மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்தல்
“உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.”—மத்தேயு 20:26.
1. மேன்மை பற்றிய இவ்வுலகின் சிந்தை என்ன?
பண்டைக்கால எகிப்திய நகரமான தீப்ஸ்ஸுக்கு (இன்றைய கேர்னாக்) அருகே, கெய்ரோவுக்கு தெற்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் 18 மீட்டர் உயர சிலை ஒன்று நிற்கிறது; மூன்றாம் பார்வோன் ஏமென்ஹோடெப்பின் சிலை அது. இந்த மாபெரும் சிலைக்கு முன்னால் ஒருவர் நிற்கும்போது தான் ஒரு துரும்பைப் போல இருப்பதாகவே உணருவார். இந்த நினைவுச் சின்னம் அந்த அரசன் மீது பயபக்தியை ஏற்படுத்துவதற்காகவே எழுப்பப்பட்டிருக்கிறது. இது மேன்மை பற்றிய இந்த உலகின் சிந்தைக்கு ஓர் அடையாளமாகும்; அதாவது, ஒருவர் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு தன்னை பெரியவராயும் முக்கியமானவராயும் காட்டி மற்றவர்களை அற்பமானவர்களாக உணரச் செய்வதே மேன்மை என உலகம் கருதுகிறது.
2. தம்மைப் பின்பற்றியவர்களுக்கு இயேசு என்ன முன்மாதிரி வைத்தார், நம்மை நாமே என்ன கேள்விகளை கேட்டுக்கொள்வது அவசியம்?
2 மேன்மை பற்றிய இந்த சிந்தைக்கும் இதைக் குறித்து இயேசு கிறிஸ்து கற்பித்ததற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். தம்மைப் பின்பற்றியவர்களுக்கு அவர் ‘ஆண்டவரும் போதகருமாய்’ இருந்தபோதிலும், மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலமே மேன்மை கிடைக்கிறது என அவர்களுக்கு கற்பித்தார். தமது பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி நாளன்று, சீஷர்களுடைய கால்களை கழுவியதன் மூலம் தாம் கற்பித்ததன் அர்த்தத்தை விளக்கிக் காட்டினார். எப்பேர்ப்பட்ட தாழ்மையான சேவை! (யோவான் 13:4, 5, 14) சேவை செய்வதா, சேவை பெறுவதா—இதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? கிறிஸ்துவின் முன்மாதிரி அவரைப் போலவே தாழ்மையோடிருக்க வேண்டுமென்ற ஆசையை நம்மில் தூண்டிவிடுகிறதா? அப்படியானால், மேன்மை குறித்த கிறிஸ்துவின் சிந்தை இவ்வுலகில் பொதுவாக காணப்படுகிற சிந்தையிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை நாம் ஆராயலாம்.
மேன்மை பற்றிய உலகின் சிந்தையை ஒதுக்கித் தள்ளுங்கள்
3. மற்ற மனிதரிடமிருந்து மகிமை பெற ஏங்கியவர்களுக்கு கிடைத்த சோகமான விளைவுகளை எந்த பைபிள் உதாரணங்கள் காட்டுகின்றன?
