வாழ்க்கை சரிதை
பணிவுள்ளவர்களை யெகோவா சத்தியத்திடம் ஈர்க்கிறார்
ஆஸானோ கோஸினோ சொன்னபடி
இரண்டாம் உலகப் போர் முடிந்து சில வருடங்கள் கழித்து, 1949-ல், நெட்டையான, சிநேகப்பான்மையான வெளிநாட்டுக்காரர் ஒருவர், கொபி என்ற நகரிலிருந்த ஒரு குடும்பத்தை சந்தித்தார்; அந்த வீட்டில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஜப்பானுக்கு வந்திருந்த யெகோவாவின் சாட்சிகளது முதல் மிஷனரி அவர். பைபிள் சத்தியத்திடமாக நான் ஈர்க்கப்பட்டதற்கு அவருடைய வருகைதான் காரணமானது. எப்படி? இதை சொல்வதற்கு முன் கொஞ்சம் என்னுடைய பின்னணியைப் பற்றி சொல்லட்டுமா?
நான் 1926-ல் வட ஓகயாமா மாவட்டத்திலிருந்த ஒரு குக்கிராமத்தில் பிறந்தேன். எட்டு குழந்தைகளில் நான் ஐந்தாவது. என் அப்பா, உள்ளூர் ஷின்டோ கோயிலில் வழிபடப்பட்ட தெய்வத்தின் பரம பக்தர். அதனால் வருஷம் பூராவும் மத விழாக்கள் வரும்போதெல்லாம் குழந்தைகளான எங்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும்; சொந்தக்காரர்களோடும் ஒன்றுகூடி குஷியாக பொழுதைக் கழித்தோம்.
நான் பெரியவளாக வளர வளர, வாழ்க்கையைப் பற்றி நிறைய கேள்விகள் என் மனதில் எழுந்தன. ஆனால் மரணத்தைப் பற்றிய கேள்விகள்தான் என்னைத் துளைத்தெடுத்தன. எங்கள் பாரம்பரிய வழக்கத்தின்படி, ஒருவர் சாகும்போது அவர் வீட்டில்தான் சாக வேண்டும்; அதுவும் மரணப் படுக்கையில் அவரை சுற்றி பிள்ளைகளும் கட்டாயம் இருக்க வேண்டும். என் பாட்டி இறந்தபோது, எனக்கு துக்கம் பீறிட்டது; ஒரு வயதுகூட ஆகாத என் தம்பி செத்தபோதும் அதைப் போலவே உணர்ந்தேன். என் அப்பா அம்மாவும் செத்துவிட்டால்? அவர்கள் சாவதை நினைத்தாலே மனம் கிடுகிடுத்தது. ‘சாவுதான் முடிவா? வாழ்க்கைக்கு இன்னும் ஏதாவது அர்த்தம் இருக்குமா?’ பதிலை தெரிந்துகொள்ள துடித்தேன்.
1937-ல், தொடக்கப் பள்ளியில் நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, சீன-ஜப்பானிய போர் தொடங்கியது. ஆண்கள் இராணுவப் படையில் சேர்க்கப்பட்டார்கள், பின்பு சீனப் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகள், தங்கள் தங்கள் அப்பாக்களுக்கோ அண்ணன்களுக்கோ பிரியாவிடை கொடுத்தனுப்ப வேண்டியிருந்தது; அந்த சமயத்தில், பேரரசருக்கு “பான்ஸை!” (வாழ்க) என்றும் கோஷம் போட்டார்கள். தேவாட்சி நாடாக கருதப்பட்ட ஜப்பானுக்கும், கடவுளாக கருதப்பட்ட அதன் பேரரசருக்கும் வெற்றி நிச்சயம் என மக்கள் நம்பினார்கள்.
