மார்ட்டின் லூத்தரும்—அவர் விட்டுச்சென்ற ஆஸ்தியும்
“சரித்திரத்தில் வேறு எவரையும்விட [மார்ட்டின் லூத்தரைப்] பற்றியே நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவரது எஜமானர் இயேசு கிறிஸ்துவே இதற்கு விதிவிலக்கு.” இந்த விஷயத்தை டைம் பத்திரிகை வெளியிட்டது. லூத்தரின் சொல்லும் செயலும் சமய சீர்திருத்த இயக்கம் (Reformation) பிறக்க வழிவகுத்தன. அந்த இயக்கம் “மனித சரித்திரத்திலேயே மிக முக்கியமான புரட்சி” என விவரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் ஐரோப்பிய மத சூழலை மாற்றி, அக்கண்டத்தில் இடைக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவினார். அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்துவடிவ ஜெர்மன் மொழிக்கு வித்திட்டவரும் லூத்தரே. அவருடைய பைபிள் மொழிபெயர்ப்பு, ஜெர்மன் மொழியில் மிகப் பிரசித்தி பெற்றது என்பதில் சந்தேகமில்லை.
மார்ட்டின் லூத்தர் எப்படிப்பட்டவர்? ஐரோப்பிய விவகாரங்களில் அவர் எவ்வாறு இந்தளவு செல்வாக்கு பெற்றார்?
லூத்தர் அறிஞரானார்
மார்ட்டின் லூத்தர், நவம்பர் 1483-ல், ஜெர்மனியிலுள்ள ஐஸ்லேபன் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய தந்தை செம்பு சுரங்கத்தில் பணிபுரிந்தார்; ஆனாலும் மார்ட்டினை நன்கு படிக்க வைக்கும் அளவுக்கு எப்படியோ கஷ்டப்பட்டு சம்பாதித்தார். மார்ட்டின் 1501-ல் எர்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராக சேர்ந்தார். அங்கிருந்த நூலகத்தில் பைபிளை முதன்முறையாக படித்தார். “படித்தவுடனேயே அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்துவிட்டது, என்றாவது ஒருநாள் எனக்கென்று சொந்தமாக பைபிளை வைத்துக்கொள்ளும் பாக்கியம் பெற ஆசைப்பட்டேன்” என அவர் சொன்னார்.
22-ஆம் வயதில், எர்ஃபர்ட்டில் இருந்த அகஸ்டின் மடத்தில் லூத்தர் சேர்ந்தார். அதன் பிறகு விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். கடவுளுடைய அனுக்கிரகத்தைப் பெற தனக்கு தகுதியில்லை என லூத்தர் நினைத்தார்; சிலசமயங்களில் குற்றவுணர்வால் மிகுந்த மனச்சோர்வடைந்தார். ஆனால் பாவிகளை கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பதை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள பைபிள் படிப்பு, ஜெபம், தியானம் ஆகியவை அவருக்கு உதவின. கடவுளுடைய அனுக்கிரகத்தை தாங்களாகவே சம்பாதிக்க முடியாது, ஆனால் விசுவாசம் காண்பிப்பவர்களுக்கு அவருடைய தகுதியற்ற தயவினால் அது வழங்கப்படும் என்பதை லூத்தர் புரிந்துகொண்டார்.—ரோமர் 1:16; 3:23, 24, 28.
தான் புதிதாக புரிந்துகொண்ட விஷயம் சரியானதுதான் என்பதை லூத்தர் எவ்வாறு உறுதி செய்தார்? ஆரம்பகால சர்ச் சரித்திரம் மற்றும் புதிய ஏற்பாட்டு வசன ஆராய்ச்சியின் பேராசிரியர் குர்ட் ஆலான்ட் இவ்வாறு எழுதினார்: “தான் புதிதாக கண்டறிந்த விஷயத்தை மற்ற பைபிள் வாக்கியங்களோடு ஒத்துப் பார்க்கையில் சரியாக இருக்கிறதா என்பதை தீர்மானிக்க முழு பைபிளையும் அவர் தியானித்தார்; அது சரியென்பதற்கான அத்தாட்சிகளே அவருக்கு கிடைத்தன.” செயல்களினால் அல்லது பிராயச்சித்தம் செய்வதினால் அல்ல, ஆனால் விசுவாசத்தினாலேயே இரட்சிப்பு கிடைக்கும் என்ற கோட்பாடு லூத்தரது போதனைகளின் முக்கிய தூணாக விளங்கியது.
பாவ மன்னிப்புச்சீட்டைக் குறித்து கொதித்தெழுந்தார்
கடவுள் பாவிகளை எவ்வாறு கருதுகிறார் என்பதைப் பற்றிய லூத்தரின் புரிந்துகொள்ளுதல் ரோமன் கத்தோலிக்க சர்ச்சோடு மோதுவதற்கு வழிவகுத்தது. மரணத்திற்கு பிறகு பாவிகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு தண்டனை அனுபவிப்பார்கள் என்று அப்போது பரவலாக நம்பப்பட்டது. இருந்தாலும் போப்பின் அதிகாரத்தில் வழங்கப்பட்ட பாவ மன்னிப்புச்சீட்டுகளை பணம் கொடுத்து வாங்குவதன் மூலம் இந்த காலப்பகுதியைக் குறைக்கலாம் என சொல்லப்பட்டது. யோஹான் டெட்ஸலைப் போன்ற வியாபாரிகள், பொது மக்களிடம் பாவ மன்னிப்புச்சீட்டுகளை விற்று அதை லாபம் தரும் தொழிலாக்கினார்கள்; யோஹான் டெட்ஸல், மைன்ட்ஸின் தலைமை பிஷப் ஆல்பர்ட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்தவர். எதிர்கால பாவங்களுக்கான காப்பீடாகவே பாவ மன்னிப்புச்சீட்டுகளை அநேகர் கருதினார்கள்.
பாவ மன்னிப்புச்சீட்டுகளின் விற்பனையை அறிந்த லூத்தர் கொதித்தெழுந்தார். மனிதன் கடவுளோடு பேரம் பேச முடியாது என்று அவர் அறிந்திருந்தார். 1517-ன் இலையுதிர் காலத்தில், பண விஷயங்களிலும் கோட்பாட்டு விஷயங்களிலும் மத விஷயங்களிலும் சர்ச்சில் மலிந்திருந்த சீர்கேடுகளை கண்டித்து 95 வாதங்களை அவர் எழுதினார்; இது புகழ்பெற்றது. சீர்திருத்தத்தையே அவர் ஊக்குவிக்க விரும்பினார், கலகத்தை அல்ல; ஆகவே தன் வாதங்களின் பிரதிகளை மைன்ட்ஸின் தலைமை பிஷப் ஆல்பர்ட்டுக்கும் இன்னும் பல அறிஞர்களுக்கும் அனுப்பி வைத்தார். 1517 வாக்கில் சமய சீர்திருத்த இயக்கம் தோன்றியதாக அநேக சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள்.
சர்ச்சில் மலிந்துகிடந்த சீர்கேடுகளைக் குறித்து புலம்பியது லூத்தர் மட்டுமே அல்ல. அதற்கு நூறு வருடங்களுக்கு முன்பு செக் நாட்டு மத சீர்திருத்தவாதி யான் ஹஸ் என்பவரும் பாவ மன்னிப்புச்சீட்டுகளின் விற்பனையை கண்டித்தார். இவருக்கு முன்பாகவேகூட இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் வைக்ளிஃப், சர்ச் பின்பற்றும் சில பாரம்பரியங்கள் வேதப்பூர்வமற்றவை என்பதாக சுட்டிக்காட்டினார். லூத்தர் காலத்தில் வாழ்ந்த, ரோட்டர்டாமைச் சேர்ந்த இராஸ்மஸும் இங்கிலாந்தைச் சேர்ந்த டின்டேலும் சீர்திருத்தத்தை ஆதரித்தனர். ஆனால் ஜெர்மனியில் அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் முறையை யோஹானஸ் குட்டன்பர்க் கண்டுபிடித்த பிறகு, லூத்தரின் குரல் மற்ற சீர்திருத்தவாதிகளின் குரலைவிட சப்தமாகவும் பரவலாகவும் கேட்டது.
