சோதனைகளில் சகித்திருப்பது யெகோவாவுக்கு துதி சேர்க்கிறது
“நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.”—1 பேதுரு 2:20.
1. தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்வதற்கு உண்மை கிறிஸ்தவர்கள் அக்கறையோடு இருப்பதால், என்ன கேள்வி சிந்திக்கப்பட வேண்டும்?
கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு தங்களையே ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்; அவருடைய சித்தத்தை செய்ய விரும்புகிறார்கள். தங்களுடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்வதற்கு, தங்கள் முன்மாதிரியாக திகழும் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்ற முழு முயற்சி எடுக்கிறார்கள்; அதோடு, தங்களால் முடிந்தமட்டும் சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்கள். (மத்தேயு 16:24; யோவான் 18:37; 1 பேதுரு 2:21) ஆனால், இயேசுவும், விசுவாசமாயிருந்த மற்றவர்களும் தங்கள் நம்பிக்கையைக் குறித்து சாட்சி கொடுத்ததனாலேயே மரித்துப் போனார்கள். அப்படியானால், எல்லா கிறிஸ்தவர்களுமே தங்கள் நம்பிக்கைக்காக உயிரைவிட வேண்டும் என்று அர்த்தமா?
2. சோதனைகளையும் துன்பங்களையும் கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதுகின்றனர்?
2 கிறிஸ்தவர்களான நாம், உயிரோடு இருக்கும்வரை விசுவாசமாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறோம், ஆனால் நம்முடைய நம்பிக்கைக்காக கட்டாயம் உயிர்விட வேண்டுமென அறிவுறுத்தப்படுவதில்லை. (2 தீமோத்தேயு 4:7; வெளிப்படுத்துதல் 2:10) ஆக, நம்முடைய விசுவாசத்தின் நிமித்தம் எந்தப் பாடுகளையும் சந்திக்க—தேவைப்பட்டால் மரிக்கவும்—நாம் தயாராய் இருந்தாலும், துன்பப்பட்டு மரிக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவதில்லை. துன்பப்படுவதைக் குறித்து நாம் களிகூருவதுமில்லை, வேதனையோ அவமானமோ ஏற்படும்போது அதில் இன்பமும் காண்பதில்லை. ஆனால், சோதனைகளும் துன்புறுத்துதலும் கட்டாயம் வரும் என்பதால், அச்சமயங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென கவனமாக சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
சோதனையிலும் விசுவாசமாக இருத்தல்
3. துன்புறுத்துதலை சமாளித்த என்ன பைபிள் உதாரணங்களைப் பற்றி உங்களால் சொல்ல முடியும்? (அடுத்த பக்கத்திலுள்ள “துன்புறுத்துதலை அவர்கள் சமாளித்த விதம்” என்ற பெட்டியை காண்க.)
3 கடவுளுடைய பண்டைக் கால ஊழியர்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்ப்பட்டபோது எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப் பற்றிய ஏராளமான பதிவுகளை நாம் பைபிளில் காண்கிறோம். ஒருவேளை இன்றைய கிறிஸ்தவர்களும் அத்தகைய சூழ்நிலைகளை சந்திக்கலாம்; அப்போது, அக்காலத்து ஊழியர்கள் ஒவ்வொருவரும் சூழ்நிலைமைக்கேற்ப வெவ்வேறு விதங்களில் எப்படி பிரதிபலித்தார்கள் என்பதை வாசிப்பது வழிகாட்டியாக அமையும். “துன்புறுத்துதலை அவர்கள் சமாளித்த விதம்” என்ற பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சிந்தித்து, அதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பாருங்கள்.
4. சோதனையில் சிக்கியிருந்தபோது, இயேசுவும், விசுவாசமாய் இருந்த மற்ற ஊழியர்களும் பிரதிபலித்த விதத்தைப் பற்றி என்ன சொல்லலாம்?
