வாழ்க்கை சரிதை
தெய்வீக திருப்தி என்னை காத்து வந்திருக்கிறது
பென்ஜமின் இக்கேச்சூக்வூ ஓஸூயேக்கே சொன்னது
முழுநேர கிறிஸ்தவ ஊழியத்தை ஆரம்பித்த கொஞ்ச நாளுக்கு பிறகு, என் அப்பா அம்மா வீட்டிற்கு சென்றிருந்தேன். என்னைப் பார்த்தவுடனே, அப்பா திடீரென என் சட்டையை முறுக்கிப் பிடித்துக்கொண்டு, “திருட்டுப் பயலே!” என்று கத்த ஆரம்பித்தார். தன்னுடைய அரிவாளை திருப்பிப் பிடித்தவாறு என்னை அடிக்கத் தொடங்கினார். அந்த சத்தத்தில் ஊர் ஜனமே எங்கள் வீட்டைச் சுற்றி கூடி விட்டார்கள். அப்படி நான் எதைத்தான் திருடினேன்? சொல்கிறேன், கேளுங்கள்.
நான் பிறந்த வருடம்: 1930; பிறந்த ஊர்: நைஜீரியாவின் தென்கிழக்கிலுள்ள உமுரியம் என்ற ஒரு கிராமம். ஏழு பிள்ளைகளில் நான்தான் மூத்தவன். என் முதல் தங்கை 13 வயதிலேயே இறந்துவிட்டாள். என் பெற்றோர் ஆங்கிலிக்கன் சர்ச்சை சேர்ந்தவர்கள். அப்பா ஒரு விவசாயி; அம்மா ஒரு சிறிய வியாபாரி. ஒரு டின் பாமாயில் வாங்குவதற்காக எங்கள் கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்திலிருந்த சந்தைகளுக்கு அம்மா நடந்தே சென்றுவிட்டு லேட்டாக வீடு திரும்புவார். பிறகு அந்த எண்ணெய்யை விற்பதற்கு, அடுத்த நாள் விடிந்தும் விடியாததுமாக புறப்பட்டு, ஏறக்குறைய 40 கிலோமீட்டர் தூரத்தில் ரயில்வே ஸ்டேஷன் இருந்த ஒரு ஊருக்கு நடந்தே போவார். அதில் லாபம் ஏதாவது கிடைத்தால்—சுமார் 15 அமெரிக்க சென்ட்டுகளுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும்—அந்தக் காசில் குடும்பத்துக்காக உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு அன்றே வீடு திரும்பிவிடுவார். 1950-ல் அம்மா சாகும்வரை, கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு நாள் தவறாமல் இதே வேலையைத்தான் செய்து வந்தார்.
எங்கள் கிராமத்தில் ஆங்கிலிக்கன் சர்ச்சுக்கு சொந்தமான ஒரு பள்ளி இருந்தது; அங்குதான் என் படிப்பை ஆரம்பித்தேன்; ஆனால் தொடக்கப் பள்ளியை முடிப்பதற்காக, ஏறக்குறைய 35 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு போர்டிங் ஹவுஸில் தங்க வேண்டியிருந்தது. என்னை மேலே படிக்க வைக்க அப்பா அம்மாவிடம் காசில்லை; அதனால் வேலை தேடும் படலத்தில் இறங்கினேன். முதன்முதலில், மேற்கு நைஜீரியாவிலுள்ள லாகோஸ் என்ற ஊரில், ரயில்வே காவலர் ஒருவரின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு, வடக்கு நைஜீரியாவிலுள்ள காடூனா என்ற நகரத்தில் அரசு ஊழியர் ஒருவருக்காக வேலை செய்தேன். பிற்பாடு, மத்திப-மேற்கு நைஜீரியாவிலுள்ள பெனின் என்ற நகரத்தில் வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக சேர்ந்தேன்; பின்னர், மரம் அறுக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்தேன். அங்கிருந்து 1953-ல், என் ஒன்றுவிட்ட சகோதரனோடு தங்குவதற்காக கேமரூனுக்கு பயணித்தேன்; அவன் எனக்கு ரப்பர் தோட்டத்தில் வேலை வாங்கிக் கொடுத்தான். மாதச் சம்பளம் கிட்டத்தட்ட 420 ரூபாய். இப்படி எனக்கு கிடைத்ததெல்லாம் கௌரவக் குறைச்சலான வேலைகள்தான், ஆனாலும் திருப்தியோடு இருந்தேன்—சாப்பிடுவதற்கு போதுமானது இருந்தவரை.
