கருணை—சொல்லிலும் செயலிலும் காட்டப்படுகிற குணம்!
யாராவது நமக்குக் கருணை காட்டும்போது, நம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது, ஆறுதலாக இருக்கிறது! நம்மீது மற்றவர்கள் அக்கறை வைத்திருக்கிறார்கள் என்பதை உணரும்போது, நம் இதயத்தில் நன்றி பொங்குகிறது. கருணையோடு நடத்தப்பட வேண்டும் என்று நாம் எல்லாருமே ஆசைப்படுகிறோம். அப்படியென்றால், இந்த அருமையான குணத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
கருணை காட்டுவதில், மற்றவர்களுடைய நலனில் உண்மையான அக்கறை வைத்திருப்பது அடங்குகிறது. அன்பான வார்த்தைகளாலும் செயல்களாலும் அதைக் காட்ட வேண்டும். வெறுமனே சாந்தமாக நடந்துகொள்வதும் மரியாதை காட்டுவதும் கருணை அல்ல. உண்மையான கருணை, ஆழமான அன்பிலிருந்தும் அனுதாபத்திலிருந்தும் பிறக்கிறது. மிக முக்கியமாக, அது கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய, கடவுளுடைய சக்தியால் உண்டாகிற ஒரு குணம்! (கலா. 5:22, 23) இது கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டிய குணமாக இருப்பதால், யெகோவாவும் இயேசுவும் இந்தக் குணத்தை எப்படிக் காட்டுகிறார்கள் என்று இப்போது பார்க்கலாம். அவர்களுடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்றும் பார்க்கலாம்.
எல்லாருக்கும் யெகோவா கருணை காட்டுகிறார்
‘நன்றிகெட்டவர்களும் பொல்லாதவர்களும்’ உட்பட எல்லாருக்கும் யெகோவா கருணை காட்டுகிறார்; மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கிறார். (லூக். 6:35) “அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க வைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார்.” (மத். 5:45) இப்படி, உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றை கருணையோடு தருகிறார். அவரைத் தங்களுடைய படைப்பாளராக ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவற்றிலிருந்து பிரயோஜனமடைகிறார்கள்; ஓரளவுக்கு சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்கள்.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அருமையான ஒரு விஷயத்தை யெகோவா செய்தார். கருணை காட்டியதற்கான மிகச் சிறந்த ஓர் உதாரணம் அது! பாவத்தில் விழுந்த வெகு சீக்கிரத்திலேயே அவர்கள் “அத்தி இலைகளைத் தைத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்கள்.” ஆனால் இப்போது, ஏதேன் தோட்டத்துக்கு வெளியே அவர்கள் வாழவேண்டியிருந்தது. அந்த நிலம் சபிக்கப்பட்டிருந்த நிலம்; “முட்செடிகளும் முட்புதர்களும்” நிறைந்த நிலம்! அதில் வாழ்வதற்கு, பொருத்தமான உடை அவர்களுக்குத் தேவை என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதனால், அவர் கருணையோடு, “நீளமான தோல் உடைகளை” செய்து கொடுத்தார்.—ஆதி. 3:7, 17, 18, 21.
“நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும்” யெகோவா கருணை காட்டினாலும், விசேஷமாக, தன்னுடைய உண்மை ஊழியர்களுக்குக் கருணை காட்ட அவர் ரொம்பவே ஆசைப்படுகிறார். உதாரணத்துக்கு, சகரியா தீர்க்கதரிசியின் காலத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தச் சமயத்தில், எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கான வேலை தடைப்பட்டிருந்ததைப் பார்த்து ஒரு தேவதூதர் வேதனையடைந்தார். அந்தத் தூதருடைய கவலைகளை யெகோவா புரிந்துகொண்டார்; அவருக்கு “அன்பாகவும் ஆறுதலாகவும்” பதில் சொன்னார். (சக. 1:12, 13) எலியா தீர்க்கதரிசிக்கும் இதேபோல்தான் செய்தார்! ஒருசமயம், தன்னைச் சாகடிக்கும்படி யெகோவாவிடம் கேட்குமளவுக்கு எலியா நொந்துபோயிருந்தார். அவருடைய உணர்வுகளை யெகோவா புரிந்துகொண்டார்; அவரைப் பலப்படுத்துவதற்காக ஒரு தேவதூதரை அனுப்பினார். அதோடு, எலியா தனியாள் கிடையாது என்பதையும் அவரிடம் சொன்னார். யெகோவா அன்பாகப் பதில் சொன்னதாலும், தனக்குத் தேவையான உதவி கிடைத்ததாலும் எலியாவால் தொடர்ந்து தன்னுடைய நியமிப்பைச் செய்ய முடிந்தது. (1 ரா. 19:1-18) யெகோவாவுடைய இந்த அருமையான குணத்தை, அதாவது கருணையை, மிக நன்றாகப் பிரதிபலித்த கடவுளுடைய ஊழியர்களில் தலைசிறந்தவர் யார்?
இயேசு—கருணையே உருவானவர்!
இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது, இயேசு கருணையோடு நடந்துகொண்டதும், மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுத்ததும் எல்லாருக்கும் பளிச்சென்று தெரிந்தது. அவர் ஒருபோதும் கடுகடுப்பாகவோ முரட்டுத்தனமாகவோ நடந்துகொள்ளவில்லை. அனுதாபத்தோடு மக்களிடம் இப்படிச் சொன்னார்: “உழைத்துக் களைத்துப்போனவர்களே, பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன். . . . ஏனென்றால், என்னுடைய நுகத்தடி மென்மையாக . . . இருக்கிறது.” (மத். 11:28-30) அவர் காட்டிய கருணையைப் பார்த்து, அவர் போன இடத்துக்கெல்லாம் மக்கள் அவர் பின்னாலேயே போனார்கள். அவர்களைப் பார்த்து இயேசு “மனம் உருகினார்.” அதனால், அவர்களுக்கு உணவளித்தார்; அவர்களுடைய நோய்களையும் உடல் குறைபாடுகளையும் குணமாக்கினார். அதோடு, தன்னுடைய பரலோகத் தகப்பனைப் பற்றி “நிறைய விஷயங்களை” கற்றுக்கொடுத்தார்.—மாற். 6:34; மத். 14:14; 15:32-38.
மற்றவர்களைப் புரிந்துகொண்டதன் மூலமும், மற்றவர்களிடம் நடந்துகொண்டதன் மூலமும், தான் கருணையே உருவானவர் என்பதை இயேசு காட்டினார். அசௌகரியமான சமயத்தில் மக்கள் வேண்டுகோள்கள் விடுத்தபோதிலும், தன்னை உண்மையோடு தேடிவந்தவர்களை “அன்போடு” வரவேற்றார். (லூக். 9:10, 11) உதாரணத்துக்கு, இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண், குணமாகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் அவருடைய மேலங்கியைத் தொட்டபோது, இயேசு என்ன செய்தார்? திருச்சட்டத்தின்படி தீட்டுப்பட்டிருந்த, பயந்துபோயிருந்த அந்தப் பெண்ணை அவர் திட்டவில்லை. (லேவி. 15:25-28) பன்னிரண்டு வருஷங்களாக அவதிப்பட்டுக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் கரிசனையோடு இப்படிச் சொன்னார்: “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது. உன்னைப் பாடாய்ப் படுத்திய நோயிலிருந்து சுகமாகி, சமாதானமாகப் போ.” (மாற். 5:25-34) எப்பேர்ப்பட்ட கருணை!
