வாசகரின் கேள்வி
பைபிள் குறிப்பிடுகிற பரதீஸ் எங்கே உள்ளது?
▪ சாகும் நிலையிலிருந்த ஒருவன் இயேசுமீது தைரியமாக விசுவாசம் வைத்தான். அப்போது இயேசு, “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என்று அவனிடம் வாக்குறுதி அளித்தார். (லூக். 23:43, BSI) அப்படியானால், அவன் எங்கு இருப்பான்? அந்த பரதீஸ் எங்கு இருக்கும்? பரலோகத்திலா, பூமியிலா, அல்லது இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோவொரு இடத்திலா, அதாவது நியாயத்தீர்ப்புக்காக மக்கள் காத்திருக்கும் ஏதோவொரு இடத்திலா?
நம் முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்த பரதீஸில் வாழ்ந்தார்கள் என பைபிள் சொல்கிறது. “தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்” என்று அது சொல்கிறது. (ஆதி. 2:8, 15) பைபிள் கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்டபோது, ‘தோட்டம்’ என்ற வார்த்தை பரதீஸாஸ் என்று மொழிபெயர்க்கப்பட்டது; இதிலிருந்துதான் ‘பரதீஸ்’ என்ற வார்த்தை பிறந்தது.
ஒரு தம்பதியருக்குப் பிள்ளைச் செல்வங்கள் பிறந்து குடும்பம் பெரிதாகும்போது வீட்டைப் பெரிதாக்குவது இயல்பு. அதுபோல, நம் முதல் பெற்றோருக்குப் பிள்ளைகள் பிறந்து நாளடைவில் குடும்பங்கள் பல உருவாகும்போது ஏதேன் தோட்டத்தின் எல்லைகளை அவர்கள் விரிவுபடுத்த வேண்டியிருந்தது. அதனால்தான், ‘பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தும்படி’ கடவுள் அவர்களிடம் சொன்னார்.—ஆதி. 1:28.
அப்படியானால், மனிதர் பூமியிலுள்ள பரதீஸில் பிள்ளைச் செல்வங்களைப் பெற்று வாழ வேண்டும் என்பதே நம் படைப்பாளரின் நோக்கமாக இருந்தது. அவர்கள் பூஞ்சோலை பூமியில் சாவைக் காணாமல் சதா காலமும் வாழ்ந்திருப்பார்கள். இந்தப் பூவுலகமே மனிதர் அனைவருக்கும் நிரந்தர வீடாக ஆகவிருந்தது. அதனால்தான், நம் கிரகத்தில் இயற்கை அள்ளி இறைக்கும் அனைத்தும் நமக்கு அளவிலா ஆனந்தத்தைத் தருகின்றன, அல்லவா? ஆம், ஓர் அழகிய பூமியில் வாழ்வதற்கே நாம் படைக்கப்பட்டோம்.
யெகோவாவுடைய நோக்கம் மாறிவிட்டதா? இல்லை. ஏனென்றால், அவர் நமக்கு அளிக்கிற வாக்குறுதியைக் கவனியுங்கள்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசா. 55:11) மனிதனைப் படைத்து 3,000-க்கும் அதிகமான வருடங்கள் கடந்த பிறகும்கூட, பூமியை ‘படைத்து, அதை உருவேற்படுத்தினவர்’ அதை ‘வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் குடியிருப்புக்காகச் செய்தார்’ என பைபிள் குறிப்பிட்டது. (ஏசா. 45:18) ஆம், கடவுளுடைய நோக்கம் மாறவே இல்லை. இந்தப் பூமி சீக்கிரத்தில் ஒரு பூஞ்சோலையாக மாறும்.
சொல்லப்போனால், அந்தப் பூஞ்சோலையைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிற அனைத்தும் பூமியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதையே விவரிக்கின்றன. உதாரணத்திற்கு, “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்” என ஏசாயாவின் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. (ஏசா. 65:21) பொதுவாக, எங்கு வீடுகளைக் கட்டுவார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டுவார்கள், பழங்களைச் சாப்பிடுவார்கள்? பூமியில்தானே! “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்” என்று நீதிமொழிகள் 2:21 தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
இயேசுவும்கூட பூஞ்சோலை பூமியைப் பற்றிச் சொன்னார். பரலோகப் பூஞ்சோலையைப் பற்றியும் அவர் வாக்குறுதி அளித்தது உண்மையே; ஆனால், வெகு சிலருக்கே அந்த வாக்குறுதியை அளித்தார். (லூக். 12:32) இவர்கள் இறந்தபின் பரலோக பூஞ்சோலைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்; அங்கே கிறிஸ்துவோடு சேர்ந்து பூஞ்சோலை பூமிமீது ஆட்சி செய்வார்கள். (வெளி. 5:10; 14:1-3) இவர்கள் கடவுளுடைய நீதிநெறிகளுக்கு இசைவாக பூஞ்சோலை பூமியை நல்ல முறையில் கண்காணித்து ஆட்சி செய்வார்கள்.
இந்த நோக்கத்தோடுதான் கடவுள் பூமியைப் படைத்தார் என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார். சொல்லப்போனால், ஏதேன் தோட்டம் படைக்கப்பட்டபோது அவர் பரலோகத்தில் தம் தந்தையுடன் இருந்தாரே! இன்று விசுவாசம் காட்டுகிற எல்லாருமே வரவிருக்கும் பூஞ்சோலை பூமியில் வாழ முடியும். (யோவா. 3:16) இப்படிப்பட்ட ஒவ்வொருவருக்கும் இயேசு கொடுக்கும் வாக்குறுதி இதுதான்: “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்.”—லூக். 23:43. (w10-E 12/01)
[படத்திற்கான நன்றி]
© FORGET Patrick/SAGAPHOTO.COM/Alamy