ஒரு ‘தரித்திரர்’ எனக்குத் தந்த செல்வம்
சில்வேனஸ் ஓகேமிரி என்ற ஒரு யெகோவாவின் சாட்சி என்னோடு வேலை பார்த்து வந்தார். புல் வெட்டும்போதும், ரப்பர் செடிகளைச் சுற்றி வைக்கோல் போடும்போதும் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனக்கு தெரிந்திருந்த பைபிள் விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசினார். அவர் சொல்வதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டதோடு சரி, வேறு எதையும் நான் அப்போதைக்கு செய்யவில்லை. அப்படி இருந்தும்கூட, யெகோவாவின் சாட்சிகளுடனுள்ள சகவாசத்தை என் ஒன்றுவிட்ட சகோதரன் எப்படியோ கண்டுபிடித்து, சாட்சிகளோடு நான் சேராதிருக்க தன்னால் ஆன மட்டும் என்னென்னவோ செய்து பார்த்தான், சொல்லியும் பார்த்தான்: “பென்ஜி, நீ அந்த ஓகேமிரியைப் போய் சந்திக்காதே. அவன் ஒரு யெகோவா ஆசாமி, ஒரு தரித்திரன். அவனோடு சேர்ரவங்க யாராயிருந்தாலும்சரி, அவங்களையும் கண்டிப்பா தரித்திரம் பிடிச்சுக்கும்” என்றெல்லாம் சொன்னான்.
நான் வேலை பார்த்துவந்த கம்பெனியில், இரத்தம் சிந்த பாடுபட வேண்டியிருந்ததால், தாக்குப்பிடிக்க முடியாமல் 1954-ன் ஆரம்பத்தில் வீடு திரும்பினேன். அந்தக் காலத்திலெல்லாம் ஆங்கிலிக்கன் சர்ச் ஒழுக்க விஷயங்களில் ரொம்பவும் கெடுபிடியாக இருந்தது. இதனால் சின்ன வயதிலிருந்தே ஒழுக்கக்கேட்டை அடியோடு வெறுக்க ஆரம்பித்தேன். என்றாலும், சீக்கிரத்திலேயே சர்ச் அங்கத்தினர்களுடைய மாய்மாலத்தைப் பார்த்து எனக்கு “சீ, சீ!” என்றாகிவிட்டது. ‘பைபிள் தராதரங்களை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்’ என அவர்கள் பெரிதாக தம்பட்டமடித்துக் கொண்டாலும், அவர்களுடைய வாழ்க்கை அதற்கு நேர்மாறாகத்தான் இருந்தது. (மத்தேயு 15:8) இதைக் குறித்து அப்பாவிடம் நான் திரும்பத் திரும்ப வாக்குவாதம் செய்தேன், இதனால் எங்களுடைய உறவில் பயங்கர விரிசல் ஏற்பட்டது. ஒரு இராத்திரி வீட்டை விட்டே வெளியேறினேன்.
ரயில்வே ஸ்டேஷன் கொண்ட ஓமோபா என்ற ஒரு சிறிய ஊரில் குடியேறினேன். அங்கு மறுபடியும் யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தேன். என் கிராமத்தை சேர்ந்த ப்ரிஸில்லா இஸியாச்சா என்ற சாட்சி, “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி” என்ற சிறு புத்தகத்தையும் அர்மகெதோனுக்கு பின்—கடவுளுடைய புதிய உலகம் என்ற சிறு புத்தகத்தையும் எனக்கு தந்தார்.a அவற்றை ஆசை ஆசையாக வாசித்து முடித்தேன்; இதுதான் சத்தியம் என்பதை கண்டுகொண்டேன். எங்கள் சர்ச்சில் நாங்கள் பைபிளை படிக்கவில்லை; மனித பாரம்பரியங்களுக்கே முக்கிய கவனம் செலுத்தினோம். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களில் பைபிள் வசனங்கள் தாராளமாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தன.
ஒரு மாதங்கூட ஆகவில்லை அதற்குள்ளாக, இஸியாச்சா தம்பதியினரிடம் அவர்களது சர்ச்சுக்கு எந்தக் கிழமையில் செல்கிறார்கள் என்று கேட்டேன். முதன்முறையாக அவர்களுடைய கூட்டத்திற்கு சென்றபோது, அங்கு நடந்தது எதுவுமே எனக்கு புரியவில்லை. அன்று எசேக்கியேல் தீர்க்கதரிசனப் புத்தகத்திலுள்ள ‘மாகோகின் கோகுவுடைய’ தாக்குதலைப் பற்றிய காவற்கோபுர கட்டுரை கலந்தாலோசிக்கப்பட்டது. (எசேக்கியேல் 38:1, 2) அதிலிருந்த பல வார்த்தைகள் எனக்கு புதிதாக இருந்தன. என்றாலும், அங்கு கிடைத்த அன்பான வரவேற்பில் உச்சி குளிர்ந்து போன நான் அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் கூட்டத்திற்கு செல்ல தீர்மானித்தேன். இரண்டாவது கூட்டத்தின்போது, பிரசங்க வேலையைப் பற்றி தெரிந்துகொண்டேன். அதனால் ப்ரிஸில்லாவிடம் எந்தக் கிழமை அவர்கள் வெளி ஊழியத்திற்கு செல்கிறார்கள் என்று கேட்டேன். மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, ஒரு சின்ன பைபிளை தூக்கிக்கொண்டு அவர்களோடு ஊழியத்திற்கு கிளம்பினேன். அப்போது என் கையில் பையும் இல்லை, பைபிள் பிரசுரங்களும் இல்லை. என்றாலும், நான் ஒரு ராஜ்ய பிரஸ்தாபியாகி, அந்த மாத இறுதியில் வெளி ஊழிய அறிக்கையும் செய்தேன்!