3 மேன்மை பற்றிய உலகின் சிந்தை தோல்விக்கே அடிகோலும் என்பதைக் காட்டும் எண்ணற்ற பைபிள் உதாரணங்கள் உள்ளன. செல்வாக்குமிக்க ஆமானைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். எஸ்தர், மொர்தெகாய் காலத்தில் இவர் பெர்சிய அரசவையில் ஒரு முக்கிய நபராக இருந்தார். மேன்மைக்கான தணியா ஆசை அவருக்கு தலைகுனிவையும் மரணத்தையும் விளைவித்தது. (எஸ்தர் 3:5; 6:10-12; 7:9, 10) தன்னுடைய ஆட்சி கொடிகட்டிப் பறந்த சமயத்தில் பைத்தியமாக ஆன கர்வமுள்ள நேபுகாத்நேச்சாரைப் பற்றி என்ன சொல்லலாம்? “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என சொன்னார்; மேன்மை பற்றிய தவறான எண்ணம் அவருக்கு இருந்ததை இந்த வார்த்தைகள் காண்பிக்கின்றன. (தானியேல் 4:30) அடுத்ததாக பெருமை பிடித்த முதலாம் ஏரோது அகிரிப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கடவுளுக்கு மகிமை சேர்ப்பதற்கு பதிலாக தகுதியற்ற தனக்கே அந்த மகிமையை சேர்த்துக்கொண்டார். அதனால் அவர் ‘புழுப்புழுத்து இறந்தார்.’ (அப்போஸ்தலர் 12:21-23) மேன்மை பற்றிய யெகோவாவின் சிந்தையை புரிந்துகொள்ள தவறியதால் இவர்கள் எல்லாரும் அவமானத்தில் தாழ்த்தப்பட்டு போனார்கள்.
4. இந்த உலகில் காணப்படும் அகந்தை எனும் மனப்பான்மைக்கு மூலகாரணன் யார்?
4 மதிப்பு மரியாதையோடு வாழ வேண்டுமென நாம் விரும்புவது சரியே. இருந்தாலும், இந்த ஆசையை பிசாசு தனக்கு சாதகமாய் பயன்படுத்தி தனக்குள் இருக்கும் அகந்தையை நமக்குள் ஏற்றி விடுகிறான். (மத்தேயு 4:8, 9) அவன், ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ என்பதையும் தன்னுடைய சிந்தையை இந்த உலகத்தில் பரப்ப உறுதிபூண்டிருக்கிறான் என்பதையும் மறந்து விடாதீர்கள். (2 கொரிந்தியர் 4:4; எபேசியர் 2:2; வெளிப்படுத்துதல் 12:9) ஆகவே, அப்படிப்பட்ட சிந்தைக்கு மூலகாரணன் யார் என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருப்பதால், மேன்மை பற்றிய உலகின் சிந்தையை அவர்கள் ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.
5. சாதனை, புகழ், பணம் நிலையான மனநிறைவை அளிக்குமா? விளக்கவும்.
5 இந்த உலகில் பெரும் புள்ளியாக இருந்து, பெயரையும் புகழையும் பெற்று, கை நிறைய காசு சம்பாதித்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதுதான் பிசாசு தூண்டிவிடும் ஓர் எண்ணம். இது உண்மையா? சாதனையும், புகழும், பணமும் திருப்தியான வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கின்றனவா? இப்படிப்பட்ட சிந்தையால் மோசம் போகாதிருங்கள் என பைபிள் நம்மை எச்சரிக்கிறது. ஞானியான சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.” (பிரசங்கி 4:4) இந்த உலகில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் பலர், தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட அந்த பைபிள் ஆலோசனை நூற்றுக்கு நூறு உண்மையே என்பதை ஒத்துக்கொள்வார்கள். உதாரணமாக, ஒருவர் சந்திரனுக்கு செல்வதற்காக ஒரு விண்கலத்தை வடிவமைத்து, உருவாக்கி, சோதனையும் செய்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “அந்த வேலையில் நான் கடுமையாக உழைத்தேன், அதில் திறம்பட்டவனாகவும் ஆனேன். ஆனால் அத்தனையும் வீண்; அவற்றால் எனக்கு நிரந்தர சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கவேயில்லை.”a தொழிலிலோ, போட்டி விளையாட்டிலோ, பொழுதுபோக்கிலோ எதிலானாலும் சரி மேன்மை பற்றிய இந்த உலகின் கருத்து நிலையான மனநிறைவை அளிக்காது.
அன்பினால் தூண்டப்பட்ட சேவை மூலம் மேன்மையடைதல்
6. மேன்மை பற்றி யாக்கோபுக்கும் யோவானுக்கும் தவறான சிந்தை இருந்ததை எது காட்டுகிறது?