கருணை காட்டுவதற்கு நல்ல செயல்கள் அவசியம்
இதுவரை பார்த்த உதாரணங்களிலிருந்து, கருணை செயல்களால் காட்டப்படுகிறது என்பது புரிகிறது. சமாரியனைப் பற்றிய உவமையில், செயல் எந்தளவுக்கு முக்கியம் என்பதை இயேசு காட்டினார். சமாரியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே வெறுப்புணர்ச்சி இருந்தது. இருந்தாலும், கொள்ளையடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட சாகும் நிலையில் கிடந்த அந்த மனிதனுக்காக, அந்த உவமையில் சொல்லப்பட்டிருக்கும் சமாரியர் மனம் உருகினார். கருணைதான் அந்தச் சமாரியரைச் செயல்படத் தூண்டியது. அந்த யூதருடைய காயங்களுக்கு அவர் கட்டுப்போட்டார்; பிறகு, அவனைச் சத்திரத்துக்குக் கொண்டுபோனார். காயப்பட்டிருந்த அந்த மனிதனைக் கவனித்துக்கொள்வதற்காகச் சத்திரக்காரனுக்குப் பணம் கொடுத்தார். அதோடு, கூடுதலாக ஆகும் செலவுகளையும் தான் பார்த்துக்கொள்வதாகச் சொன்னார்.—லூக். 10:29-37.
கருணை பெரும்பாலும் செயல்கள் மூலம் காட்டப்படுவது உண்மையென்றாலும், நன்றாக யோசித்து, செயல்படத் தூண்டுகிற விதத்தில் சொல்லப்படுகிற வார்த்தைகள் மூலமும் அது காட்டப்படுகிறது. அதனால்தான், ‘கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கினாலும்,’ “நல்ல வார்த்தை அதைச் சந்தோஷப்படுத்தும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 12:25) நல்மனம் மற்றும் கருணையால் தூண்டப்பட்டு, பலப்படுத்துகிற விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் நாம் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) நம்முடைய அன்பான வார்த்தைகள், அவர்கள்மீது வைத்திருக்கிற அக்கறையை வெளிப்படுத்துகின்றன. அப்படி நாம் அக்கறை காட்டும்போது, அவர்களுக்கு உற்சாகம் கிடைக்கிறது. தங்களுடைய வாழ்க்கையில் அனுபவிக்கிற சோதனைகளை இன்னும் நன்றாகச் சமாளிக்க அது அவர்களுக்கு உதவுகிறது.—நீதி. 16:24.
கருணை என்ற குணத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?
‘தன்னுடைய சாயலில்’ கடவுள் மனிதர்களைப் படைத்திருப்பதால், எல்லாராலும் கருணை என்ற குணத்தைக் காட்ட முடியும். (ஆதி. 1:27) உதாரணத்துக்கு, யூலியு என்ற ரோமப் படை அதிகாரியைப் பற்றிப் பார்க்கலாம். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அப்போஸ்தலன் பவுல், ரோமுக்குப் பயணம் செய்தபோது, அந்த அதிகாரி பவுலை “மனிதாபிமானத்தோடு நடத்தினார். அதோடு, பவுல் [சீதோனிலிருந்த] தன்னுடைய நண்பர்களைப் போய்ப் பார்ப்பதற்கும் அவர்களுடைய உதவியைப் பெறுவதற்கும் அனுமதி கொடுத்தார்.” (அப். 27:3) பிற்பாடு, மெலித்தா தீவைச் சேர்ந்தவர்கள், பவுலிடமும் கப்பல் சேதத்திலிருந்து தப்பித்த மற்றவர்களிடமும் “அளவுகடந்த மனிதாபிமானத்தோடு” நடந்துகொண்டார்கள். நெருப்பு மூட்டி, அவர்கள் எல்லாரும் குளிர்காய்வதற்கு உதவினார்கள். (அப். 28:1, 2) ரோமப் படை அதிகாரியும், மெலித்தா தீவைச் சேர்ந்தவர்களும் செய்தது பாராட்டுக்குரிய விஷயம்! இருந்தாலும், கருணை காட்டுவது என்றால், எப்போதாவது செய்யப்படும் அன்பான ஒரு செயல் மட்டுமே அல்ல.