எனக்கு யாருமே பைபிள் படிப்பு நடத்தவில்லை; ஆனால் இஸியாச்சா தம்பதியை சந்திக்கப் போனபோதெல்லாம் பைபிள் வசனங்களிலிருந்து விசுவாசத்தை தூண்டுகிற வார்த்தைகளையும் உற்சாகத்தை கொடுக்கிற வார்த்தைகளையும் கற்றுக்கொண்டேன்; அதோடு சில பைபிள் பிரசுரங்களையும் வாங்கி வந்திருந்தேன். 1954-ம் ஆண்டு, டிசம்பர் 11 அன்று, ஆபா என்ற ஊரில் நடந்த மாவட்ட மாநாட்டின்போது, யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றேன். அந்த சமயத்தில், என் அப்பா வழி சொந்தக்காரர் ஒருவரோடு தங்கி, அவரிடமிருந்து வேலைக்கான பயிற்சியை பெற்று வந்தேன்; அவர் எனக்கு சாப்பாடு போடுவதையும் வேலையில் பயிற்சி அளிப்பதையும் நிறுத்தியே விட்டார்; அதுமட்டுமல்ல, அவருக்காக நான் செய்த அத்தனை வேலைகளுக்கும் சல்லிக் காசுகூட கொடுக்கவில்லை. இப்படியெல்லாம் அவர் நடந்துகொண்டபோதிலும், நான் ஆத்திரமடையவில்லை, அவரை கோபித்துக் கொள்ளவுமில்லை; கடவுளோடு எனக்கு ஒரு தனிப்பட்ட உறவு இருந்ததற்கு நன்றியுள்ளவனாகவே இருந்தேன். இது என் மனதிற்கு ஆறுதலையும் சமாதானத்தையும் தந்தது. அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் தக்க சமயத்தில் எனக்கு உதவ முன்வந்தார்கள். இஸியாச்சா தம்பதியினர் எனக்கு சாப்பாடு போட்டார்கள்; சின்னதாக ஒரு வியாபாரத்தை தொடங்குவதற்கு மற்றவர்கள் எனக்கு கைமாற்றாக பணம் கொடுத்து உதவினார்கள். 1955-ன் மத்திபத்தில், செகன்ட்-ஹான்ட் சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கினேன்; மார்ச் 1956-ல், ஒழுங்கான பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தேன். அதன் பின், சீக்கிரத்திலேயே என்னுடைய கடன்களையெல்லாம் அடைத்தேன். நான் செய்து வந்த வியாபாரத்தில் லாபம் கொஞ்சமாக கிடைத்தாலும் அதை வைத்துக்கொண்டு என்னை நானே பராமரித்துக்கொள்ள முடிந்தது. யெகோவா எனக்கு போதுமானவற்றைக் கொடுத்து வந்தார், திருப்தியடைந்தேன்.
தம்பி தங்கைகளை “திருடினேன்”
என் சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியவுடன், என் தம்பி தங்கைகளுக்கு ஆவிக்குரிய விதத்தில் எப்படியாவது உதவ வேண்டுமென்பது என்னுடைய முதல் குறியாக இருந்தது. அப்பாவுக்கு யெகோவாவின் சாட்சிகள் மீது தப்பபிப்பிராயங்கள் இருந்தன, அவர்களை ரொம்பவே சந்தேகப்பட்டார், அதனால் நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆவதை கடுமையாக எதிர்த்தார். அந்நிலையில், என் தம்பி தங்கைகள் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள எப்படி உதவுவது என்று யோசித்தேன். என் தம்பி எர்னெஸ்டுக்கு பண உதவியளிக்க நான் முன்வந்ததால், அவன் என்னோடு தங்குவதற்கு அப்பா அனுமதித்தார். எர்னெஸ்ட் விரைவிலேயே சத்தியத்தை மனதார ஏற்றுக்கொண்டு 1956-ல் முழுக்காட்டுதல் பெற்றான். அவன் இப்படி மாறியதால், அப்பாவின் எதிர்ப்பு இன்னும் தீவிரமானது. இருந்தாலும், ஏற்கெனவே திருமணமாகியிருந்த என் தங்கையும் அவள் கணவனும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். என் இரண்டாவது தங்கை ஃபெலிஷியா பள்ளி விடுமுறையில் என்னோடு தங்குவதற்கு ஏற்பாடு செய்தபோது, அப்பா தயங்கியபடிதான் அதற்கு ஒத்துக்கொண்டார். சீக்கிரத்தில், ஃபெலிஷியாவும் ஒரு யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றாள்.
