துன்பப்படுகிறவர்களை யெகோவா விடுவிக்கிறார்
“நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.”—சங்கீதம் 34:19.
1, 2. உண்மையுள்ள ஒரு கிறிஸ்தவர் என்ன பிரச்சினையை எதிர்ப்பட்டார், அப்படிப்பட்ட உணர்ச்சிகள் ஏன் நமக்கும் வரக்கூடும்?
கேகோa என்ற இளம் பெண் 20 வருடங்களுக்கும் மேலாக யெகோவாவின் சாட்சியாக இருக்கிறார். அவர் ஓர் ஒழுங்கான பயனியராக அதாவது, முழுநேர ராஜ்ய அறிவிப்பாளராக கொஞ்ச காலம் சேவை செய்தார். அந்த விசேஷ சேவையை பொக்கிஷமாக கருதினார். என்றாலும், சில காலத்திற்கு முன், நம்பிக்கையற்ற உணர்வும் தனிமையுணர்வும் அவரை வாட்டி வதைத்தன. அதனால், “சதா அழுதுகொண்டே இருந்தேன்” என்று அவர் கூறுகிறார். தன்னுடைய மனச்சோர்வை போக்க தனிப்பட்ட படிப்புக்கு அதிக நேரத்தை செலவிட ஆரம்பித்தார். “இருந்தாலும், மனச்சோர்விலிருந்து என்னால் மீள முடியவில்லை. செத்துப்போனால் பரவாயில்லை என்று யோசிக்குமளவிற்குச் சென்றுவிட்டேன்” என்று அவர் சொல்கிறார்.
2 இதுபோன்ற நம்பிக்கையற்ற உணர்ச்சிகளால் நீங்களும் கஷ்டப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பதால் சந்தோஷப்பட உங்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன; ஏனெனில், தேவபக்தியானது ‘இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளது.’ (1 தீமோத்தேயு 4:8) இப்போது நீங்கள் இருப்பது ஆன்மீக பரதீஸில்! அதற்காக, எந்தப் பிரச்சினையுமே உங்களுக்கு வராது என்று சொல்லிவிட முடியுமா? நிச்சயமாக முடியாது! “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 34:19) இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; ஏனெனில், “உலகமுழுவதும்” பிசாசாகிய சாத்தான் என்ற ‘பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19) இதனால் நாம் எல்லாருமே ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்படுகிறோம்.—எபேசியர் 6:12.
துன்பத்தின் விளைவுகள்
3. கடும் துக்கத்தை அனுபவித்த கடவுளுடைய ஊழியர்கள் சிலருடைய உதாரணங்களைக் கொடுங்கள்.
3 வாழ்க்கையில் கஷ்டங்கள் நீடித்துக்கொண்டே போனால் அவை நம்முடைய சிந்தையை அறவே மாற்றிவிடக்கூடும். (நீதிமொழிகள் 15:15) நீதிமானாகிய யோபைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். படுபயங்கரமான பிரச்சினைகளை சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்: “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.” (யோபு 14:1) யோபுவின் சந்தோஷம் பறிபோனது. யெகோவா தன்னை கைவிட்டு விட்டதாகக்கூட அவர் கொஞ்ச காலத்திற்கு நினைத்துக்கொண்டிருந்தார். (யோபு 29:1-5) யோபு மட்டுமல்ல, கடவுளுடைய மற்ற ஊழியர்களும் இதுபோன்ற பயங்கரமான கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். குழந்தை இல்லாததை எண்ணி அன்னாள் “மனங்கசந்து” போனாள் என பைபிள் நமக்குச் சொல்கிறது. (1 சாமுவேல் 1:9-11) குடும்ப பிரச்சினையால் மனம் வெறுத்துப்போயிருந்த ரெபெக்காள், “என் உயிர் இருந்து ஆவதென்ன” என்று புலம்பினாள். (ஆதியாகமம் 27:46) தன்னுடைய தவறுகளைக் குறித்து சிந்தித்துப் பார்த்த தாவீது, “நாள் முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்” என்று கூறினார். (சங்கீதம் 38:6) பூர்வ காலத்தில் வாழ்ந்த கடவுள் பயமுள்ள ஆண்களும் பெண்களும்கூட கடும் துக்கத்தை அனுபவித்திருக்கிறார்கள் என்பதை இந்த உதாரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
4. இன்றுள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் சிலர் ‘திடனற்றவர்களாக’ இருப்பதில் ஏன் எந்த ஆச்சரியமும் இல்லை?