4 சூழ்நிலைக்கு ஏற்றபடி, இயேசுவும் கடவுளுக்கு விசுவாசமாய் இருந்த மற்ற ஊழியர்களும் துன்புறுத்துதலுக்கு வெவ்வேறு விதங்களில் பிரதிபலித்திருந்தாலும், தேவையின்றி தங்கள் உயிரை பணயம் வைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அகப்பட்டபோதெல்லாம் அவர்கள் தைரியமாக இருந்தார்கள், அதே சமயத்தில் முன்ஜாக்கிரதையாகவும் நடந்து கொண்டார்கள். (மத்தேயு 10:16, 23) பிரசங்க வேலையை முன்னேற்றுவிக்க வேண்டும் என்பதும், யெகோவாவுக்கு தங்கள் உத்தமத்தை காத்துக்கொள்ள வேண்டும் என்பதுமே அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது. பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது, சோதனைகளையும் துன்புறுத்துதல்களையும் சந்திக்கும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
5. மலாவியில் என்ன துன்புறுத்துதல் 1960-களில் நடந்தது, அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் அதற்கு எவ்வாறு பிரதிபலித்தார்கள்?
5 இந்த நவீன காலங்களில், போர்கள், தடையுத்தரவுகள், நேரடியான துன்புறுத்துதல் போன்றவற்றால் யெகோவாவின் மக்கள் அடிக்கடி பயங்கர கஷ்டநஷ்டங்களுக்கும் இழப்புக்கும் ஆளாகியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, 1960-களில், மலாவியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் மிகக் கொடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். அவர்களுடைய ராஜ்ய மன்றங்கள், வீடுகள், உணவுப் பொருட்கள், வியாபாரங்கள் என கிட்டத்தட்ட அவர்களுடைய உடைமைகள் அனைத்துமே நாசமாக்கப்பட்டன. அவர்கள் அடிக்கப்பட்டார்கள், அதோடு வேதனைமிக்க மேலும் பல இன்னல்களை அனுபவித்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைமையில் அந்த சகோதரர்கள் எப்படி பிரதிபலித்தார்கள்? ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய கிராமங்களை விட்டு ஓட வேண்டியிருந்தது. அநேகர் காட்டுக்குள் தஞ்சம் புகுந்தார்கள்; மற்றவர்களோ பக்கத்து நாடான மொசம்பிக்கிற்குப் போய் அங்கு தற்காலிகமாக தங்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். விசுவாசமாய் இருந்த அநேகர் தங்கள் உயிரை இழந்தார்கள், மற்றவர்களோ அந்த ஆபத்தான இடத்தை விட்டு ஓடிப் போகவே தீர்மானித்தார்கள்—அத்தகைய சூழ்நிலையில் அது ஞானமான காரியமாக இருந்ததென்று சொல்லலாம். அவ்வாறு செய்ததன் மூலம், அந்தச் சகோதரர்கள் இயேசு மற்றும் பவுலின் அடிச்சுவடுகளை பின்பற்றினார்கள்.
6. கொடூரமான துன்புறுத்துதலின் மத்தியிலும், மலாவியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் எதைப் புறக்கணிக்கவில்லை?