1959-ல், என் மூன்றாவது தங்கையான பெர்னிஸை, தம்பி எர்னெஸ்ட் வீட்டில் தங்கும்படி ஏற்பாடு செய்வதற்காக வீட்டுக்கு போனேன். அந்த சமயத்தில்தான் அப்பா என்னை தாக்கினார், அவருடைய பிள்ளைகளை நான் திருடிக் கொண்டதாக குற்றம்சாட்டினார். யெகோவாவை சேவிக்க அவர்கள் தாங்களாகவே தீர்மானித்தார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. பெர்னிஸை என்னுடன் அனுப்பவே போவதில்லையென்று அப்பா சபதமிட்டார். ஆனால் யெகோவாவின் கை குறுகிப் போய்விடவில்லை, ஏனெனில் அடுத்த வருடமே பெர்னிஸ் தன் பள்ளி விடுமுறையின்போது எர்னெஸ்டுடன் தங்க வந்தாள். தன் அக்காமார்களைப் போலவே அவளும் சத்தியத்தை மனதார ஏற்றுக்கொண்டு முழுக்காட்டுதல் பெற்றாள்.
‘இரகசியத்தை கற்றுக்கொள்ளுதல்’
செப்டம்பர் 1957-ல், விசேஷ பயனிராக சேவை செய்ய தொடங்கினேன்; அதாவது ஒவ்வொரு மாதமும் சுமார் 150 மணிநேரம் பிரசங்க வேலையில் அர்ப்பணிக்கத் தொடங்கினேன். ஏச்சே மாவட்டத்திலிருந்த அக்பு-ன-ஆபுயா என்ற நகரத்தின் பரந்த பிராந்தியத்தில் நானும் என் பயனியர் கூட்டாளியான சன்டே இரோபேலாகியும் சேவை செய்தோம். அங்கிருந்தபோது நாங்கள் கலந்துகொண்ட முதல் வட்டார மாநாட்டில், எங்கள் தொகுதியிலிருந்து 13 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அதே பிராந்தியத்தில் இப்போது 20 சபைகள் இருப்பதை பார்க்கும்போது எங்களுக்கு அப்படியே மெய்சிலிர்த்துப் போகிறது!
1958-ல், கிரிஸ்டியானா அஸுயிக்கே என்ற ஒழுங்கான பயனியரை சந்தித்தேன்; அவள் ஆபா கிழக்கு சபையில் இருந்தாள். அவளுடைய பக்தி வைராக்கியத்தைக் கண்டு அதிசயித்தேன்; அதே வருடம் டிசம்பர் மாதத்தில் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். 1959-ன் ஆரம்பத்தில், நான் ஒரு பயணக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன்; சபை சபையாக சென்று சகோதரர்களை சந்தித்து அவர்களை பலப்படுத்தும் வேலையாக அது இருந்தது. அன்றிலிருந்து 1972 வரையாக, நானும் என் மனைவியும் கிழக்கு மற்றும் மத்திப-மேற்கு நைஜீரியாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளது எல்லா சபைகளையுமே சந்தித்தோம் என சொல்லலாம்.
ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு மூலையில் இருந்தது; அங்கெல்லாம் நாங்கள் முக்கியமாக சைக்கிளிலேயே போய்வந்தோம். பெரிய ஊர்களிலுள்ள சபைகளை சந்தித்தபோது, அடுத்த சபைக்கு செல்ல சகோதரர்கள் எங்களுக்கு டாக்ஸியை வாடகைக்குப் பிடித்து கொடுத்தார்கள். சில சமயம் நாங்கள் தங்கியிருந்த ரூம்கள் எப்படி இருந்தன தெரியுமா? கீழே பார்த்தால் மண் தரை, மேலே பார்த்தால் கூரை இல்லை. அதுமட்டுமல்ல, பனைமர கம்பங்களால் ஆன கட்டில்களில் படுத்து உறங்கினோம். சில கட்டில்களில் புல்லைப் பரப்பி அதன் மீது பாயை விரித்திருந்தார்கள்; மற்றவற்றில் அதுகூட இருக்கவில்லை. எங்களுக்கு எப்படிப்பட்ட உணவு கொடுக்கப்பட்டாலும், அது எவ்வளவாக இருந்தாலும் அது ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை. முன்பு கொஞ்சப் பொருட்களுடன் திருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டிருந்ததால், எங்களுக்கு கொடுக்கப்பட்ட எந்த உணவையும் நாங்கள் ரசித்து சாப்பிட்டோம், இதனால் எங்களை உபசரித்தவர்களும் சந்தோஷப்பட்டார்கள். அப்போதெல்லாம், சில நகரங்களில் மின்சார வசதியே கிடையாது, அதனால் நாங்கள் போகும் இடங்களுக்கு எப்போதும் அரிக்கன் விளக்கை கையோடு எடுத்துக்கொண்டு போனோம். இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும்கூட, நாங்கள் சபையாரோடு சந்தோஷமாக நேரத்தை கழித்த சமயங்கள் ஏராளம்.
“உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” என்ற அப்போஸ்தலன் பவுலுடைய அறிவுரை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை அந்த வருடங்களின்போது நாங்கள் புரிந்துகொண்டோம். (1 தீமோத்தேயு 6:8) பல கஷ்டங்களை அனுபவித்த பவுல், திருப்தியாக இருப்பதற்கு உதவும் ஒரு இரகசியத்தை கண்டுபிடித்தார். அது என்ன? அதை அவரே விளக்கினார்: “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எல்லாவற்றிலும் எல்லா சூழ்நிலைகளிலும் திருப்தியாகவும் பட்டினியாகவும் இருப்பது எப்படி, நிறைவாகவும் குறைவாகவும் இருப்பது எப்படி என்பதன் இரகசியத்தைக் கற்றுக்கொண்டேன்.” அதே இரகசியத்தை நாங்களும் கற்றுக்கொண்டோம். “என்னை பலப்படுத்துகிறவராலே [கடவுளாலே] எல்லாவற்றையும் செய்ய எனக்கு வல்லமையுண்டு” எனவும் பவுல் தொடர்ந்து சொன்னார். (பிலிப்பியர் 4:12, 13; NW) எங்கள் விஷயத்தில்கூட இது எவ்வளவு உண்மை! மனத்திருப்தியை நாங்கள் அனுபவித்தோம், கட்டியெழுப்பும் கிறிஸ்தவ காரியங்களில் முழுமையாக ஈடுபட்டோம், மனநிம்மதியைப் பெற்றோம்.
குடும்பமாக சபைகளுக்கு விஜயம் செய்தல்
1959-ன் கடைசியில், எங்கள் முதல் மகன் ஜோயெல் பிறந்தான்; 1962-ல் இரண்டாவது மகன், சாமுவேல் பிறந்தான். கிரிஸ்டியானாவும் நானும் தொடர்ந்து பயண வேலை செய்து வந்தோம்; பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு சபைகளை சந்திக்க சென்றோம். 1967-ல், நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் மூண்டது. சரமாரியான விமான தாக்குதல்கள் நடந்ததால் பள்ளிகளெல்லாம் மூடப்பட்டன. பயண வேலையில் என்னோடு வருவதற்கு முன்பு, என் மனைவி ஒரு ஆசிரியையாக வேலை பார்த்து வந்தாள்; எனவே போர் காலத்தில் வீட்டில் வைத்தே அவள் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தினாள். ஆறு வயதிற்குள்ளாக, சாமுவேல் எழுதப் படிக்க கற்றுக்கொண்டான். போர் முடிந்து அவன் பள்ளிக்கு சென்றபோது, அவனோடு படித்த மாணவர்களைவிட இரண்டு வகுப்பு மேலே பிரமோஷன் பெற்றான்.
பயண வேலையையும் செய்து கொண்டு பிள்ளைகளையும் வளர்ப்பது எவ்வளவு கஷ்டமென்று அந்த சமயத்தில் நாங்கள் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. என்றாலும், 1972-ல், நாங்கள் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டது எங்களுக்கு நன்மையாக அமைந்தது. இதனால் குடும்பத்தாரின் ஆவிக்குரிய தன்மைக்கு போதிய கவனம் செலுத்தும் விதத்தில் நிலையாக ஒரே இடத்தில் தங்க முடிந்தது. பிஞ்சு வயதிலிருந்தே எங்கள் மகன்களுக்கு தெய்வீக திருப்தி எவ்வளவு மதிப்புவாய்ந்தது என்பதை கற்றுக்கொடுத்தோம். 1973-ல், சாமுவேல் முழுக்காட்டுதல் பெற்றான்; அதே வருடத்தில் ஜோயெல் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தான். இப்போது எங்கள் இரு மகன்களும் அருமையான கிறிஸ்தவ பெண்களை மணந்துகொண்டு, தங்களுடைய பிள்ளைகளை சத்தியத்திலே வளர்த்து வருகிறார்கள்.
உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட அவலம்
உள்நாட்டுப் போர் மூண்டபோது, நான் என் குடும்பத்தோடு ஓனிச்சா என்ற நகரிலிருந்த சபையில் வட்டாரக் கண்காணியாக சேவித்துக் கொண்டிருந்தேன். பொருட்களை வாங்கிக் குவிப்பதும் அவற்றின் மீது நம்பிக்கை வைப்பதும் எவ்வளவு வீண் என்பதை அந்தப் போர் எங்கள் மனதில் இன்னும் ஆழமாக பதிய வைத்தது. உயிர் தப்பினால் போதுமென மக்கள் தங்கள் விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் வீதிகளில் அப்படியே போட்டுவிட்டு ஓடியதை பார்த்தேன்.
