உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 7/15 பக். 4-7
  • நாம் தனித்து நிற்க முடியாது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாம் தனித்து நிற்க முடியாது
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அன்பும் தோழமையும் வாழ்க்கையை மாற்றியது
  • கொடுப்பதில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது
  • ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை இன்பம்!
  • இன்றியமையாத தேவையை பூர்த்தி செய்தல்
  • இளமைக் கால வேதனைக்கு நான் கண்ட மருந்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • கிறிஸ்தவ சபை—ஆறுதலின் பிறப்பிடம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ரூத் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • வாழ்க்கைக்கு எது திருப்தி அளிக்கிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 7/15 பக். 4-7

நாம் தனித்து நிற்க முடியாது

“ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே” என பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோன் அறிவித்தார். (பிரசங்கி 4:9, 10) மனித நடத்தையைக் கூர்ந்து ஆராய்ந்த இந்த ஞானி, தோழமையின் அவசியத்தையும் ஒதுங்கி வாழாமல் இருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திக் காட்டினார். ஆனால் இது வெறுமனே மனிதனுடைய கருத்து அல்ல. சாலொமோன் சொன்ன இந்தக் கூற்று தெய்வீக ஞானத்தாலும் ஏவுதலாலும் பிறந்தது.

நம்மை தனியே ஒதுக்கி வைத்துக்கொள்வது ஞானமான காரியமல்ல. மக்கள் ஒருவருக்கொருவர் தேவை. நம் எல்லாருக்கும் சக மனிதரிடமிருந்து பலமும் உதவியும் தேவை. “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான்” என பைபிள் பழமொழி ஒன்று கூறுகிறது. அவன் “நடைமுறை ஞானம் அனைத்தையும் தகர்த்தெறிகிறான்” என்றும் சொல்கிறது. (நீதிமொழிகள் 18:1; NW) ஆகவே ஒரு தொகுதியாக கூடி வாழவும் பிறர் மீது அக்கறை காண்பிக்கவும் தனிநபர்களை சமுக அறிவியலாளர்கள் ஊக்குவிப்பது வினோதமல்ல.

சமுக வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அநேக விஷயங்களை சிபாரிசு செய்கையில், “ஆன்மீக செல்வாக்கை பலப்படுத்துவதைப்” பற்றியும் பேராசிரியர் ராபர்ட் பட்டனம் குறிப்பிடுகிறார். இந்த விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகள் தனிச்சிறப்பு மிக்கவர்களாய் விளங்குகிறார்கள், ஏனென்றால் உலகெங்கிலும், குடும்பம் போல் விளங்கும் சபைகளில் பாதுகாப்பை அனுபவிக்கிறார்கள். அப்போஸ்தலன் பேதுருவின் வார்த்தைகளுக்கு இசைவாக, தங்களைப் போலவே பக்தியோடு ‘தேவனுக்கு பயந்திருக்கும்’ ‘முழு சகோதர கூட்டுறவிலும் அன்புகூருகிறார்கள்.’ (1 பேதுரு 2:17, NW) ஒதுங்கி வாழ்வதையும் அதனால் வரும் தீய விளைவுகளையும் சாட்சிகள் தவிர்க்கிறார்கள். அவர்களுடைய பலன்தரும் நடவடிக்கைகள் பல, மெய் வணக்கத்துடன் சம்பந்தப்பட்டவை; இதனால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் வேரூன்றிய சத்தியத்தை அக்கம்பக்கத்தார் கற்றுக்கொள்வதற்கு உதவி செய்வதில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.​—⁠2 தீமோத்தேயு 2:⁠15.

அன்பும் தோழமையும் வாழ்க்கையை மாற்றியது

யெகோவாவின் சாட்சிகள் ஐக்கியப்பட்ட ஒரு சமுதாயமாக திகழ்கிறார்கள். அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் முக்கியமான பங்கை செய்கிறார். உதாரணமாக, லத்தீன் அமெரிக்க குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அங்கத்தினர்களாகிய மீகெல், ஃப்ரோயிலான், அல்மா ரூட் ஆகியோரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் எலும்பு கோளாறு நோயுடன் பிறந்தார்கள், அதனால் இவர்களது உடல் வளர்ச்சி குன்றியது. இந்த மூவருமே சக்கர நாற்காலியே கதியென்று இருக்கிறார்கள். சாட்சிகளுடன் கூட்டுறவு கொண்டது எந்த விதத்தில் அவர்களுடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது?

