மதம் நன்மைக்கான சக்தியா தீமைக்கான சக்தியா?
“கிறிஸ்தவ மதத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், கடந்த 2000 ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வந்திருக்கும் இந்த உலகமும் கடமைப்பட்டிருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.”—முன்னுரை, இரண்டாயிரம் ஆண்டுகள்—முதல் ஆயிரமாண்டு: கிறிஸ்தவத்தின் பிறப்பு முதல் சிலுவைப் போர்கள் வரை (ஆங்கிலம்).
“கிறிஸ்தவ” மதத்தை இவ்வாறு புகழ்ந்தவர் ஆங்கில எழுத்தாளரும் தொலைக்காட்சி ஒளிபரப்பாளருமாகிய மெல்வன் பிராக். அவருடைய வார்த்தைகள் பூமியில் வாழும் கோடிக்கணக்கானோருடைய மனோபாவத்தை எதிரொலிக்கின்றன; இவர்களும் இதுபோல ஏதாவதொரு மதத்திற்கு அதிகம் கடமைப்பட்டிருப்பதாக உணருகின்றனர்; அதற்கு தாங்கள் மிகவும் விசுவாசமாயிருக்க வேண்டுமென்றும் நினைக்கின்றனர். வாழ்க்கைக்கு நன்மை செய்வதில் மதம் மிகுந்த செல்வாக்கு செலுத்தியிருப்பதாக அவர்கள் உறுதியுடன் நம்புகின்றனர். உதாரணமாக, இஸ்லாம் மதம் “நாகரிக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருக்கிறது, . . . [அது] முழு உலகையும் செழிப்புறச் செய்திருக்கிறது” என எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார்.
மதத்தின் பங்கு—நன்மையா தீமையா?
ஆனால், மதம் பொதுவாக நன்மை செய்திருக்கிறதா என்பதைக் குறித்ததில் பிராக்கின் அடுத்த வார்த்தைகள் முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. “கிறிஸ்தவ மதம் எனக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறது” என அவர் கூறுகிறார். எதற்கு விளக்கம் பெற அவர் விரும்புகிறார்? “அதன் ‘சரித்திரத்தில்’ ஏன் பெரும்பாலும் மத சகிப்பின்மை, துன்மார்க்கம், மனித நேயமின்மை, சரியானதை வேண்டுமென்றே செய்யத் தவறுதல்” ஆகியவை இடம்பெற்றுள்ளன என்பதற்கு விளக்கம் வேண்டுமென அவர் கூறுகிறார்.
மத சகிப்பின்மை, துன்மார்க்கம், மனித நேயமின்மை, சரியானதை வேண்டுமென்றே செய்யத் தவறுதல் ஆகியவை பெரும்பாலான உலக மதங்களை சரித்திரம் பூராவும் கறைபடுத்தியிருக்கின்றன என அநேகர் கூறுவார்கள். நற்குணம், புனிதம் என்ற போர்வையில் மதம் மனிதகுலத்திற்கு நன்மை செய்வது போல தோன்றுகிறது, ஆனால் நிஜத்தில் பார்த்தால் மாய்மாலமும் பொய்களுமே அதில் நிறைந்திருக்கின்றன என்பது அவர்களுடைய கருத்து. (மத்தேயு 23:27, 28) “மனித பண்பாட்டில் மதத்திற்கு விசேஷ மதிப்பு உண்டு என்ற செய்திதான் வேறெந்த செய்தியையும்விட அதிக பரவலாக புத்தகங்களில் காணப்படுகிறது” என ரேஷனலிஸ்ட் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. ஆனால் “இந்தக் கூற்றைப் போல் வேறெந்த கூற்றும் வரலாற்று உண்மைகளால் இந்தளவுக்கு தவறென நிரூபிக்கப்படவில்லை” என அது தொடர்ந்து சொல்கிறது.
இன்றைக்கு எந்தவொரு செய்தித்தாளையும் புரட்டிப் பாருங்கள்; அன்பையும் சமாதானத்தையும் இரக்கத்தையும் பற்றி பிரசங்கிக்கிற மதத் தலைவர்களே பகைமையைத் தூண்டுவதையும் தங்களுடைய வெறித்தனமான சண்டைகளை நியாயப்படுத்த கடவுளின் பெயரை பயன்படுத்துவதையும் அதில் பார்ப்பீர்கள். மதமே பெரும்பாலும் வாழ்க்கையில் அழிவுக்கேதுவான சக்தியாக இருந்திருக்கிறது என அநேகர் நினைப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.
மதமின்றி இவ்வுலகம் மேம்படுமா?
ஆங்கில தத்துவமேதை பெட்ரன்ட் ரசல் சொன்னது போல கடைசியில், “எல்லா விதமான மத நம்பிக்கையும் அழிந்துபோனால்தான்” நல்லது என்ற முடிவுக்கும்கூட சிலர் வந்திருக்கின்றனர். மதத்தை ஒழிப்பதே மனித பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்பது அவர்களுடைய கருத்து. ஆனால் மதத்தை ஆதரிப்பவர்களால் மட்டுமல்ல, அதைப் புறக்கணிப்பவர்களாலும்கூட பெருமளவில் பகைமையையும் சகிப்பின்மையையும் தூண்டிவிட முடியும் என்ற உண்மையை அவர்கள் அசட்டை செய்துவிடுகின்றனர். கேரன் ஆம்ஸ்ட்ராங் என்ற சமய எழுத்தாளர் நமக்கு இவ்வாறு நினைப்பூட்டுகிறார்: “எந்தவொரு மதப் போராட்டத்தையும் போலவே மதச் சார்பற்ற சித்தாந்தமும் பயங்கர கேடு விளைவிப்பதாக இருக்கலாம் என்பதை நாசி படுகொலை தெளிவாக எடுத்துக் காட்டியது.”—கடவுளுக்காக போர்—யூத மதத்திலும் கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் அடிப்படைவாதம் (ஆங்கிலம்).
அப்படியானால், மதம் நன்மைக்கான சக்தியா, அல்லது அதுவே மனித பிரச்சினைகளுக்கு ஆணிவேரா? இல்லையெனில் எல்லா மதத்தையும் அடியோடு அழிப்பதே பிரச்சினைகளுக்குத் தீர்வா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை அடுத்த கட்டுரையில் கவனியுங்கள். பதில் உங்களை வியப்பில் ஆழ்த்தலாம்.