1455-ல் குட்டன்பர்க்கின் அச்சகம் மைன்ட்ஸில் இயங்கிவந்தது. 1500-களின் ஆரம்பத்தில் 60 ஜெர்மானிய பட்டணங்களிலும் இன்னும் 12 ஐரோப்பிய தேசங்களிலும் அச்சகங்கள் இயங்கின. சரித்திரத்திலேயே முதன்முறையாக, பொது மக்களின் அக்கறைக்குரிய விஷயங்கள் உடனடியாக அவர்களை சென்றெட்டின. லூத்தரின் 95 வாதங்கள் அச்சிடப்பட்டு எங்கும் விநியோகிக்கப்பட்டன; ஒருவேளை அவரது அனுமதியின்றி இது நடந்திருக்கலாம். அதன் பிறகும் சர்ச் சீர்திருத்தம் உள்ளூர் பிரச்சினையாக இருக்கவில்லை, ஆனால் எல்லா இடங்களிலும் பெரும் சர்ச்சைக்குள்ளானது; திடீரென மார்ட்டின் லூத்தர் ஜெர்மனியிலேயே மிகப் புகழ்பெற்ற நாயகனாகிவிட்டார்.
“சூரியனும் சந்திரனும்” பிரதிபலித்த விதம்
பல நூற்றாண்டுகளாக, ஐரோப்பா இரு சக்திவாய்ந்த அமைப்புகளின் கைப்பாவையாக இருந்து வந்தது; அதில் ஒன்று புனித ரோம சாம்ராஜ்யம், மற்றொன்று ரோம கத்தோலிக்க சர்ச். “பேரரசரும் போப்பும் சூரியனையும் சந்திரனையும் போல ஒருவரையொருவர் அவ்வளவு அதிகமாக சார்ந்திருந்தனர்” என லூத்தரன் உவர்ல்ட் ஃபெடரேஷனின் முன்னாள் தலைவர் ஹான்ஸ் லில்யி விளக்கினார். ஆனால் சூரியன் யார், சந்திரன் யார் என்ற பெருத்த சந்தேகம் நிலவியது. 16-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள் இரு அமைப்புகளுமே அதிகார ஏணியின் உச்சியிலிருந்து சரிந்துவிட்டன. மாற்றம் நிகழவிருந்தது.
லூத்தர் தனது 95 வாதங்களை வாபஸ் பெறாவிட்டால் சபை நீக்கம் செய்யப்படுவார் என பத்தாம் போப் லியோ மிரட்டல் ஆணை விடுத்தார். லூத்தரோ துணிச்சலோடு அந்த ஆணையை பொது மக்கள் பார்வையில் எரித்தார்; அதோடு போப்பின் சம்மதம் இல்லாமலேயே சர்ச்சை சீர்திருத்தும்படி அதிகாரிகளை உற்சாகப்படுத்தி கூடுதலான பிரசுரங்களை வெளியிட்டார். 1521-ல் பத்தாம் போப் லியோ, லூத்தரை சபை நீக்கம் செய்தார். நியாயமான விசாரணையின்றி தனக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக லூத்தர் ஆட்சேபணை தெரிவித்த போது, வர்ம்ஸில் ரோம பேரவையில் ஆஜராகும்படி பேரரசராகிய ஐந்தாம் சார்ல்ஸ் அவருக்கு ஆணையிட்டார். ஏப்ரல் 1521-ல் விட்டன்பர்க்கிலிருந்து வர்ம்ஸுக்கு லூத்தர் 15 நாள் பயணம் செய்தது வெற்றி பவனியைப் போல் இருந்தது. பொது மக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது, எங்குமிருந்த மக்கள் அவரை தரிசிக்க துடித்தார்கள்.
வர்ம்ஸில் பேரரசர், பிரபுக்கள், போப்பின் பேராண்மைத் தூதர் ஆகியோர் முன்பாக லூத்தர் விசாரணை செய்யப்பட்டார். 1415-ல் யான் ஹஸ் என்பவர் கான்ஸ்டான்ஸில் இதேபோல் விசாரிக்கப்பட்டு கழுமரத்தில் உயிருடன் எரிக்கப்பட்டார். சர்ச் அதிகாரிகள், பேரரசின் தலைவர்கள் ஆகிய அனைவரது கண்களும் அவர் மீதே பதிந்திருக்க, தன் பங்கில் தவறு இருப்பதை பைபிளிலிருந்து நிரூபித்தால் தவிர தன் வாதங்களை வாபஸ் பெறப்போவதில்லை என்று லூத்தர் உறுதியாக சொல்லிவிட்டார். ஆனால் அவரைப் போல் வசனங்களை கரைத்துக் குடித்தவர்கள் ஒருவரும் இருக்கவில்லை. வர்ம்ஸின் ஆணை என்ற ஆவணம் விசாரணையின் முடிவான தீர்ப்பை வழங்கியது. லூத்தர் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்து அவரது எழுத்துக்களுக்கு அது தடை விதித்தது. போப்பினால் சபை நீக்கம் செய்யப்பட்டு, பேரரசரால் சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்ட லூத்தரின் உயிர் ஆபத்தில் இருந்தது.
அதன் பிறகோ சற்றும் எதிர்பாராத பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. லூத்தர் விட்டன்பர்க்கிற்கு திரும்பிச் செல்லும் வழியில் அவரை கடத்துவதுபோல் நாடகமாட ஏற்பாடு செய்தார் சாக்ஸனியைச் சேர்ந்த நல்மனம்படைத்த ஃப்ரெடெரிக். இவ்வாறு எதிரிகளிடம் மாட்டாமல் லூத்தர் தப்பிவிட்டார். ஒதுக்குப்புறமாக இருந்த வார்ட்பர்க் மாளிகைக்கு லூத்தர் இரகசியமாக கொண்டு செல்லப்பட்டார்; அங்கே அவர் தாடி வளர்த்து, யன்கா யார்க் என்ற வீரப் பெருந்தகையாக மாறுவேடம் ஏற்றார்.
செப்டம்பர் பைபிளுக்கு ஏகப்பட்ட கிராக்கி
அடுத்த பத்து மாதங்களுக்கு, பேரரசரிடமிருந்தும் போப்பிடமிருந்தும் தப்பி வார்ட்பர்க் மாளிகையில் லூத்தர் அகதியாக வசித்தார். “வார்ட்பர்க்கில் அவர் தங்கியிருந்த காலமே அவரது வாழ்நாளில் மிகுந்த பலனளித்த, ஆக்கபூர்வமான காலம்” என வெல்டர்பி வார்ட்பர்க் என்ற புத்தகம் விளக்குகிறது. அங்கே இராஸ்மஸின் கிரேக்க வேதாகம பதிப்பை ஜெர்மன் மொழியில் அவர் மொழிபெயர்த்து முடித்ததுதான் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று. செப்டம்பர் 1522-ல் பிரசுரிக்கப்பட்ட அது, செப்டம்பர் பைபிள் என அழைக்கப்பட்டது; மொழிபெயர்த்தவர் லூத்தர் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. அதன் விலை 1 1/2 கில்டர்கள்; இது, ஒரு வீட்டு வேலைக்காரியின் வருடக் கூலிக்கு சமம். இருந்தாலும் செப்டம்பர் பைபிளுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. பன்னிரண்டே மாதங்களில் 2 பதிப்புகளாக 6,000 பிரதிகள் அச்சிடப்பட்டன; அடுத்த 12 வருடங்களில் குறைந்தது 69 பதிப்புகள் அச்சிடப்பட்டன.
1525-ல் மார்ட்டின் லூத்தர், முன்னாள் கன்னியாஸ்திரீ காட்டாரினா ஃபான் போரா என்பவரை மணந்தார். வீட்டு வேலைகளை பொறுப்பாக கவனித்துக்கொள்வதில் காட்டாரினா சாமர்த்தியசாலியாக இருந்தார்; அதோடு தன் கணவரின் தாராள குணத்திற்கு ஈடுகொடுத்து நடந்துகொண்டார். லூத்தரின் வீட்டில் அவரது மனைவியும் ஆறு பிள்ளைகளும் மட்டுமல்ல, நண்பர்களும் அறிஞர்களும் அகதிகளும்கூட தங்கினர். வாழ்க்கையின் பிற்பட்ட காலத்தில் லூத்தர் ஓர் ஆலோசகராக மிகுந்த செல்வாக்கு பெற்றதால், அவரது வீட்டில் தங்கிய விருந்தாளிகள் அவரது ஆலோசனைகளை குறித்துக் கொள்வதற்காக எப்போதுமே பேப்பர், பேனாவோடு காத்திருந்தனர். அவர்கள் எழுதிய குறிப்புகள் அனைத்தும் லூட்டர்ஸ் டிஷ்ரேடன் (லூத்தரின் பந்திப் பேச்சு) என்ற புத்தகமாக தொகுக்கப்பட்டன. ஜெர்மன் மொழியில் அது சிறிது காலம் பைபிளுக்கு அடுத்தபடியாக எக்கச்சக்கமாய் விநியோகிக்கப்பட்டது.
மொழிபெயர்த்த திறமைசாலி, எழுதிக் குவித்த வல்லவர்
1534-க்குள்ளாக லூத்தர் எபிரெய வேதாகமத்தை மொழிபெயர்த்து முடித்திருந்தார். பாணி, நடை, சொற்கள் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் திறமை அவருக்கு இருந்தது. ஆகவே பாமர மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் பைபிளை மொழிபெயர்த்தார். தான் மொழிபெயர்த்த விதத்தைக் குறித்து லூத்தர் இவ்வாறு எழுதினார்: “நாம் வீட்டிலுள்ள தாயிடமும், தெருவிலுள்ள பிள்ளைகளிடமும், சந்தையிலுள்ள சாதாரண ஜனங்களிடமும் பேச்சுக் கொடுக்க வேண்டும், பிறகு அவர்கள் எப்படி பேசுகிறார்கள் என்பதை உற்று கவனித்து அதற்கேற்ப மொழிபெயர்க்க வேண்டும்.” லூத்தரின் பைபிள், அதிகாரப்பூர்வ எழுத்து மொழிக்கு அடிப்படையாக அமைந்தது; அது பிற்பாடு ஜெர்மனியெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
லூத்தர் மொழிபெயர்ப்பதில் திறமைசாலியாக இருந்ததோடு, எழுதிக் குவிப்பதிலும் வல்லவராக இருந்தார். அவர் பணியாற்றிய காலமெல்லாம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதினாரென சொல்லப்படுகிறது. அவற்றில் சில அவர் பேச்சைப் போலவே காரசாரமாக இருந்தன. ஆரம்பத்தில்தான் அவர் குத்தலான நடையில் எழுதினார் என்றால் வயதானபோதும் லூத்தரின் பேனா முனை மழுங்கவில்லை. சொல்லப்போனால் இன்னும் கடுமையாகவே எழுதினார். லூத்தரின் எழுத்துக்களில் “அவரது கோபக் கனல்” தெறிக்கிறது, அவற்றில் “பணிவும் அன்பும் இல்லை,” ஆனால் “கடமையுணர்ச்சி அபரிமிதமாக” மிளிருகிறது என லெக்ஸிகன் ஃபுயர் டேயோலோஜி அண்டு கிர்க்கி குறிப்பிடுகிறது.
உழவர் போர் மூண்டு அதில் அநேகர் இரத்த வெள்ளத்தில் மிதந்தபோது அந்த கிளர்ச்சியைப் பற்றி லூத்தரின் கருத்து கேட்கப்பட்டது. உழவர்கள் தங்கள் நிலப்பிரபுக்கள் மீது புகார் செய்ததற்கு நியாயமான காரணம் இருந்ததா? பெரும்பான்மையினருக்கு விருப்பமான பதிலை கொடுப்பதன் மூலம் அவர்களது ஆதரவை திரட்ட லூத்தர் முயலவில்லை. கடவுளுடைய ஊழியர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என அவர் நம்பினார். (ரோமர் 13:1) ஆகவே அந்தக் கிளர்ச்சியை பலவந்தமாக நிறுத்த வேண்டும் என அவர் நேரடியாக குறிப்பிட்டார். “முடிந்தவர்கள் குத்தட்டும், அடிக்கட்டும், கொல்லட்டும்” என அவர் சொன்னார். இப்படி பதிலளித்ததன் பலனாக, “அதுவரை மக்களிடையே பெற்றிருந்த விசேஷ மதிப்பை” லூத்தர் இழந்தார் என ஹான்ஸ் லில்யி குறிப்பிட்டார். மேலும், கிறிஸ்தவர்களாக மதம் மாற மறுத்த யூதர்களைப் பற்றி லூத்தர் பிற்பாடு எழுதிய கட்டுரைகளால், குறிப்பாக ஆன் த ஜ்யூஸ் அண்டு தேர் லைஸ் என்ற கட்டுரையால், செமிட்டிக் இனத்தவரின் எதிரி என்று அநேகர் அவர்மீது முத்திரை குத்தினர்.
லூத்தர் விட்டுச் சென்ற ஆஸ்தி
லூத்தர், கால்வின், ஸ்விங்லி போன்றவர்களால் தூண்டப்பட்ட சமய சீர்திருத்த இயக்கம், மதத்திடம் புதிய அணுகுமுறை தோன்ற வழிவகுத்தது; அப்படி உருவானதே புராட்டஸ்டன்ட் மதம். அம்மதத்திற்கு லூத்தர் விட்டுச்சென்ற பெரும் ஆஸ்தி, விசுவாசத்தால் இரட்சிப்பு கிடைக்கும் என்ற அவரது முக்கிய போதனையாகும். ஜெர்மானிய சிற்றரசுகள், ஒன்று புராட்டஸ்டன்ட் மதத்தை அல்லது கத்தோலிக்க மதத்தை ஆதரித்தன. புராட்டஸ்டன்ட் மதம் வேகமாக பரவி, ஸ்கான்டிநேவியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய இடங்களில் பெரும் ஆதரவைப் பெற்றது. இன்று லட்சக்கணக்கானவர்கள் அதன் அங்கத்தினர்களாக இருக்கின்றனர்.
லூத்தரின் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாத அநேகர்கூட அவரை உயர்வாக மதிக்கின்றனர். ஐஸ்லேபன், எர்ஃபர்ட், விட்டன்பர்க், வார்ட்பர்க் ஆகியவற்றை உள்ளடக்கிய முன்னாள் ஜெர்மானிய மக்களாட்சி குடியரசு, 1983-ல் லூத்தரின் 500-வது பிறந்தநாளை கொண்டாடியது. இந்தப் பொதுவுடைமை அரசு, அவரை ஜெர்மானிய சரித்திரத்தின் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு தலைசிறந்த நாயகர் என ஒப்புக்கொண்டது. மேலும் லூத்தர் ஏற்படுத்திய தாக்கத்தை 1980-களை சேர்ந்த ஒரு கத்தோலிக்க இறையியலாளர் ரத்தின சுருக்கமாக இவ்வாறு சொன்னார்: “லூத்தருக்கு பின் வந்த யாருமே அவரை விஞ்ச முடியவில்லை.” பேராசிரியர் ஆலான்ட் இவ்வாறு எழுதினார்: “மார்ட்டின் லூத்தரையும் சமய சீர்திருத்த இயக்கத்தையும் பற்றி ஒவ்வொரு வருடமும் குறைந்தது 500 புதிய பிரசுரங்கள் வெளியாகின்றன, அதுவும் உலகத்திலுள்ள கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் அவை கிடைக்கின்றன.”
மார்ட்டின் லூத்தர் அறிவுக் கூர்மையுள்ளவர், அபார ஞாபகசக்தி படைத்தவர், வார்த்தைகளில் மன்னர், வேலையில் படு சுறுசுறுப்பானவர். அதேசமயத்தில் பொறுமை இல்லாதவர், ஏளனமாக பேசுபவர், மாய்மாலமாக தோன்றியதை வன்மையாக கண்டித்தவர். பிப்ரவரி 1546-ல் ஐஸ்லேபனில் அவர் மரணப் படுக்கையில் இருந்தபோது, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்த நம்பிக்கைகளில் அப்போதும் உறுதியாக இருந்தாரா என்று அவரது நண்பர்கள் அவரிடம் கேட்டார்கள். “ஆமாம்” என்று அவர் பதிலளித்தார். லூத்தர் இறந்துவிட்டார், ஆனால் அவரது நம்பிக்கைகளோ இறக்கவில்லை, இன்னும் அவற்றை அநேகர் கடைப்பிடிக்கிறார்கள்.
[பக்கம் 27-ன் படம்]
பாவ மன்னிப்புச்சீட்டுகளின் விற்பனையை லூத்தர் எதிர்த்தார்
[படத்திற்கான நன்றி]
Mit freundlicher Genehmigung: Wartburg-Stiftung
[பக்கம் 28-ன் படம்]
தன் பங்கில் தவறு இருப்பதை பைபிளிலிருந்து நிரூபித்தால் தவிர தன் வாதங்களை வாபஸ் பெறப்போவதில்லை என்று லூத்தர் சொல்லிவிட்டார்
[படத்திற்கான நன்றி]
From the book The Story of Liberty, 1878
[பக்கம் 29-ன் படங்கள்]
வார்ட்பர்க் மாளிகையில் லூத்தர் தங்கியிருந்த அறை; இங்குதான் அவர் பைபிளை மொழிபெயர்த்தார்
[படத்திற்கான நன்றி]
இரண்டு படங்களும்: Mit freundlicher Genehmigung: Wartburg-Stiftung
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
From the book Martin Luther The Reformer, 3rd Edition, published by Toronto Willard Tract Depository, Toronto, Ontario
[பக்கம் 30-ன் படத்திற்கான நன்றி]
From the book The History of Protestantism (Vol. I)