6 உண்மையான மேன்மையில் என்ன உட்பட்டுள்ளது என்பதை இயேசுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் காட்டுகிறது. பொ.ச. 33-ல் பஸ்காவுக்காக இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேமுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். போகும் வழியில், இயேசுவின் உறவினர்களாக இருந்த யாக்கோபும் யோவானும் மேன்மை பற்றிய தவறான எண்ணத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்களுடைய தாயின் மூலம் இயேசுவிடம் இந்த வேண்டுகோளை விடுத்தனர்: ‘உம்முடைய ராஜ்யத்திலே உமது வலது பாரிசத்திலும், உமது இடது பாரிசத்திலும் நாங்கள் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும்.’ (மத்தேயு 20:21) வலது பாரிசத்திலோ இடது பாரிசத்திலோ உட்காருவதை யூதர்கள் கௌரவமாக கருதினர். (1 இராஜாக்கள் 2:19) யாக்கோபும் யோவானும் பேராசையுடன் அந்த விசேஷ ஸ்தானங்களை கைப்பற்ற முயன்றனர். இந்த உயர்ந்த ஸ்தானங்கள் தங்களுக்கு வேண்டுமென்பதை வலியுறுத்த விரும்பினர். அவர்கள் மனதை அறிந்த இயேசு, மேன்மை பற்றிய அவர்களுடைய தவறான சிந்தையை திருத்துவதற்கு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினார்.
7. உண்மையான கிறிஸ்தவ மேன்மையை அடைவதற்குரிய வழியை இயேசு எப்படி விவரித்தார்?
7 மற்றவர்களை அதட்டிக்கொண்டும் அதிகாரம் செய்துகொண்டும் கை சொடுக்கிய மாத்திரத்திலேயே தனக்கு வேண்டியவற்றை பெற்றுக்கொண்டும் இருப்பவரையே இந்த அகந்தைமிக்க உலகம் மேன்மையானவரென கருதுகிறது என்பதை .இயேசு அறிந்திருந்தார். ஆனால் அவரைப் பின்பற்றுவோருக்கு, தாழ்மையான சேவை செய்வதே மேன்மையை அளவிடும் அளவுகோலாக இருக்கிறது. “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” என இயேசு சொன்னார்.—மத்தேயு 20:26, 27.
8. ஊழியக்காரனாய் இருப்பதன் அர்த்தம் என்ன, நாம் என்ன கேள்விகளை கேட்டுக் கொள்ளலாம்?
8 பைபிளில் ‘ஊழியக்காரன்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக ஊக்கத்தோடு அயராது உழைப்பவரை குறிக்கிறது. இதைச் செய், அதைச் செய் என கட்டளையிடுவதால் ஒருவர் மேன்மையானவராக ஆகிவிடுவதில்லை; அன்பினால் தூண்டப்பட்டு மற்றவர்களுக்கு சேவை செய்யும் ஒருவரே மேன்மையானவர் என்ற முக்கிய பாடத்தை இயேசு தம் சீஷர்களுக்கு கற்பித்தார். அப்படியானால், உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யாக்கோபு அல்லது யோவானின் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? அன்பினால் தூண்டப்பட்டு சேவை செய்வதன் மூலமே உண்மையான மேன்மை கிடைக்கிறது என்ற குறிப்பை நான் உணர்ந்திருப்பேனா?’—1 கொரிந்தியர் 13:3.
9. மற்றவர்களிடம் நடந்துகொள்வதில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?