போர் தீவிரமடைந்தபோது, திடகாத்திரமாக இருக்கும் எல்லா ஆண்களும் இராணுவத்தில் சேரும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இராணுவத்தில் சேர மறுத்த ஏராளமான சகோதரர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். எங்களால் சுதந்திரமாக எங்கும் போய்வர முடியவில்லை. பஞ்சம் தலைவிரித்தாடியதால், நாடே சின்னாபின்னமானது. அரை கிலோ மரவள்ளிக்கிழங்கின் விலை 3 ரூபாயிலிருந்து 660 ரூபாயானது; ஒரு கப் உப்பு 380 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக ஏறியது. பால், வெண்ணெய், சர்க்கரையையெல்லாம் பார்ப்பதே குதிரைக்கொம்பாக இருந்தது. உயிர் பிழைப்பதற்கு நாங்கள் பப்பாளிக் காயை அரைத்து, அதில் கொஞ்சம் மரவள்ளிக்கிழங்கு மாவை கலந்து சாப்பிட்டோம். வெட்டுக்கிளிகளையும், மரவள்ளித் தோலையும், செம்பருத்தி இலைகளையும், யானைப் புல்லையும்—கண்ணில் பட்ட எல்லா இலைதழைகளையும் சாப்பிட்டோம். கனவில்கூட இறைச்சி வாங்க முடியாதளவு படுமோசமான நிலைமை இருந்ததால், பிள்ளைகள் சாப்பிடுவதற்காக உண்ணத்தக்க பல்லிகளை பிடித்துக் கொடுத்தேன். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் எங்களுக்கு தேவையானதை யெகோவா எப்போதும் அளித்து காத்துவந்தார்.
ஆனால், போரின் விளைவாக ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தைவிட ஆன்மீக பஞ்சமே அதிக அபாயகரமானதாக இருந்தது. அங்கிருந்த பெரும்பாலான சகோதரர்கள் போர் நடந்த பகுதியை விட்டு காட்டுக்குள்ளோ மற்ற கிராமங்களுக்கோ ஓடிப்போனார்கள்; போகிற வழியில் தங்களுடைய அநேக பைபிள் பிரசுரங்களை, ஏன், எல்லா பைபிள் பிரசுரங்களையும் தொலைத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, அரசாங்க துருப்புகள் முற்றுகையிட்டதால் பையஃப்ரா குடியரசுக்குள் புதிய பைபிள் பிரசுரங்கள் எதுவும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பெரும்பாலான சபைகள் கூட்டங்களை நடத்த முயன்றபோதிலும், கிளை அலுவலகத்தின் வழிநடத்துதல் அவர்களை வந்தடையாததால் சகோதரர்களின் ஆவிக்குரிய தன்மை மோசமடைந்தது.
ஆன்மீக பஞ்சத்தை சமாளித்தல்
பயணக் கண்காணிகள் ஒவ்வொரு சபையையும் தொடர்ந்து சந்திப்பதற்காக தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள். ஏராளமான சகோதரர்கள் தங்கள் வீடுவாசல்களை விட்டுவிட்டு ஓடிப்போயிருந்ததால், அவர்களைத் தேடும் படலத்தில் இறங்கினேன். ஒருசமயம், என்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் பாதுகாப்பான ஓர் இடத்தில் இருக்க செய்துவிட்டு, தன்னந்தனியாக ஆறு வாரங்களுக்கு வெவ்வேறு கிராமங்களுக்கும் காட்டுப் பகுதிகளுக்கும் சென்று அவர்களை தேடினேன்.
ஓகபூங்க்கா என்ற நகரத்திலிருந்த ஒரு சபைக்கு நான் சென்றிருந்தபோது, ஆக்கிக்வே மாவட்டத்திலுள்ள இஸூயோச்சி என்ற நகருக்கு அருகே யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேர் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதனால், உமுயக்கு என்ற கிராமத்திலிருந்த முந்திரி தோப்பில் அவர்கள் எல்லாரும் ஒன்றாக கூடிவரும்படி சொல்லி அனுப்பினேன். பிறகு, வயதான ஒரு சகோதரரும் நானும் கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் அங்கு சென்றோம்; பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 200 பேர் வந்திருந்தார்கள். இன்னொரு பயனியர் சகோதரி மூலம், லோமாரா காட்டுப் பகுதிக்குள் தஞ்சம் புகுந்திருந்த மேலும் சுமார் நூறு சாட்சிகளையும் கண்டுபிடித்தேன்.
போரினால் சின்னாபின்னமான ஓவிர்ரி கிராமத்தில் வாழ்ந்துவந்த தைரியமிக்க சகோதரர்களில் லாரன்ஸ் ஊக்வூயேக்பூ என்ற சகோதரரும் ஒருவர். ஆஹஜி என்ற இடத்தில் ஏராளமான சாட்சிகள் இருக்கிறார்கள் என்பதை அவர் என்னிடம் சொன்னார். அந்த இடத்தை இராணுவ வீரர்கள் ஆக்கிரமித்திருந்ததால் அந்த சகோதரர்களால் எங்கும் சுதந்திரமாக போய்வர முடியவில்லை. நானும் அந்த சகோதரரும் ராத்திரி வேளையிலே அங்கு சைக்கிளில் போனோம்; ஒரு சகோதரரின் குடியிருப்பு பகுதியில் கூடியிருந்த சுமார் 120 சாட்சிகளை சந்தித்தோம். மறைவிடங்களில் இருந்த இன்னும் சில சகோதரர்களை போய் சந்திப்பதற்கும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டோம்.
