நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுதல்
“நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” —மத்தேயு 5:10, NW.
1. பொந்தியு பிலாத்துவுக்கு முன் இயேசு ஏன் நின்றிருந்தார், இயேசு என்ன சொன்னார்?
“சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 18:37) இயேசு இந்த வார்த்தைகளை சொன்னபோது, யூதேயாவின் ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்துவுக்கு முன் நின்றிருந்தார். இயேசு அங்கு இருந்தது தமது சுய விருப்பத்தாலும் அல்ல, பிலாத்து அழைத்ததாலும் அல்ல. மாறாக, மரண தண்டனை பெறுவதற்குரிய குற்றவாளியென யூத மதத் தலைவர்களால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாலேயே அவர் அங்கு இருந்தார்.—யோவான் 18:29-31.
2. இயேசு என்ன செய்தார், அதன் விளைவு என்ன?
2 தம்மை விடுதலை செய்வதற்கோ தண்டிப்பதற்கோ பிலாத்துவுக்கு அதிகாரம் இருந்ததை இயேசு நன்கு அறிந்திருந்தார். (யோவான் 19:10) ஆனாலும் தைரியமாக ராஜ்யத்தைப் பற்றி பிலாத்துவிடம் பேசினார். தம் உயிர் ஆபத்தில் இருந்தபோதிலும், அந்த வட்டாரத்தின் மிக உயர்ந்த அரசாங்க அதிகாரியிடம் சாட்சி கொடுப்பதற்காக அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். ஆனால், அப்படி சாட்சி கொடுத்த பிறகும்கூட அவர் குற்றவாளியென தீர்க்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்; ஒரு உயிர்த்தியாகியாக கழுமரத்தில் கடும் வேதனையான மரணத்தை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.—மத்தேயு 27:24-26; மாற்கு 15:15; லூக்கா 23:24, 25; யோவான் 19:13-16.
சாட்சி கொடுப்பவரா அல்லது உயிர்த்தியாகியா?
3. “உயிர்த்தியாகி” என்ற வார்த்தை பைபிள் காலங்களில் எதை அர்த்தப்படுத்தியது, ஆனால் இன்று அது எதை அர்த்தப்படுத்துகிறது?
3 இன்று அநேகர், ஓர் உயிர்த்தியாகியை ஏறக்குறைய கொள்கை வெறியராக அல்லது தீவிரவாதியாகவே பார்க்கிறார்கள். தங்கள் நம்பிக்கையின் நிமித்தம், முக்கியமாக மத நம்பிக்கையின் நிமித்தம், உயிரை கொடுக்கத் தயாராய் இருப்பவர்கள் பயங்கரவாதிகள் என்றோ, சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் என்றோ அடிக்கடி சந்தேகிக்கப்படுகிறார்கள்; பைபிள் காலங்களிலோ, உயிர்த்தியாகி என்பதற்கான கிரேக்க பதம் (மார்ட்டிஸ்) “சாட்சி கொடுப்பவரை” அதாவது, சத்தியம் என தான் நம்பும் ஒன்றைக் குறித்து, ஒருவேளை நீதிமன்றத்தில், சாட்சி கொடுக்கும் ஒரு நபரை அர்த்தப்படுத்தியது. பிற்பாடுதான், இந்த வார்த்தை “சாட்சி கொடுத்ததனால் உயிரையே கொடுத்தவர்,” அல்லது உயிரை கொடுத்ததன் மூலம் சாட்சியாக திகழ்ந்தவர் என்ற புதிய அர்த்தத்தை ஏற்றது.
4. முக்கியமாக எந்த அர்த்தத்தில் இயேசு ஓர் உயிர்த்தியாகியாய் இருந்தார்?
