யெகோவா—‘இக்கட்டுக் காலத்தில் நம் அடைக்கலம்’
“நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக் காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.”—சங்கீதம் 37:39.
1, 2. (அ) இயேசு தமது சீஷர்களின் சார்பில் என்ன ஜெபித்தார்? (ஆ) தமது மக்களை குறித்ததில் கடவுளுடைய சித்தம் என்ன?
யெகோவா சர்வவல்லமை வாய்ந்தவர். தாம் விரும்புகிற எந்த வழியையாவது பயன்படுத்தி தமது உண்மை வணக்கத்தாரை பாதுகாக்க அவருக்கு வல்லமை இருக்கிறது. நேரடி அர்த்தத்திலுங்கூட தம்முடைய ஜனங்களை உலகிலுள்ள மற்ற ஜனங்களிடமிருந்து பிரித்து, பாதுகாப்புமிக்க அமைதலான ஒரு சூழலில் அவர்களை வைக்க முடியும். என்றாலும், தம்முடைய சீஷர்களைக் குறித்து தம் பரம பிதாவிடம் அவர் இவ்வாறு ஜெபித்தார்: “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று [“தீயோனிடமிருந்து,” பொது மொழிபெயர்ப்பு] காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.”—யோவான் 17:15.
2 யெகோவா நம்மை இந்த ‘உலகத்தைவிட்டே’ பிரித்து எங்கோ ஓரிடத்தில் வைக்க தீர்மானிக்கவில்லை. மாறாக, நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் தம்முடைய செய்தியை இவ்வுலகத்திலுள்ள பொது மக்களுக்கு அறிவிக்க அவர்கள் மத்தியிலேயே நாம் வாழ வேண்டுமென சித்தம் கொண்டிருக்கிறார். (ரோமர் 10:13-15) ஆனால், இயேசு தமது ஜெபத்தில் குறிப்பிட்டது போல, நாம் இவ்வுலகத்தில் வாழ்வதால் அந்தத் ‘தீயவன்’ கையில் வெகு எளிதாக மாட்டிக்கொள்ளும் நிலையில் இருக்கிறோம். கடவுளுக்கு கீழ்ப்படியாத மனிதகுலமும் பொல்லாத ஆவி சேனைகளும் சொல்ல முடியாதளவு துன்பத்தையும் துயரத்தையும் உண்டாக்குகின்றன, அத்தகைய இக்கட்டுகளுக்கு கிறிஸ்தவர்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல.—1 பேதுரு 5:9.
3. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள்கூட எதை எதிர்ப்பட வேண்டும், ஆனால் கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் என்ன ஆறுதலை கண்டடைகிறோம்?
3 அத்தகைய சோதனைகளை அனுபவிக்கையில், அவ்வப்போது மனச்சோர்வடைவது இயல்புதான். (நீதிமொழிகள் 24:10) இக்கட்டுகளை அனுபவித்த விசுவாசமிக்கவர்களைப் பற்றிய ஏராளமான பதிவுகள் பைபிளில் உள்ளன. “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்” என சங்கீதக்காரன் சொல்கிறார், ஆனால் “கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” (சங்கீதம் 34:19) ஆம், ‘நீதிமானுக்கும்’கூட கெட்ட காரியங்கள் நேர்ந்துவிடுகின்றன. சில சமயங்களில், சங்கீதக்காரனாகிய தாவீதைப் போல ‘பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டு’ விட்டதாகக்கூட நாம் உணரலாம். (சங்கீதம் 38:8) என்றாலும், “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” என்றறிவது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.—சங்கீதம் 34:18; 94:19.
4, 5. (அ) கடவுளுடைய பாதுகாப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நீதிமொழிகள் 18:10-க்கு இசைய நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) கடவுளுடைய உதவியைப் பெற குறிப்பிட்ட என்ன படிகளை நாம் எடுக்கலாம்?
