உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 4/1 பக். 24-29
  • நாங்கள் ஒரு குழுவாக

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாங்கள் ஒரு குழுவாக
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சாட்சியானது எப்படி?
  • லாயிட்டின் குடும்பத்தாரை சந்தித்தல்
  • எங்கள் வேலைக்குத் தடை
  • திருமணமும், முழுநேர ஊழியத்தைத் தொடருதலும்
  • மிஷனரி சேவைக்கு தயாராதல்
  • ஜப்பானியர்களோடு ஊழியம்
  • மகிழ்ச்சியும் மனநிறைவுமிக்க அநேக நியமிப்புகள்
  • தலைமை அலுவலகத்தில் ஆசீர்வாதங்கள்
  • கடவுளுடைய மக்களே என் வீட்டார்
  • கூச்ச சுபாவத்திற்கு குட்பை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • பணிவுள்ளவர்களை யெகோவா சத்தியத்திடம் ஈர்க்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • எழுபது வருடங்களாக ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்திருக்கிறேன்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • மிஷனரிகளாக சென்ற இடமே எங்கள் வீடானது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 4/1 பக். 24-29

வாழ்க்கை சரிதை

நாங்கள் ஒரு குழுவாக

மெல்பா பாரிசொன்னபடி

1999, ஜூலை 2-⁠ம் தேதி நானும் என் கணவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய பெரிய மாநாடு ஒன்றிற்கு சென்றிருந்தோம். எங்களுடைய 57 வருட கால திருமண வாழ்க்கையில், இது போன்ற எத்தனையோ பெரிய மாநாடுகளுக்குப் போயிருக்கிறோம். ஹவாயில் நடைபெற்ற இந்த மாவட்ட மாநாட்டில் வெள்ளிக்கிழமை அன்று கடைசி பேச்சை என் கணவர் லாயிட் கொடுக்கையில் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை பிழைக்க வைப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் இறந்துவிட்டார்.a

இந்தத் துயரத்தை சமாளிக்க பக்கத்திலிருந்து எனக்கு உதவிய ஹவாயிலுள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் எத்தனை அருமையானவர்கள்! இவர்களில் பலருடைய வாழ்க்கையிலும், உலகெங்குமுள்ள மற்ற அநேகருடைய வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்படுவதற்கு லாயிட் காரணமாக இருந்திருக்கிறார்.

அவருடைய மரணத்திற்குப் பின்னான இந்த இரண்டாண்டுகளில் அவரோடு வாழ்ந்த அருமையான வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன். பல சமயங்களில் வெளி நாடுகளில் மிஷனரி வேலையிலும், நியூ யார்க் புரூக்ளினில் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திலும் பணியாற்றியுள்ளோம். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கழித்த என் இளமை கால வாழ்க்கை பசுமையாய் நினைவில் உள்ளது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த சமயத்தில் நானும் லாயிட்டும் எதிர்ப்புகளின் மத்தியில் எதிர்நீச்சல் போட்டு திருமணம் செய்து கொண்டது நினைவுக்கு வருகிறது. நான் எப்படி யெகோவாவின் சாட்சியாக ஆனேன் என்பதையும், 1939-⁠ல் எப்படி லாயிட்டை சந்தித்தேன் என்பதையும் முதலில் சொல்லுகிறேன்.

சாட்சியானது எப்படி?

என் அப்பா பெயர் ஜேம்ஸ், அம்மா பெயர் ஹென்ரீட்டா ஜோன்ஸ். இருவரும் என்மீது பாச மழை பொழிந்து கண்ணும் கருத்துமாய் வளர்த்தனர்; எனக்கு இரண்டு தங்கைகள். 1932-⁠ல் பள்ளி படிப்பை முடிக்கையில் எனக்கு 14 வயது. உலகில் மாபெரும் பொருளாதார மந்தநிலை நிலவிய சமயம் அது. ஆகவே குடும்பத்துக்கு ஒத்தாசை செய்ய வேலைக்குச் சென்றேன். ஒருசில வருடங்களில் எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. என் மேற்பார்வையில் பல இளம் பெண்கள் வேலை பார்த்தனர்.