4 இந்த வார்த்தையின் முதல் அர்த்தத்தின்படியே, அதாவது சாட்சி கொடுப்பவர் என்ற அர்த்தத்தின்படியே முக்கியமாக இயேசு ஓர் உயிர்த்தியாகியாய் இருந்தார். பிலாத்துவிடம் அவர் சொன்னது போல, ‘சாட்சி கொடுக்கவே’ அவர் வந்திருந்தார். அவர் கொடுத்த சாட்சி ஜனங்களை பல்வேறு விதங்களில் பிரதிபலிக்க செய்தது. தங்கள் காதுகளால் கேட்ட விஷயங்களும், கண்களால் பார்த்த காரியங்களும் சாதாரண மக்கள் சிலரது மனதை ஆழமாக தொட்டன; அதனால் அவர்கள் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார்கள். (யோவான் 2:23; 8:30) பொது மக்களின், குறிப்பாக மதத் தலைவர்களின் பிரதிபலிப்பும்கூட வலிமையானதாய்—ஆனால் சாதகமற்ற விதத்தில்—இருந்தது. அவிசுவாசிகளான தம் உறவினர்களிடம் இயேசு இவ்வாறு குறிப்பிட்டார்: “உலகம் உங்களைப் பகைக்க மாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சி கொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.” (யோவான் 7:7) சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுத்ததனால், இயேசு தேசத் தலைவர்களின் கோபத்திற்கு ஆளாகி, மரணத்தை சந்தித்தார். தெளிவாகவே, இவர் ‘உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியாக (மார்ட்டிஸாக)’ இருந்தார்.—வெளிப்படுத்துதல் 3:14.
“எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்”
5. கடும் துன்புறுத்துதலைப் பற்றி தம் ஊழியத்தின் தொடக்கத்தில் இயேசு என்ன சொன்னார்?
5 தமக்கு மட்டுமல்ல, தம்மை பின்பற்றுபவர்களுக்கும் கடும் துன்புறுத்துதல் வரும் என்பதை இயேசு முன்கூட்டியே எச்சரித்தார். தம் ஊழியத்தின் தொடக்கத்தில், மலைப் பிரசங்கத்தின்போது, கூடிவந்திருந்தவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, உங்களைப் பற்றி பலவிதங்களில் பொல்லாத காரியங்களை பொய்யாய்ச் சொல்வார்களானால் சந்தோஷமுள்ளவர்களாய் இருப்பீர்கள். மகிழ்ந்து களிகூருங்கள்; பரலோகத்தில் உங்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கும்.”—மத்தேயு 5:10-12, NW.
6. தம் 12 அப்போஸ்தலர்களை ஊழியத்திற்கு அனுப்புகையில் இயேசு என்ன எச்சரிக்கையை கொடுத்தார்?
6 பிற்பாடு, தம் 12 அப்போஸ்தலர்களை ஊழியத்திற்கு அனுப்புகையில், இயேசு அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டு போகப்படுவீர்கள்.” ஆனால், மதத் தலைவர்கள் மட்டுமே சீஷர்களை துன்புறுத்துகிறவர்களாக இருக்க மாட்டார்கள். “சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலை செய்வார்கள். என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்” என்றும் அவர் சொன்னார். (மத்தேயு 10:17, 18, 21, 22) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் சரித்திரப் பதிவு, இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது.
விசுவாசத்தோடு சகித்திருந்ததைக் காட்டும் ஒரு பதிவு
7. ஒரு சாட்சியாக மரிக்க வேண்டிய சூழ்நிலை ஸ்தேவானுக்கு எப்படி ஏற்பட்டது?
7 இயேசுவின் மரணத்திற்குப் பின் சத்தியத்தைப் பற்றி சாட்சி கொடுத்ததற்காக மரித்த முதல் கிறிஸ்தவர் ஸ்தேவான். அவர் ‘விசுவாசத்தினாலும் [“கருணையினாலும்,” NW] வல்லமையினாலும் நிறைந்தவராய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.’ அவருடைய மத எதிரிகளால் ‘அவர் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்து நிற்க . . . கூடாமற்போயிற்று.’ (அப்போஸ்தலர் 6:8, 10) பொறாமை நிறைந்தவர்களாய், அவர்கள் ஸ்தேவானை யூத நீதிமன்றமான நியாய சங்கத்திற்கு இழுத்துச் சென்றார்கள்; தன் மீது பொய்க் குற்றம் சுமத்தினவர்களை அங்கு அவர் எதிர்ப்பட்டார், அவர்களுக்கு வலிமையான விதத்தில் சாட்சி கொடுத்தார். என்றாலும், கடைசியில் இந்த விசுவாசமுள்ள சாட்சியை அவருடைய எதிரிகள் கொலை செய்தார்கள்.—அப்போஸ்தலர் 7:59, 60.