4 இயேசுவின் ஜெபத்திற்கு இசைவாக, யெகோவா உண்மையிலேயே நம்மை இப்போது காத்து வருகிறார். ‘இக்கட்டுக் காலத்தில் அவரே நம் அடைக்கலம்.’ (சங்கீதம் 37:39) நீதிமொழிகள் புத்தகமும் இதைப் போன்ற சொற்றொடரை பயன்படுத்துகிறது, அது சொல்கிறதாவது: ‘கர்த்தரின் நாமம் பலத்த [கோட்டை]; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.’ (நீதிமொழிகள் 18:10) தம்முடைய படைப்புகள் மீது யெகோவாவுக்கு இருக்கும் கனிவான அக்கறையைப் பற்றிய ஓர் அடிப்படை சத்தியத்தை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. அடைக்கலத்திற்காக ஏதோவொரு பலத்த கோட்டைக்குள் ஓடி வருவதைப் போல தம்மை ஊக்கமாய் தேடி ஓடி வருபவர்களுக்கு, குறிப்பாக நீதிமான்களுக்கு, கடவுள் பாதுகாப்பளிக்கிறார்.
5 இக்கட்டான பிரச்சினைகளை எதிர்ப்படும்போது, பாதுகாப்புக்காக நாம் எவ்வாறு யெகோவாவிடம் ஓடிச் செல்லலாம்? யெகோவாவுடைய உதவியைப் பெறுவதற்கு நாம் எடுக்க வேண்டிய மூன்று அதிமுக்கியமான படிகளைப் பற்றி இப்போது சிந்திக்கலாம். முதலாவதாக, நாம் ஜெபத்தில் நம்முடைய பரலோக தகப்பனை அணுக வேண்டும். இரண்டாவதாக, அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு ஏற்ப நடக்க வேண்டும். மூன்றாவதாக, நம்முடைய இக்கட்டுகளின் தீவிரத்தை குறைக்க முடிந்த சக கிறிஸ்தவர்களின் கூட்டுறவை நாடுவதன் மூலம் யெகோவாவின் ஏற்பாட்டிற்கு அடிபணிந்து நடக்க வேண்டும்.
ஜெபத்தின் வல்லமை
6. மெய் கிறிஸ்தவர்கள் ஜெபத்தை எவ்வாறு கருதுகிறார்கள்?
6 மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்குமான சிகிச்சைமுறையாக ஜெபிப்பதை சில மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். மன அழுத்தத்தை சற்று குறைக்க அமைதலான ஒரு நேரத்தில் ஜெபம் செய்வது உதவுமென்பது உண்மைதான், ஆனால் இயற்கையின் குறிப்பிட்ட சில ஒலிகளும், ஏன் முதுகுப்பகுதியை நன்றாக மசாஜ் செய்வதும்கூட ஓரளவு மன அழுத்தத்தை குறைக்க உதவலாம். எனவே, ஜெபம் செய்வது மனதிற்கு இதமளிக்கிற வெறும் ஒரு நல்ல சிகிச்சைமுறை என்று மட்டுமே கருதி மெய்க் கிறிஸ்தவர்கள் ஜெபத்தின் அருமையை மட்டுப்படுத்துகிறதில்லை. ஜெபம் என்பது நமது படைப்பாளருடன் வைத்துக்கொள்ளும் பயபக்தியுள்ள பேச்சுத்தொடர்பு என்றே நாம் நம்புகிறோம். கடவுளிடம் நமக்குள்ள பக்தியும் நம்பிக்கையும் அதில் உட்படுகிறது. ஆம், ஜெபம் நம்முடைய வணக்கத்தின் ஒரு பாகமாக இருக்கிறது.
7. திடநம்பிக்கையோடு ஜெபிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது, இக்கட்டுகளை சமாளிக்க அத்தகைய ஜெபங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன?
7 நம்முடைய ஜெபங்கள் யெகோவாவிடம் நமக்கு இருக்கும் திடநம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்,” அதாவது திடநம்பிக்கை என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 5:14) சொல்லப்போனால், உன்னதமானவரும் ஒரே மெய்க் கடவுளும் சர்வவல்லவருமான யெகோவா தம்மை வணங்குபவர்களின் ஊக்கமான ஜெபங்களுக்கு விசேஷ கவனம் செலுத்துகிறார். நம்முடைய கவலைகளையும் பிரச்சினைகளையும் நம் அன்பான தேவனிடம் சொல்லும்போது அவற்றை அவர் செவிகொடுத்துக் கேட்கிறார் என்று அறிந்திருப்பதே இதயத்திற்கு இதமளிக்கிறது.—பிலிப்பியர் 4:6.
