உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 11/15 பக். 4-7
  • பூமி பரதீஸாக மாறுமென நம்பலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூமி பரதீஸாக மாறுமென நம்பலாம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் இந்தக் குழப்பம்?
  • பைபிள் என்ன சொல்கிறது?
  • சடப் பொருட்கள் தீய இயல்புடையவையா?
  • சிலர் பரலோகத்திற்கு செல்வதேன்?
  • கடவுளுடைய ஆதி நோக்கம் நிறைவேறும்
  • ஏன் சிலர் மறுபடியும் பிறக்கின்றனர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • பைபிள் குறிப்பிடுகிற பரதீஸ் எங்கே உள்ளது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • கடவுள் ஏன் பூமியை படைத்தார்?
    கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 11/15 பக். 4-7

பூமி பரதீஸாக மாறுமென நம்பலாம்

ஒருநாள் இந்தப் பூமியை விட்டு பரலோகத்திற்கு சென்றுவிடுவோம் என காலங்காலமாக அநேக மக்கள் நம்பி வந்திருக்கிறார்கள். இந்தப் பூமியில் நாம் நிரந்தரமாக வாழ வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கமே அல்ல என சிலர் எண்ணி வந்திருக்கிறார்கள். துறவிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவர்களில் அநேகருக்கு இந்தப் பூமியும் சடப் பொருட்கள் அனைத்தும் தீயவையாக தோன்றுகின்றன​—⁠மெய்யான ஆன்மீக திருப்தியை அடைவதற்கும் கடவுளிடம் நெருங்கிச் செல்வதற்கும் ஒரு தடையாக தோன்றுகின்றன.

பரதீஸ் பூமியைப் பற்றி கடவுள் சொன்ன காரியங்களை அறியாதவர்களே அல்லது அதை மனப்பூர்வமாக அலட்சியம் செய்தவர்களே மேற்கூறப்பட்ட கருத்துக்களை உருவாக்கினார்கள். சொல்லப்போனால், இந்த விஷயத்தைப் பற்றி கடவுள் சொன்ன காரியங்களை, அதாவது மனிதரைக் கொண்டு தமது வார்த்தையாகிய பைபிளில் பதிவுசெய்து வைத்திருக்கிற காரியங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு இன்றைக்கும் அநேகர் துளிகூட விரும்புவதில்லை. (2 தீமோத்தேயு 3:16, 17) அப்படியானால், மனிதரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக கடவுளுடைய வார்த்தையில் நம்பிக்கை வைப்பது ஞானமானது அல்லவா? (ரோமர் 3:4) பார்க்கப்போனால், அப்படி நம்பிக்கை வைப்பது மிகவும் முக்கியம்; ஏனென்றால் நம் கண்களுக்கு புலப்படாத வலிமைமிக்க ஒரு தீய சிருஷ்டி ஆன்மீக ரீதியில் மக்களை குருடாக்கியிருக்கிறான் என்றும், இப்போதோ ‘உலகமனைத்தையும் மோசம்போக்கிக்’ கொண்டிருக்கிறான் என்றும் பைபிள் நம்மை எச்சரிக்கிறது.​—⁠வெளிப்படுத்துதல் 12:9; 2 கொரிந்தியர் 4:4.

ஏன் இந்தக் குழப்பம்?

ஆத்துமாவைப் பற்றிய எதிரும் புதிருமான கருத்துக்கள் பூமியைப் பற்றிய கடவுளுடைய நோக்கத்தை புரிந்துகொள்ள முடியாதபடி மக்களை குழப்பியிருக்கின்றன. அழியாத ஆத்துமா நமக்குள் இருப்பதாக அநேகர் நம்புகிறார்கள்; அதாவது மனித உடலுடன் சாராத தனிவேறான ஒன்று இருப்பதாகவும் நாம் மரிக்கையில் அது தப்பிப்பிழைப்பதாகவும் நம்புகிறார்கள். இன்னும் சிலரோ, மனித உடலை படைப்பதற்கு முன்பே ஆத்துமா இருந்தது என நம்புகிறார்கள். “ஆத்துமா பரலோகத்தில் இருந்தபோது செய்த பாவங்களின் நிமித்தம் ஒரு தண்டனையாகவே உடலில் அடைத்து வைக்கப்பட்டது” என கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ கருதினார் என ஒரு புத்தகம் கூறுகிறது. அவ்வாறே மூன்றாம் நூற்றாண்டு இறையியல் வல்லுநர் ஆரஜனும் கூறினார். அதாவது, “ஆத்துமாக்கள் ஓர் உடலுடன் ஒன்றிவிடுவதற்கு முன்பு [பரலோகத்தில்] பாவம் செய்தன என்றும் பாவங்களுக்கு தண்டனையாக [பூமியில் அந்த உடலுக்குள்] அடைத்து வைக்கப்பட்டன என்றும்” அவர் கூறினார். பரலோகத்திற்கு பயணம் செய்யும் மனிதனுக்கு பூமி ஏதோவொரு பரீட்சைக்குரிய இடம் மட்டுமே என லட்சக்கணக்கானோர் நம்புகிறார்கள்.