8. ஸ்தேவானின் மரணத்திற்கு பிறகு எழும்பின துன்புறுத்துதலுக்கு எருசலேமிலிருந்த சீஷர்கள் எப்படி பிரதிபலித்தார்கள்?
8 ஸ்தேவான் கொலை செய்யப்பட்ட பிறகு, “எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர் தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப் போனார்கள்.” (அப்போஸ்தலர் 8:1) இந்தத் துன்புறுத்துதலினால் கிறிஸ்தவத்தைப் பற்றி சாட்சி கொடுக்கும் வேலை நின்று போனதா? இல்லை, மாறாக, “சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்” என அந்தப் பதிவு சொல்கிறது. (அப்போஸ்தலர் 8:4) “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று அப்போஸ்தலன் பேதுரு தன் ஊழியத்தின் ஆரம்பக் கட்டத்தில் சொன்னபோது உணர்ந்ததைப் போலவே இவர்களும் உணர்ந்திருப்பார்கள். (அப்போஸ்தலர் 5:29) துன்புறுத்துதல் மத்தியிலும், விசுவாசமும் தைரியமுமுள்ள அந்த சீஷர்கள் சத்தியத்தைக் குறித்து தொடர்ந்து சாட்சி கொடுத்து வந்தார்கள்; அப்படி செய்கையில் இன்னும் அதிகப்படியான கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்பதை அறிந்திருந்தபோதிலும் தொடர்ந்து அவ்வேலையில் ஈடுபட்டார்கள்.—அப்போஸ்தலர் 11:19-21.
9. இயேசுவின் சீஷர்களுக்கு என்ன துன்புறுத்துதல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது?
9 உண்மைதான், துன்பத்தின் தீவிரம் குறையவேயில்லை. முதலாவது, சவுல்—ஸ்தேவான் கல்லெறியுண்டு கொலை செய்யப்படுவதற்கு சம்மதம் தெரிவித்து, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்—“இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டு பிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.” (அப்போஸ்தலர் 9:1, 2) பிறகு, ஏறக்குறைய பொ.ச. 44-ம் ஆண்டு, “ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி: யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலை செய்தான்.”—அப்போஸ்தலர் 12:1, 2.
10. அப்போஸ்தலர் புத்தகத்திலும் வெளிப்படுத்துதல் புத்தகத்திலும் துன்புறுத்துதலைப் பற்றி என்ன பதிவு இருக்கிறது?
10 அப்போஸ்தலர் புத்தகத்தின் மீதியுள்ள பகுதி முழுவதிலும், விசுவாசிகளின் சோதனைகளையும் சிறைவாசத்தையும் துன்புறுத்துதலையும் பற்றிய அழியா பதிவுகள் இருக்கின்றன; உதாரணத்திற்கு, முன்பு கிறிஸ்தவர்களை துன்புறுத்தியவரும், பின்னர் அப்போஸ்தலராக ஆனவருமான பவுலைப் பற்றிய பதிவு இதில் இருக்கிறது; ரோம பேரரசன் நீரோவின் ஆணைப்படி, பொ.ச. 65 வாக்கில், அப்போஸ்தலன் பவுல் ஒரு சாட்சியாக ஒருவேளை மரித்திருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 11:23-27; 2 தீமோத்தேயு 4:6-8) கடைசியாக, முதல் நூற்றாண்டின் முடிவில் எழுதப்பட்ட வெளிப்படுத்துதல் புத்தகமும் துன்புறுத்துதலைப் பற்றி சொல்கிறது; வயதான அப்போஸ்தலன் யோவான், “தேவ வசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும்,” நாடுகடத்தப்பட்ட குற்றவாளிகள் இருந்த பத்மு தீவில் சிறைவாசம் அனுபவித்ததாக அது காட்டுகிறது. அதுமட்டுமல்ல, பெர்கமுவில் “உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட”தைப் பற்றிய விவரமும் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 1:9; 2:13.
11. துன்புறுத்துதலைப் பற்றி இயேசு சொன்ன வார்த்தைகள் உண்மையென்பதை ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் வாழ்க்கை எப்படி நிரூபித்தது?