8. விசுவாசமிக்க கிறிஸ்தவர்கள் யெகோவாவை ஜெபத்தில் அணுகும்போது ஏன் ஒருபோதும் நடுங்கவோ, தகுதியற்றவர்களாக உணரவோ கூடாது?
8 ஜெபத்தில் யெகோவாவை அணுகும்போது, விசுவாசமிக்க கிறிஸ்தவர்கள் ஒருபோதும் பயந்து நடுங்கக் கூடாது, அதுமட்டுமல்ல தகுதியற்றவர்களாகவோ, நம்பிக்கையற்றவர்களாகவோகூட உணரக் கூடாது. உண்மைதான், நம்மைக் கண்டு நமக்கே வெறுப்பாக தோன்றுகிற சமயங்களிலும், தலைக்கு மேலாக அத்தனை பிரச்சினைகளை எதிர்ப்படுகிற சமயங்களிலும் யெகோவாவிடம் ஜெபம் செய்ய ஒருவேளை நம் மனம் இடங்கொடுக்காமல் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலைகளில், யெகோவா “சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்” என்பதையும் “சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்”வார் என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். (ஏசாயா 49:13; 2 கொரிந்தியர் 7:6) முக்கியமாய் கடுந்துயரத்திலும் இக்கட்டுகளிலும் சிக்கித் தவிக்கும்போதுதான் நம்முடைய பரம தகப்பனை அடைக்கலமாக கருதி திடநம்பிக்கையோடு அவரிடம் ஜெபிக்க வேண்டும்.
9. கடவுளிடம் ஏறெடுக்கப்படும் ஜெபங்களில் விசுவாசம் என்ன இடம் வகிக்கிறது?
9 ஜெபம் என்ற சிலாக்கியத்திலிருந்து நாம் முழுமையாக பயனடைய வேண்டுமானால், நமக்கு உண்மையான விசுவாசம் இருப்பது அவசியம். “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:6) கடவுள் என்ற ஒருவர் ‘உண்டு’ என்று மட்டுமே நம்புவது விசுவாசமல்ல. நாம் அவருக்கு கீழ்ப்படிதலோடு நடந்தால் அவர் நமக்கு பலனளிப்பார் என்றும், அவ்வாறு பலனளிக்க அவருக்கு திறமையும் விருப்பமும் இருக்கிறது என்றும் உறுதியாக நம்புவதே உண்மையான விசுவாசமாகும். “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது.” (1 பேதுரு 3:12) நம்மீது யெகோவா அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்ற உணர்வு நமக்கு எப்போதும் இருப்பது நம்முடைய ஜெபங்களுக்கு விசேஷ அர்த்தமளிக்கிறது.
10. யெகோவா நம்மை ஆவிக்குரிய ரீதியில் காக்க வேண்டுமென்றால், நம்முடைய ஜெபங்கள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும்?
10 முழு இருதயத்தோடு ஜெபிக்கும்போது, யெகோவா நம்முடைய ஜெபங்களுக்கு செவிகொடுக்கிறார். “முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்” என சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 119:145) வேறு பல மதங்களில் செய்யப்படும் சடங்காச்சார ஜெபங்களைப் போல, நம்முடைய ஜெபங்கள் மாமூலாகவோ அரைமனதாகவோ செய்யப்படுவது இல்லை. யெகோவாவிடம் நாம் “முழு இருதயத்தோடு” ஜெபிக்கையில் நம்முடைய வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன, நோக்கமுள்ளவையாகவும் இருக்கின்றன. அத்தகைய உருக்கமான ஜெபங்களின் மூலம் ‘யெகோவாமேல் நம் பாரத்தை வைத்துவிடுவதால்’ நம்முடைய துயரம் தணிவதை நாம் உணர ஆரம்பிக்கிறோம். பைபிள் வாக்குறுதி அளிக்கிறபடி கட்டாயம் ‘அவர் நம்மை ஆதரிப்பார்.’—சங்கீதம் 55:22; 1 பேதுரு 5:6, 7.