ஒரு நபர் மரிக்கையில் ஆத்துமாவுக்கு என்ன நடக்கிறது என்ற விஷயத்தின் பேரில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. “மரித்தோரின் ஆத்துமாக்கள் கீழுலகத்திற்கு செல்கின்றன” என்ற கருத்தை எகிப்தியர்கள் உருவாக்கினார்கள் என மேற்கத்திய தத்துவத்தின் வரலாறு (ஆங்கிலம்) கூறுகிறது. மரித்தோரின் ஆத்துமாக்கள் இருண்ட கீழுலகிற்கு அல்ல, ஆனால் உயர்வான ஆவிப் பிரதேசத்திற்கே செல்கின்றன என தத்துவஞானிகள் பிற்பாடு விவாதித்தனர். ஒருவர் சாகும்போது அவருடைய ஆத்துமா, “பார்க்க முடியாத [ஒரு] பிரதேசத்திற்கு சென்று விடுகிறது . . . மீதமுள்ள தன் காலத்தை கடவுட்களோடு செலவிடுகிறது” என்ற கருத்தை கிரேக்க தத்துவஞானி சாக்ரட்டிஸ் ஆதரித்ததாக சொல்லப்படுகிறது.

பைபிள் என்ன சொல்கிறது?

மனிதருக்கு அழியாத ஆத்துமா ஒன்று உள்ளதென பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆதியாகமம் 2:7-ஐ நீங்களே வாசித்துப் பாருங்கள். “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” என அது சொல்கிறது. இந்த வார்த்தைகள் குழப்பத்திற்கு இடமின்றி தெளிவாக இருக்கின்றன. முதல் மனிதன் ஆதாமை கடவுள் படைத்தபோது, சடப்பொருள் அல்லாத ஏதோ ஒன்றை அவனுக்குள் வைக்கவில்லை. மாறாக, “மனுஷன் ஜீவாத்துமாவானான்” என்றே பைபிள் சொல்கிறது. மனிதனுக்குள் ஓர் ஆத்துமா இருக்கவில்லை. அவன் தானே ஒரு ஆத்துமாவாக இருந்தான்.

பூமியையும் மனித குடும்பத்தையும் யெகோவா படைத்த சமயத்தில், மனிதன் சாக வேண்டுமென்ற நோக்கம் அவருக்கு இருக்கவில்லை. பூமியில் பரதீஸான சூழ்நிலைகளில் மனிதர் என்றென்றும் வாழ வேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கமாக இருந்தது. கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனதால்தான் ஆதாம் மரித்தான். (ஆதியாகமம் 2:8, 15-17; 3:1-6; ஏசாயா 45:18) ஆதாம் மரித்தபோது, அவன் ஏதேனும் ஆவிப் பிரதேசத்திற்கு சென்றானா? இல்லை! அவன், அதாவது ஆத்துமாவாகிய ஆதாம், படைக்கப்பட்ட சடப்பொருளான மண்ணுக்கே திரும்பச் சென்றான்.​—⁠ஆதியாகமம் 3:17-19.

நம் ஆதி தகப்பன் ஆதாமிடமிருந்து நாம் அனைவரும் பாவத்தையும் மரணத்தையும் சொத்தாக பெற்றிருக்கிறோம். (ரோமர் 5:12) இந்த மரணம் வாழ்க்கையின் முடிவைக் குறிக்கிறது. இதுதான் ஆதாமுக்கும் சம்பவித்தது. (சங்கீதம் 146:3, 4) சொல்லப்போனால், பைபிளிலுள்ள 66 புத்தகங்களில் எதுவுமே, “அழியாத” அல்லது “என்றென்றுமான” என்ற வார்த்தைகளை “ஆத்துமா” என்ற வார்த்தையோடு சேர்த்து பயன்படுத்துவதில்லை. மறுபட்சத்தில், ஆத்துமா அழியக்கூடியது, அதாவது ஒரு நபர் அழியக்கூடியவர் என்று வேதவசனங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. ஆத்துமா சாகும்.​—⁠பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4.

சடப் பொருட்கள் தீய இயல்புடையவையா?

