப்புகள்b என்ற ஆங்கில புத்தகங்களின் தொகுப்பை வாங்கினார். அம்மா அது வரைக்கும் எந்தப் புத்தகத்தையும் படித்ததே இல்லையென அப்போது அப்பா சொன்னார்; அது முழுக்க முழுக்க உண்மை என்றாலும் அம்மா இந்தப் புத்தகங்களை பைபிளின் உதவியுடன் கவனமாக படித்தே தீருவது என்றிருந்தார். அவர் நினைத்ததை சாதித்தார், 1920-ல் முழுக்காட்டுதல் பெற்றார்.
என் அப்பா ரொம்ப கறாரானவர் அல்ல; என் அம்மாவின் விருப்பத்திற்கு அவர் முட்டுக்கட்டையாக இருக்கவே இல்லை. க்வென், ஐவீ என்ற என் இரண்டு அக்காமார்களையும் அலிக் என்ற என் அண்ணனையும் என்னையும் அம்மா சத்தியத்தில் வளர்ப்பதற்கும் அவர் தடையேதும் செய்யவில்லை. லிவர்பூலிலிருந்த ஸ்டான்லி ரோஜர்ஸும், மற்ற உண்மையுள்ள சாட்சிகளும் பைபிள் பேச்சுக்களைக் கொடுக்க ரங்கர்னுக்கு வந்தார்கள், சீக்கிரத்திலேயே அங்கு புதிய சபை ஒன்று உருவானது. சபையோடு சேர்ந்து எங்கள் குடும்பமும் ஆவிக்குரிய விதத்தில் செழித்தோங்கியது.
அம்மாவுடன் சேர்ந்து க்வென் பைபிளைப் படிக்க ஆரம்பித்ததும், சர்ச் ஆஃப் இங்லண்டின் திடப்படுத்துதல் வகுப்புகளுக்கு செல்வதை நிறுத்திவிட்டாள். இந்த மத போதனை வகுப்புகளுக்கு அவள் வராததற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்கு மதகுரு எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டதில் அவர் திக்குமுக்காடிப் போனார். கர்த்தருடைய ஜெபத்தின் அர்த்தமென்ன என்று க்வென் கேட்டுவிட்டு பிறகு அவளே அதற்கு விளக்கத்தையும் அளித்துவிட்டாள்! 1 கொரிந்தியர் 10:21-ஐக் குறிப்பிட்டு தான் இனிமேலும் ‘இரண்டு போஜன பந்தியில் பங்கெடுக்க’ முடியாதென சொல்லி முடித்தாள். அவர் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறுகையில் க்வென்னுக்காக ஜெபிப்பதாகவும், அவளுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க மீண்டும் வருவதாகவும் சொல்லிவிட்டு சென்றார்; அப்படி சென்றவர் சென்றவர்தான், திரும்பி வரவேயில்லை. அவளுடைய முழுக்காட்டுதலுக்குப் பிறகு சீக்கிரத்தில் க்வென் முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தாள்.
எங்கள் சபையில் இளைஞர்களுக்கு விசேஷித்த கவனம் செலுத்தப்பட்டது. எனக்கு ஏழு வயதிருக்கையில் வேறொரு சபையிலிருந்து பேச்சு கொடுக்க மூப்பர் ஒருவர் வந்திருந்தது இன்னும் நினைவிருக்கிறது. அப்பேச்சுக்குப் பின்னர் அவர் என்னிடம் வந்து பேசினார். நான் ஆபிரகாமைப் பற்றியும் அவர் தன்னுடைய மகன் ஈசாக்கை பலி செலுத்துமளவுக்கு சென்றதை பற்றியும் வாசித்ததை அவரிடம் சொன்னேன். “நீ மேடை மேலேறி அங்கு மூலையில் நின்று அதைப் பற்றி உனக்குத் தெரிந்ததை சொல்லு” என்றார். அப்படித்தான் எனது முதல் “பொதுப் பேச்சை” கொடுத்தேன், எப்படி உச்சிகுளிர்ந்து போனேன் தெரியுமா?
