உண்மையுள்ள கிறிஸ்தவ பெண்கள்—கடவுளின் மதிப்புமிக்க வணக்கத்தார்
“செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.”—நீதிமொழிகள் 31:30.
1 . இந்த உலகத்தோடு ஒப்பிட, அழகைப் பொறுத்தவரை யெகோவாவின் நோக்குநிலை என்ன?
இந்த உலகம் புறத் தோற்றத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, முக்கியமாக பெண்களின் விஷயத்தில். ஆனால், யெகோவாவோ அகத் தோற்றத்தில் அதிக அக்கறை காட்டுகிறார். வயது ஏற ஏற அகத்தின் அழகு இன்னுமதிகமாக மின்னலாம். (நீதிமொழிகள் 16:31) ஆகவே பெண்களுக்கு பைபிள் கொடுக்கும் அறிவுரை: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.”—1 பேதுரு 3:3, 4.
2, 3. முதல் நூற்றாண்டில் நற்செய்தி பரவுவதில் பெண்களின் பங்கு என்ன, அது எப்படி முன்னறிவிக்கப்பட்டது?
2 புகழத்தக்க இத்தகைய குணத்தை காண்பித்த அநேக பெண்களைப் பற்றி பைபிள் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் சிலர் முதல் நூற்றாண்டில் இயேசுவுக்கும் அவரது அப்போஸ்தலருக்கும் பணிவிடை செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்கள். (லூக்கா 8:1-3) பிற்பாடு, கிறிஸ்தவ பெண்கள் வைராக்கியமான சுவிசேஷகராக ஆனார்கள்; சிலரோ, அப்போஸ்தலனாகிய பவுல் உட்பட, முன்நின்று வழிநடத்தும் கிறிஸ்தவ ஆண்களுக்கு மிகச் சிறந்த ஆதரவை அளித்தார்கள்; இன்னும் சிலரோ ஒப்பற்ற விதத்தில் மற்றவர்களை உபசரித்தார்கள், சபைக் கூட்டங்களை தங்கள் வீடுகளில் நடத்துவதற்கும் அனுமதித்தார்கள்.
3 யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்ற பெண்களை பெரிய அளவில் பயன்படுத்துவார் என்பதை வேதவசனங்கள் முன்னறிவித்தன. எடுத்துக்காட்டாக, ஆண்களும் பெண்களும், சிறியோரும் பெரியோரும் பரிசுத்த ஆவியைப் பெற்று, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பரப்புவதில் ஈடுபடுவார்கள் என யோவேல் 2:28, 29 வசனங்கள் முன்னறிவித்தன. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பித்தது. (அப்போஸ்தலர் 2:1-4, 16-18) ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட பெண்கள் சிலருக்கு, தீர்க்கதரிசனம் சொல்லுதல் போன்ற அற்புத வரங்கள் அருளப்பட்டன. (அப்போஸ்தலர் 21:8, 9) ஊழியத்தில் வைராக்கியத்தைக் காட்டுவதன் மூலம் முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவம் படுவிரைவாக பரவுவதற்கு உண்மையுள்ள சகோதரிகளாலான இந்த ஆவிக்குரிய பெரிய சேனை மாபெரும் பங்கு வகித்தது. சொல்லப்போனால், சுமார் பொ.ச. 60-ல் ‘அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டது’ என அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—கொலோசெயர் 1:23.
தைரியம், வைராக்கியம், உபசாரம் ஆகியவற்றிற்காக புகழப்பட்டவர்கள்
4 . முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையிலிருந்த பெண்கள் பலரை புகழ பவுலுக்கு ஏன் நல்ல காரணம் இருந்தது?
4 உதாரணத்திற்கு, வைராக்கியமிக்க பெண்கள் செய்யும் ஊழியத்தை இன்று கிறிஸ்தவ கண்காணிகள் உயர்வாக மதிப்பதைப் போலவே குறிப்பாக சில பெண்கள் செய்த ஊழியத்திற்கு அப்போஸ்தலன் பவுலும் போற்றுதல் காண்பித்தார். பெயரைக் குறிப்பிட்டு பவுல் சொன்ன பெண்களில் சிலர்: ‘கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாள், திரிபோசாள்,’ ‘கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாள்.’ (ரோமர் 16:12) எயோதியாளும் சிந்திகேயாளும் “சுவிசேஷ விஷயத்தில் என்னோடே கூட மிகவும் பிரயாசப்பட்டார்கள்” என பவுல் எழுதினார். (பிலிப்பியர் 4:2, 3) பிரிஸ்கில்லாளும் அவளுடைய கணவன் ஆக்கில்லாவும்கூட பவுலுடன் சேவை செய்திருக்கிறார்கள். பவுலுக்காக அவளும் ஆக்கில்லாவும் தங்கள் ‘கழுத்தைக் கொடுக்க’ முன்வந்ததால், “நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்” என எழுதும்படி அவர் தூண்டப்பட்டார்.—ரோமர் 16:3, 4; அப்போஸ்தலர் 18:2.