ஆனால், சீக்கிரத்திலேயே, போர்க்களத்திலிருந்து இறந்தோரைப் பற்றிய நோட்டீஸுகள் குடும்பங்களுக்கு வர ஆரம்பித்தன. உறவினர்களை இழந்த குடும்பத்தினர் ஆற்ற முடியாத துக்கத்தில் தவித்தார்கள். அவர்கள் மனதில் வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது; எதிராளிகள் படுகாயம் அடைந்தபோதும், மரணமடைந்தபோதும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள். ஆனால் அதே நேரத்தில், என் மனதிற்குள் இவ்வாறு நினைத்துக்கொண்டேன்: ‘எதிராளியின் பக்கமிருக்கும் ஜனங்கள்கூட தங்கள் உற்றார் உறவினர் சாகும்போது, நம்மைப் போலத்தானே துக்கப்படுவார்கள்.’ நான் தொடக்கப் பள்ளியை முடிப்பதற்குள்ளேயே சீனா எங்கும் போர் ஊடுருவிக்கொண்டிருந்தது.
வெளிநாட்டுக்காரர் ஒருவரோடு எதிர்பாரா சந்திப்பு
எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பமாக இருந்தது, ஆகவே சதா வறுமையில்தான் வாடிக் கொண்டிருந்தோம். ஆனாலும், அப்பா என் படிப்பை தொடர அனுமதித்தார்—எந்த செலவும் வைக்காத வரையில். இப்படியாக 1941-ல், சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஓகயாமா நகரத்துப் பெண்கள் பள்ளி ஒன்றில் நான் சேர்ந்தேன். பெண் பிள்ளைகளை நல்ல மனைவிகளாகவும், நல்ல அம்மாக்களாகவும் உருவாக்குவதே இந்தப் பள்ளியின் கல்வித் திட்டமாக இருந்தது; ஆகவே, மாணவிகளுக்கு வீட்டை பராமரிக்கும் வேலையை கற்றுக்கொடுப்பதற்காக நகரத்திலிருந்த பணக்கார குடும்பங்களின் வீடுகளுக்கு அவர்களை அனுப்பி வைத்தது. காலை வேளையில் இந்தக் குடும்பங்களில் வேலை பார்ப்பதன் மூலம் கற்றுக்கொண்டார்கள், மதிய வேளையில் பள்ளிக்கு சென்றார்கள்.
புதிய மாணவிகளுக்கென்று நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர், கிமோனோ உடை உடுத்தியிருந்த என் டீச்சரம்மா என்னை ஒரு பெரிய வீட்டுக்கு அழைத்து சென்றார். ஏனோ, அந்த வீட்டுப் பெண்மணி என்னை வேண்டாம் என சொல்லிவிட்டாள். பிறகு டீச்சரம்மா என்னைப் பார்த்து, “சரி, அப்போ திருமதி கோடா வீட்டுக்கு போகலாமா?” என கேட்டுவிட்டு, மேற்கத்திய பாணியில் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டுக்கு என்னை அழைத்து சென்றார்; காலிங் பெல்லை அழுத்தினார். கொஞ்ச நேரம் கழித்து, வெண்ணிற முடியுடைய உயரமான ஒரு பெண் வெளியே வந்தார். ஆச்சரியத்தில் நான் வாயடைத்துப் போனேன்! ஏனெனில் அவர் ஒரு ஜப்பானிய பெண் இல்லை, என் வாழ்க்கையிலேயே ஒரு மேற்கத்தியரை அதுவரை நான் பார்த்ததில்லை. திருமதி மாட் கோடாவிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு, டீச்சரம்மா சீக்கிரமாக புறப்பட்டுவிட்டார். என் பெட்டி படுக்கையை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன்; மனம் திக் திக்கென்றது. திருமதி மாட் கோடா ஒரு அமெரிக்கர் என்றும், ஐக்கிய மாகாணங்களில் படித்திருந்த ஒரு ஜப்பானியரை மணம் செய்திருந்தார் என்றும் பிற்பாடு தெரிந்துகொண்டேன். வணிகப் பள்ளிகளில் அவர் ஆங்கில டீச்சராக பணியாற்றி வந்தார்.
