யெகோவாவுடைய படைப்பின் மகத்துவம்
‘யெகோவாவின் மரங்கள் திருப்தியடைகின்றன’
விண்ணைத் தொடுவது போல கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் காட்டு மரங்களிடையே ஊடுருவிப் பாயும் ஒளிக்கீற்றை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இலைகளை தென்றல் தழுவிச் செல்லும்போது உண்டாகும் சலசலப்பை கேட்டிருக்கிறீர்களா?—ஏசாயா 7:2.
ஒரு பருவத்தில் பூமியின் சில பகுதிகளில், பல்வேறு மரங்களின் இலைகள் மத்தாப்பு போல சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு என வர்ண ஜாலம் புரிவதைக் காணலாம். சொல்லப்போனால், காடே தீப்பற்றி எரிவது போல அது காட்சியளிக்கும்! அப்படியானால், “பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்” என உணர்ச்சி பொங்க கூறப்பட்ட இந்த வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானவை!—ஏசாயா 44:23.a
நமது கோளத்தின் நிலப்பரப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பாகத்தை ஆக்கிரமித்திருப்பது காடுதான். காடும் அதில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் படைப்பாளரான யெகோவா தேவனை மகத்தான விதத்தில் மகிமைப்படுத்துகின்றன. ‘கனிமரங்களே, சகல கேதுருக்களே யெகோவாவைத் துதியுங்கள்’ என தேவாவியால் தூண்டப்பட்ட சங்கீதக்காரன் பாடினார்.—சங்கீதம் 148:7-9.
“மனிதன் உயிர் வாழ மரங்கள் மிக அத்தியாவசியம்; அவை மனிதனுடைய பொருளாதார தேவைகளை நிறைவு செய்கின்றன, கண்களுக்கும் விருந்தளிக்கின்றன” என கூறுகிறது நம்மைச் சுற்றியுள்ள மரங்கள் என்ற ஆங்கில நூல். காடுகள் சுத்தமான நீரை பாதுகாத்து மனிதருக்கு வழங்கி வருவதோடு, அது குறைவின்றி கிடைக்கவும் துணைபுரிகின்றன. அதுமட்டுமா? மரங்கள் காற்றையும் சுத்தப்படுத்துகின்றன. இலை செல்கள் ஒளிச்சேர்க்கை எனும் அற்புத செயலின் மூலம் கார்பன்-டை-ஆக்ஸைடு, நீர், தாதுப் பொருட்கள், சூரிய ஒளி ஆகியவற்றை சத்துக்களாகவும் ஆக்ஸிஜனாகவும் மாற்றுகின்றன.
வனப்பும் வடிவமைப்பும் ஒருங்கே அமையப்பெற்ற தலைசிறந்த படைப்புதான் காடு. காட்டில் பொதுவாக மனதைக் கொள்ளை கொள்வது பிரமாண்டமான மரங்களே. அவற்றின் மத்தியில் பெரணிகள், பாசிகள், தரையில் படரும் கொடிகள், புதர்ச்செடிகள், புற்பூண்டுகள் என எண்ணற்ற செடிகொடிகள் வளர்கின்றன. இவை மரங்கள் உருவாக்கும் சுற்றுச்சூழலைச் சார்ந்தே வாழ்கின்றன, மரங்களின் நிழலிலே வளர்கின்றன, காடுகளிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி தழைக்கின்றன.
இலையுதிர்க் காடுகள் சிலவற்றில், வருடத்தின் பிற்பகுதியில் ஓர் ஏக்கரில் மட்டுமே கோடிக்கணக்கான இலைகள் உதிர்ந்து விழலாம். அந்த இலைகள் என்ன ஆகின்றன? பூச்சிகள், பூஞ்சைகள், புழுக்கள் மற்றும் பல நுண்ணுயிரிகள் யாவும் இந்தக் கரிமப் பொருளை மக்கச் செய்து, முடிவில் விளைநிலத்திற்கு ஏற்ற சிறந்த போஷாக்காக மாற்றுகின்றன. ஆம், திரைமறைவான இந்த வேலையாட்கள் எதையும் வீணாக்காமல் புதிய தாவரங்கள் வளர மண்ணைத் தயார்படுத்துகின்றன.
காய்ந்துபோன இந்த இலைகளுக்குக் கீழே மண்ணில் எண்ணிறந்த உயிரினங்கள் வாழ்கின்றன. “ஒரு சதுரடி பரப்பும் 2.5 சென்டிமீட்டர் ஆழமும் உள்ள பகுதியில் . . . 1,350 உயிரினங்கள் வரை காணலாம். இது தவிர, ஒரு கைப்பிடி மண்ணில் மட்டுமே கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் இருக்கின்றன” என த ஃபாரஸ்ட் என்ற புத்தகம் கூறுகிறது. அதுபோக, ஊரும் பிராணிகள், பறவைகள், பூச்சிகள், பாலூட்டிகள் ஆகியவையும் கணக்குவழக்கின்றி திரிகின்றன. அழகும் பல்வகைமையும் நிறைந்த இவற்றிற்குரிய புகழ் யாருக்கு சேர வேண்டும்? “சகல காட்டு ஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்” என அவற்றின் படைப்பாளர் அறிவிப்பது சரியே.—சங்கீதம் 50:10.