1931-ல் என் 15 வயதில் முழுக்காட்டுதல் பெற்றேன்; அந்த வருடம் என் அம்மா இறந்துவிட்டார். என் பள்ளிப் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு எலெக்ட்ரீஷியன் தொழிலைக் கற்றுக்கொள்ள வேலையில் சேர்ந்தேன். 1936-ல் பதிவு செய்யப்பட்ட பைபிள் பேச்சுகள் பொது மக்கள் முன்பு ஃபோனோகிராஃப் மூலம் ஒலிபரப்பப்பட்டன, இந்த வேலையில் நானும் என் அண்ணனும் பங்கெடுக்கும்படி வயதான சகோதரி ஒருவர் எங்களை உற்சாகப்படுத்தினார். எனவே நானும் அலிக்கும் லிவர்பூலுக்குச் சென்று ஒரு சைக்கிளை வாங்கினோம்; ஃபோனோகிராஃப் மெஷினை எடுத்துச் செல்வதற்கு வசதியாக சக்கரங்கள் பொருத்தப்பட்ட மற்றொரு பெட்டியை செய்து சைக்கிளுடன் இணைக்க சொன்னோம். அந்தப் பெட்டிக்குப் பின்புறம் இரண்டு மீட்டர் உயரமுள்ள ஒரு மடக்கு குழாய்மீது ஒலிபெருக்கி ஒன்று பொருத்தப்பட்டது. இதற்கு முன்பு இப்படியொரு வாகனத்தை தான் உருவாக்கியதே இல்லையென அந்த மெக்கானிக் எங்களிடம் சொன்னார், ஆனால் அது ரொம்பவே நன்றாக செயல்பட்டது! எங்கள் பிராந்தியம் எங்கும் போய் ஆர்வமாக பிரசங்கித்தோம், அந்த வயதான சகோதரி கொடுத்த உற்சாகத்திற்கும், எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருந்தோம்.
இரண்டாம் உலகப் போர்—சோதனைக் காலம்
போர் கால மேகங்கள் மூண்டன, நானும் ஸ்டான்லி ரோஜர்ஸும் செப்டம்பர் 11, 1938-ல் லண்டனிலுள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் கொடுக்கப்படவிருந்த “நிஜத்தை சந்தியுங்கள்” என்ற பொதுப் பேச்சை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம். பின்னர் இந்தப் பேச்சு சிறுபுத்தகமாக அச்சிடப்பட்ட போதும் அதற்கு அடுத்த வருடம் பொதுவுடைமை கொள்கையா விடுதலையா என்ற ஆங்கில சிறுபுத்தகம் பிரசுரிக்கப்பட்ட போதும் அவற்றை விநியோகிப்பதில் பங்கேற்றேன். இந்த இரண்டு சிறுபுத்தகங்களுமே ஹிட்லர் ஆட்சியின் சர்வாதிகார குறிக்கோள்களை தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்தின. இந்த சமயத்தில் ரங்கர்னில் நான் ஊழியம் செய்து வருவது பலருக்கும் தெரிந்திருந்தது, அதற்காக மதிப்போடும் மரியாதையோடும் நடத்தப்பட்டேன். சொல்லப்போனால், தேவராஜ்ய காரியங்களில் ஈடுபட எப்போதும் முன்நின்றது பிற்காலத்தில் பெரிதும் கைகொடுத்தது.