6 மலாவியில் இருந்த சகோதரர்கள் அங்கிருந்து வெளியேற அல்லது தலைமறைவாக வேண்டியிருந்தபோதிலும், அவர்கள் தேவராஜ்ய வழிநடத்துதலுக்காக நாடித்தேடினார்கள், அதைப் பின்பற்றவும் செய்தார்கள்; அதோடு, தங்களால் முடிந்தவரை கிறிஸ்தவ நடவடிக்கைகளில் இரகசியமாக ஈடுபட்டு வந்தார்கள். இதன் விளைவு? 1967-ல் தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு சற்று முன், ராஜ்ய பிரஸ்தாபிகளின் உச்சநிலை எண்ணிக்கை 18,519-ஐ அடைந்தது. தடையுத்தரவு அமலில் இருந்தாலும், அநேகர் மொசம்பிக்கிற்கு ஓடிப்போயிருந்தாலும் 1972-க்குள்ளாக பிரஸ்தாபிகளின் உச்சநிலை எண்ணிக்கை 23,398 என அறிக்கை செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் அவர்கள் ஊழியத்தில் சராசரி 16 மணிநேரத்திற்கும் அதிகமாக செலவிட்டிருந்தார்கள். சந்தேகமில்லாமல், அவர்களுடைய செயல்கள் யெகோவாவுக்கு துதி சேர்த்தன; மிகக் கடினமான அச்சமயத்தில் யெகோவாவின் ஆசீர்வாதத்தை அந்த விசுவாசமிக்க சகோதரர்கள் அனுபவித்தார்கள்.a
7, 8. எதிர்ப்பினால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், என்ன காரணங்களுக்காக சிலர் தங்கள் இடத்தை விட்டு வெளியேறுவதில்லை?
7 மறுபட்சத்தில், எதிர்ப்பின் காரணமாக பிரச்சினைகள் ஏற்படுகிற நாடுகளிலிருந்து வெளியேற முடிந்தாலும் சில சகோதரர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு வெளியேறுவது குறிப்பிட்ட சில பிரச்சினைகளை தீர்த்து வைத்தாலும், அது வேறு பல பிரச்சினைகளை கிளப்பிவிடலாம். உதாரணமாக, போகும் இடங்களில் அவர்கள் ஆவிக்குரிய ரீதியில் தனிமையாகி விடாதபடி கிறிஸ்தவ சகோதரர்களோடு கூட்டுறவு கொள்ள முடியுமா? ஒருவேளை பணக்கார நாட்டிற்கோ பொருளாதார முன்னேற்றங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் வேறொரு நாட்டிற்கோ அவர்கள் போயிருக்கலாம்; அங்கு தங்கள் வாழ்க்கையை ஸ்திரமாக்க போராடுகையில் ஆவிக்குரிய நடவடிக்கைகளில் முன்பு போலவே தொடர்ந்து ஈடுபட முடியுமா?—1 தீமோத்தேயு 6:9.
8 மற்றவர்களோ, தங்கள் சகோதரர்களின் ஆவிக்குரிய நலனில் உள்ள அக்கறையினால் வேறு இடங்களுக்கு போக தீர்மானிப்பதில்லை. தங்கள் சொந்த பிராந்தியத்திலேயே தொடர்ந்து பிரசங்கம் செய்வதற்காகவும் சக வணக்கத்தாருக்கு உற்சாகமளிப்பதற்காகவும் அவர்கள் அங்கேயே தங்கி, அந்தச் சூழ்நிலையை சமாளிக்க தீர்மானிக்கிறார்கள். (பிலிப்பியர் 1:14) இத்தகைய தீர்மானத்தால் சிலர் தங்கள் நாடுகளில் சட்டப்பூர்வ வெற்றிகள் கிடைப்பதற்கும் உதவியிருக்கிறார்கள்.b
9. துன்புறுத்துதலுள்ள இடத்திலேயே தங்குவதா அல்லது வேறு இடத்திற்கு மாறிப்போவதா என்பதைக் குறித்து தீர்மானிக்கையில், ஒரு நபர் என்ன விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்?
9 அங்கேயே தங்குவதா அல்லது வேறு இடத்திற்கு மாறிப்போவதா—கண்டிப்பாக இது அவரவர் எடுக்க வேண்டிய தீர்மானம். என்றாலும் யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஜெப சிந்தையோடு அணுகிய பிறகுதான் இப்படிப்பட்ட தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஆனால் நாம் எதை செய்ய தீர்மானித்தாலும், அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை மனதில் வைத்திருக்க வேண்டும்: “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.” (ரோமர் 14:12) நாம் முன்னமே பார்த்தவண்ணம், தம் ஊழியர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றே யெகோவா எதிர்பார்க்கிறார். அவருடைய ஊழியர்களில் சிலர், சோதனைகளையும் துன்புறுத்துதலையும் இப்பொழுதே அனுபவிக்கிறார்கள்; மற்றவர்கள் அதை பிற்பாடு அனுபவிக்கலாம். ஆனால், ஏதோ ஒரு விதத்தில் எல்லாருமே கட்டாயம் சோதிக்கப்படுவர், தனக்கு சோதனையே வராது என யாரும் நினைக்க முடியாது. (யோவான் 15:19, 20) யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்களான நாம், யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதையும், அவருடைய பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படுவதையும் குறித்த சர்வலோக விவாதத்திலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள முடியாது.—எசேக்கியேல் 38:23; மத்தேயு 6:9, 10.
“ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்”
10. அழுத்தங்களையும் எதிர்ப்பையும் சமாளிக்கும் விஷயத்தில் இயேசுவும் அப்போஸ்தலர்களும் நமக்கு என்ன முக்கிய முன்மாதிரி வைத்தார்கள்?
10 அழுத்தத்தில் இருந்தபோது இயேசுவும் அப்போஸ்தலர்களும் நடந்து கொண்ட விதத்தை வைத்து, நாம் இன்னொரு முக்கிய நியமத்தை கற்றுக்கொள்கிறோம், அதாவது எக்காரணத்தைக் கொண்டும் நம்மை துன்புறுத்துகிறவர்களை நாம் திருப்பி தாக்கக் கூடாது என்பதை கற்றுக்கொள்கிறோம். இயேசுவோ அவரது சீஷர்களோ கூட்டுச் சேர்ந்துகொண்டு ஒருவித கலக கும்பலை உருவாக்கியதாகவோ, தங்களை துன்புறுத்துகிறவர்களோடு சண்டையிடுவதற்காக வன்முறையை கையாண்டதாகவோ பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. அதற்கு மாறாக, “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்” என்றே அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தினார். “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்.” மேலும் “நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.”—ரோமர் 12:17-21; சங்கீதம் 37:1-4; நீதிமொழிகள் 20:22.
11. அரசாங்கத்தைக் குறித்து ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு இருந்த மனநிலையைப் பற்றி ஒரு சரித்திராசிரியர் என்ன சொல்கிறார்?
11 ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அந்த அறிவுரையை மனதார ஏற்றுக்கொண்டார்கள். சிசல் ஜே. காடூ என்ற சரித்திராசிரியர், ஆரம்ப கால சர்ச்சும் உலகமும் என்ற தன் ஆங்கில புத்தகத்தில், பொ.ச. 30-70 காலப்பகுதியின்போது அரசாங்கத்தைக் குறித்து கிறிஸ்தவர்களுக்கு இருந்த மனநிலையைப் பற்றி விளக்குகிறார். இவ்வாறு அவர் எழுதுகிறார்: “இந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், துன்புறுத்துதலை எதிர்க்க வன்முறையை கையாள முயற்சித்ததாக நம்மிடம் எந்த நேரடி அத்தாட்சியும் இல்லை. மிஞ்சி மிஞ்சிப்போனால், தங்கள் அரசர்களை கடும் வார்த்தைகளால் கண்டித்தார்கள் அல்லது அங்கிருந்து தப்பி ஓடி அவர்களுக்கு எரிச்சல் மூட்டினார்கள். என்றாலும், அரசாங்கம் பிறப்பிக்கும் ஆணைகள் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படியாமல் போகச் செய்யுமென அவர்கள் கண்டபோது, பொதுவாக அடக்க ஒடுக்கத்தோடு ஆனால் உறுதியோடு அப்படிப்பட்ட ஆணைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள்.”
12. திருப்பித் தாக்குவதைவிட, துன்பத்தை சகிப்பது ஏன் மேலானது?