சில மிருகங்கள், குளிர் காலத்தை தூக்கத்தில் கழிக்கும் பிரத்தியேக திறமையுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அவை குளிரின் கொடூரத்திலிருந்தும் உணவு கிடைக்காமல் நீண்ட காலம் திண்டாடுவதிலிருந்தும் தப்பிக்கொள்கின்றன. ஆனால் எல்லா மிருகங்களுமே குளிர் காலத்தை தூக்கத்தில் கழிப்பதில்லை. குளிர்காலத்தின் மத்திபத்தில்கூட மான் கூட்டம் வயல்வெளியில் துள்ளிக் குதிப்பதைக் காணலாம். மான்கள் குளிர் காலத்தை தூக்கத்தில் கழிப்பதுமில்லை, உணவை சேர்த்து வைப்பதுமில்லை. ஆனால் அவை உணவைத் தேடிச் சென்று இளந்தளிர்களையும், மொட்டுகளையும் கொறிக்கின்றன. அதைத்தான் ஜெர்மனியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பார்க்கிறீர்கள்.
தாவரங்களைப் பற்றி வேத வசனங்களில் அடிக்கடி கூறப்பட்டுள்ளது. ஒரு கணக்கு காட்டுகிறபடி, 30 வகை மரங்களை உள்ளிட்ட 130 வகையான தாவரங்களைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. பைபிள் இவ்வாறு குறிப்பிடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி தாவரவியல் வல்லுனர் மைக்கேல் ஸோஹாரி சொல்வதாவது: “வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களோடு தொடர்புடைய தாவரங்களைப் பற்றி பைபிள் தரும் ஏராளமான குறிப்புகளை தாவரவியல் சம்பந்தப்படாத சாதாரண புத்தகத்தில் ஒருவர் பார்க்க முடியாது.”
மரங்களாகட்டும் காடுகளாகட்டும், அவை அன்பான படைப்பாளர் தந்திருக்கும் அற்புத பரிசுகள். நீங்கள் காடுகளில் நேரத்தை செலவிட்டிருந்தால், சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளை கண்டிப்பாக ஆமோதிப்பீர்கள்: “யெகோவா நாட்டிய மரங்களான லீபனோனின் கேதுருக்கள் திருப்தியடைகின்றன, அங்கே குருவிகள் கூடுகட்டுகின்றன.”—சங்கீதம் 104:16, 17, NW.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய 2004 காலண்டரில் ஜனவரி/பிப்ரவரி பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]
மத்திய கிழக்கில் காணப்படும் கனிதரும் மரங்களில் மனதை கொள்ளை கொள்ளும் மரம் வாதுமை மரமே. வருடத்தின் ஆரம்பத்தில்—பெரும்பாலான மற்ற மரங்களுக்கு முன்பே—இது ‘துயிலெழுகிறது.’ மற்ற மரங்களில் பூக்கள் மலர்வதற்கு முன்பே இது பூக்க ஆரம்பிப்பதால் பூர்வ எபிரெயர்கள் இதை கண்விழிக்கும் மரம் என அழைத்தார்கள். வெளிர் பிங்க் அல்லது வெள்ளை நிற மலர்களுடன் இந்த மரம் கண்விழிப்பதாக தெரிகிறது.—பிரசங்கி 12:5.
இதுவரை அறியப்பட்ட சுமார் 9,000 பறவை இனங்களில் ஏறக்குறைய 5,000 இனங்கள் பாடும் பறவைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றின் இன்னிசை கீதங்கள் அடர்ந்த காட்டின் அமைதியை கிழித்துக்கொண்டு செல்கின்றன. (சங்கீதம் 104:12) உதாரணமாக, பாடும் சிட்டுக்குருவிக்கு உற்சாகமிக்க ஓர் இசைக்குழுவே இருக்கிறது. இங்கு படத்தில் காட்டப்பட்டிருப்பது மோர்னிங் வார்ப்ளர் என்ற பாடும் பறவை. இந்தப் பறவைகளும் குட்டி பாடகர்களே. இவை சாம்பல், மஞ்சள், கரும் பச்சை போன்ற கூட்டு நிறங்களில் அட்டகாசமாக காட்சியளிக்கின்றன.—சங்கீதம் 148:1, 10.
[பக்கம் 9-ன் படம்]
பிரான்சு, நார்மன்டியிலுள்ள காடு