ருமேனியாவில் பைபிள் சத்தியத்தைக் கற்றேன்
கோல்டி ரோமோஷியன் சொன்னபடி
சுமார் 50 வருடங்களில் முதல் முறையாக 1970-ல், நான் ருமேனியாவில் இருந்த என் உறவினர்களைச் சென்று சந்தித்தேன். கம்யூனிஸ்ட் கொடுங்கோலாட்சியில் மக்கள் வாழ்ந்துவந்திருக்கின்றனர்; நான் என்ன பேசுகிறேனோ அதைக் குறித்து கவனமாக இருக்கும்படியாக நான் இடைவிடாமல் எச்சரிக்கப்பட்டேன். பின்பு, எங்களுடைய சொந்த கிராமத்தின் அரசாங்க அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அதிகாரி என்னை உடனடியாக தேசத்தைவிட்டு வெளியேறிவிடும்படியாக அவசரப்படுத்தினார். ஏன் அவசரப்படுத்தினார் என்பதை நான் விளக்குவதற்கு முன்பாக, ருமேனியாவில் நான் எவ்வாறு பைபிள் சத்தியத்தைக் கற்றேன் என்பதை உங்களுக்கு சொல்கிறேன்.
நான் 1903-ல் மார்ச் 3-ஆம் தேதி சாலாவ் நகரத்துக்கு அருகே வடமேற்கு ருமேனியாவில் ஆர்டிலெக் என்ற கிராமத்தில் பிறந்தேன். நாங்கள் அழகிய சுற்றுப்புறத்தில் வாழ்ந்துவந்தோம். தண்ணீரும் காற்றும் தூய்மையாக இருந்தன. எங்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை நாங்களே விளைவித்துக்கொண்டோம், பொருள் சம்பந்தமாக எங்களுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. என்னுடைய சிறு வயதில், தேசத்தில் அமைதி இருந்தது.
மக்கள் மிகவும் மதப்பற்றுள்ளவர்களாக இருந்தனர். உண்மையில், என்னுடைய குடும்பத்தில் மூன்று வித்தியாசமான மதத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். என்னுடைய அப்பத்தாள் ஆர்த்தடாக்ஸ் கத்தோலிக்கராக இருந்தார், அம்மாச்சி அட்வென்டிஸ்ட்டாகவும், என்னுடைய பெற்றோர் பாப்டிஸ்டுகளாகவும் இருந்தனர். அவர்களுடைய எந்த மதத்திலும் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால், நான் ஒரு நாத்தீகராக ஆகிவிடுவேன் என்பதாக என் குடும்பத்தார் சொன்னார்கள். ‘ஒரே கடவுள் இருந்தால், ஒரே ஒரு மதம் மாத்திரமே இருக்கவேண்டும்—ஒரே குடும்பத்தில் மூன்று அல்ல’ என்பதாக நான் நினைத்தேன்.
மதத்தில் நான் கண்ட காரியங்கள் என்னை குழப்பின. உதாரணமாக, பாதிரியார் சர்ச்சுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை வசூல்செய்யவே வீடுகளுக்கு வந்தார். மக்களிடம் கொடுப்பதற்கு பணம் இல்லாமல் போனபோது, அதற்கு பதிலாக அவர்களிடமிருந்த மிகச் சிறந்த கம்பள சால்வைகளை அவர் எடுத்துக்கொண்டார். கத்தோலிக்க சர்ச்சில், பாட்டி, மரியாளின் ஒரு படத்துக்கு முன்பாக மண்டியிட்டு ஜெபிப்பதை நான் கவனித்தேன். ‘ஏன் ஒரு படத்துகிட்டே போய் ஜெபிக்கணும்?’ என்பதாக நான் நினைத்தேன்.
தொல்லைநிறைந்த காலங்கள்
அப்பா 1912-ல் ஒரு கடனை அடைக்க வேண்டி பணம் சம்பாதிப்பதற்காக ஐக்கிய மாகாணங்களுக்குச் சென்றுவிட்டார். அதற்குப்பின் விரைவில் போர் தொடங்கியது, எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் போருக்குச் சென்றுவிட்டார்கள்—பெண்களும், பிள்ளைகளும் வயதான ஆண்களும் மட்டுமே அங்கே தங்கியிருந்தனர். கொஞ்ச காலத்துக்கு எங்களுடைய கிராமம் ஹங்கேரிய ஆட்சியின்கீழ் வந்தது, ஆனால் ருமேனிய போர்வீரர்கள் திரும்பிவந்து கிராமத்தை மீட்டுக்கொண்டார்கள். அவர்கள் எங்களை உடனடியாக வெளியேறும்படியாக உத்தரவிட்டார்கள். என்றபோதிலும், உடைமைகளையும் சிறுபிள்ளைகளையும் ஒரு மாட்டுவண்டியில் ஏற்றும் அவசரத்திலும் குழப்பத்திலும் உடன் அழைத்துச் செல்ல என்னை மறந்துவிடார்கள். ஐந்து பிள்ளைகளில் நான் மூத்தவள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அங்கேயே தங்கிவிட்ட பக்கத்து வீட்டிலிருந்த ஒரு வயதான மனிதரிடம் நான் ஓடினேன்; அவர் “வீட்டுக்குப் போ. உன் கதவுகளைப் பூட்டிக்கொள், யாரையும் உள்ளே வர அனுமதிக்காதே,” என்பதாக சொன்னார். நான் உடனடியாக கீழ்ப்படிந்தேன். போகிற அவசரத்தில் மறந்துவிட்டுப் போன கொஞ்சம் கோழி சூப்பையும் சமைத்த முட்டைக்கோசையும் சாப்பிட்டப்பின், என்னுடைய படுக்கையின் பக்கத்தில் மண்டியிட்டு நான் ஜெபித்தேன். விரைவில் நான் அயர்ந்து தூங்கிப்போனேன்.