இதற்கிடையில், 1935-⁠ல் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அம்மாவுக்கு பைபிள் பிரசுரங்களைக் கொடுத்திருந்தார். இதுதான் சத்தியம் என்பது சீக்கிரத்திலேயே அம்மாவுக்கு பிடிபட்டுவிட்டது. வீட்டில் நாங்களோ அம்மாவுக்கு ஏதோ புத்தி பேதலித்துவிட்டதாக நினைத்தோம். ஆனால் ஒருநாள் மரித்தோர் எங்கே இருக்கின்றனர்? என்ற ஆங்கில சிறுபுத்தகம் ஒன்று கண்ணில்பட்டது. அந்தத் தலைப்பைப் பார்த்தவுடனேயே எனக்குள் ஆர்வம் பிறந்தது. ஆகவே இரகசியமாக படித்தேன். அதுவே என் வாழ்க்கையில் திரும்புக்கட்டமாக அமைந்தது! உடனடியாக, மாடல் ஸ்டடி என்று அழைக்கப்பட்ட, வாரநாட்களில் நடைபெற்ற கூட்டத்துக்கு அம்மாவோடு செல்ல ஆரம்பித்தேன். மாடல் ஸ்டடி என்ற சிறுபுத்தகத்தில் கேள்வி பதில்களும் அவற்றை ஆதரிக்கும் வேதவசனங்களும் காணப்படும். பிற்பாடு இதுபோல மூன்று சிறுபுத்தகங்கள் இருந்தன.

அந்தச் சமயத்தில்தான், 1938, ஏப்ரலில் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தின் பிரதிநிதி ஜோசஃப் எஃப். ரதர்ஃபோர்டு சிட்னிக்கு வந்திருந்தார். அவருடைய பொதுப் பேச்சைத்தான் முதன்முதலாக கேட்டேன். ஆரம்பத்தில் அதை சிட்னி டவுன் ஹாலில் நடத்தவிருந்தனர்; ஆனால் அந்த இடம் கிடைக்காதபடி எதிரிகள் செய்துவிட்டனர். எனவே இன்னும் விசாலமான சிட்னி ஸ்போர்ட்ஸ் கிரவுண்ட் கிடைத்தது. இந்த எதிர்ப்பு அதிக விளம்பரத்தை ஏற்படுத்தியதால் பேச்சைக் கேட்க சுமார் 10,000 பேர் வந்திருந்தனர். அந்தச் சமயத்தில் ஆஸ்திரேலியாவில் 1,300 சாட்சிகளே இருந்ததால் வந்திருந்தவர்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தை அளித்தது.

அதன் பிறகு, எந்தவித பயிற்சியுமின்றி முதன்முறையாக வெளி ஊழியத்தில் கலந்துகொண்டேன். ஊழியம் செய்யும் பிராந்தியத்தை வந்தடைந்த போது எங்களை வழிநடத்தியவர் என்னிடம், “அதோ அந்த வீட்டுக்கு நீங்க போங்க” என்றார். வீட்டின் கதவை தட்டியபோது ஒரு பெண்மணி வந்தார். எனக்கிருந்த பயத்தில் நேராக அவரிடம், “தயவுசெய்து இப்போ டைம் என்னன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டேன். அவர் உள்ளே போய் டைம் பார்த்துவந்து சொன்னார். அவ்வளவுதான் கார் நிற்குமிடத்திற்கு நடையைக் கட்டினேன்.

ஆனால் அதோடு முயற்சியைக் கைவிடவில்லை. சீக்கிரத்தில் ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பதில் தவறாமல் கலந்துகொண்டேன். (மத்தேயு 24:14) 1939, மார்ச் மாதத்தில் யெகோவாவுக்கான என் ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக, பக்கத்து வீட்டு பெண் டாரதி ஹச்சிங்ஸ் என்பவரின் குளியல் தொட்டியில் முழுக்காட்டுதல் பெற்றேன். அங்கு சகோதரர்கள் யாரும் இல்லை. எனவே, நான் முழுக்காட்டுதல் பெற்று கொஞ்ச காலத்திற்குள்ளாகவே, பொதுவாக கிறிஸ்தவ சகோதரர்கள் மட்டுமே கவனித்துக்கொள்ளும் சபை பொறுப்புகளை ஏற்க வேண்டி வந்தது.

பெரும்பாலும் கூட்டங்களை வீடுகளில் நடத்தினோம், ஆனால் சில சமயங்களில் பொதுப் பேச்சுக்காக மன்றங்களை வாடகைக்கு எடுத்தோம். ஒருசமயம், கிளை அலுவலகமாகிய பெத்தேலைச் சேர்ந்த அழகான இளைஞர் எங்கள் சிறிய சபைக்கு பேச்சு கொடுக்க வந்திருந்தார். பேச்சு கொடுப்பதற்காக மட்டுமா என்ன, எனக்கு தெரியாமல் என்னைப் பற்றி தெரிந்துகொண்டு போவதற்கும்தான். இப்படித்தான் நான் முதன்முதலில் லாயிட்டை சந்தித்தேன்.

