உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 5/1 பக். 3-5
  • குருமார் அரசியல் பேசலாமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குருமார் அரசியல் பேசலாமா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கிறிஸ்துவின் பெயரில் அரசியல் பேசுவது ஆரம்பித்த விதம்
  • போதகர்கள் மீது அரசியலின் செல்வாக்கு
  • மதம் அரசியலோடு கலக்கலாமா?
    வேறுசில தலைப்புகள்
  • மதமும் அரசியலும் நேர் எதிராக மோதிக்கொள்ளுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • 13. சீர்திருத்த இயக்கம்—தேடலில் ஒரு புதிய திருப்பம்
    கடவுளைத் தேடி
  • மார்ட்டின் லூத்தரும்—அவர் விட்டுச்சென்ற ஆஸ்தியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 5/1 பக். 3-5

குருமார் அரசியல் பேசலாமா?

“அரசியலில் ஈடுபட்டால் ஏழைகளுக்கு உதவலாம் என்பதாக புனிதப் பயணிகள் சிலரிடம் கனடா நாட்டு ஆர்ச் பிஷப் ஒருவர் சொன்னார் . . . இன்றைய அரசியல் அமைப்பு கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக இல்லாததுபோல் தோன்றினாலும், ‘ஏழைபாழைகளுக்கு நியாயம் செய்வதற்காக நாம் அரசியலில் ஈடுபட்டே ஆக வேண்டும்’ எனவும் அந்த பிஷப் சொன்னார்.”​—⁠கேத்தலிக் நியூஸ்.

அரசியலில் ஈடுபடுவது சரியென பெரிய பெரிய மதத் தலைவர்கள் பேசுவதை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம்; அதே போல மதத் தலைவர்கள் அரசாங்கத்தில் பதவி வகிப்பதைப் பார்ப்பதும் நமக்கு புதிதல்ல. சிலர் அரசியலை சுத்தப்படுத்த முயன்றிருக்கிறார்கள். இன்னும் சிலர், இன சமத்துவம், அடிமைத்தன ஒழிப்பு போன்ற பிரச்சாரங்களுக்காக வியந்து பாராட்டப்படுகிறார்கள், மக்கள் மனதில் நீங்கா இடமும் பெற்றுவிடுகிறார்கள்.

என்றபோதிலும், தங்களது குருமார் அரசியல் விவகாரங்களில் ஒரு சாராரை ஆதரித்துப் பேசும்போது சர்ச் அங்கத்தினர் பலர் சங்கடப்படுகிறார்கள். “தங்களுடைய பாதிரிகள் பொது விவகாரங்களில் ஈடுபடுவதைக் குறித்து சில சமயம் கேள்வி எழுப்பியவர்கள் புராட்டஸ்டன்ட் சர்ச்சை சேர்ந்தவர்கள்தான்” என கிறிஸ்டியன் சென்ச்சுரி என்ற பத்திரிகையில் வெளிவந்த அரசியல் இறையியல் பற்றிய ஒரு கட்டுரை சொல்கிறது. சர்ச் என்பது புனிதமானது என்பதால் அது அரசியலில் ஈடுபடுவது சரியல்ல என மதப்பற்றுள்ள பலர் நினைக்கிறார்கள்.

இவ்வாறு குருமார் அரசியலில் ஈடுபடுவது, மேம்பட்ட ஓர் உலகை காண விரும்புகிறவர்களின் மனதில் சுவாரஸ்யமான சில கேள்விகளை எழுப்புகிறது. கிறிஸ்தவ போதகர்களால் அரசியலa சீர்ப்படுத்த முடியுமா? உலகத்தையும் அரசாங்கத்தையும் மேம்படுத்துவதற்கு கடவுள் அரசியலைத்தான் பயன்படுத்துகிறாரா? அரசியலில் ஈடுபட ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்துவதே கிறிஸ்தவத்தின் ஆதி நோக்கமாக இருந்ததா?

கிறிஸ்துவின் பெயரில் அரசியல் பேசுவது ஆரம்பித்த விதம்

ஆரம்ப கால கிறிஸ்தவ சபை “அரசியலில் அந்தஸ்து வகிக்க கொஞ்சமும் விரும்பவில்லை” என ஆரம்ப சர்ச் என்ற ஆங்கில புத்தகத்தில் சரித்திராசிரியரான ஹென்ரி சாட்விக் சொல்கிறார். கிறிஸ்தவ சபை “அரசியலில் நடுநிலை வகித்தது, கலகங்களில் ஈடுபடாதிருந்தது, அதோடு ஒரு சமாதான சமுதாயமாகவும்” விளங்கியது. கிறிஸ்தவத்தின் சரித்திரம் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “தங்களில் எவருமே அரசாங்கப் பதவி வகிக்கக் கூடாதென்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் முடிவு செய்திருந்தார்கள் . . . ஆரம்பகால கிறிஸ்தவ வழக்கத்தின்படி, நீதிபதி ஒருவர் சர்ச் அங்கத்தினர் ஆவதற்கு முன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது என மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹிப்போலிட்டஸ் என்பவர் சொன்னார்.” என்றாலும் காலம் செல்லச் செல்ல, பதவி ஆசை பிடித்தவர்கள் கிறிஸ்தவ சபைகள் பலவற்றை முன்னின்று நடத்த ஆரம்பித்தார்கள், தங்களுக்கென டாம்பீகமான பட்டங்களை சூட்டிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 20:29, 30) சிலர் மதத் தலைவராக இருக்க ஆசைப்பட்டார்கள், அதே நேரத்தில் அரசியல்வாதிகளாக திகழவும் விரும்பினார்கள். ரோம அரசாங்கத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டபோது அத்தகைய சர்ச் தலைவர்களுடைய ஆசை ஈடேறியது.

