வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவது என்றால் என்ன?
பரலோக உயிர்த்தெழுதலைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எழுதுகையில், மிகுந்த ஆர்வத்திற்குரிய ஒரு விஷயத்தை குறிப்பிட்டார். தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிளில் அதை இவ்வாறு வாசிக்கிறோம்: “மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?” இந்த வசனம் தமிழ் கத்தோலிக்க பைபிளில் இவ்வாறு இருக்கிறது: “இறந்தவர்களுக்காகச் சிலர் ஞானஸ்நானம் பெறுகிறார்களே, உயிர்த்தெழுதல் இல்லையென்றால் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? இறந்தவர்கள் உயிர்த்தெழவே மாட்டார்கள் என்றால், அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவானேன்?”—1 கொரிந்தியர் 15:29.
ஞானஸ்நானம் பெறாத மரித்த ஆட்களுக்காக, உயிரோடு இருப்பவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றா பவுல் இங்கே குறிப்பிட்டார்? மேலே குறிப்பிட்ட பைபிள் மொழிபெயர்ப்புகளையும் இன்னும் பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை அப்படி தோன்றலாம். ஆனால், இந்த வேத வசனத்தையும் பவுல் எழுதிய மூல கிரேக்க மொழியையும் கூர்ந்து ஆராய்கையில், இதற்கு வேறொரு அர்த்தம் இருப்பது தெரிய வருகிறது. கிறிஸ்து உத்தமத்தன்மையுடன் எப்படி மரித்தாரோ அதே விதமான ஓர் மரணத்துக்கு வழிநடத்தும் வாழ்க்கை முறைக்குள் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள், அதாவது முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள் என்றே பவுல் அர்த்தப்படுத்தினார். பிற்பாடு அவர்கள் இயேசுவைப் போல் ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.
வேத வசனங்கள் இந்த விளக்கத்தை ஆதரிக்கின்றன. ரோமருக்கு எழுதிய தன் நிருபத்தில் பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” (ரோமர் 6:3) மேலும், பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தில் பவுல் தன்னைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “[கிறிஸ்துவுடைய] துன்பங்களில் பங்கேற்று,” “அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கு” விரும்புகிறேன். (பிலிப்பியர் 3:10, 11; பொது மொழிபெயர்ப்பு) இவ்வசனத்தில் பவுல் எதை சுட்டிக்காட்டுகிறார்? கிறிஸ்துவை பின்பற்றுகிற அபிஷேகம் செய்யப்பட்ட ஒருவரின் வாழ்க்கை, சோதனைகள் மத்தியில் உத்தமத்தை காத்துக்கொள்வதையும், அனுதினம் மரணத்தை சந்திக்க வேண்டிய வாழ்க்கை முறையையும், கடைசியாக உத்தமத்துடன் மரித்து, பிறகு பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவதையும் உட்படுத்துகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறார்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களும், மரணத்தை ஞானஸ்நானம் பெற்றவர்களோடு நேரடியாக இணைத்துப் பேசும் மற்ற வசனங்களும் மரித்தவர்களை அல்ல, ஆனால் ஞானஸ்நானம் பெற்ற உயிருள்ள நபர்களையே குறிப்பிடுகின்றன, அபிஷேகம் செய்யப்பட்ட சக கிறிஸ்தவர்களுக்கு பவுல் மேலும் இவ்வாறு சொன்னார்: “ஞானஸ்நானத்தில் அவரோடு புதைக்கப்பட்டிருக்கிறீர்கள். இறந்தோரிடமிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்ட விசுவாசத்தால், அவரோடு நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள்.”—கொலோசெயர் 2:12, தமிழ் கத்தோலிக்க பைபிள்.
ஒன்று கொரிந்தியர் 15:29-லுள்ள, ஹைப்பர் (hy·perʹ) என்ற கிரேக்க முன்னிடைச்சொல் பல்வேறு மொழிபெயர்ப்புகளில் “ஆக” அல்லது “சார்பாக” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; ஆனால், அந்த முன்னிடைச்சொல் “நோக்கத்திற்காக” என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது. ஆகவே, மற்ற பைபிள் வசனங்களுக்கு இசைய, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) இந்த வசனத்தை திருத்தமாக இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறது: “மரித்தோராயிருக்கும் நோக்கத்திற்காக முழுக்காட்டப்படுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்றால், அப்படிப்பட்ட நோக்கத்திற்காக அவர்கள் ஏன் முழுக்காட்டுதலும் பெற வேண்டும்?”