வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
‘தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறார்’ என்பதன் அர்த்தம் என்ன?
இயேசு கிறிஸ்து ‘தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறார்’ என்றும் அவருடைய சீஷர்கள் ‘தங்களுக்குள்ளே ஜீவன்’ உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. (யோவான் 5:26; 6:53) இருந்தாலும் இந்த இரண்டு வசனங்களின் அர்த்தமும் வேறு வேறு.
“பிதாவானவர் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்” என இயேசு சொன்னார். குறிப்பிடத்தக்க இந்த வார்த்தைகளை சொல்வதற்கு முன்பு இயேசு இவ்வாறு கூறினார்: “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; . . . மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள்.” பிதா தமக்கு அருளின ஓர் அசாதாரண வல்லமையைப் பற்றித்தான் இயேசு பேசிக்கொண்டிருந்தார்; அதாவது கடவுளுக்கு முன்பாக மனிதர்களுக்கு நல்ல நிலைநிற்கையை அளிக்கும் திறன் பெற்றிருப்பதைப் பற்றி குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, மரணத்தில் தூங்கிக்கொண்டிருப்போரை உயிர்த்தெழுப்பி ஜீவன் அளிக்கவும் இயேசுவுக்கு வல்லமை உண்டு. இப்படிப்பட்ட வல்லமைகளை பெற்றிருப்பதே, இயேசு ‘தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறார்’ என்பதற்கு அர்த்தம். பிதாவைப் போலவே குமாரனும் ‘ஜீவனென்ற வரத்தை தம்மில்தாமே’ பெற்றிருக்கிறார். (யோவான் 5:24-26; NW அடிக்குறிப்பு) அவருடைய சீஷர்களைப் பற்றி என்ன சொல்லலாம்?
சுமார் ஒரு வருடத்திற்குப் பிற்பாடு இயேசு தமக்கு செவிகொடுத்தவர்களிடம் இப்படி சொன்னார்: “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.” (யோவான் 6:53, 54) ‘உங்களுக்குள்ளே ஜீவன்’ பெற்றிருப்பதையும் ‘நித்தியஜீவன்’ பெறுவதையும் இயேசு சம்பந்தப்படுத்திப் பேசினார். ‘உங்களுக்குள்ளே ஜீவன்’ என்ற சொற்றொடரின் இலக்கண அமைப்புக்கு ஒத்த மற்ற சொற்றொடர்களை கிரேக்க வேதாகமத்தில் நாம் காணலாம். “உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள்,” “பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்” போன்றவை அவற்றில் சில. (மாற்கு 9:50; ரோமர் 1:27) இந்த சொற்றொடர்கள், மற்றவர்களுக்கு உப்பை அளிப்பதற்கான அல்லது பலன் அளிப்பதற்கான வல்லமையைப் பற்றி சொல்வதில்லை. மாறாக உட்புற முழுமையை அல்லது நிறைவை குறிக்கின்றன. இவ்வாறு, ‘உங்களுக்குள்ளே ஜீவன்’ என யோவான் 6:53 குறிப்பிடும் சொற்றொடர், முழு நிறைவான ஜீவனைப் பெறுவதையே அர்த்தப்படுத்துகிறது.
