வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்” என தம்முடைய சீஷர்களிடம் இயேசு சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
இயேசு அப்போதுதான் 70 சீஷர்களைத் தேர்ந்தெடுத்திருந்தார், “தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.” அந்த 70 பேரும் திரும்பி வந்தபோது பிரசங்கிக்கையில் கிடைத்த வெற்றியைப் பற்றி சொல்லி சந்தோஷப்பட்டார்கள். “ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது” என சொன்னார்கள். அந்த சமயத்தில், “சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்” என இயேசு சொன்னார்.—லூக்கா 10:1, 17, 18.
ஏற்கெனவே நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இயேசு பேசிக் கொண்டிருந்ததைப் போல் எடுத்த எடுப்பில் தோன்றலாம். ஆனால் மேற்குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை இயேசு சொல்லி 60 வருடங்களுக்குப் பிறகு வயதான அப்போஸ்தலன் யோவானும் அதே விதமான மொழிநடையைப் பயன்படுத்தி பின்வருமாறு எழுதினார்: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 12:9.
இவ்வாறு யோவான் எழுதுகையில் சாத்தான் இன்னமும் பரலோகத்தில்தான் இருந்தான். இது நமக்கு எப்படித் தெரியும்? எப்படியென்றால், வெளிப்படுத்துதல் புத்தகம் சரித்திரப் பதிவு அடங்கிய புத்தகமல்ல, அது தீர்க்கதரிசன புத்தகம். (வெளிப்படுத்துதல் 1:1) எனவே, யோவான் உயிரோடிருந்த அந்த சமயத்தில் சாத்தான் இன்னும் பூமிக்கு தள்ளப்படாதிருந்தான். உண்மையில், 1914-ல் கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக இயேசு சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டதற்கு சற்று பின்னரே அவன் தள்ளப்பட்டான், அதற்கு முன்பு அல்லவென அத்தாட்சி காட்டுகிறது.a—வெளிப்படுத்துதல் 12:1-10.
அப்படியிருக்க, பரலோகத்திலிருந்து சாத்தான் ஏற்கெனவே தள்ளப்பட்டுவிட்டதைப் போல் இயேசு ஏன் பேசினார்? தம்முடைய சீஷர்கள் தேவையில்லாமல் பெருமைப்பட்டுக் கொண்டிருந்ததை இயேசு கண்டித்தார் என சில கல்விமான்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். எனவே அவர் அப்படி சொன்னபோது பின்வருமாறு அர்த்தப்படுத்தியதாக அவர்கள் நம்புகிறார்கள்: ‘நீங்கள் பிசாசுகளையே ஜெயித்துவிட்டீர்கள், ஆனால் பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள். சாத்தான் பெருமைக்காரனாக ஆனான், அதனாலேயே சீக்கிரத்தில் வீழ்ந்துபோனான்.’
இந்த விஷயத்தில் நாம் திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியாது. ஆனாலும், சாத்தான் எதிர்காலத்தில் தள்ளப்படப் போவதைக் குறிப்பிட்டு, தம்முடைய சீஷர்களுடன் சேர்ந்து இயேசு சந்தோஷப்பட்டதாகவே பெரும்பாலும் தோன்றுகிறது. பிசாசின் கடும் பகைமையை, தம்முடைய சீஷர்கள் எவரையும்விட இயேசு நன்கு அறிந்திருந்தார். அபூரண மனிதர்களாயிருந்த தம் சீஷர்களுக்கு, பலம் படைத்த பிசாசுகள் கீழ்ப்படுத்தப்பட்டதைக் கேட்டு இயேசு எவ்வளவாய் அகமகிழ்ந்திருப்பார் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்! இப்படி பிசாசுகளை அடக்கியது, பிரதான தூதனாகிய மிகாவேலாக இயேசு எதிர்காலத்தில் சாத்தானோடு யுத்தம் செய்து பரலோகத்திலிருந்து அவனை பூமிக்குத் தள்ளுவதற்கு முன்நிழலாக இருந்தது.
சாத்தான் “விழுகிறதை” தாம் கண்டதாக இயேசு சொன்னபோது அவன் நிச்சயம் தள்ளப்படுவான் என்பதையே அவர் உண்மையில் வலியுறுத்தினார். எதிர்கால சம்பவங்களை இறந்த காலத்தில் பேசும் பிற பைபிள் தீர்க்கதரிசனங்களுடன் இது ஒத்திருக்கிறது. உதாரணமாக, ஏசாயா 52:13–53:12-ல் உள்ள மேசியாவைப் பற்றி தீர்க்கதரிசனத்தில் இறந்த காலமும் எதிர்காலமும் மாறிமாறி உபயோகிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். தம்முடைய பிதாவின் நோக்கத்திற்கு இசைய சாத்தான் பரலோகத்திலிருந்து நிச்சயம் தள்ளப்படுவான் என்பதையே இயேசு இங்கு குறிப்பிட்டிருக்க வேண்டும். கடவுள் குறித்திருக்கும் காலத்தில் சாத்தானும் அவனது பிசாசுகளும் அபிஸுக்குள் தள்ளப்படுவதும், பிறகு நித்தியத்திற்குமாக அழிக்கப்படுவதும் நிச்சயம் என்பதை இயேசு அறிந்திருந்தார்.—ரோமர் 16:20; எபிரெயர் 2:14; வெளிப்படுத்துதல் 20:1-3, 7-10.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் 10-ம் அதிகாரத்தையும் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் 27-ம் அதிகாரத்தையும் காண்க.