5, 6. இன்றுள்ள சகோதரிகளுக்கு பிரிஸ்கில்லாள் எவ்வழிகளில் சிறந்த முன்மாதிரியாக விளங்கினாள்?
5 பிரிஸ்கில்லாளின் வைராக்கியத்திற்கும் தைரியத்திற்கும் காரணம் என்ன? அதற்கான காரணம் அப்போஸ்தலர் 18:24-26-ல் காணப்படுகிறது; புதிதாய் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தைப் பற்றி திறமைமிக்க பேச்சாளராகிய அப்பொல்லோவிற்கு எடுத்துச் சொல்வதில் பிரிஸ்கில்லா தன் கணவர் ஆக்கில்லாவுக்கு உறுதுணையாக இருந்தாள் என நாம் வாசிக்கிறோம். அப்படியானால், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதிலும் அப்போஸ்தலர்களின் போதனையை கேட்பதிலும் பிரிஸ்கில்லாள் மிகுந்த ஆர்வமுள்ளவளாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. அதன் விளைவாக, அவள் மிகச் சிறந்த பண்புகளை வளர்த்துக்கொண்டு, கடவுளுக்கும் தன் கணவனுக்கும் அருமையானவளாக ஆனாள், ஆரம்ப கால சபையிலும் மதிப்புமிக்க நபராக ஆனாள். அதே போல, இன்றும் பைபிளை ஊக்கமாக படித்து, அதோடு ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ மூலமாக யெகோவா வழங்கும் ஆவிக்குரிய உணவை உட்கொண்டு கடினமாக உழைக்கும் கிறிஸ்தவ சகோதரிகளும் மதிப்புமிக்கவர்கள்.—லூக்கா 12:42.
6 ஆக்கில்லா பிரிஸ்கில்லா தம்பதியினர் ஒப்பற்ற விதத்தில் உபசரிக்கும் குணத்தை காண்பித்தனர். கொரிந்துவில் அவர்களோடு கூடாரத் தொழிலில் பவுல் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார். (அப்போஸ்தலர் 18:1-3) அவர்கள் எபேசுவுக்கும் பிற்பாடு ரோமுக்கும் மாறிச் சென்றனர்; அப்போதும் அவர்கள் தொடர்ந்து இந்த கிறிஸ்தவ உபசரிக்கும் குணத்தை காட்டினர், சபைக் கூட்டங்களை நடத்துவதற்கு தங்கள் வீட்டில் இடமும் அளித்தனர். (அப்போஸ்தலர் 18:18, 19; 1 கொரிந்தியர் 16:8, 19) நிம்பாவும் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானின் தாயாகிய மரியாளும் அவ்வாறே சபைக் கூட்டங்களை தங்கள் வீடுகளில் நடத்துவதற்கு இடமளித்தனர்.—அப்போஸ்தலர் 12:12; கொலோசெயர் 4:15, NW.
இன்று அரும்பெரும் சொத்து
7, 8. இன்றைய கிறிஸ்தவ பெண்கள் பலர் பரிசுத்த சேவையில் என்ன மெச்சத்தக்க பெயரெடுத்திருக்கிறார்கள், எதைக் குறித்து அவர்கள் உறுதியோடிருக்கலாம்?
7 முதல் நூற்றாண்டைப் போலவே, இன்றும் உண்மையுள்ள கிறிஸ்தவ பெண்கள் கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில்—குறிப்பாக சுவிசேஷ வேலையில்—முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த சகோதரிகள் எப்பேர்ப்பட்ட சிறந்த பெயர் பெற்றிருக்கிறார்கள்! கிவென் என்ற சகோதரியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக யெகோவாவை உண்மையோடு சேவித்து, 2002-ல் மரித்தார். அவருடைய கணவர் இவ்வாறு சொல்கிறார்: “பிரசங்க வேலையில் கிவெனுக்கு இருந்த வைராக்கியத்தைப் பற்றி எங்கள் ஊரில் உள்ள அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும். அவள் சந்தித்த ஆட்கள் ஒவ்வொருவரையும் எதிர்காலத்தில் யெகோவாவின் அன்பையும் வாக்குறுதிகளையும் பெற்றுக்கொள்ளும் ஆட்களாகத்தான் பார்த்தாள்; கடவுளிடம், அவருடைய அமைப்பிடம், குடும்பத்திடம் அவள் காண்பித்த பற்றுதான் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மிகுந்த ஆதரவாக இருந்தது; அப்படிப்பட்ட மனதிருப்தியான காலங்களில் மட்டுமல்ல சோர்வுற்றிருந்த சமயங்களிலும் அவள் அன்போடு எங்களை உற்சாகப்படுத்தியது மிகுந்த ஆதரவாக இருந்தது. அவளுடைய பிரிவு எங்களை மிகவும் வாட்டுகிறது.” கிவெனும் அவருடைய கணவரும் 61 ஆண்டுகள் தம்பதிகளாக சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