12 இப்படி அடங்கி ஒடுங்கிப் போவது உண்மையிலேயே நடைமுறையானதா? இப்படி நடந்து கொண்டால், அவர்களை அழித்துப்போட கங்கணம் கட்டித் திரிபவர்களின் கையில் எளிதில் சிக்கிக்கொள்ள மாட்டார்களா? ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்வது ஞானமான செயலாக இருக்காதா? மனித நோக்குநிலையிலிருந்து பார்த்தால், ஒருவேளை அவ்வாறு தோன்றலாம். ஆனால், எல்லா காரியங்களிலும் யெகோவாவின் வழிநடத்துதலை பின்பற்றுவதே சாலச் சிறந்தது என்று யெகோவாவின் ஊழியர்களான நாம் உறுதியாக நம்புகிறோம். பேதுருவின் பின்வரும் வார்த்தைகளை நாம் மனதில் வைக்கிறோம்: “நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.” (1 பேதுரு 2:20) நம் சூழ்நிலையை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார் என்றும், அவர் சதா காலத்திற்கும் துன்பத்தை அனுமதிக்க மாட்டார் என்றும் நாம் உறுதியுடன் நம்புகிறோம். இதைப் பற்றி ஏன் அந்தளவு நிச்சயமாக இருக்கலாம்? பாபிலோனில் சிறைக் கைதிகளாக இருந்த தம் மக்களிடம் யெகோவா இவ்வாறு உரைத்தார்: ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.’ (சகரியா 2:8) தங்கள் கண்மணியை தொடுவதை யாராவது நிறைய நேரம் அனுமதிப்பார்களா என்ன? உரிய நேரத்தில் யெகோவா இளைப்பாறுதல் தருவார். அதில் இம்மியளவும் சந்தேகமில்லை.—2 தெசலோனிக்கேயர் 1:5-8.
13. எதிரிகள் தம்மை கைது செய்வதை ஏன் இயேசு தாழ்மையோடு அனுமதித்தார்?
13 இந்த விஷயத்தில், இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றலாம். எதிரிகள் அவரை கெத்செமனே தோட்டத்தில் கைது செய்ய வந்தபோது, தற்காத்துக்கொள்ள முடியாததால் தம்மை கைது செய்ய அனுமதித்தார் என்பதில்லை. சொல்லப்போனால், தம் சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்ப மாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்.” (மத்தேயு 26:53, 54) தமக்கு துன்பம் நேர்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் யெகோவாவின் சித்தம் நிறைவேற வேண்டும் என்பதே இயேசுவுக்கு அதிமுக்கியமானதாக இருந்தது. தாவீதின் தீர்க்கதரிசன பாடல் வரிகளில் அவர் முழு நம்பிக்கை வைத்திருந்தார்: “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.” (சங்கீதம் 16:10) பல வருடங்கள் கழித்து அப்போஸ்தலன் பவுல் இயேசுவை பற்றி இவ்வாறு சொன்னார்: “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் [“கழுமரத்தை,” NW] சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.”—எபிரெயர் 12:2.
யெகோவாவின் பெயரை பரிசுத்தப்படுத்துவதில் சந்தோஷம்
14. எல்லா சோதனைகளின் மத்தியிலும் எந்த சந்தோஷம் இயேசுவை தொடர்ந்து உறுதியோடு இருக்க செய்தது?
14 கற்பனைக்கு எட்டாதளவு அத்தனை கொடிய சோதனையின் மத்தியிலும் எந்த சந்தோஷம் இயேசுவை தொடர்ந்து உறுதியோடு இருக்க செய்தது? யெகோவாவின் ஊழியர்கள் எவரைக் காட்டிலும், கடவுளுடைய நேச குமாரனான இயேசுவே சாத்தானின் முதல் முக்கிய குறியாக இருந்தார். ஆகவே, சோதனையின் கீழ், இயேசு தம் உத்தமத்தை காத்துக்கொண்டால், அது யெகோவாவுக்கு எதிராக சாத்தான் எழுப்பிய நிந்தைக்கு மிகச் சரியான பதிலடியாக இருக்கும். (நீதிமொழிகள் 27:11) இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, எவ்வளவு சந்தோஷமும் திருப்தியும் அடைந்திருப்பார் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஒரு பரிபூரண மனிதராக, யெகோவாவின் பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்வதிலும் அவருடைய பெயரை பரிசுத்தப்படுத்துவதிலும் தமக்கு கொடுக்கப்பட்டிருந்த பங்கை நிறைவேற்றியதை குறித்து எவ்வளவு சந்தோஷமடைந்திருப்பார்! அதுமட்டுமல்ல, “தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில்” அமருவது, இயேசுவுக்கு அரும்பெரும் பாக்கியமாகவும் இருந்தது, அளவுகடந்த சந்தோஷத்தையும் அளித்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.—சங்கீதம் 110:1, 2; 1 தீமோத்தேயு 6:15, 16.