மீகெல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “வாழ்க்கையில் பல நெருக்கடிகளை நான் சந்தித்தேன், ஆனால் யெகோவாவின் ஜனங்களுடன் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்ததும் என்னுடைய வாழ்க்கை மாறியது. ஒதுங்கி வாழ்வது மிகவும் ஆபத்தானது என்பதை புரிந்துகொண்டேன். கிறிஸ்தவ கூட்டங்களில் சக விசுவாசிகளுடன் கூட்டுறவு கொண்டதால், ஒவ்வொரு வாரமும் அவர்களுடன் இருந்ததால், எனக்கு அதிக மனநிறைவும் திருப்தியும் கிடைத்தது.”

அல்மா ரூட் இவ்வாறு கூறுகிறாள்: “எனக்கு சில சந்தர்ப்பங்களில் பயங்கர மன உளைச்சல் ஏற்பட்டதுண்டு; சோகமே உருவாக இருந்தேன். ஆனால் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டபோது, அவருடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன். அந்த உறவே என் வாழ்வில் மிகப் பெரிய பொக்கிஷமாக ஆனது. குடும்பத்தார் எங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்தார்கள், அது எங்களை இன்னுமதிகமாக நெருங்கிவரச் செய்திருக்கிறது.”

மீகெல்லுக்கு அவருடைய அப்பா வாசிக்கவும் எழுதவும் அன்புடன் கற்றுக்கொடுத்தார். பிற்பாடு ஃப்ரோயிலானுக்கும் அல்மா ரூட்டுக்கும் மீகெல் உதவி செய்தார். இது அவர்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக இருந்தது. “வாசிக்க கற்றுக்கொண்டது எங்களுக்கு அதிக பிரயோஜனமாக இருந்தது, ஏனென்றால் பைபிளையும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களையும் படித்து ஆவிக்குரிய விதத்தில் போஷாக்குடன் இருக்க முடிந்தது” என கூறுகிறாள் அல்மா ரூட்.

தற்பொழுது மீகெல் ஒரு கிறிஸ்தவ மூப்பராக சேவை செய்கிறார். ஃப்ரோயிலான் பைபிளை ஒன்பது தடவை படித்திருக்கிறார். 1996 முதல், யெகோவாவுக்கு இன்னுமதிக ஊழியம் செய்வதற்காக அல்மா ரூட் ஒரு பயனியராக, அதாவது முழுநேர ராஜ்ய பிரசங்கியாக சேவை செய்து வருகிறாள். அவள் இவ்வாறு கூறுகிறாள்: “யெகோவாவின் ஆசீர்வாதத்தால் நான் இந்த இலக்கை அடைந்திருக்கிறேன். பிரசங்கிப்பதற்கு மட்டுமல்ல கற்பிப்பதற்கும் என்னுடைய அன்பான சகோதரிகள் எனக்கு உதவி செய்கிறார்கள்; அவர்களுடைய உதவியால் 11 பைபிள் படிப்புகளை என்னால் நடத்த முடிகிறது.”

மற்றொரு சிறந்த முன்மாதிரி எமீலியா. ஒரு விபத்தின் காரணமாக அவளுடைய கால்களிலும் தண்டுவடத்திலும் காயங்கள் ஏற்பட்டதால் அவள் சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டியதாயிற்று. மெக்சிகோ நகரத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகள் அவளுக்கு பைபிள் படிப்பு நடத்தினார்கள், அதனால் 1996-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றாள். எமீலியா கூறுகிறாள்: “சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நான் இனிமேலும் வாழ விரும்பாததால் தற்கொலை செய்ய விரும்பினேன். எனக்குள் மாபெரும் வெறுமையுணர்வு ஏற்பட்டது, இராப் பகலாக அழுதுகொண்டே இருந்தேன். ஆனால் யெகோவாவின் ஜனங்களுடன் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தபோது, சகோதர அன்பை உணர்ந்தேன். அவர்கள் எனக்குக் காட்டுகிற தனிப்பட்ட அக்கறை உற்சாகம் அளித்திருக்கிறது. மூப்பர்களில் ஒருவர் எனக்கு ஒரு சகோதரரைப் போலவும் தகப்பனைப் போலவும் இருந்திருக்கிறார். அவரும் உதவி ஊழியர்கள் சிலரும் என்னை கூட்டங்களுக்கும் பிரசங்க வேலைக்கும் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்கிறார்கள்.”