தம்மைப் பின்பற்றுகிறவர்கள் தங்களுக்குள்ளே ஜீவனை பெற்றிருப்பதாக இயேசு சொன்னபோது தமது மாம்சத்தையும் இரத்தத்தையும் பற்றி குறிப்பிட்டார். பிற்பாடு இன்னொரு சந்தர்ப்பத்தில் இராப்போஜனத்தை துவக்கி வைத்தபோது இயேசு மறுபடியும் தமது மாம்சத்தையும் இரத்தத்தையும் பற்றி பேசினார்; இம்முறை, புதிய உடன்படிக்கைக்குள் வரும் தமது சீஷர்களை, அடையாளச் சின்னங்களான புளிப்பில்லாத அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்கெடுக்கும்படி அவர் கட்டளையிட்டார். அப்படியென்றால், யெகோவா தேவனோடு புதிய உடன்படிக்கைக்குள் வரும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மட்டும்தான் அப்படிப்பட்ட முழு நிறைவான ஜீவனைப் பெறுகிறார்களா? இல்லை. மேற்கூறப்பட்ட இரு சந்தர்ப்பங்களுக்கும் இடையில் ஒரு வருடம் கடந்திருந்தது. யோவான் 6:53, 54-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள், கிறிஸ்துவின் மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் அடையாளமான சின்னங்களை உட்படுத்திய வருடாந்தர ஆசரிப்பை பற்றி அறியாதவர்களாக இருந்தனர்.
யோவான் 6-ஆம் அதிகாரத்தின்படி இயேசு தமது மாம்சத்தை முதலில் மன்னாவோடு ஒப்பிட்டு இப்படி சொன்னார்: “உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்.” இயேசுவின் மாம்சமும் இரத்தமும் சொல்லர்த்தமான மன்னாவைவிட மதிப்புமிக்கவை. எந்த கருத்தில்? அவருடைய மாம்சம் “உலகத்தின் ஜீவனுக்காக” கொடுக்கப்பட்டு நித்திய ஜீவன் பெறும் வாய்ப்பை தந்திருக்கும் கருத்தில்.a ஆகவே ‘உங்களுக்குள்ளே ஜீவன்’ என யோவான் 6:53 குறிப்பிடும் சொற்றொடர், நித்திய ஜீவனைப் பெறும் அனைவருக்குமே—அதை பரலோகத்தில் பெறுபவர்களுக்கும் சரி பூமியில் பெறுபவர்களுக்கும் சரி—பொருந்தும்.—யோவான் 6:48-51.
கிறிஸ்துவின் சீஷர்கள் எப்போது தங்களுக்குள்ளே ஜீவனைப் பெறுகிறார்கள், அதாவது முழு நிறைவான ஜீவனைப் பெறுகிறார்கள்? அபிஷேகம் செய்யப்பட்ட ராஜ்ய சுதந்தரவாளிகள், சாவாமையுள்ள ஆவி ஆட்களாக பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படும்போது அதைப் பெறுகிறார்கள். (1 கொரிந்தியர் 15:51-53; 1 யோவான் 3:2) இயேசுவின் ‘வேறே ஆடுகள்’ அவரது ஆயிர வருட அரசாட்சிக்குப் பிறகு முழு நிறைவான ஜீவனைப் பெறுவார்கள். அதற்குள்ளாக, அவர்கள் சோதிக்கப்பட்டு, விசுவாசமுள்ளவர்களாக காணப்பட்டு, பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனைப் பெற தகுதியுள்ள நீதிமான்களாக அறிவிக்கப்படுவார்கள்.—யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 20:5, 7-10.
[அடிக்குறிப்பு]
a வனாந்தரத்தில் இஸ்ரவேலரும் ‘பல ஜாதியான ஜனங்களும்’ உயிர்வாழ மன்னா தேவைப்பட்டது. (யாத்திராகமம் 12:37, 38; 16:13-18) அதேபோல், என்றென்றும் வாழ எல்லா கிறிஸ்தவர்களுக்குமே பரலோக மன்னா தேவை; அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, பலிசெலுத்தப்பட்ட இயேசுவின் மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் உள்ள மீட்கும் வல்லமையில் அவர்கள் விசுவாசம் வைப்பதன் மூலம் பரலோக மன்னாவை பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்.—காவற்கோபுரம், பிப்ரவரி 1, 1989, பக்கங்கள் 30-31-ஐக் காண்க.
[பக்கம் 31-ன் படங்கள்]
உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் ‘தங்களுக்குள்ளே ஜீவனை’ பெற்றிருக்கலாம்