8 மணமான, மணமாகாத கிறிஸ்தவ பெண்கள் ஆயிரக்கணக்கானோர் பயனியர்களாகவும் மிஷனரிகளாகவும் சேவை செய்கிறார்கள். சந்தடிமிக்க நகரங்கள் முதல் ஒதுக்குப்புறமான இடங்கள் வரை ராஜ்ய செய்தியை அறிவித்து வரும் இவர்கள் அடிப்படை தேவைகளுடன் திருப்தியாக வாழ்கிறார்கள். (அப்போஸ்தலர் 1:8) யெகோவாவை முழுமையாய் சேவிப்பதற்காக சொந்த வீடு வாங்குவது அல்லது பிள்ளைகளை பெற்றெடுப்பது போன்ற எண்ணத்தை அநேக பெண்கள் ஓரங்கட்டியிருக்கிறார்கள். பயணக் கண்காணிகளாக சேவிக்கும் தங்கள் கணவருக்கு உள்ளப்பூர்வ ஆதரவு அளிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதோடு உலகம் முழுவதுமுள்ள பெத்தேல் இல்லங்களில் சேவை செய்யும் ஆயிரக்கணக்கான சகோதரிகளும் இருக்கிறார்கள். சுய தியாக மனப்பான்மையுடைய இந்தப் பெண்கள் “சகல தேசங்களிலுமுள்ள விரும்பப்பட்டவை”யில் அடங்குவர் என்பதில் சந்தேகமில்லை. இவர்கள் யெகோவாவின் ஆலயத்தை மகிமையால் நிரப்புகிறார்கள்.—ஆகாய் 2:7, NW.
9, 10. கிறிஸ்தவ மனைவிமாரும் தாய்மாரும் வைத்த சிறந்த முன்மாதிரிக்கு குடும்ப அங்கத்தினர் சிலர் எப்படி போற்றுதல் தெரிவித்துள்ளனர்?
9 அநேக கிறிஸ்தவ பெண்களுக்கு குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு இருப்பது வாஸ்தவமே; என்றாலும் அவர்கள் ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். (மத்தேயு 6:33) மணமாகாத ஒரு பயனியர் சகோதரி இவ்வாறு எழுதினார்: “நான் ஒழுங்கான பயனியர் ஆவதற்கு என் அம்மாவுடைய அசைக்க முடியாத விசுவாசமும் சிறந்த முன்மாதிரியுமே முக்கிய காரணம். சொல்லப்போனால், பயனியர் ஊழியத்தில் எனக்கு பெஸ்ட் பார்ட்னராக இருந்தவர்களில் என் அம்மாவும் ஒருவர்.” ஐந்து மகள்களை வளர்த்தெடுத்த தன் மனைவியைப் பற்றி கணவர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “எங்கள் வீடு எப்போதுமே பளிச்சென சுத்தமாக இருக்கும். எங்களுடைய குடும்பம் ஆவிக்குரிய காரியங்களுக்கு கவனம் செலுத்துவதற்காக என் மனைவி பானி, வீட்டை எளிமையாகவும் ஒழுங்காகவும் வைத்திருப்பாள். பணத்தை சரியான விதத்தில் நிர்வகிப்பதற்கு அவள் உதவியதால்தான், 32 ஆண்டுகளாக நான் பகுதி நேர வேலை செய்ய முடிந்திருக்கிறது; குடும்பத்திற்காகவும் ஆவிக்குரிய காரியங்களுக்காகவும் அதிக நேரம் செலவிட இது வசதியாக இருந்திருக்கிறது. கடினமாக உழைப்பதன் அவசியத்தையும் பிள்ளைகளுக்கு என் மனைவி கற்றுக் கொடுத்திருக்கிறாள். அவளை மனதார பாராட்டுகிறேன்.” இன்று இந்தத் தம்பதியினர் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் சேவை செய்கிறார்கள்.
10 வளர்ந்த பிள்ளைகளையுடைய குடும்பத் தலைவர் தன் மனைவியைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்: “கடவுளிடமும் ஜனங்களிடமும் சூஸனுக்கு இருக்கிற ஆழமான அன்பும், அதோடு அவள் காட்டும் புரிந்துகொள்ளுதலும், ஒற்றுணர்வும், நேர்மையும்தான் அவளிடம் எனக்கு மிகவும் பிடித்த குணங்கள். நாம் கொடுக்கும் மிகச் சிறந்ததை பெற யெகோவா தகுதியானவர் என்று அவள் எப்போதும் நினைப்பாள்; கடவுளுடைய ஊழியக்காரியாகவும் சரி ஒரு தாயாகவும் சரி, இந்த நியமத்தை அவள் தனக்குத்தானே பொருத்திக் கொண்டாள்.” தன் மனைவியின் ஆதரவால்தான் மூப்பர், பயனியர், உதவி வட்டாரக் கண்காணி, மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழு அங்கத்தினர் என பல பொறுப்பான சிலாக்கியங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட பெண்கள் தங்கள் கணவருக்கும், சக கிறிஸ்தவர்களுக்கும், எல்லாருக்கும் மேலாக யெகோவாவுக்கும் எவ்வளவு மதிப்புமிக்கவர்கள்!—நீதிமொழிகள் 31:28, 30.