வீட்டுக்குள் நுழைந்த மறுநாள் காலையிலிருந்தே தலைக்கு மேல் வேலை இருந்தது. திருமதி கோடாவின் கணவர் காக்காய் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார், நான் அவருக்கு பணிவிடை செய்ய வேண்டியிருந்தது. எனக்கு சுத்தமாகவே ஆங்கிலம் புரியாததால், என்ன செய்வேனோ ஏது செய்வேனோ என்று எனக்கு கொஞ்சம் கவலையாகவே இருந்தது. திருமதி கோடா ஜப்பானிய மொழியில் என்னிடம் பேச ஆரம்பித்ததும்தான் ‘அப்பாடா’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். அவர்கள் இருவரும் ஆங்கிலத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை தினந்தோறும் உன்னிப்பாக கேட்டேன்; இப்படி கேட்டுக் கேட்டே அந்த மொழி எனக்கு பழகிப்போனது. அந்த வீட்டிலிருந்த இனிய சூழல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
நோயாளியான தன் கணவனை திருமதி மாட் அவ்வளவு கண்ணுங்கருத்துமாக பார்த்துக் கொண்ட விதம் என்னை மிகவும் கவர்ந்தது. பைபிள் வாசிப்பதென்றால் அவருடைய கணவருக்கு ரொம்ப இஷ்டம். த டிவைன் ப்ளான் ஆஃப் தி ஏஜஸ் என்ற புத்தகத்தின் ஜப்பானிய பதிப்பை அவர்கள் பழைய புத்தகக் கடையிலிருந்து வாங்கியிருந்ததையும், ஆங்கிலத்தில் காவற்கோபுரம் பத்திரிகைக்கு பல வருடங்களாக சந்தா செய்திருந்ததையும் பிறகு தெரிந்துகொண்டேன்.
ஒருநாள் எனக்கு ஒரு பைபிளை பரிசாக தந்தார்கள். வாழ்க்கையில் முதன்முறையாக எனக்கென்று சொந்தமாக ஒரு பைபிள் கிடைத்ததால் சந்தோஷமாக இருந்தது. ஸ்கூலுக்கு போகும்போதும், வரும்போதும் வழியிலே அதை வாசித்தேன்; ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஜப்பானின் ஷின்டோ மதத்தில் நான் வளர்க்கப்பட்டதால், இயேசு கிறிஸ்து பரிச்சயமே இல்லாத நபராக எனக்குத் தோன்றினார். வாழ்க்கையைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் என் கேள்விகளுக்கு பதிலளிக்கப்போகும் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கான ஆரம்பக் கட்டம்தான் அது என்பதை அப்போது நான் உணரவில்லை.
மூன்று சோக நிகழ்ச்சிகள்
சீக்கிரமாகவே, என் இரண்டு வருட பயிற்சி முடிவுக்கு வந்தது; அந்தக் குடும்பத்திடமிருந்து பிரியாவிடை பெற வேண்டியிருந்தது. பள்ளிப் படிப்பை முடித்ததும், பெண் பிள்ளைகள் பங்காற்றும் தொண்டர் குழு ஒன்றில் சேர்ந்தேன்; கப்பற்படையினருக்கு யூனிஃபார்ம் தைக்கும் வேலையில் ஈடுபட்டேன். அமெரிக்கர்களின் B-29 குண்டு வீச்சு விமானங்களின் தாக்குதல் அந்த சமயத்தில் தொடங்கியது; ஆகஸ்ட் 6, 1945-ல், ஹிரோஷிமா மீது அணுகுண்டு போடப்பட்டது. கொஞ்ச நாள் கழித்து, எனக்கு ஒரு தந்தி வந்தது; அம்மாவின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததென்று தெரிந்துகொண்டேன். அதனால் கிடைத்த முதல் ட்ரெயினில் வீட்டுக்குப் புறப்பட்டேன். ட்ரெயினை விட்டு இறங்கியதுமே, சொந்தக்காரர் ஒருவர் என்னை சந்தித்து, அம்மா இறந்துவிட்ட செய்தியை சொன்னார். அம்மா இறந்த நாள் ஆகஸ்ட் 11. அத்தனை வருடங்களாக நான் எதை நினைத்து பயப்பட்டேனோ அது நடந்தேவிட்டது! இனிமேலும் அம்மா என்னோடு பேச மாட்டார், என்னைப் பார்த்து புன்னகைக்க மாட்டார் என நினைத்து துக்கித்தேன்.
