வாழ்க்கை சரிதை
எழுபது வருடங்களாக ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்திருக்கிறேன்
லெனார்ட் ஸ்மித் சொன்னபடி
எனக்குச் சுமார் 13 வயது இருக்கும்போது நான் படித்த இரண்டு பைபிள் பதிவுகள் என் மனதை மிகவும் கவர்ந்தன. இப்போது 70-க்கும் அதிக ஆண்டுகள் உருண்டோடிவிட்டன; என்றாலும், சகரியா 8:23-ஐ நான் தெளிவாகப் புரிந்து கொண்ட சமயம் என் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. அது, “பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு” இருப்பதைப் பற்றிச் சொல்கிறது. இந்தப் பத்து மனிதர், “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்” என்று அந்த யூதனிடம் சொல்கிறார்கள்.
அந்த யூதன் பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்குப் படமாக இருக்கிறான்; அந்த ‘பத்து மனிதர்,’ ‘வேறே ஆடுகளுக்கு’ அல்லது “யோனதாப்” வகுப்பாருக்குப் படமாக இருக்கிறார்கள்—வேறே ஆடுகள் முன்பு அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள்.a (யோவா. 10:16) இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட பிறகு, பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வதற்கு பரலோக நம்பிக்கை உள்ளோரை நான் உண்மையாய் ஆதரிக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
மத்தேயு 25:31-46-ல் இயேசு சொன்ன, “செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும்” பற்றிய உவமையும்கூட என் மனதை மிகவும் கவர்ந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘செம்மறியாடுகளை’ போன்றோர் நியாயத்தீர்ப்பு நாளில் பாதுகாக்கப்படுவோருக்குப் படமாக இருக்கிறார்கள்; ஏனென்றால், இன்று பூமியில் இருக்கும் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு அவர்கள் நன்மை செய்கிறார்கள். நான் யோனதாப் வகுப்பாரில் ஒருவன் என்பதால், ‘லின், கிறிஸ்து உன்னை செம்மறியாடா ஏத்துக்கணும்னா நீ அவரோட சகோதரருக்கு ஒத்தாசையா இருக்கணும். கடவுள் அவங்களோட இருக்கறதால அவங்க சொல்றபடியெல்லாம் கேட்டு நடக்கணும்’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். 70-க்கும் அதிக ஆண்டுகளாகச் சத்தியத்தில் உறுதியாக இருப்பதற்கு இந்த பைபிள் பதிவும் எனக்கு உதவியிருக்கிறது.
‘என்னுடைய பங்கு என்ன?’
பெத்தேலில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்த இடத்தில் என் அம்மா 1925-ல் ஞானஸ்நானம் பெற்றார். அந்த இடம் “லண்டன் டேபர்னக்கல்” என்று அழைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் வசித்துவந்த சகோதரர்கள் கூட்டங்கள் நடத்த அந்த இடத்தைப் பயன்படுத்தினார்கள். நான் அக்டோபர் 15, 1926-ல் பிறந்தேன். மார்ச் 1940-ல், இங்கிலாந்தின் கரையோர நகரமான டோவரில் நடந்த ஒரு மாநாட்டில் ஞானஸ்நானம் பெற்றேன். பைபிள் சத்தியத்தை உயிராய் நேசிக்க ஆரம்பித்தேன். என் அம்மா பரலோக நம்பிக்கை உள்ளவராக இருந்ததால், நான் முதன்முதலாகப் பிடித்த ‘யூதனுடைய வஸ்திரத்தொங்கல்’ என் அம்மாவுடையது எனலாம். அந்தச் சமயத்தில் என் அப்பாவும் அக்காவும் யெகோவாவை வணங்கவில்லை. நானும் அம்மாவும் மட்டும் இங்கிலாந்தின் தென்கிழக்கே இருந்த ஜிலிங்கம் சபைக்குச் சென்றுகொண்டிருந்தோம்; அந்தச் சபையிலிருந்த பெரும்பாலோர் பரலோக நம்பிக்கை உள்ளவர்கள். முழுமூச்சோடு ஊழியம் செய்வதில் அம்மா எப்போதும் சிறந்த முன்மாதிரி வைத்தார்.