9 மேன்மை பற்றிய உலகின் தராதரமும் கிறிஸ்துவின் தராதரமும் ஒன்றல்ல; இதை இயேசு தம் சீஷர்களுக்கு காண்பித்தார். தாம் சேவை செய்த ஜனங்கள் மத்தியில் அவர் ஒருபோதும் தம்மை உயர்த்திக் கொள்ளவில்லை; தாங்கள் தாழ்ந்தவர்கள் என அந்த ஜனங்கள் உணரும்படியும் செய்யவில்லை. மக்கள் எல்லாருமே—ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், செல்வந்தர்கள், ஏழைகள், அதிகாரமுள்ளவர்கள், யாவரறிந்த பாவிகள் என எல்லாருமே—அவரை சங்கோஜமின்றி அணுகினர். (மாற்கு 10:13-16; லூக்கா 7:37-50) பலவீனரிடத்தில் மக்கள் பெரும்பாலும் பொறுமையின்றியே நடந்துகொள்கிறார்கள். ஆனால் இயேசு அப்படி நடந்துகொள்ளவில்லை. தம்முடைய சீஷர்கள் சில சமயங்களில் முன்யோசனையின்றி நடந்துகொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் இருந்தபோதிலும், அவர் பொறுமையோடு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இவ்வாறு தாம் உண்மையில் தாழ்மையும் சாந்தமும் உடையவர் என்பதை வெளிக்காட்டினார்.—சகரியா 9:9; மத்தேயு 11:29; லூக்கா 22:24-27.
10. இயேசு சுயநலம் கருதாமல் மற்றவர்களுக்கு சேவை செய்தார் என்பதை அவருடைய வாழ்க்கைப் போக்கு எப்படி காட்டியது?
10 உண்மையில் மேன்மையின் அர்த்தம் என்ன என்பதை கடவுளது ஒப்பற்ற மகன் வைத்த சுயநலமற்ற முன்மாதிரி நிரூபித்துக் காட்டியது. மற்றவர்கள் தமக்கு சேவை செய்வதற்காக அல்ல, ஆனால் தாம் பிறருக்கு சேவை செய்வதற்காகவே இயேசு பூமிக்கு வந்தார்; ஆம், ‘பலவிதமான வியாதிகளை’ குணப்படுத்துவதற்கும் ஜனங்களை பிசாசின் பிடியிலிருந்து விடுவிப்பதற்குமே பூமிக்கு வந்தார். அவர் களைப்படைந்து, ஓய்வெடுக்க விரும்பியபோதிலும், தம்முடைய தேவைகளைவிட பிறருடைய தேவைகளுக்கே முதலிடம் கொடுத்தார், அவர்களை தேற்றுவதற்கு மிகுந்த பிரயாசமும் எடுத்தார். (மாற்கு 1:32-34; 6:30-34; யோவான் 11:11, 17, 33) அதோடு, ஆவிக்குரிய விதத்தில் மக்களுக்கு உதவுவதற்காக ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்க புழுதியான சாலைகளில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்தார். இதை செய்ய அன்பு அவரை தூண்டியது. (மாற்கு 1:38, 39) மற்றவர்களுக்கு சேவை செய்வதை மிக முக்கியமானதாக இயேசு கருதினார் என்பதில் சந்தேகமில்லை.
கிறிஸ்துவின் தாழ்மையை பின்பற்றுங்கள்
11. சபையில் கண்காணிகளாக சேவிக்க நியமிக்கப்படும் சகோதரர்களிடம் என்ன தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன?