சிதறிப்போன மற்ற சகோதரர்களை கண்டுபிடிக்க ஐசக் வக்வு என்ற சகோதரர் தன் உயிரையே பணயம் வைத்து எனக்கு உதவினார். யேக்பூயேட்சே என்ற கிராமத்தில் கூடியிருந்த 150-க்கும் அதிகமான சாட்சிகளை சந்திப்பதற்கு ஆட்டமிரி ஆற்றை கடந்து செல்ல வேண்டியிருந்தது; எனவே அவர் என்னை படகில் அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஒரு சகோதரர் உணர்ச்சிப்பொங்க இப்படி சொன்னார்: “என்னோட வாழ்க்கையிலேயே இந்த நாள்தான் மிகச் சிறந்த நாள்! மறுபடியும் ஒரு வட்டாரக் கண்காணியை சந்திக்க உயிரோட இருப்பேன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல. போர் நடந்திட்டிருக்கிற இந்த சமயத்தில ஒருவேளை நான் செத்துப்போனாலும் பரவாயில்ல, இப்போ என் மனசு நிறைஞ்சிருக்கு.”
கட்டாயமாக இராணுவத்தில் சேர வேண்டிய அபாயத்தில் நான் இருந்தேன்; ஆனால் மறுபடியும் மறுபடியும் யெகோவாவின் கரம் என்னை பாதுகாத்ததை உணர்ந்தேன். ஒரு மதியவேளையின்போது, சுமார் 250 சகோதரர்களை சந்தித்துவிட்டு நான் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பியபோது, வழியில் சாலை அடைக்கப்பட்டிருந்த ஓரிடத்திற்கு அருகே இராணுவத்தினர் கும்பலாக வந்து என்னை நிறுத்தினார்கள். “நீ ஏன் இன்னும் இராணுவத்தில் சேரலை?” என என்னிடம் கேட்டார்கள். நான் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்கும் ஒரு மிஷனரி என்பதை விளக்கினேன். என்னை கைது செய்ய அவர்கள் தீர்மானத்துடன் இருந்ததை புரிந்துகொண்டேன். மனதிற்குள் ஒரு சின்ன ஜெபம் செய்தபின், அவர்களுடைய கமான்டரிடம், “தயவுசெஞ்சு என்னை விட்டுடுங்க” என்றேன். அதற்கு அவர், “நாங்க உன்னை விட்டுடனும்னா சொல்ற?” என்று திருப்பிக் கேட்டார்; அவர் இப்படி கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனே நான் “ஆமா, என்னை விட்டுடுங்க” என்றேன். அதற்கு, “சரி, நீ போகலாம்” என்றார். அங்கிருந்த மற்ற வீரர்கள் யாரும் வாயே திறக்கவில்லை.—சங்கீதம் 65:1, 2.
திருப்தி கூடுதலான ஆசிகளை தருகிறது
1970-ல் போர் முடிந்த பிறகும் தொடர்ந்து வட்டார வேலையில் ஈடுபட்டிருந்தேன். சபைகளை திரும்ப ஒழுங்கமைக்கும் வேலையில் உதவ முடிந்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். அதன் பின், கிரிஸ்டியானாவும் நானும் 1976 வரைக்கும் விசேஷ பயனியர்களாக சேவித்தோம், பிறகு மறுபடியும் நான் ஒரு வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். அதே வருடத்தின் மத்திபத்தில், மாவட்டக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். ஏழு வருடம் கழித்து, யெகோவாவின் சாட்சிகளது நைஜீரியா கிளை அலுவலகத்தில் சேவை செய்யும்படி எனக்கும் என் மனைவிக்கும் அழைப்பு வந்தது; தற்போது நாங்கள் இங்குதான் இருக்கிறோம். உள்நாட்டுப் போர் நடந்த சமயத்திலும் மற்ற நேரங்களிலும் நாங்கள் சந்தித்த சகோதர சகோதரிகளை—இன்னமும் யெகோவாவை உண்மையோடு சேவித்து வரும் சகோதர சகோதரிகளை—இந்தக் கிளை அலுவலகத்தில் மறுபடியும் பார்ப்பது எப்போதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இத்தனை வருடங்களாக, கிரிஸ்டியானா எனக்கு பக்கபலமாகவும் பற்றுமாறா துணைவியாகவும் இருந்திருக்கிறாள். 1978-லிருந்து அவள் உடல் உபாதைகளால் தொடர்ந்து அவதிப்படுகிறபோதிலும், அவளுடைய நம்பிக்கையான மனநிலையும் உறுதியும் என்னுடைய பொறுப்புகளில் நிலைத்திருக்க எனக்கு உதவியிருக்கிறது. ‘படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனை யெகோவா தாங்குவார்’ என்ற சங்கீதக்காரனுடைய வார்த்தைகள் எவ்வளவு உண்மையென்பதை நாங்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.—சங்கீதம் 41:3.