லெஸ்டர் நகரத்தில் செப்டம்பர் 1941-ல் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில், “உத்தமத்தன்மை” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட பேச்சு யெகோவாவின் பேரரசாட்சியைப் பற்றிய விவாதத்தை விளக்கியது. யெகோவாவுக்கும் சாத்தானுக்கும் இடையேயான விவாதத்தில் நாமும் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதை அந்தப் பேச்சைக் கேட்ட பிறகுதான் புரிந்துகொண்டேன். ஆகவே, சர்வலோகப் பேரரசரான யெகோவாவை ஆதரித்து அவருக்கு எப்போதும் நாம் உத்தமமாய் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
அந்த மாநாட்டில், பயனியர் ஊழியம் செய்யும்படி பலமுறை வலியுறுத்தப்பட்டது. பயனியர் ஊழியத்தைத் தங்கள் இலக்காக வைக்கும்படி முக்கியமாக இளைஞர்களுக்கு உற்சாகமளிக்கப்பட்டது. “கடவுளுடைய அமைப்பில் பயனியர்களின் பங்கு” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட பேச்சைக் கேட்டபோது ‘என்னுடைய பங்கு என்ன?’ என்று யோசித்தேன். பரலோக நம்பிக்கை உள்ளவர்களை ஊழியத்தில் முழுமையாக ஆதரிப்பது யோனதாப் வகுப்பைச் சேர்ந்த என் கடமை என்பதை அந்த மாநாட்டில் உணர்ந்தேன். உடனடியாக அந்த மாநாட்டிலேயே, பயனியர் ஊழியம் செய்வதற்கான என் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தேன்.
போர்க் காலத்தில் பயனியர் ஊழியம்
டிசம்பர் 1, 1941-ல், என் 15-வது வயதில் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன். ஊழியத்தில் என் அம்மாதான் எனக்கு முதல் பார்ட்னர். கிட்டத்தட்ட ஒரு வருடம்வரை அவரோடு சேர்ந்து ஊழியம் செய்தேன். ஆனால், அவரது உடல்நிலை மோசமானபோது பயனியர் செய்வதை அவர் நிறுத்த வேண்டியதாயிற்று. அதனால், லண்டன் கிளை அலுவலகம் ரான் பார்கன் என்பவரை எனக்கு பார்ட்னராக நியமித்தது; இப்போது அவர் பியூர்டோ ரிகோ கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்கிறார்.
கென்ட் மாவட்டத்தில் உள்ள பிராட்ஸ்டார்ஸ், ராம்ஸ்கேட் ஆகிய கரையோர நகரங்களில் ஊழியம் செய்ய நாங்கள் அனுப்பப்பட்டோம். அங்கே ஓர் அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கினோம். விசேஷ பயனியர்களுக்கு மாதாமாதம் 40 ஷில்லிங் (அன்றைய மதிப்பில் சுமார் 8 அமெரிக்க டாலர்) உதவித்தொகை அளிக்கப்பட்டது. எனவே, வாடகை கொடுத்ததுபோக கையில் மிஞ்சியதை வைத்தே வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது; அடுத்தவேளை சாப்பாடு பெரும்பாலும் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், யெகோவா ஏதாவதொரு விதத்தில் எங்களுக்குத் தேவையானவற்றை எப்போதும் கொடுத்துவந்தார்.
எங்களுடைய சைக்கிள்களில் மூட்டைமுடிச்சுகளை எல்லாம் ஏற்றிக்கொண்டும்... வட கடலிலிருந்து வீசிய பலத்த காற்றோடு போராடிக்கொண்டும்... தொலைதூரங்களுக்குப் பயணம்செய்தோம். அதோடு, விமானத் தாக்குதல்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது, லண்டன்மீது தாக்குதல் நடத்துவதற்காக கென்ட்டின் மேலே வெகு தாழ்வாகப் பறந்து சென்ற ஜெர்மன் v-1 ஏவுகணைகளிலிருந்தும் தப்ப வேண்டியிருந்தது. ஒருசமயம் ஒரு குண்டு என் தலைக்குச் சற்று மேலே ‘விர்...ர்’ என்று பறந்துசென்றபோது, சைக்கிளிலிருந்து ஒரே குதி குதித்து பக்கத்திலிருந்த பதுங்கு குழியில் ஒளிந்துகொண்டேன். அந்தக் குண்டு அருகிலிருந்த வயலில் விழுந்து வெடித்துச் சிதறியது. இப்படிப்பட்ட திகில் அனுபவங்கள் இருந்தபோதிலும், நாங்கள் கென்ட்டில் பயனியர் செய்த வருடங்கள் அனைத்தும் தித்திப்பானவை.