நான் வேலை செய்து வந்த கம்பெனி, நகரத்திற்கு வெளியே இருந்த ஒரு புதிய தொழிற்சாலையில் ஒயரிங் வேலைக்கு காண்ட்ராக்ட் எடுத்திருந்தது. அது போர்க் கருவிகள் செய்யும் தொழிற்சாலை என்பதை அறிந்த போது என்னால் அங்கு வேலை செய்ய முடியாதென தெளிவாக சொல்லிவிட்டேன். என் முதலாளிகளுக்கு அதில் அந்தளவுக்குத் திருப்தியில்லாவிட்டாலும் எனக்காக ஃபோர்மேன் பரிந்து பேசியதால் வேலையை மாற்றிக் கொடுத்தார்கள். அந்த ஃபோர்மேனின் உறவுக்கார பெண்மணி ஒருவர் யெகோவாவின் சாட்சியாக இருப்பதை பின்னர் அறிந்துகொண்டேன்.
“பல வருடங்களாக அந்த பைபிள் வேலையை நீ செய்து வருவதால் இப்படித்தான் நடந்துகொள்வாய் என எங்களுக்குத் தெரியும் ரெஜ்” என சொல்லி சக தொழிலாளி ஒருவர் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தினார். எனினும் மற்ற தொழிலாளிகள் நிறைய பேர் என்னை சிக்கலில் மாட்டிவிட விரும்பியதால் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியிருந்தது.
மத காரணங்களுக்காக ராணுவத்தில் சேருவதிலிருந்து எனக்கு விலக்களிக்கும்படி கேட்டு பெயரை பதிவு செய்தபோது தொடர்ந்து எலெக்ட்ரீஷியனாக பணிபுரிந்தால் மட்டுமே அதிலிருந்து விலக்களிக்கப்படுவேன் என்ற நிபந்தனையுடன் லிவர்பூலிலிருந்த நீதிமன்றம் ஜூன் 1940-ல் அதை அங்கீகரித்தது. இது என் கிறிஸ்தவ ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்கு உதவியது.
முழுநேர ஊழியத்தில்
போர் முடிவடைந்த போது என் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஐரினுடன் சேர்ந்து முழுநேர ஊழியம் செய்ய தீர்மானித்தேன். 1946-ல் ஐந்து மீட்டர் நீளமுள்ள ட்ரெய்லரைத் தயாரித்தேன், அதுவே எங்கள் வீடானது. மறுவருடம் க்ளாஸ்டர்ஷயரிலிருந்த அல்வஸ்டன் என்ற கிராமத்தில் ஊழியம் செய்வதற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். அதன் பிறகு சைரன்செஸ்டர் என்ற புராதன நகரத்திலும் பாத் நகரத்திலும் பயனியர் ஊழியம் செய்தோம். 1951-ல் பயணக் கண்காணியாக தெற்கு வேல்ஸிலுள்ள சபைகளை சந்திக்கும்படி அனுப்பப்பட்டேன்; இரண்டு வருடங்களுக்குள் மிஷனரி பயிற்சிக்காக நாங்கள் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள பயணப்பட்டோம்.
பள்ளியின் 21-ம் வகுப்பு, நியு யார்க்கின் வடபகுதியிலுள்ள சௌத் லான்சிங்கில் நடைபெற்றது; 1953-ல் நியு யார்க் நகரத்தில் நடைபெற்ற நியூ உவர்ல்ட் சொஸைட்டி அசெம்பிளியில் நாங்கள் பட்டம் பெற்றோம். பட்டம் பெறும் நாள்வரை எங்கு அனுப்பப்படுவோம் என எனக்கும் ஐரினுக்கும் தெரியவே தெரியாது. நாங்கள் பெருவிற்கு அனுப்பப்படவிருந்ததை அறிந்தபோது எங்களுக்கு சந்தோஷம் தாளவில்லை. ஏன் தெரியுமா? ஐரினின் ஒன்றுவிட்ட தம்பி சிட்னி ஃபிரேஸரும் அவரது மனைவி மார்கரெட்டும் பெருவிலிருந்தார்கள்; கிலியட்டின் 19-ம் வகுப்பில் பட்டம் பெற்ற பிறகு ஒரு வருடத்திற்கும் மேலாக அங்கு லிமா கிளை அலுவலகத்தில் சேவை செய்து வந்தார்கள்!