நான் என் கண்களைத் திறந்தபோது, பொழுது விடிந்திருந்தது, “ஓ, உமக்கு நன்றி, கடவுளே! நான் உயிரோடிருக்கிறேன்,” என்பதாக நான் சொன்னேன். இரவு முழுவதும் நடந்த துப்பாக்கி சூட்டினால் சுவர்கள் முழுவதிலும் துப்பாக்கி துளைகள் இருந்தன. அடுத்த கிராமத்தில் அவர்களோடு நான் இல்லாததை அம்மா உணர்ந்தபோது, என்னை அழைத்துவர ஜார்ஜ் ரோமோஷியன் என்ற ஒரு இளைஞனை அனுப்பி வைத்தார்கள். அவர் என்னைக் கண்டுப்பிடித்து என் குடும்பத்தோடு என்னைச் சேர்த்துவைத்தார். சீக்கிரத்தில் நாங்கள் எங்களுடைய சொந்த கிராமத்துக்கே திரும்பிவந்து அங்கே வாழத் தொடங்கினோம்.
பைபிள் சத்தியத்துக்கான என்னுடைய ஆசை
என்னுடைய அம்மா நான் ஒரு பாப்டிஸ்டாக முழுக்காட்டப்படவேண்டும் என்பதாக விரும்பினார்கள், ஆனால் நான் அதை விரும்பவில்லை; ஏனென்றால் அன்புள்ள ஒரு கடவுள் மக்களை என்றுமாக நரகத்தில் எரிப்பார் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதை விளக்க முயற்சிசெய்பவர்களாய் அம்மா இவ்வாறு சொன்னார்கள்: “ஆம், அவர்கள் கெட்டவர்களாக இருந்தால் மட்டுமே.” ஆனால், “அவர்கள் கெட்டவர்களாக இருந்தால், அவர்களை அழித்துவிடுங்கள், ஆனால் அவர்களை சித்திரவதை செய்யாதீர்கள். நான் ஒரு நாயையோ ஒரு பூனையையோகூட சித்திரவதை செய்வதில்லை,” என்பதாக பதிலளித்தேன்.
வசந்த காலத்தின் ஒரு ரம்மியமான நாளில் எனக்கு 14 வயதாக இருக்கையில், மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச்செல்ல அம்மா என்னை அனுப்பினது எனக்கு நினைவிருக்கிறது. எனக்குப் பின்னாக ஒரு காடு, நான் ஒரு ஆற்றின் அருகே புல்வெளியில் படுத்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் வானத்தை அண்ணாந்து பார்த்து, “கடவுளே, நீர் அங்கே இருப்பது எனக்குத் தெரியும்; ஆனால் எந்த மதத்தையும் எனக்குப் பிடிக்கவில்லை. கட்டாயமாக நீர் ஒரு நல்ல மதத்தைக் கொண்டிருக்க வேண்டும்,” என்பதாக சொன்னேன்.
கடவுள் என் ஜெபத்தை கேட்டார் என்பதை உண்மையாக நம்புகிறேன், ஏனென்றால் 1917-ல் அதே கோடையில், இரண்டு பைபிள் மாணாக்கர்கள் (அப்போது யெகோவாவின் சாட்சிகள் அவ்விதமாகவே அழைக்கப்பட்டார்கள்) எங்களுடைய கிராமத்துக்கு வந்தார்கள். அவர்கள் கோல்போர்ட்டர்களாக அல்லது முழுநேர ஊழியர்களாக இருந்தார்கள்; அவர்கள் பாப்டிஸ்டு சர்ச்சில் ஒரு ஆராதனை நடந்துகொண்டிருந்த சமயத்தில் அங்கே வந்தார்கள்.
ருமேனியாவில் பைபிள் சத்தியம் பரவுகிறது
ஐக்கிய மாகாணங்களில் பைபிள் மாணாக்கர்களாக மாறிவிட்டிருந்த கேரல் சாபோவும் ஜோசிப் கிஸ்-ம் சில ஆண்டுகளுக்கு முன்பாக, 1911-ல், பைபிள் சத்தியத்தை அறிமுகப்படுத்துவதற்காக ருமேனியாவுக்கு திரும்பிவந்திருந்தார்கள். அவர்கள் எங்களுடைய கிராமத்தின் தென்கிழக்கே 160 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலிருந்த டிர்கு மியூர்ஸ்-க்கு குடிவந்திருந்தார்கள். சில வருடங்களிலேயே, சொல்லர்த்தமாகவே நூற்றுக்கணக்கான மக்கள் ராஜ்ய செய்திக்கு செவிசாய்த்து கிறிஸ்தவ ஊழியத்தைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.—மத்தேயு 24:14.
