யாரையாவது நம்ப முடியுமா?
பெர்லின் சுவர் 1989-ல் தகர்க்கப்பட்ட பிறகு, நன்கு மூடிமறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் பல அம்பலப்படுத்தப்பட்டன. உதாரணமாக, கிழக்கு ஜெர்மனியில் சோஷியலிச ஆட்சியில், ஷ்டாஸி அதாவது அரசு பாதுகாப்பு சேவை, லிடியாவின்a அந்தரங்க நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு பதிவை தொகுத்து வைத்திருந்ததை அவள் கண்டுபிடித்தாள். தன்னைப் பற்றிய பதிவைக் கண்டு லிடியா ஆச்சரியப்பட்டபோதிலும், அந்தத் தகவல்களை ஷ்டாஸிக்குத் தந்தது யார் என்பதைக் கேள்விப்பட்டபோது அதிர்ந்துபோனாள்—இப்படி செய்தது வேறு யாருமில்லை, அவளுடைய கணவன்தான். முழு நம்பிக்கைக்குப் பாத்திரராக இருக்க வேண்டியவரே அவளை ஏமாற்றிவிட்டார்.
ராபர்ட் என்பவர் வயதானவர், கண்ணியமிக்கவர்; உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் “மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார், நல்ல அபிமானமும் நம்பிக்கையும் அவர் மீது இருந்தது” என லண்டனின் த டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது. அந்த மருத்துவர் “அன்பானவர், இரக்க குணம் படைத்தவர்” என பலரும் சொன்னார்கள். ஒருநாள் திடீரென ராபர்ட் இறந்துபோனார். அவருக்கு ‘ஹார்ட் அட்டாக்’கா அல்லது ‘ஸ்ட்ரோக்’கா? எதுவுமே இல்லை. ராபர்ட்டை பார்க்க அவருடைய வீட்டிற்கு வந்திருந்த அந்த மருத்துவர், ராபர்ட்டுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் தெரியாமல் விஷ ஊசியை அவருக்கு போட்டதாக அதிகாரிகள் கூறினர். யாரை ராபர்ட் முழுமையாக நம்பினாரோ அவரே இவரை தீர்த்துக் கட்டிவிட்டார்.
லிடியாவும் ராபர்ட்டும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் நம்பிக்கை துரோகத்திற்கு பலியானார்கள், அப்படிப்பட்ட துரோகத்தினால் பயங்கர விளைவுகளை அவர்கள் சந்தித்தார்கள். மற்றவர்களோ இத்தனை பயங்கரமான விளைவுகளை சந்திப்பதில்லை; இருந்தாலும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரால் ஏமாற்றப்படுவது சகஜமே. 86 சதவீதத்தினர் நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு சுற்றாய்வு வெளிப்படுத்தியது; இதை ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி புள்ளிவிவரக் கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்ட 1998-2002 அலன்பாக்கர் யார்புக் டர் டேமாஸ்காப்பி அறிக்கை காட்டியது. ஒருவேளை இதுபோன்ற அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, “தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் பல ஆண்டுகளாகவே பரஸ்பர நம்பிக்கைக்குரிய உறவுகள் சிதைந்து வருகின்றன” என 2002-ல் நாயீ ஸுயர்கெர் ஸைட்டுங் என்ற சுவிட்சர்லாந்து செய்தித்தாள் அறிவித்ததைக் கண்டு நாம் வியப்படைய வேண்டியதில்லை.
மெதுவாக வளர்கிறது, பட்டென்று அழிந்துவிடுகிறது
மற்றவர்கள் மீது நம்பிக்கை வைப்பது என்றால் என்ன? அவர்கள் நேர்மையானவர்கள், உண்மையானவர்கள், வேண்டுமென்றே நமக்கு எந்தத் தீங்கும் இழைக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புவதே என ஓர் அகராதி கூறுகிறது. மற்றவர்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நமக்கு நம்பிக்கை வரும், ஆனால் அது பட்டென்று அழிந்துவிடலாம். தாங்கள் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதால், மற்றவர்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கே பலர் தயங்குகிறார்கள்; இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? “மூன்றில் ஓர் இளைஞர்கூட மற்றவர்களை நம்புவதில்லை” என 2002-ல் ஜெர்மனியில் பிரசுரிக்கப்பட்ட ஒரு சுற்றாய்வு கூறியது.
‘யாரையாவது நம்ப முடியுமா? நம்பிக்கைக்கு பாத்திரரல்லாத ஒருவர் மீது துணிந்து நம்பிக்கை வைப்பது தகுந்ததா?’
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
86 சதவீதத்தினர் நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு சுற்றாய்வு வெளிப்படுத்தியது