எங்கள் விசாவிற்காக காத்திருக்கையில் புரூக்ளின் பெத்தேலில் கொஞ்ச நாட்கள் வேலை செய்தோம், சீக்கிரத்திலேயே நாங்கள் லிமாவிற்குப் பயணப்பட்டோம். மிஷனரிகளாக நாங்கள் ஊழியம் செய்யச் சென்ற பத்து இடங்களில் முதலாவது இடம் கால்லோ. அது லிமாவிற்கு மேற்கேயிருந்த பெருவின் முக்கிய துறைமுகப் பட்டணம். ஸ்பானிய மொழியின் அரிச்சுவடியை ஏதோ ஓரளவுக்கு நாங்கள் கற்றிருந்தாலும் அந்த சமயத்தில் என்னாலும் ஐரினாலும் யாருடனும் உரையாட முடியவில்லை. பிறகு நாங்கள் எப்படித்தான் ஊழியம் செய்வோமோ என்று நினைத்தோம்.
பிரசங்கித்தலில் பிரச்சினைகளும் பலன்களும்
தாய் தன் குழந்தைக்கு மொழியைக் கற்றுக்கொடுப்பதில்லை; தாய் தன்னிடம் பேசுவதைக் கேட்டு குழந்தை தானாகவே அதைக் கற்றுக்கொள்கிறது என கிலியட்டில் எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. “உடனடியாக பிரசங்க ஊழியம் செய்ய ஆரம்பியுங்கள், ஜனங்களிடமிருந்து மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்” என்பதே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட புத்திமதி. அந்தப் புதிய மொழியை மெல்ல மெல்ல கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அங்கு சென்று இரண்டு வாரங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் கால்லோ சபையின் நடத்தும் கண்காணியாக நியமிக்கப்பட்டேன்; அப்போது எனக்கு எப்படியிருந்திருக்கும் என சற்று நினைத்துப் பாருங்கள்! சிட்னி ஃபிரேஸரைக் காணச் சென்றேன்; சபையிலும் பிராந்தியத்திலுமுள்ள ஜனங்களுடன் பழகும்படி அவர் புத்தி சொன்னார்; கிலியட்டில் கொடுக்கப்பட்ட அதே புத்திமதி. இதன்படி செய்ய தீர்மானித்தேன்.
ஒருநாள் சனிக்கிழமை காலையில் தச்சர் ஒருவரை அவரது கடையில் சந்தித்தேன். “எனக்கு வேலையிருக்கிறது, ஆனால் நீங்கள் உட்கார்ந்து பேசுங்கள்” என்றார் அவர். பேசுவதற்குத் தயார், ஆனால் “நான் தப்பாக பேசினால் தயவுசெய்து என்னை திருத்த வேண்டும். அதற்காக நான் சங்கடப்பட மாட்டேன்” என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தேன். சத்தமாக சிரித்த அவர் என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். வாரத்தில் இருமுறை அவரைப் போய் சந்தித்தேன், எனக்குச் சொல்லப்பட்டபடி, என் புதிய மொழியை சரளமாக கற்றுக்கொள்வதற்கு இது ஒரு சிறந்த வழியென கண்டேன்.