நான் “பெத்தேல் பிரதர்” ஆனேன்
என் அம்மா எப்போதுமே பெத்தேலைப் பற்றி ஆசை ஆசையாகப் பேசுவார். “நீயும் ஒரு பெத்தேல் பிரதர் ஆகணும், அதுதான் என் ஒரே ஆசை” என்று அடிக்கடி சொல்வார். ஜனவரி 1946-ல் லண்டன் பெத்தேலில் மூன்று வாரங்கள் வேலை செய்ய அழைப்பு பெற்றபோது எனக்கு ஆச்சரியம் தாளவில்லை, சந்தோஷத்தில் துள்ளினேன். அந்த மூன்று வாரங்கள் முடிந்தபோது கிளை அலுவலகக் கண்காணியான பிரைஸ் ஹியூஸ் என்னைப் பெத்தேலில் தொடர்ந்து சேவை செய்யச் சொன்னார். அன்று நான் பெற்ற பயிற்சி இன்றுவரை எனக்குக் கை கொடுத்திருக்கிறது.
அந்தச் சமயத்தில் லண்டன் பெத்தேல் குடும்பத்தில் சுமார் 30 பேர் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் திருமணமாகாத இளம் சகோதரர்கள். அதோடு அங்கே, பிரைஸ் ஹியூஸ், எட்கர் க்ளே, ஜேக் பார் உட்பட பரலோக நம்பிக்கை உள்ள சகோதரர்கள் பலர் இருந்தார்கள்; இவர்களில் ஜேக் பார் பின்னர் ஆளும் குழுவின் அங்கத்தினர் ஆனார். “தூண்கள்” போல் இருந்து ஆன்மீக வழிநடத்துதலைக் கொடுத்து வந்த கிறிஸ்துவின் இந்தச் சகோதரர்களின்கீழ் சேவை செய்தது இளம் வயதில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்!—கலா. 2:9.
ஒருநாள் பெத்தேலில் வேலை செய்துகொண்டிருந்தபோது என்னைப் பார்க்க ஒரு சகோதரி வாசலில் காத்துக்கொண்டிருப்பதாக ஒரு சகோதரர் சொன்னார். போய்ப் பார்த்தால் என் அம்மா! அதுவும் கையில் ஒரு பார்சலோடு!! உள்ளே வந்தால் என் வேலை கெட்டுவிடும் என்று சொல்லி, பார்சலை கொடுத்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டார். அதில் கம்பளி “கோட்” ஒன்று இருந்தது. என் அம்மாவின் அன்பில் அன்னாளின் முகம் தெரிந்தது; ஆசரிப்புக்கூடாரத்தில் சேவை செய்துவந்த தன் செல்ல மகன் சாமுவேலுக்கு அவள் சட்டை தைத்து எடுத்துச் சென்றது போலவே என் அம்மாவும் எனக்கு கம்பளி கோட் எடுத்துவந்தார்.—1 சா. 2:18, 19.
கிலியட்—மறக்க முடியாத ஓர் அனுபவம்
1947-ல், அமெரிக்காவில் நடைபெறும் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள லண்டன் பெத்தேலில் இருந்து ஐந்து பேர் அழைப்பைப் பெற்றோம்; மறுவருடம் அதன் 11-வது வகுப்பில் கலந்துகொள்ள சென்றோம். நாங்கள் போய்ச் சேர்ந்த சமயத்தில் பள்ளி அமைந்திருந்த வட நியு யார்க் பகுதி கடும் குளிராயிருந்தது. என் அம்மா கொடுத்த கம்பளி கோட் கைவசம் இருந்தது உதவியது!