11 சீஷர்களுக்கு இயேசு சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மையென இவை நிரூபித்தன: “என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.” (யோவான் 15:20, பொது மொழிபெயர்ப்பு) விசுவாசமுள்ள ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அதிகபட்ச சோதனையான மரணத்தைக்கூட சந்திக்க தயாராக இருந்தனர்; சித்திரவதை, காட்டு மிருகங்களிடம் வீசப்படுவது போன்ற எந்த விதத்திலும் அப்படிப்பட்ட மரணத்தை சந்திக்க தயாராக இருந்தனர். எதற்கு? “எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு.—அப்போஸ்தலர் 1:8.
12. கிறிஸ்தவர்களின் துன்புறுத்துதல் ஏன் நடந்து முடிந்த ஒரு சரித்திரம் அல்ல?
12 அப்படிப்பட்ட கொடூரங்களை இயேசுவின் சீஷர்கள் கடந்த காலத்தில் மட்டுமே சந்தித்தார்கள் என யாராவது நினைத்தால், அது மிக மிக தவறு. பாடுகளை அனுபவித்த பவுல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்.” (2 தீமோத்தேயு 3:12, NW) துன்புறுத்துதலைப் பற்றி பேதுரு இவ்வாறு சொன்னார்: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்.” (1 பேதுரு 2:21) அன்றிலிருந்து இந்த ஒழுங்குமுறையின் ‘கடைசி நாட்கள்’ வரையாக, யெகோவாவின் மக்கள் தொடர்ந்து வெறுப்புக்கும் விரோதத்திற்கும் ஆளாகி வந்திருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1) இந்த பூமியின் மூலைமுடுக்கெங்கும், சர்வாதிகார ஆட்சியின் கீழும், ஜனநாயக நாடுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் ஏதோ ஒரு சமயத்தில் துன்புறுத்துதலை—தனிப்பட்ட விதமாகவும், தொகுதியாகவும்—அனுபவித்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.
ஏன் இந்தப் பகைமையும் துன்புறுத்துதலும்?
13. துன்புறுத்துதலைப் பொருத்ததில், தற்போதுள்ள யெகோவாவின் ஊழியர்கள் எதை மனதில் வைத்திருக்க வேண்டும்?
13 பிரச்சினையின்றி பிரசங்கம் செய்வதற்கும், ஒன்று கூடிவருவற்கும் நம்மில் அநேகருக்கு இன்று ஓரளவு சுதந்திரம் இருக்கிறது. என்றாலும் “இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது” என்ற பைபிளின் நினைப்பூட்டுதலுக்கு நாம் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். (1 கொரிந்தியர் 7:31, NW) கண் மூடித் திறப்பதற்குள் அவ்வளவு சீக்கிரமாக காரியங்கள் மாறிவிடலாம், ஆகவே, நாம் மனோ ரீதியிலும், உணர்ச்சி ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் தயாராக இல்லையென்றால், எளிதில் இடறி விடுவோம். அப்படியானால், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? சமாதானத்தை விரும்புகிற, சட்டப்படி நடக்கிற கிறிஸ்தவர்கள் ஏன் பகைக்கப்படுகிறார்கள், ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற கேள்விகளுக்கான பதிலை மனதில் தெளிவாக வைத்திருப்பதே பலமான தற்காப்பாக இருக்கும்.
14. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டதன் காரணத்தை என்னவென்று பேதுரு சுட்டிக்காட்டினார்?
14 இந்த விஷயத்தைப் பற்றி சுமார் பொ.ச. 62-64-ல் அப்போஸ்தலன் பேதுரு தன் முதல் நிருபத்தில் எழுதினார்; அந்தச் சமயத்தில் ரோம சாம்ராஜ்யமெங்கும் இருந்த கிறிஸ்தவர்கள் சோதனைகளையும் துன்புறுத்துதல்களையும் அனுபவித்து வந்தார்கள். ‘பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகைக்காதீர்கள்’ என்று பேதுரு சொன்னார். தன் மனதில் இருந்ததை விளக்குவதற்கு தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “உங்களில் ஒருவனும் கொலை பாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.” அவர்கள் ஏதோ தவறான காரியங்கள் செய்ததனால் பாடனுபவிக்கவில்லை, அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததாலேயே பாடனுபவிக்கிறார்கள் என்பதை பேதுரு சுட்டிக்காட்டினார். ஒருவேளை அவர்கள் தங்களைச் சுற்றியிருந்த ஜனத்தாரைப் போல “துன்மார்க்க உளையிலே” அவர்களோடேகூட புரண்டு கொண்டிருந்திருந்தால், அந்த ஜனங்கள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றிருப்பார்கள். ஆனால், அவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக இருப்பதற்கு பிரயாசப்பட்டதாலேயே துன்பப்பட்டார்கள். உண்மை கிறிஸ்தவர்களுக்கு இன்றும் இதே நிலைமைதான் இருக்கிறது.—1 பேதுரு 4:4, 12, 15, 16.