4 கிறிஸ்தவர்களைப் பற்றியென்ன? “திடனற்றவர்களைத் தேற்றுங்கள்” என்று தெசலோனிக்கேயருக்கு சொல்வதன் அவசியத்தை அப்போஸ்தலன் பவுல் உணர்ந்தார். (1 தெசலோனிக்கேயர் 5:14) ‘திடனற்றவர்கள்’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க சொல், “வாழ்க்கையில் எதிர்ப்படும் அழுத்தங்களில் தற்காலிகமாக மூழ்கிப்போயிருப்போரை” அர்த்தப்படுத்தலாம் என்பதாக ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. தெசலோனிக்கே சபையிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட சிலர் சோர்ந்துபோயிருந்தார்கள் என்பதை பவுலின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. இன்றும்கூட கிறிஸ்தவர்கள் சிலர் மனச்சோர்வடைந்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு நம்பிக்கையிழந்து போகிறார்கள்? பொதுவான மூன்று காரணங்களை ஆராயலாம்.
நம் பாவ இயல்பு நமக்கு சோர்வூட்டலாம்
5, 6. ரோமர் 7:22-25-ல் இருந்து நாம் எவ்வாறு ஆறுதலைக் கண்டடையலாம்?
5 “உணர்வில்லாதவர்களாய்” இருக்கும் ஒழுக்கங்கெட்ட ஆட்களைப் போலின்றி உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பாவ நிலையைக் குறித்து வருந்துகிறார்கள். (எபேசியர் 4:19) அவர்கள் பவுலைப் போல உணரக்கூடும்; அவர் இவ்வாறு எழுதினார்: “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்!”—ரோமர் 7:22-24.
6 பவுலைப் போலவே நீங்களும் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? உங்களுடைய பாவ இயல்பைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருப்பதில் தவறேதும் இல்லை. ஏனெனில் பாவம் எந்தளவு மோசமானது என்பதை இது நமக்கு உணர்த்தும்; தவறுகளைத் தவிர்க்க வேண்டுமென்ற உங்கள் தீர்மானத்தை உறுதிப்படுத்தும். ஆனால் உங்கள் குறைகளையே நினைத்து நீங்கள் எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை. பவுல் தன்னுடைய மனவருத்தத்தை மேலே குறிப்பிட்ட வசனத்தில் தெரியப்படுத்திய பிறகு, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்” என்று கூறினார். (ரோமர் 7:25) ஆம், பரம்பரையாகக் கடத்தப்பட்ட பாவத்திலிருந்து இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தம் தன்னை விடுவிக்கும் என்பதைப் பவுல் நம்பினார்.—ரோமர் 5:18.
7. தன்னுடைய பாவமுள்ள மனச்சாய்வுகளைக் குறித்து சதா கவலைப்படாதிருக்க ஒருவருக்கு எது உதவும்?
7 உங்களுடைய பாவத்தன்மையை நினைத்து மனமொடிந்துபோனால், அப்போஸ்தலன் யோவான் கூறிய பின்வரும் வார்த்தைகளிலிருந்து ஆறுதலடையுங்கள்: “ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.” (1 யோவான் 2:1, 2) உங்களுடைய பாவமுள்ள மனச்சாய்வுகளை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், பாவிகளுக்காகத்தான் இயேசு மரித்தார், பரிபூரணருக்காக அல்ல என்பதை எப்போதும் மனதில் வையுங்கள். சொல்லப்போனால், நாம் ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாய்’ இருக்கிறோம்.—ரோமர் 3:23.
8, 9. நம்மை நாமே குற்றப்படுத்திக்கொள்வதை ஏன் தவிர்க்க வேண்டும்?