பொ.ச. 312-⁠ம் வருடத்தில், புறமத ரோம பேரரசரான கான்ஸ்டன்டைன் பெயர்க் கிறிஸ்தவத்திடமாக மனம் சாய்ந்தார். அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அப்போதிருந்த சர்ச் பிஷப்புகள் அந்தப் புறமத பேரரசர் அளித்த சில சலுகைகளுக்காக அவருக்கு அடிபணிந்து போக முன்வந்தார்கள். “அரசாங்க விவகாரங்களைக் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுப்பதில் சர்ச் மூழ்கிப்போக ஆரம்பித்தது” என ஹென்ரி சாட்விக் எழுதினார். இப்படி அரசியலில் ஈடுபட்டது சர்ச் தலைவர்களை எப்படி பாதித்தது?

போதகர்கள் மீது அரசியலின் செல்வாக்கு

சர்ச் தலைவர்களை கடவுள் அரசியல்வாதிகளாக பயன்படுத்துவார் என்ற கருத்தை ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த பிரபல கத்தோலிக்க இறையியலாளரான அகஸ்டின் என்பவர் முக்கியமாக பரப்பிவிட்டார். தேசங்கள் மீது சர்ச் ஆட்சி செய்யுமென்றும், மனிதருக்கு அது சமாதானத்தை தருமென்றும் அவர் கற்பனை செய்தார். ஆனால், “உலகளாவிய தெய்வீக அரசாங்கத்தைப் பற்றிய அந்த மாபெரும் ஏற்பாட்டை நடைமுறையாக்கும் முயற்சிகள் படுதோல்வி அடைந்தன என்பதையே ஐந்தாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் நடந்த அநேக சம்பவங்கள் காண்பிக்கின்றன” என சரித்திராசிரியர் ஹெச். ஜி. வெல்ஸ் எழுதினார். கிறிஸ்தவமண்டலத்தால் ஐரோப்பாவுக்கும் சமாதானத்தை தர முடியவில்லை, முழு உலகிற்கும் சமாதானத்தை தர முடியவில்லை. ஆகவே, உண்மை கிறிஸ்தவம் என்பதாக நம்பப்பட்ட அந்த அமைப்பின் மீது அநேகர் வைத்திருந்த நம்பிக்கை தவிடுபொடியானது. என்ன தவறு நேர்ந்துவிட்டது?

கிறிஸ்தவத்தை பிரசங்கிக்கிறோம் என சொல்லிக்கொண்ட பலர் நல்ல உள்நோக்கத்தோடுதான் அரசியலில் நுழைந்தார்கள், ஆனால் பிற்பாடு தீய காரியங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். மார்ட்டின் லூத்தர் என்பவர் ஒரு பிரசங்கியாகவும் பைபிள் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார்; கத்தோலிக்க சர்ச்சை சீரமைக்க எடுத்த முயற்சிகளுக்காக அவர் பெயரும் புகழும் பெற்றார். என்றாலும், சர்ச் கொள்கைகளை தைரியமாக எதிர்த்து நின்றதால், அரசியல் உள்நோக்கங்களுக்காக கலகம் செய்ய முனைந்தவர்கள் மத்தியில் பிரபலமானார். அரசியல் பேச ஆரம்பித்தபோதோ, ஜனங்கள் மத்தியில் தனக்கிருந்த செல்வாக்கை இழந்தார். விவசாயிகள், தங்களை ஒடுக்கிவந்த பிரபுக்களுக்கு எதிராக கலகம் செய்தபோது, ஆரம்பத்தில் லூத்தர் அதற்கு ஆதரவளித்தார். ஆனால், அந்தக் கலகம் மூர்க்கமானபோது, அதை அடக்கும்படி அவர் பிரபுக்களை தூண்டினார்; அவர்களும் லூத்தரின் பேச்சைக் கேட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகளை கண்மண் தெரியாமல் கொன்று குவித்தார்கள். எனவே, அந்த விவசாயிகள் லூத்தரை ஒரு துரோகியாக கருதினதில் ஆச்சரியமே இல்லை. பின்னர் கத்தோலிக்க பேரரசருக்கு எதிராக கலகம் செய்வதற்கும் அந்தப் பிரபுக்களை லூத்தர் தூண்டிவிட்டார். புராட்டஸ்டன்டுகள்​—⁠லூத்தரை பின்பற்றியவர்கள் இப்படித்தான் அழைக்கப்படலானார்கள்⁠—⁠ஆரம்பத்திலிருந்தே ஓர் அரசியல் இயக்கத்தை உருவாக்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். லூத்தர் பெற்ற அதிகாரம் அவரை எவ்விதத்தில் பாதித்தது? அது அவரை கெடுத்துவிட்டது. உதாரணத்திற்கு, மதத்தை விட்டு வெளியேறியவர்களை இணங்க வைப்பதற்கு பலப்பிரயோகம் செய்வதை ஆரம்பத்தில் கண்டித்த அவர், பிற்பாடு என்ன செய்தார்? குழந்தை ஞானஸ்நானத்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்களையெல்லாம் உயிரோடு எரிக்கும்படி தன்னுடைய அரசியல் நண்பர்களை தூண்டிவிட்டார்.

ஜான் கால்வின் என்பவர் ஜெனிவாவில் ஒரு பிரபல பாதிரியாக இருந்தார், என்றாலும் காலப்போக்கில் அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்றார். திரித்துவ கொள்கைக்கு எந்த வேதப்பூர்வ ஆதாரமும் இல்லை என்று மைக்கேல் சர்வெட்டஸ் என்பவர் விளக்கியபோது, கால்வின் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவரை கொலை செய்வதற்கு ஆதரவு அளித்தார்; சர்வெட்டஸ் பிறகு கழுமரத்தில் உயிரோடு எரிக்கப்பட்டார். இயேசுவின் போதனைகளிலிருந்து எவ்வளவாய் வழிவிலகிப் போய்விட்டிருந்தார்கள்!

1 யோவான் 5:19 என்ன சொல்கிறதென்று ஒருவேளை அத்தகைய நபர்கள் மறந்துவிட்டார்கள் போலும். அவ்வசனம் சொல்கிறது: ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.’ அவர்களுடைய நாட்களிலிருந்த அரசியல் நிலவரங்களை சரிப்படுத்த அவர்களுக்கு உண்மையாகவே விருப்பம் இருந்ததா, அல்லது பதவிக்கான எதிர்பார்ப்பும் பெரிய இடத்து நட்புக்கான ஆசையும் அவர்களை மயக்கியதா? பதில் என்னவாக இருந்தாலும், “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” என்ற இயேசுவின் சீஷரான யாக்கோபின் வார்த்தைகளை​—⁠தேவ ஆவியால் ஏவப்பட்ட வார்த்தைகளை​—⁠அவர்கள் மறந்திருக்கக் கூடாது. (யாக்கோபு 4:4) ஆம், “நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல” என்று இயேசு தம்மை பின்பற்றியவர்களைப் பற்றி சொன்னதை யாக்கோபு அறிந்திருந்தார்.​—⁠யோவான் 17:14.

இது இப்படியிருக்க, இவ்வுலகின் கீழ்த்தரமான காரியங்களில் கிறிஸ்தவர்கள் பங்குகொள்ளக் கூடாது என்பதை ஏற்றுக்கொண்டாலும், ‘உலகத்தாரல்லாதவர்களாக’ இருப்பதை, அதாவது அரசியலில் நடுநிலை வகிப்பதை அநேகர் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படி நடுநிலை வகிப்பது தாங்கள் மற்றவர்களிடம் ஊக்கமான அன்பு காட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதென அவர்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, சர்ச் தலைவர்கள் ஊழலையும் அநீதியையும் எதிர்த்து குரல் எழுப்பவும், அதை எதிர்த்துப் போராடவும் வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இயேசு கற்பித்த நடுநிலை வகிப்பு மற்றவர்களிடம் உள்ளார்ந்த அக்கறை காண்பிப்பதை உண்மையிலேயே தடை செய்கிறதா? பிளவுபட்டுள்ள அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் ஒரு கிறிஸ்தவர் மற்றவர்களுக்கு நடைமுறை உதவி அளிக்க முடியுமா? அடுத்து வரும் கட்டுரை இந்தக் கேள்விகளை அலசி ஆராயும்.

[அடிக்குறிப்பு]

a அரசியல் என்பது ஒரு நாடு அல்லது ஒரு பகுதியை ஆட்சி செய்வதுடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை குறிக்கிறது; முக்கியமாக பதவியைப் பிடிக்க தனி நபர்களுக்கிடையே அல்லது கட்சிகளுக்கு இடையே எழும் வாக்குவாதங்களையும் சச்சரவுகளையும் உட்படுத்துகிறது.

[பக்கம் 4-ன் படம்]

அரசியல் பதவிக்காக, சர்ச் தலைவர்கள் பேரரசர் கான்ஸ்டன்டைன் போன்ற ஆட்சியாளர்களுடன் இணங்கிப் போனார்கள்

[படத்திற்கான நன்றி]

Musée du Louvre, Paris

[பக்கம் 5-ன் படங்கள்]

பிரபல மதத் தலைவர்களுக்கு ஏன் அரசியல் மோகம் ஏற்பட்டது?

அகஸ்டின்

லூத்தர்

கால்வின்

[படங்களுக்கான நன்றி]

அகஸ்டின்: ICCD Photo; கால்வின்: Portrait by Holbein, from the book The History of Protestantism (Vol. II)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்