வெஸல் காங்ஸ்ஃபர்ட்—“மத சீர்திருத்தவாதிகளின் முன்னோடி”
1517-ல் ஆரம்பமான புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தைப்பற்றி ஆர்வமாக வாசிக்கும் அனைவருக்கும் லூத்தர், டின்டேல், கால்வின் ஆகிய பெயர்கள் தெரிந்திருக்கும். ஆனால், வெகு சிலரே வெஸல் காங்ஸ்ஃபர்ட்டைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பார்கள். “மத சீர்திருத்தவாதிகளின் முன்னோடி” என்று அவர் அழைக்கப்பட்டிருக்கிறார். அவரைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
வெஸல், நெதர்லாந்தில் உள்ள க்ரோநிங்கன் நகரில் 1419-ஆம் ஆண்டு பிறந்தார். 15-ஆம் நூற்றாண்டில், பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்தது. எனினும், வெஸலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. படிப்பில் அவர் படுகெட்டி. இருந்தபோதிலும், அவருடைய பெற்றோர் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்ததால், ஒன்பது வயதில் அவருடைய படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நல்லவேளையாக, சிறுவன் வெஸலின் புத்திக்கூர்மையைப்பற்றிக் கேள்விப்பட்ட ஒரு பணக்கார விதவை, அவருடைய படிப்புச் செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்தார். இதனால் வெஸல் தன் படிப்பைத் தொடர முடிந்தது. காலப்போக்கில், முதுகலைப் பட்டம் பெற்றார். பிற்பாடு, அவர் இறையியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றதாகக்கூட தெரிகிறது.
கல்வி கற்பதில் வெஸலுக்குத் தணியாத தாகம் இருந்தது. ஆனால், அவருடைய நாட்களில் வெகு சில நூலகங்களே இருந்தன. எழுத்துக்களை அச்சுக்கோர்த்து அச்சடிக்கும் முறை அந்தச் சமயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், பெரும்பாலான புத்தகங்கள் கைப்பட எழுதப்பட்டவையாகவும் எக்கச்சக்க விலையுள்ளவையாகவும் இருந்தன. அறிஞர்களின் தொகுதி ஒன்றில் வெஸல் அங்கத்தினராக இருந்தார். அரிய கையெழுத்துப் பிரதிகளையும் காணாமல்போன புத்தகங்களையும் தேடிக்கொண்டு அவர்கள் ஒவ்வொரு நூலகத்திற்கும் மடாலயத்திற்கும் செல்வார்கள். பிறகு, தாங்கள் படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வார்கள். வெஸல் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். தன்னுடைய குறிப்பேடு முழுவதையும் இலக்கியப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளால் நிரப்பினார். மற்ற இறையியலாளர்கள் அவரைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார்கள். ஏனெனில், அவர்கள் கேள்விப்பட்டிராத அநேக விஷயங்களை வெஸல் அறிந்திருந்தார். அவர் மாஜிஸ்டெர் கான்ட்ராடிக்டியோனிஸ், அதாவது முரண்பாட்டின் முதல்வர் என்பதாக அழைக்கப்பட்டார்.
“கிறிஸ்துவிடம் ஏன் என்னை வழிநடத்த மறுக்கிறீர்கள்?”
