விருத்தசேதனம்— ஆண்மை அடைந்துவிட்டதற்கு அடையாளமா?
உலகின் பல பாகங்களில் விருத்தசேதனம் ஆண் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகச் செய்யப்படுகிறது. சில பாகங்களில், ஆண்கள் வாழ்நாள் முழுவதும் விருத்தசேதனம் செய்துகொள்வதே இல்லை. யூதர்கள், முஸ்லிம்கள் போன்றோர் விருத்தசேதனத்தை ஆரோக்கியத்திற்காக அல்ல ஆனால், தங்கள் மதம் எதிர்பார்ப்பதால் செய்துகொள்கிறார்கள்.
என்றாலும், சில நாடுகளில் ஒரு பையன் பருவ வயதை அடையும்போது விருத்தசேதன சடங்கு செய்யப்படுகிறது. வழக்கமாக, அவன் பாரம்பரியங்களைக் கற்பிக்கிற ஒரு பள்ளிக்கு அனுப்பப்படுகிறான்; அங்கே அவனுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது, குணமாகும்வரை ஒருசில வாரங்களுக்கு மற்றவர்களிடமிருந்து பிரித்து தனியாக வைக்கப்படுகிறான். இந்தச் சமயத்தில் குறிப்பிட்ட சடங்குகளை அவன் பின்பற்ற வேண்டும்; ஓர் ஆணாக இருப்பதற்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறான். ஒரு பையன் பருவ வயதை அடைந்துவிட்டதைக் காட்டுகிற இது போன்ற சடங்குகள் அவசியமா? இந்த விஷயத்தில் கடவுளுடைய கண்ணோட்டத்தைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் இப்பொழுது ஆராயலாம்.—நீதிமொழிகள் 3:5, 6.
விருத்தசேதனம் —கடவுளுடைய கண்ணோட்டம்
பழங்காலத்தில் எகிப்தியர் போன்ற சிலர் விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்; அதாவது, ஆண் உறுப்பின் நுனித்தோலை நீக்கினார்கள். ஆபிரகாமோ இந்தக் கலாச்சாரத்தில் பிறக்கவில்லை. உண்மையில், தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியில் அவர் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவராகவே இருந்தார். மேலும், அவர் விருத்தசேதனம் செய்யாதிருந்தபோதும் வீரதீரமிக்க ஆண்மகனாகவே இருந்தார். ஆபிரகாம் தன்னிடமிருந்த கொஞ்ச ஆட்களைக் கூட்டிக்கொண்டு, தன் உறவினனாகிய லோத்துவைப் பிடித்துச் சென்ற நான்கு ராஜாக்களின் படைகளைத் தொடர்ந்துபோய் தோற்கடித்தார். (ஆதியாகமம் 14:8-16) சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு, ஆபிரகாமையும் அவருடைய வீட்டார் அனைவரையும் விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கடவுள் சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்?
நிச்சயமாகவே, ஆபிரகாம் இனிமேலும் சிறுவனாக இல்லாமல் ஆண்மை அடைந்துவிட்டார் என்பதற்கு ஓர் அடையாளமாக அது கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், அப்போது அவருக்கு 99 வயதாகிவிட்டது. (ஆதியாகமம் 17:1, 26, 27) அந்தக் கட்டளையைக் கொடுத்ததற்கான காரணத்தைக் கடவுளே இவ்வாறு சொன்னார்: “உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.” (ஆதியாகமம் 17:11) கடைசியில், “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்” ஆபிரகாம் மூலமாய் மிகப் பெரிய அளவில் ஆசீர்வதிக்கப்படும் என்ற கடவுளுடைய வாக்குறுதியும் இந்த உடன்படிக்கையில் உட்பட்டிருந்தது. (ஆதியாகமம் 12:2, 3) எனவே, கடவுளுடைய கண்ணோட்டத்தில் விருத்தசேதனத்துக்கும் ஆண்மை அடைவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒரு நபர் ஆபிரகாமின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர் என்பதைக் குறித்துக்காட்ட விருத்தசேதனம் செய்யப்பட்டது; இந்தச் சந்ததியார், ‘தேவனுடைய வாக்கியங்கள் ஒப்புவிக்கப்பட்ட விசேஷித்த மேன்மையைப்’ பெற்றார்கள்.—ரோமர் 3:1, 2.
காலப்போக்கில், ஆபிரகாமின் உண்மையான வித்துவான இயேசு கிறிஸ்துவை நிராகரித்ததன்மூலம் இஸ்ரவேலர் அந்த மேன்மைக்குத் தகுதியற்றவர்களானார்கள். எனவே, அவர்களை கடவுள் நிராகரித்துவிட்டார், அவர்களுடைய விருத்தசேதனம் கடவுளுடைய கண்ணோட்டத்தில் அர்த்தமற்றுப் போனது. என்றாலும், பொ.ச. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலர் விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கடவுள் இன்னும் எதிர்பார்க்கிறாரென விடாப்பிடியாய் சொன்னார்கள். (அப்போஸ்தலர் 11:2, 3; 15:5) அதனால்தான் அப்போஸ்தலன் பவுல், பல சபைகளில் “குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கு” தீத்துவை அனுப்பினார். ஒரு குறைவைப்பற்றி தீத்துவுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.”—தீத்து 1:5, 10, 11.