ஆகஸ்ட் 15 அன்று, ஜப்பானின் தோல்வி உறுதியானது. ஆக, வெறும் பத்து நாட்களுக்குள் மூன்று சோக நிகழ்ச்சிகளை நான் எதிர்ப்பட வேண்டியதாயிற்று: முதலாவது, அணுகுண்டு வெடிப்பு, பிறகு, அம்மாவின் மரணம், கடைசியாக சரித்திரம் படைத்த ஜப்பானின் படுதோல்வி. என்றாலும், போர் நின்றுவிட்டதால் மக்கள் இனியாவது சாக மாட்டார்கள் என்பதை எண்ணி ஆறுதலடைந்தேன். யூனிஃபார்ம் தைக்கும் வேலையை விட்டுவிட்டு ஒருவித வெறுமையுணர்ச்சியோடு என் சொந்த ஊருக்கே திரும்பிப் போனேன்.
சத்தியத்திடம் ஈர்க்கப்பட்டேன்
ஒரு நாள், ஓகயாமாவிலிருந்த திருமதி மாட் கோடாவிடமிருந்து திடுதிப்பென்று எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் ஒரு ஆங்கிலப் பள்ளியை ஆரம்பிக்க இருந்ததால், வீட்டு வேலையில் தனக்கு கூடமாட ஒத்தாசை செய்வதற்கு அங்கு வர முடியுமா என என்னிடம் கேட்டு எழுதியிருந்தார். போவதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது, ஆனாலும் அவருடைய அழைப்பை ஏற்று அங்கு சென்றேன். சில வருடங்கள் கழித்து, கோடா தம்பதியினரோடு சேர்ந்து கொபி நகரத்திற்கு குடிபெயர்ந்தேன்.
1949-ம் வருட கோடை காலத்தின் ஆரம்பத்தில், நெட்டையான, சிநேகப்பான்மையான ஒருவர் கோடா குடும்பத்தை சந்தித்தார். அவர் பெயர் டானல்ட் ஹஸ்லட்; கொபி நகரத்தில் ஒரு மிஷனரி இல்லத்தை ஏற்பாடு செய்ய டோக்கியோவிலிருந்து கொபி நகரத்திற்கு வந்திருந்தார். அவர் ஜப்பானுக்கு வந்த யெகோவாவின் சாட்சிகளது முதல் மிஷனரி. ஓர் இல்லத்தை அவர் தேடிக் கண்டுபிடித்தார்; நவம்பர் 1949-ல், நிறைய மிஷனரிகள் கொபி நகரில் குடியேறினார்கள். ஒருநாள், அவர்களில் ஐந்து பேர் கோடா தம்பதியினரை பார்க்க வந்தார்கள். அதில் லாயிட் பாரி என்பவரும் பர்ஸி இஸ்லாப் என்பவரும், அங்கு கூடிவந்திருந்தவர்களிடம் சுமார் பத்து பத்து நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். திருமதி மாட் அந்த மிஷனரிகளின் கிறிஸ்தவ சகோதரியாக இருந்தார்; அவர்களுடைய கூட்டுறவால் பெரிதும் உற்சாகமடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த சமயத்தில்தான், ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்குள் பொங்கி எழுந்தது.
அந்த வைராக்கியமான மிஷனரிகளின் உதவியால், அடிப்படை பைபிள் சத்தியங்களை படிப்படியாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சின்னப் பிள்ளையிலிருந்தே என் மனதிலிருந்த கேள்விகளுக்கு பதில்களை கண்டுபிடித்துவிட்டேன். ஆம், பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையையும், “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்” உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற வாக்குறுதியையும் பைபிள் அளிக்கிறது. (யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:1, 4) தம் மகன் இயேசு கிறிஸ்துவையே கிரய பலியாக அளித்து இந்த நம்பிக்கைக்கு வழி செய்திருக்கும் யெகோவா தேவனை நினைத்து என் உள்ளம் நன்றியால் நிரம்பியது.