எங்களுடைய ஆர்டிலெக் கிராமத்திலுள்ள பாப்டிஸ்டு சர்ச்சுக்கு இரண்டு இளம் பைபிள் மாணாக்கர்கள் வந்தபோது, 18 வயதே இருந்த ஜார்ஜ் ரோமோஷியன் ஆராதனையை நடத்திக்கொண்டு ரோமர் 12:1-ன் அர்த்தத்தை விளக்க முயற்சிசெய்து கொண்டிருந்தார். கடைசியில், இளம் கோல்போர்ட்டர்களில் ஒருவர் எழுந்து நின்று, “சகோதரர்களே, நண்பர்களே, இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு எதை விளக்க முயற்சிசெய்கிறார்?” என்பதாக கேட்டார்.
அவர் பேசியதை கேட்டபோது நான் மிகவும் கிளர்ச்சியடைந்தேன்! ‘இந்த ஆட்களுக்கு பைபிளை எவ்வாறு விளக்குவது என்பது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்,’ என்பதாக நான் நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கிருந்த பெரும்பாலானவர்கள், “கள்ளத் தீர்க்கதரிசிகள்! நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும்!” என்பதாக கூச்சல்போட்டார்கள். அங்கே இதைத் தொடர்ந்து ஒரு அமளி உண்டாயிற்று. ஆனால் அப்போது ஜார்ஜின் அப்பா எழுந்திருந்து, “எல்லாரும் வாயை மூடுங்கள்! இது என்ன செயல்—குடிவெறியில் பேசுவது போல? இந்த மனிதர்கள் நம்மிடம் சொல்வதற்கு ஏதாவது விஷயமிருந்து உங்களுக்கு கேட்க விருப்பமில்லையென்றால், நான் அவர்களை என்னுடைய வீட்டுக்கு அழைக்கப் போகிறேன். யாருக்கு விருப்பமிருந்தாலும் வரலாம்” என்பதாக சொன்னார்.
கிளர்ச்சியுற்றவளாய், நான் வீட்டுக்கு ஓடிப்போய் நடந்ததை அம்மாவிடம் சொன்னேன். ரோமோஷியன் வீட்டுக்கு வரும்படியாக கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். எரிகிற அக்கினி எதுவும் இல்லை என்பதை பைபிளிலிருந்து கற்றபோதும் என்னுடைய சொந்த ருமேனியன் பைபிளில் கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை பார்த்தபோதும் அந்த மாலைபொழுதில் நான் எவ்வளவாக கிளர்ச்சியடைந்தேன்! ஒவ்வொரு ஞாயிறும் எங்களுக்குப் போதிப்பதற்காக ரோமோஷியன் வீட்டில் ஒரு பைபிள் மாணாக்கர் எங்களைச் சந்திப்பதற்கு கோல்போர்ட்டர்கள் ஏற்பாடுசெய்தனர். அடுத்துவந்த கோடையில், 15 வயதாக இருக்கையில், யெகோவாவுக்கு என்னுடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக நான் முழுக்காட்டப்பட்டேன்.
காலப்போக்கில், உண்மையில் முழு ப்ரோடன் குடும்பத்தினரும் ரோமோஷியன் குடும்பத்தினரும் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தனர். எங்களுடைய கிராமத்திலிருந்த இன்னும் அநேகரும் அதையே செய்தார்கள்; இதில் முன்பு பாப்டிஸ்டு சர்ச்சாக பயன்படுத்தப்பட தங்கள் வீட்டைக் கொடுத்திருந்த இளம் தம்பதினரும் அடங்குவர். அதற்குப்பின் பைபிள் மாணாக்கர்கள் படிப்புக்காக கூடிவரும் ஒரு இடமாக அதை அவர்கள் மாற்றினர். பைபிள் சத்தியம் அருகிலிருந்த கிராமங்களுக்கு வேகமாக பரவியது, 1920-க்குள் ருமேனியாவில் சுமார் 1,800 ராஜ்ய பிரஸ்தாபிகள் இருந்தனர்!
ஐக்கிய மாகாணங்களுக்கு
நாங்கள் கற்றுக்கொண்ட காரியங்களை என்னுடைய தந்தை பீட்டர் ப்ரோடனோடு பகிர்ந்துகொள்ள நான் ஆவலாயிருந்தேன். ஆனால், ஆச்சரியமூட்டும் விதமாக, நாங்கள் அவருக்கு எழுதுவதற்கு முன்பாகவே, அவர் தான் யெகோவாவுக்கு முழுக்காட்டப்பட்ட ஒரு ஊழியராக ஆகிவிட்டிருப்பதை எங்களுக்குத் தெரிவித்த கடிதத்தை அவரிடமிருந்து நாங்கள் பெற்றோம். அவர் ஒஹாயோவில் அக்ரானில் பைபிள் மாணாக்கர்களோடு பைபிள் படித்திருந்தார், நாங்கள் அனைவரும் ஐக்கிய மாகாணங்களுக்கு வந்துவிடும்படி அவர் விரும்பினார். என்றாலும் அம்மா ருமேனியாவிலிருந்து வர மறுத்துவிட்டார். ஆகவே, 1921-ல் அப்பா எனக்கு அனுப்பிய பணத்தை வைத்து நான் அக்ரானில் அவரோடு தங்கப் போனேன். ஜார்ஜ் ரோமோஷியனும் அவருடைய அண்ணனும் ஒரு வருடத்துக்கு முன்பாக ஐக்கிய மாகாணங்களுக்கு சென்றுவிட்டிருந்தார்கள்.