பவுலுடைய அறிவுரை இன்றும் பொருந்துகிறது. ஒருவருடைய பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டுமென ஓர் உண்மை கிறிஸ்தவர் ஆலோசனை சொல்வது நிச்சயமாகவே வேதவாக்கியங்களுக்கு முரணானதாய் இருக்கும். ஒரு கிறிஸ்தவர், ‘அந்நிய காரியங்களில் தலையிடுவதற்கு’ பதிலாக இதுபோன்ற தனிப்பட்ட தீர்மானங்கள் எடுப்பதை அந்தப் பெற்றோரிடமே விட்டுவிடலாம். (1 பேதுரு 4:15) மேலும், பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் நியாயப்பிரமாணத்தின்படியான விருத்தசேதனம்பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக. விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம். அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்.”—1 கொரிந்தியர் 7:18-20.
“விருத்தசேதன பள்ளிகளைப்”பற்றி என்ன சொல்லலாம்?
யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கிற கிறிஸ்தவப் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமெனத் தீர்மானித்தால் என்ன சொல்லலாம்? முன்பு விளக்கப்பட்டது போன்ற விருத்தசேதன பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்புவது பைபிளுக்கு இசைவாக இருக்குமா? இதுபோன்ற பள்ளிகளுக்கு அனுப்புவதில், நுனித்தோலை நீக்குவதைவிட அதிகம் உட்பட்டுள்ளது. அந்தப் பள்ளிக்குச் செல்கிற ஒருவர் பல வாரங்கள் அங்கே தங்கியிருக்கும்போது யெகோவாவை வணங்காத பிள்ளைகளோடும் ஆசிரியர்களோடும் நெருங்கிப்பழகுவார். இந்தப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் அநேக விஷயங்கள் பைபிளின் உயர்ந்த ஒழுக்கநெறிகளுக்கு முரணாக இருக்கின்றன. “ஆகாத சம்பாஷணைகள் [அதாவது, கூட்டுறவு] நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என்று பைபிள் எச்சரிக்கிறது.—1 கொரிந்தியர் 15:33.
மேலும், இந்தப் பள்ளிகளில் படிக்கும் காலத்தில் உடல்ரீதியான ஆபத்துகளையும் பெருமளவு சந்திக்க நேரிடுகிறது. 2003-ல், செளத் ஆப்பிரிக்கன் மெடிக்கல் ஜர்னல் இவ்வாறு எச்சரித்தது: “விருத்தசேதனத்தின் பயங்கரமான பாதிப்புகள் இந்த வருடமும்கூட கவனிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் ஏற்பட்ட மரணங்களும் அங்கச் சிதைவுகளும் உலகின் முக்கிய பத்திரிகைகள் எல்லாவற்றிலும் வெளியாகியிருந்தன. . . . சுருக்கமாகச் சொன்னால் இன்று இருக்கிற ‘விருத்தசேதன பள்ளிகள்’ போலியானவையாகவும் மரணத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன.”
விருத்தசேதனத்தில் ஆண்மைக்கே ஆபத்துவரும் சாத்தியமிருப்பதோடுகூட மிகப் பெரிய ஆன்மீகக் கேடும் விளைகிறது. விருத்தசேதன பள்ளிகளில் சொல்லித்தரப்படுகிற போதனைகளும் பழக்கவழக்கங்களும் ஆவியுலகத்தொடர்போடும், முன்னோர் வழிபாட்டோடும் நெருங்கியத் தொடர்புடையவை. உதாரணமாக, பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற விருத்தசேதனத்தின் தீங்கான விளைவுகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, இந்தப் பரிதாப சம்பவங்களுக்கு மாயமந்திரம் அல்லது இறந்துபோன முன்னோரின் கோபம்தான் காரணமென்று அநேகர் நம்புகிறார்கள். பொய் மதத்தோடு சம்பந்தப்பட்டவற்றைக் குறித்து பைபிள் இவ்வாறு கட்டளையிடுகிறது: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? . . . ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக் கொ[ள்வேன்].” (2 கொரிந்தியர் 6:14-18) இந்த அறிவுரையின்படி பார்த்தால், விருத்தசேதன பள்ளிகளுக்குத் தங்களுடைய பிள்ளைகளை அனுப்புவது ஞானமான செயலாய் இருக்காது.
ஒரு கிறிஸ்தவரை ஆண்மைமிக்கவராக ஆக்குவது எது?
ஒரு கிறிஸ்தவர் விருத்தசேதனம் செய்துகொள்வதோ செய்துகொள்ளாதிருப்பதோ அவர் ஆண்மை அடைந்துவிட்டதற்கு அடையாளமாய் இருக்க முடியாது. கடவுளுடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதுதான் உண்மை கிறிஸ்தவர்களுக்கு முக்கியமேயன்றி, ‘மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்படுவது’ அல்ல.—கலாத்தியர் 6:12.
என்றாலும், கடவுளுக்குமுன் நல்லவர்களாக இருப்பதற்கு ஒரு கிறிஸ்தவர் ‘இருதயத்தை விருத்தசேதனம் செய்ய வேண்டும்.’ (உபாகமம் 10:16; 30:6; மத்தேயு 5:8) இது கத்தியைப் பயன்படுத்திச் செய்யப்படுகிற விருத்தசேதனம் அல்ல; ஆனால், தவறான ஆசைகளையும் மாம்சத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒருவர் மற்றவர்களைவிட உயர்ந்தவராகிறார் என்பது போன்ற அகந்தையான எண்ணங்களையும் ஒதுக்கித் தள்ளுவதன்மூலம் செய்யப்படுகிற விருத்தசேதனம் ஆகும். ஒரு கிறிஸ்தவர் விருத்தசேதனம் செய்துகொண்டவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சோதனைகளைச் சகித்து, ‘விசுவாசத்திலே நிலைத்திருப்பதன்’ மூலம் ஆண்மைமிக்கவர் என்பதை நிரூபிக்கலாம்.—1 கொரிந்தியர் 16:13; யாக்கோபு 1:12.