15, 16. சாக்சென்ஹாசனில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் எப்படிப்பட்ட மிருகத்தனமான துன்புறுத்துதலை சகித்தார்கள், அவ்வாறு சகிப்பதற்கான பலம் எப்படி அவர்களுக்கு கிடைத்தது?
15 கிறிஸ்தவர்களும்கூட, இயேசுவைப் போலவே சோதனைகளையும் துன்புறுத்துதலையும் சகிப்பதன் மூலம் யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் பங்கு கொள்வதை சந்தோஷமாக கருதுகிறார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, படுமோசமான சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமில் துன்புறுத்தப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நடந்த கொடூரமான மரண அணிவகுப்பிலிருந்து தப்பிப்பிழைத்த யெகோவாவின் சாட்சிகளது அனுபவமாகும். அந்த அணிவகுப்பின்போது, மோசமான சீதோஷ்ண நிலையாலோ, வியாதியாலோ, பசியாலோ, எஸ் எஸ் காவலர்களால் ஈவிரக்கமின்றி சாலையோரத்தில் கொலை செய்யப்பட்டதாலோ ஆயிரக்கணக்கான கைதிகள் மரித்துப் போனார்கள். அங்கிருந்த 230 யெகோவாவின் சாட்சிகள் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருந்ததாலும், உயிரையும் பொருட்படுத்தாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்ததாலும் அனைவருமே தப்பிப்பிழைத்தார்கள்.
16 அத்தகைய மிருகத்தனமான துன்புறுத்துதலை சகிப்பதற்கான பலம் இந்த சாட்சிகளுக்கு எப்படி கிடைத்தது? அவர்கள் பத்திரமாக வந்து சேர்ந்ததுமே, யெகோவாவுக்கு தங்கள் சந்தோஷத்தையும் நன்றியையும் ஒரு ஆவணத்தில் தெரிவித்தார்கள்; அதன் தலைப்பு: “ஆறு தேசங்களிலிருந்து வந்திருக்கும் 230 யெகோவாவின் சாட்சிகள், மெக்லென்பர்கிலுள்ள ஷ்ஃபேரன் அருகிலுள்ள ஒரு காட்டில் கூடியிருந்தபோது எடுத்த தீர்மானம்.” அதில் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “நீண்ட கடும் சோதனைமிக்க காலம் இப்போது முடிவடைந்து விட்டது; தப்பிப்பிழைத்தவர்கள், அடையாள அர்த்தத்தில், நெருப்பு சூளையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாய், சோதனை நெருப்பின் வாடை கொஞ்சங்கூட தங்கள் மீது இல்லாதவர்களாய் வெளியே வந்திருக்கிறார்கள். (தானியேல் 3:27-ஐக் காண்க.) சோதனையின் நெருப்பில் தகிக்கப்பட்டிருப்பதற்கு பதிலாக, அவர்கள் யெகோவாவின் சக்தியாலும் பலத்தாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்; அதோடு தேவராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு ராஜாவிடமிருந்து வரும் புதிய கட்டளைகளை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்கிறார்கள்.”c
17. கடவுளுடைய மக்களுக்கு இன்று சோதனைகள் எந்த ரூபங்களில் வருகின்றன?