பூமி உட்பட சடப் பொருட்கள் அனைத்தும் தீயவை என்ற கருத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? மானிக்கிய கொள்கையை ஆதரித்தவர்கள் அவ்வாறு நம்பினர். பொ.ச. மூன்றாம் நூற்றாண்டில் பெர்சியாவில் மானி என்பவரால் உருவாக்கப்பட்ட மத கொள்கை அது. “மனிதரின் துயர்மிகுந்த வாழ்க்கையின் காரணமாக உருவானதே மானிக்கிய கொள்கை” என த நியு என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. மனிதனாக இருப்பது, “இயல்பானதல்ல, வேதனைமிக்கது, மொத்தத்தில் தீயது” என மானி நம்பினார். இந்தத் ‘துயரத்திலிருந்து’ தப்பிப்பதற்கு ஒரே வழி, உடலிலிருந்து ஆத்துமா வெளியேறி, இந்தப் பூமியை விட்டுவிட்டு, ஆவி உலகில் ஆன்மீக வாழ்வை அடைவதாகும் என்றும் அவர் நம்பினார்.

ஆனால் பைபிளோ, இந்தப் பூமியையும் மனிதகுலத்தையும் கடவுள் படைத்தபோது அவருடைய பார்வையில் ‘அனைத்தும் மிகவும் நன்றாயிருந்தது’ என நமக்கு சொல்கிறது. (ஆதியாகமம் 1:31) அந்த சமயத்தில் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே தடையாக எதுவும் இருக்கவில்லை. ஆதாமும் ஏவாளும் யெகோவாவுடன் நெருக்கமான உறவை அனுபவித்து மகிழ்ந்தனர்; பரிபூரண மனிதராக இருந்த இயேசு கிறிஸ்து தம் பரலோக தகப்பனோடு வைத்திருந்த நெருக்கமான உறவைப் போலவே அதுவும் இருந்தது.​—⁠மத்தேயு 3:17.

நம் ஆதி பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் பாவம் செய்யாமல் இருந்திருந்தால் பரதீஸ் பூமியில் வாழ்ந்து, யெகோவா தேவனுடன் நித்திய காலமாய் நெருங்கிய பந்தத்தை அனுபவித்திருப்பார்கள். அவர்களது வாழ்க்கை ஆரம்பமானது பரதீஸில்தான்; அதைப் பற்றி வேதவசனம் இப்படி சொல்கிறது: “தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.” (ஆதியாகமம் 2:8) இந்தப் பூங்காவனத்தில்தான் ஏவாள் படைக்கப்பட்டாள். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்யாமல் இருந்திருந்தால், அவர்களும் அவர்கள் பெற்றெடுக்கவிருந்த பரிபூரண பிள்ளைகளும் மகிழ்ச்சியோடு ஒன்றுசேர்ந்து இந்தப் பூமி முழுவதையும் ஒரு பரதீஸாக ஆக்கியிருப்பார்கள். (ஆதியாகமம் 2:21; 3:23, 24) பரதீஸ் பூமி மனிதகுலத்தின் நித்திய வீடாக இருந்திருக்கும்.

சிலர் பரலோகத்திற்கு செல்வதேன்?

‘ஆனால், பரலோகத்திற்கு போகிறவர்களைப் பற்றி பைபிள் சொல்கிறதே?’ என நீங்கள் கேட்கலாம். சரிதான். ஆதாம் பாவம் செய்ததால், ஒரு பரலோக ராஜ்யத்தை ஏற்படுத்த யெகோவா நோக்கம் கொண்டார்; அந்த ராஜ்யத்தில் ஆதாமின் சந்ததியார் சிலர் இயேசு கிறிஸ்துவோடுகூட ‘ராஜாக்களும் ஆசாரியர்களுமாக பூமியின்மீது அரசாளுவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 5:10; ரோமர் 8:17) ஆகவே, அவர்கள் பரலோகத்தில் அழியாத வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட வேண்டியிருந்தது. அவர்களுடைய மொத்த எண்ணிக்கை 1,44,000; இயேசுவுக்கு உண்மையாய் இருந்த முதல் நூற்றாண்டு சீஷர்களே அவர்களில் முதலானவர்கள்.​—⁠லூக்கா 12:32; 1 கொரிந்தியர் 15:42-44; வெளிப்படுத்துதல் 14:1-5.