லாயிட்டின் குடும்பத்தாரை சந்தித்தல்

யெகோவாவை முழுநேரம் சேவிக்க ஆசைப்பட்டேன். ஆகவே பயனியர் (முழுநேர பிரசங்க ஊழியம்) செய்வதற்காக விண்ணப்பித்த போது, பெத்தேலில் சேவை செய்ய விருப்பமா என கேட்டனர். ஆகவே, இரண்டாம் உலகப் போர் ஆரம்பமான 1939, செப்டம்பரில் சிட்னியின் புறநகர் பகுதியில் இருந்த ஸ்ட்ராத்ஃபீல்டு பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினராக ஆனேன்.

1939, டிசம்பரில், நியூ ஜீலாந்தில் நடைபெற்ற மாநாட்டிற்குப் போனேன். லாயிட்டின் சொந்த ஊர் நியூ ஜீலாந்து; ஆதலால் அவரும் பயணப்பட்டார். இருவரும் ஒரே கப்பலில் சென்றதால் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. வெலிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் லாயிட்டின் அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள் என தன் குடும்பத்தாரை லாயிட் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு கிரைஸ்ட்சர்ச் என்ற இடத்திலிருந்த அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

எங்கள் வேலைக்குத் தடை

1941, ஜனவரி 18-⁠ம் தேதி சனிக்கிழமை, சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆறு கருப்பு கார்களில் காமன்வெல்த் அதிகாரிகள் கிளை அலுவலகத்துக்கு வந்தனர். பெத்தேலின் முன்புறத்திலிருந்த வரவேற்பு அறையில் வேலை செய்து வந்ததால் நான்தான் அவர்களை முதலில் பார்த்தேன். இதற்கு சுமார் 18 மணிநேரத்திற்கு முன் தடையுத்தரவு பற்றிய செய்தி எங்கள் காதுகளுக்கு எட்டியது. ஆகவே கிளை அலுவலகத்திலிருந்த எல்லா பிரசுரங்களையும் ஃபைல்களையும் நாங்கள் அப்புறப்படுத்தி விட்டோம். அடுத்த வாரம் லாயிட் உட்பட பெத்தேல் குடும்பத்தினரில் ஐவர் சிறையிலடைக்கப்பட்டனர்.

சிறையிலிருக்கையில் சகோதரர்களுக்கு வேண்டியதெல்லாம் ஆவிக்குரிய உணவுதான் என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே லாயிட்டுக்கு “காதல் கடிதங்கள்” எழுத முடிவு செய்தேன். சாதாரண காதல் கடிதத்தைப் போல ஆரம்பித்து காவற்கோபுர கட்டுரைகளை அப்படியே எழுதிவிட்டு முடிவில் ‘உங்களை மறவாத காதலி’ என கையெழுத்து போட்டு அனுப்பினேன். நாலரை மாதங்களுக்குப்பின் லாயிட் விடுவிக்கப்பட்டார்.

திருமணமும், முழுநேர ஊழியத்தைத் தொடருதலும்

1940-⁠ல் லாயிட்டின் அம்மா ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தார்கள். நாங்கள் திருமணம் செய்ய தீர்மானித்திருப்பதை லாயிட் தன் அம்மாவிடம் சொன்னார். ஆனால் அவர்களோ, இந்த உலகத்துக்கு முடிவு சீக்கிரத்தில் வரப்போவதால் இப்போதைக்கு வேண்டாம் என சொல்லிவிட்டார்கள். (மத்தேயு 24:3-14) லாயிட் தன் விருப்பத்தை நண்பர்களிடம் சொன்னபோது அவர்களும் காத்திருந்து புதிய உலகில் திருமணம் செய்து கொள்ளும்படி ஆலோசனை கூறினர். கடைசியாக 1942, பிப்ரவரி மாதத்தில் யாருக்கும் தெரியாமல் ஒருநாள் லாயிட் என்னையும் நான்கு சாட்சிகளையும் திருமண பதிவு அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்; அந்த நால்வரும் விஷயத்தை வெளியில் சொல்லாமலிருக்க ஒப்புக்கொண்டனர். இப்படித்தான் எங்கள் திருமணம் நடந்தது. திருமணத்தை நடத்தி வைக்க அப்போது யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி இல்லை.

திருமணமானவர்கள் பெத்தேலில் சேவையைத் தொடர அப்போது அனுமதிக்கப்படவில்லை. எனவே விசேஷ பயனியராக ஊழியம் செய்ய விருப்பமா என்று கேட்டனர். வாகா வாகா என்ற நாட்டுப்புற பகுதியில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டபோது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டோம். அப்போதும் பிரசங்க வேலைக்கு தடையுத்தரவு தொடர்ந்தது; எங்களுக்கு பண உதவியும் கிடைக்கவில்லை. எனவே எங்கள் பாரத்தை உண்மையிலேயே யெகோவாமீது வைக்க வேண்டியிருந்தது.​—⁠சங்கீதம் 55:⁠22.