17 விசுவாசமாயிருந்த அந்த 230 பேரைப் போல், நாம் ‘இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக இன்னும் எதிர்த்து நிற்கவில்லையென்றாலும்’ நம்முடைய விசுவாசமும்கூட சோதிக்கப்படலாம். (எபிரெயர் 12:4) ஆனால், சோதனை எந்த ரூபத்திலும் வரலாம். அது ஒருவேளை பள்ளித் தோழர்களின் கேலி கிண்டலாக இருக்கலாம் அல்லது ஒழுக்கக்கேடாக நடப்பதற்கோ வேறு ஏதாவது தவறுகள் செய்வதற்கோ நண்பர்களிடமிருந்து வரும் வற்புறுத்தலாகவும் இருக்கலாம். அதுமட்டுமல்ல, இரத்தத்திற்கு விலகியிருப்பதற்கான தீர்மானம், கர்த்தருக்குள் மட்டுமே விவாகம், அல்லது பிளவுபட்ட குடும்பங்களில் பிள்ளைகளை விசுவாசத்தில் வளர்ப்பது போன்றவற்றால் சில நேரங்களில் கடும் அழுத்தங்களும் சோதனைகளும் ஏற்படலாம்.—அப்போஸ்தலர் 15:29; 1 கொரிந்தியர் 7:39; எபேசியர் 6:4; 1 பேதுரு 3:1, 2.
18. மிகக் கொடூரமான சோதனையைக்கூட நம்மால் சகிக்க முடியும் என்பதற்கு நமக்கு என்ன உறுதி இருக்கிறது?
18 நமக்கு எந்த சோதனையும் நேரிடலாம், ஆனால் யெகோவாவையும் அவருடைய ராஜ்யத்தையும் முதலில் வைப்பதாலேயே துன்பப்படுகிறோம் என்பதை அறிந்திருக்கிறோம்; அதை உண்மையிலேயே சிலாக்கியமாகவும் சந்தோஷமாகவும் கருதுகிறோம். பேதுருவின் பின்வரும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளிலிருந்து நாம் தைரியத்தை பெற்றுக்கொள்கிறோம்: “நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவி உங்கள்மேல் தங்கியிருக்கிறது.” (1 பேதுரு 4:14, NW) யெகோவாவுடைய ஆவியின் வல்லமையால், படு மோசமான சோதனைகளையும் சகித்து, அவருக்கு மகிமையும் துதியும் சேர்க்க நமக்கு பலம் கிடைக்கும்.—2 கொரிந்தியர் 4:7; எபேசியர் 3:16; பிலிப்பியர் 4:13, NW.
[அடிக்குறிப்புகள்]
a 1960-களில் நடந்த நிகழ்ச்சிகள், அடுத்த ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மலாவியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் அனுபவிக்கவிருந்த கசப்பும் இரத்தவெறியும் கொண்ட துன்புறுத்துதலின் தொடர் சம்பவங்களுக்கு வெறும் ஆரம்பம்தான். முழு விவரங்களுக்கு, 1999 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்) பக்கங்கள் 171-212-ஐக் காண்க.
b “‘அரராத் தேசத்தில்’ மெய் வணக்கத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு” என்ற கட்டுரையை ஏப்ரல் 1, 2003, காவற்கோபுரம் பத்திரிகையில், பக்கங்கள் 11-14-ல் காண்க.
c இந்தத் தீர்மானத்தின் முழு பதிவையும் 1974 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம், (ஆங்கிலம்) பக்கங்கள் 208-9-ல் காண்க. இந்த அணிவகுப்பிலிருந்து தப்பிப்பிழைத்த ஒருவர் தன் அனுபவத்தை சொல்லியிருப்பதை காவற்கோபுரம், ஜனவரி 1, 1998, பக்கங்கள் 25-9-ல் காண்க.
உங்களால் விளக்க முடியுமா?
• சோதனையையும் துன்புறுத்துதலையும் கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதுகிறார்கள்?