கணவர் இல்லாத மதிப்புமிக்க பெண்கள்
11. (அ) உண்மையுள்ள பெண்களிடம், முக்கியமாக விதவைகளிடம் யெகோவா எப்படி அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார்? (ஆ) கிறிஸ்தவ விதவைகளும் கணவர் இல்லாத மற்ற உண்மையுள்ள சகோதரிகளும் எந்த விஷயத்தில் நிச்சயமாயிருக்கலாம்?
11 விதவைகளின் நலனில் தமக்கிருக்கும் அக்கறையை யெகோவா அடிக்கடி தெரியப்படுத்தி இருக்கிறார். (உபாகமம் 27:19; சங்கீதம் 68:5; ஏசாயா 10:1, 2) அந்த விஷயத்தில் அவர் மாறவே இல்லை. விதவைகளிடம் மட்டுமல்லாமல், ஒற்றைத் தாய்மாரிடத்திலும், மணமாகாமல் இருக்க தீர்மானித்த பெண்களிடத்திலும் அல்லது பொருத்தமான கிறிஸ்தவ துணைவர் கிடைக்காமல் இருப்பவர்களிடத்திலும்கூட அவர் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். (மல்கியா 3:6; யாக்கோபு 1:27) நீங்கள் ஒரு கிறிஸ்தவ துணைவரின்றி யெகோவாவை உண்மையோடு சேவிப்பவராக இருந்தால், கடவுளுடைய பார்வையில் மதிப்புமிக்கவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
12. (அ) கிறிஸ்தவ சகோதரிகள் சிலர் யெகோவாவுக்கு தங்கள் உண்மைப் பற்றுறுதியை எப்படி காட்டுகிறார்கள்? (ஆ) நம் சகோதரிகள் சிலர் எப்படிப்பட்ட உணர்ச்சிகளை சமாளித்து வருகிறார்கள்?
12 உதாரணமாக, “கர்த்தருக்குட்பட்டவனை மட்டுமே” மணம் செய்வதைக் குறித்த யெகோவாவின் ஆலோசனைக்கு உண்மைப் பற்றுறுதியுடன் கீழ்ப்படிந்து மணமுடிக்காமல் இருக்கும் நம் கிறிஸ்தவ சகோதரிகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். (1 கொரிந்தியர் 7:39, NW; நீதிமொழிகள் 3:1) கடவுளுடைய வார்த்தை அவர்களுக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “உண்மைப் பற்றுறுதியுள்ளோருக்கு [யெகோவா] உண்மைப் பற்றுறுதியுள்ளவராக” விளங்குவார். (2 சாமுவேல் 22:26, NW) இருந்தாலும், மணமாகாமல் இருப்பது அநேகருக்கு ஒரு சவாலாகவே உள்ளது. ஒரு சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “கர்த்தருக்குள் மட்டுமே மணமுடிக்க வேண்டுமென நான் தீர்மானித்திருக்கிறேன், ஆனால் என்னுடைய சிநேகிதிகளுக்கு அருமையான கிறிஸ்தவ மாப்பிள்ளை அமைந்து கல்யாணமாகி செல்லும்போது நான் மட்டும் தனிமையில் கிடப்பதை நினைத்து பல சமயங்களில் கண்ணீர் வடித்திருக்கிறேன்.” மற்றொரு சகோதரி சொல்வதை கவனியுங்கள்: “நான் 25 வருஷங்களாக யெகோவாவை சேவித்திருக்கிறேன். அவருக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவளாக தொடர்ந்திருக்கவே தீர்மானித்திருக்கிறேன், ஆனாலும் தனிமையுணர்வு என்னை அடிக்கடி வாட்டுகிறது.” அவர் மேலும் சொல்வதாவது: “என்னைப் போன்ற சகோதரிகள் மற்றவர்களின் ஊக்குவிப்புக்காக ஏங்குகிறார்கள்.” உண்மைப் பற்றுறுதியுள்ள இப்படிப்பட்டோருக்கு நாம் எப்படி உதவலாம்?
13. (அ) யெப்தாவின் மகளை சந்திக்க சென்றவர்கள் வைத்த முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) நம் சபையிலுள்ள மணமாகாத சகோதரிகளிடம் வேறு என்ன வழிகளில் நாம் அக்கறை காட்டலாம்?
