நீங்கள் பரிசின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறீர்களா?
அந்த வியாதி கொஞ்சம் கொஞ்சமாக பரவுகிறது. ஆரம்பத்தில், ஒருவருடைய ஓரப் பார்வையை பாதிக்கிறது. சிகிச்சை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால், அது மையப் பார்வையையும் பாதித்துவிடும். கடைசியில், எதையுமே பார்க்க முடியாமல் கண்ணையே குருடாக்கிவிடும். அது என்ன? குளுக்கோமா—பார்வையிழப்புக்கு முக்கிய காரணி.
நமது கண் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக, அதே சமயத்தில் அறியாமலேயே இழப்பதைப் போலவே, இதைவிட மிகவும் அருமையான ஒருவித பார்வையை—ஆவிக்குரிய பார்வையை—நாம் இழந்துவிடக்கூடும். ஆகவே, நாம் கண்போல கருதும் ஆன்மீக விஷயங்களின் மீது கூர்ந்த கவனம் செலுத்துவது இன்றியமையாதது.
பரிசின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துதல்
நமது கண்களுக்குப் புலப்படாத ‘காணப்படாதவைகளில்’ ஒன்றுதான் மகத்தான பரிசாகிய நித்திய ஜீவன்; தமக்கு விசுவாசமாக இருப்போருக்கு யெகோவா இதை தருகிறார். (2 கொரிந்தியர் 4:18) கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு சேவை செய்வதற்கு முக்கிய காரணமே அவரை நேசிப்பதால்தான். (மத்தேயு 22:37) என்றாலும், பரிசின் மீது நாம் உன்னிப்பாக கவனம் செலுத்தும்படி யெகோவா விரும்புகிறார். ‘தம்மை [“ஊக்கமாக,” NW] தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கும்’ தாராள குணம்படைத்த தகப்பனாக அவரை நாம் நோக்கும்படி விரும்புகிறார். (எபிரெயர் 11:6) ஆகவே, கடவுளை உண்மையிலேயே அறிந்து அவரை நேசிக்கிறவர்கள் அவர் வாக்குறுதி அளித்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பொக்கிஷமாக கருதுகின்றனர், அவற்றின் நிறைவேற்றத்தை வாஞ்சையுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.—ரோமர் 8:19, 24, 25.
இந்தப் பத்திரிகை மற்றும் இதன் கூட்டுப் பத்திரிகையாகிய விழித்தெழு!-வின் வாசகர்கள் பலர், வரப்போகும் பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியைப் பற்றிய சித்திரங்களைப் பார்த்து ரசிக்கின்றனர். ஆனால் பரதீஸ் பூமி எப்படி இருக்குமென நமக்கு துல்லியமாக தெரியாது, இந்தப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் படங்களெல்லாம் ஏசாயா 11:6-9 போன்ற பைபிள் வசனங்களின் அடிப்படையில் தீட்டப்படும் ஓவியங்களே. என்றாலும், கிறிஸ்தவ பெண்மணி ஒருவர் இவ்வாறு கூறினார்: “காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் பரதீஸ் பூமியை சித்தரித்துக் காட்டும் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், ஒரு சுற்றுலா கையேட்டை ஆராய்வதைப் போல அவற்றை நான் கூர்ந்து ஆராய்கிறேன். நான் அந்த இடத்தில் இருப்பது போலவே கற்பனை செய்து பார்க்கிறேன், ஏனென்றால் கடவுளுடைய உரிய காலத்தில் இப்படிப்பட்ட ஓர் இடத்திலேயே வாழ்வதற்கு நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.”
அப்போஸ்தலன் பவுலும் இது போலத்தான் தமது ‘பரம அழைப்பைப்’ பற்றி உணர்ந்தார். தான் அதை ஏற்கெனவே பெற்றுவிட்டதைப் போல் எண்ணவில்லை, ஏனென்றால் முடிவுவரை அவர் நிலைத்திருக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் தொடர்ந்து ‘முன்னானவைகளை நாடினார்.’ (பிலிப்பியர் 3:13, 14) அதைப் போலவே, இயேசுவும் ‘தமக்குமுன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் பொருட்டு,’ வாதனையின் கழுமரத்தில் மரணத்தை சகித்தார்.—எபிரெயர் 12:2.