இரண்டு பேர் ஓட்டும் சைக்கிளில் நாங்கள் கிராமப்புறங்களுக்குச் சென்றோம்; சில நல்மனமுள்ளவர்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினோம். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பைபிளை படிக்க தயாராக இல்லை. ஒரே ஒரு கடைக்காரர் மட்டும் எங்கள் ஊழியத்தைப் பாராட்டி வாராவாரம் பழங்களையும் காய்கறிகளையும் கொடுத்து உதவினார். வாகா வாகாவில் ஆறு மாதங்களைக் கழித்த பின்பு பெத்தேலில் சேவை செய்ய அழைப்பைப் பெற்றோம்.

மே 1942-⁠ல் ஸ்ட்ராத்ஃபீல்டிலிருந்த அலுவலகத்தை பெத்தேல் குடும்பம் காலிசெய்துவிட்டது. அதன் பிறகு பெத்தேல் குடும்பத்தினர் ஒரு வீட்டிலிருந்து பணியாற்றினர். ஆனால் அதே வீட்டில் இருந்துவிடாமல், கண்டுபிடித்துவிடாதபடிக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு வீடுகளுக்கு மாறிக் கொண்டே இருந்தனர். ஆகஸ்ட் மாதம் பெத்தேல் வந்த போது அப்படிப்பட்ட வீட்டில் அவர்களோடு சேர்ந்துகொண்டோம். பகல் நேரங்களில் நிலத்தடியில் இயங்கிவந்த பிரஸ்ஸுகள் ஒன்றில் நாங்கள் பணியாற்றினோம். கடைசியாக 1943, ஜூன் மாதம் தடையுத்தரவு நீக்கப்பட்டது.

மிஷனரி சேவைக்கு தயாராதல்

1947, ஏப்ரலில் அ.ஐ.மா., நியூ யார்க், செளத் லான்சிங்கில் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளிக்குச் செல்ல விண்ணப்பத்தைப் பெற்றோம். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவிலிருந்த சபைகளை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்துவதற்கு எங்களை அனுப்பினர். ஒருசில மாதங்களுக்குப் பின்பு கிலியட் பள்ளியின் 11-வது வகுப்பில் கலந்துகொள்ள அழைப்பு கிடைத்தது. மற்ற எல்லா ஏற்பாடுகளோடு எங்கள் பொருட்களை பேக் செய்ய மூன்று வாரங்கள் இருந்தன. 1947, டிசம்பரில் குடும்பத்தாரையும் நண்பர்களையும் விட்டு பிரிந்து ஆஸ்திரேலியாவிலிருந்து அதே வகுப்பில் கலந்துகொள்ள சென்ற இன்னும் 15 பேரோடு நியூ யார்க் நகருக்குப் பயணப்பட்டோம்.

கிலியட்டில் கழித்த சில மாதங்கள் நிமிஷமாய் பறந்து விட்டதைப் போல் தோன்றியது; நாங்கள் ஜப்பானில் ஊழியம் செய்ய மிஷனரிகளாக நியமிக்கப்பட்டோம். ஜப்பானுக்குச் செல்வதற்குரிய ஆவணங்களை எல்லாம் தயார்செய்வதற்கு கொஞ்ச காலமெடுத்தது; ஆகவே மறுபடியுமாக லாயிட் யெகோவாவின் சாட்சிகளை சந்திக்கும் பிரயாண கண்காணியாக நியமிக்கப்பட்டார். லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் தொடங்கி மெக்ஸிகோ எல்லை வரை இருந்த சபைகளை சந்திக்க சென்றோம். எங்களுக்கென்று கார் இல்லாததால், வாராவாரம் ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு தங்கள் காரில் சாட்சிகள் எங்களை அன்போடு அழைத்துச் சென்றனர். இப்போது அந்த இடத்தில் மூன்று ஆங்கில மொழி மாவட்டங்களும், மூன்று ஸ்பானிய மொழி மாவட்டங்களும் உள்ளன, ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 10 வட்டாரங்கள் உள்ளன!

1949, அக்டோபரில் மிஷனரிகளாகிய நாங்கள் அனைவரும் ஜப்பானுக்கு செல்லும் கப்பலில் பயணப்பட்டோம்; அது ஒருசமயம் இராணுவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல். அதன் ஒரு பகுதி ஆண்களுக்கும், மற்றொரு பகுதி பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. யோகஹாமாவை அடைய இன்னும் ஒருநாளே இருக்கையில் நாங்கள் கடும்புயலில் சிக்கிக்கொண்டோம். புயல்காற்று மேகங்களை அடித்துக்கொண்டு போயிருக்க வேண்டும். அதனால்தான் மறுநாள் அக்டோபர் 31-⁠ம் தேதி சூரிய உதயத்தில் அழகாக ஜொலித்த ஃப்யூஜி மலை எங்கள் கண்களுக்கு விருந்தளித்தது. புதிய நியமிப்பில் எங்களுக்கு எப்பேர்ப்பட்ட வரவேற்பு!