தேவராஜ்ய காரியங்களுக்கு நான் செலவிட்ட அந்த வருடங்களை எண்ணிப் பார்க்கும்போது, யெகோவா என் மீது பொழிந்திருந்த அருமையான ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு மனதார நன்றி சொல்ல தூண்டப்படுகிறேன். அவர் கொடுப்பதை வைத்துக்கொண்டு திருப்தியாக இருப்பதால் மிகுந்த சந்தோஷத்தை அடைந்திருக்கிறேன் என்று உண்மையிலேயே என்னால் சொல்ல முடியும். என் தம்பி தங்கைகள், என் பிள்ளைகள், அவர்களுடைய குடும்பங்கள் என எல்லாரும் என்னோடும் என் மனைவியோடும் சேர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்வதை காண்கிற சந்தோஷம் எனக்கு கிடைத்திருப்பதை ஈடிணையற்ற பாக்கியமாக கருதுகிறேன். ஆம், அர்த்தமுள்ள, வளமான ஒரு வாழ்க்கையை கொடுத்து யெகோவா என்னை திருப்திப்படுத்தியிருக்கிறார். என்னுடைய எந்த ஆசையும் இதுவரை நிறைவேறாமல் போனதே இல்லை.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. தற்போது அச்சில் இல்லை.
[பக்கம் 27-ன் பெட்டி]
சகோதரத்துவத்தை காக்க ஏற்ற சமயத்தில் கைகொடுத்த ஓர் ஏற்பாடு
1960-களின் மத்திபத்தில், நைஜீரியாவின் வடக்கிலும் கிழக்கிலும் இருந்த இனத்தொகுதிகளுக்கு இடையே கடும் வெறுப்பு நிலவியிருந்ததால் கலவரங்களும், போராட்டங்களும், அக்கிரமங்களும், இன வன்முறைகளும் வெடித்தன. இச்சண்டையில் நடுநிலை வகிக்க உறுதிபூண்டிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு இதனால் பெரும் கஷ்டங்கள் நேர்ந்தன. ஏறக்குறைய 20 யெகோவாவின் சாட்சிகள் கொல்லப்பட்டார்கள். பெரும்பாலோர் தங்கள் வீடு வாசல்களையெல்லாம் இழந்தார்கள்.
மே 30, 1967-ல், நைஜீரியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த அரசுகள் கூட்டரசாட்சியிலிருந்து விலகி, பையஃப்ரா குடியரசை அமைத்தன. கூட்டரசாட்சி தன் படைகளைத் திரட்டியது; பையஃப்ராவுக்குள் எதுவுமே போய்வர முடியாதபடி தடை விதித்தது. படுபயங்கர உள்நாட்டுப் போர் மூண்டது, இரத்த ஆறு ஓடியது.
பையஃப்ரா பகுதியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகித்ததால், தாக்குதலுக்கு ஆளானார்கள். பொதுமக்களின் வெறுப்பை தூண்டிவிடும் விதத்தில், அவர்களைப் பற்றி கோபாவேசமான விமர்சனங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்தன. என்றாலும், தம்முடைய ஊழியக்காரர்கள் ஆவிக்குரிய உணவை பெற்றுக்கொள்ளும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். எப்படி?
1968-ன் ஆரம்பத்தில், ஐரோப்பாவில் அரசு ஊழியர் ஒருவர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்; பையஃப்ராவிலிருந்த விமானத்தளத்தில் வேலை பார்க்க இன்னொருவர் நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட இந்த இருவரும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தனர். பையஃப்ராவையும் வெளி உலகத்தையும் இணைத்த அந்த ஒரேவொரு வழியின் எதிர் எதிர் முனைகளில் இவர்கள் வேலை பார்த்தனர். பையஃப்ராவுக்குள் ஆவிக்குரிய உணவை கொண்டு செல்லும் ஆபத்தான வேலையை செய்ய இவ்விரு சாட்சிகளும் முன்வந்தனர். அதோடு, துயர நிலையிலிருந்த சகோதரர்களுக்கு நிவாரணப் பொருட்களை அளிப்பதற்கும் உதவினர். 1970-ல் போர் முடியும் வரை இவ்விரு சகோதரர்களும் இந்த அதிமுக்கிய ஏற்பாடு தொடர்ந்து செயல்படும்படி பார்த்துக்கொண்டனர். “இப்படிப்பட்ட ஓர் ஏற்பாட்டை எந்த மனிதனாலும் திட்டமிட்டிருக்க முடியாது” என அவர்களில் ஒருவர் பிற்பாடு சொன்னார்.
[பக்கம் 23-ன் படம்]
1956-ல்
[பக்கம் 25-ன் படம்]
1965-ல், மகன்கள் ஜோயெல், சாமுவேலுடன்
[பக்கம் 26-ன் படம்]
குடும்பமாக யெகோவாவை சேவிப்பது எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்!
[பக்கம் 27-ன் படம்]
இன்று, கிரிஸ்டியானாவும் நானும் நைஜீரியா கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறோம்