கடவுளுடைய மக்கள் தயவை நேசிக்க வேண்டும்
“நியாயம் செய்து, தயவை நேசித்து, உன் தேவனோடுகூட அடக்கமாய் நடப்பதை அல்லாமல் வேறு எதை யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்?”—மீகா 6:8, NW
1, 2. (அ) தம்முடைய மக்கள் பிறரிடம் தயவு காட்ட வேண்டுமென யெகோவா எதிர்பார்ப்பதைப் பற்றி நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை? (ஆ) தயவு காட்டுவதைக் குறித்து என்னென்ன கேள்விகளை நாம் சிந்தித்துப் பார்ப்பது தகும்?
யெகோவா தயவு காட்டும் கடவுள். (ரோமர் 2:4; 11:22) முதல் மனிதத் தம்பதியான ஆதாமும் ஏவாளும் அவர் காட்டிய தயவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருந்திருப்பார்கள்! ஏதேன் தோட்டத்தில், கடவுளின் தயவுக்கு அத்தாட்சியாக படைப்புகள் அவர்களை சூழ்ந்திருந்தன; அந்தப் படைப்புகளை அவர்களால் நன்கு அனுபவிக்கவும் முடிந்தது. கடவுள் அவர்களிடம் மட்டுமல்ல, இன்றுவரை எல்லாரிடத்திலும், ஏன், நன்றிகெட்ட பொல்லாத ஜனங்களிடமும்கூட தயவு காட்டி வந்திருக்கிறார்.
2 கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், தெய்வீக குணங்களை மனிதர்களால் பிரதிபலிக்க முடியும். (ஆதியாகமம் 1:26) ஆகவே, நாம் பிறரிடம் தயவு காட்ட வேண்டுமென யெகோவா எதிர்பார்ப்பதில் ஆச்சரியமே இல்லை. மீகா 6:8-ல் சொல்லப்பட்டுள்ளபடி, கடவுளுடைய மக்கள் கண்டிப்பாக ‘தயவை நேசிக்க’ வேண்டும். ஆனால், தயவு என்றால் என்ன? மற்ற தெய்வீக குணங்களோடு அது எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது? தயவு காட்டும் இயல்பு மனிதர்களுக்கு இருந்தபோதிலும், இந்த உலகம் ஏன் இப்படியொரு கொடூரமான, அன்பற்ற இடமாக இருக்கிறது? கிறிஸ்தவர்களான நாம் மற்றவர்களோடு பழகும்போது ஏன் தயவு காட்ட கடும் முயற்சி எடுக்க வேண்டும்?
தயவு என்றால் என்ன?
3. தயவை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்?
3 மற்றவர்களுடைய நலனில் உள்ளார்ந்த அக்கறை காட்டும்போது தயவு என்ற குணம் வெளிப்படுகிறது. உதவி செய்வதன் மூலமும் அன்பான வார்த்தைகளை பேசுவதன் மூலமும் தயவு காண்பிக்கப்படுகிறது. தயவோடு நடந்துகொள்வதென்றால், எந்தத் தீங்கும் செய்வதற்கு மாறாக, நன்மை செய்வதையே அர்த்தப்படுத்துகிறது. தயவுள்ள ஒரு நபர் அன்போடு பழகுபவராகவும், மென்மையானவராகவும், அனுதாபமிக்கவராகவும், கருணையுள்ளவராகவும் இருக்கிறார். மற்றவர்களை தாராள மனதோடும், கரிசனையோடும் நடத்துகிறார். “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்”கொள்ளுங்கள் என அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களை அறிவுறுத்தினார். (கொலோசெயர் 3:12) அப்படியானால், மெய்க் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தரித்திருக்கிற அடையாளப்பூர்வ உடையில் தயவு என்ற குணமும் இழையோடுகிறது.
4. யெகோவா எப்படி மனிதவர்க்கத்திடம் முதலில் தயவு காட்டியிருக்கிறார்?