13 இதற்கான ஒரு வழியை பூர்வ கால உதாரணத்திலிருந்து காணலாம். மணமுடிப்பதைப் பற்றிய எண்ணத்தை யெப்தாவின் மகள் கைவிட்டபோது, அவள் ஒரு தியாகம் செய்திருக்கிறாள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொண்டனர். அவளை ஊக்கப்படுத்துவதற்காக என்ன செய்தார்கள்? “வருஷந்தோறும் நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைப் பாராட்டுவதற்கு இஸ்ரவேலின் குமாரத்திகள் செல்வார்கள்.” (நியாயாதிபதிகள் 11:30-40, NW) கடவுளுடைய சட்டத்திற்கு உண்மைப் பற்றுறுதியோடு கீழ்ப்படிந்திருக்கும் மணமாகாத சகோதரிகளுக்கும் நாம் அவ்வாறே பாராட்டு தெரிவிக்க வேண்டும்.a அவர்களிடம் நம் அக்கறையை வேறு என்ன வழியில் காட்டலாம்? அப்படிப்பட்ட அருமையான சகோதரிகள் உண்மைப் பற்றுறுதியோடு தங்கள் சேவையை தொடர துணைபுரியும்படி நம்முடைய ஜெபங்களில் யெகோவாவிடம் கேட்க வேண்டும். யெகோவாவும் கிறிஸ்தவ சபையிலுள்ள அனைவரும் அவர்களை மிகவும் நேசிக்கிறார்கள், உயர்வாக மதிக்கிறார்கள் என்ற உறுதி அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.—சங்கீதம் 37:28.
வெற்றி சிறக்கும் ஒற்றைப் பெற்றோர்
14, 15. (அ) கிறிஸ்தவர்களான ஒற்றைத் தாய்மார் யெகோவாவிடம் ஏன் உதவி கேட்க வேண்டும்? (ஆ) ஒற்றைப் பெற்றோர் தங்களுடைய ஜெபங்களுக்கு ஏற்ப எப்படி உழைக்கலாம்?
14 ஒற்றைப் பெற்றோராக இருக்கும் கிறிஸ்தவ பெண்களும் பல சவால்களை சந்திக்கிறார்கள். என்றாலும், தங்கள் பிள்ளைகளை பைபிள் நியமங்களுக்கு ஏற்ப வளர்ப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் அவர்கள் ஜெபிக்கலாம். நீங்கள் ஓர் ஒற்றைப் பெற்றோராக இருந்தால், அம்மா-அப்பா என்ற இரு ஸ்தானத்தையும் முழுமையாக உங்களால் பூர்த்தி செய்ய முடியாது என்பது உண்மையே. இருந்தாலும், விசுவாசத்தோடு யெகோவாவிடம் ஜெபித்தால், உங்களுடைய அநேக பொறுப்புகளை கவனிப்பதற்கு அவர் உதவுவார். உதாரணமாக, கையில் நிறைய மளிகை சாமான்களை உடைய ஒரு கனத்த பையை வைத்துக்கொண்டு அடுக்குமாடி கட்டிடத்திலுள்ள உங்களுடைய அபார்ட்மென்டுக்கு செல்வதாக கற்பனை செய்யுங்கள். பக்கத்திலேயே ‘லிஃப்ட்’ இருக்கும்போது கஷ்டப்பட்டு மாடிப் படியில் ஏறிச் செல்வீர்களா? நிச்சயமாகவே அப்படிச் செய்ய மாட்டீர்கள்! அதுபோலவே, உதவிக்காக யெகோவாவிடம் கேட்பதை விட்டுவிட்டு உங்களுடைய உணர்ச்சிகளின் பளுவை நீங்களாகவே சுமக்க முயலாதீர்கள். சொல்லப்போனால், தம்மிடம் கேட்கும்படி அவர் நம்மிடம் சொல்கிறார். ‘தினந்தினம் நமது பாரங்களைச் சுமக்கிற யெகோவா ஸ்தோத்திரத்திற்குரியவர்’ என சங்கீதம் 68:19 (NW) சொல்கிறது. அவ்வாறே, யெகோவா “உங்களை விசாரிக்கிறவரானபடியால்” உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடும்படி 1 பேதுரு 5:7 கூறுகிறது. ஆகவே, கவலைகளும் கஷ்டங்களும் உங்களை பாரமடையச் செய்கையில், உங்கள் பாரத்தை பரலோக தகப்பனிடத்தில் இறக்கி வையுங்கள்; அதை “இடைவிடாமல்” செய்யுங்கள்.—1 தெசலோனிக்கேயர் 5:17; சங்கீதம் 18:6; 55:22.