8 ஒருவேளை, நீங்கள் கடந்த காலத்தில் மிகமோசமான பாவத்தை செய்திருப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் யெகோவாவிடம் ஜெபத்தில் அதை பலமுறை தெரியப்படுத்தியிருக்கிறீர்கள். கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்து ஆன்மீக உதவியைப் பெற்றிருக்கிறீர்கள். (யாக்கோபு 5:14, 15) நீங்கள் உண்மையிலேயே மனந்திரும்பியதால் கிறிஸ்தவ சபையில் தொடர்ந்து நிலைத்திருக்கிறீர்கள். அல்லது, ஒருவேளை கடவுளுடைய அமைப்பை விட்டு சிலகாலம் விலகியிருந்து, பிற்பாடு மனந்திரும்பி சுத்தமான நிலைநிற்கையை எடுத்திருப்பீர்கள். இவற்றில் எதை நீங்கள் சந்தித்திருந்தாலும், உங்களுடைய கடந்தகால பாவம் உங்கள் மனதுக்கு வந்து உங்களைத் தொல்லைப்படுத்தலாம். அப்படிச் சம்பவித்தால், உண்மையிலேயே மனந்திரும்பும் ஆட்களை யெகோவா “தாராளமாக” மன்னிக்கிறார் என்பதை மனதில் வையுங்கள். (ஏசாயா 55:7, NW) அதோடு, ஒரேயடியாக உங்களை நீங்களே குற்றப்படுத்திக்கொண்டிருக்கவும் அவர் விரும்புவதில்லை. நீங்கள் அப்படி உணர வேண்டுமென விரும்புவது உண்மையில் சாத்தானே. (2 கொரிந்தியர் 2:7, 10, 11) சாத்தான் அழிக்கப்படப் போகிறான், ஏனெனில் அதற்கு அவன் தகுதியானவன். ஆனால் உங்களையும் அழிவுக்கு தகுந்தவர்கள் என்று உணர வைக்க அவன் விரும்புகிறான். (வெளிப்படுத்துதல் 20:10) உங்கள் விசுவாசத்தைக் கெடுத்துப்போட அவன் எடுக்கும் இந்த முயற்சி வெற்றி பெற இடங்கொடுக்காதீர்கள். (எபேசியர் 6:11) மாறாக, மற்ற விஷயங்களைப் போன்றே இவ்விஷயத்திலும் “அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்.”—1 பேதுரு 5:9.
9 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாகிய ‘நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்துகிறவன்’ என்று வெளிப்படுத்துதல் 12:10-ல் சாத்தான் குறிப்பிடப்படுகிறான். கடவுளுக்கு முன்பாக அவர்களை அவன் ‘இரவும் பகலும் குற்றஞ்சாட்டுகிறான்.’ யெகோவா உங்களை குற்றஞ்சாட்டுவதோ, குற்றவாளியென தீர்ப்பதோ இல்லை. அப்படியிருக்க, உங்களை நீங்களே குற்றப்படுத்திக்கொள்கையில் சந்தோஷப்படப்போவது பொய் குற்றஞ்சாட்டுகிறவனாகிய சாத்தானே. இதைத்தான் மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தை குறித்து சிந்திக்கையில் நாம் புரிந்துகொள்கிறோம். (1 யோவான் 3:19-22) இனியும் என்னால் தாங்கமுடியாது என்று சொல்லுமளவுக்கு உங்களுடைய குறைகளைப் பற்றியே ஏன் சதா கவலைப்பட வேண்டும்? கடவுளோடுள்ள உங்கள் பந்தத்தை குலைத்துப்போட சாத்தானை அனுமதித்துவிடாதீர்கள். யெகோவா, ‘இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ளவர்’ என்ற உண்மையை மறைத்துப்போட சாத்தானை அனுமதிக்காதீர்கள்.—யாத்திராகமம் 34:6.
பலவீனங்கள் சோர்வூட்டலாம்
10. நம்முடைய பலவீனங்கள் நம்மை எவ்வழிகளில் சோர்வடையச் செய்யலாம்?
10 கடவுளுக்கு சேவை செய்வதற்கு தங்கள் பலவீனங்கள் முட்டுக்கட்டையாக இருப்பதால் சில கிறிஸ்தவர்கள் சோர்வடைந்திருக்கிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவரா? ஒருவேளை மோசமான வியாதி, முதுமை, அல்லது பிற சூழ்நிலைகள் காரணமாக, ஊழியத்தில் முன்பு போல அதிகம் ஈடுபட முடியாதிருக்கலாம். கடவுளுடைய சேவைக்காக அதிக நேரத்தை செலவு செய்யும்படி கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே. (எபேசியர் 5:15, 16) ஆனால் உங்களுடைய நியாயமான பலவீனங்கள் காரணமாக ஊழியத்தில் அதிகம் ஈடுபட முடியாமல் போனாலோ, அதை நினைத்து சோர்ந்துபோனாலோ என்ன செய்வது?
11. கலாத்தியர் 6:4-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பவுலின் ஆலோசனை நமக்கு எப்படி உதவும்?
11 அசதியாயிராமல் ‘வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றும்படி’ பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (எபிரெயர் 6:11) இதைச் செய்ய வேண்டுமெனில் நாம் அப்படிப்பட்டவர்களுடைய நல்ல முன்மாதிரியை ஆராய்ந்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்ற முயல வேண்டும். இருந்தாலும், நம்மை தேவையில்லாமல் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து, நாம் செய்வது எதுவுமே போதுமானதல்ல என்று முடிவு செய்வதால் நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆகையால் நாம் பவுலின் பின்வரும் ஆலோசனையை பின்பற்றுவது சிறந்தது: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”—கலாத்தியர் 6:4.
12. யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையைக் குறித்து நாம் ஏன் சந்தோஷப்படலாம்?
12 மோசமான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக அதிகத்தை செய்ய முடியாத கிறிஸ்தவர்களும்கூட சந்தோஷப்பட நல்ல காரணம் இருக்கிறது. ஏனென்றால், “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” என்று பைபிள் உறுதியளிக்கிறது. (எபிரெயர் 6:10) சூழ்நிலைகள் கைமீறி போவதால், முன்பு செய்த அளவுக்கு தற்போது செய்ய முடியாமல் போகலாம். இருந்தாலும், யெகோவாவின் உதவியோடு தொலைபேசி மூலமோ கடிதம் மூலமோ சாட்சி கொடுப்பதில் நீங்கள் அதிகமாக ஈடுபடலாம். முழு இருதயத்தோடு நீங்கள் செய்யும் சேவைக்காகவும், கடவுளுக்கும் உடன் மனிதருக்கும் காட்டுகிற அன்பிற்காகவும் உங்களை யெகோவா ஆசீர்வதிப்பார் என்பதில் நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.—மத்தேயு 22:36-40.
“கொடிய காலங்கள்” நமக்கு சோர்வூட்டலாம்
13, 14. (அ) இந்தக் ‘கொடிய காலங்கள்’ நமக்கு எப்படியெல்லாம் கஷ்டத்தைக் கொடுக்கலாம்? (ஆ) இன்று சுபாவ அன்பு குறைவுபடுவது எப்படித் தெளிவாகத் தெரிகிறது?
13 கடவுளுடைய நீதியான புதிய உலகில் வாழப்போகும் காலத்திற்காக நாம் காத்திருக்கிறோம். என்றாலும், தற்போது நாம் ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களில்’ வாழ்ந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) கவலைதரும் சம்பவங்கள் எல்லாம் நம்முடைய விடுதலை சமீபம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன என்பதை அறிவது நமக்கு ஆறுதல் அளிக்கலாம். இருப்பினும், தற்போது நம்மைச் சுற்றியிருக்கும் நிலைமைகள் நம்மையும் பாதிக்கின்றன. உதாரணமாக, உங்களுக்கு வேலையில்லை என்றால் எப்படி உணருவீர்கள்? வேலை கிடைப்பதுகூட கஷ்டமாக இருக்கலாம். நாட்கள் செல்லச்செல்ல, யெகோவா உங்கள் கதியைப் பார்க்கிறாரா, உங்கள் ஜெபங்களைக் கேட்கிறாரா என்ற சந்தேகமே உங்களுக்கு வந்துவிடலாம். ஒருவேளை, நீங்கள் பாரபட்சமாக நடத்தப்படலாம், அநீதிக்கு இலக்காகலாம். நியூஸ் பேப்பரைப் புரட்டி தலைப்புச் செய்திகளை வாசிக்கும்போது நீதிமானாகிய லோத்தைப் போல நீங்களும் உணரலாம். அவர் தன்னை சுற்றியிருந்த ஆட்களின் மோசமான நடத்தையைக் கண்டு ‘வருத்தப்பட்டார்.’ (“வெறுப்படைந்தார்,” யங் பரிசுத்த வேதாகமத்தின் சொல்லர்த்தமான மொழிபெயர்ப்பு [ஆங்கிலம்])—2 பேதுரு 2:7.
14 கடைசி நாட்களைப் பற்றியதில் நாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அநேகர் ‘சுபாவ அன்பில்லாதவர்களாக’ இருப்பார்கள் என்று பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:3) பல குடும்பங்களில் பாச பந்தம் ரொம்பவே குறைவுபடுகிறது. சொல்லப்போனால், “வேறு யாரைக் காட்டிலும் குடும்ப அங்கத்தினர்களால்தான் அநேகர் கொல்லப்படுகிறார்கள், அடிக்கப்படுகிறார்கள், உணர்ச்சி ரீதியில் தாக்கப்படுகிறார்கள், பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். அன்பும் அரவணைப்பும் கிடைக்க வேண்டிய இடமே சில பெரியவர்களுக்கும் பிள்ளைகளும் பயங்கர ஆபத்தான இடமாக ஆகியிருக்கிறது” என்பதாக குடும்ப வன்முறை என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. குடும்பத்தில் மோசமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டவர்களை பிற்பாடு வருத்தமும் கவலையும் தொற்றிக்கொள்ளலாம். நீங்கள் இதை அனுபவித்துக்கொண்டிருந்தால் என்ன செய்யலாம்?
15. எவ்விதத்தில் யெகோவாவின் அன்பு மனிதனுடைய அன்பைவிட மிக மேலானது?
15 சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு பாடினார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) எந்த மனிதப் பெற்றோரைக் காட்டிலும் யெகோவாவின் அன்பு மிக மேலானது என்பதை அறியும்போது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! பெற்றோரால் ஒதுக்கப்படுவது, மோசமாக நடத்தப்படுவது, கைவிடப்படுவது ஆகியவை வேதனையைத் தந்தாலும், அது யெகோவாவின் அன்பை எள்ளளவும் குறைத்துப்போடுவதில்லை. (ரோமர் 8:38, 39) கடவுள் தமக்குப் பிரியமானவர்களை தம்மிடமாக இழுத்துக்கொள்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். (யோவான் 3:16; 6:44) மனிதர்கள் உங்களை எப்படி நடத்தினாலும் சரி, உங்கள் பரலோகத் தகப்பன் உங்களை நேசிக்கிறார்.
சோர்வைச் சமாளிக்க நடைமுறை வழிகள்
16, 17. சோர்வாக உணரும்போது ஒரு நபர் தன்னுடைய ஆன்மீக பலத்தை எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?
16 சோர்வைச் சமாளிக்க நீங்கள் சில நடைமுறையான படிகளை எடுக்கலாம். உதாரணமாக, கிறிஸ்தவ நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுங்கள். கடவுளுடைய வார்த்தையை படித்து, ஆழ்ந்து சிந்தியுங்கள். நீங்கள் உற்சாகமிழந்து போகையில் இதைச் செய்வது மிக முக்கியம். “என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 94:18, 19) பைபிளைத் தவறாமல் வாசிப்பதன் மூலம் உங்கள் மனதை ஆறுதலான வார்த்தைகளாலும், ஊக்கமூட்டும் எண்ணங்களாலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளலாம்.
17 ஜெபம் செய்வதும் மிக அவசியம். உங்களுடைய உள்ளத்தின் உணர்ச்சிகளை வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது யெகோவாவுக்குத் தெரியும். (ரோமர் 8:26, 27) “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” என்று சங்கீதக்காரன் உறுதியளிக்கிறார்.—சங்கீதம் 55:22.
18. மனச்சோர்வடைந்திருக்கும் ஒருவர் என்ன நடைமுறையான படிகளை எடுக்கலாம்?
18 சிலர் க்ளீனிக்கல் டிப்ரஷன் எனப்படும் ஒருவகை மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார்கள்.b அது உங்களையும் பாதித்திருக்கிறதா? அப்படியென்றால், கடவுளுடைய புதிய உலகைப் பற்றியும் ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ அந்தக் காலத்தைப் பற்றியும் சிந்திப்பதற்கு கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள். (ஏசாயா 33:24) ஆனால், அது அவ்வப்போது ஏற்படும் மனச்சோர்வாக இல்லாமல், தீவிர மனஉளைச்சலாக இருந்தால், மருத்துவ நிபுணர்களின் உதவியை நாடுவதே சிறந்தது. (மத்தேயு 9:12) உங்கள் உடல்நிலையை கவனித்துக்கொள்வதும் மிக முக்கியம். ஆரோக்கியமான உணவும், கொஞ்சம் உடற்பயிற்சியும் உதவியாக இருக்கலாம். போதுமானளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இரவு அதிக நேரம் விழித்திருந்து டிவி பார்த்துக்கொண்டிருக்காதீர்கள்; உங்களை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சோர்வடையச் செய்யும் பொழுதுபோக்குகளைத் தவிருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளை சந்தோஷப்படுத்தும் காரியங்களைச் செய்வதில் தொடர்ந்து ஈடுபடுங்கள். யெகோவா, நம் ‘கண்ணீர் யாவையும் துடைக்கும்’ காலம் இன்னும் வரவில்லை. என்றாலும், இப்பொழுது சகித்திருக்க அவர் உங்களுக்கு உதவுவார்.—வெளிப்படுத்துதல் 21:4; 1 கொரிந்தியர் 10:13.