1992-⁠ல் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டப்பட்ட ஹோசே என்பவர் தனிமரமாக வாழ்கிறார். அவருக்கு 70 வயது, 1990-⁠ல் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஹோசேக்கு அடிக்கடி மன உளைச்சல் ஏற்பட்டது. ஆனால் ஒரு சாட்சி அவருக்குப் பிரசங்கித்ததற்குப் பிற்பாடு, உடனடியாக கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தார். அங்கே கேட்ட மற்றும் பார்த்த விஷயங்கள் அவருக்கு பிடித்துப்போனது. உதாரணமாக, சகோதரர்களுடைய தோழமையை கவனித்தார், தன் மீது அவர்கள் தனிப்பட்ட அக்கறை காட்டியதையும் உணர்ந்தார். அவருடைய சபையிலுள்ள மூப்பர்களும் உதவி ஊழியர்களும் இப்பொழுது அவரை கவனித்துக்கொள்கிறார்கள். (பிலிப்பியர் 1:1; 1 பேதுரு 5:2) இத்தகைய சக விசுவாசிகள் அவருக்கு ‘ஆறுதல் செய்துவருகிறார்கள்.’ (கொலோசெயர் 4:11) அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள், அவருடைய வீட்டில் அவரை சந்திக்கிறார்கள். அவருக்கு நான்கு ஆபரேஷன்கள் நடைபெற்ற சமயங்களில்கூட அவருக்கு ஒத்தாசையாக இருந்தார்கள். “அவர்கள் என்னை கரிசனையோடு நடத்துகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே என்னுடைய குடும்பத்தார். நான் அவர்களுடைய தோழமையை அனுபவித்து மகிழ்கிறேன்” என அவர் சொல்கிறார்.

கொடுப்பதில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது

சாலொமோன் ராஜா, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” என்று சொல்வதற்கு சற்று முன்புதான், சொத்துபத்துக்களை சேர்ப்பதற்கே எல்லா சக்தியையும் அர்ப்பணிப்பது வீண் என்பதைப் பற்றி பேசியிருந்தார். (பிரசங்கி 4:7-9) ஆனால் அந்த சொத்துபத்துக்களைத்தான் இன்றைக்கு அநேகர் ஆவலாய் நாடித் தேடுகிறார்கள். குடும்பத்தாரோடும் மற்றவர்களோடும் உள்ள உறவுகளை தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் அவ்வாறு நாடித் தேடுகிறார்கள்.

பேராசை, சுயநலம் போன்ற இந்த மனப்பான்மைகள் அநேகரை தனியே ஒதுங்கி வாழச் செய்திருக்கின்றன. இவை அவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தரவில்லை, திருப்தியையும் தரவில்லை. ஏனென்றால் இத்தகைய மனப்பான்மைகளுக்கு பலியாகிறவர்கள் மத்தியில் ஏமாற்றமும் நம்பிக்கையின்மையுமே காணப்படுகின்றன. இதற்கு மாறாக, யெகோவாவுக்கு சேவை செய்கிறவர்களோடும் அவர் மீதும் அயலகத்தார் மீதும் அன்பு காட்டுகிறவர்களோடும் கூட்டுறவு கொள்கிறவர்கள் அருமையான பலன்களை அனுபவிக்கிறார்கள்; சற்று முன்னர் விவரிக்கப்பட்ட அனுபவங்கள் இதை எடுத்துக் காட்டுகின்றன. இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டதும், சக கிறிஸ்தவர்களுடைய அன்பையும் ஆதரவையும் பெற்றதும், ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபட்டதும், ஒதுங்கி வாழ்வதால் வரும் எதிர்மறையான உணர்ச்சிகளை மேற்கொள்ள பெரிதும் கைகொடுத்தன.​—⁠நீதிமொழிகள் 17:17; எபிரெயர் 10:24, 25.