கிலியடில் நான் செலவிட்ட ஆறு மாதங்களும் மறக்க முடியாதவை. 16 நாடுகளிலிருந்து வந்திருந்த சக மாணவர்களுடன் பழகியது எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. இந்தப் பள்ளி யெகோவாவுடன் உள்ள என் பந்தத்தைப் பலப்படுத்தியது, அனுபவமிக்க கிறிஸ்தவர்களோடு பழகவும் வாய்ப்பளித்தது. என் சக மாணவரான லாயிட் பாரி, எங்கள் போதனையாளர்களில் ஒருவரான ஆல்பர்ட் ஷ்ரோடர், கிங்டம் பார்மின் (இங்குதான் முன்பு கிலியட் பள்ளி இருந்தது) கண்காணியான ஜான் பூத் ஆகியோர் பின்னர் ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் ஆனார்கள். இந்தச் சகோதரர்கள் கொடுத்த அன்பான அறிவுரையையும்... யெகோவாவுக்கும் அவருடைய அமைப்பிற்கும் உத்தமமாய் இருப்பதில் அவர்கள் வைத்த சிறந்த முன்மாதிரியையும்... என் நினைவுப் பெட்டகத்தில் பொக்கிஷமாய்ப் பாதுகாக்கிறேன்.
வட்டார வேலைக்கு... மீண்டும் பெத்தேலுக்கு...
கிலியட் பட்டம் பெற்றதும் அமெரிக்காவில் உள்ள ஒஹாயோ மாகாணத்தில் வட்டார ஊழியனாக நியமிக்கப்பட்டேன். அப்போது எனக்கு 21 வயதுதான். என்றாலும், ‘துடிப்புமிக்க இந்த இளைஞனை’ அங்கிருந்த சகோதரர்கள் அன்போடு ஏற்றுக்கொண்டார்கள். அந்த வட்டாரத்தில் சேவை செய்கையில், அனுபவமிக்க, முதிர்ந்த சகோதரர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
சில மாதங்களுக்குப் பிறகு, கூடுதல் பயிற்சி பெற மீண்டும் புருக்லின் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டேன். அந்தச் சமயத்தில், தூண்கள் போல் இருந்த மில்டன் ஹென்ஷல், கார்ல் க்ளைன், நேதன் நார், டி. ஜே. (பட்) சல்லவன், லைமன் ஸ்விங்கிள் ஆகியோருடன் பழகும் வாய்ப்பைப் பெற்றேன்; இவர்கள் எல்லாரும் ஒருசமயத்தில் ஆளும் குழு அங்கத்தினர்களாக இருந்தார்கள். அவர்கள் செய்த வேலையையும், காட்டிய கிறிஸ்தவ குணங்களையும் பார்த்தது என்னை மேலும் செதுக்கி சீராக்கியது. யெகோவாவின் அமைப்பிடம் எனக்கு இருந்த நம்பிக்கை மலைபோல் உயர்ந்தது. அதற்குப்பின், ஐரோப்பாவில் ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்டேன்.
என்னுடைய அம்மா பிப்ரவரி 1950-ல் இறந்தார். அவருடைய சவ அடக்கத்திற்குப் பிறகு என் அப்பாவிடமும் டோரா அக்காவிடமும் மனம்விட்டுப் பேசினேன். ‘இப்போது அம்மாவும் இல்லை, நானும் தொலைதூரத்தில் இருக்கிறேன். சத்தியத்தைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரியும், இனி என்ன செய்யப் போகிறீர்கள்?’ எனக் கேட்டேன். பரலோக நம்பிக்கை உள்ள ஹாரீ பிரௌனிங் என்ற வயதான சகோதரரை அவர்களுக்குத் தெரியும், அவர்மீது நிறைய மதிப்புமரியாதை வைத்திருந்தார்கள்; எனவே, அவரிடம் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டார்கள். ஒரு வருடத்திற்குள் அப்பாவும் டோரா அக்காவும் ஞானஸ்நானம் பெற்றார்கள். பின்னர் அப்பா ஜிலிங்கம் சபையின் ஊழியராக நியமிக்கப்பட்டார். அப்பா இறந்த பிறகு, ராய் மார்டன் என்ற அருமையான மூப்பரை டோரா அக்கா திருமணம் செய்துகொண்டார், 2010-ல் இறக்கும்வரை யெகோவாவுக்கு உண்மையாய்ச் சேவை செய்தார்.
பிரான்சில்...