ஜப்பானியர்களோடு ஊழியம்

துறைமுகத்தை நெருங்குகையில் நூற்றுக்கணக்கானோரைப் பார்த்தோம். இவர்கள் அனைவரின் முடியும் கறுப்பாக இருந்தது. உரத்த குரலில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் சப்தம் காதை பிளந்தது; ‘எவ்வளவு கூச்சல்போடும் கூட்டம்!’ என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம். அவர்கள் அனைவரும் மரத்தாலான செருப்புகளை அணிந்திருந்ததால் மர மேடைகளில் நடக்கும்போது டொக் டொக்கென்ற சப்தம் வேறு. யோகஹாமாவில் இரவைக் கழித்துவிட்டு, நாங்கள் செல்லவிருந்த கோப் நகரத்திற்கு மறுநாள் இரயில் ஏறினோம். சில மாதங்களுக்கு முன்னதாகவே ஜப்பானுக்கு வந்திருந்த கிலியட் நண்பர் டான் ஹாஸ்லெட் அங்கு ஒரு மிஷனரி வீட்டை ஏற்கெனவே வாடகைக்கு எடுத்திருந்தார். மேற்கத்திய பாணியில் கட்டப்பட்டிருந்த அந்த பெரிய அழகான வீட்டில் இரண்டு மாடிகள் இருந்தன. ஆனால் எந்த சாமான்களும் அங்கில்லை!

வீட்டைச் சுற்றி வளர்ந்திருந்த உயரமான புற்களை வெட்டி தரையில் பரப்பினோம், தூங்குவதற்கு படுக்கை ரெடி. இப்படித்தான் எங்கள் மிஷனரி வாழ்க்கை ஆரம்பமானது. எங்கள் பெட்டியில் கொண்டு சென்றவைதான் எங்கள் சொத்துக்கள். வீட்டை அனலாக வைத்துக்கொள்வதற்கும் சமையல் செய்வதற்கும் ஹிபாச்சி என்றழைக்கப்படும் சிறிய கரியடுப்பு வாங்கினோம். ஒருநாள் இரவு எங்களுடன் இருந்த மிஷனரிகள் பெர்ஸி இஸ்லாபும் லிமா இஸ்லாபும் அந்த அடுப்பு புகையில் மயங்கியே விழுந்துவிட்டனர். உடனே லாயிட் ஜன்னல்களை எல்லாம் திறந்து வைத்தார். வெளியிலிருந்து ஜிலுஜிலுவென்று காற்று உள்ளே வந்த பிறகுதான் அவர்களுக்கு நினைவே திரும்பியது. கரியடுப்பில் சமைக்கையில் ஒருநாள் நானும் நினைவிழந்து விழுந்திருக்கிறேன். சில விஷயங்களைப் பழகிக்கொள்ள கொஞ்ச காலமெடுத்தது!

முக்கியமாக நாங்கள் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே ஒரு மாத காலத்திற்கு தினமும் 11 மணிநேரம் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொண்டோம். அதன்பிறகு ஓரிரண்டு வாக்கியங்களை எழுதி வைத்துக்கொண்டு ஊழியத்தை ஆரம்பித்தோம். ஊழியத்துக்குச் சென்ற முதல் நாளே மியோ டகாகி என்ற அழகிய பெண்ணை சந்தித்தேன். நான் சொல்வதை அவள் சந்தோஷத்தோடு கேட்டாள். மறுசந்திப்புகளின்போது ஜப்பானிய-ஆங்கில அகராதிகளை வைத்துக்கொண்டு எப்படியோ சமாளித்தோம். பலனளிக்கும் படிப்பாக அது மாறியது. 1999-⁠ல் விரிவுபடுத்தப்பட்ட கிளை அலுவலக கட்டட பிரதிஷ்டைக்கு சென்றிருந்த போது, நான் மியோவையும் எங்களோடு பைபிள் படித்த இன்னும் பலரையும் சந்தித்தேன். ஐம்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன, ஆனால் அவர்கள் இன்னும் வைராக்கியமான ராஜ்ய பிரஸ்தாபிகளாக யெகோவாவை சேவிப்பதில் தங்களால் முடிந்ததைச் செய்கின்றனர்.