மத சீர்திருத்தம் தலைகாட்டுவதற்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தாமஸ் அ கெம்பஸ் (சுமார் 1379-1471) என்பவரை வெஸல் சந்தித்தார். டெ இமிடேடியோனே கிறிஸ்டி (கிறிஸ்துவைப் பின்பற்றுதல்) என்ற புகழ்பெற்ற புத்தகத்தை இவர்தான் எழுதியதாக அநேகர் நம்புகிறார்கள். இவர் பிரதரன் ஆஃப் த காமன் லைப் (பொது வாழ்வின் சகோதரர்கள்) என்ற அமைப்பைச் சேர்ந்தவர். பயபக்தியோடு வாழ்வதன் அவசியத்தை அந்த அமைப்பு வலியுறுத்தியது. மரியாளிடம் ஜெபிக்கும்படி தாமஸ் அ கெம்பஸ் பல முறை வெஸலை ஊக்கப்படுத்தியதாக வெஸலின் சுயசரிதையை எழுதியவர் குறிப்பிடுகிறார். “சோர்ந்துபோயிருக்கிறவர்களைத் தம்மிடம் வரும்படி கனிவோடு அழைக்கிற கிறிஸ்துவிடம் ஏன் என்னை வழிநடத்த மறுக்கிறீர்கள்?” என்று வெஸல் அவரிடம் கேட்டார்.
பாதிரியார் ஆவதற்கு வெஸல் விரும்பாததுபோல் தெரிகிறது. பாதிரி என்று அடையாளம் காட்ட, ஒருவருடைய உச்சந்தலை சிரைக்கப்படும். வெஸல் அப்படிச் சிரைத்துக்கொள்ள மறுத்துவிட்டார். காரணம் கேட்டபோது, தன்னுடைய யோசிக்கும் திறன் நன்றாக இருக்கும்வரை தான் தூக்குத் தண்டனைக்கு அஞ்சவில்லை என்று குறிப்பிட்டார். வெஸல் இப்படிப் பதில் அளித்ததற்குக் காரணம், உச்சந்தலையைச் சிரைத்துக்கொண்ட பாதிரியார்களின் மீது வழக்குத் தொடுக்க முடியாதிருந்தது. இதனால், அவர்களில் பலர் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினார்கள். புழக்கத்திலிருந்த மத பழக்கங்கள் சிலவற்றையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, அப்போது பிரபலமாயிருந்த டயலாகுஸ் மிராகுலோரும் என்ற புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருந்த அற்புதங்களை அவர் நம்பாததற்காக விமர்சிக்கப்பட்டார். அதற்குப் பதில் அளிக்கையில், இப்புத்தகங்களைவிட “பரிசுத்த வேதாகமத்தைப் படிப்பதே நல்லது” என்று அவர் கூறினார்.
“நாம் எந்தளவு கேட்கிறோமோ, அந்தளவுதான் கற்றுக்கொள்வோம்”
வெஸல் எபிரெய, கிரேக்க மொழிகளைப் படித்திருந்தார். ஆரம்பகால சர்ச் பிதாக்களின் புத்தகங்களிலிருந்து பேரளவான ஞானத்தைப் பெற்றார். பைபிளின் மூல மொழிகளிடம் அவருக்கு இருந்த ஆர்வம் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், அவருடைய காலத்துக்குப் பிறகுதான் இராஸ்மஸ், ராய்க்லன் ஆகியோர் வாழ்ந்தார்கள்.a மத சீர்திருத்தத்திற்கு முன்பு, கிரேக்க மொழியைப்பற்றி அநேகர் அறிந்திருக்கவில்லை. ஜெர்மனியில் அறிஞர்கள் சிலர் மட்டுமே கிரேக்க மொழியை அறிந்திருந்தார்கள். அந்த மொழியைக் கற்றுக்கொள்ள எந்த உதவியும் கிடைக்காதிருந்தது. 1453-ல் கான்ஸ்டான்டிநோபிள் வீழ்ச்சியடைந்த பிறகு, மேற்குப் பக்கம் ஓடிவந்த கிரேக்க துறவிகளை வெஸல் தொடர்புகொண்டதாகத் தெரிகிறது. கிரேக்க மொழியின் அடிப்படையை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். அந்தக் காலத்தில், யூதர்கள் மட்டுமே எபிரெய மொழி பேசினார்கள். மதம் மாறிய யூதர்களிடமிருந்து எபிரெய மொழியின் அடிப்படை விஷயங்களை வெஸல் கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
பைபிளை வெஸல் உளமார நேசித்தார். அதை கடவுளின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட புத்தகமாகக் கருதினார்; பைபிளிலுள்ள புத்தகங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று ஒத்திசைவாய் இருப்பதாக நம்பினார். பைபிள் வசனங்களுக்கு அளிக்கப்படும் விளக்கம் சூழமைவோடு ஒத்திருக்க வேண்டும், அதை திரித்துக்கூறக் கூடாது என்று கருதினார். அப்படித் திரித்து கூறப்படும் விளக்கங்கள் மத விரோத கருத்துகளாக இருக்கும் என்றும் நம்பினார். அவருக்குப் பிடித்த வசனங்களில் மத்தேயு 7:7-ம் ஒன்று. அது சொல்கிறது: “தேடுங்கள் [“தேடிக்கொண்டே இருங்கள்,” NW] அப்பொழுது கண்டடைவீர்கள்.” இந்த வசனம் சொல்கிறபடி, கேள்விகளைக் கேட்பது பயனுள்ளது என்று வெஸல் உறுதியாக நம்பினார். ஏனெனில் “நாம் எந்தளவு கேட்கிறோமோ அந்தளவுதான் கற்றுக்கொள்வோம்” என்று கருதினார்.
விசேஷ வேண்டுகோள்
ஆறு போப்புகளின் படுமோசமான, ஒழுக்கங்கெட்ட நடத்தையே புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்திற்கு வழிவகுத்தது. அவர்களில் முதலானவர் நான்காம் சிக்ஸ்டஸ். 1473-ல் வெஸல் ரோமுக்குச் சென்றிருந்தபோது இவரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்த நான்காம் சிக்ஸ்டஸ் “வெட்கமின்றி, வெளியரங்கமாக சுய லாபத்தையும் அரசியல் அதிகாரத்தையும் நாடி வந்த” சகாப்தத்தை உருவாக்கியவர் என்று சரித்திராசிரியரான பார்ப்ரா டபிள்யூ. டக்மன் குறிப்பிடுகிறார். பகிரங்கமாக உறவினர்களுக்குச் சலுகைகளை அளிப்பதன் மூலம் பொதுமக்களையும் சர்ச் அங்கத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். போப் அலுவலகத்தைக் குடும்பத்தார் வேலை செய்யும் இடமாக ஆக்குவதற்கு சிக்ஸ்டஸ் விரும்பியிருக்கலாம் என்று ஒரு சரித்திராசிரியர் எழுதினார். இவற்றைத் தட்டிக்கேட்க பெரும்பாலோருக்குத் துணிச்சல் இருக்கவில்லை.
என்றாலும், வெஸல் காங்ஸ்ஃபர்ட் வித்தியாசமானவர். ஒருநாள் சிக்ஸ்டஸ் அவரிடம் இவ்வாறு சொன்னார்: “மகனே, உனக்கு வேண்டியதைக் கேள், நாம் அதை உனக்குத் தருவோம்.” வெஸல் உடனடியாக பின்வருமாறு பதில் அளித்தார்: “பரிசுத்த தகப்பனே, . . . இந்தப் பூமியில் மிக உயர்ந்த ஆசாரியராகவும் மேய்ப்பராகவும் நீங்கள் பதவி வகிப்பதால், . . . ஆடுகளின் பெரிய மேய்ப்பர் . . . வரும்போது, உங்களிடம் ‘நன்றாகச் செய்தாய், உண்மையுள்ள நல்ல ஊழியனே, உன் எஜமானின் சந்தோஷத்திற்குள் பிரவேசி’ என்று சொல்லுமளவுக்கு மேலான உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்.” அது தன்னுடைய கடமையென்றும், வேறு எதையாவது தன்னிடம் கேட்கும்படியும் வெஸலிடம் சிக்ஸ்டஸ் கூறினார். அதற்கு வெஸல், “அப்படியானால் வாடிகன் நூலகத்தில் இருக்கும் கிரேக்க மற்றும் எபிரெய பைபிள்களைக் கொடுங்கள்” என்று கேட்டார். அவர் கேட்டதை போப் அவருக்குக் கொடுத்தார். ஆனால், வெஸல் முட்டாள்தனமாகச் செயல்பட்டதாகவும், அதற்குப் பதிலாக, பிஷப் பதவியைக் கேட்டிருக்கலாம் என்றும் சிக்ஸ்டஸ் கூறினார்.
“பொய், தவறு”
இப்போது புகழ்பெற்று விளங்குகிற சிஸ்டைன் தேவாலயத்தைக் கட்டுவதற்கு எக்கச்சக்கப் பணம் தேவைப்பட்டதால், இறந்தோருக்காகப் பாவ மன்னிப்பு சீட்டுகளை விற்பதில் சிக்ஸ்டஸ் இறங்கினார். இவை அதிக பிரபலமடைந்தன. கிறிஸ்துவின் பாதிரிமார்—போப்பாண்டவர்கள் ஆட்சியின் இருண்ட பக்கம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் பின்வருமாறு கூறுகிறது: “கணவனை இழந்தோர், மனைவியை இழந்தோர், பிள்ளைகளை இழந்தோர் என அனைவரும் உத்தரிக்கும் ஸ்தலத்திலிருக்கும் தங்கள் அன்பானவர்களை விடுவிப்பதற்காகத் தங்கள் பணத்தை எல்லாம் செலவழித்தார்கள்.” பாவ மன்னிப்பு சீட்டுகளைப் பொதுமக்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். இறந்துபோன தங்கள் அன்புக்குரியவர்களைப் போப்பால் நிச்சயமாகப் பரலோகத்திற்கு அனுப்ப முடியும் என்று இவர்கள் முழுமையாக நம்பினார்கள்.
என்றாலும், கத்தோலிக்க சர்ச்சுக்கோ போப்புக்கோ பாவங்களை மன்னிக்கும் சக்தி இல்லையென்று வெஸல் உறுதியாக நம்பினார். பாவ மன்னிப்பு சீட்டுகள் விற்பனையை “பொய், தவறு” என்று வெளிப்படையாகவே கூறினார். பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற அவற்றைப் பாதிரியார்களிடம் அறிக்கை செய்வதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
போப் தவறே செய்யாதவர் என்ற கருத்தையும் வெஸல் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் போப்பையே நம்பிக்கொண்டிருந்தால் அவர்களுடைய விசுவாசம் ஆட்டம்கண்டுவிடும்; ஏனெனில், போப்களும் தவறுகளைச் செய்திருக்கிறார்கள் என்று வெஸல் கூறினார். “மதகுருமார் கடவுளுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, தங்களுடைய கட்டளைகளைப் புகுத்தினால், . . . அவர்கள் சொல்வதும் செய்வதும் வீணானதாய் இருக்கும்” என்று வெஸல் எழுதினார்.
சீர்திருத்தத்திற்கு வழிவகுக்கிறார் வெஸல்
வெஸல் 1489-ல் இறந்தார். சர்ச்சின் தவறுகள் சிலவற்றை அவர் எதிர்த்தபோதிலும், அவர் கத்தோலிக்க மதத்தைவிட்டு விலகவில்லை. சர்ச்சும் அவரை மத விரோதி என்று கண்டிக்கவில்லை. என்றாலும், அவருடைய மரணத்திற்குப் பிறகு, மத தீவிரவாதிகளான கத்தோலிக்க துறவிகள் அவருடைய புத்தகங்களை அழிக்க முயற்சி செய்தார்கள். காரணம், அவை சர்ச் போதனைகளோடு ஒத்துப்போகவில்லை. லூத்தர் காலத்திற்குள், வெஸலின் பெயர் மறக்கப்பட்டு விட்டதென்றே சொல்லலாம். அவருடைய புத்தகங்கள் எவையும் பிரசுரிக்கப்படவில்லை. வெகு சில கையெழுத்துப் பிரதிகளே பாதுகாப்பாய் இருந்தன. கடைசியாக, வெஸலின் புத்தகங்களில் ஒன்று 1520-க்கும் 1522-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் முதன்முதலில் பிரசுரிக்கப்பட்டது. அப்புத்தகத்தில் லூத்தர் எழுதிய கடிதமும் சேர்க்கப்பட்டிருந்தது. வெஸலின் கருத்துகளைப் படிக்கும்படி அதில் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
லூத்தரைப் போல வெஸல் ஒரு சீர்திருத்தவாதி அல்ல என்பது உண்மையே. ஆனால், மத சீர்திருத்தத்திற்கு வழிவகுத்த சில தவறுகளை வெஸல் பகிரங்கமாக கண்டனம் செய்திருந்தார். “மத சீர்திருத்தத்திற்கு வித்திட்ட ஜெர்மானியர்களில் இவர் மிக முக்கியமானவர்” என்று மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங் என்பவர்கள் எழுதிய சைக்ளோப்பீடியா இவரைப்பற்றிக் கூறுகிறது.
தனக்கும் வெஸலுக்கும் ஒத்த கருத்து இருப்பதாக லூத்தர் நம்பினார். எழுத்தாளரான சி. அகஸ்டைன் பின்வருமாறு எழுதுகிறார்: “தன் காலத்தையும் அதன் விளைவையும் எலியாவின் காலத்திற்கு லூத்தர் ஒப்பிடுகிறார். கடவுளுடைய யுத்தங்களில் பங்கேற்க தான் மாத்திரமே மீந்திருப்பதாக எலியா தீர்க்கதரிசி நினைத்தார். அதுபோல, சர்ச்சுடன் போராட தான் மாத்திரமே இருப்பதாக லூத்தரும் நினைத்தார். ஆனால், வெஸலின் புத்தகங்களைப் படித்த பிறகு, கர்த்தர் ‘இஸ்ரவேலில் மீதியானோரைக்’ காப்பாற்றியிருக்கிறார் என்பதை உணர்ந்தார்.” அப்புத்தகம் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறது: “லூத்தர் பின்வருமாறும் சொல்லியிருக்கிறார்: ‘வெஸலின் புத்தகங்களை நான் ஏற்கெனவே படித்திருந்தால், எல்லாவற்றையும் வெஸலிடம் இருந்தே நான் கற்றுக்கொண்டதாக என் எதிரிகள் நினைத்திருப்பார்கள். எங்கள் இருவரின் கருத்துகளும் அந்தளவு ஒத்திருக்கின்றன.’”b
“கண்டடைவீர்கள்”
மத சீர்திருத்தம் திடுதிப்பென்று ஒரேநாளில் ஏற்பட்டுவிடவில்லை. சில காலத்திற்கு முன்பிருந்தே மத சீர்திருத்தத்திற்கு வழிவகுத்த கருத்துகள் வெளிவர தொடங்கிவிட்டன. போப்புகளின் சீர்கெட்ட நிலையைப் பார்த்து, சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான உந்துதல் காலப்போக்கில் ஏற்பட்டுவிடும் என்று வெஸல் நம்பினார். மாணவன் ஒருவனிடம் ஒருசமயம் அவர் பின்வருமாறு கூறினார்: “படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவனே, . . . சச்சரவில் ஈடுபடும் இறையியலாளர்களை உண்மைக் கிறிஸ்தவ அறிஞர்கள் அனைவரும் ஒதுக்கித் தள்ளும் . . . காலம் வருவதை நீ காண்பாய்.”
தன் நாளில் நடந்த தவறுகளையும் சீர்கெட்ட பழக்கங்களையும் வெஸல் கண்டுணர்ந்தபோதிலும், பைபிள் சத்தியத்தின் முழுமையான ஒளியை அவரால் பிரகாசிக்கச் செய்ய முடியவில்லை. என்றாலும், பைபிளை வாசித்து, கருத்தூன்றிப் படிக்க வேண்டுமென்று அவர் நம்பினார். “பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளே, மத சம்பந்தமான விஷயங்களில் இறுதி தீர்மானம் எடுக்க உதவும்” என்று வெஸல் நம்பியதாக கிறிஸ்தவத்தின் சரித்திரம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் கூறுகிறது. இன்றும், உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளின் தூண்டுதலால் பைபிள் எழுதப்பட்டதென நம்புகிறார்கள். (2 தீமோத்தேயு 3:16) ஆனால், தற்போது பைபிள் சத்தியங்கள் புரியாப் புதிராகவோ கண்டுபிடிக்க கடினமானவையாகவோ இல்லை. கடந்த காலத்தைவிட இப்போதுதான் பின்வரும் பைபிள் நியமம் உண்மையாக இருக்கிறது: “தேடுங்கள் [“தேடிக்கொண்டே இருங்கள்,” NW], அப்பொழுது கண்டடைவீர்கள்.”—மத்தேயு 7:7; நீதிமொழிகள் 2:1-6.
[அடிக்குறிப்புகள்]
a மற்றவர்கள் பைபிளின் மூல மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு இவர்கள் பெரும் பங்காற்றினார்கள். 1506-ல் ராய்க்லன் எபிரெய இலக்கண புத்தகத்தைப் பிரசுரித்தார். இது எபிரெய வேதாகமத்தை கருத்தூன்றி படிப்பதற்கு வழிவகுத்தது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மூல வாக்கியத்தை 1516-ல் இராஸ்மஸ் வெளியிட்டார்.
b வெஸல் காங்ஸ்ஃபர்ட் (1419-1489) அண்ட் நார்தர்ன் ஹ்யூமனிஸம், பக்கங்கள் 9, 15.
[பக்கம் 14-ன் பெட்டி/படம்]
வெஸலும் கடவுளுடைய பெயரும்
தான் எழுதிய புத்தகங்களில் கடவுளுடைய பெயரை “யொஹாவா” என்றே வெஸல் பெரும்பாலும் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும், “யிஹோவா” என்ற பெயரைக் குறைந்தபட்சம் இருமுறையாவது அவர் பயன்படுத்தியிருக்கிறார். எழுத்தாளர் எச். ஏ. ஓபர்மான் வெஸலின் கருத்துகளின் பேரில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில், தாமஸ் அக்வினாஸுக்கும் மற்றவர்களுக்கும் எபிரெய மொழி தெரிந்திருந்தால், “மோசேக்கு வெளிப்படுத்தப்பட்ட கடவுளுடைய பெயரின் அர்த்தம் ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்’ என்பதல்ல, மாறாக ‘எப்படி ஆக வேண்டுமோ, அப்படி ஆவேன்’ என்பதே என்று அறிந்திருப்பார்கள்” என்று வெஸல் கருதியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.c புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிள் அந்த வசனத்தின் சரியான அர்த்தத்தை அளிக்கிறது: “நான் என்னவாக ஆக வேண்டுமோ அவ்வாறாகவே ஆவேன்.”—யாத்திராகமம் 3:13, 14, NW.
[அடிக்குறிப்பு]
c வெஸல் காங்ஸ்ஃபர்ட் (1419-1489) அண்ட் நார்தர்ன் ஹ்யூமனிஸம், பக்கம் 105.
[படத்திற்கான நன்றி]
கையெழுத்துப் பிரதி: Universiteitsbibliotheek, Utrecht
[பக்கம் 15-ன் படங்கள்]
போப் நான்காம் சிக்ஸ்டஸின் அங்கீகாரத்தோடு நடைபெற்ற பாவ மன்னிப்பு சீட்டு விற்பனையை வெஸல் எதிர்த்தார்