‘கடவுளுடைய பலத்த கைக்குள்’ வாழ்தல்
19. துன்பப்படுவோருக்கு யெகோவா எதை உறுதியளிக்கிறார்?
19 நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வந்தாலும், “கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” என்று பைபிள் உறுதி அளிக்கிறது. (சங்கீதம் 34:19) கடவுள் இதை எப்படிச் செய்வார்? அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய ‘மாம்சத்திலுள்ள முள்ளை’ நீக்கும்படி திரும்பத்திரும்ப ஜெபம் செய்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக யெகோவா அவரிடம், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று கூறினார். (2 கொரிந்தியர் 12:7-9) பவுலிடமும் உங்களிடமும் யெகோவா எதை உறுதி அளிக்கிறார்? உடனடி சுகப்படுத்துதலை அல்ல, மாறாக, சகித்திருப்பதற்கு தேவையான பலத்தை தருவதாக அவர் உறுதி அளிக்கிறார்.
20. சோதனைகளின் மத்தியிலும் 1 பேதுரு 5:6, 7 நமக்கு என்ன உறுதியை அளிக்கிறது?
20 அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:6, 7) யெகோவா உங்களை விசாரிக்கிறவராக, அதாவது உங்கள்மேல் அக்கறையுள்ளவராக இருப்பதால், அவர் உங்களை கைவிட மாட்டார். நீங்கள் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்பட்டாலும் அவர் உங்களை ஆதரிப்பார். உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் “அவருடைய [கடவுளுடைய] பலத்த கைக்குள்” இருக்கிறார்கள் என்பதை மனதில் வையுங்கள். (1 பேதுரு 5:6, 7) நாம் யெகோவாவை சேவிக்கையில் சகித்திருப்பதற்கான பலத்தை அவர் கொடுக்கிறார். நாம் அவருக்கு உண்மையாக இருந்தால், எதுவுமே நமக்கு ஆன்மீக ரீதியில் நிரந்தர தீங்கை ஏற்படுத்த முடியாது. ஆகவே, நாம் யெகோவாவுக்கு தொடர்ந்து உண்மையுள்ளோராக இருப்போமாக. அப்போது, அவர் வாக்குக் கொடுத்துள்ள புதிய உலகில் நித்திய ஜீவனை நாம் அனுபவிக்கலாம்; துன்பப்படுகிறவர்களை நிரந்தரமாக விடுவிக்கும் நாளைக் காணலாம்!
[அடிக்குறிப்புகள்]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
b க்ளீனிக்கல் டிப்ரஷன் என்பது வெறுமனே உற்சாகமிழந்து போவதை அர்த்தப்படுத்துவதில்லை, தீவிரமாக, தொடர்ந்து மனச்சோர்வடைவதை அர்த்தப்படுத்துகிறது. கூடுதல் தகவலுக்கு காவற்கோபுரம் அக்டோபர் 15, 1988 (ஆங்கிலம்), பக்கம் 25-9, நவம்பர் 15, 1988 (ஆங்கிலம்), பக்கம் 21-4, செப்டம்பர் 1, 1996, பக்கம் 30-1 ஆகியவற்றைக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கடவுளுடைய ஊழியர்களும் ஏன் துன்பப்படுகிறார்கள்?
• கடவுளுடைய மக்களில் சிலரைச் சோர்வடையச் செய்யும் சில விஷயங்கள் யாவை?
• நம்முடைய கவலைகளைச் சமாளிக்க யெகோவா எப்படி உதவுகிறார்?
• நாம் எவ்விதமாக ‘கடவுளுடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்கிறோம்’?
[பக்கம் 25-ன் படங்கள்]
சோதனைகள் மத்தியிலும் யெகோவாவின் மக்கள் சந்தோஷமாயிருக்க காரணம் உண்டு
[பக்கம் 28-ன் படம்]
யெகோவாவுக்கு நம்மிடமுள்ள மிகச் சிறந்ததைக் கொடுப்பதற்கு தொலைபேசியில் சாட்சி கொடுப்பது ஒரு வழியாகும்