நியூ யார்க்கிலுள்ள எல்லஸ் தீவில் நான் கப்பலில் வந்திறங்கியபோது, குடிபுகு நிலைய அதிகாரிக்கு ஆரிலியா என்ற என்னுடைய பெயருக்கு இணையான ஆங்கில வார்த்தை தெரியாமல் இருந்ததால், அவர் “உன்னுடைய பெயர் கோல்டி,” என்பதாகச் சொன்னார். அப்போது முதற்கொண்டு அதுவே என் பெயராக ஆனது. அதற்குப்பின், விரைவில், 1921, மே 1-ல் ஜார்ஜ் ரோமோஷியனும் நானும் திருமணம் செய்துகொண்டோம். சுமார் ஒரு வருடத்துக்குப் பிறகு, அப்பா ருமேனியாவுக்கு திரும்பினார், 1925-ல் என்னுடைய தங்கை மேரியை அக்ரானுக்கு அழைத்துவந்தார். பின்னால் அப்பா, அம்மாவோடும் குடும்பத்திலுள்ள மற்றவர்களோடும் சேர்ந்து இருக்க ருமேனியாவுக்குத் திரும்பினார்.
ஐக்கிய மாகாணங்களில் எங்களுடைய ஆரம்பகால ஊழியம்
ஜார்ஜ் யெகோவாவுக்கு மிகவும் உண்மையுள்ள, பக்தியுள்ள ஊழியராக இருந்தார். 1922 மற்றும் 1932-க்கு இடைப்பட்ட காலத்தில் நான்கு அழகான பெண்பிள்ளைகளால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம்—எஸ்தர், ஆன், கோல்டி எலிசபெத் மற்றும் ஐரீன். அக்ரானில் ஒரு ருமேனிய சபை ஆரம்பிக்கப்பட்டது, ஆரம்பத்தில் எங்களுடைய வீட்டில்தான் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கடைசியில், ஆறு மாதத்துக்கு ஒரு முறை நியூ யார்க், புருக்லினிலுள்ள பைபிள் மாணாக்கர்களின் உலக தலைமைக் காரியாலயத்திலிருந்து ஒரு பிரதிநிதி எங்களுடைய சபையை விஜயம்செய்து எங்களோடு தங்கினார்.
அநேக ஞாயிற்றுக்கிழமைகளை நாங்கள் முழு நாளும் பிரசங்க வேலைக்காகவே அர்ப்பணித்தோம். எங்களுடைய புத்தக பைகளையும் மதிய உணவையும் எடுத்துக்கொண்டு எங்களுடைய பெண் பிள்ளைகளை எங்களுடைய மாடல் T போர்டு காரில் ஏற்றிக்கொண்டு கிராமப் புறங்களுக்குச் சென்று பிரசங்கிப்பதில் நாளைக் கழித்தோம். பின்பு, மாலையில், நாங்கள் காவற்கோபுர படிப்புக்குச் சென்றோம். எங்களுடைய பெண் பிள்ளைகள் பிரசங்க வேலையை மிகவும் நேசிக்கிறவர்களானார்கள். 1931-ல் பைபிள் மாணாக்கர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற தங்களுடைய தனிச்சிறப்புப் பெயரை ஏற்றுக்கொண்டபோது நான் ஒஹாயோ, கொலம்பஸில் அங்கு இருந்தேன்.
எனக்குத் தேவைப்பட்ட திருத்தம்
சில ஆண்டுகளுக்குப் பின்னர், அப்போது உவாட்ச் டவர் சங்கத்தின் தலைவராக இருந்த ஜோசஃப் எஃப். ரதர்போர்டிடம் நான் கோபமாக இருந்தேன். புதிதாக முழுக்காட்டப்பட்டிருந்த ஒரு சகோதரர், தன்னுடைய பிரச்சினையை சகோதரர் ரதர்போர்டு சரியாக செவிகொடுத்துக் கேட்காமல் தன்னிடம் நியாயமில்லாமல் நடந்துகொண்டதாக நினைத்தார். சகோதரர் ரதர்போர்டு செய்தது தவறு என்பதாக நான் நினைத்தேன். ஆம், ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை என்னுடைய சகோதரி மேரியும் அவளுடைய கணவன் டேன் பெஸ்ட்ரூவும் எங்களைச் சந்திக்க வந்திருந்தார்கள். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு டேன், “கூட்டத்துக்குப் போக நாம் தயாராக வேண்டும்,” என்பதாகச் சொன்னார்.
“நாங்கள் இனிமேல் கூட்டங்களுக்கு போகமாட்டோம், எங்களுக்கு சகோதரர் ரதர்போர்டின்மீது கோபம்,” என்பதாக நான் சொன்னேன்.