15 உதாரணமாக, நீங்கள் ஒரு அம்மாவாக இருந்தால் உங்களுடைய பிள்ளைகளுக்கு வரக்கூடிய சகாக்களின் அழுத்தத்தைப் பற்றியதில் அல்லது அவர்களுடைய உத்தமத்திற்கு நேரிடக்கூடிய சோதனைகளைப் பற்றியதில் உங்களுக்கு நிச்சயமாகவே அதிக கவலை இருக்கும். (1 கொரிந்தியர் 15:33) அவை நியாயமான கவலைகள்தான். ஆனால், அவற்றை குறித்தும் நீங்கள் ஜெபிக்க வேண்டும். சொல்லப்போனால், பிள்ளைகள் ஸ்கூலுக்கு செல்வதற்கு முன்பாக, ஒருவேளை தின வசனத்தை கலந்தாலோசித்த பின்பு, இந்த விஷயங்களைக் குறித்து பிள்ளைகளோடு சேர்ந்து ஏன் ஜெபிக்கக் கூடாது? இருதயப்பூர்வமாக, விஷயங்களை குறிப்பிட்டு ஜெபம் செய்யும்போது அவை பிஞ்சு மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்துவிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவின் வார்த்தையை பிள்ளைகளின் இருதயத்தில் பதிய வைப்பதற்கு பொறுமையோடு முயற்சி செய்தால், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். (உபாகமம் 6:6, 7; நீதிமொழிகள் 22:6) “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.—1 பேதுரு 3:12; பிலிப்பியர் 4:6, 7.
16, 17. (அ) தாய் காட்டிய அன்பைப் பற்றி ஒரு மகன் என்ன சொன்னார்? (ஆ) அந்தத் தாயின் ஆவிக்குரிய நோக்குநிலை பிள்ளைகளை எப்படி பாதித்தது?
16 ஆறு பிள்ளைகளுக்கு தாயான ஒலிவியாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவிசுவாசியான அவளுடைய கணவர், கடைசி பிள்ளை பிறந்ததும் குடும்பத்தை அம்போவென விட்டுவிட்டு போய்விட்டார்; ஆனால் பிள்ளைகளை கடவுளுடைய வழிகளில் நடத்தும் பொறுப்பை ஒலிவியா மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாள். ஒலிவியாவின் மகன் டாரனுக்கு அப்போது சுமார் ஐந்து வயது. ஒலிவியாவின் கவலைகளுக்கு மேல் கவலையாக, டாரனுக்கு அப்போது ஒரு பயங்கரமான வியாதியும் வந்தது; இப்போது 31 வயதில் இருக்கும் டாரன் ஒரு கிறிஸ்தவ மூப்பராகவும் பயனியராகவும் சேவை செய்கிறார். அந்த வியாதியோடு அவர் இன்னும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பிள்ளைப் பருவத்தை எண்ணிப் பார்த்து டாரன் இவ்வாறு எழுதுகிறார்: “ஆஸ்பத்திரி படுக்கையில் உட்கார்ந்துகொண்டு அம்மா எப்போ வருவார்கள் என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. அம்மா தினமும் பக்கத்தில் உட்கார்ந்து எனக்கு பைபிளை வாசித்து காட்டுவார்கள். அதற்கு பிறகு, ‘யெகோவாவே உமக்கு நன்றி’ என்ற ராஜ்ய பாடலை பாடுவார்கள்.b இன்று வரை, எனக்கு பிடித்தமான பாடல் இதுதான்.”
17 ஒலிவியா, யெகோவா மீது நம்பிக்கையும் அன்பும் வைத்ததால்தான் ஒற்றைத் தாயாக அவளால் வெற்றி சிறக்க முடிந்தது. (நீதிமொழிகள் 3:5, 6) தன் பிள்ளைகளுக்கு முன் அவள் வைத்த இலக்குகளிலிருந்தே அவளுடைய சிறந்த மனப்பான்மையை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. “முழுநேர ஊழியத்தை இலக்காக வைத்து அதை அடைவதற்கு அம்மா எப்போதுமே எங்களை ஊக்குவித்தார்கள்” என்று சொல்கிறார் டாரன். “அதன் விளைவாக என்னுடைய அக்கா, தங்கை ஐந்து பேரில் நான்கு பேரும் நானும் முழுநேர ஊழியத்தில் சேர்ந்துகொண்டோம். ஆனாலும், அம்மா ஒருபோதும் இந்த விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையடித்துக் கொண்டதில்லை. என் அம்மாவுடைய அருமையான குணங்களை பின்பற்ற நான் கடினமாக முயற்சிக்கிறேன்.” ஒலிவியாவின் பிள்ளைகளைப் போல எல்லாருமே கடவுளை சேவிக்கும் பிள்ளைகளாக வளருவதில்லை என்பது உண்மையே. ஆனால், பிள்ளைகள் பைபிள் நியமங்களுக்கு ஏற்ப வாழ்வதற்கு ஒரு தாய் தன்னால் முடிந்ததை செய்யும்போது, யெகோவாவின் துணையும் அன்பான ஆதரவும் தனக்கு இருக்கிறது என்பதில் அவள் நிச்சயமாக இருக்கலாம்.—சங்கீதம் 32:8.
18. கிறிஸ்தவ சபையை யெகோவா ஏற்பாடு செய்து தந்திருப்பதை போற்றுகிறோம் என்பதை நாம் எப்படி காட்டலாம்?