தேவராஜ்ய காரியங்களில் சந்தோஷமாக ஈடுபடுதல்
ஜப்பானில் முதன்முறையாக, 1949 டிசம்பர் 30-லிருந்து 1950, ஜனவரி 1 வரை, கொபி நகரிலிருந்த மிஷனரி இல்லத்தில் யெகோவாவின் சாட்சிகளது மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள மாட் அவர்களுடன் சென்றேன். முன்பு அந்தப் பெரிய இல்லம் நாசி கட்சியின் அங்கத்தினர் ஒருவருக்கு சொந்தமானதாக இருந்தது; அந்த இல்லத்திலிருந்து பார்த்தால் இன்லன்ட் கடலும், ஆவேஜி தீவும் அவ்வளவு அழகாக தெரியும். எனக்கு அந்தளவு பைபிள் அறிவு இல்லாததால், அந்த மாநாட்டில் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. ஆனாலும், அந்த மிஷனரிகள் ஜப்பானியர்களோடு சர்வசகஜமாக பழகியதைப் பார்த்து மிகவும் கவரப்பட்டேன். அந்த மாநாட்டின் பொதுப் பேச்சுக்கு மொத்தம் 101 பேர் ஆஜராகியிருந்தார்கள்.
அதன் பிறகு சீக்கிரத்திலேயே, வெளி ஊழியத்தில் பங்கு கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தேன். நான் இயல்பாகவே கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்ததால், வீட்டுக்கு வீடு போய் ஊழியம் செய்வதற்கு தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒருநாள் காலை, என்னை ஊழியத்திற்கு அழைத்துப் போவதற்கு சகோதரர் லாயிட் பாரி எங்கள் வீட்டிற்கு வந்தார். எடுத்த எடுப்பிலேயே சகோதரி கோடா வீட்டு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சாட்சி கொடுக்க ஆரம்பித்தார். நான் அவர் பின்னால் ஒளிந்து நின்றவாறு, அவர் சாட்சி கொடுப்பதை கேட்டுக் கொண்டிருந்தேன். இரண்டாவது முறையாக, வேறு இரண்டு மிஷனரிகளோடு ஊழியத்திற்கு போனேன். அப்போது, வயதான ஜப்பானிய பெண்மணி ஒருவர் எங்களை உள்ளே அழைத்து, நாங்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டார்; பிறகு, ஆளுக்கு ஒரு தம்ளர் பால் குடிக்க கொடுத்தார். வேதப் படிப்புக்கும் ஒத்துக்கொண்டார்; காலப்போக்கில் முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவராக ஆனார். அவர் முன்னேறுவதைப் பார்க்க பார்க்க எனக்கே உற்சாகமாக இருந்தது.
ஏப்ரல், 1951-ல், புரூக்லின் தலைமை அலுவலகத்திலிருந்து சகோதரர் நேதன் எச். நார் முதன்முறையாக ஜப்பானுக்கு வந்தார். டோக்கியோவிலுள்ள கான்டா எனும் இடத்திலிருந்த க்யோரிட்சூ என்ற அரங்கத்தில் அவருடைய பொதுப் பேச்சை கேட்க ஏறக்குறைய 700 பேர் வந்திருந்தார்கள். இந்த விசேஷ கூட்டத்தில், காவற்கோபுரம் பத்திரிகையின் ஜப்பானிய பதிப்பை வெளியிட்டபோது, கூடியிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். அதற்கு அடுத்த மாதம், சகோதரர் நார் கொபி நகருக்கு விஜயம் செய்தார்; அங்கு நடைபெற்ற ஒரு விசேஷ கூட்டத்தில், யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றேன்.
சுமார் ஒரு வருடம் கழித்து, முழுநேர ஊழியம் செய்வதற்கு, அதாவது பயனியர் ஊழியம் செய்வதற்கு என்னை உற்சாகப்படுத்தினார்கள். அந்த சமயத்தின்போது ஜப்பானில் வெகு சில பயனியர்களே இருந்தார்கள். அதோடு, நான் பயனியர் செய்ய ஆரம்பித்தால் கைச்செலவுக்கு என்ன செய்வது என குழம்பினேன். என் திருமணத்தைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால், யெகோவாவை சேவிப்பதே வாழ்க்கையில் முதலிடம் வகிக்க வேண்டுமென்பதை அப்போது புரிந்துகொண்டேன்; ஆகவே 1952-ல், பயனியர் ஊழியத்தில் காலடி வைத்தேன். அதே சமயத்தில் சகோதரி கோடாவுடைய வீட்டில் பகுதிநேர வேலையையும் செய்ய முடிந்ததை எண்ணி சந்தோஷப்பட்டேன்.