4 யெகோவா தேவனே முதலில் நம்மிடம் தயவு காட்டியிருக்கிறார். பவுல் சொல்கிறபடி, “நமது மீட்பராகிய தேவனுடைய தயவும் அன்பும் பிரசன்னமானபோது . . . நம்மை உயிர்ப்பிக்கிற ஸ்நானத்தினாலும், நம்மை புதுப்பிக்கிற பரிசுத்த ஆவியினாலும் நம்மை இரட்சித்தார்.” (தீத்து 3:4, 5, NW) கிறிஸ்துவுடைய கிரய பலியின் மதிப்பை பயன்படுத்தி, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை இயேசுவின் இரத்தத்தினால் கடவுள் ‘ஸ்நானம் செய்கிறார்,’ அதாவது தூய்மையாக்குகிறார். அவர்கள் பரிசுத்த ஆவியினாலும் புதுப்பிக்கப்பட்டு, அந்த ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கடவுளுடைய குமாரர்களாக ‘புது சிருஷ்டியாகிறார்கள்.’ (2 கொரிந்தியர் 5:17) அதுமட்டுமல்ல, “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்”திருக்கிற ‘திரள் கூட்டத்தார்’ மீதுங்கூட கடவுள் தமது தயவையும் அன்பையும் பொழிகிறார்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; 1 யோவான் 2:1, 2.
5. கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறவர்கள் ஏன் தயவு காண்பிக்க வேண்டும்?
5 கடவுளுடைய பரிசுத்த ஆவியின், அதாவது செயல் நடப்பிக்கும் சக்தியின் கனியில் தயவும் ஓர் அம்சமாகும். “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” என பவுல் சொன்னார். (கலாத்தியர் 5:22, 23) அப்படியானால், கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறவர்கள் மற்றவர்களுக்கு தயவு காண்பிப்பவர்களாக அல்லவா இருக்க வேண்டும்?
மெய்யான தயவு ஒரு பலவீனமல்ல
6. தயவு காண்பிப்பது எப்போது ஒரு பலவீனமாகிறது, ஏன்?
6 தயவு காண்பிப்பது ஒரு பலவீனமென்று சிலர் கருதுகிறார்கள். ஒரு நபர் கடுமையாக, ஏன், சில நேரங்களில் கடுகடுப்பாகக்கூட நடந்துகொள்ள வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள்; அப்போதுதான் தாங்கள் பலம் படைத்தவர்களென்று மற்றவர்களுக்கு தெரிய வருமென நினைக்கிறார்கள். ஆனால், மெய்யான தயவை காட்டுவதற்கும் தவறான தயவை காட்டாதிருப்பதற்கும்தான் உண்மையில் அதிக பலம் தேவைப்படுகிறது. மெய்யான தயவு கடவுளுடைய ஆவியின் கனியில் ஒரு பாகமாக இருப்பதால், அது தவறான நடத்தைக்கு இணங்கிப்போகிற பலவீன மனப்பான்மையாக இருக்க முடியாது. மறுபட்சத்தில், தவறான தயவுதான் பலவீனமானது, ஏனெனில் அது தீய காரியங்களை கண்டுங்காணாமல் அப்படியே விட்டுவிடும்படி செய்கிறது.
7. (அ) ஏலி எவ்வாறு கண்டிப்பற்றவராக இருந்தார்? (ஆ) மூப்பர்கள் தவறான தயவை காட்டிவிடாதபடி ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
7 உதாரணத்திற்கு, இஸ்ரவேலின் பிரதான ஆசாரியராக இருந்த ஏலியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியர்களாக முன்னின்று செயல்பட்ட தன் மகன்களான ஓப்னியையும் பினெகாசையும் அவர் சரியாக கண்டிக்காமல் விட்டுவிட்டார். செலுத்தப்படும் பலியிலிருந்து ஒரு பாகம் அவர்களுக்கு போய்ச் சேர வேண்டுமென கடவுளுடைய சட்டம் சொல்லியிருந்தது; அதில் திருப்தியடையாமல், அவர்கள் ஒரு வேலைக்காரனை அனுப்பி, பலி செலுத்துகிறவரிடமிருந்து பச்சை இறைச்சியை—அதன் கொழுப்பை பலிபீடத்தில் தகனிப்பதற்கு முன்—பலவந்தமாக பெற்றுக் கொண்டார்கள். அதுமட்டுமல்ல, ஆசரிப்புக் கூடார வாசலில் சேவை செய்துவந்த பெண்களோடு அவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவிலும் ஈடுபட்டார்கள். இப்படியெல்லாம் செய்த ஓப்னியையும் பினெகாசையும் உடனடியாக ஆசாரிய ஸ்தானத்திலிருந்து நீக்குவதற்கு பதில், ஏலி அவர்களை லேசாக மட்டுமே திட்டினார். (1 சாமுவேல் 2:12-29) இதனால், ‘அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமானதில்’ ஆச்சரியமே இல்லை. (1 சாமுவேல் 3:1) தவறு செய்வோர் மீது, அதுவும் சபையின் ஆவிக்குரிய தன்மைக்கு பங்கம் விளைவிக்கக்கூடியவர்கள் மீது கிறிஸ்தவ மூப்பர்கள் தவறான தயவை காட்டிவிடாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடவுளுடைய தராதரத்தை குலைத்துப் போடுகிற தீய வார்த்தைகளையும் செயல்களையும் மெய்யான தயவு கண்டுங்காணாமல் அப்படியே விட்டுவிடாது.