18 கிறிஸ்தவ சபையின் மூலமே கடவுளுடைய ஆதரவு அதிகமாக அளிக்கப்படுகிறது; அதாவது அதன் ஒழுங்கான ஆவிக்குரிய உணவளிக்கும் திட்டம், கிறிஸ்தவ சகோதரத்துவம், ஆவிக்குரிய விதத்தில் முதிர்ச்சி பெற்ற “மனிதரில் வரங்கள்” ஆகியவற்றின் மூலமாக கடவுளுடைய ஆதரவு அளிக்கப்படுகிறது. (எபேசியர் 4:8, NW) ‘துன்புறும் அனாதைகள் மற்றும் கைம்பெண்களின்’ தேவைகளுக்கு உண்மையுள்ள மூப்பர்கள் விசேஷித்த கவனம் செலுத்தி, சபையிலுள்ள அனைவரையும் கட்டியெழுப்ப அரும்பாடுபடுகிறார்கள். (யாக்கோபு 1:27, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே, கடவுளுடைய ஜனங்களோடு நெருக்கமாக இருங்கள், ஒருபோதும் உங்களை தனிமைப்படுத்தாதீர்கள்.—நீதிமொழிகள் 18:1; ரோமர் 14:7.
கீழ்ப்பட்டிருத்தல்—அருமையான குணம்
19. மனைவி கீழ்ப்பட்டிருப்பது ஏன் மட்டமான நிலையை அர்த்தப்படுத்துவதில்லை, எந்த பைபிள் உதாரணம் இதை ஆதரிக்கிறது?
19 ஆணுக்கு பூர்த்தி செய்யும் ஏற்ற துணையாக பெண்ணை யெகோவா படைத்தார். (ஆதியாகமம் 2:18) ஆகவே, மனைவி தன் கணவனுக்கு கீழ்ப்பட்டிருப்பது எந்தவிதத்திலும் அவள் மட்டமானவள் என அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அது அவளின் மதிப்பைத்தான் கூட்டுகிறது, அவளுடைய திறமைகள் பலவற்றையும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைய உபயோகிப்பதற்கு இடமளிக்கிறது. பூர்வ இஸ்ரவேலில் திறமைசாலியான ஒரு மனைவி செய்த பலவித செயல்களைப் பற்றி நீதிமொழிகள் 31-ம் அதிகாரம் விவரிக்கிறது. அவள் தேவையிலிருந்தவர்களுக்கு உதவினாள், திராட்சைத் தோட்டங்களை நாட்டினாள், நிலத்தை வாங்கினாள். ஆம், ‘அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பியது; அவன் சம்பத்துக் குறையவில்லை.’—வசனங்கள் 11, 16, 20.
20. (அ) கடவுள் அருளிய திறமைகளை ஒரு கிறிஸ்தவ பெண் எப்படி கருத வேண்டும்? (ஆ) என்ன சிறந்த பண்புகளை எஸ்தர் வெளிக்காட்டினாள், அதன் விளைவாக அவளை யெகோவா எப்படி பயன்படுத்த முடிந்தது?
20 தெய்வ பயமுள்ள, பணிவான ஒரு பெண் பேராசையோடு கணவனுக்கு மேலாக தன்னை உயர்த்தவோ அவருடன் போட்டாபோட்டி போடவோ மாட்டாள். (நீதிமொழிகள் 16:18) முக்கியமாக உலகப் பிரகாரமான பதவி ஏணியில் ஏறி தன்னுடைய எல்லா ஆசைகளையும் ஈடேற்ற அவள் முயல மாட்டாள்; மாறாக, கடவுள் அருளிய திறமைகளை மற்றவர்களுக்கு—குடும்பம், சக கிறிஸ்தவர்கள், அக்கம்பக்கத்தார், எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவாவுக்கு—உதவ பயன்படுத்துவாள். (கலாத்தியர் 6:10; தீத்து 2:3-5) எஸ்தர் ராணியைப் பற்றிய பைபிள் உதாரணத்தை கவனியுங்கள். அவள் பார்வைக்கு ரூபவதியாக இருந்தாலும், பணிவுள்ளவளாகவும் கீழ்ப்படிதலுள்ளவளாகவும் இருந்தாள். (எஸ்தர் 2:13, 15) திருமணமானபோது, தன் கணவர் அகாஸ்வேரு ராஜாவுக்கு ஆழ்ந்த மரியாதையை காண்பித்தாள்; ராஜாவின் முதல் மனைவி வஸ்தியைப் போல அவள் நடந்துகொள்ளவில்லை. (எஸ்தர் 1:10-12; 2:16, 17) அதுமட்டுமல்ல ராணியாக ஆன பின்பும்கூட பொருத்தமான விஷயங்களில் தன் பெரியப்பா மகன் மொர்தெகாயின் ஆலோசனைக்கு மரியாதையோடு கீழ்ப்படிந்தாள். ஆனால் அவள் ஒரு கோழை அல்ல! யூதர்களை தேசத்திலிருந்து பூண்டோடு அழிக்க சதித் திட்டமிட்டிருந்த செல்வாக்குள்ள, ஈவிரக்கமற்ற ஆமானை அவள் தைரியமாக காட்டிக்கொடுத்தாள். தம்முடைய ஜனங்களை காப்பதற்கு யெகோவா பெரியளவில் எஸ்தரை பயன்படுத்தினார்.—எஸ்தர் 3:8–4:17; 7:1-10; 9:13.