இது இவ்வாறிருக்க, போரில் கொல்லப்பட்டதாக நான் நினைத்துவந்த என் அண்ணன், தைவானிலிருந்து தன் குடும்பத்தோடு வீடு திரும்பினார். என் குடும்பம் கிறிஸ்தவ மதத்தில் கொஞ்சங்கூட அக்கறை காட்டினதில்லை; ஆனால் பயனியர்களுக்கே உரிய மிகுந்த ஆர்வத்தோடு, அவர்களுக்கு பத்திரிகைகளையும் சிறு புத்தகங்களையும் அனுப்ப ஆரம்பித்தேன். பிற்பாடு, வேலை காரணமாக என் அண்ணன் குடும்பத்தோடு கொபி நகரில் குடியேறினார். “நான் அனுப்பிய பத்திரிகைகளை படித்தீர்களா?” என அண்ணியிடம் கேட்டேன், அதற்கு அவர், “ஓ, படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது” என பதிலளித்தார்; இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை. அங்கிருந்த மிஷனரிகளில் ஒருவரோடு என் அண்ணி பைபிளை படிக்க ஆரம்பித்தார், அவர்களோடு தங்கியிருந்த என் தங்கையும் பைபிள் படிப்பில் கலந்து கொண்டாள். காலப்போக்கில், இருவருமே முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.
சர்வதேச சகோதரத்துவத்தைக் கண்டு பிரமித்தேன்
அதன் பிறகு சீக்கிரத்திலேயே, எனக்கு உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 22-வது வகுப்பில் கலந்து கொள்வதற்கான அழைப்பு வந்தது; அதைப் பெற்றபோது ஆச்சரியத்தில் அப்படியே உறைந்து போனேன். இந்தப் பள்ளிக்காக ஜப்பானிலிருந்து அழைக்கப்பட்ட முதல் நபர்கள் நானும், சகோதரர் சுட்டோமூ ஃபூக்காசேவும்தான். அந்த வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன், 1953-ல், நியு யார்க் யாங்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நியு உவர்ல்ட் சொஸைட்டி மாநாட்டில் எங்களால் கலந்து கொள்ள முடிந்தது. யெகோவாவுடைய ஜனங்களின் மத்தியிலிருந்த சர்வதேச சகோதரத்துவத்தைக் கண்டு பிரமித்துப்போனேன்.
ஜப்பானிலிருந்து அங்கு சென்றிருந்தவர்கள்—பெரும்பாலும் மிஷனரிகள்—எல்லாரும் மாநாட்டின் ஐந்தாம் நாளன்று கிமோனோ உடையை அணிவதாக இருந்தார்கள். நான் ஏற்கெனவே அனுப்பி வைத்திருந்த என்னுடைய கிமோனோ உடை சரியான நேரத்திற்கு வந்து சேராததால், சகோதரி நாரிடமிருந்து ஒரு கிமோனோ உடையை வாங்கிப் போட்டுக்கொண்டேன். நிகழ்ச்சி நடைபெறும்போது, மழை பெய்யத் தொடங்கியது; என் கிமோனோ உடை எங்கே நனைந்து போய்விடுமோ என ஒரே கவலையாகிவிட்டது. அந்த நேரம் பார்த்து, யாரோ ஒருவர் என் பின்னாலிருந்து ஒரு ரெயின் கோட்டை மென்மையாக என் மீது போர்த்தி விட்டார். “அவர் யார் என்று தெரிகிறதா?” என்று என் பக்கத்தில் நின்றிருந்த ஒரு சகோதரி என்னிடம் கேட்டார். அவர், ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் ஃப்ரெட்ரிக் டபிள்யூ. ஃப்ரான்ஸ் என்று பிறகு தெரிந்துகொண்டேன். யெகோவாவுடைய அமைப்பின் அன்பையும் ஆதரவையும் எவ்வளவாய் உணர்ந்தேன்!