1950, ஏப்ரல் 1-⁠ம் தேதி கோப் நகரில் நடைபெற்ற கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு சுமார் 180 பேர் வந்திருந்தனர். மறுநாள் காலை வெளி ஊழியத்தில் பங்குகொள்ள 35 பேர் வந்திருந்தது எங்களுக்கு அதிக ஆச்சரியத்தை அளித்தது. மிஷனரிகள் நாங்கள் ஒவ்வொருவரும் இந்தப் புதியவர்களில் மூன்று அல்லது நான்கு பேரை உடன் அழைத்துச் சென்றோம். வீட்டுக்காரர்கள் ஜப்பானிய மொழி அதிகம் பேசாத என்னை அந்நியனாக நினைத்து என்னிடம் பேசாமல் நினைவு ஆசரிப்பில் கலந்துகொண்டு என்னோடு ஊழியத்திற்கு வந்திருந்த அந்த ஜப்பானியரிடமே பேசினர். அவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தனர், எனக்கோ ஒன்றும் புரியவில்லை. இந்தப் புதியவர்களில் சிலர் சத்தியத்தில் வளர்ந்து இன்று வரை பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மகிழ்ச்சியும் மனநிறைவுமிக்க அநேக நியமிப்புகள்

1952 வரை கோப் நகரில் மிஷனரிகளாக சேவை செய்தோம். அதன் பிறகு டோக்கியோவுக்கு அனுப்பப்பட்டோம். அங்கே கிளை அலுவலகத்தை மேற்பார்வையிடும் வேலையில் லாயிட் பொறுப்பேற்றார். கொஞ்ச நாட்களுக்குப் பின்பு அவருடைய வேலையின் நிமித்தம் ஜப்பானின் பல பகுதிகளுக்கும் வேறு பல நாடுகளுக்கும் பயணம் செய்ய நேர்ந்தது. அதன் பிறகு ஒருநாள் உலக தலைமை அலுவலகத்திலிருந்து டோக்கியோவுக்கு வந்திருந்த நேதன் ஹெச். நார் என்னிடம் “உங்கள் கணவர் மண்டல கண்காணியாக அடுத்து எங்கு பயணம் செய்யவிருக்கிறார் தெரியுமா? ஆஸ்திரேலியாவுக்கும் நியூ ஜீலாந்துக்கும். சொந்தமாக டிக்கெட் வாங்கி போக முடிந்தால் நீங்களும் போகலாம்” என்றார். சந்தோஷத்தில் எனக்கு தலைகால் புரியவில்லை! நாங்கள் வீட்டாரைவிட்டு பிரிந்து வந்து ஒன்பது ஆண்டுகள் உருண்டோடி இருந்தன.

உடனடியாக எங்கள் குடும்பத்தாருக்கு கடிதங்கள் மூலம் விவரத்தை சொன்னோம். சீக்கிரத்திலேயே அம்மா டிக்கெட் வாங்க பணம் அனுப்பினார்கள். லாயிட்டும் நானும் ஊழியத்திலேயே முழுமூச்சாக ஈடுபட்டிருந்ததால் எங்கள் குடும்பத்தாரை சென்று பார்ப்பதற்கு எங்களிடம் காசு இல்லாதிருந்தது. ஆகவே இந்த ஏற்பாட்டை என் ஜெபங்களுக்குக் கிடைத்த பதிலாக நினைத்துக்கொண்டேன். அம்மா என்னைப் பார்த்த போது மிகவும் சந்தோஷப்பட்டார்கள். “இன்னும் மூணு வருஷங்கள் கழித்து நீ திரும்பவும் வருவதற்கு இப்போதிருந்தே பணத்தை சேமிக்கப் போகிறேன்” என அம்மா சொன்னார்கள். அந்த சந்தோஷமான எண்ணத்தோடு நாங்கள் பிரியாவிடை பெற்றோம்; ஆனால் அடுத்த ஜூலை மாதமே அம்மா எங்களை விட்டு மரணத்தில் பிரிந்தது அதிக வருத்தத்தைத் தந்தது. புதிய உலகில் அவர்கள் வரவுக்காக எத்தனை ஆவலாக காத்திருக்கிறேன்!

1960 வரை மிஷனரி ஊழியம் மட்டுமே செய்து வந்தேன். பின்னர் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், “இன்று முதல் பெத்தேல் குடும்பத்தினர் அனைவரின் துணிமணிகளை துவைத்து அயர்ன் செய்யும் வேலையையும் உங்களுக்கு நியமிக்கிறோம்” என எழுதப்பட்டிருந்தது. அப்போது எங்கள் பெத்தேல் குடும்பத்தில் பன்னிரண்டு பேர்கூட இல்லை. ஆகவே என்னுடைய மிஷனரி ஊழியத்தோடு இதையும் சேர்த்து செய்வது எனக்கு கஷ்டமாகவே இருக்கவில்லை.