எங்கள் இரண்டாவது மிஷனரி பிராந்தியமான இகா நகரத்திலும் மற்றொரு தச்சரையே தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. கால்லோவிலிருந்த தச்சர் உதவிய விதத்தைப் பற்றி இவரிடம் விளக்கினேன். அதே விதமாக எனக்கு உதவ இவரும் சம்மதித்தார். எனவே ஸ்பானிய மொழியில் நன்கு முன்னேற ஆரம்பித்தேன். ஆனாலும் அம்மொழியில் கரைகாண எனக்கு மூன்று வருடங்கள் எடுத்தன. இந்த தச்சர் எப்போதும் வேலையில் மும்முரமாக இருப்பார்; ஆனாலும் அவருக்கு வேதவசனங்களை வாசித்துக் காட்டி அவற்றின் அர்த்தத்தைச் சொல்வதன் மூலம் பைபிள் படிப்பு நடத்தி வந்தேன். ஒருமுறை அவரை சந்திக்க சென்றிருந்த போது லிமாவில் புதிய வேலை கிடைத்ததால் அவர் வேலையை விட்டு சென்றுவிட்டதாக அவரது முதலாளி என்னிடம் சொன்னார். கொஞ்ச நாட்கள் கழித்து நானும் ஐரினும் மாநாட்டிற்காக லிமா சென்றிருந்தபோது அந்த தச்சரை மீண்டும் சந்தித்தேன். தொடர்ந்து பைபிள் படிப்பதற்காக உள்ளூர் சாட்சிகளை அவர் அணுகியதையும், அவரும் அவருடைய குடும்பத்தார் அனைவரும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக ஆகியிருப்பதையும் அறிந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை!
ஒரு சபையில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த ஒரு தம்பதியினர் முழுக்காட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதில் உட்பட்டுள்ள பைபிள் நியமங்களைக் குறித்து அவர்களுடன் கலந்தாலோசித்தோம். முழுக்காட்டுதல் பெற்ற பிரஸ்தாபிகளாக இருப்பதற்கான தகுதியைப் பெற தங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய அவர்கள் தீர்மானித்தார்கள். எனவே அவர்களுடைய திருமணத்தைப் பதிவு செய்ய அரசு அலுவலகத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றேன். ஆனால் இன்னொரு பிரச்சினையும் எழுந்தது; அவர்களுக்கு நான்கு குழந்தைகள், அதில் ஒன்றுகூட பிறப்பின்போது பதிவு செய்யப்படவில்லை, இதுவும் சட்டப்படி செய்ய வேண்டிய காரியம். எனவே மேயர் என்ன நடவடிக்கை எடுப்பாரோ என நாங்கள் பயப்பட்டோம். “ஒழுக்கமிக்க உங்கள் நண்பர்களாகிய யெகோவாவின் சாட்சிகள் உங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்வதால் உங்கள் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் சட்டப்படி அனுப்ப வேண்டிய அழைப்பாணையை அனுப்பாமல், கட்டணமின்றி அவர்களைப் பதிவு செய்கிறேன்” என மேயர் சொன்னார். அதற்கு நாங்கள் ரொம்பவே நன்றி செலுத்தினோம்; ஏனெனில் இவர்களோ ஏழைகள், அபராதம் விதிக்கப்பட்டால் அதை கட்ட சக்தியற்றவர்கள்!
பின்னர் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகமுள்ள புரூக்ளினிலிருந்து ஆல்பர்ட் டி. ஷ்ரோடர் என்பவர் எங்களை சந்திக்க வந்தார்; லிமாவின் மற்றொரு பகுதியில் ஒரு புதிய மிஷனரி இல்லத்தை ஏற்படுத்துவதற்கு அவர் பரிந்துரை செய்தார். எனவே நானும் ஐரினும், ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஃபிரான்ஸிஸ் மற்றும் எலிசபெத் குட் என்ற இரண்டு சகோதரிகளும், கனடாவிலிருந்து வந்திருந்த ஒரு தம்பதியினரும் சான் போர்ஹா என்ற மாவட்டத்திற்கு குடிமாறி சென்றோம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மற்றொரு சபை மளமளவென வளருவதைக் காணும் பாக்கியம் பெற்றோம்.