கடவுளை உண்மையிலேயே சந்தோஷப்படுத்த வேண்டும் என்றால், கருணையை நம்முடைய சுபாவத்தின் நிரந்தர பாகமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதோடு, அது நம்முடைய வாழ்க்கை முழுவதும் வெளிப்பட வேண்டும். அதனால்தான், கருணையை “அணிந்துகொள்ளுங்கள்” என்று யெகோவா சொல்கிறார். (கொலோ. 3:12, அடிக்குறிப்பு) கடவுளுடைய இந்தக் குணத்தை நம்முடைய சுபாவத்தின் பாகமாக ஆக்கிக்கொள்வது எல்லா சமயத்திலும் சுலபமாக இருக்காது. ஏன்? கூச்ச சுபாவம்... பாதுகாப்பற்ற உணர்வு... எதிர்ப்பு... அல்லது சுயநல எண்ணங்களோடு நமக்கு இருக்கும் போராட்டம்... இவையெல்லாம் நமக்குத் தடையாக இருக்கலாம். இருந்தாலும், யெகோவாவுடைய சக்தியை நம்பியிருக்கும்போதும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றும்போதும் இந்தத் தடைகளை நாம் தகர்த்தெறியலாம்.—1 கொ. 2:12.
கருணை காட்டுவதில் எந்தெந்த அம்சங்களில் நாம் இன்னும் முன்னேற வேண்டும் என்று யோசித்துப் பார்க்கலாம், இல்லையா? அதற்கு நம்மை நாமே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘மத்தவங்க பேசுறத அனுதாபத்தோடு கேட்குறேனா? மத்தவங்களுக்கு என்ன தேவைங்குறதுல அக்கறை காட்டுறேனா? என் குடும்பத்துல இருக்குறவங்க... என்னோட நண்பர்கள்... இவங்கள தவிர மத்தவங்க மேல கடைசியா நான் எப்போ கருணை காட்டினேன்?’ பிறகு, சில இலக்குகளை வைக்கலாம். உதாரணத்துக்கு, நம்மைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றி, முக்கியமாக சபையிலிருப்பவர்களைப் பற்றி, நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். இப்படிச் செய்யும்போது, மற்றவர்களுடைய சூழ்நிலைகள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்கள்மீது இன்னும் அதிக அக்கறை காட்ட முடியும். பிறகு, மற்றவர்கள் நம்மேல் எப்படி கருணை காட்ட வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதேபோல், மற்றவர்கள்மேலும் நாம் கருணை காட்ட முயற்சி செய்ய வேண்டும். (மத். 7:12) கடைசியாக, யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும்; அப்போது, கருணையை வளர்த்துக்கொள்வதற்காக நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் ஆசீர்வதிப்பார்.—லூக். 11:13.
கருணை மற்றவர்களைக் கவருகிறது
கடவுளுடைய ஊழியனாக தன்னை எவையெல்லாம் தனித்துக்காட்டுகின்றன என்று சொன்னபோது, அப்போஸ்தலன் பவுல், ‘கருணையையும்’ சேர்த்துக்கொண்டார். (2 கொ. 6:3-6) தன்னுடைய செயலாலும் சொல்லாலும் பவுல் காட்டிய அக்கறையைப் பார்த்து, மற்றவர்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டார்கள். (அப். 28:30, 31) அதேபோல், நாம் கருணையோடு நடந்துகொண்டால் மக்கள் சத்தியத்திடம் ஈர்க்கப்படுவார்கள். எல்லாரிடமும், ஏன், எதிரிகளிடமும்கூட கருணை காட்டினால், அவர்களுடைய இதயம் இளகும்; அவர்களுடைய வெறுப்பு கரையும். (ரோ. 12:20) காலப்போக்கில், பைபிள் செய்தியிடம்கூட அவர்கள் ஈர்க்கப்படலாம்.
பூஞ்சோலை பூமியில் உயிர்த்தெழுந்து வரப்போகிற ஏராளமானவர்கள் உண்மையான கருணையை அனுபவிக்கும்போது, ஆனந்தம் அடைவார்கள்; ஒருவேளை அவர்கள் முதல்முறையாக அந்தக் கருணையை அனுபவிக்கலாம்! அந்த நன்றியுணர்வு, மற்றவர்கள்மேல் கருணை காட்ட அவர்களைத் தூண்டும். கருணை காட்டவும் மற்றவர்களுக்கு உதவவும் மறுப்பவர்களுக்கு கடவுளுடைய அரசாங்கத்தில் நிரந்தர இடம் இல்லை. ஆனால், கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள், என்றென்றும் வாழ்வார்கள்; ஒருவருக்கொருவர் அன்போடும் கருணையோடும் நடந்துகொள்வார்கள். (சங். 37:9-11) பாதுகாப்புக்கும் சமாதானத்துக்கும் அங்கே பஞ்சமே இருக்காது! அந்த அருமையான காலம் வரும்வரை, மற்றவர்களுக்குக் கருணை காட்டுவதன் மூலம் நாம் எப்படிப் பிரயோஜனம் அடையலாம்?
கருணை காட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்
“கருணையுள்ளவன் தனக்கு நன்மை செய்துகொள்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 11:17) கருணை காட்டுபவர்களிடம் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள்; பதிலுக்குக் கருணை காட்டவும் தூண்டப்படுகிறார்கள். “எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 6:38) இப்படி, நல்ல நண்பர்களைச் சம்பாதிப்பதும், நட்பைத் தொடர்வதும் கருணை காட்டுபவர்களுக்குக் கஷ்டமாக இருக்காது.
“ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள் . . . ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்” என்று எபேசு சபையாரிடம் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபே. 4:32) கருணை காட்டுகிற, ஒருவருக்கொருவர் உதவுகிற, அனுதாபம் நிறைந்த கிறிஸ்தவர்கள் சபையில் இருக்கும்போது, சபை ரொம்பவே பிரயோஜனமடையும், இல்லையா? அதுபோன்ற கிறிஸ்தவர்கள் ஒருபோதும் கடுகடுப்பாகப் பேச மாட்டார்கள், கடுமையாக விமர்சிக்க மாட்டார்கள், புண்படுத்தும் விதத்தில் மற்றவர்களைக் குத்தலாகப் பேச மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றிப் புறணி பேச மாட்டார்கள்; மற்றவர்களுக்கு உதவுவதற்காக தங்களுடைய நாவைப் பயன்படுத்துவார்கள். (நீதி. 12:18) இப்படியெல்லாம் செய்யும்போது, சபை ஆன்மீக ரீதியில் வளரும்!
சொல்லாலும் செயலாலும் காட்டப்படுகிற ஒரு குணம்தான் கருணை என்பதில் சந்தேகமே இல்லை! நாம் கருணை காட்டும்போது, நம்முடைய கடவுளாகிய யெகோவாவைப் போலவே மென்மையாக நடந்துகொள்கிறோம் என்றும், அவருடைய தாராள குணத்தைப் பின்பற்றுகிறோம் என்றும் அர்த்தம். (எபே. 5:1) இப்படிச் செய்யும்போது, சபைகளை நம்மால் பலப்படுத்த முடியும்; உண்மை வணக்கத்திடம் மற்றவர்களை ஈர்க்க முடியும். கருணை காட்டுபவர் என்ற பெயரை நாம் எடுப்போமா, தொடர்ந்து அதைத் தக்கவைத்துக்கொள்வோமா?
a கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களைப் பற்றிச் சிந்திக்கிற ஒன்பது பாக தொடர்கட்டுரையில், நல்மனம் பற்றி அடுத்ததாகச் சிந்திப்போம்.