டேன் தன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு குறுக்க நெடுக்க நடந்துவிட்டு பின்னர், “நீங்கள் முழுக்காட்டப்பட்ட போது உங்களுக்கு சகோதரர் ரதர்போர்டை தெரியுமா?” என்பதாக கேட்டார்.
“தெரியாது,” என்பதாக நான் பதிலளித்தேன். “நான் ருமேனியாவில் முழுக்காட்டப்பட்டேன்.”
“நீங்கள் ஏன் முழுக்காட்டுதல் பெற்றீர்கள்?” என்று அவர் கேட்டார்.
“ஏனென்றால் யெகோவாவே உண்மையான கடவுள் என்பதை அறிந்துகொண்டேன், மேலும் அவரைச் சேவிப்பதற்காக நான் என்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க விரும்பினேன்,” என்பதாக பதிலளித்தேன்.
“அதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்!” என்பதாக அவர் பதிலளித்தார். “சகோதரர் ரதர்போர்டு சத்தியத்தை விட்டுபோய்விட்டால், நீங்களும் போய்விடுவீர்களா?”
“ஒருபோதும் அப்படி செய்யமாட்டேன்!” என்று நான் சொன்னேன். அது என் மனக்கண்ணைத் திறந்தது, “எல்லாரும் கூட்டத்துக்கு தயாராகுங்கள்,” என்பதாக நான் சொன்னேன். அப்போது முதற்கொண்டு நாங்கள் ஒருபோதும் அதை நிறுத்தவில்லை. என்னுடைய கொழுந்தனுடைய அன்பான திருத்தத்துக்காக நான் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவளாக இருந்தேன்!
பொருளாதார மந்தத்தின்போது சமாளித்தல்
1930-களில் பொருளாதார மந்தம் ஏற்பட்ட போது, அது கடினமான ஒரு காலப்பகுதியாக இருந்தது. ஒரு நாள் ஜார்ஜ் வேலையிலிருந்து மிகவும் சோர்வாக வீடு திரும்பினார், ரப்பர் தொழிற்சாலையில் அவருக்கு தற்காலிக வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சொன்னார். “கவலைப்படாதீர்கள், நமக்கு பரலோகத்தில் செல்வந்தராக இருக்கும் ஒரு தகப்பன் இருக்கிறார், அவர் நம்மைக் கைவிடமாட்டார்,” என்பதாக நான் சொன்னேன்.
அதே நாளில் ஜார்ஜ் ஒரு பெரிய கூடை நிறைய காளான்களை வைத்திருந்த ஒரு நண்பனைச் சந்தித்தார். தன்னுடைய நண்பன் அவற்றை எங்கிருந்து பெற்றார் என்பதை ஜார்ஜ் கேட்டு தெரிந்துகொண்டு, ஒரு மரக்கால் அளவு காளான்களோடு வீட்டுக்கு வந்தார். பின்னர் கடைசியாக மீதமிருந்த மூன்று டாலர் பணத்தையும் காளான்களை அடைப்பதற்கு சிறிய கூடைகள் வாங்குவதற்கு செலவழித்துவிட்டார். “பால் குடிக்கும் சிறு பெண் பிள்ளைகள் நமக்கிருக்கும்போது நீங்கள் பணத்தை எப்படி அப்படி செலவழிக்கலாம்?” என்பதாக நான் கேட்டேன்.
“கவலைப்படாதே, நான் சொல்வதை மாத்திரம் செய்,” என்பதாக அவர் பதிலளித்தார். அடுத்த சில வாரங்கள் காளான்களைச் சுத்தம் செய்து அடைக்கும் ஒரு சிறிய தொழிலை நாங்கள் எங்கள் வீட்டில் நடத்தினோம். நாங்கள் அவற்றை பெரிய உணவகங்களுக்கு கொண்டு சென்று விற்று வீட்டுக்கு நாளொன்றுக்கு 30 முதல் 40 டாலர் பணத்தோடு திரும்பினோம், அப்போது அது எங்களுக்கு அதிகமான பணமாக இருந்தது. தன்னுடைய நிலத்திலிருந்து காளான்களை எடுத்துக்கொள்ள எங்களுக்கு அனுமதிகொடுத்த விவசாயி தான் அங்கு 25 வருடங்களாக வாழ்ந்துவருவதாகவும், இத்தனை அநேக காளான்களை இதுநாள்வரை பார்த்தது கிடையாது என்பதாகவும் சொன்னார். விரைவில், ரப்பர் தொழிற்சாலையில் திரும்ப ஜார்ஜை வேலைக்கு அழைத்துக்கொண்டார்கள்.
எங்களுடைய விசுவாசத்தை காத்துக்கொள்ளுதல்
1943-ல் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸ்-க்கு நாங்கள் குடிமாறிச்சென்றோம், நான்கு ஆண்டுகளுக்குப்பின் நாங்கள் எல்செனாரில் குடியேறினோம். அங்கே ஒரு மளிகை கடையை திறந்து முழு குடும்பமாக மாறிமாறி அதை கவனித்துக்கொண்டோம். அந்தச் சமயத்தில், எல்செனார் சுமார் 2,000 பேர் அடங்கிய ஒரு சிறிய நகரமாகவே இருந்தது; எங்களுடைய கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவதற்காக நாங்கள் 30 கிலோமீட்டர் பயணம்செய்து மற்றொரு நகரத்துக்குச் செல்லவேண்டியதாக இருந்தது. 1950-ல் எல்செனாரில் ஒரு சிறிய சபை உருவாக்கப்பட்டதைக் கண்டு நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன்! இப்பொழுது அந்தப் பகுதியில் 13 சபைகள் இருக்கின்றன.