கிலியட்டின் 22-வது வகுப்பு உண்மையிலேயே சர்வதேச வகுப்பாக இருந்தது; ஏனெனில் 37 நாடுகளிலிருந்து 120 மாணவர்கள் அதில் கலந்துகொள்ள வந்திருந்தார்கள். பாஷை பிரச்சினை இருந்ததால் சில நேரங்களில் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ள முடியாமல் போனாலும், அந்த சர்வதேச சகோதரத்துவத்தை நாங்கள் முழுமையாக அனுபவித்து மகிழ்ந்தோம். பிப்ரவரி 1954-ல், பனி கொட்டிக் கொண்டிருந்த ஒரு நாளன்று நான் பட்டம் பெற்றேன்; மிஷனரியாக ஜப்பானுக்கே செல்லும் நியமிப்பு கிடைத்தது. நகோயா நகரத்தில் ஊழியம் செய்வதற்கு, கிலியட்டில் என்னுடன் படித்த சுவீடன் நாட்டு சகோதரியான இங்கர் ப்ரான்ட் எனக்கு பார்ட்னராக நியமிக்கப்பட்டார். போரின் காரணமாக கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த சில மிஷனரிகள் அங்கே இருந்தார்கள்; அவர்களோடு சேர்ந்து நாங்களும் ஊழியம் செய்தோம். மிஷனரி ஊழியத்தில் நான் செலவிட்டிருந்த அந்த சில வருஷங்கள் என்னுடைய பொன்னான வருஷங்கள் என்றே சொல்லுவேன்.
தம்பதியாக செய்த சந்தோஷ சேவை
செப்டம்பர் 1957-ல், டோக்கியோ பெத்தேலில் சேவை செய்வதற்காக அழைக்கப்பட்டேன். மரத்தால் கட்டப்பட்ட இரண்டு-மாடி வீடுதான் அப்போது ஜப்பான் கிளை அலுவலகமாக இருந்தது. அந்தக் கிளை அலுவலகத்தில், மொத்தம் நான்கு அங்கத்தினரே இருந்தார்கள், கிளைக் கண்காணியான சகோதரர் பாரி உட்பட. மீதி இருந்தது மிஷனரிகளே. அங்கு நான் ட்ரான்ஸ்லேஷன் வேலையும், ப்ரூஃப் ரீடிங் வேலையும் செய்ய வேண்டியிருந்தது; அதுமட்டுமல்ல சுத்தம் செய்வது, சலவை செய்வது, சமைப்பது மற்றும் இதர வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது.
ஜப்பானில் ராஜ்ய வேலை அதிகரித்தவாறே இருந்தது; எனவே பெத்தேலில் சேவை செய்ய நிறைய சகோதரர்கள் அழைக்கப்பட்டார்கள். அதில் ஒருவர் நான் கூட்டுறவு கொண்டிருந்த சபையின் கண்காணியாக ஆனார். அவர் பெயர் ஜூன்ஜி கோஸினோ; 1966-ல், நானும் அவரும் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்திற்கு பிறகு, ஜூன்ஜி வட்டார வேலைக்கு நியமிக்கப்பட்டார். வெவ்வேறு சபைகளுக்கு சென்று, அங்குள்ள அநேக சகோதர சகோதரிகளிடம் பழகியது சந்தோஷத்தை அளித்தது. எனக்கு கொஞ்சம் ட்ரான்ஸ்லேஷன் வேலையும் கொடுக்கப்பட்டிருந்தது; ஆகவே, அந்தந்த வாரத்தின்போது தங்கியிருந்த வீடுகளிலேயே அதை செய்தேன். அதனால் நாங்கள் போகும் இடங்களுக்கெல்லாம் எங்கள் லக்கேஜோடு சேர்த்து கனமான டிக்ஷ்னரிகளையும் தூக்கிக்கொண்டு போக வேண்டியிருந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வட்டார வேலையை சந்தோஷமாக செய்தோம்; நாளுக்கு நாள் அமைப்பு விஸ்தரிப்பதை நாங்கள் கண்கூடாக பார்த்தோம். கிளை அலுவலகம் நூமாஸூவுக்கு மாற்றப்பட்டது, பிறகு சில வருடங்கள் கழித்து எபினா என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது; இப்போதும் இந்த இடத்தில்தான் கிளை அலுவலகம் இருக்கிறது. ஜூன்ஜியும் நானும் பல வருட காலமாக பெத்தேல் சேவையை அனுபவித்து வருகிறோம்; இப்போது சுமார் 600 பேரை உடைய இந்தக் குடும்பத்தோடு வேலை செய்து வருகிறோம். முழுநேர ஊழியத்தில் என்னுடைய 50-வது ஆண்டை, மே 2002-ல், பெத்தேலில் உள்ள எங்கள் நண்பர்கள் பிரியத்துடன் கொண்டாடினார்கள்.
