வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
யாத்திராகமம் 4:24-26-ல் கூறப்பட்டிருக்கும் சம்பவம் என்ன, அப்போது யாருடைய உயிர் ஆபத்திலிருந்தது?
மோசே தன் மனைவி சிப்போராளோடும் கெர்சோம், எலியேசர் என்ற தன் இரு குமாரர்களோடும் எகிப்துக்கு செல்லும் வழியில் ஒரு சம்பவம் நடந்தது: “வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து [“அது அவருடைய பாதங்களில் படும்படி செய்து,” NW]: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள். பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள்.” (யாத்திராகமம் 4:20, 24-26) இந்தப் பகுதி பளிச்சென புரிந்துகொள்ள முடியாதபோதிலும், அதன் அர்த்தம் என்னவென உறுதியாக சொல்ல முடியாதபோதிலும், இந்த வசனங்களை பைபிள் ஓரளவுக்குத் தெளிவுபடுத்துகிறது.
யாருடைய உயிர் ஆபத்திலிருந்தது என அந்தப் பதிவு தெள்ளத் தெளிவாக சொல்வதில்லை. எனினும் அப்போது மோசேயின் உயிர் ஆபத்தில் இருக்கவில்லை என்ற நியாயமான முடிவுக்கு வரலாம்; ஏனெனில் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி அப்போதுதான் கடவுள் அவரை நியமித்திருந்தார். (யாத்திராகமம் 3:10) அப்படி அந்தப் பொறுப்பை நிறைவேற்றச் செல்லும் வழியில் கடவுளுடைய தூதன் மோசேயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த முனைந்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. எனவே அவருடைய குமாரர்களில் ஒருவருடைய உயிரே ஆபத்தில் இருந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் விருத்தசேதனம் குறித்து ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட சட்டம் இவ்வாறு குறிப்பிட்டது: “நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்.” (ஆதியாகமம் 17:14) மோசே தன் குமாரனுக்கு விருத்தசேதனம் செய்யாமல் அசட்டையாக இருந்ததாய் தெரிகிறது; எனவே அந்தப் பையனின் உயிருக்கு யெகோவாவின் தூதனால் ஆபத்து ஏற்படவிருந்தது.
காரியங்களை சரிப்படுத்துவதற்கு சிப்போராள் தன் குமாரனுடைய நுனித்தோலை அறுத்து எறிகையில் அது யாருடைய பாதங்களில் பட்டது? விருத்தசேதனம் செய்யப்படாத ஆண்பிள்ளையைக் கொல்லும்படி அதிகாரம் பெற்றிருந்தது யெகோவாவுடைய தூதனே. ஆகையால் அந்த தூதனின் பாதங்களிலேயே நுனித்தோல் படும்படி சிப்போராள் செய்திருக்கலாம்; உடன்படிக்கைக்கு இசைய தான் நடந்துகொண்டதற்கு அத்தாட்சியாக அதை அவரிடம் அவள் சமர்ப்பித்திருக்கலாம்.
“நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்” என சிப்போராள் சொன்னது அசாதாரணமாக தோன்றுகிறது. அது அவளைக் குறித்து என்ன சொல்கிறது? விருத்தசேதன உடன்படிக்கைப்படி செய்ய வேண்டியதை அவள் செய்ததன் மூலம் சிப்போராள் யெகோவாவுடன் ஓர் உடன்படிக்கை உறவுக்குள் வந்திருப்பதை ஒப்புக்கொண்டாள். ஓர் உடன்படிக்கை உறவில் யெகோவா கணவராகவும் மறுதரப்பினர் மனைவியாகவும் கருதப்பட்டதை பின்னான காலத்தில் இஸ்ரவேலருடன் செய்யப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கை காட்டியது. (எரேமியா 31:32) எனவே யெகோவாவை (அவருடைய பிரதிநிதியான தேவதூதன் மூலம்) “இரத்த சம்பந்தமான புருஷன்” என அழைக்கையில், அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு சிப்போராள் தன்னுடைய கீழ்ப்படிதலைக் காட்டியதாக தோன்றுகிறது. விருத்தசேதன உடன்படிக்கையில் யெகோவா தேவனை கணவருக்குரிய ஸ்தானத்திலும், தன்னை மனைவிக்குரிய ஸ்தானத்திலும் வைத்துக்கொண்டதாக தெரிகிறது. எப்படி இருந்தாலும், கடவுள் எதிர்பார்த்தவற்றை திட்டவட்டமாக செய்ததன் மூலம் அவள் தன் கீழ்ப்படிதலைக் காட்டியது ஆபத்திலிருந்த அவளுடைய குமாரனின் உயிரைப் பாதுகாத்தது.