இயேசு கிறிஸ்து—பூமியில் வாழ்ந்ததற்கு அத்தாட்சி
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயருடைய ஒருவர் வாழ்ந்தார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? ஆம் என சட்டென்று பதிலளிப்பீர்கள், ஆனால் ஏன்? பெரும்பாலோர் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்ததில்லை. இருந்தாலும், அவருடைய சாதனைகளைப் பற்றிய நம்பகமான அறிக்கைகள் அவர் வாழ்ந்ததை நிரூபிக்கின்றன. அவர் வாழ்ந்ததை அவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பறைசாற்றுகின்றன. உதாரணமாக, அணு ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து அநேகர் பயனடைகின்றனர். E=mc2 (ஆற்றலின் அளவானது பொருளின் நிறையை ஒளியின் வேகத்தின் இருமடியால் பெருக்கி வரும் தொகைக்கு சமம்) என்ற ஐன்ஸ்டீனுடைய பிரபலமான சமன்பாடுடன் இது அதிக தொடர்புடையது.
இதே நியாயம் இயேசு கிறிஸ்துவுக்கும் பொருந்துகிறது, பூமியில் வாழ்ந்தவர்களில் மிகவும் செல்வாக்குள்ள நபராக அவர் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். அவரைப் பற்றி எழுதப்பட்டவையும் அவருடைய செல்வாக்கிற்கு காணக்கூடிய அத்தாட்சியும் அவர் வாழ்ந்தார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன. முந்தின கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள சமீபத்திய தொல்லியல் கண்டுபிடிப்பாகிய யாக்கோபின் கல்வெட்டு ஆர்வத்திற்குரியதாக இருந்தாலும், இயேசு சரித்திர புருஷர் என்பது இப்பண்டைய பொருளையோ அல்லது வேறெந்த பொருளையோ சார்ந்தில்லை. அவரைப் பற்றியும் அவரைப் பின்பற்றியவர்களைப் பற்றியும் சரித்திராசிரியர்கள் எழுதியவற்றிலிருந்து அவர் வாழ்ந்ததற்கான அத்தாட்சியை நாம் காண முடியும் என்பது உண்மை.
சரித்திராசிரியர்களுடைய அத்தாட்சி
உதாரணமாக, பரிசேயராக இருந்த முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியர் பிளேவியஸ் ஜொஸிஃபஸ் என்பவருடைய அத்தாட்சியை கவனியுங்கள். ஜூயிஷ் ஆண்டிகுவிட்டீஸ் என்ற நூலில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அந்நூலில் இயேசுவை மேசியா என அவர் முதலில் குறிப்பிட்டதன் நம்பகத்தன்மையைக் குறித்து சிலர் சந்தேகித்தாலும், இரண்டாவதாக குறிப்பிட்டதை யாரும் சந்தேகிப்பதில்லை என எஷிவா யுனிவர்சிட்டி பேராசிரியர் லூயிஸ் எச். ஃபெல்டுமன் கூறுகிறார். அதில் ஜொஸிஃபஸ் இவ்வாறு கூறினார்: “[பிரதான ஆசாரியனாகிய அனானஸ்] நியாயசங்கத்தின் நீதிபதிகளை ஒன்றுகூட்டி, கிறிஸ்து என அழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு என்ற பெயருடைய நபரை அவர்களுக்கு முன்பு கொண்டுவந்தான்.” (ஜூயிஷ் ஆண்டிகுவிட்டீஸ், XX, 200) ஆம், இயேசுவை ஜென்ம விரோதிகளாக கருதியவர்களுடைய மதப்பிரிவில் ஓர் அங்கத்தினராக விளங்கிய ஒரு பரிசேயரே “இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு” இருந்ததை ஒப்புக்கொள்கிறார்.
இயேசு நிஜமாகவே வாழ்ந்து செல்வாக்கு செலுத்தியது அவரைப் பின்பற்றியவர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்பட்டது. சுமார் பொ.ச. 59-ல் அப்போஸ்தலன் பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, யூதர்களில் பிரதானமானவர்கள் அவரிடம் இவ்வாறு கூறினார்கள்: ‘எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசப்படுகிறது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.’ (அப்போஸ்தலர் 28:17-22) இயேசுவின் சீஷர்களை ‘இந்த மதபேதம்’ என அவர்கள் அழைத்தார்கள். எங்கும் அவர்களுக்கு விரோதமாக பேசப்பட்டிருந்தால், சரித்திராசிரியர்கள் அவர்களைப் பற்றி கட்டாயம் அறிக்கை செய்திருப்பார்கள் அல்லவா?
சுமார் பொ.ச. 55-ல் பிறந்தவரும் உலகிலேயே மாபெரும் சரித்திராசிரியர்களில் ஒருவருமான டாஸிடஸ் என்பவர் கிறிஸ்தவர்களைப் பற்றி தனது பதிவேடுகளில் (ஆங்கிலம்) குறிப்பிட்டார். பொ.ச. 64-ல் ரோமில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்திற்கு நீரோ அவர்களைக் குற்றஞ்சாட்டியதைப் பற்றிய பதிவில், அவர் இவ்வாறு எழுதினார்: “தங்களுடைய அருவருப்புகளுக்காக வெறுக்கப்பட்ட, கிறிஸ்தவர்கள் என மக்களால் அழைக்கப்பட்ட ஒரு வகுப்பினர் மீது நீரோ குற்றம் சுமத்தி, அவர்களை மிக கடுமையாக சித்திரவதை செய்தான். தேசாதிபதிகளில் ஒருவனாகிய பொந்தியு பிலாத்துவால் திபேரியு ராயன் ஆட்சியில் கிறிஸ்து—இந்தப் பெயரிலிருந்தே கிறிஸ்தவர்கள் என்ற பெயர் தோன்றியது—மரண தண்டனை விதிக்கப்பட்டார்.” பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவுக்கு இந்தப் பதிவிலுள்ள விவரங்கள் பொருந்துகின்றன.
இயேசுவைப் பின்பற்றியவர்களைப் பற்றி குறிப்பிட்ட மற்றொரு எழுத்தாளர் இளைய பிளைனி, இவர் பித்தினியாவின் ஆளுநர். சுமார் பொ.ச. 111-ம் ஆண்டில், பேரரசன் டிராஜனுக்கு பிளைனி கடிதம் எழுதியபோது, கிறிஸ்தவர்களை எப்படி நடத்துவது என கேட்டார். கிறிஸ்தவர்கள் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு பொய் தெய்வங்களிடம் விண்ணப்பம் செய்வார்கள், டிராஜன் சிலையையும் வணங்குவார்கள் என பிளைனி எழுதினார். பிளைனி தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “ஆனால் உண்மையிலேயே கிறிஸ்தவர்களாய் இருந்தவர்களை இதுபோன்ற செயல்களைச் செய்ய வைக்க முடியவில்லை என சொல்லப்படுகிறது.” இது கிறிஸ்து உயிர் வாழ்ந்தார் என்பதை நிரூபிக்கிறது, அவரை பின்பற்றியவர்கள் அவர்மேல் வைத்த நம்பிக்கைக்காக தங்களுடைய உயிரையே தியாகம் செய்ய தயாராயிருந்தார்கள்.
இயேசு கிறிஸ்துவையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பற்றி முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்த சரித்திராசிரியர்கள் சொன்னதை சுருக்கியுரைத்து, தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா (2002 பதிப்பு) இவ்வாறு முடிக்கிறது: “பூர்வ காலங்களில் கிறிஸ்தவத்தை எதிர்த்தவர்களும்கூட இயேசு உயிர் வாழ்ந்ததை சந்தேகிக்கவில்லை என்பதை இந்தத் தனித்தனி விவரப்பதிவுகள் நிரூபிக்கின்றன; முதன்முறையாக, அதுவும் போதுமான ஆதாரமில்லாமல், 18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அவர் உண்மையில் வாழ்ந்தாரா என்பதைப் பற்றிய சர்ச்சை கிளம்பியது.”
இயேசுவைப் பின்பற்றியவர்களுடைய அத்தாட்சி
“இயேசுவின் வாழ்க்கையையும் அவருடைய மரணத்தையும் மறுபடியும் படைப்பதற்கும் அவருடைய முக்கியத்துவத்தைப் பற்றிய ஆரம்பகால கிறிஸ்தவ விளக்கங்களுக்கும் தேவையான கிட்டத்தட்ட எல்லா அத்தாட்சிகளுமே புதிய ஏற்பாட்டில் உள்ளன” என தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா கூறுகிறது. இயேசு வாழ்ந்ததற்கு அத்தாட்சியாக பைபிளை சந்தேகவாதிகள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பைபிள் பதிவுகளின் அடிப்படையில், இயேசு உண்மையிலேயே பூமியில் வாழ்ந்தார் என்பதை நிரூபிப்பதற்கு உதவும் இரண்டு நியாய விவாதங்களைப் பார்க்கலாம்.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஐன்ஸ்டீனுடைய மாபெரும் கோட்பாடுகள் அவர் வாழ்ந்ததை நிரூபிக்கின்றன. அது போலவே, இயேசுவின் போதனைகள் அவர் உண்மையில் வாழ்ந்ததை நிரூபிக்கின்றன. உதாரணமாக, இயேசு கொடுத்த பிரபலமான மலைப் பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். (மத்தேயு, அதிகாரங்கள் 5-7) அந்தப் பிரசங்கம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அப்போஸ்தலன் மத்தேயு எழுதினார்: “அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத்தேயு 7:28, 29) இந்தப் பிரசங்கங்கள் நூற்றாண்டுகளாக மக்கள் மீது ஏற்படுத்திய விளைவைக் குறித்து பேராசிரியர் ஹான்ஸ் டீட்டர் பெட்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “மலைப் பிரசங்கம் செலுத்திய செல்வாக்கு யூத மற்றும் கிறிஸ்தவ மத எல்லைகளைக் கடந்து, அல்லது மேற்கத்திய கலாச்சாரத்தையும் கடந்து உயர்ந்தோங்கி நிற்கிறது.” இந்தப் பிரசங்கம் “தனிச்சிறப்புமிக்க விதத்தில் உலகளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது” என்றும் அவர் கூறினார்.
அந்த மலைப் பிரசங்கத்தில் காணப்படும் சுருக்கமான அதேசமயத்தில் நடைமுறை ஞானம் பொதிந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்: “உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.” “மனுஷர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” “நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்.” “உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்.” “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.” “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்.” “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்.”—மத்தேயு 5:39, பொது மொழிபெயர்ப்பு; 6:1, 34; 7:6, 7, 12, 13, 16, 17.
இந்த வார்த்தைகளில் சிலவற்றை அல்லது அவற்றிலுள்ள முக்கிய கருத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவேளை இவை உங்களுடைய பாஷையில் பழமொழியாகக்கூட பேசப்படலாம். இவையெல்லாம் மலைப் பிரசங்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அநேக ஜனங்கள் மீதும் கலாச்சாரங்கள் மீதும் இப்பிரசங்கம் ஏற்படுத்திய தாக்கம், “பெரிய போதகர்” வாழ்ந்ததை தத்ரூபமாய் நிரூபிக்கின்றன.
இயேசு கிறிஸ்து என்ற ஒரு கதாபாத்திரத்தை யாராவது ஒருவர் புனைந்து உருவாக்கியதாக எண்ணிக் கொள்வோம். இயேசுவின் போதனைகள் என பைபிளில் சொல்லப்படும் போதனைகளை வெகு புத்திசாலித்தனமாக அந்த நபர் படைத்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் முடிந்தவரை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் புனைவார் அல்லவா? என்றபோதிலும், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.” (1 கொரிந்தியர் 1:22, 23) கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதைப் பற்றிய செய்தி யூதருக்கும் கவர்ச்சியாக இருக்கவில்லை, புறதேசத்தாருக்கும் கவர்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பிரகடனப்படுத்திய கிறிஸ்து அப்படித்தான் இருந்தார். ஏன் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக சித்தரிக்கப்படுகிறார்? இதற்கு ஒரே திருப்திகரமான பதில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகம எழுத்தாளர்கள் இயேசுவின் வாழ்க்கையையும் மரணத்தையும் பற்றிய உண்மையை பதிவு செய்தார்கள் என்பதே.
இயேசு வரலாற்றுப்பூர்வமான நபர் என்பதை ஆதரிக்கும் மற்றொரு நியாய விவாதம், அவரைப் பின்பற்றியவர்கள் சளைக்காமல் அவருடைய போதனைகளைப் பிரசங்கித்ததில் காணப்படுகிறது. இயேசு தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்து கிட்டத்தட்ட முப்பதே வருடங்கள் கழித்து, இந்த நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது” என பவுலால் சொல்ல முடிந்தது. (கொலோசெயர் 1:23) ஆம், எதிர்ப்பின் மத்தியிலும் இயேசுவின் போதனைகள் பண்டைய உலகெங்கிலும் பரவியது. ஒரு கிறிஸ்தவனாக துன்புறுத்தப்பட்ட பவுலே இவ்வாறு எழுதினார்: ‘கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, விசுவாசமும் விருதா.’ (1 கொரிந்தியர் 15:12-17) உயிர்த்தெழுப்பப்படாத ஒரு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிப்பது வீணென்றால், ஒருபோதும் வாழ்ந்திராத ஒரு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிப்பதும் அதைவிட வீணாகவே இருக்கும். இளைய பிளைனியின் அறிக்கையில் நாம் வாசித்தபடி, கிறிஸ்து இயேசுவிலுள்ள நம்பிக்கைக்காக முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மரிக்கவும் மனமுள்ளவர்களாய் இருந்தார்கள். கிறிஸ்துவுக்காக தங்களுடைய உயிரையே பணையம் வைத்தார்கள், ஏனென்றால் அவர் நிஜமானவர்; சுவிசேஷ பதிவு சொல்கிறபடி, அவர் பூமியில் வாழ்ந்தார்.
அத்தாட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்
கிறிஸ்தவர்கள் பிரசங்கிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் விசுவாசம் வைப்பது முக்கியம். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு இன்று மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பார்ப்பதன் மூலம் நீங்களும் உங்களுடைய மனக்கண்ணில் அவரை காணலாம்.
இயேசு கழுவேற்றப்படுவதற்கு சற்று முன்பு, அவருடைய எதிர்கால பிரசன்னத்தைப் பற்றிய மாபெரும் தீர்க்கதரிசனத்தைக் கொடுத்தார். தாம் உயிர்த்தெழுப்பப்படுவார் என்றும், தம் சத்துருக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காலம் வரை கடவுளுடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (சங்கீதம் 110:1; யோவான் 6:62; அப்போஸ்தலர் 2:34, 35; ரோமர் 8:34) அதற்குப்பின், அவர் நடவடிக்கை எடுத்து சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பரலோகத்திலிருந்து வெளியேற்றுவார் என்றும் முன்னறிவிக்கப்பட்டது.—வெளிப்படுத்துதல் 12:7-9.
இவையெல்லாம் எப்பொழுது சம்பவிக்கும்? இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ‘தமது பிரசன்னத்தையும் இந்த ஒழுங்குமுறையின் முடிவையும் பற்றிய அடையாளத்தைக்’ கொடுத்தார். பெரும் யுத்தங்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், பொய் தீர்க்கதரிசிகள் தோன்றுதல், அக்கிரமம் அதிகரித்தல், பயங்கர கொள்ளைநோய்கள் ஆகியவை அவருடைய காணக்கூடாத பிரசன்னத்தை அறிந்துகொள்ள உதவும் அடையாளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பயங்கரமான சம்பவங்கள் எதிர்பார்க்கப்பட்டன, ஏனென்றால் பிசாசாகிய சாத்தான் கீழே தள்ளப்படுவது ‘பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ’ என சொல்லப்பட்டுள்ளது. பிசாசாகிய சாத்தான் “தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு,” பூமிக்கு அருகில் வந்திருக்கிறான். அதோடு, ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி “பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப்” பிரசங்கிக்கப்படுவதும் அந்த அடையாளத்தில் உட்பட்டுள்ளது.—மத்தேயு 24:3-14, NW; வெளிப்படுத்துதல் 12:12; லூக்கா 21:7-19.
ஜிக்சா புதிர் விளையாட்டில், வெட்டப்பட்ட படத்துண்டுகள் ஒன்றாக பொருந்துவதுபோல், இயேசு தீர்க்கதரிசனம் உரைத்த காரியங்கள் இணக்கமாக சம்பவித்திருக்கின்றன. 1914-ல் முதல் உலகப் போர் ஆரம்பித்தது முதல், இயேசு கிறிஸ்துவின் காணக்கூடாத பிரசன்னத்திற்கு அத்தாட்சி அளிக்கும் கூட்டு அடையாளத்தை நாம் பார்த்திருக்கிறோம். அவர் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக ஆட்சி செய்துகொண்டு, பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறார். இன்று ராஜ்ய செய்தி பிரசங்கிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு உங்களுடைய கையில் தவழும் இந்தப் பத்திரிகையே அத்தாட்சி அளிக்கிறது.
இயேசு வாழ்ந்தார் என்பதற்கு கூடுதலான அத்தாட்சிகளைப் பெற நீங்கள் பைபிளை படிப்பது அவசியம். இயேசுவின் பிரசன்னத்தைப் பற்றிய விவரங்களை ஏன் யெகோவாவின் சாட்சிகளிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளக் கூடாது?
[பக்கம் 5-ன் படங்கள்]
ஜொஸிஃபஸ், டாஸிடஸ், இளைய பிளைனி ஆகியோர் இயேசு கிறிஸ்துவையும் அவரைப் பின்பற்றியவர்களையும் பற்றி குறிப்பிட்டனர்
[படத்திற்கான நன்றி]
மூன்று படங்களும்: © Bettmann/CORBIS
[பக்கம் 7-ன் படம்]
இயேசு நிஜமானவர் என்பதை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் உறுதியாக நம்பினர்