என்றாலும், நேர்மையான ஜனங்கள் இந்தப் பூமியை விட்டு பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்பது கடவுளுடைய ஆதி நோக்கமாக இருக்கவில்லை. சொல்லப்போனால், இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது சொன்னது இதுதான்: “பரலோகத்திலிருந்து இறங்கினவராகிய மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.” (யோவான் 3:13, திருத்திய மொழிபெயர்ப்பு) ‘மனுஷகுமாரனாகிய’ இயேசு கிறிஸ்துவை மீட்கும்பொருளாக கடவுள் அளித்தார்; இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்போருக்கு அது நித்திய வாழ்வை சாத்தியமாக்குகிறது. (ரோமர் 5:8) ஆனால், அப்படி விசுவாசம் வைக்கும் லட்சோபலட்சம் ஜனங்கள் நித்தியமாக வாழப்போவது எங்கே?

கடவுளுடைய ஆதி நோக்கம் நிறைவேறும்

இயேசு கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் உடன் அரசர்களாக சேவை செய்வதற்கு மனித குடும்பத்திலிருந்து சிலரை கடவுள் எடுத்துக்கொள்கிறார் என்பது உண்மையே. ஆனால் நல்லவர்கள் எல்லாருமே பரலோகத்திற்கு போகிறார்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. இந்தப் பூமி மனித குடும்பத்திற்கு ஒரு பரதீஸ் வீடாக அமைய வேண்டும் என்பதற்காகவே யெகோவா அதைப் படைத்தார். வெகு விரைவில் அந்த ஆதி நோக்கத்தை அவர் நிறைவேற்றுவார்.​—⁠மத்தேயு 6:9, 10.

இயேசு கிறிஸ்துவும் அவரது உடன் அரசர்களும் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்கையில் பூமியெங்கும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிரம்பி வழியும். (சங்கீதம் 37:9-11) கடவுளுடைய நினைவில் இருப்பவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு பூரண ஆரோக்கியத்தைப் பெறுவர். (அப்போஸ்தலர் 24:15) கடவுளுக்கு உண்மையாய் இருப்பதன் மூலம், கீழ்ப்படிதலுள்ள மனிதகுலம் ஆதி பெற்றோர் இழந்த நித்திய வாழ்வை, அதாவது பரதீஸ் பூமியில் பரிபூரணமான வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்.​—⁠வெளிப்படுத்துதல் 21:3, 4.

யெகோவா தேவன் ஒருபோதும் தாம் நினைத்ததை நிறைவேற்ற தவறுவதில்லை. “மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை” என தமது தீர்க்கதரிசி ஏசாயா மூலம் அவர் அறிவித்திருக்கிறார்.​—⁠ஏசாயா 55:10, 11, பொது மொழிபெயர்ப்பு.

பரதீஸ் பூமியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு முற்காட்சியை ஏசாயா புத்தகத்தில் காணலாம். பரதீஸில் குடியிருக்கும் யாருமே “வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று சொல்ல மாட்டார்கள். (ஏசாயா 33:24) மனிதருக்கு மிருகங்கள் எந்தத் தீங்கும் செய்யாது. (ஏசாயா 11:6-9) அழகிய வீடுகளைக் கட்டி அவற்றில் மக்கள் குடியிருப்பார்கள்; அவர்களே பயிரிட்டு திருப்தியாக சாப்பிடுவார்கள். (ஏசாயா 65:21-25) அதுமட்டுமல்ல, கடவுள் ‘மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து விடுவார்.’​—⁠ஏசாயா 25:8.

கீழ்ப்படிதலுள்ள மனிதர் வெகு விரைவில் இத்தகைய அருமையான சூழலில் வாழ்வர். அவர்கள் ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்வர்.’ (ரோமர் 8:20) கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழ்வது எவ்வளவு அற்புதமாய் இருக்கும்! (லூக்கா 23:43, NW) வேதவசனங்களிலிருந்து பெற்ற திருத்தமான அறிவுக்கு ஏற்ப இப்போதே வாழ்ந்து, யெகோவா தேவன் மீதும் இயேசு கிறிஸ்துவின் மீதும் விசுவாசம் வைத்தால் நீங்கள் அங்கு வாழ முடியும். அதோடு, பரதீஸ் பூமியில் நம்பிக்கை வைப்பது நியாயமானதே என்ற ஆணித்தரமான உறுதியையும் பெறலாம்.

[பக்கம் 5-ன் படம்]

பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழும் நோக்கத்துடனே ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்டனர்

[பக்கம் 7-ன் படங்கள்]

பரதீஸ் பூமியில் . . .

வீடுகளை கட்டுவார்கள்

திராட்சை தோட்டங்களை நாட்டுவார்கள்

யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்

[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]

U.S. Fish & Wildlife Service, Washington, D.C./NASA

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்