பள்ளியில் பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன் ஆகிய மூன்று மொழிகளைப் படித்தேன்; இவற்றில், பிரெஞ்சுதான் எனக்கு மகா கஷ்டம். அப்படியிருக்க, பிரான்சில் உள்ள பாரிஸ் பெத்தேலுக்குச் சென்று உதவும்படி என்னிடம் சொல்லப்பட்டபோது ஒரு பக்கம் சந்தோஷம், இன்னொரு பக்கம் பயம். அங்கு... பரலோக நம்பிக்கையுள்ளவராகவும் கிளை அலுவலக ஊழியராகவும் இருந்த என்ரி ஜிஜே என்ற வயதான சகோதரருடன் சேர்ந்து வேலை செய்யும் பாக்கியத்தைப் பெற்றேன். என்னுடைய வேலை எப்போதும் எளிதாக இருக்கவில்லை. சொல்லப்போனால், நான் நிறையத் தவறுகளைச் செய்தேன்; என்றாலும், எல்லாரையும் அனுசரித்துப்போகக் கற்றுக்கொண்டேன்.
அதோடு, 1951-ல் போருக்குப் பிறகு முதன்முறையாக பாரிஸில் சர்வதேச மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதை ஒழுங்கமைக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது, எனக்கு உதவ லேயாப்பால் ஷாங்டா என்ற இளம் வட்டாரக் கண்காணி பெத்தேலுக்கு வந்தார். பின்னர் இவர் கிளை அலுவலகக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். ஈஃபிள் டவர் அருகே உள்ள பாலே டி ஸ்பார் என்ற இடத்தில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள 28 நாடுகளிலிருந்து சகோதர சகோதரிகள் வந்திருந்தார்கள். மாநாட்டிற்கு வந்திருந்த 6,000 பிரெஞ்சு சகோதர சகோதரிகள் கடைசி நாளன்று 10,456 பேர் கலந்துகொண்டதைப் பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைந்தார்கள்!
பிரான்சில் நான் கால்பதித்தபோது அரைகுறையாகத்தான் பிரெஞ்சு மொழியைப் பேசினேன். பிரெஞ்சில் எனக்குத் தெரிந்த வார்த்தைகளை மட்டுமே பேசினேன்; அதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு. அதுவே எனக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. தப்போ தவறோ வாயைத் திறந்து பேசினால்தான் மற்றவர்கள் நம்மைத் திருத்த முடியும், அப்போதுதான் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும்.
எனவே, அயல் நாட்டவருக்கு பிரெஞ்சு மொழியைக் கற்றுத்தரும் பள்ளியில் சேர்ந்தேன். சபைக் கூட்டங்கள் இல்லாத மாலைவேளைகளில் இந்த வகுப்புகளுக்குப் போனேன். மெல்ல மெல்ல பிரெஞ்சு மொழியை நேசிக்க ஆரம்பித்தேன். வருடங்கள் செல்லச் செல்ல அதைச் சுவாசிக்கவே ஆரம்பித்துவிட்டேன். பிரான்சு கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பு வேலை செய்ய அது எனக்குப் பேருதவியாய் இருந்திருக்கிறது. காலப்போக்கில், நானே ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆனேன், ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்தேன். அடிமை வகுப்பார் அளிக்கும் அபரிமிதமான ஆன்மீக விஷயங்களை உலகெங்கும் உள்ள பிரெஞ்சு சகோதரர்களுக்காக மொழிபெயர்த்ததைப் பாக்கியமாய்க் கருதினேன்.—மத். 24:45-47.
கல்யாணமும் கூடுதல் பொறுப்புகளும்
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எஸ்தர் என்ற பயனியரைச் சில வருடங்களுக்கு முன்பு சந்தித்திருந்தேன்; 1956-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். எங்கள் கல்யாணம் லண்டன் பெத்தேலுக்கு... என் அம்மா ஞானஸ்நானம் எடுத்த லண்டன் டேபர்னக்கலுக்கு... பக்கத்தில் இருந்த ராஜ்ய மன்றத்தில் நடந்தது. திருமணப் பேச்சை சகோதரர் ஹியூஸ் கொடுத்தார். எஸ்தரின் அம்மாவும் அங்கிருந்தார்; அவரும் பரலோக நம்பிக்கை உள்ளவர். எஸ்தரைத் திருமணம் செய்துகொண்டதால், எனக்கு அருமையான, அன்பான மனைவி மட்டுமல்ல, கடவுள் பக்திமிக்க மாமியாரும் கிடைத்தார். என் அருமை மாமியாரோடு நெருங்கிப் பழக நிறைய வாய்ப்புகள் கிடைத்தன; அவரது பூமிக்குரிய வாழ்க்கை 2000-ல் முடிவுற்றது.