கடவுளுடைய ஆவி நமக்கு சகாயர்
11. உதவிக்காக நாம் யெகோவாவிடம் ‘கேட்டுக்கொண்டே’ இருக்கும்போது அவர் நமக்கு பதிலளிக்கும் ஒரு வழி என்ன?
11 யெகோவா நம்முடைய ஜெபத்தை கேட்கிறவர் மாத்திரமல்ல, அவற்றிற்கு பதிலளிப்பவரும்கூட. (சங்கீதம் 65:2) “நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்” என தாவீது எழுதினார். (சங்கீதம் 86:7) ஆகையால், யெகோவாவுடைய உதவியைப் பெறுவதற்காக அவரிடம் ‘கேட்டுக்கொண்டே இருக்கும்படி’ இயேசு தம்முடைய சீஷர்களை உற்சாகப்படுத்தினார்; ஏனெனில் “பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு” கட்டாயம் ‘பரிசுத்த ஆவியைக் கொடுப்பார்.’ (லூக்கா 11:9-13) ஆம், கடவுளுடைய செயல்நடப்பிக்கும் சக்தி அவருடைய மக்களுக்கு சகாயராக, அதாவது தேற்றரவாளராக செயல்படுகிறது.—யோவான் 14:16.
12. பிரச்சினைகளால் திணறடிக்கப்படுவது போல உணரும்போது கடவுளுடைய ஆவி நமக்கு எவ்வாறு உதவும்?
12 நாம் சோதனைகளை எதிர்ப்பட்டு வருகையில்கூட, கடவுளுடைய ஆவி ‘இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை’ நமக்கு அருளும். (2 கொரிந்தியர் 4:7, NW) சோர்வூட்டிய பல சந்தர்ப்பங்களில் சகித்திருந்த அப்போஸ்தலன் பவுல் உறுதியுடன் இவ்வாறு சொன்னார்: “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.” (பிலிப்பியர் 4:13, பொது மொழிபெயர்ப்பு) அவ்வாறே, இன்று அநேக கிறிஸ்தவர்கள் உருக்கமாக ஜெபித்த பின், ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் புதுத்தெம்பு பெற்றுவிட்டதைப் போல உணர்ந்திருக்கிறார்கள். அவ்வாறு கடவுளுடைய ஆவியின் உதவியைப் பெற்ற பிறகு, நாம் பயங்கரமான பிரச்சினைகளால் திணறடிக்கப்படுவது போல பெரும்பாலும் உணர மாட்டோம். கடவுள் தரும் இந்த சக்தியின் காரணமாக, அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் இவ்வாறு சொல்லலாம்: “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.”—2 கொரிந்தியர் 4:8, 9.
13, 14. (அ) தம்முடைய வார்த்தையின் மூலம் யெகோவா எவ்வாறு நம்முடைய அடைக்கலமாக நிரூபித்திருக்கிறார்? (ஆ) பைபிள் நியமங்களை பொருத்திப் பிரயோகித்ததால் தனிப்பட்ட விதமாக நீங்கள் எவ்வாறு நன்மை அடைந்திருக்கிறீர்கள்?
13 பரிசுத்த ஆவி நம்முடைய நன்மைக்காக கடவுளுடைய வார்த்தையை ஏவியதோடு அதை பாதுகாத்தும் வைத்திருக்கிறது. யெகோவா தமது வார்த்தையின் மூலம் எவ்வாறு நம்முடைய இக்கட்டுக் காலத்திலே அடைக்கலமாக நிரூபித்திருக்கிறார்? ஒரு வழியானது, நமக்கு நடைமுறை ஞானத்தையும் யோசிக்கும் திறனையும், அதாவது விவேகத்தையும் தருவதன் மூலமாகும். (நீதிமொழிகள் 3:21-24) பைபிள் நம்முடைய மனத்திறன்களை பயிற்றுவிப்பது மட்டுமல்லாமல், நம்முடைய பகுத்தறியும் திறனையும் மேம்படுத்துகிறது. (ரோமர் 12:1, NW) கடவுளுடைய வார்த்தையை தவறாமல் வாசித்து, அதை ஆழ்ந்து படிப்பதன் மூலமும், அதை நம்முடைய வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலமும், ‘நன்மை தீமையை பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்துவதற்கு பயிற்சியை’ நாம் பெற்றுக்கொள்ள முடியும். (எபிரெயர் 5:14, பொ.மொ.) கஷ்டங்களின்போது ஞானமான தீர்மானங்களை எடுக்க பைபிள் நியமங்கள் உதவியிருப்பதை நீங்களே அனுபவத்தில் கண்டிருக்கலாம். ஆம், இக்கட்டான பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை கண்டடைவதற்கான விவேகத்தை பைபிள் நமக்கு தருகிறது.—நீதிமொழிகள் 1:4.