அதிகரிப்பை காணும் பாக்கியம்
1950-ல், யெகோவாவை நான் சேவிக்க ஆரம்பிக்கையில், ஜப்பானில் விரல்விட்டு எண்ணுமளவுக்குத்தான் பிரஸ்தாபிகள் இருந்தார்கள். இப்போதோ 2,10,000-க்கும் அதிகமான ராஜ்ய பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். உண்மைதான், செம்மறியாடு போன்ற ஆயிரக்கணக்கானோர் யெகோவாவிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள், என்னைப் போலவே.
1949-ல், சகோதரி கோடாவின் வீட்டில் எங்களை சந்தித்த அந்த நான்கு மிஷனரி சகோதரர்களும், சகோதரியும், கடைசிவரை தங்கள் விசுவாசத்தில் உறுதியோடு இருந்தார்கள்; சகோதரி மாட் கோடாவும் கடைசிவரை அதேபோல இருந்தார். ஒரு உதவி ஊழியராக இருந்த என் அண்ணனும், சுமார் 15 வருடம் பயனியராக இருந்த என் அண்ணியும் இறுதி மூச்சுவரை உத்தமமாக இருந்தார்கள். தற்போது உயிரோடில்லாத என் பெற்றோரின் எதிர்கால நம்பிக்கை என்ன? அவர்கள் சாவைப் பற்றித்தானே சிறுவயதிலிருந்தே பயந்துகொண்டிருந்தேன்? உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் அளிக்கும் வாக்குறுதியைப் பற்றி தெரிந்துகொண்டது எனக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது.—அப்போஸ்தலர் 24:15.
கடந்த காலத்தை நினைவுபடுத்தி பார்க்கையில், 1941-ல், நான் எதிர்பாராமல் மாட் அவர்களை சந்தித்ததுதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே தோன்றுகிறது. அந்த சமயத்தில் நான் மட்டும் அவரை சந்தித்திருக்கவில்லை என்றால், போர் முடிந்த பிறகு மீண்டும் அவருடைய வீட்டில் வேலை செய்ய ஒத்துக்கொள்ளவில்லை என்றால், ஒதுக்குப்புறமான கிராமத்திலுள்ள எங்கள் பண்ணையில்தான் ஒருவேளை இப்போது கிடந்திருப்பேன்; ஆரம்ப காலத்திலிருந்த அந்த மிஷனரிகளோடும் எனக்கு எந்த தொடர்பும் இல்லாமல் போயிருக்கும். சகோதரி மாட் மூலமாகவும் அன்றிருந்த மிஷனரிகள் மூலமாகவும் என்னை சத்தியத்திடம் ஈர்த்த யெகோவாவுக்கு எவ்வளவாய் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!
[பக்கம் 25-ன் படம்]
மாட் கோடா மற்றும் அவரது கணவரோடு. இடது முன்பக்கத்தில் நான்
[பக்கம் 27-ன் படம்]
1953-ல், யாங்கி ஸ்டேடியத்தில், ஜப்பானிலிருந்து வந்திருந்த மிஷனரிகளோடு. இடது கோடியில் நான்
[பக்கம் 28-ன் படங்கள்]
பெத்தேலில், என் கணவர் ஜூன்ஜியோடு