புதிய உலகிற்குள் போவோமா இல்லையா என எப்போதாவது நீங்கள் சந்தேகப்பட்டிருக்கிறீர்களா? மிதமிஞ்சிய நம்பிக்கை கொள்ளாமலிருப்பது நல்லதுதான், ஏனென்றால் ஜீவனுக்குரிய பரிசைப் பெறுவது நாம் கடைசி வரை உண்மையுடன் நிலைத்திருப்பதைப் பொறுத்திருக்கிறது. (மத்தேயு 24:13) இருந்தாலும், கடவுளுடைய தராதரங்களைப் பூர்த்தி செய்வதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் நாம் செய்ய முயன்றால், அந்தப் பரிசைப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம். ‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றே [யெகோவா] விரும்புகிறார்’ என்பதை மறந்துவிடாதீர்கள். (2 பேதுரு 3:9) நாம் யெகோவா மீது நம்பிக்கை வைத்தால், நமது இலக்கை அடைய அவர் நமக்கு உதவி செய்வார். அவரைப் பிரியப்படுத்துவதற்கு உள்ளப்பூர்வமாக முயற்சி செய்கிறவர்களை ஏதாவது காரணங்காட்டி தகுதியற்றவர்களாக்கிவிட மாட்டார்; அது அவருடைய இயல்புக்கு முரணானது.—சங்கீதம் 103:8-11; 130:3, 4; எசேக்கியேல் 18:32.
தமது ஜனங்களைக் குறித்து கடவுள் எவ்வாறு உணருகிறார் என்பதை அறிந்துகொள்வது நமக்கு நம்பிக்கை அளிக்கிறது; இந்நம்பிக்கை விசுவாசத்தைப் போன்றே இன்றியமையாத ஒரு பண்பு. (1 கொரிந்தியர் 13:13) பைபிளில் “நம்பிக்கை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ‘நல்லது வருமென்ற [ஊக்கமான] எதிர்பார்ப்பைக்’ குறிக்கிறது. இத்தகைய நம்பிக்கையை மனதிற்கெண்டே, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவு பரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.” (எபிரெயர் 6:11, 12) நாம் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்தால், நம்முடைய நம்பிக்கை நிறைவேறுமென்ற நிச்சயம் நமக்கு உண்டாகும் என்பதை கவனியுங்கள். உலகப்பிரகாரமான இலட்சியங்களைப் போல், இந்த நம்பிக்கை ‘ஏமாற்றம் தராது.’ (ரோமர் 5:5, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே, நாம் எவ்வாறு நம்முடைய நம்பிக்கையை பிரகாசமாகவும் தெளிவாகவும் வைத்துக்கொள்ளலாம்?
நமது ஆன்மீக பார்வையை தெளிவாக்குவது எப்படி
நமது கண்களால் ஒரே சமயத்தில் இரண்டு பொருட்கள் மீது பார்வையை ஒருமுகப்படுத்த முடியாது. நமது ஆன்மீக பார்வையைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. தற்போதைய ஒழுங்குமுறையின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவது நிச்சயமாகவே புதிய உலகைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியை நம்முடைய மனதில் கொஞ்சமாவது மங்கிப்போக செய்துவிடும். காலப்போக்கில், மங்கலாக, தெளிவின்றி தோன்றும் அந்த உருவம் அதன் கவர்ச்சியை இழந்து, பார்வையிலிருந்தே மறைந்துவிடும். அது எப்பேர்ப்பட்ட சோகமான முடிவு! (லூக்கா 21:34) ஆகவே, ‘கண்ணை தெளிவாக’ வைத்திருப்பது, அதாவது கடவுளுடைய ராஜ்யத்தின் மீதும் நித்திய ஜீவ பரிசின் மீதும் ஒருமுகப்படுத்தியிருப்பது எவ்வளவு முக்கியம்!—மத்தேயு 6:22.