1962-⁠ல் ஜப்பானிய பாணியில் அமைந்திருந்த எங்கள் வீட்டை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய ஆறு மாடி பெத்தேல் வீட்டை ஒரு வருடத்திற்குள் கட்டி முடித்தனர். புதிதாக பெத்தேலில் சேவை செய்ய வந்த இளம் சகோதரர்களுக்கு, அறைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும், மற்ற வேலைகளை செய்வதற்கும் கற்றுக்கொடுக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. ஜப்பானில் பையன்களுக்கு வீட்டு வேலைகள் கற்றுத்தரும் பழக்கமே இல்லை. அவர்கள் தங்கள் வீட்டில், படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்ததால், அவர்களுடைய அம்மாக்களே எல்லா வேலையையும் செய்துவந்தனர். ஆனால் அவர்களுடைய அம்மாவைப் போல எல்லா வேலையையும் நான் செய்ய மாட்டேன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். காலப்போக்கில், இவர்களில் அநேகர் அமைப்பில் புதிய, பொறுப்புள்ள வேலைகளுக்கு தகுதி பெறும் அளவு முன்னேறினர்.

நல்ல உஷ்ணமான கோடை காலத்தில் ஒருநாள், பைபிளை படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பெத்தேலை சுற்றிப்பார்க்க வந்தாள். அப்போது நான் குளியல் அறைகளை கழுவி சுத்தம் செய்வதை பார்த்தாள். “இந்த வேலையை உங்களுக்கு செய்து கொடுக்க ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்து தருகிறேன், சம்பளத்தையும் நானே கொடுத்துவிடுகிறேன். தயவுசெய்து இதை உங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிடுங்கள்” என்றாள். என்மீது அவளுக்கிருந்த பரிவுக்கு நன்றி சொல்லிவிட்டு, யெகோவாவின் அமைப்பில் எந்த வேலையையும் சந்தோஷமாக செய்ய நான் தயாராக இருப்பதை அவளுக்கு விளக்கினேன்.

இந்தச் சமயத்தில்தான், கிலியட் பள்ளியின் 39-வது வகுப்புக்கு வரும்படி லாயிட்டுக்கும் எனக்கும் அழைப்பு வந்தது! 1964-⁠ல் 46-வது வயதில் மறுபடியும் பள்ளிக்குச் செல்வது எவ்வளவு பெரிய பாக்கியம்! கிளை அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் பொறுப்புகளை சரிவர செய்ய உதவுவதற்காகவே இந்தப் பயிற்சி திட்டமிடப்பட்டிருந்தது. பத்து மாத பயிற்சிக்குப் பிறகு நாங்கள் மறுபடியும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டோம். இந்த சமயத்தில் ஜப்பானில் 3,000-⁠க்கும் மேற்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகள் இருந்தனர்.

பிரமாண்டமான வளர்ச்சியின் காரணமாக 1972-⁠ல் 14,000-⁠க்கும் அதிகமான சாட்சிகள் இருந்தனர்; புதிய ஐந்து மாடி கிளை அலுவலகம் ஒன்று டோக்கியோவுக்கு தெற்கே நுமாஸுவில் கட்டப்பட்டது. பெத்தேலிலிருந்து பார்த்தால் ஃப்யூஜி மலையின் அற்புதமான காட்சியை கண்டு ரசிக்க முடியும். ஜப்பானிய மொழியில் மாதத்துக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான பத்திரிகைகள் புதிய, மாபெரும் ரோட்டரி பிரஸ்களில் அச்சிடப்பட்டன. ஆனால் சீக்கிரத்தில் எங்களுக்கு வேறு நியமிப்பு வரவிருந்தது.

1974-⁠ன் பிற்பகுதியில் புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திலிருந்து எங்களுக்கு கடிதம் வந்தது. ஆளும் குழுவில் சேவை செய்ய லாயிட்டுக்கு அழைப்பு வந்திருந்தது. “ஒன்றாக சேர்ந்து வாழும் வாழ்க்கை இத்தோடு முடியப் போகிறது. லாயிட்டுக்கு பரலோக நம்பிக்கையும் எனக்கோ பூமிக்குரிய நம்பிக்கையும் இருப்பதால் இன்றோ நாளையோ நாங்கள் பிரிந்தே ஆக வேண்டும். எனவே புரூக்ளினுக்கு லாயிட் தனியாக போவதே நல்லது” என்று முதலில் நினைத்தேன். ஆனால் சீக்கிரத்தில் என் மனதை மாற்றிக்கொண்டு 1975, மார்ச்சில் லாயிட்டோடு சேர்ந்து சந்தோஷமாக பயணப்பட்டேன்.