8. மெய்யான தயவை இயேசு எவ்வாறு வெளிக்காட்டினார்?
8 நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழும் இயேசு கிறிஸ்து ஒருபோதும் தவறான தயவை வெளிக்காட்டினதில்லை. மெய்யான தயவுக்கு அவர்தாமே ஓர் இலக்கணமாக திகழ்ந்தார். உதாரணத்திற்கு, ‘ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலச் சோர்ந்து போனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்ததைக் கண்டு, அவர்கள் மேல் கனிவன்பு கொண்டார்.’ நேர்மை மனமுள்ள ஜனங்கள் இயேசுவை எந்தப் பயமும் இல்லாமல் தாராளமாய் அணுகினார்கள்; ஏன், தங்கள் சிறு பிள்ளைகளையும் அவரிடம் கூட்டிக்கொண்டு போனார்கள். இயேசு “அவர்களை அணைத்துக்கொண்டு, . . . அவர்களை ஆசீர்வதித்த”போது, அவர் காண்பித்த தயவையும் கரிசனையையும் சற்று எண்ணிப் பாருங்கள். (மத்தேயு 9:36, NW; மாற்கு 10:13-16) இயேசு தயவுள்ளவராக இருந்தபோதிலும், அவருடைய பரலோக தகப்பனுடைய பார்வையில் சரியானவையாக இருந்த காரியங்களில் அவர் கண்டிப்புடன் நடந்துகொண்டார். தீய காரியங்களை அவர் ஒருபோதும் கண்டுங்காணாமல் விடவில்லை; பாசாங்குக்காரராயிருந்த மதத் தலைவர்களை பகிரங்கமாக கண்டனம் செய்வதற்கு கடவுளிடமிருந்து தைரியத்தை பெற்றிருந்தார். “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ” என அவர் பலமுறை திரும்பத் திரும்ப அறிவித்ததை மத்தேயு 23:13-26 வசனங்களில் பார்க்கலாம்.
தயவும் மற்ற தெய்வீக குணங்களும்
9. தயவு எவ்வாறு நீடிய பொறுமையோடும் நற்குணத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது?
9 கடவுளுடைய ஆவி பிறப்பிக்கும் மற்ற குணங்களோடு தயவு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆவியின் கனி பற்றிய பட்டியலில், “நீடிய பொறுமை,” “நற்குணம்” ஆகியவற்றிற்கு இடையில் தயவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், தயவை வளர்த்துக்கொள்ளும் ஒரு நபர் நீடிய பொறுமையோடு இருப்பதன் மூலம் அந்தக் குணத்தை காண்பிக்கிறார். அப்படிப்பட்டவர் தயவற்றவர்களிடமும் பொறுமையோடு இருக்கிறார். நற்குணத்தோடும் தயவு சம்பந்தப்பட்டிருக்கிறது, எப்படியெனில் ஒருவரிடம் தயவு என்ற குணம் இருப்பதால்தான் மற்றவர்களுக்கு நன்மை தரும் உதவிகளைச் செய்கிறார். “தயவு” என்பதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையை சில சமயங்களில் “நற்குணம்” என்றும் மொழிபெயர்க்கலாம். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இந்தக் குணத்தை வெளிக்காட்டியதைப் பார்த்த புறஜாதிகள் அப்படியே அசந்துபோனார்களாம்; அதன் காரணமாக இயேசுவின் சீஷர்களை ‘தயவே உருவானவர்கள்’ என அவர்கள் அழைத்தார்களாம், இதை டெர்ட்டூலியன் குறிப்பிட்டிருக்கிறார்.