1950-ல் (இப்பொழுது அநேகரால் பெத் என்பதாக அறியப்பட்டிருக்கும்) எங்கள் மகள் கோல்டி எலிசபெத் நியூ யார்க், செளத் லான்சிங்-ல் உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியட்டில் பட்டம் பெற்று, வெனிசுவேலாவுக்கு ஒரு மிஷனரியாக நியமனம் பெற்றாள். 1955-ல் எங்களுடைய இளைய மகள் ஐரீன், தன்னுடைய கணவர் வட்டார வேலையில் ஒரு பிரயாண ஊழியராக சேவிக்கும்படியாக அழைக்கப்பட்டதைக் குறித்து சந்தோஷப்பட்டாள். பின்னர் 1961-ல், நியூ யார்க், செளத் லான்சிங்கில் ராஜ்ய ஊழியப்பள்ளியில் ஆஜரானதற்குப் பிறகு, அவர்கள் தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டார்கள். சில சமயங்களில் என்னுடைய மகள்களைப் பார்க்காமல் ரொம்ப வருத்தப்பட்டால் நான் அழுதுவிடுவேன், ஆனால், ‘இதைத்தானே அவர்கள் செய்யவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்திருக்கிறது,’ என்பதை நினைத்துக்கொள்வேன். உடனே நான் என்னுடைய புத்தகப் பையை எடுத்துக்கொண்டு பிரசங்க வேலை செய்வதற்குக் கிளம்பிவிடுவேன். நான் எப்போதும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன்.
1966-ல் என்னுடைய அன்பு கணவர் ஜார்ஜ்-க்கு பக்கவாதம் ஏற்பட்டது. உடல் நலப் பிரச்சினைகளின் காரணமாக வெனிசுவேலாவிலிருந்து வந்திருந்த பெத், அவரைக் கவனித்துக்கொள்வதில் உதவியாக இருந்தாள். ஜார்ஜ் அதற்கடுத்த வருடம் இறந்துபோனார், அவர் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார், அவருடைய பரலோக வெகுமதியைப் பெற்றுக்கொண்டுவிட்டார் என்ற உண்மையால் நான் ஆறுலடைந்தேன். அதன் பிறகு, ராஜ்ய பிரசங்கிகளுக்கான தேவை அதிகமாக இருந்த இடத்தில் சேவை செய்வதற்காக பெத் ஸ்பெய்னுக்கு போனாள். என்னுடைய மூத்த மகள் எஸ்தர், புற்றுநோயினால் வியாதிப்பட்டு 1977-ல் இறந்துபோனாள், 1984-ல் ஆன் இரத்தப் புற்றுநோயால் இறந்துபோனாள். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை முழுவதிலுமாக யெகோவாவுக்கு உண்மையுள்ள ஒரு ஊழியக்காரியாக இருந்திருக்கிறார்கள்.
ஆன் இறப்பதற்குள், பெத்தும் ஐரீனும் தங்களுடைய அயல்நாட்டு பிரசங்க வேலை நியமிப்புகளிலிருந்து திரும்பிவிட்டிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய சகோதரிகளை கவனித்துக்கொள்ள உதவியாக இருந்திருக்கிறார்கள், நாங்கள் அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்துபோயிருந்தோம். கொஞ்ச காலத்துக்குப் பின் நான் என்னுடைய பெண் பிள்ளைகளிடம், “சரி, அது போதும்! அருமையான பைபிள் வாக்குறுதிகளின் மூலமாக நாம் மற்றவர்களை ஆறுதல்படுத்தியிருக்கிறோம். நாம் இப்பொழுது ஆறுதலடைய இடங்கொடுக்கவேண்டும். யெகோவாவைச் சேவிப்பதிலிருக்கும் நம்முடைய சந்தோஷத்தை நம்மிடமிருந்து பறித்துக்கொள்ள சாத்தான் விரும்புகிறான், ஆனால் அதைச் செய்ய நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது,” என்பதாக சொன்னேன்.
ருமேனியாவில் எங்களுடைய உண்மையுள்ள குடும்பம்
என்னுடைய தங்கை மேரியும் நானும் 1970-ல் எங்களுடைய குடும்பத்தாரைச் சந்திப்பதற்காக ருமேனியாவுக்கு மறக்கமுடியாத அந்தப் பயணத்தை மேற்கொண்டோம். எங்களுடைய ஒரு தங்கை மரித்துவிட்டிருந்தாள், ஆனால் எங்களுடைய தம்பி ஜானையும் தங்கை லோடோவீக்காவையும் நாங்கள் சென்று பார்த்தோம், அவர்கள் இன்னும் ஆர்டிலெக் கிராமத்திலேயே இருந்தார்கள். நாங்கள் அங்குச் செல்வதற்குள் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்து அம்மாவும் அப்பாவும் இறந்திருந்தார்கள். அப்பா சபையில் ஒரு தூணாக இருந்தார் என்பதாக அநேகர் எங்களிடம் சொன்னார்கள். ருமேனியாவில் அவருடைய கொள்ளுப் பேரப் பிள்ளைகளில் சிலரும்கூட இப்பொழுது சாட்சிகளாக இருக்கின்றனர். என்னுடைய கணவருடைய சொந்தக்காரரில் பைபிள் சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருந்த அநேகரையும் நாங்கள் சந்தித்தோம்.