கண்ணை தெளிவாக வைத்திருப்பது எப்பொழுதும் எளிதல்ல. ஏனெனில் பெரும்பாலும் அன்றாட பிரச்சினைகளுக்கே நம்முடைய கவனம் போய்விடுகிறது; அதோடு, கவனச்சிதறல்களும்—சோதனைகளும்கூட—நம் வாழ்க்கையில் வரலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், அவசியமான வேறெந்த வேலைகளையும் புறக்கணிக்காத அதே சமயத்தில், ராஜ்யத்தின் மீதும் புதிய பூமியைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதிகள் மீதும் கவனத்தை ஒருமுகப்படுத்துவது எப்படி? மூன்று வழிகளை இப்பொழுது நாம் ஆராயலாம்.
கடவுளுடைய வார்த்தையை தினமும் படியுங்கள். தினமும் பைபிள் வாசிப்பதும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களைப் படிப்பதும் ஆன்மீக காரியங்களின் மீது நம்முடைய மனதை ஊன்றவைக்க உதவி புரிகின்றன. உண்மைதான், பல ஆண்டுகளாக கடவுளுடைய வார்த்தையை நாம் படித்து வந்திருக்கலாம், ஆனால் நம்முடைய சொல்லர்த்தமான ஜீவனைக் காக்க தொடர்ந்து சரீர உணவை உட்கொள்ள வேண்டியதைப் போலவே நம் ஆன்மீக ஜீவனைக் காக்க ஆவிக்குரிய உணவை உட்கொள்ள வேண்டும். இதற்காகவே நாம் தொடர்ந்து கடவுளுடைய வார்த்தையைப் படிக்க வேண்டும். கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கான தடவை நாம் சாப்பிட்டு விட்டதால் இனிமேல் சாப்பிட வேண்டாமென நாம் நிறுத்திவிடுவதில்லை. ஆகவே நாம் பைபிளுடன் எவ்வளவுதான் நன்றாக பரிச்சயமானவர்களாக இருந்தாலும், நமது நம்பிக்கையை பிரகாசமாகவும் விசுவாசத்தை பலமாகவும் அன்பை ஆழமாகவும் வைத்துக்கொள்வதற்கு அதிலிருந்து ஆன்மீக ஊட்டச்சத்தைத் தொடர்ந்து பெற வேண்டும்.—சங்கீதம் 1:1-3.
கடவுளுடைய வார்த்தையை நன்றியுடன் தியானியுங்கள். ஏன் தியானம் இன்றியமையாதது? இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, நாம் வாசிப்பதை கிரகித்துக்கொள்வதற்கும் அதன் மீது நமது ஆழ்ந்த நன்றியுணர்வை வளர்த்துக் கொள்வதற்கும் தியானம் உதவுகிறது. இரண்டாவதாக, யெகோவாவையும் அவருடைய மகத்தான செயல்களையும், நமக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையையும் மறந்துவிடாதிருக்க தியானிப்பது உதவுகிறது. உதாரணத்திற்கு: மோசேயுடன் எகிப்தை விட்டுவந்த இஸ்ரவேலர் யெகோவாவின் வியத்தகு வல்லமையை கண்ணாரக் கண்டார்கள். சுதந்தரத்தைப் பெற கடவுள் தங்களை வழிநடத்திச் சென்றபோது அவருடைய அன்பான பாதுகாப்பை உணர்ந்தார்கள். என்றாலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லும் வழியில் வனாந்தரத்தில் கால் வைத்தவுடனேயே முறுமுறுக்க ஆரம்பித்து, விசுவாசத்தில் மிகவும் பலவீனமாக இருந்ததை வெளிப்படுத்தினார்கள். (சங்கீதம் 78:11-17) அவர்களுக்கிருந்த பிரச்சினை என்ன?