10. தயவும் அன்பும் எப்படி சம்பந்தப்பட்டிருக்கின்றன?
10 தயவுக்கும் அன்புக்கும் இடையே ஒரு சம்பந்தம் உள்ளது. தம்மை பின்பற்றுபவர்களைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) இந்த அன்பைக் குறித்து பவுல் இப்படி சொன்னார்: “அன்பு நீடிய சாந்தமும் [“நீடிய பொறுமையும்,” NW] தயவுமுள்ளது.” (1 கொரிந்தியர் 13:4) வேதவசனங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ள “அன்புள்ள தயவு” (NW) என்ற வார்த்தையிலும் அன்பு என்ற குணத்துடன் தயவு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தயவு பற்றுமாறா அன்பிலிருந்தே தோன்றுகிறது. “அன்புள்ள தயவு” என்பதற்கான எபிரெய பெயர்ச்சொல் கனிவான பாசம் என்ற அர்த்தத்தைக்காட்டிலும் அதிக அர்த்தத்தை கொடுக்கிறது. ஒரு பொருளோடு சம்பந்தப்பட்ட அதன் நோக்கம் நிறைவேறுகிற வரை அந்தப் பொருளோடு தன்னை அன்பாக இணைத்துக்கொள்ளும் தயவுதான் அன்புள்ள தயவாகும். யெகோவாவின் அன்புள்ள தயவு, அதாவது பற்றுமாறா அன்பு பல்வேறு வழிகளில் வெளிக்காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு, தம் மக்களை மீட்கிற விதங்களிலிருந்தும் பாதுகாக்கிற விதங்களிலிருந்தும் அவருடைய அன்புள்ள தயவை காணலாம்.—சங்கீதம் 6:4, NW; 40:11, NW; 143:12, NW.
11. கடவுளுடைய அன்புள்ள தயவு நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது?
11 யெகோவாவின் அன்புள்ள தயவு மக்களை அவரிடமாக கவர்ந்திழுக்கிறது. (எரேமியா 31:3, NW) தங்களுக்கு மீட்பு தேவைப்படுகையிலோ உதவி தேவைப்படுகையிலோ, கடவுள் தமது அன்புள்ள தயவை, அதாவது பற்றுமாறா அன்பை நிச்சயம் தங்கள் மீது பொழிவாரென அவருடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு தெரியும். அவருடைய அன்புள்ள தயவு அவர்களை ஏமாற்றாது எனவும் அவர்களுக்கு தெரியும். ஆகையால், சங்கீதக்காரன் விசுவாசத்தோடு ஜெபித்தது போலவே அவர்களும் ஜெபிக்கலாம்: “நான் உம்முடைய கிருபையின்மேல் [“அன்புள்ள தயவின்மேல்,” NW] நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.” (சங்கீதம் 13:5) கடவுளுடைய அன்பு பற்றுமாறா அன்பாக இருப்பதால், அவருடைய ஊழியர்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைக்கலாம். ‘யெகோவா தம்முடைய ஜனத்தை புறக்கணிக்காமலும், தம்முடைய சொத்தானவர்களை கைவிடாமலும் இருப்பார்’ என்ற உறுதி அவர்களுக்கு இருக்கிறது.—சங்கீதம் 94:14, NW.
இவ்வுலகம் ஏன் இந்தளவு கொடுமை நிறைந்ததாய் இருக்கிறது?
12. கொடுங்கோல் ஆட்சி எப்போது, எப்படி ஆரம்பமானது?