1970-ல், ருமேனியா, நிக்கேலி சாசெஸ்கு என்பவரின் கம்யூனிஸ்டு கொடுங்கோலாட்சியின் கீழ் வந்தது, யெகோவாவின் சாட்சிகள் மிகவும் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு வந்தார்கள். என்னுடைய சகோதரன் ஜானின் மகன் ஃபூளோரும் என்னுடைய மற்ற உறவினர்களும் என்னுடைய கணவரின் முதல் கஸின் கேபர் ரோமோஷியனும்கூட தங்களுடைய கிறிஸ்தவ விசுவாசத்தின் காரணமாக சித்திரவதை முகாம்களில் பல ஆண்டுகளைக் கழித்தனர். நியூ யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்துக்குக் கடிதங்களை எடுத்துச்செல்லும் வேலையை எங்களிடம் ஒப்படைக்கும்போது, நாங்கள் தேசத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டோம் என்பதை கேள்விப்படும் வரையாக எங்களுடைய ருமேனிய சகோதரர்கள் தாங்கள் நிம்மதியாக இருக்கமுடியாது என்பதாக சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை!
எங்களுடைய விசாவின் தேதி முடிவடைந்துவிட்டதை நாங்கள் உணர்ந்தபோது, ஆர்டிலெக்கிலுள்ள அரசாங்க அலுவலகத்துக்கு சென்றோம். அது ஒரு வெள்ளிக்கிழமை பிற்பகலாக இருந்தது, பணியில் ஒரு அதிகாரி மட்டுமே இருந்தார். நாங்கள் யாரைப் பார்க்க வந்திருந்தோம் என்பதையும் எங்கள் சகோதரன் மகன் சித்திரவதை முகாமிலிருந்தவர் என்பதையும் அறிந்துகொண்டபோது, அவர், “அம்மா, உடனடியாக இங்கிருந்து போயிடுங்க!” என்பதாக சொன்னார்.
“ஆனால் இன்று எந்த இரயிலும் இல்லையே,” என்பதாக என் தங்கை பதிலளித்தாள்.
“பரவாயில்லை, ஒரு பஸ்ஸைப் பிடியுங்கள். ஒரு இரயிலைப் பிடியுங்கள். ஒரு டாக்ஸியைப் பிடியுங்கள். நடந்துபோங்கள். எப்படியாவது சீக்கிரம் போங்கள். எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்!” என்பதாக அவர் அவசரப்படுத்தினார்.
நாங்கள் புறப்பட தயாரானபோது, திரும்பவுமாக அழைக்கப்பட்டோம், அட்டவணைப்படி இல்லாமல் ஒரு இராணுவ இரயில் மாலை 6:00 மணிக்கு வரவிருப்பதாக சொல்லப்பட்டோம். அது தெய்வச் செயலாகவே நிரூபித்தது! வழக்கமாக போகும் இரயிலில் எங்களுடைய டாக்குமெண்டுகள் அடிக்கடி சரிபார்க்கப்படும், ஆனால் இந்த இரயில் இராணுவத்தைச் சேர்ந்த ஆட்களை மட்டுமே ஏற்றிச்சென்றதால், இரயிலில் இருந்தவர்களில் நாங்கள் இருவர் மாத்திரமே இராணுவம் சாராத ஆட்களாக இருந்தோம், எங்களுடைய பாஸ்போர்டுகளைப் பார்க்க வேண்டும் என்று யாருமே கேட்கவில்லை. ஏதோ அதிகாரிகளின் பாட்டிமாராக நாங்கள் இருக்கவேண்டும் என்பதாக அவர்கள் ஒருவேளை எண்ணிக்கொண்டிருக்கலாம்.
அடுத்த நாள் காலை நாங்கள் திமிசோராவில் வந்திறங்கினோம், உறவினருடைய ஒரு நண்பரின் உதவியோடு நாங்கள் எங்கள் விசாக்களைப் பெற்றோம். அடுத்த நாள் நாங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டோம். ருமேனியாவிலுள்ள எங்களுடைய உண்மையுள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளைப்பற்றிய மறக்கமுடியாத அநேக இனிய நினைவுகளைச் சுமந்துகொண்டு நாங்கள் வீடுதிரும்பினோம்.