14 கடவுளுடைய வார்த்தை மற்றுமொரு விதத்தில் நமக்கு பலத்தை தருகிறது, அதாவது இரட்சிப்புக்கான நம்பிக்கையை அளிக்கிறது. (ரோமர் 15:4) கெட்ட காரியங்கள் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை என பைபிள் நமக்கு சொல்கிறது. நாம் இப்போது படும் பாடுகளெல்லாம் தற்காலிகமானவையே. (2 கொரிந்தியர் 4:16-18) ‘பொய்யுரையாத தேவன் ஆதிகால முதல் நித்திய ஜீவனைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணியுள்ள நம்பிக்கை’ நமக்கு இருக்கிறது. (தீத்து 1:3) யெகோவா வாக்குறுதி அளித்திருக்கும் அந்த ஒளிமயமான எதிர்காலத்தை எப்போதும் நம் மனக்கண்ணில் வைத்து, அந்த நம்பிக்கையில் களிகூர்ந்திருந்தால் இன்னல்களின்போது நம்மால் பொறுமையோடே சகித்து நிற்க முடியும்.—ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 1:2.
சபை—கடவுளுடைய அன்பின் ஒரு வெளிக்காட்டு
15. கிறிஸ்தவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முடியும்?
15 இக்கட்டான காலங்களில் நமக்கு உதவ யெகோவா அளித்திருக்கும் மற்றொரு ஏற்பாடு கிறிஸ்தவ சபையில் நாம் அனுபவிக்கிற தோழமையாகும். “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17) ஒருவரையொருவர் கனப்படுத்துமாறும் நேசிக்குமாறும் சபையிலுள்ள அனைவரையுமே கடவுளுடைய வார்த்தை உற்சாகப்படுத்துகிறது. (ரோமர் 12:10) “ஒவ்வொருவனும் தன் சுய பிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 10:24) அத்தகைய மனப்பாங்கை கொண்டிருப்பது, நம்முடைய சொந்த பிரச்சினைகளைப் பற்றி அல்ல, ஆனால் மற்றவர்களுடைய தேவைகளைப் பற்றி சிந்திப்பதற்கு உதவும். மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும்போது, அவர்களுக்கு நாம் உபகாரமாக இருப்பதோடு, நாம் தாமே ஓரளவு சந்தோஷத்தையும் மனநிறைவையும் அடைகிறோம்; இதனால் நம்முடைய சொந்த கஷ்டங்களை தாங்கிக் கொள்வது சற்று எளிதாகிறது.—அப்போஸ்தலர் 20:35.
16. ஒவ்வொரு கிறிஸ்தவரும் எப்படி உற்சாகமூட்டுபவராக இருக்கலாம்?
16 ஆவிக்குரிய முதிர்ச்சி பெற்ற ஆண்களும் பெண்களும் மற்றவர்களை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கலாம். அவ்வாறு பலப்படுத்துவதற்கு, அவர்கள் அணுகத்தக்கவர்களாக இருக்கிறார்கள், அதோடு தேவைப்படும் போதெல்லாம் உதவியளிக்க தயாராகவும் இருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 6:11-13) சபையிலுள்ள எல்லாருமே இளைஞர்களை பாராட்டுவதற்கும், புதியவர்களை பலப்படுத்துவதற்கும், மனச்சோர்வுற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் நேரத்தை ஒதுக்கும்போது உண்மையிலேயே சபை நன்மையடைகிறது. (ரோமர் 15:7) அத்தகைய சகோதர சிநேகமானது ஒருவரையொருவர் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதை தவிர்க்கவும் உதவுகிறது. ஒருவருக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதாவது வருகையில், அது அவருடைய ஆவிக்குரிய பலவீனத்திற்கான அறிகுறியென நாம் உடனடியாக முடிவுகட்டி விடக்கூடாது. “திடனற்றவர்களைத் தேற்றுங்கள்” என மிகப் பொருத்தமாகவே கிறிஸ்தவர்களை பவுல் ஊக்குவித்தார். (1 தெசலோனிக்கேயர் 5:14) விசுவாசமிக்க கிறிஸ்தவர்கள்கூட இக்கட்டுகளை அனுபவித்ததாக பைபிள் காட்டுகிறது.—அப்போஸ்தலர் 14:15.
17. கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் பிணைப்பை பலப்படுத்துவதற்கு என்ன வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன?
17 ஒருவரையொருவர் ஆறுதல்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் கிறிஸ்தவ கூட்டங்கள் நமக்கு மிகச் சிறந்த வாய்ப்பளிக்கின்றன. (எபிரெயர் 10:24, 25) இந்த நட்பும் சிநேகமும் சபைக் கூட்டங்களின்போது மட்டுமே காண்பிக்கப்படுவதில்லை. மாறாக, கடவுளுடைய மக்கள் தங்களுடைய ஓய்வு நேரங்களில் சகோதரர்களோடு ஆரோக்கியமான கூட்டுறவை அனுபவிப்பதற்கும் வாய்ப்புகளை தேடுகிறார்கள். இப்படி ஏற்கெனவே நட்பின் பிணைப்பை பலப்படுத்தியிருப்பதால் இக்கட்டுகள் எழும்புகையில், நாம் ஒருவருக்கொருவர் சந்தோஷமாக உதவி அளித்துக்கொள்வோம். “சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படி, [அதாவது அக்கறையாயிருக்கும்படி]” அப்போஸ்தலன் பவுல் எழுதினார்; மேலும், “ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்” என்றும் எழுதினார்.—1 கொரிந்தியர் 12:25, 26.
18. நொந்து போயிருக்கும் சமயங்களில், எந்த மனச்சாய்வை நாம் தவிர்க்க வேண்டும்?
18 சில நேரங்களில், சக கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து தோழமையை அனுபவிக்க விருப்பமில்லாதளவுக்கு நாம் ஒருவேளை மிகவும் நொந்து போயிருக்கலாம். சக வணக்கத்தார் அளிக்கும் ஆறுதலையும் உதவியையும் தவறவிட்டு விடாமல் அதை பெற்றுக்கொள்வதற்காக அத்தகைய உணர்ச்சிகளை நாம் கட்டாயம் எதிர்க்க வேண்டும். பைபிள் நம்மை இவ்வாறு எச்சரிக்கிறது: “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப் பார்ப்பான்; நடைமுறை ஞானம் அனைத்தையுமே தகர்த்தெறிந்து விடுவான்.” (நீதிமொழிகள் 18:1, NW) நம்முடைய சகோதர சகோதரிகள் கடவுள் நம்மீது வைத்திருக்கும் அக்கறையின் ஒரு வெளிக்காட்டாக இருக்கிறார்கள். இந்த அன்பான ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டால், இக்கட்டுக் காலத்திலே நம்முடைய மனபாரம் நீங்கிவிடுவதை உணருவோம்.
தொடர்ந்து நம்பிக்கையான மனநிலையோடு இருங்கள்
19, 20. வேண்டாத எண்ணங்களை ஒதுக்கித்தள்ள வேதவசனங்கள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன?