12 இந்தக் கேள்விக்கான பதில் ஏதேனில் நடந்த சம்பவத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. மனித சரித்திரத்தின் ஆரம்பக் கட்டத்தில், சுயநலவாதியாகவும் அகந்தை பிடித்தவனாகவும் மாறிய ஆவி சிருஷ்டி ஒருவன், தான் இந்த உலகத்தையே ஆட்சி செய்ய வேண்டுமென்பதற்காக ஒரு திட்டத்தை தீட்டினான். இந்தச் சதித்திட்டத்தின் விளைவாக அவன் “இந்த உலகத்தின் அதிபதி”யாக ஆனான், அதுவும் ஒரு கொடுங்கோல் ஆட்சியாளனாகவே ஆனான். (யோவான் 12:31) கடவுளுக்கும் சரி, மனிதனுக்கும் சரி, முக்கிய எதிரியான அவன் பிசாசாகிய சாத்தான் என அழைக்கப்படலானான். (யோவான் 8:44; வெளிப்படுத்துதல் 12:9) யெகோவாவின் தயவான ஆட்சிக்கு போட்டியாக ஒரு ஆட்சியை நிறுவ வேண்டுமென்ற அவனுடைய சுயநல திட்டம், ஏவாள் படைக்கப்பட்ட பிறகு சீக்கிரத்திலேயே அம்பலமானது. ஆதாம் கடவுளுடைய தயவை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, அவருடைய ஆட்சியிலிருந்து பிரிந்து தன்னிச்சையான பாதையை தேர்ந்தெடுத்தபோது கெட்ட ஆட்சி ஆரம்பமானது. (ஆதியாகமம் 3:1-6) ஆதாமும் ஏவாளும் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொண்டு சுதந்திரமாய் வாழவில்லை, மாறாக, பிசாசுடைய சுயநலமும் பெருமையும் நிறைந்த ஆதிக்கத்தின்கீழ்தான் வந்தார்கள், அவனுடைய ஆட்சியின் குடிமக்களாகவே ஆனார்கள்.
13-15. (அ) யெகோவாவின் நீதியான ஆட்சியை ஒதுக்கியதால் ஏற்பட்ட சில பாதிப்புகள் யாவை? (ஆ) இவ்வுலகம் ஏன் கொடுமை நிறைந்த இடமாக இருக்கிறது?
13 அதனுடைய பாதிப்புகள் சிலவற்றை இப்போது சிந்திக்கலாம். பூமியில் பரதீஸாக இருந்த பகுதியைவிட்டு ஆதாமும் ஏவாளும் வெளியே துரத்தப்பட்டார்கள். ஆரோக்கியமளிக்கும் பச்சைக் காய்கறிகளும் பழ வகைகளும் கிடைத்த செழுமையான அந்த ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியே போய் கடினமான சூழ்நிலையில் வாழும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. கடவுள் ஆதாமை நோக்கி, “நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் [“முட்புதர்களும்,” NW] முளைப்பிக்கும்” என்று சொன்னார். பூமியின் மீது விழுந்த சாபம், இனி நிலத்தை பண்படுத்துவது மிக மிக கடினமாக இருக்கும் என்பதை அர்த்தப்படுத்தியது. முட்களும் முட்புதர்களும் நிறைந்த சபிக்கப்பட்ட நிலத்தின் பாதிப்பை ஆதாமின் சந்ததியாரால் நன்றாகவே உணர முடிந்தது; அதனால்தான் நோவாவின் தகப்பனான லாமேக்கு, ‘யெகோவா சபித்த பூமியிலே அவர்களுக்கு உண்டான கைகளின் பிரயாசத்தை’ பற்றி பேசினார்.—ஆதியாகமம் 3:17-19; 5:29.
14 அதுமட்டுமல்ல, ஆதாமும் ஏவாளும் அமைதியை விற்று துன்பத்தை வாங்கினார்கள். கடவுள் ஏவாளை நோக்கி: “நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப் பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்” என்றார். பிற்பாடு, ஆதாம் ஏவாளின் முதல் மகனான காயீன் தன் சகோதரன் ஆபேலை கொன்றான், அது ஒரு கொடூரச் செயலாக இருந்தது.—ஆதியாகமம் 3:16; 4:8.
15 “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” அப்போஸ்தலன் யோவான் அறிவித்தார். (1 யோவான் 5:19) இந்த உலகமானது அதன் அதிபதியைப் போலவே சுயநலம், தற்பெருமை போன்ற பொல்லாத குணங்களை வெளிக்காட்டுகிறது. கொடுமையும் மூர்க்கமும் தலைவிரித்தாடுவதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆனால், இவ்வுலகம் எப்போதுமே இப்படி இருக்கப் போவதில்லை. தம்முடைய ராஜ்யத்தின்கீழ், கொடுமையும் மூர்க்கமும் இருப்பதற்கு பதிலாக தயவும் பரிவும் இருக்கும்படி யெகோவா பார்த்துக்கொள்வார்.