நாம் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதால், மற்றவர்களுக்காக காரியங்களை செய்யும்போது திருப்தி கிடைப்பது இயல்பானதே. பிறருக்கு அதிக நன்மை தந்த வேலையை செய்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவ்வாறு கூறினார்: “ஒரு மனிதனுடைய மதிப்பு . . . அவன் எதை கொடுக்கிறான் என்பதன் பேரில் கணக்கிடப்பட வேண்டும், எதைப் பெறுகிறான் என்பதன் பேரில் அல்ல.” இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுடன் ஒத்திருக்கிறது; “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி” என்று அவர் சொன்னார். (அப்போஸ்தலர் 20:35, NW) ஆகவே, அன்பை பெறுவது நல்லது என்றாலும், அன்பை காட்டுவது மிகுந்த நலம் தரும்.

ஆன்மீக உதவியளிக்க பல ஆண்டுகளாக சபைகளுக்கு விஜயம் செய்திருப்பவரும், வசதியற்ற கிறிஸ்தவர்களுக்காக கிறிஸ்தவ கூட்டத்திற்கான மன்றங்களை கட்டுவதற்கு உதவி அளித்திருப்பவருமான பயணக் கண்காணி ஒருவர் தனது உணர்ச்சிகளை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: “என்னுடைய சகோதரர்களுக்கு சேவை செய்வதாலும் அவர்களுடைய முகத்தில் நன்றியுணர்வு பொங்குவதைப் பார்ப்பதாலும் கிடைக்கும் ஆனந்தம், அவர்களுக்கு உதவி செய்வதற்கு தொடர்ந்து பல்வேறு வழிவகைகளை கண்டுபிடிக்கும்படி என்னை உந்துவிக்கிறது. மற்றவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை காண்பிப்பதே மகிழ்ச்சிக்கு திறவுகோல் என்பது என்னுடைய அனுபவம். அதோடு, மூப்பர்களாக, நாம் ‘காற்றுக்கு ஒதுக்காகவும், . . . வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருக்க’ வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறேன்.”​—⁠ஏசாயா 32:2.

ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை இன்பம்!

பிறருக்கு உதவிக்கரம் நீட்டுவதிலும் யெகோவாவுக்கு சேவை செய்கிறவர்களுடைய தோழமையை நாடுவதிலும் நிச்சயமாகவே பெரும் நன்மையும் உண்மையான மகிழ்ச்சியும் இருக்கிறது. “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது”! என சங்கீதக்காரன் ஆச்சரியத்துடன் கூறினார். (சங்கீதம் 133:1) மீகெல், ஃப்ரோயிலான், அல்மா ரூட் ஆகியோருடைய விஷயத்தில் கவனித்தபடி, ஒருவருக்கொருவர் தோள் கொடுப்பதில் குடும்ப ஒற்றுமை முக்கிய பாகம் வகிக்கிறது. மெய் வணக்கத்தில் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டிருப்பது எத்தனை ஆசீர்வாதம்! கிறிஸ்தவ கணவன்மாருக்கும் மனைவிமாருக்கும் அறிவுரை வழங்கியபின், அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிரு[ங்கள்].”​—⁠1 பேதுரு 3:⁠8.

உண்மையான நட்பு உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் மிகுந்த நன்மைகளை தருகிறது. விசுவாச தோழர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு புத்திமதி கூறுகிறார்: “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். . . . உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்.”​—⁠1 தெசலோனிக்கேயர் 5:14, 15.

ஆகவே, பிறருக்கு நன்மை செய்ய நடைமுறை வழிகளைத் தேடுங்கள். “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்”யுங்கள்; ஏனென்றால் இது உங்களுடைய வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கும், திருப்தியையும் தரும். (கலாத்தியர் 6:9, 10) இயேசுவின் சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?” (யாக்கோபு 2:15, 16) இந்தக் கேள்விக்குரிய பதில் பட்டவர்த்தனமாக தெரிகிறது. ‘நமக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நாம் நோக்க வேண்டும்.’​—⁠பிலிப்பியர் 2:4.