11 கடவுளுடைய ஜனங்களின் தேவைகளை கவனிப்பதற்கு 1800-களின் இறுதியில் பயணக் கண்காணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய சரியான மனப்பான்மை வலியுறுத்திக் காட்டப்பட்டது. சீயோனின் காவற்கோபுரம், (ஆங்கிலம்) செப்டம்பர் 1, 1894 குறிப்பிட்டபடி, “மனத்தாழ்மையுள்ள நபர்களே, அதாவது தங்களைப் பற்றி அல்லாமல் கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிக்கும் கர்வமில்லாத . . . தாழ்மையுள்ள நபர்களே எதிர்பார்க்கப்பட்டனர்; ஆம், தங்களுடைய சொந்த அறிவை அல்ல, ஆனால் கடவுளுடைய வார்த்தையை எளிமையோடும் வல்லமையோடும் அறிவிப்பவர்களே” எதிர்பார்க்கப்பட்டனர். ஆகவே, உண்மை கிறிஸ்தவர்கள் தங்களுடைய சொந்த இலக்கை எட்டுவதற்கோ, முதன்மை நிலையை அடைவதற்கோ, அதிகாரத்தைப் பெறுவதற்கோ, பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கோ சபையில் பொறுப்பு வகிக்க விரும்பக் கூடாது. தன் பொறுப்புகள், தனக்கு மகிமை கொண்டுவரும் ஓர் உயர்ந்த ஸ்தானத்தை அல்ல, ஆனால் ஒரு ‘நல்ல வேலையையே’ உட்படுத்துகின்றன என்பதை ஒரு கண்காணி நினைவில் வைக்கிறார். (1 தீமோத்தேயு 3:1, 2) எல்லா மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தாழ்மையுடன் மற்றவர்களுக்கு சேவை செய்கிறபோதும் பரிசுத்த சேவையில் முன்னின்று வழிநடத்துகிறபோதும் தங்களாலானதை செய்ய வேண்டும்; இவ்வாறு, மற்றவர்கள் பின்பற்றுவதற்கு தகுந்த முன்மாதிரி வைக்க வேண்டும்.—1 கொரிந்தியர் 9:19; கலாத்தியர் 5:13; 2 தீமோத்தேயு 4:5.
12. சபையில் சிலாக்கியங்களை பெற விரும்புகிறவர்கள் என்ன கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம்?
12 சிலாக்கியங்களை பெற விரும்பும் எந்த சகோதரரும் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கலாம்: ‘மற்றவர்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பங்களை தேடுகிறேனா, அல்லது மற்றவர்கள் எனக்கு சேவை செய்யும்படி விரும்புகிறேனா? மற்றவர்கள் கவனியாத பயனுள்ள வேலைகளை செய்ய நான் மனமுள்ளவனாக இருக்கிறேனா?’ உதாரணமாக, ஓர் இளைஞர் கிறிஸ்தவ சபையில் பேச்சுக்களை கொடுக்க தயாராக இருக்கலாம், ஆனால் வயதானவர்களுக்கு உதவி செய்ய அவர் தயங்கக்கூடும். சபையில் பொறுப்புள்ள சகோதரர்களுடன் கூட்டுறவு வைத்துக்கொள்ள அவர் விரும்பலாம், ஆனால் பிரசங்க வேலையில் பங்குகொள்ள அவருக்கு மனமில்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட ஓர் இளைஞர் தன்னையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கடவுளுடைய சேவையில் மற்றவர்களின் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கிற அம்சங்களுக்கு மட்டுமே முக்கியமாய் நான் கவனம் செலுத்துகிறேனா? மற்றவர்கள் முன்பாக என்னை முக்கியமான நபராக காட்டிக்கொள்ள முயலுகிறேனா?’ நமக்கு நாமே மகிமை தேடிக்கொள்வது நிச்சயம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான அடையாளமல்ல.—யோவான் 5:41.
13. (அ) மனத்தாழ்மைக்கு ஒரு கண்காணி வைக்கும் முன்மாதிரி எப்படி மற்றவர்களை பாதிக்கலாம்? (ஆ) மனத்தாழ்மை ஒரு கிறிஸ்தவரின் விருப்பத்திற்கு விடப்படும் ஒன்றல்ல என ஏன் சொல்லலாம்?