19 நம் மனதில் உற்சாகம் போய் சோகம் தொற்றிக்கொள்ளும்போது, வேண்டாத எண்ணங்கள் வெகு எளிதில் நமக்குள் குடிபுகுந்துவிடும். உதாரணத்திற்கு, கடுந்துயரத்தை அனுபவித்து வரும்போது, சிலர் தங்களுடைய ஆவிக்குரிய தன்மையைக் குறித்தே சந்தேகப்பட ஆரம்பித்து விடலாம்; கடவுள் தங்களை நிராகரித்ததால்தான் தங்களுக்கு அப்படிப்பட்ட துயரம் வந்திருப்பதாகக்கூட அவர்கள் முடிவு செய்துவிடலாம். ஆனால், யாரையுமே யெகோவா “பொல்லாங்கினால்” சோதிப்பதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். (யாக்கோபு 1:13) ஏனெனில், “அவர் [கடவுள்] மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை” என பைபிள் சொல்கிறது. (புலம்பல் 3:33) மாறாக, தம்முடைய ஊழியர்கள் வேதனைகளை அனுபவிக்கையில் யெகோவா மிகவும் துக்கப்படுகிறார்.—ஏசாயா 63:8, 9; சகரியா 2:8.
20 யெகோவா ‘இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார்.’ (2 கொரிந்தியர் 1:3) அவர் நம்மீது அக்கறையாக இருக்கிறார், ஏற்ற காலத்திலே நம்மை உயர்த்துவார். (1 பேதுரு 5:6, 7) கடவுள் நம்மீது பாசத்தை வைத்திருக்கிறார் என்ற உணர்வு நமக்கு எப்போதும் இருந்தால், நாம் தொடர்ந்து நம்பிக்கையான மனநிலையோடு இருக்க முடியும், ஏன் மனமகிழ்ச்சியோடும் இருக்க முடியும். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, . . . அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என்று யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 1:2, 3) ஏன்? அவரே பதிலளிக்கிறார்: “அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.”—யாக்கோபு 1:12.
21. எந்தவித கஷ்டத்தின் மத்தியிலும் உண்மையாய் நிலைத்திருப்பவர்களுக்கு கடவுள் என்ன உத்தரவாதம் அளிக்கிறார்?
21 இயேசு நம்மை எச்சரித்தது போல, இந்த உலகில் நமக்கு கட்டாயம் உபத்திரவம் இருக்கும். (யோவான் 16:33) ஆனால், “உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ” எதுவானாலும் சரி, அவை யெகோவாவின் அன்பிலிருந்தும் அவருடைய குமாரனின் அன்பிலிருந்தும் நம்மை பிரிக்கவே முடியாதென்று பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (ரோமர் 8:36, 39) நாம் எதிர்ப்படுகிற எந்த இக்கட்டான சூழ்நிலையும் தற்காலிகமானதே என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது! மனிதருடைய துன்பங்களெல்லாம் முடிவுறுகிற காலத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில் நம் அன்பான பிதாவாகிய யெகோவா நம்மை கண்ணும்கருத்துமாய் காத்து வருகிறார். பாதுகாப்புக்காக நாம் அவரிடம் ஓடிச் சென்றால், அவர் ‘சிறுமைப்பட்டவருக்கு அடைக்கலமானவராகவும், நெருக்கப்படுகிற காலங்களில் தஞ்சமானவராகவும்’ இருப்பார்.—சங்கீதம் 9:9.
என்ன கற்றுக்கொண்டோம்?
• இந்தப் பொல்லாத உலகில் கிறிஸ்தவர்கள் எதை எதிர்பார்க்க வேண்டும்?
• நாம் சோதனைகளை எதிர்ப்படும்போது நமது ஊக்கமான ஜெபங்கள் எவ்வாறு நம்மை பலப்படுத்தும்?
• கடவுளுடைய ஆவி எப்படி ஒரு சகாயராக செயல்படுகிறது?
• நாம் ஒருவருக்கொருவர் உதவியாய் இருக்க என்ன செய்யலாம்?
[பக்கம் 18-ன் படம்]
ஓர் உறுதியான கோட்டைக்குள் ஓடி தஞ்சம் புகுவதைப் போல நாம் யெகோவாவிடம் தஞ்சம் புக வேண்டும்
[பக்கம் 20-ன் படங்கள்]
ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ளவர்கள் மற்றவர்களை பாராட்டுவதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் தங்களுக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிறார்கள்