விசேஷ தேவை எழும்போது அல்லது ஏதாவது இயற்கை சேதங்கள் ஏற்படும்போது பொருளாதார ரீதியில் யெகோவாவின் சாட்சிகள் பிறருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்; அதோடு, கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலமும் முக்கியமான விதத்தில் சக மனிதருக்கு நன்மை செய்வதில் முழு மூச்சோடு ஈடுபட்டிருக்கிறார்கள். (மத்தேயு 24:14) நம்பிக்கையும் ஆறுதலும் தரும் இந்தச் செய்தியை அறிவிப்பதில் 60,00,000-⁠க்கும் அதிகமான சாட்சிகள் ஈடுபடுகிறார்கள்; இது, மற்றவர்கள் மீது அவர்கள் காட்டும் உள்ளப்பூர்வ, அன்பான அக்கறைக்கு அத்தாட்சியாகும். ஆனால் பரிசுத்த வேதாகமத்திலிருந்து இவ்வாறு உதவி செய்வதன் மூலம் மனிதருக்குரிய மற்றொரு தேவையையும் பூர்த்தி செய்கிறார்கள். அது என்ன?

இன்றியமையாத தேவையை பூர்த்தி செய்தல்

உண்மையான சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு, நாம் கடவுளுடன் நல்லுறவை வைத்திருப்பது அவசியம். “அன்று முதல் இன்று வரை, எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும், தன்னைவிட மேலான, அதிக சக்திவாய்ந்த ஒன்றை நோக்கி வேண்டுதல் செய்கிற ஒரு தூண்டுதலை மனிதன் உணர்ந்திருக்கிறான்; இது, மதவுணர்வு மனிதனின் பிறவி குணம் என்பதையும் அதை அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது. . . . மனிதன் பரம்பொருளை தேடுவதும் அதில் நம்பிக்கை வைப்பதும் உலகெங்கும் காணப்படும் ஒன்று என்பதைப் பார்க்கும்போது நமக்குள் வியப்பும் பயபக்தியும் ஏற்பட வேண்டும்.”​—⁠மனிதன் தனித்து இயங்க முடியாது (ஆங்கிலம்), கிரெஸி மாரிஸன் என்பவரால் எழுதப்பட்டது.

இயேசு கிறிஸ்து இவ்வாறு அறிவித்தார்: “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்.” (மத்தேயு 5:3, NW) பிற மனிதரிடமிருந்து நீண்ட காலம் பிரிந்திருப்பவர்கள் சந்தோஷமாக வாழ முடிவதில்லை. நம்முடைய படைப்பாளரிடமிருந்து நம்மை தனியே பிரித்து வைத்துக்கொள்வதோ இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். (வெளிப்படுத்துதல் 4:11) ‘தேவனை அறியும் அறிவைப்’ பெற்று அதைப் பயன்படுத்துவதே நம்முடைய வாழ்க்கையில் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 2:1-5) நம்முடைய ஆன்மீக தேவையை பூர்த்தி செய்வதற்கு உறுதிபூண்டவர்களாய் இருக்க வேண்டும், ஏனென்றால் நாம் கடவுளிடமிருந்து பிரிந்து தனித்து வாழ முடியாது. சந்தோஷமும் பலனும் தருகிற வாழ்க்கை, “பூமியனைத்தின் மேலும் உன்னதமான” யெகோவாவுடன் நல்லுறவை வைத்திருப்பதிலேயே சார்ந்திருக்கிறது.​—⁠சங்கீதம் 83:17.

[பக்கம் 4-ன் படம்]

“ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; . . . ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்.”​—⁠சாலொமோன் ராஜா

[பக்கம் 5-ன் படம்]

மீகெல்: “வாழ்க்கையில் பல நெருக்கடிகளை நான் சந்தித்தேன், ஆனால் யெகோவாவின் ஜனங்களுடன் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்ததும் என்னுடைய வாழ்க்கை மாறியது”

[பக்கம் 5-ன் படம்]

அல்மா ரூட்: “யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டபோது, அவருடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன்”

[பக்கம் 6-ன் படம்]

எமீலியா: “சத்தியத்தைத் தெரிந்து​கொள்வதற்கு முன்பு, . . . எனக்குள் மாபெரும் வெறுமையுணர்வு ஏற்பட்டது”

[பக்கம் 7-ன் படம்]

மெய் வணக்கத்தாருடன் கூட்டுறவு கொள்வது நமது ஆன்மீக தேவையை திருப்தியாக்கும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்