3,000-க்கும் அதிக மீட்டர் உயரத்தில் மத்திய பீடபூமியாகிய வான்கையோவில் ஊழியம் செய்கையில் 80 சாட்சிகள் இருந்த ஒரு சபையுடன் கூட்டுறவு கொண்டோம். அந்த நாட்டில் கட்டப்பட்ட இரண்டாவது ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்டேன். நாங்கள் விலைக்கு வாங்கியிருந்த இடத்தை சட்டப்படி உடைமையாக்கிக் கொள்வதற்கு மூன்று முறை நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால் யெகோவாவின் சாட்சிகளுடைய சட்டப்படியான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டேன். அத்தகைய செயல்களும், அந்த ஆரம்ப காலத்தில் சீஷராக்கும் ஊழியத்தில் அநேக உண்மையுள்ள மிஷனரிகளின் அயராத உழைப்பும் இன்று பெருவில் காணப்படும் அபரிமிதமான வளர்ச்சிக்கு அசைக்க முடியாத அஸ்திவாரமாக அமைந்தன. 1953-ல் 283 பேரே சாட்சிகள்; இன்றோ 83,000-க்கும் அதிகமானோர் உள்ளனர்.
பிரியாவிடை
மிஷனரி இல்லங்கள் அனைத்திலும் சக மிஷனரிகளின் அருமையான கூட்டுறவை நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம்; பெரும்பாலும் இந்த இல்லங்களில் ஹோம் ஓவர்ஸியராக பணியாற்றும் பாக்கியம் பெற்றிருந்தேன். ஒவ்வொரு திங்கட்கிழமை காலையிலும் அந்த வாரம் முழுவதும் செய்யவிருந்த வேலைகளைக் குறித்து பேசுவதற்கும், வீட்டில் எந்த வேலையை யார் செய்வது என தீர்மானிப்பதற்கும் ஒன்றாக கூடிவருவோம். பிரசங்க ஊழியம் செய்வதுதான் முக்கியமான வேலையாதலால் அதை மனதில் வைத்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டோம். என் நினைவுக்கு எட்டிய வரை நாங்கள் வசித்த எந்த இல்லத்திலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் எழவேயில்லை.
எங்கள் மிஷனரி ஊழியத்தில் கடைசியாக லிமாவின் மற்றொரு புறநகர்ப் பகுதியான பிரன்யாவில் இருந்தோம். 70 பிரஸ்தாபிகள் இருந்த அந்த அன்பான சபை வேகமாக வளர்ந்து பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டிய போது பாலோமின்யாவில் மற்றொரு சபை உருவானது. இந்த சமயத்தில்தான் ஐரின் நோய்வாய்ப்பட்டாள். அவள் என்ன சொன்னாள் என்பதே நினைவில்லாதளவுக்கு சில சமயங்களில் மறதி ஏற்பட தொடங்கியதை முதலில் கவனிக்க ஆரம்பித்தேன்; சில சமயங்களில் வீடு திரும்ப வழி தெரியாமல் திண்டாடியிருக்கிறாள். சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்தும் அவளுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமானது.
வருத்தகரமாக, 1990-ல் இங்கிலாந்து திரும்பி செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று; என் அக்கா ஐவீ எங்களை அன்புடன் தன் வீட்டில் தங்க வைத்துக் கொண்டாள். நான்கு வருடங்கள் கழிந்து தன் 81-வது வயதில் ஐரின் இறந்தாள். முழுநேர ஊழியத்தை நான் தொடர்ந்து செய்கிறேன்; என் சொந்த ஊரிலுள்ள மூன்று சபைகளில் ஒன்றில் மூப்பராக சேவை செய்கிறேன். ஸ்பானிய மொழி பேசும் தொகுதியை உற்சாகப்படுத்த அவ்வப்போது மான்செஸ்டருக்கும் செல்வேன்.
இருதயத்தை மகிழ்விக்கும் அனுபவம் ஒன்றை சமீபத்தில் பெற்றேன்; பல ஆண்டுகளுக்கு முன்பு என் ஃபோனோகிராஃப் மெஷினில் வீட்டுக்காரர்களுக்கு ஐந்து நிமிட பிரசங்கங்களை போட்டுக் காட்டிய ஒரு சந்தர்ப்பம்தான் அந்த அனுபவத்தின் ஆரம்பம். பள்ளி சிறுமி ஒருத்தி தன் அம்மாவுக்குப் பின்னால் நின்றுகொண்டு அந்த செய்தியை கேட்டது எனக்கு இன்றும் நன்கு நினைவிருக்கிறது.