21. ஒரு கிறிஸ்தவ பெண் எப்படி யெகோவாவுக்கு இன்னும் சிறந்த விதத்தில் மதிப்புமிக்கவளாக ஆகலாம்?
21 கடந்த காலத்திலும் சரி, இன்றும் சரி, யெகோவாவுக்கும் அவருடைய வணக்கத்துக்கும் தேவ பயமுள்ள பெண்கள் தனிப்பட்ட பக்தியை காண்பித்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆகவே, தெய்வ பயமுள்ள பெண்கள் யெகோவாவின் பார்வையில் அதிக மதிப்புமிக்கவர்கள். கிறிஸ்தவ சகோதரிகளே, ‘நற்கிரியைக்கு ஆயத்தமாக்கப்பட்ட’ மிகவும் விரும்பத்தக்க ‘பாத்திரமாக’ யெகோவா தம் ஆவியால் உங்களை படிப்படியாக வடிவமைப்பதற்கு அனுமதியுங்கள். (2 தீமோத்தேயு 2:21; ரோமர் 12:2) மதிப்புமிக்க இந்த வணக்கத்தாரைப் பற்றி கடவுளுடைய வார்த்தை இவ்வாறு கூறுகிறது: “அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.” (நீதிமொழிகள் 31:31) இந்த வார்த்தைகள் உங்கள் ஒவ்வொருவருக்கும் பொருந்துவதாக.
[அடிக்குறிப்புகள்]
a அத்தகைய பாராட்டை எப்படி அளிக்கலாம் என்பதற்கு காவற்கோபுரம் மார்ச் 15, 2002, பக்கங்கள் 26-8-ஐக் காண்க.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற பாட்டுப் புத்தகத்தில் 212-ம் பாடல்.
நினைவிருக்கிறதா?
• முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ பெண்கள் சிலர் எப்படி யெகோவாவின் பார்வையில் மதிப்புமிக்கவர்களாக நடந்துகொண்டார்கள்?
• நம் நாளில் அநேக சகோதரிகள் எப்படி தங்களை கடவுளுக்கு மதிப்புமிக்கவர்களாக ஆக்கியிருக்கிறார்கள்?
• ஒற்றைத் தாய்மாரையும் கணவர் இல்லாத மற்றவர்களையும் எவ்வழிகளில் யெகோவா ஆதரிக்கிறார்?
• தலைமை ஸ்தானத்திற்கு ஒரு பெண் எவ்வாறு இருதயப்பூர்வமான மரியாதையை காட்டலாம்?
[பக்கம் 17-ன் பெட்டி]
சிந்திக்க சில உதாரணங்கள்
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையுள்ள பெண்களில் இன்னும் சிலருடைய உதாரணங்களை சிந்தித்துப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியானால், கீழ்க் காணும் வசனங்களை தயவுசெய்து வாசித்துப் பாருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு நபர்களைப் பற்றி தியானிக்கையில், உங்கள் வாழ்க்கையில் அதிகளவில் பின்பற்ற வேண்டிய நியமங்களை கண்டறிய முயலுங்கள்.—ரோமர் 15:4.
◆ சாராள்: ஆதியாகமம் 12:1, 5; 21:9-12; எபிரெயர் 11:9; 1 பேதுரு 3:5, 6.
◆ தாராள குணம் படைத்த இஸ்ரவேல் பெண்கள்: யாத்திராகமம் 35:5, 22, 25, 26; 36:3-7; லூக்கா 21:1-4.
◆ தெபொராள்: நியாயாதிபதிகள் 4:1–5:31.
◆ ரூத்: ரூத் 1:4, 5, 16, 17; 2:2, 3, 11-13; 4:15.
◆ சூனேமிய பெண்: 2 இராஜாக்கள் 4:8-37.
◆ கானானிய பெண்: மத்தேயு 15:22-28.
◆ மார்த்தாள், மரியாள்: மாற்கு 14:3-9; லூக்கா 10:38-42; யோவான் 11:17-29; 12:1-8.
◆ தபீத்தாள்: அப்போஸ்தலர் 9:36-41.
◆ பிலிப்புவின் நான்கு மகள்கள்: அப்போஸ்தலர் 21:9.
◆ பெபேயாள்: ரோமர் 16:1, 2.
[பக்கம் 15-ன் படம்]
கடவுளுடைய சட்டத்திற்கு உண்மைப் பற்றுறுதியோடு கீழ்ப்படியும் மணமாகாத சகோதரிகளை பாராட்டுகிறீர்களா?
[பக்கம் 16-ன் படம்]
பிள்ளைகள் பள்ளிக்கு போவதற்கு முன்பாக திட்டவட்டமான என்ன விஷயங்களை குறிப்பிட்டு ஜெபம் செய்யலாம்?