கடவுளுடைய சித்தம் செய்யப்பட்டு வருகிறதா?
“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:10.
பெற்றெடுத்த நான்கு பிள்ளைகளும் கண்ணெதிரேயே கருகி சாகும் கோரக் காட்சியைக் கண்டு ஹூலியோவும் கிறிஸ்டீனாவும் துடியாய் துடித்தார்கள். குடித்துவிட்டு வண்டி ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன் அவர்கள் நிறுத்தியிருந்த கார் மீது மோதியதால் அது வெடித்து அப்படியே தீ பிழம்பாக எரிந்து கொண்டிருந்தது. ஒன்பது வயது நிரம்பிய மார்கோஸ் என்ற ஐந்தாவது பையன் மட்டும் எப்படியோ உயிர் தப்பினான், ஆனால் தீ அவனை உருத்தெரியாத அளவுக்கு பொசுக்கிவிட்டது. அவனுடைய அப்பா வேதனையில் அப்படியே துவண்டுவிட்டார். ஒருவழியாக தன்னை தேற்றிக்கொண்டு, “இதுதான் கடவுளுடைய சித்தம், நல்லதோ கெட்டதோ அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என குடும்பத்தாரிடம் சொன்னார்.
இதுபோன்ற சோக சம்பவம் நிகழும்போது, இப்படித்தான் பலர் பிரதிபலிக்கிறார்கள். ‘கடவுளுக்கு எல்லா சக்தியும், நம் மீது அக்கறையும்கூட இருக்கிறது என்றால், நடந்ததெல்லாம் ஒரு விதத்தில் நம்முடைய நன்மைக்காகத்தான் இருக்க வேண்டும். இதைப் புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டமாக இருந்தாலும்கூட அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என அவர்கள் விவாதிக்கிறார்கள். இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
மேலே மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள கர்த்தருடைய ஜெபத்திலுள்ள வார்த்தைகளை அடிப்படையாக வைத்தே, நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் கடவுளுடைய சித்தம்தான் என சிலர் கருதுகிறார்கள். “கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்பட்டு வருகிறதுதானே? அப்படியானால், ‘உம்முடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதாக’ என ஜெபிக்கும்போது, பூமியில் நடக்கிற காரியங்களெல்லாம் கடவுளுடைய சித்தமென்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்?” என அவர்கள் நியாயம் காட்டுகிறார்கள்.
ஆனால் இந்தக் கருத்தைக் குறித்து பலர் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் மனிதர் மீது கடவுள் உணர்ச்சியற்றவராக இருப்பதை அது அர்த்தப்படுத்துமென நினைக்கிறார்கள். ‘பழிபாவம் அறியாத மக்களின் வாழ்க்கையில் கொடூரங்கள் நிகழ்வதை அனுமதிப்பதற்கு அன்புள்ள கடவுள் எப்படி விரும்புவார்? துயரங்களிலிருந்து நாம் ஏதாவது பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென கடவுள் விரும்பினால், அப்படியென்ன பாடமாக அது இருந்துவிடப்போகிறது?’ என்றெல்லாம் அவர்கள் கேட்கிறார்கள். ஒருவேளை நீங்களும் இப்படியே நினைக்கலாம்.
இதன் சம்பந்தமாக இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு என்ற சீஷன் இவ்வாறு எழுதினார்: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” (யாக்கோபு 1:13) நடக்கிற கெட்ட காரியங்களுக்கெல்லாம் கடவுள் காரணர் அல்லர். ஆகவே, இன்றைக்கு உலகத்தில் நடக்கிற எல்லா காரியங்களுமே கடவுளுடைய சித்தம் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. சொல்லப்போனால் மனிதனுடைய சித்தம், தேசங்களின் சித்தம், பிசாசின் சித்தம் ஆகியவையெல்லாம் இருப்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. (யோவான் 1:13; 2 தீமோத்தேயு 2:26; 1 பேதுரு 4:3) ஆகவே, ஹூலியோ மற்றும் கிறிஸ்டீனா குடும்பத்திற்கு ஏற்பட்டது அன்புள்ள பரலோகத் தகப்பனுடைய சித்தமாக இருக்க முடியாது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
அப்படியானால், ‘உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக’ என்று சீஷர்களிடம் ஜெபிக்க கற்றுக் கொடுத்தபோது உண்மையில் இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? வெறுமனே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கடவுள் தலையிடுவதற்கு வேண்டிக்கொள்ளும்படி கற்றுக்கொடுத்தாரா, அல்லது இன்னும் மிக முக்கியமான காரியத்திற்காக, மேம்பட்ட ஒரு காரியத்திற்காக, நாம் எல்லாரும் நம்பிக்கை வைக்கத்தக்க ஒரு மாற்றத்திற்காக ஜெபிக்கும்படி கற்றுக்கொடுத்தாரா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் இப்பொழுது ஆராயலாம்.
[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]
கார்: Dominique Faget-STF/AFP/Getty Images; குழந்தை: FAO photo/B. Imevbore