15. இன்று யெகோவாவின் சாட்சிகள் நடத்தப்படும் விதத்தில் என்ன முரண்பாடு தெரிகிறது?
15 உலகின் பல்வேறு பகுதிகளில், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மாநாடுகளிலும், கட்டுமான பணிகளிலும் ஐக்கியமாக சேர்ந்து ஒத்துழைப்பதற்கு வெளிப்படையாக புகழப்படுகிறார்கள்; அதுமட்டுமல்ல, தங்கள் நேர்மை, சுறுசுறுப்பு, ஒழுக்கமான நடத்தை, குடும்ப வாழ்க்கைக்கு நல்ல முன்மாதிரிகளாக திகழ்வது, அடக்கமான தோற்றம், மற்றவர்களுடன் நன்கு பழகும் விதம் ஆகியவற்றிற்காகவும் புகழப்படுகிறார்கள்.a மறுபட்சத்தில், இந்தக் கட்டுரை தயாரிக்கப்படுகையில், அவர்களுடைய வேலை குறைந்தது 28 நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவர்களது வேலைக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன; அதுமட்டுமல்ல, விசுவாசத்தின் நிமித்தம் அநேக யெகோவாவின் சாட்சிகள் சரீரப்பிரகாரமாய் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள், பலவற்றை இழந்திருக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? கடவுள் ஏன் இதை அனுமதிக்கிறார்?
16. தம் மக்கள் துன்புறுத்தப்படுவதை கடவுள் அனுமதிப்பதற்கான முதல் முக்கிய காரணம் என்ன?
16 முதல் முக்கிய காரணம், நீதிமொழிகள் 27:11-ன் வார்த்தைகளை நம் மனதில் வைக்க வேண்டும்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” ஆம், எத்தனையோ காலத்துக்கு முன் எழுப்பப்பட்ட சர்வலோக பேரரசுரிமையைப் பற்றிய விவாதத்தின் காரணமாகவே கடவுள் இதை சொன்னார். மனித சரித்திரம் முழுவதையும் பார்க்கும்போது, யெகோவாவுக்கு தங்கள் உண்மைப் பற்றுறுதியை நிரூபித்த நபர்களைப் பற்றிய சாட்சி மலையளவு குவிந்திருந்தாலும், சாத்தான் இன்னமும் யெகோவாவை நிந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான்—நீதிமானாகிய யோபுவின் நாட்களில் செய்தது போல. (யோபு 1:9-11; 2:4, 5) இப்போது கடவுளுடைய ராஜ்யம் நிலையாக ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாலும், அதற்கு உண்மையாயிருக்கும் குடிமக்களும் பிரதிநிதிகளும் உலகமுழுவதும் இருப்பதாலும் சாத்தான் தன்னுடைய கடைசி கட்ட முயற்சியில் எப்போதையும்விட இப்போது அதிக வெறிபிடித்து அலைந்து வருகிறான். ஆகவே, எப்படிப்பட்ட இன்னல்களோ கஷ்டங்களோ வந்தாலும் இவர்கள் கடவுளுக்கு உண்மையோடு நிலைத்திருப்பார்களா? யெகோவாவின் ஊழியர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் பதிலளிக்க வேண்டிய கேள்வி இது.—வெளிப்படுத்துதல் 12:12, 17.
17. “அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்” என்று சொன்னபோது, இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?