13 கிறிஸ்துவின் மனத்தாழ்மையை பின்பற்ற நாம் கடினமாக முயலுகையில், மற்றவர்களுக்கு சேவை செய்ய தூண்டப்படுகிறோம். யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கிளை அலுவலகத்தின் பணிகளை மேற்பார்வையிட வந்த ஒரு மண்டலக் கண்காணியின் உதாரணத்தை கவனியுங்கள். அவருக்கு ஏகப்பட்ட வேலையும் நிறைய பொறுப்புகளும் இருந்தபோதிலும் பிரசுரங்களுக்கான ‘பின்னிங்’ மெஷினில் செட்டிங்கை சரிசெய்ய போராடிக் கொண்டிருந்த ஓர் இளம் சகோதரரை பார்த்ததும் நின்று அவருக்கு உதவி செய்தார். “எனக்கு ஒரே ஆச்சரியமாக போய்விட்டது” என அந்த இளம் சகோதரர் சொன்னார். “இளவயதில் பெத்தேலில் சேவை செய்த சமயத்தில் இதே மாதிரி மெஷினை அவர் இயக்கியதாகவும் அதனுடைய செட்டிங்கை சரியாக அமைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது நினைவிருப்பதாகவும் சொன்னார். அவருக்கு வேறுபல முக்கிய வேலைகள் இருந்தபோதிலும் என்னோடு கொஞ்ச நேரம் இருந்து அந்த மெஷினில் வேலை பார்த்தார். அது உண்மையிலேயே என் மனதைத் தொட்டது” என அவர் மேலுமாக சொன்னார். தற்போது யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கிளை அலுவலகத்தில் கண்காணியாக சேவை செய்யும் இந்த சகோதரர், மண்டலக் கண்காணி காட்டிய மனத்தாழ்மையை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார். சாதாரண வேலைகளை செய்ய முடியாதளவுக்கு நாம் உயர்ந்தவர்கள் என்றோ அற்ப வேலைகளை செய்ய முடியாதளவுக்கு முக்கியமானவர்கள் என்றோ ஒருபோதும் நினையாதிருப்போமாக. மறுபட்சத்தில், நாம் ‘மனத்தாழ்மையை’ தரித்துக்கொள்ள வேண்டும். இது நம் விருப்பத்திற்கு விடப்பட்ட ஒன்றல்ல. இது ஒரு கிறிஸ்தவர் கட்டாயம் தரித்துக்கொள்ள வேண்டிய ‘புதிய மனுஷனின்,’ அதாவது புதிய சுபாவத்தின் ஒரு பாகமாகும்.—பிலிப்பியர் 2:3; கொலோசெயர் 3:10, 12; ரோமர் 12:16.
மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை அடையும் விதம்
14. கடவுளோடும் சக மனிதரோடும் உள்ள உறவைப் பற்றி தியானிப்பது மேன்மை பற்றிய சரியான சிந்தையை வளர்க்க நமக்கு எப்படி உதவும்?
14 மேன்மை பற்றிய சரியான சிந்தையை நாம் எப்படி அடையலாம்? யெகோவா தேவனோடுள்ள நம் உறவைப் பற்றி தியானிப்பதே அதற்கு ஒரு வழி. அவருடைய மாட்சிமை, வல்லமை, ஞானம் ஆகியவற்றிற்கு முன்னால் அற்ப மனிதரின் அறிவு, அந்தஸ்து எல்லாம் ஒன்றுமே இல்லை. (ஏசாயா 40:22) சக மனிதரோடுள்ள உறவைப் பற்றி தியானிப்பதும்கூட மனத்தாழ்மையை வளர்க்க நமக்கு உதவுகிறது. உதாரணமாக, சில துறைகளில் மற்றவர்களை நாம் விஞ்சிவிடலாம், ஆனால் வாழ்க்கையில் அதைவிட முக்கியமான அம்சங்களில் அவர்கள் சிறந்து விளங்கலாம்; அல்லது நம்மிடம் இல்லாத சில சிறந்த பண்புகள் நம் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இருக்கலாம். சொல்லப்போனால், கடவுளுடைய பார்வையில் அருமையானவர்களாய் இருக்கும் அநேகர் தங்களுடைய அமைதலான, தாழ்மையான சுபாவத்தின் காரணமாக மற்றவர்கள் மத்தியில் தனித்து விளங்க விரும்புவதில்லை.—நீதிமொழிகள் 3:34; யாக்கோபு 4:6.
15. எவருமே மற்றவர்களைவிட தங்களை உயர்வாக கருதுவதற்கு இடமில்லை என்பதை கடவுளுடைய ஜனங்களின் உத்தமத்தன்மை எப்படி காட்டுகிறது?