நாங்கள் ருமேனியாவிலிருந்து திரும்பிய பிறகு அதை அடுத்து வந்த வருடங்களில், இரும்புத் திரைக்குப் பின்னால் செய்யப்பட்டு வரும் பிரசங்க வேலையைப் பற்றி வெகு சில விவரங்களையே கேள்விப்பட்டோம்; என்றபோதிலும், நிலைமை என்னவாக இருந்தாலும் நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் நம்முடைய கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கிருந்தது. எங்கள் எண்ணம் வீண்போகவில்லை, அவர்கள் அப்படியே இருந்திருக்கிறார்கள்! ஏப்ரல் 1990-ல் யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வமாக ஒரு மத அமைப்பினராக அங்கீகரிக்கப்பட்டார்கள் என்பதை அறிந்துகொண்ட போது அது என்னே சந்தோஷமாக இருந்தது! அடுத்த கோடைகாலத்தின் போது ருமேனியாவில் நடைபெற்ற மாநாடுகள் குறித்த அறிக்கைகளைப் பெற்று மகிழ்ச்சியில் திளைத்தோம். ஏன், எட்டு நகரங்களில் 34,000 பேருக்கு அதிகமானவர்கள் ஆஜராயிருந்தனர், 2,260 பேர் முழுக்காட்டப்பட்டனர்! இப்பொழுது பிரசங்க வேலையில் 35,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்குகொள்கிறார்கள்; கடந்த வருடம் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு நாளுக்கு 86,034 பேர் ஆஜராயிருந்தார்கள்.
சத்தியம் இன்னும் எனக்கு பொக்கிஷமே
சில வருடங்களாக நான் நினைவு ஆசரிப்பின் போது சின்னங்களில் பங்குகொள்வதை நிறுத்திவிட்டேன். மிகவும் தகுதிவாய்ந்த சகோதரர்கள் பங்குகொள்ளாதிருப்பதை நான் கவனித்தபோது, ‘இத்தனை சரளமான பேச்சாளர்களாக மற்றவர்கள் இருக்கும்போது, பரலோகத்தில் தம்முடைய குமாரனோடு உடன் சுதந்தரவாளியாக இருக்கும் சிலாக்கியத்தை யெகோவா ஏன் எனக்கு அளிக்கப்போகிறார்?’ என்பதாக யோசித்தேன். ஆனால் நான் பங்குகொள்ளாதபோது, மிகவும் கலக்கமடைந்தேன். நான் ஏதோவொன்றை மறுத்துக்கொண்டிருப்பது போல இருந்தது. அதிகமான படிப்புக்கும் ஜெபசிந்தனையோடுகூடிய வேண்டுதலுக்கும் பிறகு நான் மறுபடியுமாக பங்குகொள்ள ஆரம்பித்தேன். என்னுடைய சமாதானமும் சந்தோஷமும் திரும்பியது, அவை ஒருபோதும் என்னை விட்டு விலகவில்லை.
இப்பொழுது எனக்கு பார்வை சரியாக இல்லாத போதிலும், பைபிள் மற்றும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் டேப்புகளைப் போட்டு ஒவ்வொரு நாளும் கேட்கிறேன். மேலும் இன்னும் நான் பிரசங்க வேலையில் பங்குகொள்கிறேன். சாதாரணமாக நான் 60 முதல் 100 வரையாக ஒவ்வொரு மாதமும் பத்திரிகைகளை அளிக்கிறேன்; ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் விழித்தெழு! பத்திரிகையின் விசேஷ அளிப்பு திட்டத்தில் பங்கு கொண்டபோது, நான் 323 பத்திரிகைகளை அளித்தேன். என்னுடைய மகள்களின் உதவியோடு என்னால் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும்கூட கலந்துகொள்ள முடிகிறது. நான் தொடர்ந்து மற்றவர்களை ஊக்குவிக்க முடிவதைக் குறித்து சந்தோஷமாயிருக்கிறேன். ராஜ்ய மன்றத்தில் அநேகமாக எல்லாருமே என்னை பாட்டிமா என்பதாக அழைக்கிறார்கள்.
யெகோவாவுக்கு செய்திருக்கும் 79 ஆண்டுகால ஒப்புக்கொடுக்கப்பட்ட சேவையை பின்னோக்கிப் பார்க்கையில், அவருடைய அருமையான சத்தியத்தை அறிந்துகொண்டதற்காகவும் என்னுடைய வாழ்க்கையை அவருடைய சேவையில் பயன்படுத்த என்னை அனுமதித்ததற்காகவும் நான் ஒவ்வொரு நாளும் அவருக்கு நன்றிசெலுத்துகிறேன். இந்தக் கடைசி நாட்களில் கடவுளுடைய செம்மறியாட்டைப்போன்ற ஆட்கள் கூட்டிச்சேர்க்கப்படுவர் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கும் மகத்தான பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைக் காண நான் உயிரோடிருப்பதைக் குறித்து மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.—ஏசாயா 60:22; சகரியா 8:23.
[பக்கம் 23-ன் படம்]
என்னுடைய தங்கை மேரியும் அப்பாவும் நின்றுகொண்டிருக்கிறார்கள், நானும், ஜார்ஜும் எங்களுடைய மகள்கள் எஸ்தரும் ஆனும்
[பக்கம் 24-ன் படம்]
என்னுடைய மகள்கள் பெத் மற்றும் ஐரீனும், ஐரீனின் கணவரும் அவர்களுடைய இரண்டு மகன்களும், அனைவரும் யெகோவாவை உண்மையுடன் சேவித்துவருகிறார்கள்