17 இந்த உலக முடிவின்போது என்னென்ன நடக்கும் என்பதைப் பற்றி தம் சீஷர்களுக்கு இயேசு சொல்கையில், யெகோவா தம் ஊழியர்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிப்பதற்கான மற்றொரு காரணத்தை குறிப்பிட்டார். அவர் சொன்னார்: “என் நாமத்தினிமித்தம், . . . ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.” (மத்தேயு 24:3, 9; லூக்கா 21:12, 13) இயேசு தாமே ஏரோதுக்கு முன்பாகவும் பொந்தியு பிலாத்துவுக்கு முன்பாகவும் சாட்சி கொடுத்தார். அப்போஸ்தலன் பவுல்கூட ‘ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் இழுத்துப்’ போகப்பட்டார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலில், பவுல் அன்றிருந்த பெரும் வலிமை வாய்ந்த அரசரிடம் சாட்சி கொடுக்கும் நோக்கத்தோடு “இராயருக்கு அபயமிடுகிறேன்” என அறிவித்தார். (அப்போஸ்தலர் 23:11; 25:8-12) அதைப் போலவே இன்றும், கடினமான சூழ்நிலைகள் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் அருமையான சாட்சி கொடுப்பதிலேயே பெரும்பாலும் முடிவடைந்திருக்கிறது.b
18, 19. (அ) சோதனைகளை சமாளிப்பது நமக்கு எப்படி நன்மையளிக்கும்? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?
18 இறுதியாக, சோதனைகளையும் துன்புறுத்துதல்களையும் சமாளிப்பது நமக்கு தனிப்பட்ட விதத்தில் நன்மையளிக்கலாம். எப்படி? தன் சக கிறிஸ்தவர்களுக்கு சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு நினைப்பூட்டினார்: “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை [“சகிப்புத்தன்மையை,” NW] உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.” ஆம், துன்புறுத்துதல், நம் விசுவாசத்தை புடமிடுகிறது, அதோடு நம் சகிப்புத்தன்மையையும் பலப்படுத்துகிறது. ஆகவே, துன்புறுத்துதலைக் கண்டு நாம் அஞ்சி நடுங்குவதுமில்லை, அதைத் தவிர்க்க அல்லது நிறுத்த வேதப்பூர்வமற்ற வழிகளில் செல்வதுமில்லை. மாறாக, யாக்கோபின் அறிவுரைக்கு செவிகொடுக்கிறோம்: “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.”—யாக்கோபு 1:2-4.
19 கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் ஏன் துன்புறுத்தப்படுகிறார்கள், யெகோவா ஏன் அதை அனுமதிக்கிறார் என்ற கேள்விகளுக்கு பதிலைப் புரிந்துகொள்ள கடவுளுடைய வார்த்தை நமக்கு உதவினாலும், துன்புறுத்துதலை நாம் சகிப்பதை அது உண்மையிலேயே எளிதாக்கிவிடுவதில்லை. அப்படியானால், அதை சமாளிப்பதற்கு எது நம்மை பலப்படுத்தும்? துன்புறுத்துதலை எதிர்ப்படும்போது நாம் என்ன செய்யலாம்? இந்த முக்கியமான விஷயங்களை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம் டிசம்பர் 15, 1995, பக்கங்கள் 27-9; ஏப்ரல் 15, 1994, பக்கங்கள் 16-17; ஆங்கில விழித்தெழு! டிசம்பர் 22, 1993, பக்கங்கள் 6-13 ஆகியவற்றைக் காண்க.
b ஆங்கில விழித்தெழு! ஜனவரி 8, 2003, பக்கங்கள் 3-11-ஐக் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
• முக்கியமாக எந்த அர்த்தத்தில் இயேசு ஓர் உயிர்த்தியாகியாய் இருந்தார்?
• முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மீது துன்புறுத்துதல் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?
• பேதுரு விளக்கியபடி, ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் ஏன் துன்புறுத்தப்பட்டார்கள்?
• என்ன காரணங்களுக்காக யெகோவா தம் ஊழியர்கள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்கிறார்?
[பக்கம் 10, 11-ன் படங்கள்]
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், ஏதோ தவறான காரியங்கள் செய்ததற்காக அல்ல, கிறிஸ்தவர்களாக இருந்ததற்கே துன்பப்பட்டனர்
பவுல்
யோவான்
அந்திப்பா
யாக்கோபு
ஸ்தேவான்