தலைமை அலுவலகத்தில் ஆசீர்வாதங்கள்

லாயிட் புரூக்ளினில் இருந்தாலும் அவர் மனம் ஜப்பானிய பிராந்தியத்தில் இருந்தது; எப்போதும் ஜப்பானில் கிடைத்த அனுபவங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது இன்னும் பலரை சந்திக்க அநேக வாய்ப்புகள் கிடைத்தன. கடந்த 24 ஆண்டுகள் மண்டல வேலைக்காக லாயிட் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்; இதனால் உலகம் முழுவதிலும் பயணம் செய்திருக்கிறார். பல சமயங்களில் அவரோடு நானும் போய் வந்திருக்கிறேன்.

மற்ற நாடுகளிலுள்ள நம் கிறிஸ்தவ சகோதரர்களைப் பார்க்கும்போது அவர்கள் என்ன சூழ்நிலைகளில் வாழ்கின்றனர், எப்படியெல்லாம் வேலை செய்கின்றனர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் சந்தித்த பத்து வயது சிறுமி என்டெல்லாவை என்னால் மறக்கவே முடியாது. அவள் கடவுளுடைய பெயரை நெஞ்சார நேசித்தாள். கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒன்றரை மணிநேரம் நடந்துவந்தாள். அவளுடைய குடும்பத்தினரின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் அவள் யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தாள். அவளுடைய சபைக்கு நாங்கள் சென்றிருந்தோம். அங்கே பேச்சாளரின் குறிப்புத்தாளுக்கு மேலே ஒரே ஒரு விளக்கு மட்டுமே மங்கலாக எரிந்துகொண்டிருந்தது. மற்றபடி அந்த இடம் முழுவதுமே கும்மிருட்டு. அந்த இருட்டிலும் சகோதர சகோதரிகள் இனிமையாக பாடுவதைக் கேட்டு நாங்கள் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.

எங்கள் வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியான சமயம் டிசம்பர் 1998. கியூபாவில் நடைபெற்ற “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளில் நாங்களும் இருந்தோம். புரூக்ளின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருந்தவர்களுக்கு சகோதர சகோதரிகள் சந்தோஷத்தையும் நன்றியையும் தெரிவித்தபோது நாங்கள் மிகவும் நெகிழ்ந்து போனோம்! வைராக்கியத்துடன் யெகோவாவுக்கு துதிசேர்க்கும் அருமையானவர்கள் பலரை சந்தித்தது மறக்க முடியாத அனுபவங்கள்.

கடவுளுடைய மக்களே என் வீட்டார்

என் சொந்த நாடு ஆஸ்திரேலியாவாக இருந்தபோதிலும் யெகோவாவின் அமைப்பு என்னை அனுப்பிய எல்லா இடங்களிலும் உள்ளவர்களை நேசிக்க ஆரம்பித்தேன். ஜப்பானில் இருக்கையிலும் சரி, இப்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய மாகாணங்களில் இருக்கையிலும் சரி அதில் எந்த மாற்றமும் இல்லை. என் கணவர் மரித்தபோது ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பி செல்ல நினைக்கவில்லை, யெகோவா நியமித்த புரூக்ளின் பெத்தேலில் இருக்கவே விரும்பினேன்.

இப்போது எனக்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. 61 வருடங்களை முழுநேர ஊழியத்தில் செலவழித்த பின்பு, இன்று நான் எங்கே இருப்பது தகுதியாக இருக்கும் என்று யெகோவா நினைக்கிறாரோ அங்கே இருக்கவே தயாராக இருக்கிறேன். அவர் குறையேதும் இன்றி என்னை நன்றாக கவனித்து வந்திருக்கிறார். யெகோவாவை வெகுவாய் நேசித்த என் அன்பான கணவரோடு வாழ்ந்த அந்த 57-⁠க்கும் அதிக வருடங்களை என்னால் மறக்கவே முடியாது. யெகோவா எங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிப்பார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. எங்களுடைய செயல்களையும் அவருடைய நாமத்துக்கு நாங்கள் காட்டிய அன்பையும் அவர் நிச்சயமாக மறக்க மாட்டார்.​—⁠எபிரெயர் 6:⁠10.

[அடிக்குறிப்பு]

a 1999, அக்டோபர் 1, காவற்கோபுரம் பக்கங்கள் 16, 17-ஐக் காண்க.

[பக்கம் 25-ன் படம்]

1956-⁠ல் அம்மாவோடு

[பக்கம் 26-ன் படம்]

1950-களின் ஆரம்பத்தில் லாயிட்டோடும் ஜப்பானிய பிரஸ்தாபிகளின் தொகுதியோடும்

[பக்கம் 26-ன் படங்கள்]

ஜப்பானில், என் முதல் பைபிள் மாணாக்கர் மியோ டகாகியோடு 1950-களின் ஆரம்பத்திலும் 1999-லும்

[பக்கம் 28-ன் படம்]

ஜப்பானில் பத்திரிகை ஊழியத்தில் லாயிட்டோடு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்