• சோதிக்கப்பட்டபோது, இயேசுவும் விசுவாசமாய் இருந்த மற்றவர்களும் நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
• துன்புறுத்தப்படுகையில், நாம் திருப்பித் தாக்காதிருப்பது ஏன் ஞானமான காரியம்?
• சோதனையின்போது, எந்த சந்தோஷம் இயேசுவை உறுதியோடு இருக்கச் செய்தது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]
துன்புறுத்துதலை அவர்கள் சமாளித்த விதம்
• இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல ஏரோதின் படைவீரர்கள் பெத்லகேமிற்கு வருவதற்கு முன்னரே, யோசேப்பும் மரியாளும் தேவதூதனின் வழிநடத்துதலில், குழந்தையாக இருந்த இயேசுவை தூக்கிக்கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடினார்கள்.—மத்தேயு 2:13-16.
• இயேசுவின் ஊழியத்தின்போது, அவர் வலிமையாக சாட்சி கொடுத்ததால் அநேக முறை அவருடைய எதிரிகள் அவரை கொலை செய்ய வகை தேடினார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் கையில் சிக்காதபடிக்கு அவர் தப்பினார்.—மத்தேயு 21:45, 46; லூக்கா 4:28-30; யோவான் 8:57-59.
• இயேசுவை கைது செய்ய போர்ச் சேவகர்களும் அதிகாரிகளும் கெத்செமனே தோட்டத்திற்கு வந்தபோது, இரண்டு முறை அவர்களிடம் “நான்தான்” என்று தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்டினார். எவ்வித தற்காப்பு நடவடிக்கையும் எடுக்காதபடி தம் சீஷர்களை தடுக்கவும் செய்தார், அதோடு எதிரிகள் தம்மை பிடித்துக்கொண்டு போவதற்கும் அனுமதித்தார்.—யோவான் 18:3-12.
• எருசலேமில், பேதுருவும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு, சாட்டையால் அடிக்கப்பட்டார்கள்; அதோடு இயேசுவைப் பற்றி பேசக் கூடாதென்றும் கட்டளையிடப்பட்டார்கள். ஆனாலும், விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவர்கள் “புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.”—அப்போஸ்தலர் 5:40-42.
• பிற்பாடு அப்போஸ்தலன் பவுலாக ஆன சவுல், தமஸ்குவிலிருந்த யூதர்கள் தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததை அறிய வந்தார்; பிறகு, சகோதரர்கள் அவரை ஒரு கூடையில் வைத்து, இரவோடு இரவாக மதில் வழியாய் இறக்கிவிட்டதால் தப்பினார்.—அப்போஸ்தலர் 9:22-25.
• பல வருடங்களுக்கு பிறகு, ஆளுநரான பெஸ்துவும் அகிரிப்பா ராஜாவும், பவுலிடம் “மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும்” காணவில்லையென சொன்ன போதிலும் அவர் இராயனிடம் முறையீடு செய்ய தீர்மானித்தார்.—அப்போஸ்தலர் 25:10-12, 24-27; 26:30-32.
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
கடும் துன்புறுத்துதலால் ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோதிலும், மலாவியிலிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசமிக்க யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமாக ராஜ்ய சேவை செய்து வந்தார்கள்
[பக்கம் 17-ன் படங்கள்]
யெகோவாவின் பெயரை பரிசுத்தப்படுத்துகிற சந்தோஷம்தான், விசுவாசமுள்ளவர்கள் நாசி மரண அணிவகுப்பின்போதும், சித்திரவதை முகாமிலிருந்தபோதும் உறுதியோடிருக்க உதவியது
[படத்திற்கான நன்றி]
மரண அணிவகுப்பு: KZ-Gedenkstätte Dachau, courtesy of the USHMM Photo Archives
[பக்கம் 18-ன் படங்கள்]
சோதனைகளும் துன்புறுத்துதல்களும் பல்வேறு ரூபங்களில் வரலாம்