பின்னர் அந்தச் சிறுமி கனடாவிற்குக் குடிமாறிப் போனாள்; ரங்கர்னில் வசிக்கும் அவளுடைய தோழி இப்போது யெகோவாவின் சாட்சியாக இருக்கிறாள். அந்தத் தோழிக்கு அவள் தொடர்ந்து கடிதம் எழுதி வந்தாள்; சமீபத்தில் எழுதிய கடிதத்தில், இரண்டு சாட்சிகள் தன்னை வந்து சந்தித்ததை குறிப்பிட்டிருந்தாள். அவர்கள் உபயோகித்த வார்த்தைகள், பதிவு செய்யப்பட்ட ஐந்து நிமிட பிரசங்கத்தில் அவள் கேட்டிருந்ததை எதிர்பாராத விதத்தில் நினைப்பூட்டியதாம். இதுதான் சத்தியம் என்பதை உணர்ந்தாளாம். இப்போதோ யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட சாட்சியாக இருக்கிறாளாம்; 60-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு தன் அம்மாவின் வீட்டுக்கு வந்த அந்த இளைஞருக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கும்படியும் அவள் எழுதியிருந்தாள்! சத்தியத்தின் விதைகள் எப்படி வேர் பிடித்து வளரும் என்பது உண்மையில் நம் யாருக்குமே தெரியாதுதான்.—பிரசங்கி 11:6.
ஆம், யெகோவாவின் அருமையான ஊழியத்தில் செலவிட்ட என் வாழ்க்கையை நான் மிகுந்த நன்றியுடன் திரும்பி பார்க்கிறேன். 1931-ல் ஒப்புக்கொடுத்தது முதல் யெகோவாவின் ஜனங்கள் கூடிவரும் மாநாடுகள் ஒன்றைக்கூட தவறவிட்டதில்லை. எனக்கும் ஐரினுக்கும் பிள்ளைகள் இல்லைதான், ஆனால் ஆவிக்குரிய அர்த்தத்தில் 150-க்கும் அதிகமான மகன்களையும் மகள்களையும் பெற்றிருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன்; இவர்கள் எல்லாரும் நம் பரம தந்தையாகிய யெகோவாவை சேவிக்கிறார்கள். என் அருமை மனைவி சொன்ன விதமாக ஊழியம் செய்வதற்குக் கிடைத்த விசேஷித்த சிலாக்கியங்கள் உண்மையில் ஈடிணையற்ற ஆனந்தத்தை அளித்திருக்கின்றன.
[அடிக்குறிப்புகள்]
a ஹில்ட பஜெட் என்பவரின் வாழ்க்கை சரிதை “என் பெற்றோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுதல்” என்ற தலைப்பில் காவற்கோபுரம், அக்டோபர் 1, 1995, பக்கங்கள் 19-24-ல் வெளிவந்தது.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 24-ன் படம்]
1900-களின் ஆரம்பத்தில் அம்மா
[பக்கம் 24, 25-ன் படம்]
இடது: 1940-ல் இங்கிலாந்திலுள்ள லீட்ஸில் ஹில்ட பஜெட், நான், ஐரின், ஜாய்ஸ் ரோலே
[பக்கம் 24, 25-ன் படம்]
மேலே: ஐரினும் நானும் எங்கள் ட்ரெய்லர் வீட்டின் முன்பாக
[பக்கம் 27-ன் படம்]
1952-ல் வேல்ஸிலுள்ள கார்டிஃபில் ஒரு பொதுப் பேச்சை விளம்பரப்படுத்துதல்