அவர்கள் தங்களுடைய கவனத்தை யெகோவாவிடமிருந்தும் அவர்களுக்கு முன் வைக்கப்பட்டிருந்த அருமையான நம்பிக்கையிடமிருந்தும் திருப்பி, உடனடியாக கிடைத்த சௌகரியங்களின் மீதும் மாம்சப்பிரகாரமான காரியங்களின் மீதும் வைத்தார்கள். அற்புதமான அடையாளங்களையும் அதிசயங்களையும் கண்ணார கண்டபோதிலும், இஸ்ரவேலரில் பெரும்பாலோர் உண்மையற்றவர்களாகி முறுமுறுக்கிறவர்களாய் மாறினார்கள். ‘சீக்கிரமாய் யெகோவாவின் கிரியைகளை மறந்தார்கள்’ என சங்கீதம் 106:13 கூறுகிறது. மன்னிக்க முடியாத இத்தகைய அசட்டை மனப்பான்மையால் அந்த சந்ததியார் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய முடியாமல் போனார்கள்.
ஆகவே, பைபிளையோ பைபிள் படிப்பு புத்தகங்களையோ வாசிக்கும்போது, நீங்கள் வாசிப்பதன் பேரில் தியானிப்பதற்கு நேரம் செலவிடுங்கள். இவ்வாறு தியானிப்பது உங்களுடைய ஆன்மீக ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. உதாரணமாக, 106-ம் சங்கீதத்தை வாசிக்கும்போது, யெகோவாவின் பண்புகளைப் பற்றி தியானியுங்கள். இஸ்ரவேலரிடம் அவர் எவ்வளவு பொறுமையையும் இரக்கத்தையும் காண்பித்தார் என்பதை கவனியுங்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அடைய அவர்களுக்கு உதவ தம்மால் இயன்ற அனைத்தையும் எப்படி செய்தார் என்பதை பாருங்கள். அவர்கள் தொடர்ந்து அவருக்கு விரோதமாக கலகம் செய்ததை கவனியுங்கள். உணர்ச்சி ரீதியில் மழுங்கிப்போன நன்றிகெட்ட அந்த ஜனங்களால் யெகோவாவின் பொறுமையும் இரக்கமும் அதன் எல்லைக்கே சென்றபோது அவருக்கு ஏற்பட்ட கவலையையும் வேதனையையும் உணருங்கள். அதோடு, நீதிக்காக பினேகாஸ் உறுதியான, தைரியமான நடவடிக்கை எடுத்ததை விவரிக்கும் 30-ம் 31-ம் வசனத்தை தியானிக்கும்போது, தமக்கு விசுவாசமுள்ள ஜனங்களை யெகோவா மறப்பதில்லை, அபரிமிதமாக பலனளிக்கிறார் என்ற உறுதி நமக்கு கிடைக்கிறது.
பைபிள் நியமங்களை உங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். நாம் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்கும்போது, யெகோவாவின் அறிவுரை பலன்தருவதை நமக்கு நாமே உணரலாம். நீதிமொழிகள் 3:5, 6 இவ்வாறு சொல்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” ஒழுக்கக்கேடான வழிகளில் சென்றதால் அநேகர் தங்களுக்குத் தாங்களே மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் உடல் ரீதியிலும் தீமைகளை வருவித்திருப்பதை சிந்தித்துப் பாருங்கள். தற்காலிக இன்பங்களில் லயித்திருப்பதன் மூலம் இத்தகைய ஆட்கள் கடைசியில் வருஷக்கணக்காக—காலம்பூராவும்கூட—வேதனையை அனுபவிக்கிறார்கள். மாறாக, “இடுக்கமான வாசல்வழியாய்” நடப்பவர்களோ புதிய உலக வாழ்க்கையை இப்பொழுதே சிறியளவில் ருசித்துப் பார்க்கிறார்கள், இது ஜீவனுக்கான பாதையில் தொடர்ந்து செல்ல அவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.—மத்தேயு 7:13, 14; சங்கீதம் 34:8.
பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது சவாலாக இருக்கலாம். சில சமயங்களில், சோதனைமிக்க காலங்களில் வேதப்பூர்வமற்ற தீர்வே உடனடி நிவாரணமாக தோன்றலாம். உதாரணமாக, பண நெருக்கடி ஏற்படும் சமயத்தில், ராஜ்ய அக்கறைகளை இரண்டாம் பட்சத்தில் தள்ளிவிடும் தூண்டுதல் ஏற்படலாம். என்றாலும், விசுவாசத்துடன் செயல்பட்டு ஆன்மீக காரியங்கள் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறவர்களுக்கு பின்வரும் உறுதியளிக்கப்படுகிறது: ‘தேவனுக்கு முன்பாக பயந்திருப்பவர்கள் [முடிவில்] நன்றாயிருப்பார்கள்.’ (பிரசங்கி 8:12) சில சமயங்களில் கிறிஸ்தவர் ஒருவர் ‘ஓவர்டைம்’ செய்ய வேண்டியிருக்கலாம், ஆனால் ஆன்மீக காரியங்களைப் புறக்கணித்து, அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காத ஏசாவைப் போல அவர் ஒருபோதும் ஆகமாட்டார்.—ஆதியாகமம் 25:34; எபிரெயர் 12:16.
கிறிஸ்தவர்களாக நமக்கிருக்கும் பொறுப்புகளை இயேசு தெளிவாக விளக்கினார். ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் நாம் தேட’ வேண்டும். (மத்தேயு 6:33) அப்படி செய்தால், பொருளாதார விதத்தில் நமக்குத் தேவையானதைக் கொடுப்பதன் மூலம் தகப்பனைப் போன்ற அன்பை யெகோவா மெய்ப்பித்துக் காட்டுவார். அவர் நம்மை கவனித்துக் கொள்வதன் மூலம் நமக்குத் தேவையானதை தருவதால் பொருளாதார காரியங்களுக்காக நாம் கவலைப்பட்டு பாரமடைவதை அவர் விரும்புவதில்லை. இத்தகைய மிதமிஞ்சிய கவலை ஆன்மீக ‘குளுக்கோமா’வைப் போல இருக்கலாம்—கவனிக்காமல் விட்டுவிட்டால், பொருளாதார காரியங்களுக்கு மட்டுமே நம்முடைய பார்வையை ஒருமுகப்படுத்த வைத்து, கடைசியில் நம்மை ஆன்மீக ரீதியில் குருடாக்கிவிடலாம். அந்த நிலைமையிலேயே நாம் தொடர்ந்து உழன்று கொண்டிருந்தால், யெகோவாவின் நாள் நம் மீது “ஒரு கண்ணியைப் போல” வந்துவிடும். அது எப்பேர்ப்பட்ட துயர முடிவாக இருக்கும்!—லூக்கா 21:34-36.
யோசுவாவைப் போல கவனத்தை எப்போதும் ஒருமுகப்படுத்தியிருங்கள்
நமது மகிமையான ராஜ்ய நம்பிக்கையின் மீது கவனத்தை நன்கு ஒருமுகப்படுத்திக்கொண்டு, மற்ற பொறுப்புகளை அதற்குரிய இடத்தில் வைத்திருப்போமாக. படிப்பு, தியானம், பைபிள் நியமங்களை கடைப்பிடித்தல் போன்ற வழக்கமான காரியங்களில் தொடர்ந்து நிலைத்திருப்பதன் மூலம் யோசுவாவைப் போல நமது நம்பிக்கையில் நிலைத்திருக்க முடியும். இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்திச் சென்றபின், அவர் இவ்வாறு கூறினார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப் போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப் போகவில்லை.”—யோசுவா 23:14.
ராஜ்ய நம்பிக்கை உங்களை உயிர்ப்பூட்டுவதாக; அதை உங்களுடைய சிந்தைகளிலும் உணர்ச்சிகளிலும் தீர்மானங்களிலும் செயல்களிலும் பிரதிபலிக்கையில், அது உங்களை மகிழ்ச்சியடையச் செய்வதாக.—நீதிமொழிகள் 15:15; ரோமர் 12:12.
[பக்கம் 21-ன் படம்]
புதிய உலகிற்குள் போவாமா இல்லையா என எப்பொழுதாவது சந்தேகப்பட்டிருக்கிறீர்களா?
[பக்கம் 22-ன் படம்]
தியானிப்பது பைபிள் படிப்பின் இன்றியமையாத அம்சம்
[பக்கம் 23-ன் படங்கள்]
தொடர்ந்து ராஜ்ய அக்கறைகளின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்