கடவுளுடைய ராஜ்யத்தில் தயவு மேலோங்கி இருக்கும்
16. கிறிஸ்து இயேசுவை ராஜாவாகக் கொண்ட கடவுளுடைய ஆட்சியில் ஏன் தயவு மேலோங்கி இருக்கும், இதனால் நம்மீது என்ன கடமை விழுகிறது?
16 தங்களுடைய குடிமக்கள் தயவுள்ளவர்கள் என்று பெயரெடுக்க வேண்டுமென யெகோவாவும் அவருடைய ராஜ்யத்தின் ராஜாவாக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ்து இயேசுவும் எதிர்பார்க்கிறார்கள். (மீகா 6:8, NW) தம் பிதா தம்மிடம் ஒப்படைத்துள்ள ஆட்சியில் எப்படி தயவு மேலோங்கி இருக்குமென இயேசு கிறிஸ்து நமக்கு காட்டினார். (எபிரெயர் 1:3) இதை அவருடைய வார்த்தைகளில்—மக்கள் மீது பாரமான சுமைகளை வைத்து அவர்களை ஒடுக்கிய பொய் மதத் தலைவர்களின் மாய்மாலத்தை அம்பலப்படுத்திய அவருடைய வார்த்தைகளில்—கவனிக்க முடியும். அவர் சொன்னார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், [“தயவாயும்,” NW] என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத்தேயு 11:28-30) இன்று பூமியிலுள்ள ஏராளமான மதத் தலைவர்களாகட்டும், வேறு தலைவர்களாகட்டும், அவர்கள் எல்லாருமே சட்டத்திற்கு மேல் சட்டம் போடுகிறார்கள், மக்களிடம் வேலை வாங்கிவிட்டு நன்றிகெட்டத்தனமாய் நடந்துகொள்கிறார்கள். இதனால் மக்கள் சோர்ந்துவிடுகிறார்கள். மறுபட்சத்தில், தம்மை பின்பற்றுபவர்களிடம் இயேசு எதிர்பார்க்கும் காரியங்கள் அனைத்துமே அவர்களுக்கு நன்மையளிப்பவையாக இருக்கின்றன, அவர்களுடைய திராணிக்கு உட்பட்டவையாகவும் இருக்கின்றன. ஆம், அவருடைய நுகம் உண்மையிலேயே புத்துணர்ச்சியளிக்கும் தயவான நுகம்தான்! நாமும் அவரைப் போலவே மற்றவர்களிடம் தயவு காட்ட தூண்டப்படுகிறோம் அல்லவா?—யோவான் 13:15.
17, 18. பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யப் போகிறவர்களும் பூமியில் அவருடைய பிரதிநிதிகளாக இருக்கிறவர்களும் தயவு காட்டுவார்கள் என நாம் ஏன் நம்பலாம்?
17 கடவுளுடைய ராஜ்ய ஆட்சி எப்படி மனித ஆட்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது என்பதை இயேசு தம் அப்போஸ்தலர்களிடம் சொன்ன முக்கிய குறிப்புகள் சிறப்பித்துக் காண்பிக்கின்றன. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள் [“அடக்கி ஆளுகிறார்கள்,” NW]; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள். உங்களுக்குள்ளே அப்படியிருக்கக் கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப் போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப் போலவும் இருக்கக்கடவன். பந்தியிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறேன்.”—லூக்கா 22:24-27.
18 மனித ஆட்சியாளர்கள் மக்களை ‘அடக்கி ஆளுவதன்’ மூலமும், தங்களுக்கென்று பெரிய பெரிய பட்டங்களை சூட்டிக்கொள்வதன் மூலமும் தாங்கள் பெரியவர்கள் என காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்; ஏதோ அப்படிப்பட்ட பட்டங்கள்தான் அவர்களுடைய குடிமக்களைக் காட்டிலும் அவர்களை மேம்பட்டவர்களாக்குவது போல நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தொண்டு செய்பவர்களே—ஊக்கமாக தொடர்ந்து சேவை செய்பவர்களே—உண்மையில் பெரியவர்கள் என இயேசு சொன்னார். பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யப் போகிறவர்களும் பூமியில் அவருடைய பிரதிநிதிகளாக சேவிப்பவர்களும் அவரைப் போலவே மனத்தாழ்மையுள்ளவர்களாக, தயவுள்ளவர்களாக இருக்க கடின முயற்சி செய்ய வேண்டும்.
19, 20. (அ) யெகோவா எந்தளவுக்கு தயவுள்ளவர் என்பதை இயேசு எவ்வாறு தெரியப்படுத்தினார்? (ஆ) தயவு காட்டும் விஷயத்தில் நாம் எப்படி யெகோவாவைப் போலவே நடந்துகொள்ள முடியும்?
19 இயேசு கொடுத்த அன்பான மற்ற அறிவுரைகளை இப்போது நாம் பார்க்கலாம். எந்தளவுக்கு யெகோவா தயவுள்ளவராக இருக்கிறார் என்பதை காட்டுபவராய் இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. [“தயவு காட்டுகிறாரே,” NW] ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.”—லூக்கா 6:32-36.
20 கடவுள் காட்டுகிற தயவு சுயநலமற்றது. அத்தகைய தயவு நம்மிடமிருந்து எதையும் கேட்பதுமில்லை, பிரதிபலனாக எதிர்பார்ப்பதுமில்லை. யெகோவா தயவோடு “தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:43-45; அப்போஸ்தலர் 14:16, 17) இவ்விஷயத்தில் நாம் நம்முடைய பரலோகத் தகப்பனை பின்பற்றி, நன்றியில்லாதவர்களுக்கு கெடுதி எதுவும் செய்யாமல் இருப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு நன்மையும் செய்கிறோம்; நம்மிடம் எதிரிகளாக நடந்து கொண்டவர்களுக்குக்கூட நாம் அவ்வாறு நன்மை செய்கிறோம். இப்படி தயவாக நடந்துகொள்வதன் மூலம், எல்லா மனித உறவுகளிலுமே தயவும் மற்ற தெய்வீக குணங்களும் மேலோங்கி இருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் வாழ நாம் விரும்புவதை யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் காண்பிக்கிறோம்.
ஏன் தயவு காண்பிக்க வேண்டும்?
21, 22. நாம் ஏன் தயவு காட்ட வேண்டும்?
21 மெய்க் கிறிஸ்தவர் ஒருவர் தயவை வெளிக்காட்டுவது மிக மிக முக்கியம். கடவுளுடைய ஆவியை நாம் பெற்றிருப்பதற்கு அது அத்தாட்சியாக இருக்கிறது. மேலும், நாம் மெய்யான தயவை வெளிக்காட்டும்போது, யெகோவா தேவனையும் கிறிஸ்து இயேசுவையும் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். அதோடு, கடவுளுடைய ராஜ்யத்தில் குடிமக்களாக வாழப் போகிறவர்கள் தயவு காட்டுபவர்களாய் இருப்பது அவசியம். அப்படியானால், நாம் தயவை நேசித்து, அதை வெளிக்காட்ட கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.
22 நம் அன்றாட வாழ்க்கையில், தயவு காட்ட முடிந்த சில நடைமுறையான வழிகள் யாவை? அடுத்து வரும் கட்டுரை இந்த விஷயத்தை கலந்தாராயும்.
உங்கள் பதிலென்ன?
• தயவு என்றால் என்ன?
• இவ்வுலகம் ஏன் மூர்க்கமும் கொடுமையும் நிறைந்த இடமாக இருக்கிறது?
• கடவுளுடைய ஆட்சியில் தயவு மேலோங்கி இருக்குமென்று நமக்கு எப்படி தெரியும்?
• கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் வாழ விரும்புகிறவர்கள் தயவு காட்டுவது ஏன் முக்கியம்?
[பக்கம் 13-ன் படம்]
மந்தைக்கு உதவுவதில் கிறிஸ்தவ மூப்பர்கள் தயவு காட்ட பிரயாசப்படுகிறார்கள்
[பக்கம் 15-ன் படம்]
கடினமான காலங்களில், யெகோவாவின் அன்புள்ள தயவு அவருடைய ஊழியர்களுக்கு ஒருபோதும் ஏமாற்றத்தை அளிக்காது
[பக்கம் 16-ன் படங்கள்]
எல்லா மனிதர்கள் மீதும் யெகோவா தயவோடு சூரியனைப் பிரகாசிக்கச் செய்கிறார், மழையை பெய்யப் பண்ணுகிறார்