திருமணத்திற்குப் பிறகு நானும் எஸ்தரும் பெத்தேலுக்கு வெளியே வசித்து வந்தோம். ஆனாலும், நான் தொடர்ந்து மொழிபெயர்ப்பு வேலை செய்து வந்தேன், எஸ்தரோ பாரிஸின் புறநகர் பகுதிகளில் விசேஷ பயனியராகச் சேவை செய்துவந்தாள். நிறையப் பேர் சத்தியத்திற்கு வர உதவியிருக்கிறாள். 1964-ல் பெத்தேலில் சேவை செய்ய அழைப்பைப் பெற்றோம். 1976-ல் முதன்முறையாகக் கிளை அலுவலகக் குழு ஏற்படுத்தப்பட்டபோது அதன் அங்கத்தினர்களில் ஒருவனாக நியமிக்கப்பட்டேன். இத்தனை வருடமும் எஸ்தர் எனக்குப் பக்கபலமாகவே இருந்திருக்கிறாள்.
“நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை”
அவ்வப்போது நியு யார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்திற்குச் சென்றுவரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படிச் சென்றபோதெல்லாம், ஆளும் குழுவின் அங்கத்தினர்களிடமிருந்து அருமையான ஆலோசனைகளைப் பெற்றேன். உதாரணத்திற்கு, ஒருமுறை சகோதரர் நாரை சந்தித்தபோது... என் வேலையை நேரத்தோடு முடிப்பது கஷ்டமாயிருப்பதைச் சொல்லி வருத்தப்பட்டேன். அப்போது அவர், “கவலைப்படாதீங்க, செஞ்சுகிட்டே இருங்க!” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அப்போதுமுதல், வேலைகள் வந்து குவியும்போதெல்லாம் மலைத்துப்போய் உட்கார்ந்து விடாமல் ஒவ்வொரு வேலையாகச் செய்கிறேன், பொதுவாக நேரத்தோடே முடித்துவிடுகிறேன்.
இறப்பதற்கு முன் இயேசு தம் சீடர்களிடம், “நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை” என்று சொன்னார். (மத். 26:11) இன்று பூமியிலுள்ள கிறிஸ்துவின் சகோதரர்கள் எப்போதும் நம்மோடு இருக்கப்போவதில்லை என்பதை நாமும் அறிந்திருக்கிறோம். எனவே, பரலோக நம்பிக்கை உள்ள அநேகரோடு நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியமே. 70-க்கும் அதிக ஆண்டுகளாக ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டிருப்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.
[அடிக்குறிப்பு]
a “யோனதாப்” என்ற வார்த்தைக்கான விளக்கத்திற்கு யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 83, 165, 166-ஐ அல்லது பிப்ரவரி 15, 2010 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 16-17-ல் பாராக்கள் 8 மற்றும் 10-ஐப் பாருங்கள்.
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
“கவலைப்படாதீங்க, செஞ்சுகிட்டே இருங்க!” என்று சகோதரர் நார் சிரித்துக்கொண்டே சொன்னார்
[பக்கம் 19-ன் படங்கள்]
(இடது) என் அம்மாவும் அப்பாவும்
(வலது) 1948-ல் கிலியட் வளாகத்தில் என் அம்மா கொடுத்த கம்பளி கோட்டில்
[பக்கம் 20-ன் படம்]
1997-ல் பிரான்சு கிளை அலுவலக அர்ப்பணிப்பின்போது சகோதரர் லாயிட் பாரியின் பேச்சை மொழிபெயர்க்கையில்
[பக்கம் 21-ன் படங்கள்]
(இடது) திருமண நாளில் எஸ்தருடன்
(வலது) ஊழியத்தில் இருவரும்