15 விசுவாசத்தின் நிமித்தம் துன்புற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள் இந்த விஷயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். உலகத்தாரால் அற்பமாக கருதப்பட்டவர்களே பெரும்பாலும் கடும் சோதனையின் கீழ் கடவுளுக்கு தங்கள் உத்தமத்தன்மையை காத்துக்கொண்டார்கள். அந்த உதாரணங்களை சிந்தித்துப் பார்ப்பது மனத்தாழ்மையை காத்துக்கொள்வதற்கும் ‘நம்மைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்’ இருப்பதற்கும் உதவும்.—ரோமர் 12:3.b
16. இயேசு வைத்த மாதிரியைப் பின்பற்றி சபையில் உள்ள அனைவரும் எப்படி மேன்மை பற்றிய சிந்தையை வளர்க்கலாம்?
16 இளைஞரும் முதியோருமாகிய கிறிஸ்தவர்கள் அனைவரும் மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வளர்க்க முயல வேண்டும். சபையில், பல்வேறு வேலைகள் இருக்கின்றன. அற்பமாக தோன்றும் வேலைகளை செய்யும்படி கேட்கப்பட்டால் ஒருபோதும் வெறுப்படையாதீர்கள். (1 சாமுவேல் 25:41; 2 இராஜாக்கள் 3:11) பெற்றோரே, ராஜ்ய மன்றத்திலோ அசெம்பிளி அல்லது மாநாடு நடக்கும் இடத்திலோ கொடுக்கப்படும் எந்த வேலையையும் இன்முகத்தோடு செய்ய உங்களுடைய சிறுபிள்ளைகளையும் டீனேஜ் பிள்ளைகளையும் ஊக்குவிக்கிறீர்களா? அப்படிப்பட்ட வேலைகளை நீங்கள் செய்வதை அவர்கள் பார்க்கிறார்களா? யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் சேவை செய்யும் ஒரு சகோதரர், தன் பெற்றோர் வைத்த முன்மாதிரியை இன்னும் மனதில் பசுமையாக வைத்திருக்கிறார். அவர் இவ்வாறு சொன்னார்: “ராஜ்ய மன்றத்தையோ மாநாட்டு மையத்தையோ சுத்தம் செய்யும் வேலையை என் பெற்றோர் கருதிய விதம், அதை எவ்வளவு முக்கியமானதாக நினைத்தார்கள் என்பதை எனக்கு உணர்த்தியது. அற்பமானதாக தோன்றும் எந்த வேலையையும், சபையின் நன்மைக்காகவோ சகோதரர்களுக்காகவோ செய்ய அவர்கள் எப்போதும் முன்வந்தார்கள். இங்கு பெத்தேலில் எந்த வேலையையும் மனமுவந்து ஏற்றுக்கொள்ள அவர்களுடைய மனப்பான்மை எனக்கு உதவியிருக்கிறது.”
17. தாழ்மையுள்ள பெண்கள் எவ்விதங்களில் சபைக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம்?
17 பிறருடைய அக்கறைகளை நம்முடைய அக்கறைகளுக்கு மேலாக வைப்பதில் நமக்கு மிகச்சிறந்த ஓர் உதாரணம் உள்ளது. அது எஸ்தரின் உதாரணம். அவள் பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பெர்சிய சாம்ராஜ்யத்தின் ராணியானாள். அரண்மனையில் வாழ்ந்தாலும், கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக அவளுடைய ஜனங்கள் சார்பில் தன் உயிரை பணயம் வைக்க முன்வந்தாள். (எஸ்தர் 1:5, 6; 4:14-16) இன்றும் கிறிஸ்தவ பெண்கள், தங்கள் பொருளாதார சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், எஸ்தரின் அதே மனநிலையை காட்டலாம். மனச்சோர்வுற்றோரை உற்சாகப்படுத்துவது, சுகவீனரை சென்று பார்ப்பது, பிரசங்க வேலையில் ஈடுபடுவது, மூப்பர்களோடு ஒத்துழைப்பது ஆகியவற்றின் மூலம் அந்த மனநிலையைக் காட்டலாம். அப்படிப்பட்ட தாழ்மையுள்ள சகோதரிகள் சபைக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!
மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையால் வரும் ஆசீர்வாதங்கள்
18. மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வெளிக்காட்டுவதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன?
18 மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வளர்ப்பதால் அநேக நன்மைகளை அடையலாம். சுயநலமின்றி மற்றவர்களுக்கு சேவை செய்வதால் அவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கிறது. (அப்போஸ்தலர் 20:35) சகோதரர்களுக்காக நீங்கள் மனப்பூர்வமாயும் உற்சாகமாயும் உழைக்கும்போது அவர்களுக்கு நீங்கள் மிகவும் பிரியமானவராக ஆகிறீர்கள். (அப்போஸ்தலர் 20:37, 38) மிக முக்கியமாக, சக கிறிஸ்தவர்களின் நலனுக்காக நீங்கள் செய்யும் காரியத்தை தமக்கு புகழ் சேர்க்கும் இனிய பலியாக யெகோவா கருதுகிறார்.—பிலிப்பியர் 2:17.
19. மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தை சம்பந்தமாக நமது தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
19 நாம் எல்லாருமே நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து இவ்வாறு கேட்டுக்கொள்வது அவசியம்: ‘மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வளர்ப்பது பற்றி நான் வெறும் வாய்பேச்சோடு நிறுத்திக்கொள்வேனா, அல்லது அதை வளர்க்க ஊக்கமாக உழைப்பேனா?’ மனமேட்டிமையுள்ளவர்களை யெகோவா எப்படி கருதுகிறார் என்பது தெளிவாக உள்ளது. (நீதிமொழிகள் 16:5; 1 பேதுரு 5:5) மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வெளிப்படுத்துவதில் நாம் பூரிப்படைகிறோம் என்பதை செயலில் காட்டுவோமாக; கிறிஸ்தவ சபையில், குடும்ப வாழ்க்கையில், அன்றாடம் சக மனிதரோடுள்ள தொடர்புகளில் என அனைத்து அம்சங்களிலும் அதைக் காட்டுவோமாக.—1 கொரிந்தியர் 10:31.
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில காவற்கோபுரம், மே 1, 1982 பக்கங்கள் 3-6-ல் “வெற்றியைத் தேடி” என்ற கட்டுரையைக் காண்க.
b உதாரணங்களுக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1992, (ஆங்கிலம்) பக்கங்கள் 181-2 மற்றும் காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1993, பக்கங்கள் 27-31-ஐக் காண்க.
விளக்க முடியுமா?
• மேன்மை பற்றிய உலகின் சிந்தையை நாம் ஏன் ஒதுக்கித்தள்ள வேண்டும்?
• மேன்மையை இயேசு எவ்வாறு அளவிட்டார்?
• கிறிஸ்துவின் மனத்தாழ்மையை கண்காணிகள் எப்படி பின்பற்றலாம்?
• மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வளர்க்க எது நமக்கு உதவும்?
[பக்கம் 17-ன் பெட்டி]
மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை கொண்டிருப்பவர் யார்?
சேவையை பெற விரும்புகிறவரா அல்லது சேவை செய்ய முன்வருபவரா?
பிறருடைய கவனத்தை ஈர்க்கும் நிலையில் இருக்க விரும்புபவரா அல்லது அற்பமான வேலைகளை ஏற்றுக்கொள்பவரா?
தன்னை உயர்வாக கருதுபவரா அல்லது மற்றவர்களை உயர்வாக கருதுபவரா?
[பக்கம் 14-ன் படம்]
மூன்றாம் பார்வோன் ஏமென்ஹோடெப்பின் பிரமாண்டமான சிலை
[பக்கம் 15-ன் படம்]
ஆமானின் வீழ்ச்சிக்கு காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
[பக்கம் 16-ன் படங்கள்]
மற்றவர்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பங்களை தேடுகிறீர்களா?